மா.மன்னர் கல்லூரி(த), புதுக்கோட்டை
அறம், தருமம், நீதி குறித்த சங்க இலக்கியம், கல்வெட்டு ஆவணப் பதிவுகள்
செம்மொழிக் கருத்தரங்கம்
அறம், தருமம், நீதி : இந்தியத் தத்துவ மரபும் இலக்கியத் தமிழ் மரபும்
முனைவர் சு.மாதவன், உதவிப்
பேராசிரியர்,
தமிழாய்வுத்துறை, மாட்சிமை தங்கிய மன்னர்
கல்லூரி (தன்னாட்சி),
புதுக்கோட்டை-622
001, பேச : 97513 30855
மின்னஞ்சல் : semmozhi_200369@yahoo.com
இந்தியப் பொதுப்புத்தியில் அறம், தருமம்,
நீதி எல்லாம் ஒன்றே
என்னும் புரிதல் உள்ளது.
அவ்வாறே, தமிழியப் பொதுப்
புத்தியிலும் உள்ளது. ஆனால்,
இவை ஒவ்வொன்றுக்கும் தனித்த சிறப்புக் கருத்தியல்கள் உள்ளன. இச் சொல்லாடல்கள் பயனுறும் இடம்,
சூழல், விளைவு ஆகியவற்றுக்கேற்ப பொருள்
வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. இத்தகைய சிறப்பியல்புகளை இவை கொண்டிருக்கும் அதேநேரத்தில் இவற்றுக்கிடையேயான பொதுவியல்புக் கூறுகளும் இயைபுக் கூறுகளும் இல்லாமல் இல்லை
என்பதும் நோக்கத்தக்கது.
‘அறம்’ என்பது நெறி, வழி, செவ்விய இயற்கைப் போக்கு என்பன
போன்ற பொருண்மைகளில் தமிழிலக்கியப் பெரும்பரப்பில் கையாளப்பட்டு வருகிறது (அறநெறி, அறச்செயல் போல்வன). ‘தருமம்’ என்பது ‘அறம்’ என்ற சொல்லுக்கான பதிலியாகச் சில இடங்களிலும் இந்திய மெய்யியல் பள்ளிகளின் பயன்பாட்டளவில் தனித்த தனித்த
பொருண்மை கொண்டதாகப் பல இடங்களிலும் கையாளப்பட்டு வருகின்றது (தருமராசன், தர்ம காரியம், தருமச்
செயல், தரும நீதி,
தர்ம நெறி போல்வன).
‘நீதி’ என்பது சமூக வழக்கில் ‘சட்ட முறைமை’ என்னும் பொருளிலும் இலக்கிய வழக்கில் ‘அறநெறி’ என்னும் பொருளிலும் பெருவாரியாகக் கையாளப்பட்டு வருகிறது (நீதி இலக்கியங்கள், நீதிநெறி, அரசநீதி போல்வன).
தமிழில் ‘அறம்’ என்ற சொல் தோன்றுவதற்கு முன்பு, பழமொழி,
முதுமொழி, மூதுரை, வாயுறை
வாழ்த்து, நன்று, நன்றி,
நன்மை, நல்லது, முறை,
முறைமை, நயம், நன்னெறி, நெறி, ஒழுக்கம், கடமை போன்ற சொற்கள் கையாளப்பட்டு வந்துள்ளன. இச்சொற்கள் பலவும் சங்க இலக்கியங்களில் பயன்கொள்ளப் பெற்றுள்ளன. இவைபோன்ற சொற்களோ ‘அறம்’ என்ற சொல்லோகூட இடம்பெறாமல் பலவிடங்களில் அறநெறி
உணர்த்தப்பட்டுள்ளது. அறம், அறன்,
அறநெறி. அறவோன் போன்ற
பல சொற்பயன்பாட்டின்மூலமும் சங்க இலக்கியங்களில் ‘அறம்’ என்ற கருத்தாக்கம் பரவலாக இடம்பெற்றுள்ளது.
‘தருமம்’ என்ற சொல் ‘தர்மா’ (Dharma) என்ற வடமொழிச் சொல்லின் தமிழ் வரிவடிவமாகும். இச்சொல், கொள்கை, கோட்பாடு, சமய விதிகள், சமயம், நெறி,
இயல்பு, கடமை, தொழில்முறை போன்ற பல பொருண்மைகளில் கையாளப்பட்டு வருகிறது. இந்தியச் சமய, மெய்யியல் பள்ளிகளின் பயன்பாட்டில் ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு மெய்யியலும் அவர்களுக்கேயுரித்தான சிறப்புப் பொருண்மைகளில் பயன்கொள்ளப்பட்டு வந்துள்ளது. வேதநெறியில் ‘வருணாசிரம தர்மம்’ என்றும் பௌத்தநெறியில் ‘பௌத்த தர்மம்’ என்றும் சமண நெறியில் பொருளின் இயல்பு
‘தர்மம்’ என்றும் வாழ்வின் இயல்பு ‘புண்ணியம்’ என்றும் வேறுபல சமய –
மெய்யியல் புரிதலில் அவர்களுக்கே உரித்தான சிறப்பார்ந்த பொருண்மைகளிலும் இச்சொல் புழங்கப்பட்டு வந்துள்ளது.
‘நீதி’
என்னும் சொல்லும் வடமொழியிலிருந்து தமிழுக்கு கி.பி.6 நூற்றாண்டு வாக்கில் வந்த சொல்லாகும். இதுவும் மனுநீதி, அரசநீதி, நீதிநெறி போன்ற பல்வேறு பொருண்மைகளில் கையாளப்பட்டுவருகிறது. வடமொழி வழக்கில் பெரும்பாலும் ‘அரசநீதி’ என்னும் பொருளில் கையாளப்பட்டுவரும் இச்சொல், தமிழ்
வழக்கில் பெரும்பாலும் ‘ஒழுக்க நெறி’ என்னும் பொருளிலேயே கையாளப்பட்டு வருகிறது. ‘அறநெறி’
‘நீதிநெறி’ என்ற சொல்லாடல்களில் இரண்டுக்கும் பொதுவாய் ‘நெறி’ என்பது
நிற்பதும் அண்மைவழக்கில் ‘சமூகநீதி’ என்னும் பரந்துவிரிந்த பொருண்மையில் கையாளப்பட்டு வருவதும் கண்கூடு.
எனவே, அறம்,
தருமம், நீதி என்பன
ஒன்றின் கருத்தியல் வளர்ச்சி ஒவ்வொன்றும் இடம்பெற்றுத் தனித்த சிறப்பியல்புகளையும், குறித்த பொதுவியல்புகளையும் கொண்டு இலக்கியத் தமிழ் மரபிலும் இந்தியத் தத்துவ மரபிலும் வேர்கொண்டுள்ளன எனலாம்.
மேற்குறித்த நோக்குநிலைகளில் ஆழமான – துல்லியமான ஆய்வுமுடிகளை இக் கட்டுரை முன்வைக்கும்.
வைதீகத் தத்துவ
மரபில் தருமம், நீதி
தமிழில் ‘அறம்’ என்ற ஒரேசொல் குறிக்கும் இருபட்டகக் கருத்தியலை எடுத்துரைக்க வடமொழியல் தருமம், நீதி ஆகிய இரு சொற்கள் பயன்படுத்தப் படுகின்றன. இவ் இரு சொற்களும்கூட வைதீக மரபில் குறிக்கும் பொருண்மை வேறு;
அவைதீக மரபில் குறிக்கும் பொருண்மை வேறு என்பதையும் நினைவில் கொள்ளல் வேண்டும். வைதீக மரபில் தருமம் என்பது வருணாசிரம தருமத்தை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகிறது. வருணாசிரமத்தைக் கட்டமைத்து நிலைநிறுத்தியது மனுதரும சாத்திரமாகும். அரசியல் தருமத்தைச் சொல்லவந்த அர்த்த சாஸ்திரம்கூட மனுதரும நெறியினைப் பின்பற்றித்தான் நெறிகளை வகுத்துள்ளது.
மனுதரும சாத்திரத்தில் தருமம்,
நீதி
வைதீக மரபு மனிதர்களை பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நான்குவகையாகப் பிரித்து அவரவர்க்கென தொழில்தர்மத்தை நியமித்து அத்தொழில்வழிப் பிறப்போரை அந்தந்த வருணத்தார் என வரையறுத்து வலியுறுத்தி வந்தது. எனவே, மனுதருமத்தின் பார்வையில் ‘தருமம்’
என்றாலே வருணாசிரம தர்மம் என்றே பொருள்கொள்ளப்படுகிறது. ‘நீதி’ என்றாலோ வருணாசிரம தர்மத்தின்படிப் பின்பற்றுவதே ‘நீதி’ என்றும் பின்பற்றாமல் இருப்பது ‘அநீதி’ என்றும் பொருள்கொள்ளப்படுகிறது. எனவே, வைதீக
மரபில் ‘தருமம்’ எனப்படுவது ‘சட்டம்’ என்ற பொருளிலும் ‘நீதி’ என்பது
தருமநெறியில் நிற்பது அதாவது
அச்சட்டநெறியைப் பின்பற்றுதல் என்ற பொருளிலும் கையாளப்படுகிறது என்பது தெளிவு
(மநுதர்ம்ம சாத்திரம், 1990 : 294 -297)
பிறப்பின் அடிப்படையில் இவர்இவர் செய்யத்தகுவன, செய்யத் தகாதன
என வரையறுப்பது தருமம்; வரையறுத்த நெறிப்படி நிற்பது ‘நீதி’; வரைறுக்கப்பட்ட நெறியினின்று மாறியொழுகுதல் ‘அநீதி’
என்பதே வருணாசிரமதருமப் பார்வையாகும். இவ்வாறு, வரையறுக்கப்பட்டதிலிருந்து மீறிச் செயல்படும் பிராமணனுக்கு ஒரு தண்டனை;
பிறர் பிறருக்குப் பிறபிற தண்டனைகளையும் மனுதருமம் கூறுகிறது. தொழிலும்கூட பிராமணன், சத்திரியன், வைசியன் மூவருக்கும் இன்னின்ன தொழில்கள் உரியன என வரையறுக்கப்பட்டிருக்கிறது. ஆனால்,
சூத்திரனுக்கு மட்டும் தொழில்
சொல்லப்படவில்லை. அவன், பிராமணனுக்கு மட்டும் அடிமைப்பணி செய்துவர வேண்டியதெனக் குறிக்கிறது மனுதருமம்.
அவைதீக மரபில் தர்மம்
/தம்மம்
சமண தர்மத்தின் அடிப்படை : அஹிம்மைசயும் மும்மணிகளும்
சமண சமயத் துறவிகளும், இல்லற வாழ்வோரும் பின்பற்ற வேண்டிய ஒழுகலாற்று நெறிகளை வரையறுத்துக் கூறுவதே சமண அறமாகும். இச் சமண அறநெறிகள் இந்தியாவின் - உலகின் பல்வேறு சமய நெறிகளிலிருந்தும் முற்றிலும் மாறுபட்ட தன்மை
வாய்ந்தனவாய் விளங்குகின்றன.
‘அறம்’ குறித்த சமண வரையறைகளை இங்கு அலசுவது அவசியமாகிறது. ‘அருங்கலச் செப்பு’
கூறியிருப்பதாவது:
“அறம் எனில் பொருளின் இயல்பாகும். இங்கே
உயிர் இயல்பு
அறம் என்படுகிறது.” (அ.செ. 1997 : 21)
உயிரை ஒரு பொருளாகக் கருதி, உயிர் உள்ளன
(சேதன), உயிர் அல்லன (அசேதன) என்ற பகுப்புகளை உருவாக்கியது. சமணச்செய்யுளில் இவை அனைத்துக்கும் பொருளாக உள்ள எந்த ஒன்றுக்கும் - அவற்றுக்கேயுரித்தான இயல்புகள் உண்டு. அந்த இயல்புகளினின்று மாறுபட்டு நிற்கும் பொருள்களின் இயக்க நிலையை அதனதன்
இயல்புநிலைக்கே மீண்டும் கொண்டு
வருதலே ‘அறம்’ எனப்படுகிறது. எனவே மானுடமாகிய உயிர்ப்பொருளின் இயக்கநிலையின் இயல்புப்போக்கு அஹிம்சையே என்கிறது சமணம்.
“அகிம்ஸை அறத்தின் பிராணனாகும்; பிராணன் இல்லாமல் உயிர்
இல்லை. கடைக்கால் இல்லாமல் மாளிகை இல்லை,
வேர்; இல்லாமல் மரம் நிற்க
இயலாது. அதேபோல அஹிம்ஸை, தயை இல்லாமல் ‘அறம்’ எனும்
மாளிகை அல்லது மரம் நிலைக்க. இயலாது. தர்மஸ்ய மூலம் தயா,
‘தம்மோ தயா விசுத்தோ’ என்பன ஆசாரியர்களுடைய வாணியாகும். ‘தயை அறத்தின் வேராகும்’ தயையினால் அறம் விளக்கம் பெறுகிறது. எங்கே அஹிம்ஸை தயை இல்லையோ அங்கே அறம் தோன்றுவதில்லை. பிறகு அது காகிதப் பூ போல அறம் என்னும் சொல்லின் போலிவடிவம் ஆகும். அஹிம்ஸா பரமோ தர்ம: “அஹிம்ஸையே மிக உயர்ந்த அறம்”
(கல்லக் பார்சுவ கீர்த்தி வர்ணிஜீ., 1998: ஏஐஐ)
என்ற சமணப்
பேரறிஞர் பூஜ்யஸ்ரீ ஆர்ஜவசாகர் முனிவர் அவர்கள் விளக்கியுரைத்துள்ள கருத்துக்கள் இங்கு கருதத்தக்கன.
மானுடகுல வரலாற்றின்படி, தொடக்ககாலச் சமூகம்
காய்கனிகளைச் சேகரித்து உண்டு வந்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து, காய்கனிப் பற்றாக்குறை ஏற்படவே ‘மாற்று உணவுச் சேகரம்
தேவை’ என்ற நிலையில் விலங்குகளை வேட்டையாட ஆரம்பித்திருக்கிறது. இவ்வாறு விலங்கை இம்சைசெய்து உணவாக்கிய மானுடசமூகம் அதன் உச்சநிலையாக மனிதர்களையும் இம்மைசெய்யும் போக்கை
இயல்பாகவே மனிதர்களையும் இம்மைசெய்யும் போக்கை
இயல்பாகவே அடைந்திருக்கிறது. இத்தகைய சமூக வரலாற்றுப் போக்கில் இம்சை
தொடங்கப்பெற்றதன் காரணம் காய்கனிகளின் பற்றாக்குறையே என்பதால் அப்பாற்றாக்குறையை நீக்கினால் மானுட இயல்பான அஹிம்சை நிலைக்கும் என்பது ஒருதலை.
காய்கனிகளின் உற்பத்திக்கு அடிப்படையான உழவுத்
தொழிலும் பல உயிர்களின் அழிவுக்குக் காரணமாக இருப்பதால் அத்தொழிலையும் சமணம் புறந்தள்ளுகிறது என்பது
மறுதலை.
இத்தகைய கருத்துநிலைகளைக் கொண்டிருந்ததால்தான் சமணம் ‘வணிகர்களின் சமயமாக’ வளர்ந்து மிளிர்ந்தது. சமணத்தோடு முற்றமுழுதாக ஒப்புநோக்கத்தக்க வேறொரு
சமயம் எதையும் குறிப்பிடுவதற்கான மெய்யியல் இடைவெளியைச் சமணம் கொண்டிருக்கவிலலை. கடுமையான தவமுறைகளைப் பின்பற்றுதல் என்ற நிலையில் சமணத்தோடு நெருங்கத்தக்க சமயம்
எதுவுமில்லை என்பது இந்திய
மெய்யியல் வரலாறு கண்ட உண்மை. இக்கருத்தை,
“மனிதனுடைய மலர்ச்சிக்கு ஜைன தரும ஒழுக்கம் மிகவும் பயனுடையதாகும். அந்தத் தருமம்
மிகவும் இயற்கையானது, தனியானது, எளிமையானது, மிக மதிப்புடையது, பிராமணர் மதத்திலிருந்து வேறுபட்டது. இது பௌத்தர்களுடையதுபோல நாத்திகம் அன்று”.
(ஆர்ஜவ சாகர முனிவர்,, அ.இ : 354)
என்ற டாக்டர் ஏ.கிராநாட் என்பவரின் கருத்தும் வலிவூட்டுவதாக அமைகிறது. மேலும்,
சமண அறவியலுக்குப் பின்னணியாகவும், அடிப்படையாகவும் உள்ள சமண மெய்யியலின் சாராம்சத்தை அறிஞர்
நா.சுப்பிரமணியன் கீழ்வருமாறு தருகிறார்:
“உலகப் பொருள்கள் யாவற்றையும் சீவன்,
அசீவன் என இருவகைப்படுத்தி நோக்குவது சமணம். சீவன் என்பது பொதுவாக உயிரையும் அசீவன் என்பது
உயிரல்லாவற்றையும் குறிப்பதாகக் கொள்ளலாம். முற்றறிவுடையதான சீவன், அசீவனின் தொடர்பால் அந்த அறிவை இழந்து
துன்புறுகிறது. இத்துன்பத்துக்குக் காரணமாக அமைந்தவை கர்மங்கள். இக்கர்மத் தொடர்பினின்று சீவன்
தன்னை விடுவித்துக் கொண்டால் அசீவத்
தொடர்பினின்று விடுதலை பெறலாம். அவ்வாறு, விடுபட்ட நிலையில் அது தன் இயல்பான அறிவுமயமான நிலையை எய்திவிடும். இவ்வாறு விடுபடுவதற்குக் கடும் விரதங்களை அனுசரித்து உடலை வருத்திக் கொள்ள வேண்டும். இவையே சமண சிந்தனையின் சாராம்சம்”
(சுப்பிரமணியன்., நா.1996 : 20)
இக்கருத்துக்களிலிருந்து பிறவிவிடுதலைக்கான படிநிலை வாழ்க்கை ஒழுகலாறுகளைப் பின்பற்ற வேண்டுவதே சமண அறிவியலின் அடிப்படையாக அமைகிறது என்பது தெளிவு.
பௌத்த அறவியலில் நால்வகை வாய்மைகள் எவ்வாறு இன்றியமையா தனவாய் விளங்குகின்றனவோ அதுபோல் சமண அறவியலில் மும்மணிகள் இன்றியமையாதனவாய் விளங்குகின்றன. அவை, நற்காட்சி, நல்ஞானம், நல்லொழுக்கம் என்பன. பௌத்தத்தில் குறிப்பிடப்படும் அட்டாங்கமார்க் கத்திலும் இம்மும்மணிகள் இடம்பெற்றுள்ளன.
நற்காட்சியினின்று நல்ஞானமடைந்து அதன்வழியிலான நல்லொழுக்கப் பாதையில் நடைபோடுதலே சமண அறவியலின் சாரம்சம். இம்மும்மணிகளின் முழுநிலை வடிவமே சமண அறவியல் எனப்படுகிறது.
வீடுபேறடைவதற்கான முயற்சியின்போது கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், மேற்கொள்ள வேண்டிய நோன்புகள் என்பனவாகச் சில உயர்பண்புகள், ஒழுக்கநிலைகள் என்பவற்றைச் சமணம்
முன்வைத்துள்ளது. இச்செயன்மைகள் குறித்து அறிஞர்
நா.சுப்பிரமணியன் கூறுவன:
“நற்கடைப்பிடி, நல்லறிவு, நல்லொழுக்கம் என்பன அணுகுமுறைகள்: அஹிம்சை, பொய்யாமை, கள்ளாமை, பிரம்மச்சரியம், உலகைத்துறத்தல், கற்பு, உளநிறைவு என்பன நோன்புகள். இவற்றுள் பிரம்மச்சரியம், உலகைத் துறத்தல் எனபன துறவுநெறியினர்க்கும், கற்பு, உளநிறைவு என்பன
இல்லற நெறியினர்க்குமாகப் பேசப்படுபவை. இவையெல்லா வற்றிலும் முதன்மையானதும் யாவற்றிலும் பரவி நிற்பதுமான நோன்பு அஹிம்சை ஆகும்.
பிற உயிர்கள் எவற்றுக்கும் தீங்கிழைக்கக் கூடாது
என்பதும் இயன்றவரை அவற்றுக்கு நலம் புரிய
வேண்டும் என்பதும் அஹிம்சையின் உட்பொருளாகும்”.
(சுப்பிரமணியன்., நா.1996 : 20)
பௌத்த தம்மம்
: சொற்பொருள் விளக்கமும் தம்மத்தின் வேர்களும்
பௌத்த அறம் ‘தம்மா’
(னூயஅஅய) என்ற பாலிமொழிச் சொல்லால் குறிப்பிடப்படுகிறது. சிறப்புநிலையில் இச்சொல் பௌத்த
அறத்தைச் சுட்டுவதாக அமையினும், பொதுநிலையில் பௌத்த மெய்யியல் முழுமையையும் வெளிப்படுத்துவதாகவும் அமைந்திருப்பது எண்ணத்தக்கது. புத்தரின் அறக்கோட் பாட்டை
அர்த்த ஜாலம், தரும ஜாலம், பிரம்ம ஜாலம்,
திருஷ்டிஜாலம், சங்கிராம அனுத்தா விஜயம் என்ற சொற்களால் சுட்டுகிறது தீக நிகாயம் (1988:33). பொருள்
பொதிந்த – உயிரோட்டமான – காட்சித்தன்மையுடைய - இயல்புகளைப் பௌத்த தம்மம்
தன்னகத்தே கொண்டுள்ளதை இச்சொற்கள் உணர்த்துகின்றன. ‘தம்மா’
என்ற சொல்லுக்கு “யு னுiஉவழையெசல ழக டீரனனாளைஅ” கூறியுள்ள விளக்கம் கீழ்வருமாறு :
“தம்மா (பாலி): தர்மா
(சம்ஸ்கிருதம்) – பௌத்தம். பௌத்தத்தில் அடிக்கடி வருவதாகவும் பௌத்த மெய்யியலின் பல்வேறு இடங்களில், தொடர் புடையதாகவும் இச்சொல் விளங்குகிறது. இச்சொல்லுக்குப் பொதுப்படையான ஒரு பொருள்
இல்லை. ஆங்கிலத்தில் இதற்குச் சமயம், உண்மை, கொள்கை,
நேர்மை, நற்குணம், அணு, தன்மை, இயற்கை, சட்டம், முறைமை,
சொத்து. பிரத்தியட்சப்பொருள் எனப் பல பொருள்கள் உண்டு. இவற்றில் சில பொருள்கள் பொதுவாக இந்தியச் சமயங்கள் சார்ந்தனவாகும். மற்றவற்றைப் பௌத்தத்தில் (எ.டு) காணலாம். சம்ஸ்கிருத வேர்ச்சொல்லான “த்ர்”
என்பதற்கு, ‘சுமந்திருத்தல்’. ‘ஒர் அடித்தளம் அமைத்தல்’, ‘உயர்த்திப் பிடித்தல்’, ‘ஆதரவு தரல்’ போன்ற
பல பொருள்கள் உண்டு. புத்தகோஷர் தம் மொழிப்புரையில் ‘தம்மா’விற்கு
நான்கு வகையான பொருள்களைக் கூறுகிறார்: 1) நன்னடத்தையுடன் தொடர்புடையது, 2) அறநெறி சார்ந்த கருத்துரை, 3) புனித நூல்களிலுள்ள, புத்தர் சொன்ன கொள்கை, 4) பிரபஞ்சச் சட்டம். தம் தம்மசங்கணி பொழிப்புரையில் வேறுவித நான்கு பொருள்களை அவர் தருகிறார்: 1) கொள்கை 2) நிலை 3) அறத்தன்மை 4) அதிசய நிகழ்வு. இதனடிப்படையில் நோக்கும்போது பௌத்தத்தில் இதன் அடிப்படைப் பொருள்களாக கொள்கை, நன்னடத்தை, நிலை, அதிசய
நிகழ்வு ஆகியவற்றைக் கூறலாம். இவற்றுள் முதன்மையிடம் பெறுவது கொள்கை. இதன்மூலமாக புத்தரின் தம்மம் (தர்மம்)
புரிந்துகொள்ளப்படுகிறது. இது புத்த
திரிரத்னங்களான புத்தம், தம்மம்,
சங்கத்தில் ஒன்றாகும். இங்கு தம்மம் என்பது புத்தரால் அறிவிக்கப்பட்ட உலகளாவிய பேருண்மையைக் குறிக்கும். தம்மம் என்பது புத்தருக்கும் முந்தையதாகும். தம்மாவின் வரலாற்று உருவகம் மற்றும் வெளிப்பாடே புத்தர் எனலாம்.
(திரிகாயக் கொள்கை), புத்தர்கள் அவ்வப்போது தோன்றுவர். அவர்கள் வருவர், போவர். ஆனால்,
தம்மம் என்றும் இருக்கும். இந்நிலையில் தம்மம்
என்பது கிரேக்கக் கருத்துருவான ‘லோகோஸ்’ என்பதுடன் பொருந்திவருவதாகும்.”
(காண்க : மத்யாமிகா) (வுசநஎழச டுiபெ.,
1981 : 80-81)
தீக நிகாயத்தில் உள்ள ‘தம்ம சக்கப்
பவத்தன சூக்தம்’ என்ற பகுதிக்கு விளக்கம்தரும் ரைசு டேவிட்சு,
“தம்மம் எனப்படும் அறம் (தருமம்) என்ற சொல் வெறும் சட்டவடிவத்தைச் சுட்டவில்லை. மாறாக, வேறு எம்மொழியிலும் மொழிபெயர்க்க முடியாத உண்மை
– நேர்மை ஆகிய உயர் அறங்களைச் சுட்டி நிற்பதாகும். சுருங்கக்கூறின், தம்மம் என்பது
புத்தரின் கோட்பாட்டை முழுமையாக உணர்த்தி நிற்கின்றது”
(மேற்கோள், நெடுஞ்செழியன்., க.1988
: 95)
என்று கூறியிருப்பது மிகவும் பொருந்துவதாக உள்ளது.
புத்தரால் தம்மம் என்று
அழைக்கப்படுவது அடிப்படையிலேயே மதம் என்று
அழைக்கப்படுவதிலிருந்து வேறுபடுகிறது (அம்பேத்கர்., பி.ஆர்.1994 : 276).தம்மம் என்பது சமூக சம்பந்தப்படுவது அடிப்படையாகவும் சாராம்சத்திலும் தம்மம் சமூகவயப்பட்டது (அம்பேத்கர்.,பி.ஆர். 1994 : 277).அது தான் தோன்றிய காலம்வரையில் வளர்ந்துவந்த சமூக நிலவரங்களை முற்றிலுமாக மாற்றுகிற புதியதொரு கோட்பாடாக உருவாகியது என்பது தெளிவு. இவ்வாறு, சமூக மாற்றத்தைத் தன் இலக்காகக் கொண்ட தம்மம் தன் விளக்க முறையில் காரண
– காரிய இயைபுகளையும் முரண்களையும் தெளிவாக ஆராய்ந்து அறிவித்து ஆற்றுப்படுத்துவதாக உள்ளது.
இந்தவகையில் அறிவுத் தேட்டத்தின்வழியில் உண்மைத் தேட்டத்தையும், அதன்வழி நிப்பாணம் அடைவதற்குரிய படிநிலைகளை விளக்குவதையும் தம்மம்
தன் பொருண்மைக் கூறுகளாகக் கொண்டுள்ளது.
நம்பிக்கை, இலட்சியம் என்ற இரண்டு பொருண்மைகளைத் தம்மம் தனது வேர்களாகக் கொண்டுள்ளது. நம்பிக்கை என்பது மனிதகுலத்தின் அனைத்துத் துன்பங்களுக்கும், பிரச்சினைகளுக்கும், நோய்களுக்கும் முடிவுகட்டுவதற்கான வழிமுறைகளைத் தம்மம் செயல்பாட்டளவில் போதிக்கிறது என்பதில் உறுதியாய் இருப்பது. இலட்சியம் என்பது துன்பங்களின் தோற்றுவாயாய் உள்ள அவற்றின் மூலவேர்களை அறியாமல் இருக்கும் அறியாமையை நீக்குவது.
தம்மத்தின் வேர்களாய் விளங்கும் இவற்றைப் பற்றிப் புத்தர் கூறுவதாவது:
“என் தம்மம் தன்னில் நம்பிக்கை, இலட்சியம் இரண்டையுமே கொண்டதாயுள்ளது” . “அதன் இலட்சியம் அவிஜ்ஜாவை நீக்குவதாகும் அவிஜ்ஜா என்பதற்குத் துன்பத்தின் இருப்பை அறியாமை என்று நான் பொருள் கொள்ளுகிறேன்”. “அதில் நம்பிக்கை இருக்கிறது. ஏனெனில் அது மனிதகுலத் துன்பத்திற்கு முடிவு
கட்டுவதற்கான வழியையும் காட்டுகிறது”.
(அம்பேத்கர்., பி.ஆர்., 1994 : 112)
அவிஜ்ஜா எனப்படும் அறியாமையைப் போக்கித் துன்பத்தின் இருப்பையும் அவற்றின் மூல காரணங்களையும் அறிந்துகொண்டு துன்பநீக்கவழிகளெனப் பௌத்தம் போதிக்கும் செயன்மைகளைக் கையாண்டு நிப்பாணம் என்னும் பிறவாப் பெருநெறி உய்வதையே பௌத்த தம்மம்
வலியுறுத்துகிறது.
இலக்கிய தமிழ்
மரபில் அறம்
அறம் என்ற சொல்: விளக்கம்
அறம் என்ற சொல்லுக்குக் கடமை, நோன்பு,
தருமம், கற்பு, இல்லறம், துறுவறம், நல்வினை, அறநூல்,
அறக்கடவுள், தருமதேவதை, தீப்பயணுண்டாக்குஞ்சொல் ஆகிய பொருள் விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன(கழகத்
தமிழ் அகராதி., 1985 : 59).
‘அறு’ என்னும் வினைச்சொல் அடியாகப் பிறந்ததே ‘அறம்’
என்னும் சொல்லாகும். ‘அறு’ என்னும் அடிச்சொல்லிற்கு ‘அறுத்துச் சொல்’, வழியை உண்டாக்கு’, ‘உருவாக்கு’இ ‘தூண்டி’,
‘வேறுபடுத்து” என்ற பலவகைப் பொருள்கள் வழங்கி வருகின்றன. ‘அம்’ எனும் தொழிற்பெயர் விகுதி சொல்லமைப்பியல் ஆராய்ச்சியின் அடிப்படையில், மனிதன்
தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்கமுறைகளின் தொகுதியே-முழுநிறை வடிவமே – அறம் என்று கூறுவர்(மேலது., 23). மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்டதோடன்றி, அவ்வக்காலத்தில் ஆளுவோர் மற்றும் சமயங்கள் வகுத்துக் கொடுத்தவையும் ‘அறம்’ எனப்பட்டன என்பது கருதத்தக்கது.
‘அறம்’ என்ற சொல் தோன்றுவதற்கு முன்பும் பின்பும் இச்சொல்லைக் குறிக்கும் பல சொற்கள் வழக்கத்தில் இருந்தன. அவை பழமொழி, முதுமொழி, மூதுரை,வாயுறை வாழ்த்து, நன்று, நன்றி,நன்மை,
நல்லது, முறை, முறைமை,
நயம், நன்னெறி, நெறி,
ஒழுக்கம், கடமை, புண்ணியம், ஈகை, அறக்கடவுள், சமயம் ஆகியவையாகும். திட்டவட்டமான அல்லது நுட்பமான பொருள் வேறுபாடுகள் இருப்பினும், இச்சொல்லிற்கான பொருள்மீட்சியை மேற்குறித்த சொற்கள் தெளிவுபடுத்துகின்றன. ‘பிற்காலத்தில் வடமொழிக் கலப்பால் ‘நீதி’ என்ற சொல்லும் வேரூன்றியது. இச்சொல் கி.பி.ஆறாம் நூற்றாண்டு அளவிலேயே தமிழ்மொழியில் இடம்பெற்றது என்பர்(மேலது., 1977 : 16). அறம், நீதி என்ற இவ்விரண்டு சொற்களும் அறநெறி, நீதிநெறி என்றவாறு அமைவதிலிருந்தே இரண்டுக்குமான பொதுமைப் பண்பை அறியமுடியும்.
நம்முடைய முன்னோர்கள் ‘அறம்’ என்ற சொல்லிற்குத் தந்துள்ள விளக்கத்தோடு ‘எதிக்ஸ்’(நுவாiஉள) என்னும் ஆங்கிலச் சொல்லிற்குத் தரப்படும் பொருள் விளக்கம் மிகவும் பொருந்துவதாக இருக்கிறது.
‘இச்சொல் எதோசு’ (நுவாழள)
என்னும் கிரேக்க வேர்ச்சொல்லிருந்து தோன்றியது. இவ் வேர்ச்சொல் முதலில் பழகிப்போன நடத்தை, வழக்கம், மரபு என்னும் பொருள்களை உணர்த்திவந்தது. நாளடைவில் ‘எதிக்ஸ்’ என்பது ‘ஒழுக்கத்தைப் பற்றிய அறிவியல் கலை’ என்று
போற்றப்படும் நிலையை அடைந்துள்ளது(மேலது., 1977 : 24-25). மேற்கண்ட சொற்பொருள் விளக்கத்திலிருந்து தனிமனிதன், சமூகம், சமயம், அரசு இவற்றிற்கான ஒழுகலாறுகளை ‘அறம்’ என்றனர் என்பது தெளிவாகும்.
அறம் என்ற கருத்தாக்கம்;;
மனிதகுல வரலாறு அவ்வப்போது பல குழப்பங்களைச் சந்தித்து வருகிறது. அனுபவத்திலிருந்து பல நெறிகளை உருவாக்கிக்கொண்டு அவைகளிலிருந்து மீண்டுவருகிறது. மனிதர்கள் ஒன்றுசேர்ந்து வேட்டையாடியபோது ஒலிக்குறிப்புகளின்மூலம் செய்தியைப் பகிர்ந்துகொண்டனர். அது வேட்டைக்கான நல்ல சூழ்நிலையை; வழியை உருவாக்கிக் கொடுத்தது. பின்னர், அவ் ஒலிக்குறிப்புகளிலிருந்தே மொழி உருவாகி வளர்த்து. மொழி உருவானதற்குப் பிறகுதான் மனித வாழ்க்;கை குறிப்பிடத்தக்க மேன்மையை அடைந்தது. வேட்டையில் ஒலி பெற்ற
இடத்தை மொழி பெற்றதும் வழிகளில் தெளிவு ஏற்பட்டுச் ‘செயல்நெறி’ உருவானது. மேலும்
மேலும் நுணுக்கமாக வளர்ந்தது. இச் செயல்நெறி வாழ்க்கை அமைப்பிலும் ஏற்பட்டது. இதனை ‘ஒழுக்கநெறி’ என்றனர்;. ‘ஒழுக்கம’; ‘ஒழுகு’ என்னும் சொல்லிற்கு ‘இடையறாது கடைப்பிடித்தல்’ என்பது
பொருள். இடையறாது நீர் ஒழுகுவதை ‘ஒழுக்கு’ என்று
கூறுவதைப்போல் வாழ்க்கையில் உயர்ந்தவையெனக் கருதப்படும் நெறிமுறைகளை எக்காலத்தும், எவ்விடத்தில் இடையறாது மேற்கொண்டொழுகுவதையே ‘ஒழுக்கம்’ என்பர்(திருநாவுக்கரசு., க.த.
1977 : 20 ). ஒழுகலாறாகிய செயலுக்கு அடிப்படையாக இருப்பது எண்ணமாகும். எண்ணம் தூய்மையாக இருந்தால்தான் சொல்லும் செயலும் தூய்மையாக அமையமுடியும். எனவே,
எண்ணம் தூய்மையாக இருக்க வேண்டுமானால் எண்ணத்தின் எழுச்சிக்கும் நிலைக்களனாக உள்ள மனம் மாசு இல்லாததாக இருக்கவேண்டும். மனம் மாசற்றுத் தூய்மையாக இருக்கும் நிலையே ‘அறம்’ எனப்படும்(மேலது., 26).
திருக்குறளுக்கு உரை எழுதிய
பரிமேலழகர், ‘அறமாவது மனு முதலிய
நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழித்தலுமாம். அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம்
என மூவகைப்படும். அவற்றுள் ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரியம் முதலிய
நிலைகளில் நின்று அவ்வவற்றிற்கு ஓதிய அறங்களில் வழுவாது ஒழுங்குதல்’(மேலது., 23) என்று விளக்கியுள்ளார். இதில்
மனு,வருணத்தார், பிரமசரியம் என்பவற்றை வலியுறுத்துவதால் வைணவச் சார்புடன் திருக்குறளை அடக்க முயற்சிக்கிறார் என்பது
தெளிவாகிறது.
முன்னாளில் வாழ்ந்த சான்றோர்கள் பலர் அவர்கள் உலக வாழ்வை உற்றுநோக்கி நுணுகிக் கண்டதை உன்னிப்பாகச் சிந்தித்து, மானிட நடத்தையின் நெறிமுறைகளைத் தேர்ந்து தெளிந்தனர். அவை பழமொழிகளாகவும், நீதி ஓதும்
குட்டிக் கதைகளாகவும் (Pயசயடிடந) வடிவம் பெற்றன. அனுபவ
மெய்ம்மைகளின் பெட்டகமாக ஒளிர்ந்த அவை, எல்லா நலமும் பெற்று
இன்பமாய் வாழ்வதற்கு ஏற்ற வழிகாட்டியாக அமையும் என்று
அச் சான்றோர் நம்பினர். ‘இந்தச் சான்றோர் நெறிக்கு அடிப்படையாகத் துலங்கியது ஒரு நம்பிக்கை, என்றுமுளதாகிய முறைமை
ஒன்று -இறைமைக்கு உரியது - இந்த உலக வாழ்வை இயக்குகிறது என்பதே அது(இராமகிருஷ்ணன்.,எஸ்.1980
: 23) என்ற கருத்தும், ஆயிரத்தெழுநூறு ஆண்டுகட்கு முன்பு ரோமாபுரியில் இயற்றப்பட்ட ஜஸ்டீனியன் சட்டத் தொகுப்பில் (ஐளெவவைரவநள ழக துரளவinயைn) ‘இயற்கை
நெறியாகிய அறம் இறையாற்றலால் தோன்றியது எல்லா நாட்டினராலும் பொதுவாகப் போற்றிக் காக்கப்படுவது; என்றும் மாறாத நிலைத்திருப்பது (மேலது., 1977 : 31) என்ற கருத்தும், வாழ்க்கையிலிருந்து தோன்றிய நெறியே
அறநெறி என்பதை மறந்து
அதற்கு இறைத்தன்மையையே உருவாக்குகிறது. இத்தகைய பின்னணியில் தோன்றியதே ‘அறம்’ என்ற கருத்தாக்கமும் கோட்பாடுமாகும்.
‘ஒரு மனிதன் சமூகத்தைச் சேர்த்து வாழ்வதற்கும் அல்லது தனியே நின்ற தனிமனிதனாக இயங்குவதற்கும் அத்தகைய மனிதனுடைய பண்புநலன்களை உருவாக்கிவைக்கும் குறிக்கோள்களுக்கும், நோக்கங்களுக்கும், செல்வாக்குகளுக்கும், நிலையங்களுக்கும், ‘அறம்’ என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. நேர்மையான வாழ்க்கை வாழ்வதற்குரிய சட்டமாக அறம் விளங்குகிறது. அதை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதன் பயனாக இம்மையில் இன்பமும் மறுமையில் வீடுபேறும் அடைய முடியும் என்று நம் முன்னோர்கள் நம்பினர். அது ஒழுக்க இயல், சமயம்
ஆகிய இரண்டும் இணைந்த
ஒன்றாகக் காணப்படுகிறது. தனிமனிதனுடைய உரிமைகளும், கடமைகளும், சமூக இணைப்பும்,பழக்கவழக்கங்களுக்கும், விருப்பு-வெறுப்பு என்னும் இயல்புகளுமாகிய அனைத்து அறத்தின் கோட்பாட்டினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன(மேலது., 1977 : 48-49). என்றாலும், இவ் அறக்கோட்பாட்டை உருவாக்கவதும், வழிநடத்துவதும் சமூகத்தின் பொருளாதார உறவுமுறைகளே என்பதை, ‘அரசியல், நீதி, மெய்யியல், மதம், இலக்கியம், கலை ஆகிய எல்லா அம்சங்களின் வளர்ச்சியும், பொருளாதார வளர்ச்சியை அடித்தளமாகக் கொண்டிருக்கிறது. ஆனால்,
இந்த மேல் கட்டுமானத்து அம்சங்கள் எல்லாம் சேர்ந்து ஒன்றின்மேல் ஒன்று வினையையும், எதிர் வினையையும் விளைவித்துக் கொண்டிருப்பதோடு பொருளாதார அடித்தளத்தின் மீதும் வினைப்படுகின்றன( பாலசுப்பிரமணியம்., 1987 :60) என்ற கருத்து வெளிப்படுத்தும். இவ்வாறு பொருளாதார வளர்ச்சியை அடித்தளமாக வைத்தே மனிதனின் அனைத்து வெளிப்பாடுகளும், செயல்பாடுகளும், கோட்பாடுகளும் அமைகின்றன. ஆகையால் பொருளாதார வளர்ச்சியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்போர் கருத்துக்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றனர்.
பொருளாதார வளர்ச்சியால் சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களை நெறிப்படுத்துவதே ‘அறம்’ என்பதன் தலையாய நோக்கமாக அமைகிறது. இந்நோக்கம் தெரிந்தோ தெரியாமலோ சில நேரங்களில் ஆள்வோர்க்குச் சாதகமானதாய் அமைந்துவிடுகிறது. எனினும், சமூக வளர்ச்சியில் அறம் என்ற கருத்தாக்கம் அல்லது கோட்பாடு வகிக்கும் பாத்திரத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது. இந்தவகையில், நெறிப்படுத்துதல்வழிச் செம்மைப்படுத்துதலும் என்பது
அறக்கோட்பாட்டின் அடிப்படை நோக்கமாகிறது எனலாம்.
காலமும் தேவையும்
தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்கம் மருவிய காலம்
என்றும், சமூக வரலாற்றில் களப்பிரர் காலம் என்றும் குறிக்கப்படுகிற காலப்பகுதியை ஒட்டுமொத்தமாக வரலாற்றாசிரியர்கள் இருண்டகாலம் (னுயசம யுபந) என்று
சுட்டுகின்றனர். இக் காலப்பகுதியின் வரலாற்றை எழுதுவதற்கான தெளிவான சான்றுகள் போதியஅளவு கிடைக்காததாலேயே இக்காலம் ‘இருண்டகாலம்’ என்று குறிப்பிடப்பட்டது. இவ்வாறு தெளிவான வரலாற்றுச் சான்றுகள் கிடைக்காமல் போவதற்கு இடைக்காலப் பகுதியில் ஏற்பட்ட அரசவழி, சமயவழி, சமூகவழிப் பூசல்களும், மோதல்களுமே காரணங்களாக அமைந்தன.எனவேதான், அரசு, சமயம்,
சமூகம் இம் மூன்றுக்கான செயல்வரைமுறைகள் ‘சமூக அறங்கள்’ என்று அழைக்கப்பட்டன. இவற்றில் தனிநபர், அரசு, சமூகம் என மூன்று வகையான ஒழுகலாறுகள் மூலமாகச் சமூகத்தைச் சமநிலைத்தன்மை கொண்டதாக்கவும், சமூகத்தில் எழும் பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு
காணவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு சமூக வரையறைகளையும், தனிமனித ஒழுகலாறுகளையும், அரச நெறிகளையும் கொண்டு அற இலக்கியங்கள் தோன்றலாயின. இவை அன்றைய
சமூகத் தேவையாகவும் இயல்பாகவம் இருப்பினும் இவ் அறக்கருத்துக்கள் சமூகத்தில் சரியான பிடிமானத்தோடு பரவிடவும், பரப்பிடவும் பௌத்த,
சமண சமயங்கள் பெரும்பங்காற்றின. சமய அறநெறிகளைச் சமூக அறநெறிகளாக அற இலக்கியங்கள் உள்வாங்கி வெளிப்பட்;டன. இம் முயற்சிகளில் சமயங்களுக்குக் குறிப்பாகப் பௌத்தம் மற்றும் சமணத்திற்குப் பெரும்பங்கு உண்டு.
சமூகத்தின் இயல்பான தேவையையொட்டி எழுந்த பல்வேறு அறக்கருத்துக்கள் தனித்தன்மை கொண்டதாகவும், சமயச் சார்புத்தன்மை கொண்டதாகவும் வெளிப்பட்டன. இக்கருத்துக்களின் ஊடகமாக இலக்கியங்கள் செயல்பட்டன.; எனவே இவ் இலக்கியங்கள் அனைத்தும் பொதுவாக அறஇலக்கியங்கள் என அழைக்கப்படலாயிற்று.
சங்க காலத்தில் ஐந்து திணைகளுக்கான வாழ்க்கையிலும் சிற்றின்ப நுகர்ச்சி, மதுவுண்ணல், பரத்தையர் ஒழுக்கம், புலால்
உண்ணல் ஆகியவை குறிப்பிட்டத்தக்க இடத்தைப் பெற்றிருந்தது. இந்நிலை அக்கால
ஒழுக்கமாகவே கருதப்பட்டது. இதற்குக் காரணம்
அன்றைய ‘உபரி உற்பத்தி’ என்பதே ஆகும். அதுமட்டுமல்லாமல், பெண்ணை
ஒரு போகப் பொருளாகவே கருதியதும் ஒரு முக்கியக் காரணமாகும். பூமி,நதி, வானம் போன்ற பலவற்றிற்;கும் பெண்மைப் பெயரையே சூட்டியதும் இத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டியதாகும். ஆண்களின் இப்படிப்பட்ட செயல்களால் குடும்பங்களுக்குள் குழப்பம் ஏற்படலாயிற்று. இக் குடும்பக் குழப்பம் வளர்ந்து சமூகக் குழப்பமாகக மாறியது. இதுவரை கருதிவந்த ஒழுக்கம் என்பதற்கு மாறுதலான பொருள் உருவாக
வேண்டியிருந்தது. இப்பொழுதுதான் பரத்தையர் ஒழுக்கம், சிற்றின்ப நுகர்ச்சி, மதுவுணண்ணல் ஆகியவற்றைக் கண்டித்து அறநூல்கள் பேசின.
மேலும், சங்க காலப்
போர் முறையிலான வாழ்க்கை சமூகத்திற்குள் கசப்பை
உருவாக்கியது. ஏராளமான பெண்கள் கணவனை இழந்து விதவையாயினர். அரசனையும் பாதுகாப்பதற்காகச் சென்றவர்களின் குடும்பத்திற்குப் பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியது. இந்த பூசல்களும் போர்களும் இதை உருவாக்கியது. எனவே, குடும்ப அமைப்பிற்கும், வளர்ந்து வரும்
வணிக சமூகத்திற்கும் வேண்டிய அமைதியான சூழலை ஏற்படுத்த வேண்டியது அன்றைய
காலத் தேவையாய் இருந்தது. இத்தேவையை இற இலக்கியங்கள் பூர்த்தி செய்தன. இதே காலத்தில் தமிழகத்தில் பரவிய பௌத்த, சமண சமயங்களும் இக் காலத் தேவையை
ஒட்டி இயல்பாகவே பங்காற்றின.
அற இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
உயிர், உலகம், வாழ்க்கை இவை பற்றி அறிவாராய்ச்சி இந்தியாவில தோன்றியது. இதையொட்டி உபநிடதங்களும், பௌத்த,
சமண தத்துவ நூல்களும் தோன்றின. கிரேக்கம், ரோமாபுரி, சீனா போன்ற நாடுகளிலும் மெய்ப்பொருள் ஆராய்ச்சி, கணக்கிடல், வானியல், பௌதிகம், அளவையியில், அறவியல் போன்றவை தோன்றின. இத்தகைய ஒரு குறிப்பிட்ட காலப்பரப்பை ‘தத்துவ ஞானிகளின் காலம்’ (வுhந Pநசழைன ழக வாந Phடைழளிhநசள) என்று குறிப்பிடப்படுகிறது. தமிழில் நீதி இலக்கியம் என்ற பொதுப்பெயர் கொண்டு சுட்டப்படுகிறது. குறிப்பாக ‘அற இலக்கிய காலம்’ என்று
குறிப்பிடப்படுகிற காலத்தில் தோன்றிய பதி;னெண்கீழ்க்கணக்கு நூலகளில் ‘நீதி’
என்ற சொல்வழக்கு காணப்படவில்லை. ஆனால்
‘அறம்’என்ற சொல்லும், சொல் தொடர்ச்சியும் இந்நூல்களில் ஏராளமான இடங்களில் கையாளப்பட்டுள்ளன. இதைக்கொண்டு இந் நூல்களைக் குறிப்பாக ‘அற இலக்கியங்கள்’ என்றும் இந்நூல்களுக்குப் பின்னர் தோன்றிய நூல்களையும் இவற்றையும் சேர்த்துப் பொதுவாக நீதி இலக்கியங்கள் என்றும் அழைக்கிறோம்.
‘உலக நாடுகள் பலவற்றிலும் கி.மு.8,7,6 ஆகிய நூற்றாண்டுகளிலேயே அற இலக்கியங்கள் அல்லது நீதி இலக்கியங்கள் தோன்றிவிட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. (மேலது., 1977 : 37). இதைவைத்துப் பார்த்தால்; அறம் அல்லது நீதி என்ற கோட்பாட்டுக்கான தோற்றுவாய் நீண்டகாலப் பாரம்பரியத்தை உடையது
என்பதைக் கணிக்கலாம். இது மனித குலத்தில் மொழிதோன்றி ஓரளவு
செப்பம் அடைந்ததிலிருந்தே தோன்றியிருக்க வேண்டும் என்று
கருதலாம். ‘குறிப்பிட்ட மக்களினத்தார் வாழ்ந்த இடத்திற்கும் அதன் தட்பவெப்பநிலைகளுக்கேற்ப, அவர்களிடையே புறத்தூண்டுதல்கள் (ளுவiஅரடi)
தோன்றின.அப் புறத்தூண்டுதல்களுக்கேற்ற எதிர்;செயல்களாக (சுநளிழளெந) அவர்களுடைய சிந்தனை வளர்ச்சியும் வாழ்க்கைமுறைகளும் அமைந்தன. இத்தகைய சூழலில்தான்;, பல்வேறு நாடுகளிலும் குறிப்பிட்ட ஒரு காலத்தில் நீதிநூல்கள் தோன்றின(மேலது., 1977 :118-119) என்ற கருத்தைக் கவனத்தில்கொண்டு பார்;க்க வேண்டும்.
வாழ்வின் அடிப்படை நிலைக்களன்களாக காதல்,
போர், சமுதாயம், அரசியல் முதலியன அமைந்திருந்தன. இவற்றில் சிக்கல்களும் முரண்பாடுகளும் தோன்றின. இவற்றைச் செம்மைப்படுத்த எண்ணியபோதே அறக் கருத்துக்கள் மலர்ந்தன(கந்தசாமி., ஆ. 1981 : 452) என்று குறிப்பிடுகிறார் ஆ.கந்தசாமி.
இது இப் படித்தான் இருக்கவேண்டும், மாறுபட்டு நின்றால் சமூகம்
சீரழியும் என்ற கருத்து உருப்பெற்றது முதலே நெறி என்பதும் அறம் என்பதும் தோன்றிவிட்டன என்று உறுதியாகக் கூறலாம். இவ்வாறான சூழலில் மொழி பேச்சுவடிவத்திலிருந்து எழுத்து வடிவத்திற்கு மாறியிருக்க வேண்டும். இவ் எழுத்து வடிவத்தின் வளர்ச்சியின் விளைவாய்ப் ‘படைப்புகள்’ உருவாகின எனலாம்.
படைப்புகளும் இலக்கியப் படைப்பால் வாழ்க்கை நெறிகள் வகுக்கப்படுவதும், நெறிதடுமாறிச் சமூகம் செல்லும்பொழுது வாழ்க்கை நெறிகளையே ‘அறம்’ என்ற பெயரால் வற்புறுத்துவதும் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. இவ்வாறு, படைப்பின் உள்ளடக்கங்களைத் தீர்மானிப்பது அவ்வக்
காலத்தின் திட்டவட்டமான சூழ்நிலைகளே ஆகும்.
இப்படிப்பட்ட சூழ்நிலைகளின் பின்னணியில்தான் ‘அற இலக்கியங்கள்’ தோன்றின. இவற்றை
உருவாக்குவதில் சமூகம், சமயம்,
புலவர்கள் என்ற மூன்று
நிலைகளும் குறிப்பிடத்தக்கப் பங்கைச் செலுத்தியுள்ளனர்.
அறநூல்கள் தோன்றுவதற்கு முன்
‘வாழ்க்கைநெறிக் கொள்கைகளை முழுமையாக விளக்கும் அற நூல்கள் தோன்றுவதற்கு முன்னர், உலகின் பல்வேறு பகுதிகளில் வழக்காற்று ஒழுக்க நெறியைச் (ஊரளவழஅயசல ஆழசயடவைல) சிறப்பாக விளக்கும் மூதுரைகளும், முதுமொழிகளும், பழமொழிகளும் தோன்றிப் படிப்படியாக வளர்ந்துள்ளன. இதைப்
போன்றே நம் தமிழகத்திலும் ஒப்புயர்வற்ற அற நூலாகிய திருக்குறள் தோன்றுவதற்கு முன்பு முதுமொழி, பழமொழி, வாயுறை வாழ்த்து போன்ற அறநெறியுணர்த்தும் செய்யுள் வகைகள்
தோன்றியிருத்தல் வேண்டும்(மேலது.,
1977:8) என்று க.த.திருநாவுக்கரசு குறிப்பிடுவது எண்ணத்தக்கது. இக்கருத்தை,
நுண்மையும் சுருக்கமும் ஒளியுடை மையும்
எண்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக்
குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்
ஏது நுதலிய முதுமொழி யென்ப (தொல்.செய்.177)
வாயுறை வாழ்த்தே வயங்க
நாடின்
வேம்புங் கடுவும் போல வெஞ்சொல்
தாங்குத லின்றி வழிநனி
வயக்குமென்(று)
ஓம்படைக் கிளவியின் வாயுறுத் தற்றே
(தொல்.பொருள்.424)
ஆகிய இரண்டு
நூற்பாக்களும் முதுமொழி, வாயுறை
வாழ்த்து இரண்டனது இலக்கணம் இயம்புவதன்மூலம் அறியலாம்.
சங்க இலக்கியத்திலும்,
பல்லோர் கூறிய பழமொழி
யெல்லாம் (அகநா.66.5)
செவிசெறு வாக முதுமொழி நீரா (கலி.698)
முன்னை மரபின் முதுமொழி முதல்வா (பரி.3:4)
போன்ற தொடர்களில் பழமொழி, முதுமொழி என்ற சொல்லாட்சியைக் காண்கிறோம். எனவே, பழமொழி, முதுமொழி, வாயுறை
வாழ்த்து என்பவை ‘அறம்’
என்பது தோன்றுவதற்குமுன் வழக்கிலிருந்திருக்க வேண்டும் என்பதை
தெளிவாக்குகிறது.
தமிழ் அறத்தின் ஊற்று கண்கள்
சங்க காலப்
புறவாழ்வியல் பெரிதும் தனிமனித, சமூக, அரச அறநெறிகளின் சிதைவையே காட்டுகின்றன எனலாம். இச் சிதைவைக் சரிசெய்யவே புலவர்கள் அறநெறிக் கோட்பாட்டை வளர்த்தெடுத்துள்ளனர். எனினும், அக்கால
அரசு, சமூகம் ஆகியவற்றின் தன்மையினால் உறுதியாக எடுத்துரைக்க இயலாமை இருந்ததையும் காணமுடிகிறது. இந்நிலைகளே அற இலக்கியங்களான பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பெருக
இடமளித்தன எனலாம். அதாவது,
அற இலக்கியத்துக்கான ஊற்றுக்கண் மற்றும் வளர்ச்சி நிலையைச் சங்க இலக்கியங்களில் காண்கிறோம் என்று உறுதியாகச் சொல்லலாம்.
தமிழ்ச் சமூகத்தில் அறஇலக்கிய வகைமை ஒன்று
குறைந்தது நான்கு நூற்றாண்டுகளுக்கு வளர்ந்திருக்கிறதென்றால், அதற்கு
முந்தைய காலகட்டத்தைக் கவனமாகப் பரிசீலிக்கவேண்டியுள்ளது. சங்க இலக்கிய காலமே அவ்வாறு பரிசீலிக்கப்பட வேண்டிய காலகட்டமாகும்.
குலச்சமூகத் தலைமை வாழ்க்கைமுறையிலிருந்து அரசு சமூகத்
தலைமை வாழ்க்கைமுறை உருவாகிவந்த காலம்
சங்க காலம். அரசுகளுக்குள் நூற்றாண்டுக் கணக்கில் நடந்துவந்த ஆட்சி எல்லை விரிவாக்கம், பாதுகாப்பு, பொருள்கவர்சார் நடவடிக்கைகள் ஆகியவற்றை அடியொற்றிய போர்ச்சூழல் நிரம்பிய சங்ககால வாழ்க்கைமுறை சமூகத்திற்குள் கசப்பை
உருவாக்கியது. சிற்றின்ப நுகர்ச்சி, கள்ளுண்ணல், புலால் உண்ணல், பரத்தையர் ஒழுக்கம் ஆகியவை சமூக அங்கீகாரம் பெற்றுநிலவின. அதுமட்டுமின்றி, இவற்றையெல்லாம் ‘ஒழுக்கம்’ என்றே குறித்தனர். ‘ஒழுகுவது ஒழுக்கம்’ என்ற வரையறையினின்று ‘ஒழுங்குடையது ஒழுக்கம்’ என்ற வரையறையை உருவாக்க வேண்டிய காலக் கட்டாயம் அக்காலத்தில் இருந்து வந்தது. இத்தகைய சங்ககால வாழ்நெறிச் சிதைவிலிருந்து ஒழுங்கமைப்பதற்குரிய நடத்தைநெறிகளை அச் சமூகமே உருவாக்கிக் கொண்டது. இவ்வாறு, சமூகத்தின் தேவையையொட்டித் தன்னியல்பாகத் தோன்றிய அறநெறிக் கோட்பாடுகள் சங்ககாலத்தில் வழங்கலாயின. புறநானூற்றில் இடம்பெற்றுள்ள பொதுவியல் திணைச்
செய்யுட்களிலும், அகம், புறம்
தொடர்பான அனைத்து நூல்களிலும் இத்தகைய போக்கைக் காணமுடிகிறது.
போர்நெறியோடு வைதீகநெறியும் ஒருங்கிணைந்து செயலாற்றி வந்ததால், போர்மறுப்பும், வைதீகமறுப்பும் சங்ககாலப் போக்கிற்கான மாற்றுநெறியை முன்வைக்கும் செயன்மைக் கூறுகளாக முன்வந்தன. போர், வேள்வி ஆகியவை கொல்லாமையையும், போர்க்காலச் சூறையாடல், பிறவழிப் பொருள்கவர்தல் ஆகியவை
கள்ளாமையையும், இயல்பான மெய்சிதைவு பொய்யாமையையும், போர்க்காலப் பெண் அபகரிப்பு, காம மிகுதியால் பிறன்மனை கவர்தல் ஆகியவை
பிறன்மனை நயவாமையையும் என்று ஏராளமான அறநெறிகளை உருவாக்கிக்கொள்ள வேண்டியதாகச் சங்க காலச் சமூகம்
இருந்தது. இதே காலகட்டத்தில்இந்திய மெய்யியல் தளத்தில் மறுமலர்ச்சியை உருவாக்கிவந்த வைதீக
வேள்விநெறி எதிர்ப்புச் சிந்தனைப் பள்ளிகளான பௌத்தம், சமணம் போன்றவையும் மேற்குறித்த அறநெறிக்கோட்பாடுகளையே முன்வைத்தன. எனவே, பௌத்த, சமணசமயங்களின் தமிழகவருகையும்,சங்ககால வாழ்நிலைகளில் இருந்து எழுந்துவந்த புதிய அறச்செல்நெறிகளும் ஒன்றையொன்று வளப்படுத்தவும், வழிப்படுத்தவும் செய்தன
என்பது தெளிவாகிறது. இவ் அறக் கோட்பாடுகளில் தமிழ், பௌத்தம், சமணம்ஆகிய சிந்தனை மரபுகளின் செவ்வி;யல் அறக்கோட்பாட்டுப் பண்புகள் மிகுந்துள்ளன.
சமயச்சார்பற்ற இலக்கியமான புறநானூற்றில் இடம்பெறும் பொதுவியல் திணையின் துறைகளாக பொருண்மொழிக்காஞ்சி, முதுமொழிக்காஞ்சி, செவியறிவுறூஉ போன்றவையும், பாடாண்திணையின் துறையான இயன்மொழி, வாகைத் திணையின் துறையான பார்ப்பனவாகை போன்றவையுமே தமிழ்
அற இலக்கியங்களின் தோற்றுவாய்களும் ஊற்றுக்கண்களுமாக விளங்கியுள்ளன எனில் அது மிகையில்லை.
தனிமனிதன், சமூகமனிதன், அரசு,
சமயம் என்றவாறான அனைத்துச் சமூக நிறுவனங்களுக்கான பின்பற்றுநெறிகளை உள்ளடக்கி நிற்றலே தமிழ் அற இலக்கியங்களின் மிக முக்கியமான – உயிரோட்டமான, சிறப்பியல்பாகும்.
அன்றைய மக்கள்
வழக்கிலிருந்த பழமொழி, மருத்துவக் குறிப்புக்கள், அனுபவப் பிழிவுகள், மெய்யியல் ஆகிய அனைத்தையும் உட்செரித்துக் கொண்டவையாகத் தமிழ் அற இலக்கியங்கள் திகழ்கின்றன.
அறம், பொருள்,
இன்பம், வீடு ஆகிய நான்கு உறுதிப் பொருள்களும், சங்க இலக்கியங்கள் மற்றும் பிற இலக்கியங்களின் உள்ளடக்கங்களாக உள்ளன. எனினும், அறத்தை மட்டுமே முன்னிலைப்படுத்திப் பேசுபவையாகத் தமிழ் அற இலக்கியங்கள் எனப்படும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் விளங்குகின்றன.
முடிவுரை
இந்தியத் தத்துவ
மரபில் வைதீகம், அவைதீகம் இருவகைகள் உள்ளன. வைதீக
மரபில் தருமம், நீதி இரண்டும் வருணாசிரமதர்மத்தை அடிப்படையாகக் கொண்டு நோக்கப்படுகின்றன. அவைதீக மரபில்
வருணாசிரம் தருமம் முற்றிலும் புறந்தள்ளப்பட்டு மானுடநேய – சமத்துவப் பார்வையில் நோக்கப்படுகின்றன. தமிழ் இலக்கிய மரபில் வைதீக மரபு,
அவைதீக மரபு இரண்டும் கலந்து வெளிப்பட்டிருந்த போதிலும், இவ்விரு நெறிகளுக்கும் மேம்பட்ட வாழ்வியல் அறநெறிகள் முன்வைக்கப்பபட்டுள்ளன. இதனால்தான், தருமம், நீதி என வடமொழியில் இரு சொற்களால் மட்டுமல்லாமல் புண்ணியம் போன்ற சொற்களாலும் குறிப்பிடப்படும் அனைத்து நன்னெறிகளையும் சுட்டும் ஒரே சொல்லாக ‘அறம்’ என்பது
திகழ்கிறது.
வைதீகம், அவைதீகம் என்ற இரு தருமநெறிகளில் மிகுதியும் அவைதீக நெறிசார்ந்ததாகவே தமிழ் அறம் தொழிற்படுகிறது எனலாம்.
பயன்பட்ட நூல்கள்
1. அம்பேத்கர்.,பி.ஆர்.
1994, புத்தரும் அவர் தம்மமும், சித்தார்த்தா,வீ, (தமிழில்) தமிழாக்க நூல் வெளியீட்டுக் கழகம், சென்னை.
2. ஆர்ஜவசாகரர் முனிவர்., ஆ.ப.இ, ஜைன அறமும், அறிவியலும், ஸ்ரீ சுருத கேவலி
பத்ர பாகுசசுவாமி சேவா தளம், குந்தகுந்தநகர்.
3. …….……..,
1997, அருங்கலச்செப்பு, ஸ்ரீ சுருத
கேவலி பத்ர பாகுசசுவாமி சேவா தளம், குந்தகுந்தநகர்.
4. கழகப்புலவர் குழு., 1981, கழகத் தமிழ்அகராதி, தி.சை.சி.நூ.பதிப்புக்கழகம், சென்னை.
5. கந்தசாமி., ஆ. 1981, பழந்தமிழிலக்கியங்களில் அறக்கூறுகள், ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு,
கருத்தரங்கு ஆய்வுக் கட்டுரைகள,; (பதி.ஆ.அருணாச்சலம்.,மு) உலகத்
தமிழராய்ச்சிக் கழகம், சென்னை.
6. கந்தசாமி., சோ.ந.,
1977, பௌத்தம், சென்னை பல்கலைக்கழகம், சென்னை.
7. சிவத்தம்பி.கா., 1988, தமிழில் இலக்கிய வரலாறு (வரலாறெழுதியல் ஆய்வு) நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பிரைவேட் லிமிடெட், சென்னை.
8. சுப்பிரமணியன்.,நா. 1996, இந்தியச் சிந்தனை மரபு, சவுத் ஏசியன்
புக்ஸ், சென்னை.
9. சுல்லக் பார்சுவ கீர்த்தி வர்ணீஜி., 1998, அறத்தின் தொன்மை, ஸ்ரீ சுருத கேவலி
பத்ர பாகுசசுவாமி சேவா தளம், குந்தகுந்தநகர்.
10. திருநாவுக்கரசு., க.த. 1977, திருக்குறள்: நீதி இலக்கியம், சென்னைப் பல்கலைக்கழகம் சென்னை.
11. நெடுஞ்செழியன்.,க. 2000, தமிழர் இயங்கியல், பாலம், சென்னை.
12. பரமேஸ்வரன்., பி.ஆர். 1995, மார்க்சிஸ்ட மாத இதழ் பைபாஸ்ரோடு, மதுரை.
13. வீரமணி.,கி. 1990, மனுதர்ம சாத்திரம், திராவிடர் கழகம், தமிழ்நாடு.
14. ஜார்ஜ்.தாம்சன்., 1988, சமயம் பற்றி
ஒரு கட்டுரை, நேத்ரா
வெளியீடு, சென்னை-35.
15. ஜான் சாமுவேல்.,ஜி. 1978, இலக்கிய ஒப்பாய்வுக் களங்கள், மணி பதிப்பகம், சென்னை.
16. வுசநஎழச டுiபெ.இ
1981இ
யு
னுiஉவழையெசல
ழக
டீரனனாளைஅஇ
மு.P.
டீயபஉhi
யனெ
ஊழஅpயலெஇ
ஊரடஉரவவயஇ
றுயபளைறயசயஇ
று.னு.ஊ.
எனது பின்னூட்டம் கிடைத்ததா? வலைப்பக்கத்தில் வரவிலலையே?
ReplyDeleteவணக்கம் மாதவன். வலையுலகிற்கு வரவேற்கிறேன். ஆய்வுப்போக்கு சரி. மொழிநடையை இன்னும் எளிமைப்படுத்தினால் நல்லது என்று தோன்றுகிறது. அத்தோடு, மற்ற நம் நண்பர்களின் வலைப்பக்கங்களுக்கும் சென்று படித்துப் பின்னூட்டமிடுவதும் நட்பு வளர்ப்பதும், பின்தொடர்வோர் பட்டியலில் இணைவதும் அவசியம். உஙக்ள வலையிலும் பின்தொடர்வோர் பட்டியலை இணையுங்கள். தொடர்ந்து எழுத வேண்டுகிறேன். பழந்தமிழிலக்கிய ஆய்வு மட்டுமின்றி,நவீன வகைகளிலும் நுழையுங்கள். அதற்குத்தான் பார்வையாளர் அதிகம். எனது வலைப்பக்கமும் வந்து பார்க்க வேண்டுகிறேன் நன்றி
ReplyDeleteஅன்புடன் -நா.முத்துநிலவன், புதுக்கோடடை
வலைப்க்கம் -http://valarumkavithai.blogspot.com/
விரைவில் உங்கள வலைப்பக்கத்தை எனது வலைப்பக்க இணைப்பில் தருவேன். நீங்களும் நண்பர்களின் வலைப்பக்க இணைப்புத் தருவது, வலைஇலக்கிய நட்புவட்ட வளர்ச்சிக்கு உதவும்.
ReplyDeleteஇணைப்புக் கொடுத்திருக்கிறேன் எனது வலைப்பக்கத்தில் பார்க்க, எனது நண்பர்கள் வருவார்கள் இணைந்து, நட்பு வளர்ப்போம்.
ReplyDeleteஅறம், தருமம், நீதி ஆகியன பற்றி இந்தியத் தத்துவ மரபிலும், தமிழிலக்கிய மரபிலும் பல்வேறு பொருண்மைகளைச் சான்றிட்டு இக்கட்டுரை அற்புதமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. பாராட்டுகள்.
ReplyDeleteஒரு சிறிய வேண்டுகோள் இத்தகு நெடிய, தத்துவார்த்த ஆய்வுகள் இன்னும் எளிய , சுருங்கிய வடிவில் இருந்தால் இன்னும் அதிக நோக்கர்களை ஈர்க்கும்.