Thursday 24 March 2016

சென்னை ... வெள்ளம்... மக்கள்

" நீர்வழிப்படூஉம் புணைபோல் ஆங்கே ஆருயிர் முறைவழிப் படூஉம் " - சென்னை ... வெள்ளம்... மக்கள் ... - ஏழைதாசன் ,புதுக்கோட்டை

மானுடரும் உண்டுகொல்! மானுடரும் உண்டுகொல்!”

தீக்கதிர் “மக்கள் மன்றம்” – பகுதிக்கு முனைவர் சு.மாதவன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி (தன்னாட்சி), புதுக்கோட்டை – 622 001, பேச 97513 30855 மின்னஞ்சல் : semmozhi200269@gmail.com,semmozhi_200369@yahoo.com கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை முதல் தங்களது ஒவ்வொரு படைப்பையும் இலக்கியச் சுவைபடவே எழுதினர் மார்க்சும் ஏங்கல்சும். தன் காலத்துப் படைப்பாளியான லயோ டால்ஸ்டாய்க்கு விமர்சனக் கடிதங்கள் பல எழுதியுள்ளார் மார்க்ஸ் . ரஷ்யப் புரட்சிக்குத் தலைமையேற்றிருந்த காலத்திலும் அதற்கு முன்பும் தோழர் லெனின், எழுத்தாளர் மார்க்ஸிம் கார்க்கி போன்ற படைப்பாளர்களின் படைப்புகளைப் படிப்பதும் அவற்றிற்கு ஆய்வுக்குறிப்புகள் எழுதுவதுமாக இருந்தார். சீனப் புரட்சிக்குத் தலைமையேற்றிருந்த காலத்திலும் அதற்கு முன்பும் தோழர் மாவோவும் அவ்வாறே திகழ்ந்தார். இன்னும் பல உலகத் தலைவர்களும் அவ்வாறு இருந்துள்ளனர். இந்தியாவிலும் தோழர் இ.எம்.எஸ். முதல் தோழர் சீத்தாராம் யெச்சூரி வரை இலக்கியப் படைப்புகளை மார்க்சீய நோக்கில் ஆராய்ந்து எழுதி வந்துள்ளனர். இந்தியாவில் இத்தகைய முயற்சிகளில் சில தலைவர்களாலே ஈடுபட முடிந்துள்ளது. இலக்கியமும் இந்தச் சமூகத்தின் உற்பத்திப் பொருள் (Literature is also known as a product of the society) என்ற மார்க்சீய இயங்கியல் புரிதலும், அந்த உற்பத்திப் பொருளின் பயன், விளைவு குறித்த அறிதலும் ஒவ்வொரு பொதுவுடைமையாளர்க்கும் அவசியம் இருக்க வேண்டும். தமிழகத்தைப் பொருத்தஅளவில், இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்ட மார்க்சியத் தலைவர்கள் மிகவும் குறைவே. இத்தகைய சூழலில், தோழர் ஜி.இராமகிருஷ்ணன் 07.07.2015 நாளிட்ட தீக்கதிர் நாளிதழில் எழுதியுள்ள ”கருகும் உயிர்கள் பதறும் படைப்பு” என்ற கட்டுரை மிகுந்த கவனிப்புக்குரிய செயல்பாடாகிறது. ஏற்கனவே, வண்ணக்கதிரில் “களப்பணியில் கம்யூனிஸ்ட்டுகள்” என்ற தொடரில் அடித்தட்டு மக்கள் வரலாற்றுக்கான அடிப்படைகளை விதைத்துவரும் தோழர், இன்றைய இலக்கியப் போக்குகள் குறித்தும் எழுத முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கதும் பாராட்டத்தக்கதும் ஆகும். அதிலும், அண்மைக்காலத் தமிழ்க் கவிதை வாசிப்புத் தளத்தில் பரந்து விரிந்து வாசகர்களிடம் சென்று சேர்ந்துள்ள ஒரே முன்ன்ணிப் படைப்பாளியான கவிஞர் வைரமுத்து “எரிதழல் கொண்டு வா” என எல்லோரையும் அழைக்கும் போது அதன் வீச்சும் விளைவும் நற்கருத்தியல் பெருகிட விரிந்த களம் அமைக்கும் என்பது திண்ணம். “கௌரவக் கொலை” என அழைக்கப்பட்டு “சாதி ஆணவக் கொலை” எனப் பெயர்மாற்றம் பெற்றுள்ள “சாதி வெறிக் கொலைகள்” ஒழிய இதுபோன்ற படைப்புகள் தேவை எனக் கவிஞர் வைரமுத்துவிடம் தோழர் ஜி.இராமகிருஷ்ணன் வேண்டுகோள் வைத்திருப்பதும், அதை உடனடியாகக் கவிஞர் வைரமுத்து நிறைவேற்றிவைத்திருப்பதும் பாராட்டத்தக்க முயற்சிகளாகும். அத்தோடு, முற்போக்கு இலக்கிய முயற்சிகளுக்கு இது ஒரு உந்துசக்தியாகத் திகழும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. தீண்டாமையும் சாதிவெறியும் படுகொலைகளும் நாள்தவறாமல் நடந்துவரும் இந்த நாளில் முற்போக்கு இலக்கியவாதிகளின் சமூகப் பொறுப்புச் சுமை கூடிக் கொண்டே இருக்கிறது. இத்தகைய சூழலில், கலைஇரவு போன்ற நிகழ்வுகளில் இன்னுமொரு புதிய உள்ளடக்கத்தை இணைத்துக் கொள்ளலாம் என்ற ஒரு கருத்துருவையும் முன்வைக்கிறேன்: “அன்றைய காலத்தில் அறம்பாடி அழித்தல், எனும் இலக்கியச் செந்நெறி இருந்துவந்தது. அதை மீட்டுருவாக்கம் செய்து புதுக்கி, “மானுடரும் உண்டுகொல்! மானுடரும் உண்டுகொல்!” என்ற தலைப்பில் “அறம்பாடும் கவியரங்கம்” என்பதை அரங்கேற்ற முன்வரலாம்”.

தலித் துணைவேந்தரைத் தேடி "

" தலித் துணைவேந்தரைத் தேடி " என்ற தலைப்பில் ஜெ.பாலசுப்ரமணியனின் கட்டுரை இன்றைய காலத்தின் குரலாகப் பரிமளிக்கிறது. இதிலிருந்து ஏராளம் கேள்விகள் படிப்பவருக்குள் பரிணமிக்கின்றன. தகுதியான துணைவேந்தரைத் தேடுகிற காலத்தில் - தகுதியான பேராசிரியரைத் தேடுகிற காலத்தில் தலித் துணைவேந்தரைத் தேடிமட்டும் என்ன ஆகிவிடப் போகிறது ? தலித்திலும் கோடி கொடுக்கும் தலித்துக்குத்தானே கிடைக்கப் போகிறது ?! அண்மையில் காலமான பேராசிரியர் கே.ஏ.குணசேகரன் ஏதேனும் ஒரு பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராக வந்திருக்க வேண்டியவர். அவரைவிடத்thakuthk குறைவானவர்க்கெல்லாம் பணபலம், சாதிபலம், அரசியல்பலத்தைக் கொண்டு துணைவேந்தர்களாக வந்துவிட்டார்கள்.இந்த மூன்று பலமும் அவரிடம் இல்லாததால் அவருக்குப் பழம் பழுக்கவில்லை. ஒருவேளை, தலித் துனைவேந்தருள் தகுதியான துணைவேந்தர் யாரேனும் வந்தால் , பின்னடைவுப் பணியிடங்களை நிரப்பலாம். வேறென் நடந்துவிடப் போகிறது? ஒரு மன ஆறுதலைத் தவிர ?! ---- முனைவர் சு.மாதவன், தமிழ் உதவிப் பேராசிரியர் - யு.ஜி.சி. ஆர்.ஏ., மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

சாதியக் கண்ணோட்டம் அன்றும் இன்றும் '

சாதியக் கண்ணோட்டம் அன்றும் இன்றும் ' என்ற அனன்யா வாஜபேயி யின் கட்டுரை மிகுந்த சமூகப் பொறுப்புணர்வோடு எழுதப்பட்டுள்ளது. பாராட்டுக்கள் . இந்தக் கட்டுரை மேலும் பல சாதிவெறிசார்ந்த நிகழ்வுகளைக் கிளறுகிறது. ஒரு நல்ல படைப்பின் சிறந்த பண்பும் அதுதான் . வர்ணாசிரம தர்ம படித்தரநிலையில் நால்வர்ணம் எனக் குறிப்பிடப்படும் மனிதர்கள் பட்டியலிலேயே இடம்பெறாதவர்கள் பஞ்சமர்கள். இந்தப் பஞ்சமர்கள்தான் இந்தியாவின் ஒற்றைப் பெரும்பான்மை மக்களாவர். அப்படியென்றால் , இவர்களும் இந்தியாவின் ஆதிகுடிகளுள் அடங்குவர். அடக்கப்பட்டோரிலும் அடங்குவர். இவர்களை மனிதர்கள் என்ற நிலையிலேயே பார்க்காத வர்ணாசிரமதர்மம் எப்படியெல்லாம் பாடாய்ப்படுத்தும் எனச் சொல்லவேண்டியதில்லை. வேடர்குலத்தவனான ஏகலைவன் நிலையை மகாபாரதக் கதை சொல்கிறது.அவனது கட்டைவிரலைக் குருதட்ச்னையாகப் பெற்ற குரூரத் துரோகாச்சாரியார் ( துரோணாச்சாரியாரை) பெயரால் வீரதீரச் சாதனையாளர்களுக்குத் " துரோணாச்சாரியார் விருது " கொடுத்துவருகிறது இந்திய அரசாங்கம். இதன் பொருள் என்ன ? அடிப்படையில் இன்னும் வர்ணாசிரமதர்மத்தைப் பின்பற்றித்தான் இந்திய அரசே செயல்படுகிறது என்பதுதானே ?! என்றைக்கு துரோணாச்சாரியார் விருதின்peyarai " ஏகலைவன் விருது " மாற்றுகிறோமோ அன்றுதான் இந்தியா உண்மையிலேயே சமத்துவப் பாதையில் நடைபோடுகிறது என்று பொருள். இதுமட்டுமா? காந்தி, நேரு , திலகர்,நேதாஜி, காமராசர் என எல்லோரின் பெயரையும் எல்லோரும் வைத்துகொள்கிறோமே! தாழ்த்தப்பட்ட சாதி அல்லாதச் ஏதேனும் ஒரு சாதிக்காரனாவது இதுவரை தன பிள்ளைக்கு அம்பேத்கர் பெயரைச் சூட்டிப் பெருமிதம்கொண்டிருக்கிறானா?! இல்லையே?! அரசியல் சாசன வரைவுக்குழுவுக்குத் தலிவராக இருந்த ஆனானப்பட்ட அம்பேத்கரையே இன்னும் எஸ்.சி.யாகப் பார்க்கும் சமூகம் எந்தக் காலத்தில் குப்பனையும் சுப்பனையும் சக மனிதனாக ஏற்கப்போகிறதோ என்னும் கவலை இன்னும் எத்தனை நூற்றாண்டு தொடருமோ என்ற ஆதங்கமும் ஏக்கப்பெருமூச்சும்தான் நீடித்துக்கொண்டே இருக்கிறது . மாறும்தான் ... எப்பொழுது என்பதுதான் தெரியவில்லை .?! --- முனைவர் சு. மாதவன், உதவிப் பேராசிரியர் - யு.ஜி.சி. ஆர்.ஏ. , மா.மன்னர் கல்லூரி ( தன்னாட்சி), புதுக்கோட்டை . பேச : 9751 330 855

நெஞ்சில் நின்று ஒளிர்பவர் பேராசிரியர் கே. ஏ. குணசேகரன்.

இப்படிக்கு இவர்கள் - பகுதிக்கு இன்னும் நிறையச் சாதிக்க - எழுதி எழுதிச் சாதிக்கத் திட்டமிட்டிருந்த - அடித்தட்டு மக்களின் பன்முக ஆளுமையின் குறியீடாய் விளங்கிவந்த - அவரைச் சந்தித்துச் சில மணித்துளிகள் உரையாடிய அனுபவமுள்ள எவராலும் வாழ்நாள் முழுவதும் மறக்கவியலாத அன்பின் வடிவமாய் நெஞ்சில் நின்று ஒளிர்பவர் பேராசிரியர் கே. ஏ. குணசேகரன். அவருடைய எந்த ஒரு நூலுக்குள் நுழைந்தாலும் புதிய புதிய ஆய்வுமுடிவுகளையும் மனதில் பதியும் கலை இரசனையையும் நம் சிந்தனையில் ஏந்திக்கொள்ளலாம் . அந்த அளவுக்கு எந்தப் பணியையும் சீரிய முறையிலும் நேரிய நெறியிலும் ஆற்றியவர் கே.ஏ.ஜி. அத்தகைய கே.ஏ.ஜி.யின் கலை -இலக்கியப் பங்களிப்பைப் பண்பாட்டுப் பின்னணியோடு மகத்த துல்லியமாக மதிப்பிட்டு எழுதப்பட்டுள்ள பேராசிரியர் வீ. அரசு அவர்களின் கட்டுரையின்வழி தி இந்து தமிழ் நாளிதழ் நல்ல அறிவார்ந்த அஞ்சலியைச் செலுத்தியுள்ளது. கே.ஏ.ஜி. ஒரு நாட்டுப்புறக் கலையியல் அறிஞர் ; கலைஞர். நாடகத் துறை விற்பன்னர்; ஆய்வாளர்enbana அவர் தொடங்கித் துலங்கிய அடையாளங்கள். அண்மைய ஐந்தாறு ஆண்டுகளில் அவர் ஒரு செவ்விலக்கிய உரையாசிரியராகத் தன்னைப் பரிணாமப் படுத்திக்கொண்டே கொண்டே வந்தார். இது அவரது பன்முகப் பரிமாணங்களுள் குறிப்பிடத்தக்கது . இதுவரை , பதிற்றுப்பத்து, பட்டினப்பாலை ஆகிய இரண்டு நூல்களுக்கும் வந்துள்ள உரைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட புதிய சிந்தனை ஒளியைப் பாய்ச்சிப் புத்துரைகள் கண்டார். இந்தவகையில் அவர் 21 ஆம் நூற்றாண்டு உரையாசிரியர்களில் ஒருவர். பதிற்றுப்பத்து என்றாலே சேரர் வரலாற்றிலக்கியம் என்றிருந்த அறுதப் பழசான பார்வையிலிருந்து அந்நூல் ஒரு கலைஞர்களின் வாழ்வியல் பெட்டகம் என்ற புதிய நோக்கில் உரைகண்டார். அதைப்போலவே, ஜூலை 2015 இல் என்சிபிஹெச் ஆல் வெளியிடப்பட்டுள்ள அவரது " பட்டினப் பாலை - ஆராய்ச்சிப் புத்துரை " நூல் , அந்நூலின் சமணப் பின்னணியைத்thellithin நிறுவியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக பொத்த, சமண ஆய்வாளராக இயங்கிவரும் என்னைப் போன்றவர்களாலும்enakkum முன்னே இயங்கிவரும் சிலராலும் இதுவரயிலும் கண்டறியப்படாத சமணக் கூறுகளை , கடந்த ஐந்தாறு ஆண்டுகளுக்குள் இத்துறையில் காலடிஎடுத்துவைத்த கே.ஏ,ஜி. கண்டறிந்து உரை வரைந்துள்ளார். இந்த இரண்டு நூல்களுக்கும் உரை எழுதியதுபோலவே இன்னும் பல சங்க இலக்கியப் பனுவல்களுக்கு கே.ஏ.ஜி. எழுதத் திட்டமிட்டிருந்த செவ்விலக்கியப் புத்துரைகள் கிட்டாமல் போனது தமிழிலக்கிய உலகுக்கு மாபெரும் பேரிழப்பாகும். -- முனைவர் சு.மாதவன் , தமிழ் உதவிப் பேராசிரியர் - குடியரசுத் தலைவர் விருது பெற்றவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி ( த ), புதுக்கோட்டை . பேச : 9751 330 855

இந்தியர்களின் மரபணுவில் சாதி ' என்ற மோஹித் எம்.ராவின் கட்டுரை

இந்தியர்களின் மரபணுவில் சாதி ' என்ற மோஹித் எம்.ராவின் கட்டுரை அருமை. இதுபோன்ற ஆய்வுகளை இந்தியச் சாதிகள் ஒவ்வொன்றின் மரபணுக்களின் மூலமாகவும் மேற்கொள்ளவேண்டும். எல்லாச் சாதிகளைச் சார்ந்த சமூக மாற்றச் சிந்தனையில் உண்மையான ஈடுபாடு உள்ளவர்களிடமிருந்தும் குறிப்பிட்ட அளவிலான மரபணுக்களைப் பெற்று ஆய்வுசெய்து பார்த்தால் எந்தச் சாதிக்கும் அந்தச் சாதிக்குமட்டுமே உரிய தனித்தன்மை வாய்ந்த ஒரே அளவிலான விடை கிடைக்காது. அதாவது, ஒரே மரபணு / மரபணுப் பொதுமை இருக்காது. அதாவது, எந்த ஒரு சாதிக்கும் அந்தச் சாதிக்கு மட்டுமே உய்ய மரபணு வடிவம்,செயல்நிலைப் பண்புகள் என எதையும் வரையறுக்க முடியாது.ஒரே சாதிக்குமட்டுமே உரிய தனித்தன்மை எதையும் வரையறுத்துவிடவும் முடியாது என்றே கருதுகிறேன். எனினும், இத்தகைய ஆய்வுகள் சமூகத்தின் மனசாட்சியைச் சமத்துவ மனசாட்சியாய் மாற்றுவதற்குரிய பங்களிப்புகளாக விளங்குவன எனில் அது மிகையில்லை. ---- முனைவர் சு. மாதவன் , தமிழ் உதவிப் பேராசிரியர், மா. மன்னர் கல்லூரி ( த ), புதுக்கோட்டை . பேச : 9751 330 855 வாசகர் மடல்

லெட்ச லெட்சமாய்ப் பிறப்போம் ! லெட்சியக் கல்புர்கிகளாய்.....

28 நவம்பர் 1938 - பேராசிரியர் கல்புர்கி பிறந்த நாள் லெட்ச லெட்சமாய்ப் பிறப்போம் ! லெட்சியக் கல்புர்கிகளாய்..... ஒருநாளில் பிறந்து ஒருநாளில் இறக்கும் மானிடருள் ஒருநாளில் இறந்து ஒவ்வொருநாளும் பிறந்துகொண்டிருக்கும்படிப் பிறந்தவனே ! கல்புர்கி! அன்று ஒருவனாய்ப் பிறந்தாய்.... இன்று இலட்சக் கனல்களாய்ப் இலட்சிய அனல்களாய்ப் பிறந்துகொண்டே இருக்கிறாய் ...! வருணத்தை எதிர்த்த லிங்காயத்துக்காரர்களை வைத்தே வருணத்தை எதிர்த்த உன்னைக் கொலைசெய்ய வைத்ததே வருணாசிரமதர்மம் ! மனுதர்மம் !! மருந்துக்குக்கூட தர்மமில்லாதது மனுதர்மம் ..... நீ உயிர் விட்டாயல்லை .. பயிர் நாட்டை....! இல்லாததெல்லாம் இருக்கிறது ... இருக்கிறதெல்லாம் இல்லை... இதுதான் மதவாதம் ..... மதிவாதம் ஏற்காதது மதவாதம் ... அதனால்தான் உன்னை ஏற்கவில்லை ... உருவான மதங்களெல்லாம் உருவில் இல்லை ... கருவே இல்லாதது உருவாகிவிட்டது ... உருவமே இல்லாமல் சாகடிக்கும் பேய் சாதிமதம் .... பாம்பு உயிர்வாழக் காட்டில் இடந்தரலாம் ... நாட்டில்?! மதவாதப் பாம்பின் உயிர் சாதியவாதப் புற்றுக்குள் .... முட்டாள்தனத்தின் பிள்ளை மதவாதம்.... மிருகத்தனத்தின் பிள்ளை சாதீயவாதம்... முட்டாள்தனம் - தாய் மிருகத்தனம் - சேய் தாயும்சேயும் இணைந்துபெற்ற பேதமைத்தனம் - நோய் .... ஒன்றையொன்று பெற்றெடுக்கின்றன- முட்டாள்தனமும் மதவாதமும்.... ஒன்றையொன்று பாலூற்றுகின்றன - மிருகத்தனமும் சாதீயவாதமும்.... இரண்டுக்கும் அறிவு என்றாலே பேதபேதம் ... காததூரம் ... இரண்டுமே அறிவோடு என்றுமே மோதும்மோதும்... போதும்போதும்... சாதிமதவெறி சாகடித்தது ஒரு கல்புர்கியைத்தான் ... இலட்சிய உயிர்நெருப்போடு நாளும் நாளும் எழும் இலெட்சக் கணக்கான கல்புர்கிகள் சாதிமதவெறியை சாகடிப்பார்கள் .... - ஏழைதாசன் , புதுக்கோட்டை ( முனைவர் சு. மாதவன் ) பேச : 9751330855

இடறிய இடத்தை நோக்கி... முனைவர் அ.விமலா

இடறிய இடத்தை நோக்கி... முனைவர் அ.விமலா தமிழ் உதவிப் பேராசிரியர் ஜெ.ஜெ.கலை அறிவியல் கல்லூரி (த) புதுக்கோட்டை பேச 95850 34134 மலர் மலர்வதுபோல் காலைப்பொழுது மெல்லமெல்ல மலர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் கோழிகூவலின் சத்தம், ஒரு பக்கம் பால்காரர் மணியடிக்கும் சத்தம், ஒரு பக்கம் கன்றுக்குட்டி அம்மா என்று அழைக்கும் சத்தம். மறு சத்தம் தெருச்சண்டைகளின் சத்தம்... கேட்டுக்கொண்டே கவிதாயினி படுக்கையிலிருந்து வாரிச்சுருட்டி எழுந்தாள். அவள் தலையில் இருக்கிற முடியை எண்ணிவிடலாம். ஆனால் அவள் துயரங்களையும் ஏக்கங்களையும் எண்ண முடியுமா? காலை எட்டு மணி. “பெரிய கட்டெ... பெரிய கட்டெ... ஏய்... சின்ன கட்டெ... சின்ன கட்டெ... எங்க யாரையும் காணாம்... என்று கூப்பிட்டுக்கொண்டே வரும்போது பெரியகட்டை ஒரு கூட விராட்டியோடு வயற்காட்டிலிருந்து வந்தாள். வெயில் நேரத்தில் கோட்டகத்துக்குப் போக முடியாது என்பதால் காலைப்பொழுதில் இந்த வேலையெல்லாம் செய்து விடுவாள். உயரம், நிறம், உடல் தோற்றத்தைக் கொண்டு, கட்டெ, வெள்ளையம்மா, நச்செ... இப்படியெல்லாம் பெயரிட்டுக் கூப்பிடுவது அந்தப் பகுதி வழக்கம். “ஏய்... பெரியகட்டெ... மோரு வாங்க நேரமாச்சி வரலயா, ஏய்... அந்த மோருகாராச்சி நேரமாச்சின்னா மோரு கொடுக்காதுடி... கனகா, கண்ணி, லதா, சரளா எல்லாரையும் அழச்சிக்கிட்டு சொம்ப எடுத்துக்கிட்டு வா போவலாம்...” மோர்க்கார ஆச்சி ஆச்சாரத்துடன் “எல்லாம் எட்டி நில்லு... என்னெத் தொட்டுடாதீங்க... இப்பத்தான் குளிச்சேன்... திரும்ப குளிக்க முடியாது... அவஅவ சொம்பக் கீழேபிடி... உங்களையெல்லாம் பார்த்தாலே தீட்டு... ஏஞ்சொம்போட ஒஞ் சொம்பெ ஒரசிராதே...” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது கவிதாயினி வேண்டுமென்றே தன்சொம்பை மோர்க்கார ஆச்சியின் சொம்போடு உரசினாள். “ஏய்.. காத்தான் மொவள.. ரொம்ப எடக்குக்காரியாத்தான் இருக்குற... உனக்கு மோரு இல்ல போ...”. என்று கத்தினாள் மோர்க்கார ஆச்சி. கவிதாயினி அழுதுகொண்டே வந்தாள். உடனே கனகா, “நீ ஏண்டி ஒரசினே?! – தள்ளிநின்னு வாங்க வேண்டியதுதானே?!” என்றாள். “ஆமா... போடி... ஐயர் கடெக்கிப் போனா காசத் தூக்கிப்போடு தொட்டுப்புடாதேங்கிறாரு... படித்தொறைக்கிக் குளிக்கப்போனா.. உங்களுக்கெல்லாம் அந்தோ... அங்க ஒதுக்கிருக்குப் பாரு தொர... அங்க போங்குறாங்க. அய்யருதெரு இன்னும் மத்த தெருவுல போகும்போது நம்மளக் கண்டா எட்டி ஒதுங்குறாங்க. ஒரு நாளு என்னோட படிக்கிற மருதாம்பா அவ வீட்டுக்குக் கூப்பிட்டுக்கிட்டே இருந்தா... அங்க போனா அவுங்க அம்மா இவளயெல்லாம் வீட்டுக்குள்ள அழைச்சுக்கிட்டு வராதெ... நம்ம சாமிக்கெல்லாம் ஆகாதுன்னு அவளெத் திட்டுனாங்க.. எனக்கு ரொம்ப நாளா ஆசடி கண்ணகி... இவுங்களையெல்லாம் எப்புடியும் தொட்டுப் பாத்திடணுமுன்னு... அதாஞ் சொம்ப ஒரசுனேன்... ஏய்... லதா! அங்கெ பாரேன் அவங்க வூட்டுப் புள்ளை சட்டெய.. எவ்ளோ நல்லாருக்கு. நம்ம அப்பா அம்மாக்கிட்ட அதுபோல வாங்கிக் கேட்டா சந்தையில உள்ளதத்தான் எடுத்துக் குடுக்குறாங்க... ஒரு நாளு அப்புடித்தான் அந்த மோருகாராச்சி பேத்தி சட்டெபோல நானும் போட்ருக்க மாதிரி கனவு கண்டங்... டக்குனு முளிச்சுக்கிட்டேன்...” உடனே லதா சொன்னாள், “இதாண்டி இவளுக்கு வேலெ..... வெற வேலெயே இல்லையாடி...?!”. கலா சொன்னாள், “அவுங்க அப்பா அம்மா டீச்சரு, சாருனு வேலெ பாக்குறாங்க. நம்ம அப்பா அம்மா அவுங்க வீட்டுல பண்ணெ வேலெ செய்றாங்க தெரிஞ்சிக்க... சரி ... சரி... வா... மோரெக் கொண்டே வச்சிட்டு அந்தப் புத்துத்தெடல்ல காட்டுக்கனகாம்பரமும் மீமுள்ளு பூவும் நிறைய பூத்திருக்கு... பறிச்சுக்கிட்டு வருவோம். நாளெக்கிப் பள்ளிக்கொடத்துக்கு வச்சுக்கிட்டுப் போவலாம்...” கவிதாயினி குறுக்கிட்டு, ஏய்.... அந்த அய்யரு வீட்டுப் பொண்ணு வெள்ளெயாய் பூவுவச்சிருந்தது பாத்தியா!” என்றாள். “ஏய்... திரும்ப திரும்ப ஆரம்பிச்சிட்டியாடி என்று கேட்டுக்கொண்டே கனகா சென்றாள். திரும்பவும் கவிதாயினி, “ஏய்... நா சொல்றத கொஞ்சம் கேளுங்கடி....” என்று கெஞ்சவும் “என்னதாஞ் சொல்லவர்றா கவிதாயினி... கேப்போம்...” என்றாள் கண்ணகி. “அவுங்க மாதிரி நம்மளும் டீச்சரா வரலாமுல்ல....” “அதுக்கு பனங்காசுக்கு என்ன பண்ணுவ....” “ஏன்.... நாத்துநடவு நட்டு, கள பிடிங்கி காசு சேத்தா படிக்கலாமே!” “நம்மள யாரு வேலெக்கிச் சேத்துக்குவா?” “எல்லாரும் அவுங்கவுங்க அக்கா தாவணிங்கள போட்டுக்கிட்டு போவோம். ஒரு நாளைக்கு கூலி பதிமூனு ரூவா... போவம்படி...” வெய்யிலின் உக்கிரம் கண்ணகியால் ஒன்றும் செய்யமுடியவில்லை. உடனே கனகா, “ஏய்! கண்ணகி...! உன் முதுபுறா கொம்பளம்டி.... தண்ணியாகியாட்டா தளதளதன்னுருக்குடி...” “கண்ணகி முதுகு மட்டுதான் இருக்கா .ந்தோ” பாருடி ஒம் மொதுக கொப்பளம் தோலுரிஞ்சு நச்சத்திரமா இருக்கு” என்றாள் கவிதாயினி. வெயில் அவரவரைப் புரட்டிப்போட்டாலும் சம்பளம் பதிமூனு ரூபாய் என கெடைக்குதுல என நினைத்து பெருமூச்சுவிட்டன். அவரவர் கைகளிலும் நிறைய காசு புழங்கத் தொடங்கியது. கவிதாயினி கல்வியில் பாதி, கழனியில் பாதியாக இருந்து படிப்பைத் தொடர்ந்தாள். பன்னிரெண்டாம் வகுப்பில் ஆயிரத்துக்குமேல் மதிப்பெண் எடுத்து மருத்துவப் படிப்பை மேற்கொண்டிருந்தாள். அவளது தோழிகள் காட்டு வேலையிலேயே தொடர்ந்து ஈடுபடத் தொடங்கினார்கள். கவிதாயினியைப் பார்த்து அவ்வூர் மக்களும் தங்கள் பிள்ளைகளிடம், “ஏய்... நல்லா படிங்கடா... கவிதாயினி அக்காவ பாரேன்.... கஷ்டப்பட்டு படிச்சு வேலைக்கு வந்துட்டு.... த..ஞ்.சா...வூ..ர்ல படிச்சதுடா... நா(ன்) ஒழச்சி காசு பணந்தர்றேன்.... நீங்க படிங்கடா...” என்று கூறுவார்கள். கவிக்குப் பிறகு அவள் வசித்த தெருவில் பெண்களும் பையன்களும் நிறைய பேர் வாத்தியார் வக்கீல் என்று பெருகத் தொடங்கினர். கவிதாயினிக்கு டாக்டர் வேலை கிடைத்தது. தனது சொந்த ஊருக்கு காரில் வந்துகொண்டிருக்கிறாள். அப்படி வந்துகொண்டிருக்கும்போது எங்கு பார்த்தாலும் நோட்டமிடுகிறாள்.... “அந்தோ இருக்கு... ஊரெ தெரியாம மழை அடிச்சு ஊத்தும்போது கொடலெ போட்டுக்கிட்டு நட்ட வயல்...” “மத்தியானம் கரையேறி களத்துமேட்டுல சோறுதிங்கிற அரசமரத்தின் நிழல் நி..றை..ய.வே.... படர்ந்திருக்கு...” “ஓ...! பழைய சோறும் வெங்காயமுமா இருக்குற தூக்குவாளிய மாட்ற ஒதியங்கௌகூட எவ்ளோ பெருசாயிட்டு...” “வெயில் தாங்க முடியாம இந்த வாய்க்கால்லதானே தொப்புதொப்புனு விழுந்து எழுந்தரிச்சு ஈரத்துணியோட நடுவோங்....” என்று நினைத்துக்கொண்டே காரை மெல்ல ஓட்டிவந்த கவிதாயினி நட்டுக்கொண்டிருக்கிற தோழிகளைப் பார்த்து சத்தமிட்டு அழைக்கிறாள். அவர்கள், “ஏய்... ஏய்... இங்க பாருங்கடி... நம்ம கவிதாயினி டாக்டருடி...” ஓடிவந்து கவிதாயினியை கட்டிப்பிடித்து முத்தமிடுகிறார்கள்... அவர்கள் அனைவரும் தாயாகி விட்டனர். “ஏய்... கனகா! அந்த மோருகாராச்சி என்னுக்கிட்ட வைத்தியத்துக்கு வந்ததுடி... அந்தம்மா கையெப் புடிச்சு பாத்தேண்டி...!!! கடெகார அய்யரும் வந்தாரு... அவருக்குக்கூட ஒருதடவை மயக்கம் வந்திருச்சு.. யாந் தண்ணியத்தான் கொடுத்தேங்... குடிச்சாரு....!!! அந்த மருதாம்பா அம்மா.. இன்னும் மேஞ்ஜாதி தெருவுல இருந்து நெறயப் பேரு வைத்தியத்துக்கு வந்தாங்க... என்னோட வேலெபாக்குற டாக்டர்களும் மேஞ்ஜாதிக்காரங்கதாங்...”. “அப்புடியா... ஆம்பளை பையங்க இருக்காங்களா....???” என்று கேட்டவுடன் வெட்கச்சிரிப்புடன் நகர்ந்தாள் கவிதாயினி.

தமிழன்னையே ! ஆள்வாய் என்னையே!

தமிழன்னையே ! ஆள்வாய் என்னையே! கருவிலிருக்கையிலே எங்கம்மா கருவறையில் கருவாகி வந்த அன்னையே - என் கருவாக வந்த அன்னையே - உணர்வின் திருவாக வந்த அன்னையே - அங்கு உருவிலிருக்கையிலே உயிருக்குள் உயிராக உணர்வில் கலந்த அன்னையே - பந்த உணர்வைத் தந்த அன்னையே - சொந்த உறவைத் தந்த அன்னையே ! தெருவில்தவ்ழ்கையிலே அப்பாமுதல் அன்பர்வரை தெளிவில் ஒளிர்ந்த அன்னையே - எந்தன் தெளிவாய் மிளிர்ந்த அன்னையே - சிந்தும் மொழியில் பொலிந்த அன்னையே - உந்தன் அருகிலிருக்கையிலே செடிகொடி விலங்குகள் அத்தனையும் சொன்ன அன்னையே - நீதான் அத்தனைக்கும் ஆசான் அன்னையே - முதலில் கத்துத்தந்த பள்ளி அன்னையே ! குருவிலிருக்கையிலே அவர்சொல்லும் பாடங்களை ஒப்பிடவே தந்த அன்னையே - கற்க ஒப்பிடவே செய்த அன்னையே - ஒன்றும் ஒப்பு உயர் வற்ற அன்னையே - எந்தன் உருவிலிருந்துகொண்டு மாணாக்கர் மான்புபெற உரைக்கும் சொல்லின் அன்னையே - ஆறாம் உறைக்கும் சொல்லின் அன்னையே - உயிர் வரைக்கும் ஆள்வாய் என்னையே ! - ஏழைதாசன் பி 3/5, ஆலங்குளம் குடியிருப்பு புதுக்கோட்டை -622 005 பேச : 9751 330 855

எரிமலை ஏற்றிவைத்த செங்கொடி : செங்கொடிவயலான சிறுகாசாவயல்

எரிமலை ஏற்றிவைத்த செங்கொடி : செங்கொடிவயலான சிறுகாசாவயல் முனைவர் சு.மாதவன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, (செம்மொழி இளம்தமிழறிஞர் விருதுபெற்றவர்) மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி (த), புதுக்கோட்டை. பேச 9751 330 855, மின் அஞ்சல் : semmozhi200269@gmail.com 60 பறையர் குடும்பங்கள், 25 வலையர் குடும்பங்கள், 3 வன்னியப் பிள்ளைக் குடும்பங்கள், 2 செட்டியார் குடும்பம், 2 இஸ்லாமியக் குடும்பம், 3 சேர்வை எனப்படும் கள்ளர் குடும்பங்கள் கொண்ட ஒரு கிராமம். அந்தக் கிராமத்தின் பெயர் சிறுகாசாவயல் – கள்ளக்காத்தான். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டத்தில் (இன்று ஆவுடையார்கோவில் வட்டம்) வெள்ளாற்றங்கரையில் – வடகரையில் – ஆவுடையார்கோவிலிருந்து 11கி.மீ தூரத்தில் உள்ள இயற்கை எழில்கொஞ்சம் கிராமம் அந்த கிராமம். அந்த கிராமத்தில் வசித்துவந்த 3 கள்ளர் குடும்பத்தில் ஒரு குடும்பத்தின் பெயர் ‘ரெங்கூன் சேர்வைக்குடும்பம்’. இந்தக் குடும்பத்தில் பிறந்த ஒரு சிறுவன் ஏதோ ஓர் காரணத்தால் தனது 15 வயதில் ஊரைவிட்டுப் புறப்பட்டு சென்னை சென்று சேருகிறான். சென்னையில் பல்வேறு கடைகளில், நிறுவனங்களில் வேலைசெய்து தன் வயிற்றுப்பாட்டை ஓட்டிக்கொண்டிருந்த அந்தச் சிறுவன் ஒரு கட்டத்தில் ஜனசக்தி அச்சகத்தில் வேலைசெய்து வருகிறான். பணிபுரியும் இடம் பொதுவுடைமைச் சித்தாந்தத்தின் பாசறையாதலால் மார்க்சீயக் கொள்கைகளை அங்கு பணிபுரிந்த தோழர்கள் மூலமும் அன்றைய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் மூலமும் கற்றுத் தேர்கிறான். கற்றுக்கொண்ட சித்தாந்தப் பின்னணியில் கட்டுரைகள், கவிதைகள் எனப் படைப்புப் பல படைக்கிறான். அவனது படைப்புகள் படிப்பவரை எழுச்சிகொள்ளச் செய்கின்றன. இதெல்லாம் நிகழ்ந்தேறிய காலம் 1960கள் ஆகும். 15வயதில் தன் ஊரை விட்டுப்போன அந்த இளைஞன் தன் 25 வயது வாக்கில் அந்தக் கிராமத்திற்கு வருகிறான். தன் குடும்பத்தாரோடு ஓரிரு வாரங்கள் அங்கு வசிக்கிறான். அப்போது அவன் காணும் சமூக நிலவரங்கள் அவனுக்குப் பெரு வியப்பையும் அதிர்ச்சியையும் வேதனையையும் தருகின்றன. ஒருநாள் வயல்வெளிப் பகுதியில் வெள்ளைச் சட்டை, வெள்ளைவேட்டி, தலையில் உருமா எனப்படும் முண்டாசோடு ஒரு மனிதர் வந்து கொண்டிருக்கிறார். அதைப் பார்த்த சேர்வைக்காரர் ஒருவர் அந்த மனிதரைத் தன் அருகில் அழைக்கிறார். ‘யார் நீ! எங்கே போகிறாய்?! என்று இவர் கேட்டதும் அவர் தான், ஏகணிவயல் பகுதியிலிருந்து மின்னாமொழிக்குப் போகிறேன் என்கிறார். “ஏகணிவயலில் நீ யார்?” என்று மீண்டும் இவர் கேட்க, ‘நான் பறைய வீட்டுப் பையன்’ என்று சொன்னவுடன் அந்த சேர்வைக்காரர் ஓங்கி அறைந்து,” “ஏன்டா! பறப்பயலுக்கெல்லாம் வெள்ளையும் சொள்ளையும் கேக்குதா?! எவ்ளோ திமிரு இருந்தா எங்க ஊருக்குள்ளே முண்டாசு கட்டிக்கிட்டு வருவ’ என்று திட்டி, அவரது சட்டையையும் உருமாவையும் கால்செருப்பையும் கழற்றவைத்து, ‘எல்லாத்தையும் கக்கத்தில் இடுக்கிக்கிட்டே ஓடிப்போ’ என விரட்டியடிக்கிறார். வெளியூரிலிருந்து வருபவருக்கே இந்த நிலையென்றால் உள்ளுரில் வாழும் பறையர் நிலையைக் கேட்கவா வேண்டும்? அன்றைய நிலையில் குடிப்பறையனாயிற்றே! செத்தமாடு தூக்குறது, சாவுச் சேதி சொல்லுறது, ஆளானசேதி சொல்லுறது, தப்படிச்சு தண்டோரா போடுறது, சாவுக்குப் பறையடிக்கிறது, பாடைகட்டுவது, குழிவெட்டுறது, பொணம் எரிக்கிறது, விவசாயக் கூலி வேலை செய்யுறது என எல்லாக் குடிவேலையும் அந்தக் கிராமத்தில் நடந்து கொண்டிருந்தது. 60 பறையர் குடும்பத்துல ரெண்டு மூனு குடும்பத்துக்கு மட்டும் நிலம் கொஞ்சம் இருந்தது. அதுல ஒரு குடும்பம் ஓட்டுவீட்டுப் பழனிக்கிழவன் வீடு. அந்தப் பழனி குடும்பத்துக்கு மட்டும் அந்த ஊரிலேயே பலவேலி நிலம் இருந்திருக்கிறது. ஒன்னுரெண்டு குடும்பத்துக்கு நிலம் இருந்ததே தவிர மீதி எல்லாக் குடும்பமும் குடிவேலை செஞ்சுதான் பிழைத்திருக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்த இந்த இளைஞன், “இந்த அடிமைத்தனத்திலிருந்து இந்த மனிதர்களை மீட்டுச் சுதந்திர மனிதனாய் வாழவைக்கத்தானே நாம் படித்த கம்யூனிசம் வழிகாட்டுது. அதை இங்கே செஞ்சு காட்டுனா என்ன?” என்று எண்ணினான். ஒவ்வொரு நாளும் அந்தக் கிராமத்தில் இந்தப் பறையர் மக்கள் படும் இன்னல், இழிவு, மன உளைச்சல் எல்லாவற்றையும் பார்த்த அந்த இளைஞனால் பல இரவுகளில் தூங்க முடியவில்லை. தூங்கிக் கிடக்கும் இந்த மக்களைத் தட்டி எழுப்பி விடுதலை மனிதனாக்குவது எப்படி என்று ஒவ்வொரு நாள் இரவிலும் சிந்தித்திருக்கிறான். இப்படிப் பலநாள் சிந்தித்த அந்த இளைஞன் ஒரு நாள் இரவில் படுக்கைத் தளையிலிருந்து எழுந்து பறையர் சேரிக்குப் போனான். ஏற்கனவே அவ்வப்போது பேசிப் பழகியிருந்த பறையர் வீட்டு இளைஞர்களான காளி என்.இரத்தினம், சன்னாசி இன்னும் சிலரை எழுப்பி அழைத்து “நீங்கள் எல்லோரும் இந்த அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறணும்னா எல்லாரும் கம்யூனிஸ்ட் கட்சியில் சேருங்க… நான் ஒங்களுக்குப் பக்கபலமாக இருக்குறேன்” என்று அந்தக் காலத்தில் கீழத் தஞ்சையில் தோழர் பிஎஸ்ஆர் நடத்திவந்த போராட்ட முயற்சிகளின் அனுபவங்களையெல்லாம் சொல்லி விழிப்புணர்வை ஊட்டினான். ஓரிரு நாள் இரவுநேர விழிப்புணர்வுப் பிரச்சாரத்தின்மூலம் பத்துப்பதினைந்து பேரைத் திரட்டிவிட்டான் அந்த இளைஞன். அந்தக் காலத்தில் அறந்தாங்கி வட்டாரத்தில் ஆவுடையார்கோவில் பகுதியில் புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் தலைவர்களாகத் திகழ்ந்த அறந்தாங்கி ஒன்றியச் செயலாளர் கிருஷ்ணா கபே தோழர் கிருஷ்ணமூர்த்தி, புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் தோழர் கே.ஆர்.சுப்பையா, வி.ச. மாவட்டச் செயலாளர் தோழர் அப்புக்குட்டி, ஒன்றியக் உறுப்பினர்கள் தோழர் கருப்பூர் காளிமுத்து, தோழர் ஜெயமாலைப் பிச்சை ஆகியோரை அழைத்துக் கொண்டு 1975ஆம் ஆண்டில் ஒருநாள் இரவில் அந்தச் சிறுகாசாவயலைச் செங்கொடி பறக்கும் வயலாக மாற்றினான். அன்று நடந்த கூட்டத்திற்கு தோழர் மா.சுப்பிரமணியன் தலைமைவகித்தார். தோழர் காளி என்இரத்தினம் கிளை செயலாளரானார். கொடியேற்றப்பட்ட குதூகலிப்பில் அந்த இளைஞனும் பறையர் மக்களும் திரண்டிருந்த நேரத்தில், முன்பே இதையறிந்திருந்த கள்ளர் குடும்பத்து மிராசுதார்கள் அடியாட்களுடன் பறைச்சேரிக்குள் புகுந்து மிரட்டினர். அந்த நேரத்தில், எப்படியாவது அந்தப் புரட்சிகரஇளைஞனைக் காப்பாற்றிச் சென்னைக்கு வழியனுப்பிவைக்க விரும்பிய இளைஞர்சிலர் கூண்டு வண்டியோ தட்டு வண்டியோ பாரவண்டியோ ஏதோ ஒன்றில் அந்த இளைஞனை ஏற்றிக் கொண்டுபோய் நாகுடி என்னும் ஊரில் அறந்தாங்கி செல்லும் பேருந்தில் ஏற்றி வழியனுப்பிவிட்டார்கள். அன்றிலிருந்து அந்தப் பறைச்சேரியை, ‘விட்டேனா பார்! எடுத்தேனா பார்!’ என்று ஒவ்வொருநாளும் மிரட்டியும் துன்புறுத்தியும் வந்தனர் கள்ளர் குடும்பத்தார். ‘வாராது வ்நத மாமணியைத் தோற்போமோ’ என்றிருந்த பறையர் மக்கள் ஆதிக்கச் சாதியை எதிர்த்து பல்வேறு கட்டங்களில் போராடினர். இந்திய நாடு அவசர காலப் பிரகடனத்தால் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற முழக்கத்தை முன்வைத்து, ‘விடாதே பிடி நிலத் திருடரை’ என்று ஒருசிறு பிரசுரமெல்லாம் வெளியிட்டு நில மீட்புப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தது. இந்த நில மீட்புப் போராட்டத்தை வீரம் செறிந்த போராட்டமாக நடத்தி வெற்றி கண்டது இந்தக் கிராமம். ஒருமுறை, தெக்குத்திப் பகுதியிலிருந்து 50, 60 அடியாட்களைக் (அவர்களும் வேறு ஒரு பிரிவு தாழ்த்தப்பட்ட மக்கள் தானாம்) கொண்டுவந்து தங்கவைத்துக்கொண்டே அச்சுறுத்தி வந்ததோடு, ஒரு மாதக் கணக்கில் ஆயுதத் தாக்குதலும் நிகழ்த்தியிருக்கிறார்கள் மிராசுதார்கள். விடுதலை உணர்வும் சமத்துவ வேட்கையும் கொண்ட இந்த அடித்தட்டு மக்களும் அவர்களோடு ஒரு மாதகாலத்துக்கும் மேலாக ஆயுதம் தாங்கிப் போராடி, அடியாட்களை ஓடஓட விரட்டி வெற்றி பெற்றுள்ளனர். இத்தகைய போராட்டம் நடந்த காலத்தில் அந்த கிராமத்தில் இருந்த அத்தனை பேரும் கம்யூனிஸ்டுகளாக மாறிப் போராட்டத்தில் இணைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு, இந்தப் பறையர் மக்களெல்லாம் ஒன்றுகூடி, ‘இனிமேல் எந்த ஒரு குடிவேலைக்கும் போவதில்லை’ என முடிவெடுத்து அதன்படி இன்றுவரை வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய போராட்டத்தின் விளைவும் பயனும்தான் இங்கு மிகவும் எண்ணிப் பெருமிதம் கொள்ளத்தக்கன என்றால் அது மிகையாகாது. அப்படியென்ன… விளைவும் பயனும் உண்டானது என்று தானே கேட்கிறீர்கள்.!? ரெண்டு மூனு பறையர் குடும்பத்தைத் தவிர அன்றைக்கு யாரிடமும் நிலம் இல்லாத நிலையில் இருந்தார்கள் இல்லையா! இன்று எல்லோர் கையிலும் ஒன்றுரெண்டு மாவிலிருந்து 15, 20 மா வரை நிலவுடைமையாளர்களாக மாறியிருக்கிறார்கள். எப்படி இது நிகழ்ந்தது?! குடிவேலை செய்வதில்லை என்றமுடிவில் உறுதியாக இருந்த இந்த மக்கள், அதே ஊரில் வாழ்ந்துவந்த செட்டியார், இஸ்லாமியர் குடும்பங்களுக்கும் பக்கத்து ஊர்களான பட்டமுடையான் கோனார் குடும்பங்களுக்கும், சாத்தகுடி காட்டுக்குடி ஊர்களில் வாழ்ந்த பிற சாதிக் குடும்பங்களுக்கும் விவசாயக் கூலி வேலை செய்து வரலாயினர். இப்படியே, பத்துப் பன்னிரெண்டு வருடம் கடந்ததும், தங்கள் கையில் சேர்த்துவைத்திருந்த தொகைகளை வைத்துச் சிறு சிறு வயல்களாக வாங்க ஆரம்பித்தனர். இதே நேரத்தில், இந்த ஊரைவிட்டு வேறு ஊர்க்களுக்கு முழுவதுமாக இடப்பெயர்வான செட்டியார் குடும்பத்தார்களும், முசுலீம் குடும்பத்தார்களும் அவர்களது நிலங்களைப் பறையர் குடும்பங்களிடமே விற்றுவிட்டுச் சென்றனர். என்னதான் நிலவுடைமைக்காரர்களாக இருந்தபோதிலும், தங்கள் நிலங்களைக் கள்ளர்களிடம் விற்றுவிட விரும்பாமல் பறையர்களிடமே விற்றுள்ளனர் என்பது வர்க்க முரண்களோடு உள் ஒளிந்திருக்கும் சாதீய முரணும் சேர்ந்தே வேலை செய்திருக்கிறது என்பதைக் காட்டுகிறதல்லவா?! இப்படியே, ஒவ்வொரு குடும்பமும் நிலம்வாங்கி நிலம்வாங்கி நில மீட்புப் போராட்டத்தால் குறைந்த விலைக்கு வாங்கி இன்று நிலம் இல்லாத பறையர் குடும்பமே இல்லை என்ற தன்மதிப்புநிலை இந்த ஊரில் உருவாகியிருக்கிறதென்றால், அதற்கு வித்திட்ட பெருமையும் வரலாற்றுச் சிறப்பும் அந்த இளைஞனையே சாரும்… அதுசரி… யார்தான் அந்த இளைஞர் என்ற ஆர்வ வினா உங்கள் சிந்தனையில் முளைக்கிறதல்லவா?! அந்த இளைஞர் வேறு யாருமல்ல.. ஜனசக்தியில் ‘எரிமலை’யாய் எழுதிவந்த அறந்தை நாராயணன்தான் அந்தக் கிராமத்து மறுமலர்ச்சிக் குறியீடு; செங்கொடி இயக்க வீர வரலாற்றின் மைல்கல் என்றால் அது மிகையில்லை. * * * இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 90ஆம் ஆண்டு வரலாற்றுச் சிறப்பு மலர் – 2015க்காக 10 டிசம்பர் 2015 அன்று அனுப்பப்பட்ட கட்டுரை. Email: info.janasakthi@gmail.com பேசு 9383005015, 9382005014, ஜனசக்தி நாளிதழ், சென்னை – 14. * கட்டுரையாளர் இந்த ஊரைச் சேர்ந்தவர். தோழர் மா.சுப்பிரமணியனின் மகனார் ஆவார்

கமில் சுவலபில்லின் தமிழ் உணர்விலிருந்து…

கமில் சுவலபில்லின் தமிழ் உணர்விலிருந்து… முனைவர் சு.மாதவன் தமிழில் பேசாத... தமிழில் எழுதாத..., தமிழில் கையெழுத்திடாத..., தமிழில் பெயர் வைக்காத..., தமிழில் தலைப்பெழுத்திடாத ஐந்தரைக் கோடி தமிழர்களே வாழும் இன்றைய காலத்தில் தன் குன்றாத் தமிழார்வத்தோடு ஒரு வெளிநாட்டுக்காரர் தன்பேச்சு, எழுத்து, கையெழுத்து, முன்னெழுத்து (தலைப்பெழுத்து) என அத்தனையையும் தமிழிலேயே – தமிழுக்காகவே பதிவு செய்தாரென்றால் நம்புவீர்கள்! ஏனென்றால், தமிழன் இத்தனையும் செய்தான் என்றால் தான் நம்ப இயலாத நிலையில் நாம் வாழ்ந்து வருகிறோமே!? இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருந்தபோது, தற்செயலாக 12.11.2015 அன்றைய ‘தி இந்து’ (தமிழ்) இதழில் ஒய்.ஆண்டனி செல்வராஜால் எழுதப்பட்ட நிகழ்கதைச் செய்திப் பதிவைப் (Story) படித்ததும் நம்முடைய கருதுகோளுக்கு உரிய தரவாயிற்றே இது என்று எண்ணத் தோன்றியது. இதோ அந்தச் செய்தித் தலைப்பு : “பொங்கல் பண்டிகையை கொண்டாடும் கொரியர்கள்” “தமிழர்களின் வழிவந்தவர்களா என ஆராயும் உலகத் தமிழறிஞர்கள்” (ப.2) இதே நோக்குநிலையிலான ஆய்வுத் தரவுகளை உலக அளவில் எடுத்துச் சென்று உலகச் செம்மொழிகளுள் செம்மாந்த ஆற்றல்மொழி தமிழ்மொழி என்று அண்மைக் காலத்தில் ஒரு வெளிநாட்டுத் தமிழறிஞர் உள்நாட்ட முன்வந்தார். அவரது பெயர் கமில் வாச்லவ் சுவலபில் (Kamil Vaclav Zvelebil); செக்கோஸ்லோவிய நாட்டுக்காரர்; செந்தமிழ் நாட்டக்காரர். 1927 நவம்பர் 17 அன்று கமில் சுவலபில் – மரியம்மா இணையரின் திருமகனாய் பிறந்தார் ‘வாச்லவ்’. ஆம்! இன்று கமில் சுவலபில் என்று உலகம் அறிந்த அந்தத் தமிழறிஞரின் இயற்பெயர் ‘வாச்லவ்’ என்பதுதான். இங்கே தாயுமானார் என்பதுபோல இவர் தந்தைத் திருப்பெயரேயானார். அதாவது, தன் இயற்பெயரைத் தந்தையின் பெயருக்கு இடையில் இடைப்பெயராய்ப் பெய்து அழைக்கும் வழக்கம் செக்நாட்டில் இருக்கும் போலும். இப்படி அழைக்கப்பட்டதில், இடைப்பெயரான தன் பெயர் வழக்கொழிந்து தன் தந்தை பெயராலேயே அழைக்கப்படுவாரானார் நம் கமில் சுவலபில். தந்தைபெயரே தன் பெயராய் மாறிப்போன கமில், சிறந்த பன்முக ஆளுமையாகத் திகழ்ந்தவர்; பன்மொழி ஆற்றலாளராய் முகிழந்தவர். பெரும்பான்மையான தமிழறிஞர்கள் ஒரு குறிப்பிட்ட இலக்கியப் பகுதி அல்லது வகைமைக்குள் மட்டுமே ஆழங்கால்பட்ட புலமையும் நூல் வௌயீட்டுச் சிறப்பும் பெற்றிருப்பார்கள். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களே இவ்வாறிருக்கும் போது, இவரோ சங்க இலக்கியம், தொல்காப்பியம், காப்பியங்கள், நீதி இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், தல புராணங்கள், மரபுக் கவிதை, புதுக்கவிதை, சிறுகதை, புதினம் எனத் தமிழிலக்கியப் பெரும்பரப்பு முழுவதையுமே ஒரு ஆய்வு நீச்சலிட்டவராக ஒளிவிட்டுச் சிறந்து நிற்கிறார். அத்தோடு விட்டாரா நம் கமில்!? இலக்கியம் தவிர மொழியியல், இலக்கணம், நாட்டுப்புறவியல், மொழிபெயர்ப்பு எனவும் தன் ஆய்வுச்சிறகை வானளாவ விரித்துப் பறந்திருக்கிறார் என்பதை எண்ணிப் பார்க்கும்போது நம் புருவம் மேலேறி அப்படியே நிற்கிறதல்லவா!? வியப்பின் அசரலில் புருவம் கீழிறங்க மறந்து நிற்கிறதல்லவா!? அத்துணை ஆய்வுப் பணிகளை ஒரு வெளிநாட்டுக்காரர் செய்திருக்கிறார் என்னும் செய்தி நம் தமிழ்ப் பேராசிரியர்களின் மனசாட்சியை என்றுதான் தன்னுணர்வு பெறவைக்குமோ என விம்மத்தானே செய்கிறது நெஞ்சம்! முனைவர் பட்டம் பெற்று அரசுப் பணியும் பெற்றபின் எத்தனை பேர் தொடர்ந்து ஆய்வு செய்கிறார்கள் இங்கே?!. 25க்கும் மேற்பட்ட நூல்கள், 500க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எனக் கமில் படைத்த எல்லாம் தமிழ்ப் பண்பாட்டு மீட்டுருவாக்கப் பணிகளாக விளங்குகின்றன. KRONICA என்ற நூலில் 1951 முதல் 2004 வரை கமிலால் எழுதப்பட்ட 517 கட்டுரைகளைப் பட்டியலிட்டுள்ளனர் (பக். 253-266). இந்நூலில், மசரிக் பல்கலைக்கழக ஆய்வாளர்களான பெட்ரா நொவொன்டனா, வோக்லாவ் பிளஸெக் ஆகிய இருவரும் தொகுத்துள்ளனர். இவரது 25 நூல்களில் – முனைவர் மு.இளங்கோவனால் அவரது பதிவுத் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள நூல்களில் – வெளிநாட்டாருக்குத் தமிழ் இலக்கண, இலக்கிய மரபுகளை அறிமுகம் செய்யும் நூல்கள் -6, தமிழ்இலக்கிய ஆய்வு நூல்கள் -4, தமிழ் இலக்கிய வரலாறு -1, முருகன் பற்றிய நூல்கள் -3, தமிழ் மொழியியல் நூல்கள் -3, தமிழ் நாட்டுப் புறவியல் நூல்கள் -3, தமிழ் அகராதியியல், உரைநடையியல், சைவச் சிற்பவியல், இந்தியக் கடலியல் ஆகிய பொருண்மைகளில் தலா 1 வீதம் மொத்தம் 4 நூல்கள் என்றவாறு கமிலின் நூல்களை வகைப்படுத்தலாம். மேலும் சிலப்பதிகாரம், நற்றிணை, புறநானூறு ஆகியவற்றை கமில் மொழி பெயர்த்திருக்கிறார் என்ற செய்தியும் கிடைக்கிறது. இந்த நூல்கள் கிடைத்தால் மேலும் பல நூல்கள் இவரது படைப்புகளில் சேரும். இந்த வகைப்படுத்தல் மூலம் கமிலின் தமிழ் இலக்கிய அறிவும் ஆற்றலும் ஆய்வார்வமும் தெள்ளிதன் புலனாகும். தனது குன்றாத ஆர்வத்தால், இந்தியத் தமிழ் மரபைத் துல்லியமாக அறிந்து ஆராய உதவும் வகையில் 1952இல் சம்ஸ்கிருதத்தில் ஒரு முனைவர் பட்டமும் 1959இல் தமிழில் ஒரு முனைவர் பட்டமும் பெற்றார். இதுவரை தமிழ்நாட்டில் பட்டம்பெற்றவர்களில் ஏறத்தாழ 70% பேருக்குத் தன் தாய்மொழியிலேயே பிழையின்றி எழுதத் தெரியாது என்பது இன்றைய நிலையில் கசப்பான உண்மையாகும். தமிழர்கள் நிலையே இவ்வாறிருக்கும் போது ‘செக்’கைத் தன் தாய்மொழியாகக் கொண்ட கமிலுக்கு இப்படி ஒரு தமிழ்ப்பற்றும் ஆய்வு நுட்பமும் பரவலாக்க உணர்வும் எப்படி வந்திருக்கும் என்பது நுண்ணிதின் ஆராயத்தக்கது. இவரது புகழ்பெற்ற நூல்களுள் ஒன்று, “The Smile of Murugan : On Tamil Literature of South India” என்பதாகும். ‘முருகனின் முறுவல்’ – முருகனே அழகு; முருகு என்ற சொல்லின் பொருளும் அழகு; முருகனின் முறுவல் அதனினும் அழகு; அதையே தன்பெயராகவும் கொண்ட ‘சுவலபில்’ அழகோ அழகு! ஆம். ‘சுவலபில்’ என்பதற்கும் ‘More beautiful’ எனப் பொருளிருப்பதாக அறிகிறபோது ‘என்ன பொருத்தம் அவர்க்கு இந்தப் பொருத்தம்’ எனத் பாடத் தோன்றுகிறதல்லவா?! இதைவிட இன்னொரு பொருத்தம் இருக்கிறது. பாருங்கள்! இவரை ஈன்ற தாயின் பெயரோ மரியம்மா! ஒருவேளை, ‘மாரியம்மா’ தான் ‘மரியம்மா’ ஆனாள் எனக் கொண்டால் இவரது முன்னோர் தொல்தமிழ்க் குடியினராய் இருப்பரோ எனவும் எண்ண தோன்றுகிறது. மேலும் சிந்தித்தால் ‘தமிழ்’ என்பதன் ‘செக்’மொழி மருஉச் சொல்தான் ‘கமில்’ என்பதோ என்றும் ஒலியியல் ஒப்புமை தோற்றுவிக்கிறது. சரி… ‘கமில்’ – ‘தமிழ்’ என்றால் ‘சுவலபில்’ என்பதை என்னவென்று சொல்வது என்று நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கிறது. ‘சுவலபில்’ என்பதை ஆங்கில எழுத்துக்களில் ‘Svelebil’ என்று எழுதுகிறோமே, எழுத்து என்பதற்கே ‘Syllable’ என்பதுதானே ஆங்கிலச் சொல்!. அப்படியானால், ‘Syllable’ என்பது ‘Svelebil’ ஆகியிருக்க வாய்ப்புண்டல்லவா என்றும் தோன்றுகிறதே! இப்பொழுது இரண்டையும் இணைத்துப் பாருங்கள் கமில் ஸ்வலபில்  Kamil Svelebil  Kamil Syallabil  Tamil Syllable  தமிழ் எழுத்து என்று இருந்திருக்க வாய்ப்புள்ளதென்று தோன்றுவதற்கு வாய்ப்பிருக்கிற தல்லவா?! இந்த மொழியியல் – ஒலியியல் ஒப்புமையை எண்ணிப் பார்க்கிறபோது ‘கமில் ஸ்வலபில்’ குடும்பத்தார் தொல்தமிழ்க் குடியினராக இருந்திருக்கக் கூடும் என்ற கருத்து இன்னும் வலுப்பெறும் வண்ணம் உள்ளதல்லவா?! ஒரு வேளை, இந்தத் தொல்குடித் – தொப்புள்கொடி – உறவு ஆற்றல் தான் கமிலைத் தமிழ் பயில உந்தியருக்குமோ என்னவோ?! இந்தக் கருத்தை மேலும் ஆராய்வது ஆராய்ச்சி உலகின் கடன் என்று முன்வைக்க விரும்புகிறேன். இப்படி ஒன்றை நிறுவியாக வேண்டும் என்பது தேவையில்லை. நம்மிடம் இல்லாத தமிழ்ப் பற்றைக் கமிலிடம் இருந்தாவது நாம் பெற்றாக வேண்டும் என்பதே இன்றைய காலத்தின் தேவையாகும். 17 ஜனவரி 2009ல் இத்தகைய கமில் சுவலபின் உயிர் இந்த உலகில் இல்லை. ஆனால் அவரது சிந்தனைகளின் மூலம் அவர் விட்டுசென்ற ‘தமிழுணர்வு மூச்சுக்காற்று’ உலகமெங்கும் உலவிகொண்டே இருக்கும். இதை உணராமலே இன்னும் ஒரு நூற்றாண்டு கடந்தால் ‘தமிழ் மொழி அமிழ்தமொழி’ என்ற வாக்கியத்தை ‘தமிழ்மொழி அமிழ்ந்த மொழி’ என்று படிக்க வேண்டி வரும். கட்டுரையாளர் முனைவர் சு.மாதவன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை (செம்மொழி இளம்தமிழறிஞர் விருதுபெற்றவர்) மாட்சியமை தங்கிய மன்னர் கல்லூரி (த) புதுக்கோட்டை. பேச 9751 330 855, மின் அஞ்சல் : semmozhi200269@gmail.com

வள்ளுவ மெய்யுணர்தலில் பௌத்த மெய்யியல்

வள்ளுவ மெய்யுணர்தலில் பௌத்த மெய்யியல் முனைவர் சு.மாதவன் உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, மா மன்னர் கல்லூரி (த), புதுக்கோட்டை - 622 001, பேச : 9751330855, மின்னஞ்சல் : semmozhi200269@gmail.com அறிமுகம் மானுட வாழ்வின் பன்முகச் செயல்பாடுகளையும் ஓர் ஒழுங்கமைவுக்குள் கட்டமைத்து இயக்குபவை மெய்யியல்கள், அவற்றின் இயக்கத்திற்கு உட்பட்டு இயங்குபவை சமயங்களும் இயக்கங்களும். மெய்யியலின் பல்வேறு கட்டமைப்புக் கூறுகளின் வழியாக அவற்றின் வாழ்நிலையைத் தீர்மானிப்பது அறவியலேயாகும். அறிவியல் என்பது மானுடவாழ்வியல் ஒழுகலாறுகளை வரையறுத்துச் செயல்படுத்தும் ஒரு கோட்பாடாகும். ஒவ்வொரு சமூகமும் தனக்கென ஓர் அறவியல் கேட்பாட்டை உருவாக்கிக்கொள்வதோடு வெளியிலிருந்து அந்தச் சமூகத்துக்குள் கலக்கும் சமய, சமூக, அரசியல் பண்பாட்டுக் கூறுகளையும் வரித்துக்கொள்வது இயற்கை. அவ்வாறான தனித்தன்மையும், இயைபுத்தன்மையும் கொண்ட அறவியற் சிந்தனைகள் அவ்வச்சமூக இலக்கியங்களில் ஆழப்பதிந்தும், ஊடாடியும் நிற்பதும் இயல்பே. அந்தவகையில், தமிழகத்தில் பரவிய பௌத்த, சமண சமயங்களின் அறவியற் சிந்தனைகள் தமிழ் இலக்கியங்களில் - குறிப்பாகத் தமிழ் அறஇலக்கியங்கள் எனப்படும் பதினெண் கீழ்ககணக்கு நூல்களில் ஆழப்பதிந்தும், வெளிப்பட்டும் நிற்கின்றன. தமிழ் அறஇலக்கியங்களிலும், பௌத்த மெய்யியல் இலக்கியங்களிலும், முதன்மையாக வைத்துப் போற்றப்படுபவை திருக்குறளும், தம்மபதமும். இவை இரண்டுமே மானுட வாழ்வியலுக்கான செந்நெறிச் செல்நெறிகளை வலியுறுத்துவதையே தமது முதன்மை நோக்கங்களாகக் கொண்டு விளங்குவன. மெய்யுணர்தல் மெய்யுணர்தல் என்பது உலகியல் உண்மைகள் அனைத்தையும் உணர்தலாகும். “மாசறு காட்சி” உடையோர்க்கே இது வாய்க்கும். மாசறு காட்சியாவது உள்ளதை உள்ளவாறே உணர்வது. அதாவது, உலகியல் வாழ்க்கையின் இயல்பை அறிதலாகும். காட்சி என்ற தமிழ்ச்சொல் “தர்ஷன்” என்ற வடமொழிச் சொல்லுக்கு நேரான பொருள் தருகின்ற சொல்லாகும். தொல்காப்பியர், “ஒத்த காட்சி உத்தி வகை” எனக் குறிப்பதும், கணியன் பூங்குன்றனார், “திறவோர் காட்சியில் தெளிந்தனம்” எனப்பாடுவதும் எண்ணத்தகும். இவ்விரு இடங்களிலும் “காட்சி” என்னும் சொல் அளவை இயலை உள்ளடக்கிய மெய்யியலையும், மெய்யியலின் விளக்கமாக அமைந்த நூல்களையும் குறிக்கிறது என்பது தெளிவு. (நெடுஞ்செழியன்., க.2000:2) என்ற விளக்கம் இதை உறுதிப்படுத்தும். துன்பம் என்ற மாசை அறுக்கின்ற மெய்யியல் சிந்தனை மரபையே “மாசறு காட்சி” என்கிறார் வள்ளுவர். “இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு” (கு.36:2) என்ற குறளில் “இருள்” என்பது துன்பத்தைக் குறித்து நிற்கிறது. அறியாமையினின்று நீங்கிய தெளிந்த காட்சி உடையவர்க்கு துன்பம் நீங்கிய தெளிந்த காட்சி உடையவர்க்கு துன்பம்நீங்கி இன்பம்பயக்கும் என்பது இக்குறளின் பொருள். எனவே, துன்ப நீக்கத்திற்கு அறியாமையிலிருந்து விலகுதல் முதல் படிநிலையாகிறது என்கிறது வள்ளுவம். இந்த இடத்தில் மெய்யுணர்தல் குறித்த மணக்குடவரின் விளக்கத்தைப் பொருத்திப் பார்த்தல் நலம் பயக்கும். அவரது விளக்கம் வருமாறு : “மெய்யுணாதலாவது எக்காலத்திலும் எவ்விடத்திலும் அழியாது நிற்கம் பொருள இது என உணர்தல்” (வெள்ளைவாரணம்., த.மா.1993 : 286) மணக்குடவரின் கூற்றிலிருந்து “அழியாது நிற்கும் பொருள்” தான் மெய்யுணர்தலுக்கான அடிப்படை என்பது புலப்படுவதால் அது எதைக் குறிக்கிறது என்பது ஆராயப்படவேண்டியது. “அழியாது நிற்கும் பொருள்” என வள்ளுவம் குறிப்பிடுவதைக் கண்டறிய வேண்டுமானால், “அழிகிற பொருள்கள் யாவை” என்பதைக் காணவேண்டும். பௌத்த மெய்யியல் குறிப்பிடும் பன்னிரு சார்புகளாக நிற்கும் அனைத்தும் அழியக்கூடிய தன்மையன. இவை அழிந்த பிறகு எஞ்சி நிற்பது நிப்பாணம். எனவே அழியாத பொருளாக விளங்குபவை பௌத்த அறக்கூறுகளும், அவை அடைவிக்கும் நிப்பாணமுமே என்பது வெளிப்படை. இதை உணர்தலே மெய்யுணர்தலாகும். பௌத்த மெய்யியலின் மையமான கோட்பாடாக விளங்குவது பன்னிரு சார்புக் கோட்பாடாகும். பன்னிரு சார்புகளில் முதன்மையானது அறியாமை: இறுதியானது பிறப்பு, இபன்னிரு சார்புகளினின்று நீங்குதலே பிறப்பறுத்தலாகும். அவை வருமாறு : 1. (அவித்தை) பேதைமையல்லது பொய்க்காட்சியிலிருந்து ஏதுக்குத் தக்க ஸ்கந்த சேர்க்கையால் குஸல அகுஸல கன்மங்களாகிய ஸம்ஸ்காரங்கள் (செய்கைகள்) உண்டாகின்றன. 2. (ஸம்ஸ்காரங்கள்) செய்கைகளிலிருந்து மறுபிறப்பை யுண்டுசெய்ய கற்பந்தரிக்கும் விஞ்ஞானம் (உணர்வு) உண்டாகின்றன. 3. (விஞ்ஞானம்) உணர்விலிருந்து (நாமரூபங்களாகும்) அருவுரு உண்டாகின்றன. 4. (நாபரூபமாகும்) அருவுருவிலிருந்து (ஷடாயதனங்களாகும்) அறுவகை வாயில்களுண்டாகின்றன. 5. (ஷடாயதனங்கள்) சப்த, பரிச, ரூப, ரச, கந்த எண்ணங்களாகும் அறுவகை வாயில்களிலிருந்து (பதோ) ஊறு உண்டாகின்றன. 6. (பதோ) இன்ப துன்பம் ஊறுகளினின்று வேதனை நுகர்வு உண்டாகின்றன. 7. (வேதனை) நுகர்விலிருந்து தண்ஹா வேட்கையுண்டாகின்றன. 8. (தண்ஹா) வேட்கையிலிருந்து உபாதானப் பற்று உண்டாகின்றன. 9. (உபாதானம்) பற்றிலிருந்து பிறப்புக்கு மூலமான கருமக்கூட்டம் (பவோ) உண்டாகின்றன. 10. (பவோ) பிறப்புக்கு மூலமாகும் கருமக் கூட்டத்திலிருந்து (ஜாத்தி) மறுபிறப்பு உண்டாகின்றன. 11. (ஜாத்தி) மறுபிறப்புண்டாகி அதிலிருந்து ஜய - மூப்பு, மர்ணா – மரணம், ஸோகா – வலியும், பரிதேவா – அழுகையும், துக்கா – துன்பமும், தாம்நாஸே – கவலையும், சம்பாந்தே – ஏக்கமும் ஆகிய துக்கோற்பவ மூலமாம் வினைப்பயன்கள் உண்டாகின்றன. (அயோத்திதாசப் பண்டிதர்., க.1999 : 70 – 71) இப்பன்னிரு சார்புகளே மனிதனைப் பிறப்புறுத்தலிலிருந்து தடுத்து துன்பச் சூழலிலே பிறக்க வைக்கிறது. பிறத்தலுக்கு அடிப்படையாக உள்ள இதர பதினொரு சார்புகளுக்கெல்லாம் முதன்மையானதும், இவற்றின் தோற்றங்களுக்கெலலாம் அடிப்படையானதும் அறியாமையே. இதைத் தௌ;ளிதின் உணர்த்துகிறது திருக்குறள். மெய்யுணர்தல் அதிகாரத்தில், “பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும் மருளானாம் மாணாப் பிறப்பு” (கு.36 : 1) என்ற முதல் குறளிலேயே ‘அறியாமை’, ‘பிறப்பு’ இரண்டையும் குறிப்பிட்டு விடுகிறார் வள்ளுவர். பன்னிரு சார்புகளின் முதலும், இறுதியுமாக விளங்குபவை ‘அறியாமையும்’, ‘பிறப்பு’மே ஆகும். இவற்றை வள்ளுவர் தம் குறளில் முறையே ‘மருள்’, ‘பிறப்பு’ என்று குறிக்கிறார். அறியாமை எத்தன்மைத்து என்பதைப் பற்றி புத்தர் கூறுவதாவது : “இந்த உலகிலோ அல்லது அடுத்த உலகிலோ எந்தத் துன்பங்கள் இருந்தாலும் அவைகள் அனைத்திற்கும் வேராக உள்ளது பேதைமை. அவை (அத்துன்பங்கள்) விருப்பம் அல்லது ஆசை காரணமாக எழுபவை” “மலங்களில் எல்லாம் பெரியதோர் மலம் ஒன்று உண்டு. அறியாமையே முதன்மையான மலம், பிக்குகளே, அந்த மலத்தையும் ஒழித்துவிட்டு மாசற்றவராக விளங்குவீர்” (ராமசாமி., ப. 1996 : 24,25) இந்த அறியாமை என்கிற வித்துதான் பிறப்பை விளையச் செய்கிறது என்பது பௌத்த மெய்யியல் அடிப்படை. இதைக் குறள், “மருளானாம் மாணாப் பிறப்பு” என்று அப்படியே வெளிப்படுத்திருப்பது வியக்கத்தக்கது. அந்த அறியாமை எப்படிப்பட்டது என்பதை, “பொருளல்ல வற்றைப் பெருளென்றுணரும்” என்கிறது வள்ளுவம். வள்ளுவம் கூறும் ‘பொருளல்லவை யாவை’யென்றால் அறியாமை என்கிற மருளை உருவாக்கும் சிந்தனையோட்டங்களாகும். அதாவது, பிறப்பை உருவாக்குவதற்கான சங்கிலித்தொடர் இயக்க உணர்வுகள் ஆகும். இவற்றினால் உண்டாகும் மறுபிறப்பும் அதன் அளவாய்த் தோன்றும் இதர துன்பச் சுழற்சிக் கூறுகளும் பொருளல்லவை. இவற்றை நற்காட்சியைக் கொண்டு கண்காணிக்கின்றனர். இக்கருத்தை வலியுறுத்தும் பகுதி இதோ: “தவறில்லாதவற்றைத் தவறானவை என்றும் தவறுள்ளவற்றைத் தவறில்லாதவை என்றும்” நினைக்கின்றவர்கள், தீக்காட்சியுடையவர்கள். ஆகையினாலே, நரகம் அடைகிறார்கள். தவறானவற்றைத் தவறு என்றும் தவறில்லாதவற்றைத் தவறன்றென்றும் அறிகிறவர்கள், நற்காட்சி யுடையவர்கள் ஆகையினாலே சுவர்க்கம் அடைகிறார்கள். (சோமானந்தா பிக்கு : 176) இதே கருத்தின் அடிப்படையைக் கொண்டு விளங்கும் புத்தரின் மற்றொரு கூற்று வருமாறு : “உண்மையை உண்மையில்லையென யார் எண்ணுகிறார்களோ அவர்களும், உண்மையின்மையை உண்மையென்று மதிப்பவர்களும் முரணான கோட்பாட்டை மேற்கொள்ளும் கருத்து உடையவராதலால் மெய்யான பயனை அடையவே இயலாது. ஆனால், உண்மையினை உண்மையென்று அறிதலும், பொய்மையைப் பொய்மையென்று அறிதலும், பொய்மையைப் பொய்மையெனப் புரிதலுமே நேர்மையான முழுநிறைவையும் மெய்யான பலனையும் தரும்” (அம்பேத்கர்., பி.ஆர். 1994 : 155) ஆக, அறியாமையே பிறப்புக்கான மூலம் என்ற கருத்திலும், அவ்வறியாமை பொருளல்லவற்றைப் பொருளென்று உணரும் தன்மையது என்ற கருத்திலும் பௌத்த மெய்யியலும், வள்ளுவமும் ஒத்த சிந்தனையோட்டத்தைக் கொண்டிருப்பது உறுதியாகிறது. பொருளல்லவற்றைப் பொருளென்று உணர்தல் அறியாமை. ஆதலால், “பொருளல்லவற்றைப் பொருளென்று உணர்தல் – உள்ளதன் நுணுக்கம் உணர்தல்” மெய்ப்பொருள் காண்பதாகும். இம் மெய்ப்பொருள் கண்டார்க்குப் பிறப்புக்கான மூலகாரணமான அறியாமை நீங்கும். அறியாமை நீங்கிச் செம்பொருட் செயன்மைகளைக் கைக்கொள்ள, “மற்று ஈண்டு வாரா நெறி” புலனாகும். இக் கருத்துக்களைக் கொண்ட குறட்பாக்கள் வருமாறு: “எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” (கு. 36 : 5) “கற்றுஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்று ஈண்டு வாரா நெறி” (கு. 36:6) “பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு” (கு. 36 : 8) பௌத்தம் உண்மைத் தேட்டத் தடுப்புகளாக விளங்குபவற்றை “ஆஸவங்கள்” என்று குறிப்பிடுகிறது. ஆஸவங்கள் எனப்படுபவை நால்வகைக் குற்றங்களாகும். ஆவை 1. காமம் அல்லது சிற்றின்ப ஆசை, 2.பவம் (பிறப்பு) 3. திட்டி (பொய்க்காட்சி), 4. அவிச்சை (அறியாமை) ஆகியவைகளாகும். வள்ளுவமும் இவற்றையே குறிப்பிட்டிருப்பதைக் கீழ்க்காணும் ஒப்புமை உணர்த்தும்: வள்ளுவம் பௌத்தம் காமம் வெகுளி - காமம் மருளானாம் மாணாப் பிறப்பு - பவம் (பிறப்பு) பொருளல்லவற்றைப் பொருளென்று உணரும் - திட்டி (பொய்க்காட்சி பிறப்பு என்னும் பேதைமை - அவிச்சை (அறியாமை) மேற்கண்ட ஒப்புமைப் பகுதியிலிருந்து பௌத்த மெய்யியல் பின்புலத்தைத் தன்வயப்படுத்திக் கொண்ட வள்ளுவம் தனக்கென தனித் தடத்தையும் அமைத்துக் கொண்டமை புலனாகிறது. இதைப்போலவே தீக நிகாயம், பிரம்மஜால சூத்திரத்தில் காணப்படும் புத்தரின் கூற்றான, “பிறர் உன்னை பழித்தாலும், நீங்கள் அவர்கள் கூறுவது தவறு என்பதை எடுத்துக்காட்ட வேண்டும். இந்தக் காரணத்தால் இது பொய் என்றும், எம்மிடம் காணப்படுவதன்று என்றும் தெளிவுறுத்த வேண்டும்”. (ஜகநாதராஜா., மு.கு.1988 : 20) என்பதன் உள்ளீட்டுப் பொருண்மையை, “எப்பொருள் யார்யார்வாயக் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்ற குறள் வெளிப்படுத்தியிருப்பதும் இங்கு கருதத்தக்கது. இக் குறளின் கருத்தை இன்னும் தெளிவாய் எடுத்துக்காட்டும் பகுதி அங்குத்தரநிகாயத்தில் இடம்பெற்றுள்ளது. அப்பகுதி பின்வருமாறு : “ஒரு விஷயத்தைக் கண்ணால் கண்டு கருத்தால் ஆராய்ந்து, அது பகுத்தறிவுக்குப் பொருத்தமாயும் சகலருக்கும் நன்மை பயக்கக் கூடியதாகவும் இருந்ததால், அதை ஏற்றுக் கொண்டு அதன்படி நடக்கவும்”. (ராமசாமி, ப.1999 : 47) வள்ளுவ மெய்யுணர்தலில் பௌத்த பன்னிரு சார்பு நீக்கம் பொருளல்லவற்றைப் பொருளென்று உணரும் பிறப்புக்கான மூலகாரணமாக விளங்கும் அறியாமையிலிரு;நது நீங்குதலை முதல் எட்டுக் குறட்பாக்களில் மெய்யணர்தல் அதிகாரம் விவரிக்கிறது. ஒன்பதாவது குறளோ அறியாமையிலிருந்து கிடைக்கும் இதர சார்புக் கூறுகளையும் உணர்த்தி நிற்கிறது. அக்குறள் பின்வருமாறு : “சார்புஉணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றுஅழித்துச் சார்தரா சார்தரு நோய்” (கு. 36 : 9) அறியாமையிலிருந்து தொடங்கி துன்பத்தை விளைவிக்கும் பிறப்புவரை சங்கிலித் தொடர்போல ஊடாடிநிற்கும் அச்சார்புகள் யாவை என்பதை வள்ளுவம் வெளிப்படையாக விவரிக்கவில்லை. ஆனால், தொடக்கப் புள்ளியான அறியாமையையும், முற்றுப்புள்ளியான பிறப்பையும் வள்ளுவம் குறிப்பிட்டுள்ளது. இதர சார்புக் கூறுகளை வள்ளுவம் தோன்றிய காலத்து மக்கள் உய்த்துணர்ந்து கொள்வர் என்பதாலும் குறள்வடிவம் அவற்றை விவரிக்க இடம் கொடுக்கவில்லை என்பதாலும் கூறவில்லை போலும். வுள்ளுவம் தோன்றிய காலக்கட்டத்தில் தமிழ்ச் சமூகத்தில் மேலோங்கியிருந்த சமயங்களுள் பௌத்தம் குறிப்பிடத்தகுந்தது. எனவே, அதன் மெய்யியல் கருத்தியல் தாக்கம் திருக்குறளில் வெளிப்பட்டிருப்பது இயல்பானதே. இக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் “சார்பு” என்பது யோக நெறியையே குறிப்பிடுவதாக எழுதியுள்ளார். அவரே இதனை ஆருகதர் “உவர்ப்பு” என்ப என்றும் குறிக்கிறார் (பரிமேலழகர். உரை : 146 – 147). எவை எவை சார்புடையனவோ அவற்றின் சார்பிலிருந்து நீங்கிநின்று, பிறகு அதனை அழித்தால் துன்பங்களின் மூலமான பிறப்பைச் சாராமல் ஒருவன் வாழலாம். இந்த மெய்யுணர்தலை அறிந்தால் அவா அறுத்து வீடுபேறடையலாம் என்பது வள்ளுவத்தின் உட்கிடை. இதையேதான் பௌத்த மெய்யியலும் உணர்த்தி நிற்கிறது என்பது இங்கே உணரற்பாலது. காமம், வெகுளி, மயக்கங்களின் அழிவு : துன்ப நீக்கம. மெய்யுணர்தலுக்கு முதன்மையான தடையாக இருப்பது அறியாமை. ஆறியாமையை உருவாக்குபவை காமம், வெகுளி, மயக்கம் ஆகியவை. எனவே, இம்மூன்றும் ஒரு மனிதனிடமிருந்து நீங்கிவிட்டால் அறியாமை தானாக நீங்கிவிடும்: அறியாமை நீங்கிவிட்டால் துன்பம் நீங்கிவிடும் என்ற தருக்க இயைபை வள்ளுவமும் பௌத்தமும் ஒரே நேர்க்கோட்டில் அமைத்துக் கொண்டுள்ளமை தெளிவாகிறது. பயன்பட்ட நூல்கள் 1. அம்பேத்கர். பி.ஆர். புத்தரும் அவர் தம்மமும், இந்திய அரசு வெளியீடு, 1994. 2. அயோத்திதாசப் பண்டிதர்.,க.புத்தரது ஆதி வேதம், தலித் சாகித்ய அகாதமி, சென்னை, 1999 3. நெடுஞ்செழியன்., க. தமிழ் இலக்கியத்தில் உலகாயதம், மனிதன் பதிப்பகம், திருச்சி, 2000 4. சோமானந்த பிக்கு., தம்மபதம், மகாபோதி சொசைட்டி, சென்னை. 5. பரிமேலழகர் உரை., திருக்குறள், கழகப் பதிப்பு, 1986 6. ராமசாமி., ப புத்தர் போதனைகள், சந்தியா பதிப்பகம், சென்னை, 1996 7. வெள்ளைவாரணம்., தா.ம. திருக்குறள் உரைக்களஞ்சியம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1993 8. ஜகந்நாத ராஜா., மு.கு.தீகநிகாயம், முல்லை நிலையம், சென்னை, 1988

அறம், தருமம், நீதி : இந்தியத் தத்துவ மரபும் இலக்கியத் தமிழ் மரபும்

வரலாற்றுத்துறை மா.மன்னர் கல்லூரி(த), புதுக்கோட்டை அறம், தருமம், நீதி குறித்த சங்க இலக்கியம், கல்வெட்டு ஆவணப் பதிவுகள் செம்மொழிக் கருத்தரங்கம் அறம், தருமம், நீதி : இந்தியத் தத்துவ மரபும் இலக்கியத் தமிழ் மரபும் முனைவர் சு.மாதவன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி (தன்னாட்சி), புதுக்கோட்டை-622 001, பேச : 97513 30855 மின்னஞ்சல் : semmozhi_200369@yahoo.com semmozhi2002@gmail.com இந்தியப் பொதுப்புத்தியில் அறம், தருமம், நீதி எல்லாம் ஒன்றே என்னும் புரிதல் உள்ளது. அவ்வாறே, தமிழியப் பொதுப் புத்தியிலும் உள்ளது. ஆனால், இவை ஒவ்வொன்றுக்கும் தனித்த சிறப்புக் கருத்தியல்கள் உள்ளன. இச் சொல்லாடல்கள் பயனுறும் இடம், சூழல், விளைவு ஆகியவற்றுக்கேற்ப பொருள் வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. இத்தகைய சிறப்பியல்புகளை இவை கொண்டிருக்கும் அதேநேரத்தில் இவற்றுக்கிடையேயான பொதுவியல்புக் கூறுகளும் இயைபுக் கூறுகளும் இல்லாமல் இல்லை என்பதும் நோக்கத்தக்கது. ‘அறம்’ என்பது நெறி, வழி, செவ்விய இயற்கைப் போக்கு என்பன போன்ற பொருண்மைகளில் தமிழிலக்கியப் பெரும்பரப்பில் கையாளப்பட்டு வருகிறது (அறநெறி, அறச்செயல் போல்வன). ‘தருமம்’ என்பது ‘அறம்’ என்ற சொல்லுக்கான பதிலியாகச் சில இடங்களிலும் இந்திய மெய்யியல் பள்ளிகளின் பயன்பாட்டளவில் தனித்த தனித்த பொருண்மை கொண்டதாகப் பல இடங்களிலும் கையாளப்பட்டு வருகின்றது (தருமராசன், தர்ம காரியம், தருமச் செயல், தரும நீதி, தர்ம நெறி போல்வன). ‘நீதி’ என்பது சமூக வழக்கில் ‘சட்ட முறைமை’ என்னும் பொருளிலும் இலக்கிய வழக்கில் ‘அறநெறி’ என்னும் பொருளிலும் பெருவாரியாகக் கையாளப்பட்டு வருகிறது (நீதி இலக்கியங்கள், நீதிநெறி, அரசநீதி போல்வன). தமிழில் ‘அறம்’ என்ற சொல் தோன்றுவதற்கு முன்பு, பழமொழி, முதுமொழி, மூதுரை, வாயுறை வாழ்த்து, நன்று, நன்றி, நன்மை, நல்லது, முறை, முறைமை, நயம், நன்னெறி, நெறி, ஒழுக்கம், கடமை போன்ற சொற்கள் கையாளப்பட்டு வந்துள்ளன. இச்சொற்கள் பலவும் சங்க இலக்கியங்களில் பயன்கொள்ளப் பெற்றுள்ளன. இவைபோன்ற சொற்களோ ‘அறம்’ என்ற சொல்லோகூட இடம்பெறாமல் பலவிடங்களில் அறநெறி உணர்த்தப்பட்டுள்ளது. அறம், அறன், அறநெறி. அறவோன் போன்ற பல சொற்பயன்பாட்டின்மூலமும் சங்க இலக்கியங்களில் ‘அறம்’ என்ற கருத்தாக்கம் பரவலாக இடம்பெற்றுள்ளது. ‘தருமம்’ என்ற சொல் ‘தர்மா’ (Dharma) என்ற வடமொழிச் சொல்லின் தமிழ் வரிவடிவமாகும். இச்சொல், கொள்கை, கோட்பாடு, சமய விதிகள், சமயம், நெறி, இயல்பு, கடமை, தொழில்முறை போன்ற பல பொருண்மைகளில் கையாளப்பட்டு வருகிறது. இந்தியச் சமய, மெய்யியல் பள்ளிகளின் பயன்பாட்டில் ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு மெய்யியலும் அவர்களுக்கேயுரித்தான சிறப்புப் பொருண்மைகளில் பயன்கொள்ளப்பட்டு வந்துள்ளது. வேதநெறியில் ‘வருணாசிரம தர்மம்’ என்றும் பௌத்தநெறியில் ‘பௌத்த தர்மம்’ என்றும் சமண நெறியில் பொருளின் இயல்பு ‘தர்மம்’ என்றும் வாழ்வின் இயல்பு ‘புண்ணியம்’ என்றும் வேறுபல சமய – மெய்யியல் புரிதலில் அவர்களுக்கே உரித்தான சிறப்பார்ந்த பொருண்மைகளிலும் இச்சொல் புழங்கப்பட்டு வந்துள்ளது. ‘நீதி’ என்னும் சொல்லும் வடமொழியிலிருந்து தமிழுக்கு கி.பி.6 நூற்றாண்டு வாக்கில் வந்த சொல்லாகும். இதுவும் மனுநீதி, அரசநீதி, நீதிநெறி போன்ற பல்வேறு பொருண்மைகளில் கையாளப்பட்டுவருகிறது. வடமொழி வழக்கில் பெரும்பாலும் ‘அரசநீதி’ என்னும் பொருளில் கையாளப்பட்டுவரும் இச்சொல், தமிழ் வழக்கில் பெரும்பாலும் ‘ஒழுக்க நெறி’ என்னும் பொருளிலேயே கையாளப்பட்டு வருகிறது. ‘அறநெறி’ ‘நீதிநெறி’ என்ற சொல்லாடல்களில் இரண்டுக்கும் பொதுவாய் ‘நெறி’ என்பது நிற்பதும் அண்மைவழக்கில் ‘சமூகநீதி’ என்னும் பரந்துவிரிந்த பொருண்மையில் கையாளப்பட்டு வருவதும் கண்கூடு. எனவே, அறம், தருமம், நீதி என்பன ஒன்றின் கருத்தியல் வளர்ச்சி ஒவ்வொன்றும் இடம்பெற்றுத் தனித்த சிறப்பியல்புகளையும், குறித்த பொதுவியல்புகளையும் கொண்டு இலக்கியத் தமிழ் மரபிலும் இந்தியத் தத்துவ மரபிலும் வேர்கொண்டுள்ளன எனலாம். மேற்குறித்த நோக்குநிலைகளில் ஆழமான – துல்லியமான ஆய்வுமுடிகளை இக் கட்டுரை முன்வைக்கும். வைதீகத் தத்துவ மரபில் தருமம், நீதி தமிழில் ‘அறம்’ என்ற ஒரேசொல் குறிக்கும் இருபட்டகக் கருத்தியலை எடுத்துரைக்க வடமொழியல் தருமம், நீதி ஆகிய இரு சொற்கள் பயன்படுத்தப் படுகின்றன. இவ் இரு சொற்களும்கூட வைதீக மரபில் குறிக்கும் பொருண்மை வேறு; அவைதீக மரபில் குறிக்கும் பொருண்மை வேறு என்பதையும் நினைவில் கொள்ளல் வேண்டும். வைதீக மரபில் தருமம் என்பது வருணாசிரம தருமத்தை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகிறது. வருணாசிரமத்தைக் கட்டமைத்து நிலைநிறுத்தியது மனுதரும சாத்திரமாகும். அரசியல் தருமத்தைச் சொல்லவந்த அர்த்த சாஸ்திரம்கூட மனுதரும நெறியினைப் பின்பற்றித்தான் நெறிகளை வகுத்துள்ளது. மனுதரும சாத்திரத்தில் தருமம், நீதி வைதீக மரபு மனிதர்களை பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நான்குவகையாகப் பிரித்து அவரவர்க்கென தொழில்தர்மத்தை நியமித்து அத்தொழில்வழிப் பிறப்போரை அந்தந்த வருணத்தார் என வரையறுத்து வலியுறுத்தி வந்தது. எனவே, மனுதருமத்தின் பார்வையில் ‘தருமம்’ என்றாலே வருணாசிரம தர்மம் என்றே பொருள்கொள்ளப்படுகிறது. ‘நீதி’ என்றாலோ வருணாசிரம தர்மத்தின்படிப் பின்பற்றுவதே ‘நீதி’ என்றும் பின்பற்றாமல் இருப்பது ‘அநீதி’ என்றும் பொருள்கொள்ளப்படுகிறது. எனவே, வைதீக மரபில் ‘தருமம்’ எனப்படுவது ‘சட்டம்’ என்ற பொருளிலும் ‘நீதி’ என்பது தருமநெறியில் நிற்பது அதாவது அச்சட்டநெறியைப் பின்பற்றுதல் என்ற பொருளிலும் கையாளப்படுகிறது என்பது தெளிவு (மநுதர்ம்ம சாத்திரம், 1990 : 294 -297) பிறப்பின் அடிப்படையில் இவர்இவர் செய்யத்தகுவன, செய்யத் தகாதன என வரையறுப்பது தருமம்; வரையறுத்த நெறிப்படி நிற்பது ‘நீதி’; வரைறுக்கப்பட்ட நெறியினின்று மாறியொழுகுதல் ‘அநீதி’ என்பதே வருணாசிரமதருமப் பார்வையாகும். இவ்வாறு, வரையறுக்கப்பட்டதிலிருந்து மீறிச் செயல்படும் பிராமணனுக்கு ஒரு தண்டனை; பிறர் பிறருக்குப் பிறபிற தண்டனைகளையும் மனுதருமம் கூறுகிறது. தொழிலும்கூட பிராமணன், சத்திரியன், வைசியன் மூவருக்கும் இன்னின்ன தொழில்கள் உரியன என வரையறுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சூத்திரனுக்கு மட்டும் தொழில் சொல்லப்படவில்லை. அவன், பிராமணனுக்கு மட்டும் அடிமைப்பணி செய்துவர வேண்டியதெனக் குறிக்கிறது மனுதருமம். அவைதீக மரபில் தர்மம் /தம்மம் சமண தர்மத்தின் அடிப்படை : அஹிம்மைசயும் மும்மணிகளும் சமண சமயத் துறவிகளும், இல்லற வாழ்வோரும் பின்பற்ற வேண்டிய ஒழுகலாற்று நெறிகளை வரையறுத்துக் கூறுவதே சமண அறமாகும். இச் சமண அறநெறிகள் இந்தியாவின் - உலகின் பல்வேறு சமய நெறிகளிலிருந்தும் முற்றிலும் மாறுபட்ட தன்மை வாய்ந்தனவாய் விளங்குகின்றன. ‘அறம்’ குறித்த சமண வரையறைகளை இங்கு அலசுவது அவசியமாகிறது. ‘அருங்கலச் செப்பு’ கூறியிருப்பதாவது: “அறம் எனில் பொருளின் இயல்பாகும். இங்கே உயிர் இயல்பு அறம் என்படுகிறது.” (அ.செ. 1997 : 21) உயிரை ஒரு பொருளாகக் கருதி, உயிர் உள்ளன (சேதன), உயிர் அல்லன (அசேதன) என்ற பகுப்புகளை உருவாக்கியது. சமணச்செய்யுளில் இவை அனைத்துக்கும் பொருளாக உள்ள எந்த ஒன்றுக்கும் - அவற்றுக்கேயுரித்தான இயல்புகள் உண்டு. அந்த இயல்புகளினின்று மாறுபட்டு நிற்கும் பொருள்களின் இயக்க நிலையை அதனதன் இயல்புநிலைக்கே மீண்டும் கொண்டு வருதலே ‘அறம்’ எனப்படுகிறது. எனவே மானுடமாகிய உயிர்ப்பொருளின் இயக்கநிலையின் இயல்புப்போக்கு அஹிம்சையே என்கிறது சமணம். “அகிம்ஸை அறத்தின் பிராணனாகும்; பிராணன் இல்லாமல் உயிர் இல்லை. கடைக்கால் இல்லாமல் மாளிகை இல்லை, வேர்; இல்லாமல் மரம் நிற்க இயலாது. அதேபோல அஹிம்ஸை, தயை இல்லாமல் ‘அறம்’ எனும் மாளிகை அல்லது மரம் நிலைக்க. இயலாது. தர்மஸ்ய மூலம் தயா, ‘தம்மோ தயா விசுத்தோ’ என்பன ஆசாரியர்களுடைய வாணியாகும். ‘தயை அறத்தின் வேராகும்’ தயையினால் அறம் விளக்கம் பெறுகிறது. எங்கே அஹிம்ஸை தயை இல்லையோ அங்கே அறம் தோன்றுவதில்லை. பிறகு அது காகிதப் பூ போல அறம் என்னும் சொல்லின் போலிவடிவம் ஆகும். அஹிம்ஸா பரமோ தர்ம: “அஹிம்ஸையே மிக உயர்ந்த அறம்” (கல்லக் பார்சுவ கீர்த்தி வர்ணிஜீ., 1998: ஏஐஐ) என்ற சமணப் பேரறிஞர் பூஜ்யஸ்ரீ ஆர்ஜவசாகர் முனிவர் அவர்கள் விளக்கியுரைத்துள்ள கருத்துக்கள் இங்கு கருதத்தக்கன. மானுடகுல வரலாற்றின்படி, தொடக்ககாலச் சமூகம் காய்கனிகளைச் சேகரித்து உண்டு வந்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து, காய்கனிப் பற்றாக்குறை ஏற்படவே ‘மாற்று உணவுச் சேகரம் தேவை’ என்ற நிலையில் விலங்குகளை வேட்டையாட ஆரம்பித்திருக்கிறது. இவ்வாறு விலங்கை இம்சைசெய்து உணவாக்கிய மானுடசமூகம் அதன் உச்சநிலையாக மனிதர்களையும் இம்மைசெய்யும் போக்கை இயல்பாகவே மனிதர்களையும் இம்மைசெய்யும் போக்கை இயல்பாகவே அடைந்திருக்கிறது. இத்தகைய சமூக வரலாற்றுப் போக்கில் இம்சை தொடங்கப்பெற்றதன் காரணம் காய்கனிகளின் பற்றாக்குறையே என்பதால் அப்பாற்றாக்குறையை நீக்கினால் மானுட இயல்பான அஹிம்சை நிலைக்கும் என்பது ஒருதலை. காய்கனிகளின் உற்பத்திக்கு அடிப்படையான உழவுத் தொழிலும் பல உயிர்களின் அழிவுக்குக் காரணமாக இருப்பதால் அத்தொழிலையும் சமணம் புறந்தள்ளுகிறது என்பது மறுதலை. இத்தகைய கருத்துநிலைகளைக் கொண்டிருந்ததால்தான் சமணம் ‘வணிகர்களின் சமயமாக’ வளர்ந்து மிளிர்ந்தது. சமணத்தோடு முற்றமுழுதாக ஒப்புநோக்கத்தக்க வேறொரு சமயம் எதையும் குறிப்பிடுவதற்கான மெய்யியல் இடைவெளியைச் சமணம் கொண்டிருக்கவிலலை. கடுமையான தவமுறைகளைப் பின்பற்றுதல் என்ற நிலையில் சமணத்தோடு நெருங்கத்தக்க சமயம் எதுவுமில்லை என்பது இந்திய மெய்யியல் வரலாறு கண்ட உண்மை. இக்கருத்தை, “மனிதனுடைய மலர்ச்சிக்கு ஜைன தரும ஒழுக்கம் மிகவும் பயனுடையதாகும். அந்தத் தருமம் மிகவும் இயற்கையானது, தனியானது, எளிமையானது, மிக மதிப்புடையது, பிராமணர் மதத்திலிருந்து வேறுபட்டது. இது பௌத்தர்களுடையதுபோல நாத்திகம் அன்று”. (ஆர்ஜவ சாகர முனிவர்,, அ.இ : 354) என்ற டாக்டர் ஏ.கிராநாட் என்பவரின் கருத்தும் வலிவூட்டுவதாக அமைகிறது. மேலும், சமண அறவியலுக்குப் பின்னணியாகவும், அடிப்படையாகவும் உள்ள சமண மெய்யியலின் சாராம்சத்தை அறிஞர் நா.சுப்பிரமணியன் கீழ்வருமாறு தருகிறார்: “உலகப் பொருள்கள் யாவற்றையும் சீவன், அசீவன் என இருவகைப்படுத்தி நோக்குவது சமணம். சீவன் என்பது பொதுவாக உயிரையும் அசீவன் என்பது உயிரல்லாவற்றையும் குறிப்பதாகக் கொள்ளலாம். முற்றறிவுடையதான சீவன், அசீவனின் தொடர்பால் அந்த அறிவை இழந்து துன்புறுகிறது. இத்துன்பத்துக்குக் காரணமாக அமைந்தவை கர்மங்கள். இக்கர்மத் தொடர்பினின்று சீவன் தன்னை விடுவித்துக் கொண்டால் அசீவத் தொடர்பினின்று விடுதலை பெறலாம். அவ்வாறு, விடுபட்ட நிலையில் அது தன் இயல்பான அறிவுமயமான நிலையை எய்திவிடும். இவ்வாறு விடுபடுவதற்குக் கடும் விரதங்களை அனுசரித்து உடலை வருத்திக் கொள்ள வேண்டும். இவையே சமண சிந்தனையின் சாராம்சம்” (சுப்பிரமணியன்., நா.1996 : 20) இக்கருத்துக்களிலிருந்து பிறவிவிடுதலைக்கான படிநிலை வாழ்க்கை ஒழுகலாறுகளைப் பின்பற்ற வேண்டுவதே சமண அறிவியலின் அடிப்படையாக அமைகிறது என்பது தெளிவு. பௌத்த அறவியலில் நால்வகை வாய்மைகள் எவ்வாறு இன்றியமையா தனவாய் விளங்குகின்றனவோ அதுபோல் சமண அறவியலில் மும்மணிகள் இன்றியமையாதனவாய் விளங்குகின்றன. அவை, நற்காட்சி, நல்ஞானம், நல்லொழுக்கம் என்பன. பௌத்தத்தில் குறிப்பிடப்படும் அட்டாங்கமார்க் கத்திலும் இம்மும்மணிகள் இடம்பெற்றுள்ளன. நற்காட்சியினின்று நல்ஞானமடைந்து அதன்வழியிலான நல்லொழுக்கப் பாதையில் நடைபோடுதலே சமண அறவியலின் சாரம்சம். இம்மும்மணிகளின் முழுநிலை வடிவமே சமண அறவியல் எனப்படுகிறது. வீடுபேறடைவதற்கான முயற்சியின்போது கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், மேற்கொள்ள வேண்டிய நோன்புகள் என்பனவாகச் சில உயர்பண்புகள், ஒழுக்கநிலைகள் என்பவற்றைச் சமணம் முன்வைத்துள்ளது. இச்செயன்மைகள் குறித்து அறிஞர் நா.சுப்பிரமணியன் கூறுவன: “நற்கடைப்பிடி, நல்லறிவு, நல்லொழுக்கம் என்பன அணுகுமுறைகள்: அஹிம்சை, பொய்யாமை, கள்ளாமை, பிரம்மச்சரியம், உலகைத்துறத்தல், கற்பு, உளநிறைவு என்பன நோன்புகள். இவற்றுள் பிரம்மச்சரியம், உலகைத் துறத்தல் எனபன துறவுநெறியினர்க்கும், கற்பு, உளநிறைவு என்பன இல்லற நெறியினர்க்குமாகப் பேசப்படுபவை. இவையெல்லா வற்றிலும் முதன்மையானதும் யாவற்றிலும் பரவி நிற்பதுமான நோன்பு அஹிம்சை ஆகும். பிற உயிர்கள் எவற்றுக்கும் தீங்கிழைக்கக் கூடாது என்பதும் இயன்றவரை அவற்றுக்கு நலம் புரிய வேண்டும் என்பதும் அஹிம்சையின் உட்பொருளாகும்”. (சுப்பிரமணியன்., நா.1996 : 20) பௌத்த தம்மம் : சொற்பொருள் விளக்கமும் தம்மத்தின் வேர்களும் பௌத்த அறம் ‘தம்மா’ (னூயஅஅய) என்ற பாலிமொழிச் சொல்லால் குறிப்பிடப்படுகிறது. சிறப்புநிலையில் இச்சொல் பௌத்த அறத்தைச் சுட்டுவதாக அமையினும், பொதுநிலையில் பௌத்த மெய்யியல் முழுமையையும் வெளிப்படுத்துவதாகவும் அமைந்திருப்பது எண்ணத்தக்கது. புத்தரின் அறக்கோட் பாட்டை அர்த்த ஜாலம், தரும ஜாலம், பிரம்ம ஜாலம், திருஷ்டிஜாலம், சங்கிராம அனுத்தா விஜயம் என்ற சொற்களால் சுட்டுகிறது தீக நிகாயம் (1988:33). பொருள் பொதிந்த – உயிரோட்டமான – காட்சித்தன்மையுடைய - இயல்புகளைப் பௌத்த தம்மம் தன்னகத்தே கொண்டுள்ளதை இச்சொற்கள் உணர்த்துகின்றன. ‘தம்மா’ என்ற சொல்லுக்கு “யு னுiஉவழையெசல ழக டீரனனாளைஅ” கூறியுள்ள விளக்கம் கீழ்வருமாறு : “தம்மா (பாலி): தர்மா (சம்ஸ்கிருதம்) – பௌத்தம். பௌத்தத்தில் அடிக்கடி வருவதாகவும் பௌத்த மெய்யியலின் பல்வேறு இடங்களில், தொடர் புடையதாகவும் இச்சொல் விளங்குகிறது. இச்சொல்லுக்குப் பொதுப்படையான ஒரு பொருள் இல்லை. ஆங்கிலத்தில் இதற்குச் சமயம், உண்மை, கொள்கை, நேர்மை, நற்குணம், அணு, தன்மை, இயற்கை, சட்டம், முறைமை, சொத்து. பிரத்தியட்சப்பொருள் எனப் பல பொருள்கள் உண்டு. இவற்றில் சில பொருள்கள் பொதுவாக இந்தியச் சமயங்கள் சார்ந்தனவாகும். மற்றவற்றைப் பௌத்தத்தில் (எ.டு) காணலாம். சம்ஸ்கிருத வேர்ச்சொல்லான “த்ர்” என்பதற்கு, ‘சுமந்திருத்தல்’. ‘ஒர் அடித்தளம் அமைத்தல்’, ‘உயர்த்திப் பிடித்தல்’, ‘ஆதரவு தரல்’ போன்ற பல பொருள்கள் உண்டு. புத்தகோஷர் தம் மொழிப்புரையில் ‘தம்மா’விற்கு நான்கு வகையான பொருள்களைக் கூறுகிறார்: 1) நன்னடத்தையுடன் தொடர்புடையது, 2) அறநெறி சார்ந்த கருத்துரை, 3) புனித நூல்களிலுள்ள, புத்தர் சொன்ன கொள்கை, 4) பிரபஞ்சச் சட்டம். தம் தம்மசங்கணி பொழிப்புரையில் வேறுவித நான்கு பொருள்களை அவர் தருகிறார்: 1) கொள்கை 2) நிலை 3) அறத்தன்மை 4) அதிசய நிகழ்வு. இதனடிப்படையில் நோக்கும்போது பௌத்தத்தில் இதன் அடிப்படைப் பொருள்களாக கொள்கை, நன்னடத்தை, நிலை, அதிசய நிகழ்வு ஆகியவற்றைக் கூறலாம். இவற்றுள் முதன்மையிடம் பெறுவது கொள்கை. இதன்மூலமாக புத்தரின் தம்மம் (தர்மம்) புரிந்துகொள்ளப்படுகிறது. இது புத்த திரிரத்னங்களான புத்தம், தம்மம், சங்கத்தில் ஒன்றாகும். இங்கு தம்மம் என்பது புத்தரால் அறிவிக்கப்பட்ட உலகளாவிய பேருண்மையைக் குறிக்கும். தம்மம் என்பது புத்தருக்கும் முந்தையதாகும். தம்மாவின் வரலாற்று உருவகம் மற்றும் வெளிப்பாடே புத்தர் எனலாம். (திரிகாயக் கொள்கை), புத்தர்கள் அவ்வப்போது தோன்றுவர். அவர்கள் வருவர், போவர். ஆனால், தம்மம் என்றும் இருக்கும். இந்நிலையில் தம்மம் என்பது கிரேக்கக் கருத்துருவான ‘லோகோஸ்’ என்பதுடன் பொருந்திவருவதாகும்.” (காண்க : மத்யாமிகா) (வுசநஎழச டுiபெ., 1981 : 80-81) தீக நிகாயத்தில் உள்ள ‘தம்ம சக்கப் பவத்தன சூக்தம்’ என்ற பகுதிக்கு விளக்கம்தரும் ரைசு டேவிட்சு, “தம்மம் எனப்படும் அறம் (தருமம்) என்ற சொல் வெறும் சட்டவடிவத்தைச் சுட்டவில்லை. மாறாக, வேறு எம்மொழியிலும் மொழிபெயர்க்க முடியாத உண்மை – நேர்மை ஆகிய உயர் அறங்களைச் சுட்டி நிற்பதாகும். சுருங்கக்கூறின், தம்மம் என்பது புத்தரின் கோட்பாட்டை முழுமையாக உணர்த்தி நிற்கின்றது” (மேற்கோள், நெடுஞ்செழியன்., க.1988 : 95) என்று கூறியிருப்பது மிகவும் பொருந்துவதாக உள்ளது. புத்தரால் தம்மம் என்று அழைக்கப்படுவது அடிப்படையிலேயே மதம் என்று அழைக்கப்படுவதிலிருந்து வேறுபடுகிறது (அம்பேத்கர்., பி.ஆர்.1994 : 276).தம்மம் என்பது சமூக சம்பந்தப்படுவது அடிப்படையாகவும் சாராம்சத்திலும் தம்மம் சமூகவயப்பட்டது (அம்பேத்கர்.,பி.ஆர். 1994 : 277).அது தான் தோன்றிய காலம்வரையில் வளர்ந்துவந்த சமூக நிலவரங்களை முற்றிலுமாக மாற்றுகிற புதியதொரு கோட்பாடாக உருவாகியது என்பது தெளிவு. இவ்வாறு, சமூக மாற்றத்தைத் தன் இலக்காகக் கொண்ட தம்மம் தன் விளக்க முறையில் காரண – காரிய இயைபுகளையும் முரண்களையும் தெளிவாக ஆராய்ந்து அறிவித்து ஆற்றுப்படுத்துவதாக உள்ளது. இந்தவகையில் அறிவுத் தேட்டத்தின்வழியில் உண்மைத் தேட்டத்தையும், அதன்வழி நிப்பாணம் அடைவதற்குரிய படிநிலைகளை விளக்குவதையும் தம்மம் தன் பொருண்மைக் கூறுகளாகக் கொண்டுள்ளது. நம்பிக்கை, இலட்சியம் என்ற இரண்டு பொருண்மைகளைத் தம்மம் தனது வேர்களாகக் கொண்டுள்ளது. நம்பிக்கை என்பது மனிதகுலத்தின் அனைத்துத் துன்பங்களுக்கும், பிரச்சினைகளுக்கும், நோய்களுக்கும் முடிவுகட்டுவதற்கான வழிமுறைகளைத் தம்மம் செயல்பாட்டளவில் போதிக்கிறது என்பதில் உறுதியாய் இருப்பது. இலட்சியம் என்பது துன்பங்களின் தோற்றுவாயாய் உள்ள அவற்றின் மூலவேர்களை அறியாமல் இருக்கும் அறியாமையை நீக்குவது. தம்மத்தின் வேர்களாய் விளங்கும் இவற்றைப் பற்றிப் புத்தர் கூறுவதாவது: “என் தம்மம் தன்னில் நம்பிக்கை, இலட்சியம் இரண்டையுமே கொண்டதாயுள்ளது” . “அதன் இலட்சியம் அவிஜ்ஜாவை நீக்குவதாகும் அவிஜ்ஜா என்பதற்குத் துன்பத்தின் இருப்பை அறியாமை என்று நான் பொருள் கொள்ளுகிறேன்”. “அதில் நம்பிக்கை இருக்கிறது. ஏனெனில் அது மனிதகுலத் துன்பத்திற்கு முடிவு கட்டுவதற்கான வழியையும் காட்டுகிறது”. (அம்பேத்கர்., பி.ஆர்., 1994 : 112) அவிஜ்ஜா எனப்படும் அறியாமையைப் போக்கித் துன்பத்தின் இருப்பையும் அவற்றின் மூல காரணங்களையும் அறிந்துகொண்டு துன்பநீக்கவழிகளெனப் பௌத்தம் போதிக்கும் செயன்மைகளைக் கையாண்டு நிப்பாணம் என்னும் பிறவாப் பெருநெறி உய்வதையே பௌத்த தம்மம் வலியுறுத்துகிறது. இலக்கிய தமிழ் மரபில் அறம் அறம் என்ற சொல்: விளக்கம் அறம் என்ற சொல்லுக்குக் கடமை, நோன்பு, தருமம், கற்பு, இல்லறம், துறுவறம், நல்வினை, அறநூல், அறக்கடவுள், தருமதேவதை, தீப்பயணுண்டாக்குஞ்சொல் ஆகிய பொருள் விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன(கழகத் தமிழ் அகராதி., 1985 : 59). ‘அறு’ என்னும் வினைச்சொல் அடியாகப் பிறந்ததே ‘அறம்’ என்னும் சொல்லாகும். ‘அறு’ என்னும் அடிச்சொல்லிற்கு ‘அறுத்துச் சொல்’, வழியை உண்டாக்கு’, ‘உருவாக்கு’இ ‘தூண்டி’, ‘வேறுபடுத்து” என்ற பலவகைப் பொருள்கள் வழங்கி வருகின்றன. ‘அம்’ எனும் தொழிற்பெயர் விகுதி சொல்லமைப்பியல் ஆராய்ச்சியின் அடிப்படையில், மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்கமுறைகளின் தொகுதியே-முழுநிறை வடிவமே – அறம் என்று கூறுவர்(மேலது., 23). மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்டதோடன்றி, அவ்வக்காலத்தில் ஆளுவோர் மற்றும் சமயங்கள் வகுத்துக் கொடுத்தவையும் ‘அறம்’ எனப்பட்டன என்பது கருதத்தக்கது. ‘அறம்’ என்ற சொல் தோன்றுவதற்கு முன்பும் பின்பும் இச்சொல்லைக் குறிக்கும் பல சொற்கள் வழக்கத்தில் இருந்தன. அவை பழமொழி, முதுமொழி, மூதுரை,வாயுறை வாழ்த்து, நன்று, நன்றி,நன்மை, நல்லது, முறை, முறைமை, நயம், நன்னெறி, நெறி, ஒழுக்கம், கடமை, புண்ணியம், ஈகை, அறக்கடவுள், சமயம் ஆகியவையாகும். திட்டவட்டமான அல்லது நுட்பமான பொருள் வேறுபாடுகள் இருப்பினும், இச்சொல்லிற்கான பொருள்மீட்சியை மேற்குறித்த சொற்கள் தெளிவுபடுத்துகின்றன. ‘பிற்காலத்தில் வடமொழிக் கலப்பால் ‘நீதி’ என்ற சொல்லும் வேரூன்றியது. இச்சொல் கி.பி.ஆறாம் நூற்றாண்டு அளவிலேயே தமிழ்மொழியில் இடம்பெற்றது என்பர்(மேலது., 1977 : 16). அறம், நீதி என்ற இவ்விரண்டு சொற்களும் அறநெறி, நீதிநெறி என்றவாறு அமைவதிலிருந்தே இரண்டுக்குமான பொதுமைப் பண்பை அறியமுடியும். நம்முடைய முன்னோர்கள் ‘அறம்’ என்ற சொல்லிற்குத் தந்துள்ள விளக்கத்தோடு ‘எதிக்ஸ்’(நுவாiஉள) என்னும் ஆங்கிலச் சொல்லிற்குத் தரப்படும் பொருள் விளக்கம் மிகவும் பொருந்துவதாக இருக்கிறது. ‘இச்சொல் எதோசு’ (நுவாழள) என்னும் கிரேக்க வேர்ச்சொல்லிருந்து தோன்றியது. இவ் வேர்ச்சொல் முதலில் பழகிப்போன நடத்தை, வழக்கம், மரபு என்னும் பொருள்களை உணர்த்திவந்தது. நாளடைவில் ‘எதிக்ஸ்’ என்பது ‘ஒழுக்கத்தைப் பற்றிய அறிவியல் கலை’ என்று போற்றப்படும் நிலையை அடைந்துள்ளது(மேலது., 1977 : 24-25). மேற்கண்ட சொற்பொருள் விளக்கத்திலிருந்து தனிமனிதன், சமூகம், சமயம், அரசு இவற்றிற்கான ஒழுகலாறுகளை ‘அறம்’ என்றனர் என்பது தெளிவாகும். அறம் என்ற கருத்தாக்கம்;; மனிதகுல வரலாறு அவ்வப்போது பல குழப்பங்களைச் சந்தித்து வருகிறது. அனுபவத்திலிருந்து பல நெறிகளை உருவாக்கிக்கொண்டு அவைகளிலிருந்து மீண்டுவருகிறது. மனிதர்கள் ஒன்றுசேர்ந்து வேட்டையாடியபோது ஒலிக்குறிப்புகளின்மூலம் செய்தியைப் பகிர்ந்துகொண்டனர். அது வேட்டைக்கான நல்ல சூழ்நிலையை; வழியை உருவாக்கிக் கொடுத்தது. பின்னர், அவ் ஒலிக்குறிப்புகளிலிருந்தே மொழி உருவாகி வளர்த்து. மொழி உருவானதற்குப் பிறகுதான் மனித வாழ்க்;கை குறிப்பிடத்தக்க மேன்மையை அடைந்தது. வேட்டையில் ஒலி பெற்ற இடத்தை மொழி பெற்றதும் வழிகளில் தெளிவு ஏற்பட்டுச் ‘செயல்நெறி’ உருவானது. மேலும் மேலும் நுணுக்கமாக வளர்ந்தது. இச் செயல்நெறி வாழ்க்கை அமைப்பிலும் ஏற்பட்டது. இதனை ‘ஒழுக்கநெறி’ என்றனர்;. ‘ஒழுக்கம’; ‘ஒழுகு’ என்னும் சொல்லிற்கு ‘இடையறாது கடைப்பிடித்தல்’ என்பது பொருள். இடையறாது நீர் ஒழுகுவதை ‘ஒழுக்கு’ என்று கூறுவதைப்போல் வாழ்க்கையில் உயர்ந்தவையெனக் கருதப்படும் நெறிமுறைகளை எக்காலத்தும், எவ்விடத்தில் இடையறாது மேற்கொண்டொழுகுவதையே ‘ஒழுக்கம்’ என்பர்(திருநாவுக்கரசு., க.த. 1977 : 20 ). ஒழுகலாறாகிய செயலுக்கு அடிப்படையாக இருப்பது எண்ணமாகும். எண்ணம் தூய்மையாக இருந்தால்தான் சொல்லும் செயலும் தூய்மையாக அமையமுடியும். எனவே, எண்ணம் தூய்மையாக இருக்க வேண்டுமானால் எண்ணத்தின் எழுச்சிக்கும் நிலைக்களனாக உள்ள மனம் மாசு இல்லாததாக இருக்கவேண்டும். மனம் மாசற்றுத் தூய்மையாக இருக்கும் நிலையே ‘அறம்’ எனப்படும்(மேலது., 26). திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர், ‘அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழித்தலுமாம். அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படும். அவற்றுள் ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரியம் முதலிய நிலைகளில் நின்று அவ்வவற்றிற்கு ஓதிய அறங்களில் வழுவாது ஒழுங்குதல்’(மேலது., 23) என்று விளக்கியுள்ளார். இதில் மனு,வருணத்தார், பிரமசரியம் என்பவற்றை வலியுறுத்துவதால் வைணவச் சார்புடன் திருக்குறளை அடக்க முயற்சிக்கிறார் என்பது தெளிவாகிறது. முன்னாளில் வாழ்ந்த சான்றோர்கள் பலர் அவர்கள் உலக வாழ்வை உற்றுநோக்கி நுணுகிக் கண்டதை உன்னிப்பாகச் சிந்தித்து, மானிட நடத்தையின் நெறிமுறைகளைத் தேர்ந்து தெளிந்தனர். அவை பழமொழிகளாகவும், நீதி ஓதும் குட்டிக் கதைகளாகவும் (Pயசயடிடந) வடிவம் பெற்றன. அனுபவ மெய்ம்மைகளின் பெட்டகமாக ஒளிர்ந்த அவை, எல்லா நலமும் பெற்று இன்பமாய் வாழ்வதற்கு ஏற்ற வழிகாட்டியாக அமையும் என்று அச் சான்றோர் நம்பினர். ‘இந்தச் சான்றோர் நெறிக்கு அடிப்படையாகத் துலங்கியது ஒரு நம்பிக்கை, என்றுமுளதாகிய முறைமை ஒன்று -இறைமைக்கு உரியது - இந்த உலக வாழ்வை இயக்குகிறது என்பதே அது(இராமகிருஷ்ணன்.,எஸ்.1980 : 23) என்ற கருத்தும், ஆயிரத்தெழுநூறு ஆண்டுகட்கு முன்பு ரோமாபுரியில் இயற்றப்பட்ட ஜஸ்டீனியன் சட்டத் தொகுப்பில் (ஐளெவவைரவநள ழக துரளவinயைn) ‘இயற்கை நெறியாகிய அறம் இறையாற்றலால் தோன்றியது எல்லா நாட்டினராலும் பொதுவாகப் போற்றிக் காக்கப்படுவது; என்றும் மாறாத நிலைத்திருப்பது (மேலது., 1977 : 31) என்ற கருத்தும், வாழ்க்கையிலிருந்து தோன்றிய நெறியே அறநெறி என்பதை மறந்து அதற்கு இறைத்தன்மையையே உருவாக்குகிறது. இத்தகைய பின்னணியில் தோன்றியதே ‘அறம்’ என்ற கருத்தாக்கமும் கோட்பாடுமாகும். ‘ஒரு மனிதன் சமூகத்தைச் சேர்த்து வாழ்வதற்கும் அல்லது தனியே நின்ற தனிமனிதனாக இயங்குவதற்கும் அத்தகைய மனிதனுடைய பண்புநலன்களை உருவாக்கிவைக்கும் குறிக்கோள்களுக்கும், நோக்கங்களுக்கும், செல்வாக்குகளுக்கும், நிலையங்களுக்கும், ‘அறம்’ என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. நேர்மையான வாழ்க்கை வாழ்வதற்குரிய சட்டமாக அறம் விளங்குகிறது. அதை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதன் பயனாக இம்மையில் இன்பமும் மறுமையில் வீடுபேறும் அடைய முடியும் என்று நம் முன்னோர்கள் நம்பினர். அது ஒழுக்க இயல், சமயம் ஆகிய இரண்டும் இணைந்த ஒன்றாகக் காணப்படுகிறது. தனிமனிதனுடைய உரிமைகளும், கடமைகளும், சமூக இணைப்பும்,பழக்கவழக்கங்களுக்கும், விருப்பு-வெறுப்பு என்னும் இயல்புகளுமாகிய அனைத்து அறத்தின் கோட்பாட்டினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன(மேலது., 1977 : 48-49). என்றாலும், இவ் அறக்கோட்பாட்டை உருவாக்கவதும், வழிநடத்துவதும் சமூகத்தின் பொருளாதார உறவுமுறைகளே என்பதை, ‘அரசியல், நீதி, மெய்யியல், மதம், இலக்கியம், கலை ஆகிய எல்லா அம்சங்களின் வளர்ச்சியும், பொருளாதார வளர்ச்சியை அடித்தளமாகக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த மேல் கட்டுமானத்து அம்சங்கள் எல்லாம் சேர்ந்து ஒன்றின்மேல் ஒன்று வினையையும், எதிர் வினையையும் விளைவித்துக் கொண்டிருப்பதோடு பொருளாதார அடித்தளத்தின் மீதும் வினைப்படுகின்றன( பாலசுப்பிரமணியம்., 1987 :60) என்ற கருத்து வெளிப்படுத்தும். இவ்வாறு பொருளாதார வளர்ச்சியை அடித்தளமாக வைத்தே மனிதனின் அனைத்து வெளிப்பாடுகளும், செயல்பாடுகளும், கோட்பாடுகளும் அமைகின்றன. ஆகையால் பொருளாதார வளர்ச்சியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்போர் கருத்துக்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றனர். பொருளாதார வளர்ச்சியால் சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களை நெறிப்படுத்துவதே ‘அறம்’ என்பதன் தலையாய நோக்கமாக அமைகிறது. இந்நோக்கம் தெரிந்தோ தெரியாமலோ சில நேரங்களில் ஆள்வோர்க்குச் சாதகமானதாய் அமைந்துவிடுகிறது. எனினும், சமூக வளர்ச்சியில் அறம் என்ற கருத்தாக்கம் அல்லது கோட்பாடு வகிக்கும் பாத்திரத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது. இந்தவகையில், நெறிப்படுத்துதல்வழிச் செம்மைப்படுத்துதலும் என்பது அறக்கோட்பாட்டின் அடிப்படை நோக்கமாகிறது எனலாம். காலமும் தேவையும் தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்கம் மருவிய காலம் என்றும், சமூக வரலாற்றில் களப்பிரர் காலம் என்றும் குறிக்கப்படுகிற காலப்பகுதியை ஒட்டுமொத்தமாக வரலாற்றாசிரியர்கள் இருண்டகாலம் (னுயசம யுபந) என்று சுட்டுகின்றனர். இக் காலப்பகுதியின் வரலாற்றை எழுதுவதற்கான தெளிவான சான்றுகள் போதியஅளவு கிடைக்காததாலேயே இக்காலம் ‘இருண்டகாலம்’ என்று குறிப்பிடப்பட்டது. இவ்வாறு தெளிவான வரலாற்றுச் சான்றுகள் கிடைக்காமல் போவதற்கு இடைக்காலப் பகுதியில் ஏற்பட்ட அரசவழி, சமயவழி, சமூகவழிப் பூசல்களும், மோதல்களுமே காரணங்களாக அமைந்தன.எனவேதான், அரசு, சமயம், சமூகம் இம் மூன்றுக்கான செயல்வரைமுறைகள் ‘சமூக அறங்கள்’ என்று அழைக்கப்பட்டன. இவற்றில் தனிநபர், அரசு, சமூகம் என மூன்று வகையான ஒழுகலாறுகள் மூலமாகச் சமூகத்தைச் சமநிலைத்தன்மை கொண்டதாக்கவும், சமூகத்தில் எழும் பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு சமூக வரையறைகளையும், தனிமனித ஒழுகலாறுகளையும், அரச நெறிகளையும் கொண்டு அற இலக்கியங்கள் தோன்றலாயின. இவை அன்றைய சமூகத் தேவையாகவும் இயல்பாகவம் இருப்பினும் இவ் அறக்கருத்துக்கள் சமூகத்தில் சரியான பிடிமானத்தோடு பரவிடவும், பரப்பிடவும் பௌத்த, சமண சமயங்கள் பெரும்பங்காற்றின. சமய அறநெறிகளைச் சமூக அறநெறிகளாக அற இலக்கியங்கள் உள்வாங்கி வெளிப்பட்;டன. இம் முயற்சிகளில் சமயங்களுக்குக் குறிப்பாகப் பௌத்தம் மற்றும் சமணத்திற்குப் பெரும்பங்கு உண்டு. சமூகத்தின் இயல்பான தேவையையொட்டி எழுந்த பல்வேறு அறக்கருத்துக்கள் தனித்தன்மை கொண்டதாகவும், சமயச் சார்புத்தன்மை கொண்டதாகவும் வெளிப்பட்டன. இக்கருத்துக்களின் ஊடகமாக இலக்கியங்கள் செயல்பட்டன.; எனவே இவ் இலக்கியங்கள் அனைத்தும் பொதுவாக அறஇலக்கியங்கள் என அழைக்கப்படலாயிற்று. சங்க காலத்தில் ஐந்து திணைகளுக்கான வாழ்க்கையிலும் சிற்றின்ப நுகர்ச்சி, மதுவுண்ணல், பரத்தையர் ஒழுக்கம், புலால் உண்ணல் ஆகியவை குறிப்பிட்டத்தக்க இடத்தைப் பெற்றிருந்தது. இந்நிலை அக்கால ஒழுக்கமாகவே கருதப்பட்டது. இதற்குக் காரணம் அன்றைய ‘உபரி உற்பத்தி’ என்பதே ஆகும். அதுமட்டுமல்லாமல், பெண்ணை ஒரு போகப் பொருளாகவே கருதியதும் ஒரு முக்கியக் காரணமாகும். பூமி,நதி, வானம் போன்ற பலவற்றிற்;கும் பெண்மைப் பெயரையே சூட்டியதும் இத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டியதாகும். ஆண்களின் இப்படிப்பட்ட செயல்களால் குடும்பங்களுக்குள் குழப்பம் ஏற்படலாயிற்று. இக் குடும்பக் குழப்பம் வளர்ந்து சமூகக் குழப்பமாகக மாறியது. இதுவரை கருதிவந்த ஒழுக்கம் என்பதற்கு மாறுதலான பொருள் உருவாக வேண்டியிருந்தது. இப்பொழுதுதான் பரத்தையர் ஒழுக்கம், சிற்றின்ப நுகர்ச்சி, மதுவுணண்ணல் ஆகியவற்றைக் கண்டித்து அறநூல்கள் பேசின. மேலும், சங்க காலப் போர் முறையிலான வாழ்க்கை சமூகத்திற்குள் கசப்பை உருவாக்கியது. ஏராளமான பெண்கள் கணவனை இழந்து விதவையாயினர். அரசனையும் பாதுகாப்பதற்காகச் சென்றவர்களின் குடும்பத்திற்குப் பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியது. இந்த பூசல்களும் போர்களும் இதை உருவாக்கியது. எனவே, குடும்ப அமைப்பிற்கும், வளர்ந்து வரும் வணிக சமூகத்திற்கும் வேண்டிய அமைதியான சூழலை ஏற்படுத்த வேண்டியது அன்றைய காலத் தேவையாய் இருந்தது. இத்தேவையை இற இலக்கியங்கள் பூர்த்தி செய்தன. இதே காலத்தில் தமிழகத்தில் பரவிய பௌத்த, சமண சமயங்களும் இக் காலத் தேவையை ஒட்டி இயல்பாகவே பங்காற்றின. அற இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் உயிர், உலகம், வாழ்க்கை இவை பற்றி அறிவாராய்ச்சி இந்தியாவில தோன்றியது. இதையொட்டி உபநிடதங்களும், பௌத்த, சமண தத்துவ நூல்களும் தோன்றின. கிரேக்கம், ரோமாபுரி, சீனா போன்ற நாடுகளிலும் மெய்ப்பொருள் ஆராய்ச்சி, கணக்கிடல், வானியல், பௌதிகம், அளவையியில், அறவியல் போன்றவை தோன்றின. இத்தகைய ஒரு குறிப்பிட்ட காலப்பரப்பை ‘தத்துவ ஞானிகளின் காலம்’ (வுhந Pநசழைன ழக வாந Phடைழளிhநசள) என்று குறிப்பிடப்படுகிறது. தமிழில் நீதி இலக்கியம் என்ற பொதுப்பெயர் கொண்டு சுட்டப்படுகிறது. குறிப்பாக ‘அற இலக்கிய காலம்’ என்று குறிப்பிடப்படுகிற காலத்தில் தோன்றிய பதி;னெண்கீழ்க்கணக்கு நூலகளில் ‘நீதி’ என்ற சொல்வழக்கு காணப்படவில்லை. ஆனால் ‘அறம்’என்ற சொல்லும், சொல் தொடர்ச்சியும் இந்நூல்களில் ஏராளமான இடங்களில் கையாளப்பட்டுள்ளன. இதைக்கொண்டு இந் நூல்களைக் குறிப்பாக ‘அற இலக்கியங்கள்’ என்றும் இந்நூல்களுக்குப் பின்னர் தோன்றிய நூல்களையும் இவற்றையும் சேர்த்துப் பொதுவாக நீதி இலக்கியங்கள் என்றும் அழைக்கிறோம். ‘உலக நாடுகள் பலவற்றிலும் கி.மு.8,7,6 ஆகிய நூற்றாண்டுகளிலேயே அற இலக்கியங்கள் அல்லது நீதி இலக்கியங்கள் தோன்றிவிட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. (மேலது., 1977 : 37). இதைவைத்துப் பார்த்தால்; அறம் அல்லது நீதி என்ற கோட்பாட்டுக்கான தோற்றுவாய் நீண்டகாலப் பாரம்பரியத்தை உடையது என்பதைக் கணிக்கலாம். இது மனித குலத்தில் மொழிதோன்றி ஓரளவு செப்பம் அடைந்ததிலிருந்தே தோன்றியிருக்க வேண்டும் என்று கருதலாம். ‘குறிப்பிட்ட மக்களினத்தார் வாழ்ந்த இடத்திற்கும் அதன் தட்பவெப்பநிலைகளுக்கேற்ப, அவர்களிடையே புறத்தூண்டுதல்கள் (ளுவiஅரடi) தோன்றின.அப் புறத்தூண்டுதல்களுக்கேற்ற எதிர்;செயல்களாக (சுநளிழளெந) அவர்களுடைய சிந்தனை வளர்ச்சியும் வாழ்க்கைமுறைகளும் அமைந்தன. இத்தகைய சூழலில்தான்;, பல்வேறு நாடுகளிலும் குறிப்பிட்ட ஒரு காலத்தில் நீதிநூல்கள் தோன்றின(மேலது., 1977 :118-119) என்ற கருத்தைக் கவனத்தில்கொண்டு பார்;க்க வேண்டும். வாழ்வின் அடிப்படை நிலைக்களன்களாக காதல், போர், சமுதாயம், அரசியல் முதலியன அமைந்திருந்தன. இவற்றில் சிக்கல்களும் முரண்பாடுகளும் தோன்றின. இவற்றைச் செம்மைப்படுத்த எண்ணியபோதே அறக் கருத்துக்கள் மலர்ந்தன(கந்தசாமி., ஆ. 1981 : 452) என்று குறிப்பிடுகிறார் ஆ.கந்தசாமி. இது இப் படித்தான் இருக்கவேண்டும், மாறுபட்டு நின்றால் சமூகம் சீரழியும் என்ற கருத்து உருப்பெற்றது முதலே நெறி என்பதும் அறம் என்பதும் தோன்றிவிட்டன என்று உறுதியாகக் கூறலாம். இவ்வாறான சூழலில் மொழி பேச்சுவடிவத்திலிருந்து எழுத்து வடிவத்திற்கு மாறியிருக்க வேண்டும். இவ் எழுத்து வடிவத்தின் வளர்ச்சியின் விளைவாய்ப் ‘படைப்புகள்’ உருவாகின எனலாம். படைப்புகளும் இலக்கியப் படைப்பால் வாழ்க்கை நெறிகள் வகுக்கப்படுவதும், நெறிதடுமாறிச் சமூகம் செல்லும்பொழுது வாழ்க்கை நெறிகளையே ‘அறம்’ என்ற பெயரால் வற்புறுத்துவதும் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. இவ்வாறு, படைப்பின் உள்ளடக்கங்களைத் தீர்மானிப்பது அவ்வக் காலத்தின் திட்டவட்டமான சூழ்நிலைகளே ஆகும். இப்படிப்பட்ட சூழ்நிலைகளின் பின்னணியில்தான் ‘அற இலக்கியங்கள்’ தோன்றின. இவற்றை உருவாக்குவதில் சமூகம், சமயம், புலவர்கள் என்ற மூன்று நிலைகளும் குறிப்பிடத்தக்கப் பங்கைச் செலுத்தியுள்ளனர். அறநூல்கள் தோன்றுவதற்கு முன் ‘வாழ்க்கைநெறிக் கொள்கைகளை முழுமையாக விளக்கும் அற நூல்கள் தோன்றுவதற்கு முன்னர், உலகின் பல்வேறு பகுதிகளில் வழக்காற்று ஒழுக்க நெறியைச் (ஊரளவழஅயசல ஆழசயடவைல) சிறப்பாக விளக்கும் மூதுரைகளும், முதுமொழிகளும், பழமொழிகளும் தோன்றிப் படிப்படியாக வளர்ந்துள்ளன. இதைப் போன்றே நம் தமிழகத்திலும் ஒப்புயர்வற்ற அற நூலாகிய திருக்குறள் தோன்றுவதற்கு முன்பு முதுமொழி, பழமொழி, வாயுறை வாழ்த்து போன்ற அறநெறியுணர்த்தும் செய்யுள் வகைகள் தோன்றியிருத்தல் வேண்டும்(மேலது., 1977:8) என்று க.த.திருநாவுக்கரசு குறிப்பிடுவது எண்ணத்தக்கது. இக்கருத்தை, நுண்மையும் சுருக்கமும் ஒளியுடை மையும் எண்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக் குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம் ஏது நுதலிய முதுமொழி யென்ப (தொல்.செய்.177) வாயுறை வாழ்த்தே வயங்க நாடின் வேம்புங் கடுவும் போல வெஞ்சொல் தாங்குத லின்றி வழிநனி வயக்குமென்(று) ஓம்படைக் கிளவியின் வாயுறுத் தற்றே (தொல்.பொருள்.424) ஆகிய இரண்டு நூற்பாக்களும் முதுமொழி, வாயுறை வாழ்த்து இரண்டனது இலக்கணம் இயம்புவதன்மூலம் அறியலாம். சங்க இலக்கியத்திலும், பல்லோர் கூறிய பழமொழி யெல்லாம் (அகநா.66.5) செவிசெறு வாக முதுமொழி நீரா (கலி.698) முன்னை மரபின் முதுமொழி முதல்வா (பரி.3:4) போன்ற தொடர்களில் பழமொழி, முதுமொழி என்ற சொல்லாட்சியைக் காண்கிறோம். எனவே, பழமொழி, முதுமொழி, வாயுறை வாழ்த்து என்பவை ‘அறம்’ என்பது தோன்றுவதற்குமுன் வழக்கிலிருந்திருக்க வேண்டும் என்பதை தெளிவாக்குகிறது. தமிழ் அறத்தின் ஊற்று கண்கள் சங்க காலப் புறவாழ்வியல் பெரிதும் தனிமனித, சமூக, அரச அறநெறிகளின் சிதைவையே காட்டுகின்றன எனலாம். இச் சிதைவைக் சரிசெய்யவே புலவர்கள் அறநெறிக் கோட்பாட்டை வளர்த்தெடுத்துள்ளனர். எனினும், அக்கால அரசு, சமூகம் ஆகியவற்றின் தன்மையினால் உறுதியாக எடுத்துரைக்க இயலாமை இருந்ததையும் காணமுடிகிறது. இந்நிலைகளே அற இலக்கியங்களான பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பெருக இடமளித்தன எனலாம். அதாவது, அற இலக்கியத்துக்கான ஊற்றுக்கண் மற்றும் வளர்ச்சி நிலையைச் சங்க இலக்கியங்களில் காண்கிறோம் என்று உறுதியாகச் சொல்லலாம். தமிழ்ச் சமூகத்தில் அறஇலக்கிய வகைமை ஒன்று குறைந்தது நான்கு நூற்றாண்டுகளுக்கு வளர்ந்திருக்கிறதென்றால், அதற்கு முந்தைய காலகட்டத்தைக் கவனமாகப் பரிசீலிக்கவேண்டியுள்ளது. சங்க இலக்கிய காலமே அவ்வாறு பரிசீலிக்கப்பட வேண்டிய காலகட்டமாகும். குலச்சமூகத் தலைமை வாழ்க்கைமுறையிலிருந்து அரசு சமூகத் தலைமை வாழ்க்கைமுறை உருவாகிவந்த காலம் சங்க காலம். அரசுகளுக்குள் நூற்றாண்டுக் கணக்கில் நடந்துவந்த ஆட்சி எல்லை விரிவாக்கம், பாதுகாப்பு, பொருள்கவர்சார் நடவடிக்கைகள் ஆகியவற்றை அடியொற்றிய போர்ச்சூழல் நிரம்பிய சங்ககால வாழ்க்கைமுறை சமூகத்திற்குள் கசப்பை உருவாக்கியது. சிற்றின்ப நுகர்ச்சி, கள்ளுண்ணல், புலால் உண்ணல், பரத்தையர் ஒழுக்கம் ஆகியவை சமூக அங்கீகாரம் பெற்றுநிலவின. அதுமட்டுமின்றி, இவற்றையெல்லாம் ‘ஒழுக்கம்’ என்றே குறித்தனர். ‘ஒழுகுவது ஒழுக்கம்’ என்ற வரையறையினின்று ‘ஒழுங்குடையது ஒழுக்கம்’ என்ற வரையறையை உருவாக்க வேண்டிய காலக் கட்டாயம் அக்காலத்தில் இருந்து வந்தது. இத்தகைய சங்ககால வாழ்நெறிச் சிதைவிலிருந்து ஒழுங்கமைப்பதற்குரிய நடத்தைநெறிகளை அச் சமூகமே உருவாக்கிக் கொண்டது. இவ்வாறு, சமூகத்தின் தேவையையொட்டித் தன்னியல்பாகத் தோன்றிய அறநெறிக் கோட்பாடுகள் சங்ககாலத்தில் வழங்கலாயின. புறநானூற்றில் இடம்பெற்றுள்ள பொதுவியல் திணைச் செய்யுட்களிலும், அகம், புறம் தொடர்பான அனைத்து நூல்களிலும் இத்தகைய போக்கைக் காணமுடிகிறது. போர்நெறியோடு வைதீகநெறியும் ஒருங்கிணைந்து செயலாற்றி வந்ததால், போர்மறுப்பும், வைதீகமறுப்பும் சங்ககாலப் போக்கிற்கான மாற்றுநெறியை முன்வைக்கும் செயன்மைக் கூறுகளாக முன்வந்தன. போர், வேள்வி ஆகியவை கொல்லாமையையும், போர்க்காலச் சூறையாடல், பிறவழிப் பொருள்கவர்தல் ஆகியவை கள்ளாமையையும், இயல்பான மெய்சிதைவு பொய்யாமையையும், போர்க்காலப் பெண் அபகரிப்பு, காம மிகுதியால் பிறன்மனை கவர்தல் ஆகியவை பிறன்மனை நயவாமையையும் என்று ஏராளமான அறநெறிகளை உருவாக்கிக்கொள்ள வேண்டியதாகச் சங்க காலச் சமூகம் இருந்தது. இதே காலகட்டத்தில்இந்திய மெய்யியல் தளத்தில் மறுமலர்ச்சியை உருவாக்கிவந்த வைதீக வேள்விநெறி எதிர்ப்புச் சிந்தனைப் பள்ளிகளான பௌத்தம், சமணம் போன்றவையும் மேற்குறித்த அறநெறிக்கோட்பாடுகளையே முன்வைத்தன. எனவே, பௌத்த, சமணசமயங்களின் தமிழகவருகையும்,சங்ககால வாழ்நிலைகளில் இருந்து எழுந்துவந்த புதிய அறச்செல்நெறிகளும் ஒன்றையொன்று வளப்படுத்தவும், வழிப்படுத்தவும் செய்தன என்பது தெளிவாகிறது. இவ் அறக் கோட்பாடுகளில் தமிழ், பௌத்தம், சமணம்ஆகிய சிந்தனை மரபுகளின் செவ்வி;யல் அறக்கோட்பாட்டுப் பண்புகள் மிகுந்துள்ளன. சமயச்சார்பற்ற இலக்கியமான புறநானூற்றில் இடம்பெறும் பொதுவியல் திணையின் துறைகளாக பொருண்மொழிக்காஞ்சி, முதுமொழிக்காஞ்சி, செவியறிவுறூஉ போன்றவையும், பாடாண்திணையின் துறையான இயன்மொழி, வாகைத் திணையின் துறையான பார்ப்பனவாகை போன்றவையுமே தமிழ் அற இலக்கியங்களின் தோற்றுவாய்களும் ஊற்றுக்கண்களுமாக விளங்கியுள்ளன எனில் அது மிகையில்லை. தனிமனிதன், சமூகமனிதன், அரசு, சமயம் என்றவாறான அனைத்துச் சமூக நிறுவனங்களுக்கான பின்பற்றுநெறிகளை உள்ளடக்கி நிற்றலே தமிழ் அற இலக்கியங்களின் மிக முக்கியமான – உயிரோட்டமான, சிறப்பியல்பாகும். அன்றைய மக்கள் வழக்கிலிருந்த பழமொழி, மருத்துவக் குறிப்புக்கள், அனுபவப் பிழிவுகள், மெய்யியல் ஆகிய அனைத்தையும் உட்செரித்துக் கொண்டவையாகத் தமிழ் அற இலக்கியங்கள் திகழ்கின்றன. அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு உறுதிப் பொருள்களும், சங்க இலக்கியங்கள் மற்றும் பிற இலக்கியங்களின் உள்ளடக்கங்களாக உள்ளன. எனினும், அறத்தை மட்டுமே முன்னிலைப்படுத்திப் பேசுபவையாகத் தமிழ் அற இலக்கியங்கள் எனப்படும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் விளங்குகின்றன. முடிவுரை இந்தியத் தத்துவ மரபில் வைதீகம், அவைதீகம் இருவகைகள் உள்ளன. வைதீக மரபில் தருமம், நீதி இரண்டும் வருணாசிரமதர்மத்தை அடிப்படையாகக் கொண்டு நோக்கப்படுகின்றன. அவைதீக மரபில் வருணாசிரம் தருமம் முற்றிலும் புறந்தள்ளப்பட்டு மானுடநேய – சமத்துவப் பார்வையில் நோக்கப்படுகின்றன. தமிழ் இலக்கிய மரபில் வைதீக மரபு, அவைதீக மரபு இரண்டும் கலந்து வெளிப்பட்டிருந்த போதிலும், இவ்விரு நெறிகளுக்கும் மேம்பட்ட வாழ்வியல் அறநெறிகள் முன்வைக்கப்பபட்டுள்ளன. இதனால்தான், தருமம், நீதி என வடமொழியில் இரு சொற்களால் மட்டுமல்லாமல் புண்ணியம் போன்ற சொற்களாலும் குறிப்பிடப்படும் அனைத்து நன்னெறிகளையும் சுட்டும் ஒரே சொல்லாக ‘அறம்’ என்பது திகழ்கிறது. வைதீகம், அவைதீகம் என்ற இரு தருமநெறிகளில் மிகுதியும் அவைதீக நெறிசார்ந்ததாகவே தமிழ் அறம் தொழிற்படுகிறது எனலாம். பயன்பட்ட நூல்கள் 1. அம்பேத்கர்.,பி.ஆர். 1994, புத்தரும் அவர் தம்மமும், சித்தார்த்தா,வீ, (தமிழில்) தமிழாக்க நூல் வெளியீட்டுக் கழகம், சென்னை. 2. ஆர்ஜவசாகரர் முனிவர்., ஆ.ப.இ, ஜைன அறமும், அறிவியலும், ஸ்ரீ சுருத கேவலி பத்ர பாகுசசுவாமி சேவா தளம், குந்தகுந்தநகர். 3. …….…….., 1997, அருங்கலச்செப்பு, ஸ்ரீ சுருத கேவலி பத்ர பாகுசசுவாமி சேவா தளம், குந்தகுந்தநகர். 4. கழகப்புலவர் குழு., 1981, கழகத் தமிழ்அகராதி, தி.சை.சி.நூ.பதிப்புக்கழகம், சென்னை. 5. கந்தசாமி., ஆ. 1981, பழந்தமிழிலக்கியங்களில் அறக்கூறுகள், ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு, கருத்தரங்கு ஆய்வுக் கட்டுரைகள,; (பதி.ஆ.அருணாச்சலம்.,மு) உலகத் தமிழராய்ச்சிக் கழகம், சென்னை. 6. கந்தசாமி., சோ.ந., 1977, பௌத்தம், சென்னை பல்கலைக்கழகம், சென்னை. 7. சிவத்தம்பி.கா., 1988, தமிழில் இலக்கிய வரலாறு (வரலாறெழுதியல் ஆய்வு) நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பிரைவேட் லிமிடெட், சென்னை. 8. சுப்பிரமணியன்.,நா. 1996, இந்தியச் சிந்தனை மரபு, சவுத் ஏசியன் புக்ஸ், சென்னை. 9. சுல்லக் பார்சுவ கீர்த்தி வர்ணீஜி., 1998, அறத்தின் தொன்மை, ஸ்ரீ சுருத கேவலி பத்ர பாகுசசுவாமி சேவா தளம், குந்தகுந்தநகர். 10. திருநாவுக்கரசு., க.த. 1977, திருக்குறள்: நீதி இலக்கியம், சென்னைப் பல்கலைக்கழகம் சென்னை. 11. நெடுஞ்செழியன்.,க. 2000, தமிழர் இயங்கியல், பாலம், சென்னை. 12. பரமேஸ்வரன்., பி.ஆர். 1995, மார்க்சிஸ்ட மாத இதழ் பைபாஸ்ரோடு, மதுரை. 13. வீரமணி.,கி. 1990, மனுதர்ம சாத்திரம், திராவிடர் கழகம், தமிழ்நாடு. 14. ஜார்ஜ்.தாம்சன்., 1988, சமயம் பற்றி ஒரு கட்டுரை, நேத்ரா வெளியீடு, சென்னை-35. 15. ஜான் சாமுவேல்.,ஜி. 1978, இலக்கிய ஒப்பாய்வுக் களங்கள், மணி பதிப்பகம், சென்னை. 16. வுசநஎழச டுiபெ.இ 1981இ யு னுiஉவழையெசல ழக டீரனனாளைஅஇ மு.P. டீயபஉhi யனெ ஊழஅpயலெஇ ஊரடஉரவவயஇ றுயபளைறயசயஇ று.னு.ஊ.

பௌத்தக் கோட்பாட்டு நோக்கில் சங்க இலக்கியம்

பௌத்தக் கோட்பாட்டு நோக்கில் சங்க இலக்கியம் முனைவர் சு.மாதவன் உதவிப் பேராசிரியர் - செம்மொழி விருதாளா் தமிழாய்வுத்துறை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி (த) புதுக்கோட்டை 622001 பேச : 9751 330 855 மின் அஞ்சல் : www.semmozhi200269@gmail.com ஒரு நூலெழுதத் தக்க தரவுத் தளங்கள் நிறைந்த தலைப்பு இது. ஒரு கட்டுரையளவில் இங்கு அணுகப்படுகிறது. தமிழ்ச் செவ்விலக்கியங்கள் உலகளாவிய மானுடப் பொதுமை சான்றது; பௌத்தமும் அவ்வாறானதே. இலக்கியங்களில் செம்மை உள்ளிட்ட கூறுகள் நிறைந்திருப்பதானது வாழ்க்கையிலும் அவை நிறைந்திருக்கக் கண்டோ நிறைந்திருக்க வேண்டி விரும்பியோ இயல்வன. தமிழ்ச் செவ்விலக்கியப் பெரும்பரப்பில், முதலில் கிடைத்துள்ள சங்க இலக்கியங்களான பாட்டும் தொகையும் சமயச் சார்பற்ற பாங்குடன் ஒளிர்ந்துமிளிர்வதை அறிஞர் பலரும் எடுத்துக்காட்டியுள்ளனர். ஏனெனில், நிறுவனமயப்பட்ட சமயமாக எந்தச் சமயமும் அக்காலத்தில் வளர்ந்திருக்கவில்லை. நம்பிக்கை – வழிபாட்டுக் கூறுகளே அவற்றில் இடம்பெற்றுள்ளன. சிவனியமோ மாலியமோ சைவ, வைணவச் சமயங்களாகத் தோற்றம் பெறவில்லை; கருக் கொண்டிருந்தன; வைதீக நெறியும் அவ்வாறானதே. தமிழர் தம் திணைசார் வாழ்வியலில் பரத்தைமை நெறியும் போர்நிகழ் வெறியும் மிகுந்ததால் சமூகத்தின் அசைவியக்கம் நிலைகுலைந்து போயிருந்தது. இதனால் அகத்திலும் புறத்திலும் அறநெறிகள் தோன்றி வளர்ந்து கொண்டிருந்தன. இவ்வாறு, தமிழ்ச் சமூகம் தனக்கான அறநெறி விழுமியங்களைத் தன்னியல்பாகக் கட்டமைத்துக் கொண்டிருந்த வேளையில் வடஇந்தியாவிலிருந்து பௌத்தமும் சமணமும் நிறுவனப்பட்ட சமயங்களாகவே தமிழகத்துக்கு வந்து சேர்ந்தன. வந்துசேர்ந்த பௌத்த, சமண சமயங்களில் சமணம் கடுமையான பின்பற்றுநெறிகளைக் கொண்டிருந்ததால் நடுநிலையான பின்பற்றுநெறிகளைக் கொண்டிருந்த பௌத்தம் மக்களின் ஏற்புநிலையைப் பெற்றது. சங்க இலக்கியங்களில் சமணத்தைக் காட்டிலும் பௌத்தம் மிகுதியாக ஊடுருவி நிற்பதிலிருந்து இத்தகைய முடிவுக்கு வரலாம். இத்தகைய நோக்குநிலையிலிருந்து பௌத்தக் கோட்பாடுகள் சங்கத்தமிழிலக்கியங்களில் இடம்பெற்றுள்ள போக்குகளை இக் கட்டுரை தொட்டுக்காட்டத் தொடர்கிறது. பௌத்தக் கோட்பாட்டுநிலைகள் மனிதர்களின் சிந்தனைகளிலும் செயல்களிலும் இரண்டறக் கலந்திருப்பனவற்றைக் கோட்பாடுகள் என்கிறோம். அவை வாழ்வியலின் கருத்தியல்நிலையிலும் பண்பாட்டுநிலையிலும் தன்னியல்பாய் உருவானவையும் வந்து கலந்தனவையாகவும் அமைகின்றன. இத்தகைய கோட்பாடுகளை, 1. நம்பிக்கைகள் சார்ந்தவை 2. வழிபாடுகள் சார்ந்தவை 3. சடங்குகள் சார்ந்தவை 4. நடத்தை நெறிகள் /கடைப்பிடி நெறிகள் சார்ந்தவை என்ற நான்கு வகைகளுக்குள் அடக்கலாம். இவற்றுக்குள் பௌத்தக் கோட்பாடுகளாக எவைஎவை தொழிற்பட்டன என ஆராயலாம். சங்க காலப் பெயர்களில்… சங்க கால வாழ்வியலின் ஊடாகச் சில வழக்காறுகளின் மூலக்கூறுகளின் பதிவுகள் தென்படுகின்றன. மனித வாழ்வியலில் ஒரு சமூகத்தின் சிந்தனைகள் முதலில் தொழிற்படும் இடம் குடும்பம். குடும்பத்தின் ஓர் அலகு தனிமனிதன். ஒரு குடும்பம் எத்தகைய வாழ்வியல் சிந்தனைகளைக் கொண்டிருந்தது என்பதை வெளிப்படுத்துவதாக அமைந்திருப்பவை மனிதர்களின் பெயர்கள். மனிதர்களின் பெயர்களில்தான் அந்தச் சமூகத்தின் பன்முகச் சிந்தனை விதைகள் தெளிக்கப்பட்டிருக்கும். இத்தகைய நோக்கில், சங்ககால மானிடர்களின் பெயர்களில் பௌத்தச் சுவடுகள் தென்படுமாற்றை அணுகலாம். பொதுவாக, எவரொருவர் பெயருமே அவரவர் சார்ந்த மொழி, தொழில், சமயம், சமூகம், மெய்யியல் ஏதேனும் ஒன்றின் கருத்தியல் சார்பைப் பின்புலமாக்க் கொண்டு விளங்குகின்றது. சங்கப் புலவர்களின் பெயர்களும் அவ்வாறே அமைந்துள்ளன. அரிசில் கிழார், ஆலந்தூர் கிழார், ஆவூர் கிழார், ஆவூர் மூலங்கிழார், இடைக்குன்றூர் கிழார் முதலான பெயர்கள் இவர்கள் நிலவுடைமையாளர்களாய் இருந்துள்ளனர் என்பதையும், உறையூர் மருத்துவன் தாமோதரனார், ஒரேருழவர், தங்கால் பொற்கொல்லனார், மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் முதலான பெயர்கள் இவர்கள் வணிகர்களாக இருந்துள்ளனர் என்பதையும் கட்டி நிற்கின்றன. இதைப்போலவே இளம்போதியார், சங்க வருணர், சிறுவெண் தேரையார், தேரதரன் ஆகிய பெயர்கள் இவர்கள் பௌத்தச் சார்புடையவர்களாய் இருக்கக் கூடும் என்பதை வெளிப்படுத்துகின்றன. ‘ஐயாதி சிறுவெண்தேரையார்’ என்னும் புலவருக்கு மனிதனின் நன்னடத்தைக்கும் நல்வாழ்க்கும் மூலமான ஐந்து நன்னெறிகளைப் பின்பற்றியவர் என்னும் பொருளில் அதாவது பௌத்தப் பஞ்சசீலங்களைப் பின்பற்றியவர் என்னும் பெயரில் பெயரிடப்பட்டிருக்கலாம்; பெயரிட்டுக் கொண்டிருக்கலாம். ‘குண்டுகட் பாலியாதனார்’ என்னும் புலவர் பெயரில் உள்ள ‘பாலி’ என்னும் சொல் புத்தரின் தாய்மொழியும் பௌத்த மெய்யியல்களின் மூலமொழியுமான ‘பாலி’ மொழியைக் குறிப்பிடுவதாகத் தெரிகிறது. இவரது பெயரின் முன்னொட்டான “குண்டுகட்’ என்பதும் ‘Kuntakal’ என்னும் இன்றைய ஆந்திர மாநில ஊரைச் சுட்டுவதாகலாம். ‘Kuntakal’ என்னும் இவ்வூர் சங்க காலத்தில் தமிழகத்து ஊர்களுள் ஒன்றாக நிலவியதே என்பதும் பொருத்தமாகவே உள்ளது. எனவே, ‘குண்டுகட் பாலியாதனார்’ என்பவர் ‘முரவெயமயட’ ஊரைச் சேர்ந்த பாலிமொழியறிந்த பௌத்தத் துறவியாகலாம். மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார், கோவூர்கிழார், என்பது போலவே இப்பெயராகும். மேலும், சங்ககாலப் புலவா்கள் “சாத்தன்” என்னும் பின்னொட்டு பெயர்களில் 84 பாடல்களைப் பாடியுள்ளார். உறையூா் முதுகண்ணன் சாத்தனார் 5 பாடல்களும் சாத்தந்தையார் 4 பாடல்களும் பெருந்தலைச் சாத்தனார் 6 பாடல்களும் மடமவண்ணக்கண் பெருஞ்சாத்தனார் 2 பாடல்களும், ஒக்கூர் மாசாத்தனார், ஒக்கூா் மாசாத்தியார் (பெண்), கருவூர்க் கதப்பிள்ளை சாத்தனார், மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார், மோசிசாத்தனார், ஆடுதுறை சாத்தனார் ஆகியோர் ஒரு பாடல்கள் வீதம் மொத்தம் 10 புலவா்கள் 23 புறநானூற்றுப் பாடல்களைப் பாடியுள்ளனா். “சாத்தன்” என்னும் சொல்லுக்குப் பெருமாலும் அகராதிகள் “புத்தன்”, “தெரிவிக்கின்றவன்” என்ற பொருளைத் தருகிறது. ஆகவே, “சாத்தனார்” என்னும் பின்னொட்டு பெயருள்ள புறநானூற்றுப் புலவா்கள் “புத்தரின் கருத்தினைத் தெரிவிப்பார்கள்” என்று பொருள் கொள்ளலாம் (அறிவுராஜ்., ந. 2013 : 89). சங்க இலக்கியங்களில்... எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களுள் பௌத்தக் கோட்பாடுகள் மிகுதியாக இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு ஆகும். சமயம் என்பது தமிழர் மரபின் பகுப்புப்படி புறம் சார்ந்தது. எனவே, புறநானூற்றில் சமயக்கோட்பாடுகள் இடம்பெறுவது இயல்பே புறநானூற்றில் 360-வது பாடலாக அமைந்துள்ள பாடலை இயற்றியவர் பெயர் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால், கிடைத்துள்ள பாடலில் பௌத்தச் சார்புடைய சிந்தனைகள் இடம்பெற்றுள்ளமை அறியலாகிறது. அப்பாடல் வருமாறு: “பெரிது ஆராச் சிறு சினத்தர் சில சொல்லால் பல கேள்வியர் நுண்ணுணா்வினாற் பெருங் கொடையா் கலுழ் நனையால் தண் தேறலா் கனி குய்யாற் கொழுந் துவையர், தாழ் உழந்து தழூஉ மொழியர் பயன் உறுப்பப் பலா்க்கு ஆற்றி ஏமமாக இந்நிலம் ஆண்டோர் சிலரே பெரும் கேள் இனி நாளும், பலரே தகை அஃது அறியாதோரே அன்னோர் செல்வமும் மன்னி நில்லாது இன்னும் அற்று, அதன் பண்பே அதனால் நிச்சமும் ஒழுக்கம் முட்டிலை பரிசில் நச்சுவர் கையின் நிரப்பல் ஓம்புமதி அச்சுவரப் பாறுஇறை கொண்ட பறந்தலைமாக கள்ளி போகிய களரி மருங்கின், வெள்ளில் நித்த பின்றைக் கள்ளொடு புல்லகத்து இட்ட சில்லவிழ் வல்சி, புலையன் ஏவப் புன்மேல் அமருந்துகொண்டு, ஆழல்வாய்ப் புக்க பின்னம், பலர்வாய்த்து இரா அர், பகுத்துஉண்டோரே? (புறநா. 360) (மேற்கோள், அறிவுராஜ்., ந. 2013 : 90) இப் பாடல் மூன்று கருத்துக்களை முன்வைக்கிறது. அவை வருமாறு: 1. செல்வமும் மன்னி நில்லாது – (செல்வம் நிலையில்லாதது) செல்வம் நிலையாமை 2. அற்று அதன் பண்பே - இற்று இதன் பண்பே (நாலடி) உயிரில்பொருள், உயிருள்பொருள் இரண்டின் பண்புகளும் நிலையில்லாததாகவே உள்ளது. உயிர் நிலையாமை, யாக்கை நிலையாமை, இளமை நிலையாமை 3. நிச்சமும் ஒழுக்கமும் முட்டிலை – நாள்தோறும் ஒழுக்கத்தில் குறையாது வாழ வேண்டும் - ஒழுக்கத்தின் இன்றியமையாமை இப் பாடலில் இடம்பெற்றுள்ள கருத்துக்களைத் தொகுத்தால் நிலையாமை நிலைப்பு என்பதாக, அதாவது நிலையாமை என்னும் நிலையறிந்து நிலைப்புமிக்க வாழ்க்கைக்குரிய நல்லொழுக்க நெறிகளை விழிப்போடு பின்பற்ற வேண்டும் என்னும் கருத்தை வழங்குகிறது. வாழ்க்கைகக்குச் செல்வம் தேவை என்றாலும் செல்வம் நிலையில்லாதது, வாழ்க்கை நிலைக்கும் என்று எண்ணினால் வாழ்க்கையை மனிதன்வழியாக நிகழ்த்தும் உயிர் நிலையில்லாதது, உயிர்நிற்கும் யாக்கை நிலையில்லாதது யாக்கையில் தோன்றும் இளமை நிலையில்லாதது என்று எல்லாம் நிலையில்லாதனவாய் உள்ளன என்பதால் வாழ்க்கை நிலையாமையை உணர வேண்டும். அவ்வாறு, உணர்ந்தால் இந்த உயிர், உடல், இளமை, செல்வம் என்ற நிலையில்லாத நான்கையும் பெற்றுள்ள மனிதன் அவனது வாழ்க்கைக்குப் பிறகும் நிலைத்துப் பிறராலும் பின்பற்றப்பட்டுப் புகழப்படுவதாக அமைவன நல்லொழுக்க நெறிகளே என்ற முடிவுக்கு வரலாம். இவ்வாறான, காரணகாரிய இயைபைக் கொண்டு விளங்குகிற இப் பாடலுக்குள் பௌத்தச் சார்புநிலைக் கோட்பாடு இடம்பெற்றிருப்பதாகப் படுகிறது. பௌத்தப் பிடகங்களுக்குள்ளிலிருநது பொருத்தமான ஒப்பிட்டுப் பகுதி கிடைத்தால் இதுகுறித்த அழுத்தமான முடிவுக்கு வரலாம். இன்னொரு பாடலான புறநானூறு 363 ஐ இயற்றியவர் ஐயாதிச் சிறுவெண்டேரையர் ஆவார். இவரது பாடல் வருமாறு: “இருங்கடல் உடுத்தஇப் பெருங்கண் மாநிலம் உடைஇலை நடுவணது இடைபிறர்க்கு இன்றித் தாமே ஆண்ட ஏமம் காவலர் இடுதிரை மணலிலும் பலரே சுடுபிணக காடுபதியாகப் போகித், தத்தம் நாடு பிறர்கொளச் சென்று மாய்ந்தனரே அதனால் நீயும் கேண்மதி அத்தை வீயாது உடம்பொடு நின்ற உயிரும் இல்லை மடங்கல் உண்மை மாயமோ அன்றே கள்ளி ஏய்ந்த முள்ளியம் புறங்காட்டு வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண், உப்பிலாஅ அவிப்புழுகல் கைக்கொண்டு, பிறக்கு நோக்காது, இழி பிறப்பினோன் ஈயப் பெற்று, நிலங்கலனாக, இலங்குபலி மிசையும் இன்னா வைகல் வாரா முன்னே, செய்ந்நீ முன்னிய வினையே, முந்நீா் வரைப்பகம் முழுதுடன் துறந்தே” (புறநா. 363) (மேற்கோள், அறிவுராஜ்., ந. 2013 : 91) இப்பாடலின் ஒட்டு மொத்தக் கருத்தாகத் துறவுநெறிக் கருத்தமைவும் உட்செறிகருத்தாக நிலையாமைக் கருத்தியலும் இடம்பெற்றுள்ளன. உயிர் நிலையாமை அறிந்து ஒழுகவேண்டும் என்பதை உணர்த்துகிறது இப்பாடல். இப்பாடலும் பௌத்தச் சார்புநெறி பேசுகிறது எனலாம். ஒளவையாரின் புறநானூற்றிப் பாடல் 187 பௌத்த மெய்யியல் - அறவியல் நூலான தம்மபதச் சுலோகம் 98ன் நேரடி மொழிபெயர்ப்பாக உள்ளதைத் தெ.பொ.மீ. மு.கு.ஜகந்நாதராஜா ஆகியோர் ஆராய்ந்து நிறுவியுள்ளனர். ஔவையார் பாடிய புறநானூற்றுப் பாடல் (187) பௌத்த மெய்யியல் – அறவியல் நூலான தம்மபத்தின் நேரடி மொழிபெயர்ப்பாக விளங்குகிறது என்பதைத் தெ.பொ.மீ., மு.கு.ஜகந்நாதராஜா ஆகியோர் ஆராய்ந்து நிறுவியுள்ளனர். அப்பாடல் வருமாறு “நாடாகொன்றோ காடாகொன்றோ அவலா கொன்றோ மிசையா கொன்றோ எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே” இப்பாடல் சொல்லுக்குச் சொல் அப்படியே தம்மபத்த்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது என்பதை உறுதிப் படுத்தும் பாலி மொழிப்பாடல் வருமாறு “காமே வா யதி வா ராஞ்ஞே நிஞ்னே வா யதி வாதலே யத்தா ரஹந்தோவி ஹரந்தி தங் பூமிங் ராம ணெய்யகங்” (தம்மபதம், 98) இப்பாடலின் சொற்பொருள் கீழ்க்கண்டவாறு அமைகிறது. காமே வா நாடாக இருந்தாலும் யதி அல்லது ரஞ்ஞே வா காடா இருந்தாலும் நிந்னே வா பள்ளமாக இருந்தாலும் யதி அல்லது தலேவா மேடாக இருந்தாலும் யத்து எங்கே அரஹந்தோ சான்றோர்கள் விஹரந்தி நடமாடுகிறார்களோ தங் அந்த பூமிங் நிலமானது ராமணெய்யகங் எழில்நலமுடையதாகும் (மு.கு.ஜகந்தராஜா இந்திய மொழிகளில் ஒப்பிலக்கி யம் 1994 ப.24) ஆக, தம்மபதப் பாடலின் பொருள், “நாடாக இருந்தாலும் காடாக இருந்தாலும் பள்ளமாக இருந்தாலும் மேடாக இருந்தாலும் எங்கே சான்றோர்கள் நடமாடுகின்றார்களோ அந்த நிலமானது எழில் நலமுடையதாகும்”. என்பதாகும். எனவே, புறநானூறு – தம்மபதப் பாடல்களின் சொல்லமைப்பும், கருத்தமைவும் ஒருங்கே ஒத்திருப்பதைக் காண முடிகிறது. இங்கு ஒரு வினா எழுவது இயல்பு. அதாவது, ஔவையார் தம்மபத்த்தைப் படித்துவிட்டு மொழிபெயர்த்தாரா? புத்தர் ஔவையாரைப் படித்துவிட்டு மொழிபெயர்த்ரா? என்பதே அவ்வினா, புத்தர் ஔவையாரின் காலத்துக்கு முந்தியவர் என்பதாலம், அவர் ஒரு மெய்யியல் நிரமாணிப்பாளர் என்பதாலும் பத்தரின் போதனைகள் தொகுக்கப்பட்டுப் பரப்பப்பட்ட காலத்தில் ஔவையார் இதை அறிந்திருக்கக்கூடும் என்பதே பொருத்தமானதாகும். அசோகனின் மூன்று கல்வெட்டுகளில் அதியமான் இடம் பெற்றிருப்பதும், அதியமானின் அவைக்களப்புலவராக ஔவையார் திகழ்ந்திருப்பதும் நம் ஊக்கத்தை உறுதி செய்கின்றன. (மாதவன்.,சு 2005 : 106 - 107 ) இதேபோல் பௌத்தச் சக்கரமான அசோக தருமச் சக்கரத்தின் வழக்காற்றை ஏற்பதாகப் புறநானூறு 175 ஆம் பாடலும் அதனை மறுப்பதாகப் புறநானூறு 233 ஆம் பாடலும் உள்ளதை சு.மாதவன் ஆராய்ந்து நிறுவியுள்ளார். பௌத்த தருமச் சக்கரம் ஏற்பும் எதிர்ப்பும் ஏற்பு பௌத்த தருமச் சக்கரத்தின் இயல்பையும், பெருமையையும் விவரிக்கும் தீகநிகாயத்தின் “தம்ம சக்கப் பவத்தன சூக்தம்” என்ற பகுதிக்கு ரைசுடேவிட்சு தரும் விளக்கம் வருமாறு. தருமச்சக்ரத்தை உருட்டுவது என்பது பௌத்தக் கோட்பாட்டின்படி, அதன் போதனைகளைச் செயல்படுத்துவது என்பதையே சுட்டும். பாலிமொழிகளில் “சக்க” எனப்படும் “சக்கரம்” மக்கள் வழக்கில் உள்ள ஒன்றைக் குறிப்பது ஆகாது. இது இறையாண்மையைச் சுட்டுவது. “சக்கரத்தைச் சூடியவன்” எனப்படும் “சக்கரவர்த்தி” என்ற சொல்லும், எதிர்ப்பின்றி, தனது தேரின் சக்கரத்தை உலகம் முழுவதும் உருட்டிச் செல்லும் “உலகப்பேர்ரசன்” என்ற கருதுகோளைக் குறிப்பது ஆகும் . “தம்ம்ம்” எனப்படும் அறம் (தருமம்) என்ற சொல், வெறும் சட்ட வடிவத்தைச் சுட்டவில்லை, மாறாக, வேறு எம்மொழியிலும் மொழிப்யெர்க்க முடியாத உண்மை நேர்மை ஆகிய உயர் அறங்களைச் சுட்டி நிற்பதாகும். சுருங்க்க கூறின், தம்ம்ம் என்பது புத்தரின் கோட்பாட்டை முழுமையாக உணர்த்தி நிற்கின்றது. பிரவர்த்தனா (பாலி பவ்வத்தனா) என்பது, ”என்றும் நிலையாக இயங்கிக் கொண்டிருக்கும்” தன்மையை உணர்த்தி நிற்கின்றது. எனவே, இத்தொடரின் முழுப்பொருளும் இதுதான் “உலகம் பேரரசன் தன் இறைமாட்சியின் அடையாளமாகிய தேரை – சக்கரத்தை – இயங்குகிறான் என்பதன் மூலம் உண்மையையும், நேர்மையையும் என்றும் புரந்து வருகிறான்”. (மேற்கோள், பேரா.க.நெடுஞ்செழியன், இந்தியப் பண்பாட்டில் தமிழும் தமிழகமும், 1989, ப.95-96) இவ்விளக்கத்திலிருந்து நான் பெறும் கருத்துக்களாக, 1. தருமச் சக்கரம் என்பது புத்தரின் போதனைகளின்படி ஆளும் அரசாட்சியின் தன்மையைச் சுட்டும் குறியீடு ஆகும். 2. இத்தகைய ஆட்சியின் தன்மைகள் உண்மையும், நேர்மையும் ஆகும். எனக் கொள்ளலாம். இந்த பௌத்த மெய்யியல் வரையறைகளோடு புறநானூற்றில் கள்ளில் ஆத்திரையனாரால் எழுதப்பட்டுள்ள ஆதனுங்கனின் ஆட்சிச் சிறப்பு பற்றிய பாடலை ஆராய வேண்டியுள்ளது. புறநானூற்றில் 175வதாக அமைந்துள்ள கள்ளில் ஆத்திரையனார் பாடல், “எந்தை! வாழி, ஆதனுங்க! என் நெஞ்சம் திறப்போர் நிற்காண்குவரே நின் யான் மறப்பின் மறக்கும் காலை என் உயிர் யாக்கையின் பிரியும் பொழுதும், என்யான் மறப்பின், மறக்குவென் வென்வேல் விண்பொரு நெடுங்கடைக் கொடித்தேர் மோரியர் திண்கதிர்ஏத் திகிரி திரிதரக் குறைந்த உலக இடைகழி அறைவாய் நிலைஇய மலர்வாய் மண்டிலத்து அன்ன, நாளும் பலர்புரவு எதிர்ந்த அறத்துறை நின்னே”. என்பதாகும். இப்பாடலில் இடம்பெறும் “மலர்வாய் மண்டிலம்” என்பது ஆதனுங்களின் ஆட்சி அறத்திற்கு உவமிக்கப்பட்டுள்ளது என்றும், புத்த ஜாதக்க் கதையில் நல்லாட்சியின் அடையாளமாக்க் குறிக்கப்படும் ஜாதக்க் கதையில் நல்லாட்சியின் அடையாளமாக்க் குறிக்கப்படும் “ஒளிவட்டமே” திகிரியாக – மலர்வாய் மண்டிலாக – உருவகிக்கப்படுகின்றது என்றும் பேரா.க.நெடுஞ்செழியன் நிறுவியுள்ளார். இம்முடிவை உறுதிப்படுத்துவதற்கு இப்பாடலில் இடம்பெறும் இன்னொரு பௌத்தக் கருத்தும் இங்கு ஆய்தற்கியது. பௌத்தத் தத்துவம் கீழ்க்கண்ட நான்கு நிலைகளில் இதர மெய்யியல் பிரிவுகளினின்று வேறுபட்டு நிற்கிறது 1. கடவுளை ஏற்றுக் கொள்ளாமலிருப்பது 2. ஆன்மாவை நிரந்தரமானதென்று ஒப்புக் கொள்ளாமலிருப்பது 3. எந்த ஒரு நூலையும் கடவுள் அருளியதாக ஒப்புக்கொள்ளாமல் இருப்பது. 4. வாழ்விகன் பிரவாகத்தைத் தற்போதைய உடலுக்கு மட்டுமே சொந்தமாகக் கருதாமலிருப்பது. (ராகுல்சாங்கிருத்தியாயன், பௌத்த்த் த்த்துவ இயல், 1985, ப.1) மேற்கண்ட நான்கு அடிப்படை மெய்யியல் நோக்குநிலைகளில் இரண்டாவது கருத்தை வலியுறுத்திக் கூறுவதாக்க் கள்ளில் ஆத்திரையனாரின் இப்பாடல் அமைந்துள்ளது. அதாவது, “நின்யான் மறப்பின், மறக்கும் காலை என்உயிர் யாக்கையின் பிரியும் பொழுதும் என் யான் மறப்பின் மறக்குவென்....” என்ற பாடலடிகள் சிந்தனைக்குரியவை. “உன்னை நான் மறக்கமாட்டேன். அவ்வாறு நான் மறப்பேனாயின் அது எப்பொழுது நிகழும் தெரியுமா? என் உயிர் உடலைவிட்டுப் பிரியும் பொழுதும் என்னையே நான் மறக்கும் பொழுது நேர்ந்தாலும்தான் உன்னை நான் மறப்பேன்” என்பது இவரிகள் பொருளாகும். உடலைரவிட்டு உயிர் பிரிந்தபிறகம் எண்ணங்களைச் சுமந்தபடி அகண்ட வெளியில் உயிர் உலவும் என்பது வைதிகச் சமயங்களின் நம்பிக்கை. ஆனால், உடலைவிட்டுப் பிரிந்த உயிர் எங்கும் நிலை கொள்வதில்லை அது அழிந்து போகிறது என்பது பௌத்த மெய்யியல் நிலைப்பாடு. இப்பாடலில் இடம்பெறும் கருத்தும், உடலைவிட்டு உயிர் பிரிந்த பிறகு நினைவொழந்து போகும் என்பதை வலியுறுத்துகிறது. எனவே, இப்பாடல் பௌத்த மெய்யியலைச் சார்ந்து என்பதை உறுதிபடுத்த முடிகிறது. எதிர்ப்பு கல்லில் ஆத்திரையனார் தருமச் சக்கரத்தை மலர்வாய் மண்டிரமாக உவமித்து பௌத்த சிந்தனை பரவியிருந்த நிலையை உணர்த்துகிற, அதே புறநானூற்றில் இடம் பெற்றுள்ள வெள்ளெருக்கிலையார் பாடலில் பௌத்த மரபை எள்ளி நகையாடும் சிந்தனைப் போக்கும் பதிவாகியுள்ளது. வெள்ளெருக்கிலையார் என்ற இவரது பெயரிலிருந்து இவர் சிவனிய நெறியினராக இருக்க்க்கூடும் என்றும், அதனால் சிவனியநெறி வளரத் தடையாய் விளங்கிய பௌத்த மரபைப் புறந்தள்ளியுள்ளார் என்றும் கொள்ள இடம் உண்டு. புறநானூற்றில் 233ஆவதாக இடம்பெற்றுள்ள இவரது பாடல் வருமாறு “பொய்யா கியரோ பொய்யா கியரோ பாஅடி யானை பரிசிலர்க்கு அருகாச் சீர்கெழு நோன்தாள் அகுதைக்கண் தோன்றிய பொன்புனை திகிரியின் பெய்யா கியரோ இரும் பாண் ஒக்கற் தலைவன், பெரும்பூண், போர் அடு தானை, எவ்வி மார்பின் எஃகுறு விழுப்புண் பல என வைகுறு விடியல், இயம்பிய குரலே” இப்பாடலில் இடம் பெற்றுள்ள, “............ அகுதைகண் தோன்றிய பொன்புனை திகிரியின் பெய்யாகியரோ” என்ற தொடர் பௌத்த மரபை எள்ளும் தன்மைத்து என்பதைப் பேரா.க.நெடுஞ்செழியன் சுட்டியுள்ளார். அவரது கருத்து வருமாறு “தம்ம சக்க பவத்தன சூத்கம் தேரைப் பற்றிக் குறிப்பதைப் போன்றே, சாதக்க் கதையில் வரும் “சக்கவத்தி சூத்கம்” நல்லாட்சி புரியம் அரசனின் அரண்மனையில் தோன்றும் “ஒலிவட்டம்” பற்றி விளக்கும். “அவ்வொளிவட்டம் வழிகாட்ட, ஓர் அரசன் அது செல்லும் வழியைப் பின் தொடர்நது ஆகிய குற்றங்களிலிருந்து காத்தான்” என்று அச்சாதகத் கதை கூறுகிறது. நல்லாட்சியின் அடையாளமாக, மன்னனின் அரண்மனை முன்பாக நின்று ஒளிவிடும். இவ்வொளி வட்டம் ஆட்சியின் குறைவு ஏற்படும்போது அது தானகவே மறைந்துவிடும் என்பாது பௌத்த மரபு. இத்தகைய நம்பிக்கை உண்மைக்கு மாறானது என்பது போன்ற குறிப்பும் புறநானூறு 223ஆம் பாடலால் அறிய முடிகிறது.... இப்பாடலைப் பாடிய் வெள்ளொருக் கிலையார் பௌத்த சமய எதிர்ப்பாளராகலாம்” (இந்தியப் பண்பாட்டில் தமிழும், தமிழகமும் 1989, ப.99) கள்ளில் ஆத்திரையனார், வெள்ளொருக்கிலையார் ஆகிய இருவரது பாடலையும் ஒப்பிட்டு நோக்குகையில் சங்க காலத்தில் தமிழகத்தில் இருந்த பௌத்த மெய்யியல் ஏற்பையும், எதிர்ப்பையும் உய்த்துணர முடிகிறது. சங்க காலம் சமயப் பொறைமிக்கது என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய வண்ணம் பௌத்த சமய எதிர்ப்பு இருந்திருப்பதையும் அறிய முடிகிறது (மாதவன்.,சு.2005 : 107 – 112). முடிவுகளாக பத்துப்பாட்டு நூல்களுள் ஆங்காங்கே பௌத்த வழக்காறுகள் தென்படுகின்றன. மதுரைக் காஞ்சி எனும் நூல் பௌத்த விகாரையில் பௌத்த உபாசகர்கள், உபாசகிகள் பூவைத்து வழிபட்டசெய்தியைக் குறிப்பிடுகிறது. நெடுநல்வாடை எனும் நூலில் ‘பிடகம்’ என்ற சொல் இடம்பெற்றுள்ளது. இச் சொல் பௌத்தத் திரிபிடகத்தைக் குறிப்பதாகலாம். இதுகாறும் ஆய்ந்த நிலையிலிருந்து கீழ்கண்ட முடிவுகளைத் தொகுக்கலாம். 1. பௌத்தப் பிடக்க் கருத்தை முற்றாக ஏற்கும் அளவிற்குத் தமிழகத்தில் பௌத்தம் பரவி இருக்கிறது 2. வைதிக மரபுக்கு முற்றிலும் எதிரான பௌத்த மெய்யியலின் ஆன்மா மறுப்பு புறநானூற்றில் பதிவாகி இருப்பது பௌத்தம் தமிழகத்தில் கொண்டிருந்த பிடிமானத்தை வெளிப்படுத்துகிறது. 3. பௌத்த மெய்யியலுக்கு எதிரான சிந்தனைப் பள்ளி ஒன்று உக்கிரமான கருத்தியல் தாக்குதலை அதன்மீது செலுத்தி இருப்பதால் சங்க காலம் சமயப்பொறை மிக்க காலம் என்கிற கருத்து மறுபரிசீலனைக்கு உரியதாகிறது. 4. பௌத்த மெய்யியல் பின்புலத்தோடு சங்க இலக்கியத்தை ஆராய்ந்தால் பல புதிய வெளிச்சங்கள் கிடைகக்கூடும். ****** • செம்மொழிப் பயிலரங்கம், குந்தவைநாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, தஞ்சாவூர், ஜனவரி 2015 (21 – 30)

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் படைப்புகள் – வகைமையியல் பார்வை

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் படைப்புகள் – வகைமையியல் பார்வை Kidth; R.khjtd;> cjtpg; Nguhrphpah; - A[prp MHV (2014-2016)>jkpoha;Tj;Jiw> khl;rpik jq;fpa kd;dh; fy;Y}hp (j)> GJf;Nfhl;il 622001> Ngr : 9751 330 855 kpd; mQ;ry; :semmozhi200269@gmail.com, semmozhi_200369@yahoo.com ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்’ என்றதுமே ச.தமிழ்ச்செல்வன், மேலாண்மை பொன்னுசாமி, அருணன், பாரதி கிருஷ்ணகுமார் மதுக்கூர் இராமலிங்கமெல்லாம் இருக்காங்களே… அந்தச் சங்கம் தானே! என்று எல்லோரும் கேட்கும் அளவுக்குச் சங்கமும் தானும் இரண்டறக் கலந்த ஒரு படைப்புப் போராளி – போர்ப்படைப்பாளி எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன். மரபும் இயல்புமே போர்க்குணப் பின்னணியாகக் கொண்டவர் அவர். அவரது படைப்புகளில், “வாளின் தனிமை” என்ற ஒரு சிறுகதையை மட்டும் வைத்துக்கொண்டே பெருங் கதைக்கட்டுரை ஒன்றை எழுதிவிடமுடியும். அவ்வளவு உணர்வு, உணர்ச்சி, கிளர்வு, கிளர்ச்சி என மானுட இயல்புகளும் அதில் கொட்டப்பட்டுள்ளன. மொழிநடை, வழக்காறுகள், உத்திகள் என இலக்கிய இயல்புகளும் அதில் எட்டப்பட்டுள்ளன. ச.தமிழ்ச்செல்வனின் மொழி, உணர்வின் விழியாக வெளிப்பட்டு அத்தனை உணர்வுநிலைகளையும் நமக்குள் கொண்டுவந்து சேர்க்கிறது. இத்தகைய நுட்ப திட்ப ஒட்பச் செறிவார்ந்த படைப்பாளியின் படைப்புகளை விரிவார்ந்த ஆய்வுகளாகப் பின்னர் நிகழ்த்திக் கொள்ளலாம் என்று கருதி, இந்தக் கட்டுரை அவரது படைப்பாக்கங்களாகியுள்ள எழுத்தாக்கங்களை வகைமையியல் பார்வையில் எடுத்துரைப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. ச.தமிழ்ச்செல்வன் பிறப்பும் சிறப்பும் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டத்திலுள்ள நெ.மேட்டுப்பட்டியில் மே.சு.சண்முகம் – சரஸ்வதி இணையரின் மகனாகப் பிறந்தவர். ச.தமிழ்ச்செல்வன் (27.05.1954). இவரது சகோதரர்கள் கோணங்கி, ஒரு சிறந்த ஊர்சுற்றி; படைப்பாளி. முருகபூபதி ஒரு நவீன நாடகக்காரர்; படைப்பாளி. இவரது தந்தை மே.சு.சண்முகம் அவர்களும் மகன்களைத் தொடர்ந்து படைப்பாளியாக மலர்ந்தவர்; சிறப்பு புதினப் படைப்பாளி. இவரது தாய்வழித் தாத்தா மதுரகவி பாஸ்கரதாஸ், ஒரு சிறந்த நாடகப் படைப்பாளி; நாடகப் பாடலாசிரியர்; இயக்குநர்; எல்லாவற்றுக்கும் மேல் அவர் ஒரு மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர். தமிழின் முதல் பேசும்படமான காளிதாஸ் படத்துக்குப் பாடல்கள் எழுதியவர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இவர் இந்திய இராணுவத்தில் வீரராகப் பணிபுரிந்து, மக்கள் போராட்டக் களப் பணியாற்றுவதே அதைவிடவும் சிறந்தது என்று தன் இராணுவப் பணியை உதறிவிட்டு வந்தவர். சிலர் எழுத்தாளராக இருப்பர்; போராளியாக இரார். சிலர் போராளியாக இருப்பர்; எழுத்தாளராக இரார். இரண்டுமாக இருப்பவர்கள் குறைவு. இரண்டிலும் மிளிர்பவர்கள் மிகக் குறைவு. மிளிர்வதோடு தன் எழுத்தின்படி தானே வாழ்பவர்கள் மிகமிகக் குறைவு. அத்தகைய மிகச் சிலரில் ச.தமிழ்ச்செல்வனும் ஒருவர். படைப்புலகில் முதல் கவிதையும் முதல் சிறுகதையும் படைப்புலகில் இவரது முதல் பதிவு கவிதையே ஆகும். பெரும்பாலும் எல்லாப் படைப்பாளிகளுமே கவிதையில் தொடங்கிப் பின்னர் பிற இலக்கிய வகைகளில் மிளிர்பவர்களாகவே உள்ளனர். அந்தவகையில், இவரும் கவிதையிலிருந்தே தன் படைப்பிலக்கியப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். இவரது முதல் கவிதை 1972ல் கோவில்பட்டியிலிருந்து திரு.அண்ணாமலையை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்து கொண்டிருந்த ‘நீலக்குயில்’ என்னும் இலக்கிய இதழிலே வெளியாகியுள்ளது. இவரது முதல் சிறுகதை 1978இல் தாமரை இதழில் வெளிவந்துள்ளது. இவரது முதல் கவிதை 1972இல் வெளிவந்ததற்குப் பிறகு 6 ஆண்டுகள் கழித்துத்தான் (1978இல்) இவரது முதல் சிறுகதை வெளியாகியுள்ளது. இதிலிருந்து இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் இவர் ஏராளமான கவிதைகளைப் படைத்துக்கொண்டு இருந்திருப்பார் என்பது தெரிகிறது. ‘என் சக பயணிகள்’ என்னும் நூலின் முதல் கட்டுரையான ‘கல்யாணி’ பற்றிய கட்டுரையில் “என்னுடைய கவிதைகள் (1) அதில் (நீலக்குயிலில்) வந்துகொண்டிருந்தன” (தமிழ்ச்செல்வன்.,ச. 2013:9) என்று இவரே குறிப்பிட்டிருப்பதிலிருந்து இதை அறிந்துகொள்ள முடிகிறது. இவ்வாறு எழுதத்தொடங்கிய இவரின் சிறப்பு இதுவரை ஏராளமாக எழுதிக் குவித்திருக்கிறார் என்பது இது ஒரு புறம் இருந்தாலும் அவரது எழுத்தின் சிறப்பு முழுக்கமுழுக்க மக்கள் நலன் – அடித்தட்டு வர்க்கநலன் சார்ந்தது என்பதே ஆகும். அதனினும் சிறப்பு, மத்திய அரசு இராணுவப் பணியை உதறித் தள்ளிவிட்டு மக்கள் பணியைத் தன்தோள்மீது சுமக்கிறார் என்பதும் ஆகும். ச.தமிழ்ச்செல்வனின் படைப்புலகம் ஒவ்வொரு படைப்பிலும் உலகின் ஒரு பகுதி படைக்கப்படுகிறது. ஒவ்வொரு படைப்பும் ஒரு உலகைப் படைக்க முயல்கிறது. எனவே, தான் படைப்புலகம் எனப்பட்டிருக்கிறது போலும்! படைப்பு யாதாயினும் அது முற்போக்குப் படைப்போ பிற்போக்குப் படைப்பு – அதில் படைப்பு நுட்பம் (Creative power) வெளிப்படுத்தப் பட்டிருந்தால் அதைப் படைப்பு எனலாம். இத்தகைய, எந்தக் கருத்தியல் நிலை கொண்ட படைப்பாயினும் அது தான் முன்வைக்கும் கருத்தியலின் வழியில்; உருவில்; செயலில் உலகைப் படைக்க முனைகிறது அல்லவா?. இவ்வாறுதான், ச.தமிழ்ச்செல்வனின் படைப்புகளும் ஒரு சமத்துவப் பொதுவுடைமை உலகத்தைச் சமைப்பதைத் தன் கருத்தியல் இலக்காகக் கொண்டுள்ளன. இவர் உருவாக்க விரும்பும் உலகைப் படைக்க ஒற்றைத் தன்மை அல்லது ஒரே வகைமை கொண்ட படைப்புகளால் இயலாது என்று எண்ணித்தான், பன்முகத்தன்மை அல்லது பன்முக வகைமைகள் கொண்ட படைப்புகளைப் படைத்துக் கொண்டிருக்கிறார் என்பது ‘இவரின் படைப்புக்கொள்கை’ என வரையறுக்கலாம். பொதுவாக, படைப்பு என்றதும் இலக்கியப் படைப்பையே எண்ணும்; நோக்கும்; கருதும் பொதுப்புத்தி நிலையிலிருந்து மாறுபட்டு, எழுத்து வடிவம் மட்டுமன்றிப் பொருள்வடிவில் படைக்கப்பட்டுள்ள எல்லாமே படைப்புகள்தாம் என்ற பொதுப்புத்தி உருவாகிக் கொண்டிருக்கும் காலம் இது. இதுதான் பொருள்முதல்வாதப் பார்வை வழங்கியிருக்கும் படைப்பு குறித்த துல்லியமான பார்வை ஆகும். இந்த நோக்கு நிலையிலிருந்து, ச.தமிழ்ச் செல்வனின் படைப்புலகம் தொழிற்படும் பன்முக ஆளுமைப் பாங்கை வகைப்படுத்தலாம். ச.தமிழ்ச்செல்வனின் படைப்புகளின் பன்முக வகைப்பாடு கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில், ச.தமிழ்ச்செல்வனின் படைப்புகளாகக் கிடைக்கும் நூல்களின் எண்ணிக்கை மொத்தம் 27. அவற்றுள், ஓரளவு பெருநூல்களாக உள்ளவை 17; சிறுநூல்களாக இருப்பவை 10. அவை பின்வரும் பொருண்மை வகைப்பாட்டுக்கு உரியனவாய் விளங்குகின்றன: 1. படைப்பிலக்கியம் – 3 2. அறிவொளி மக்கள் கல்வி – 2 3. அரசியல் கல்வி – 8 4. பெண்ணியக் கல்வி – 3 5. குழந்தைமைக்கல்வி – 1 6. கலை இலக்கிய ஆய்வு – 2 7. மானுட ஆளுமையியல் கல்வி – 1 8. கதம்பவியல் – 1 9. நாட்டுப்புறவியல் கல்வி – 1 10. பண்பாட்டுக்கல்வி – 4 11. சேவையியல் கல்வி – 1 இந்தப் படைப்பு வகைப்பாட்டுக்கு அப்பாற்பட்டுத் திரைப்படவியல், கதையாசிரியர், இதழியல் ஆசிரியர் போன்ற இன்னுஞ்சில வகைமைகளுக்குள்ளும் தன் படைப்பாளுமையை மேற்கொண்டு வருகிறார். மேலே விளக்கப்பட்டவை எல்லாம் அவரால் எழுதப்பட்டுச் சில பதிப்பங்கள் வெளியிட்டவை. ஒரே ஒரு நூல் மட்டும் இந்த வகைமைகளுள் படைப்பிலக்கியம் என்னும் வகைக்குள் வருவதெனினும் வராது. ஏனெனில், அது வேறொரு ஆசிரியரால் – இலக்கியவாதியால் தொகுக்கப்பட்டது! ஆம். எழுத்தாளர் திலகவதியால் தொகுக்கப்பட்ட ‘முத்துக்கள் பத்து – ச.தமிழ்ச்செல்வன்” என்ற நூல்தான் அந்த ஒரே ஒரு நூல். இதுகாறும் கண்ட படைப்புகளின் பன்முக வகைப்பாட்டுப் பட்டியல் பின்வரும் கருத்துக்களைப் புலப்படுத்திக் கொண்டிருக்கின்றன; 1. 11 வகைப்பாடுகளுக்குள் அடங்கியுள்ள அடக்கப்பட்டுள்ள இவரது படைப்புகளில் அரசியல் கல்வி, பண்பாட்டுக்கல்வி என்ற இரு வகைமைப் பண்பே மிகுந்துள்ளது எனலாம். 2. பண்பாட்டுக் கல்வி என்ற வகைமையைக் காட்டிலும் (4) அரசியல் கல்வி என்ற வகைமைக்குள் (8) இவரது கவனக்குவிவு கூடுதல் அழுத்தம் பெற்றுள்ளது என்பதை அறியமுடிகிறது. 3. அரசியலும் பண்பாடும் மாற்றப்பட வேண்டியவை என்பதை இவரது நூல்கள் முன்வைக்கின்றன எனலாம். 4. பண்பாட்டைவிட அரசியல் கூடுதல் முன்னுரிமை கொடுத்து மாற்றப்பட வேண்டியது என்பதைப் புலப்படுத்துகின்றன இவரது படைப்புகள். ஏனெனில், அரசியல் சூழல்தான் பண்பாட்டைத் தகவமைக்கிறது; கட்டமைக்கிறது; வாழ்வியலாக்குகிறது என்பது தெளிவு. பன்முக வகைப்பாடும் பொருண்மை தொழிற்பாடும் (படைப்புகளின் இயங்கு தளங்கள்) இங்கு வகைமைப்படுத்தப்பட்டள்ள 11 வகைமைகள் இன்னும் நுட்பமான பகுப்புக்கு உட்படுத்தப்பட்டால், மேலும் கூடுதல் எண்ணிக்கையிலான வகைமைகள் கிடைக்கும். இவ்வாறு, எத்தனை வகைமைளாகப் பகுக்கப்பட்டபோதிலும் இவை அத்தனையும் இருபெரும் பகுப்புக்குள்ளே அடங்கிவிடக் கூடியனவே. அவ்விருபெரும் பகுப்புகள் அரசியல், பண்பாட்டியல் என்ற இரண்டுமாகும். நூல்களின் வகைமைப் பகுப்புப்பட்டியலை எழுதுகிறபோது படைப்பிலக்கியம் 6. கலை இலக்கிய ஆய்வு 8. கண்பட்டுக் கதம்பவியல் 5. வகைமைகளைத் தவிர்த்து பிற 8 வகைமைகளைச் சுட்டும்போது 2. அறிவொளி மக்கள் கல்வி, 3. அரசியல் கல்வி 4. பெண்ணியக்கல்வி 5. குழந்தைமைக் கல்வி. 7. மானுட ஆளுமையியல் கல்வி 9. நாட்டுப்புறவியல் கல்வி 10. பண்பாட்டியல் கல்வி 11. சேவையியல் கல்வி என்றவாறு குறிப்பிடுவதிற்குள் ஒரு நுட்பம் உள்ளது. அதாவது, படைப்பிலக்கியம் தன்னியல்பாய்ப் படைக்கப்படுவது, கலை இலக்கிய ஆய்வு படைப்பின் நுட்பம் தேடுவது. பண்பாட்டுக் கதம்பவியல் என்பது பண்பாட்டுக் கூறுகள் குறித்த விமர்சனப் பார்வைகளை முன்வைப்பது என்ற வகைகளில் அமைவன. இம்மூன்றும் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் சென்று சேர்ந்தே ஆகவேண்டும் என்ற இன்றிமையாத் தன்மை உள்ளனவல்ல. ஆனால் ‘கல்வி’ என்ற பின்னொட்டுடன் இடம்பெற்றுள்ள படைப்பு வகைமைகள் யாவும் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் சென்றே ஆக வேண்டிய இன்றியமையாத் தன்மை கொண்டன. ஏனெனில், இயல் என்பது எழுதப்படுவது; கல்வி என்பது வெளிக்கொணரப்படுவது. கல்வி என்பது முழுக்க முழுக்க சமூகம் வழங்கிய அறிவு, ஆற்றல், படைப்புத் திறன்களை வழங்கும் தன்மையது. இந்தப் புரிதலிலிருந்து பார்த்தால் ‘கல்வி’ என்ற பின்னொட்டு சார்ந்த நூல்கள் எல்லாம் சமூக மாற்றத்தைத் துரிதப்படுத்தும் புரிதலை வழங்கவல்லன என்ற புரிதலிலிருந்து தான் இந்த 8 படைப்புவகைமைகளுக்கும் ‘கல்வி’ என்ற பின்னொட்டு அமைக்கப்பட்டது என்பதுதான் அந்த நுட்பமாகும். 1. படைப்பிலக்கியம் இவருடைய படைப்பிலக்கியங்கள் ‘சிறுகதை’ என்னும் இலக்கியவகையைச் சார்ந்தவை. இவர் கவிதை எழுதத் தொடங்கிச் சிறுகதைத் துறைக்கு வந்தவரெனினும் கவிதை நூலென எதுவும் வெளியிடப்பட்டதாகத் தெரியவில்லை. 1970களில் சில இதழ்களில் கவிதைகள் எழுதிவந்துள்ளார். 1978இல் தாமரையில் இவரது முதல் சிறுகதை வெளிவந்திலிருந்து மொத்தம் 32 சிறுகதைகளைப் படைத்துள்ளார். அந்த 32 சிறுகதைகளும் ஒருசேரத் தொகுத்த தொகுப்பை 2006ஆம் ஆண்டு பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. இந்த 32 சிறுகதைகளும் 2006க்கு முன்பே வெளிவந்த இவரது இரண்டு சிறுகதைத் தொகுப்புகளிலிருந்தும் தொகுக்கப்பட்டவை. சில கதைகள் உதிரிக் கதைகளாக 1992க்குப் பின் எழுதியவை இருக்கக் கூடும். அவரது சிறுகதைத் தொகுப்பு நூல்களின் விவரம் வருமாறு; 1. வெயிலோடு போய், சிறுகதைகள், 1984. 2. வாளின் தனிமை, சிறுகதைகள், 1992. 3. மிதமான காற்றும் இசைவான கடலையும் (முழுச் சிறுகதைத் தொகுப்பு, 32 சிறுகதைகள், பாரதி புத்தகாலயம், சென்னை, 2006. 1984, 1992 ஆகிய இரு ஆண்டுகளிலும் வெளிவந்த இரு நூல்களிலும் இடம்பெற்ற கதைகளோடு சில சிறுகதைகளும் சேர்த்து 2006இல் ஒட்டுமொத்த சிறுகதைத் தொகுப்பாக வெளியிட்டுள்ளார். இவற்றிலிருந்து சிறந்த பத்து சிறுகதைகளைத் தொகுத்து, ‘முத்துக்கள் பத்து’ ச.தமிழ்ச்செல்வன் என்ற நூல், 2007 ; 126) அம்ருதா பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டுள்ளார் எழுத்தாளர் திலகவதி. இந்தப் 10 சிறுகதைகளையும் படித்தாலே இவரது படைப்பாளுமையைப் புரிந்துகொள்ள முடியும். இன்று நவீனம், அந்த இசம் இந்தஇசம், என்று பேசுவதையெல்லாம் அன்றே (1978க்கு முன்பே) தன் சிறுகதைகளில் இடம்பெறச் செய்துள்ளார். இதுவும் கூட வலிந்து அவர் செய்ததில்லை. இயல்பான கற்றலிலிருந்து இத்தகைய பண்புகள் இவரது சிறுகதைகளில் இடம்பெற்றுள்ளன. இவரது முழுச் சிறுகதைத் தொகுப்புக்கு இவர் இட்டுள்ள நூற்தலைப்பே இவரது படைப்பாளுமைக்கும் கொள்கை-யாளுமைக்கும் கட்டியங் கூறுகிறது. ‘மிதமான காற்றும் இசைவான கடல்லையும்’ என்ற தலைப்பே பின்வரும் கருத்துக்களை வழங்குகிறது: 1. இயல்பாய் இரசிக்கத்தக்க இயைபிணைவைக் கொண்டவை. மாற்றம் இயல்பாய் நடந்தேறுமாறு இலக்கியம் படைப்பாக்கமும் இயல்பாய் எழவேண்டும். 2. புயலால் இரசனையைத் தரஇயலாது. இதுவும் மாற்றம்தான் என்ற போதிலும் வலிவால் வரும் அழிவு வேண்டத்தக்கதல்ல. முடிவுரையாக… இதர 10 வகைமை நூல்களின் உள்ளடக்கப் பார்வையை விரிப்பின் பெருகும்; தொகுப்பன் எஞ்சும். எனவே, ச.தமிழ்ச்செல்வனின் படைப்புப் பணியினை இவ்வாறு மதிப்பிட்டு இப்போதைக்கு இந்தக் கட்டுரையை நிறைவுசெய்துகொள்ளலாம். 1. 1975- அவர காலச் சூழலில், தன் இராணுவப் பணியை உதறிவிட்டு செம்மைசெய்யும் பணியை வரித்துக்கொண்ட இவர், முதலில் படைப்பிலக்கியவாதியாக முகிழ்த்தார். 1990களுக்குப் பிறகு, அறிவொளி இயக்கம் வந்த பின்பு, தான் எழுதிய 32 சிறுகதைகள் எப்படி இத்தனை மக்களைச் சென்றுசேரும் என்று எண்ணிய இவர் படைப்பிலக்குவாதியாக – புதிய சமூகப் படைப்பிலக்குவாதியாக – தன்னைக் களப்பணியாளனாக்கிக் கொண்டதால் இவரின் படைப்புகளின் பொருண்மைகள் மாறலாயின. 2. ஒரு எழுத்தாளனாகப் படைப்பிலக்கியம் படைப்பதைக் காட்டிலும் பொதுவுடைமைப் போராளியாக இருந்து மக்களிடம் நேரடியாக உரையாடுவதே இன்றியமையாதது என்று புரிந்துகொண்டதால் அரசியல், பண்பாட்டியல் நூல்களை அதிகமாகப் படைத்துள்ளார் (8+4=12). 3. இவரது எல்லாப் படைப்புகளையும் பார்க்கும்போது இவரது பரந்துபட்டதும் ஆழங்கால்பட்டதுமான பல்துறை அறிவாண்மை வியக்கவைக்கிறது. அதனினும் மேலாக, அவரது எல்லாப் படைப்புகளுக்குள்ளும் ஊடாடும் மானுடநேய சமத்துவப் புரட்சிகர உணர்வு படிப்பவருக்குள் மூச்சுக்காற்றைப் போல் இயல்பாய் உள்நுழைந்து சமூக உயிர்ப்புக்கும் நிலைப்புக்கும் மாற்றத்திற்கும் வழிவகுக்கிறது என்பது வெற்று முடிவுரையல்ல; நீங்களும் வாசிப்பதற்கான முகவுரை! *** பன்னாட்டுக் கருத்தரங்கம், தென்பாண்டி நாட்டுப் படைப்பாளர்களின் சமுகச் சிந்தனைகள், கே.எஸ்.ஜி. கல்லூரிக் கலையரங்கம், கோயம்புத்தூர், நாள் 26.12.201