Thursday, 7 April 2016
தமிழர் வாழ்வியலுக்குப் பௌத்த, சமணத்தின் கொடை
தமிழாய்வுத்துறை, புனித வளனார் கல்லூரி (த), திருச்சிராப்பள்ளி.
…………….. அறக்கட்டளை சொற்பொழிவு – எழுத்துரை – 08.12.2015
தமிழர் வாழ்வியலுக்குப் பௌத்த, சமணத்தின் கொடை
முனைவர் சு.மாதவன்
உதவிப்பேராசிரியர் – யூஜிசி – ஆர்ஏ, தமிழாய்வுத்துறை,
மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி (த), புதுக்கோட்டை
பேச 9751 330 855 மின் அஞ்சல் : semmozhi200269@gmail.com
தமிழர் வாழ்வியல் திணை வாழ்வியல்; திணை என்பது நிலம் மனிதர், ஒழுக்கம் ஆகிய முப்பட்டகச் சொற்பொருள் விரிவு கொண்டது.
நிலம் - ஐந்திணை
மனிதர் - உயர்திணை
ஒழுக்கம் - அகத்திணை, புறத்திணை
எனவே, நிலம் சார்ந்த மனிதரது ஒழுக்கத்தைத் திணை என்றனர் தமிழர். திணை என்ற ஒற்றைச்சொல் முப்பட்டகச் சொற்பொருள் விரிவு கொண்டதாக விளங்குகிறது. இந்த அடிப்படையில்தான் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்ற வாழ்வியல் இயங்குதளங்களும் மூன்று பரிமாணங்களைக் கொண்டதாக இயங்குகின்றன.
இவ்வாறு, தொல் பழங்காலம் – சங்க காலம் முதலே திணை வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டு வந்துள்ள தமிழர் வாழ்வியலின் செம்மாந்த பண்பை நிலைப்படுத்தி வளப்படுத்தும் அறவியல் சிந்தனைகளாகத் தொழிற்படுபவை, பௌத்த, சமண வாழ்வியல் சிந்தனைகளாகும். இத்தகைய நெறிநிலையில், தமிழர் வாழ்வியலுக்குப் பௌத்த, சமணத்தின் கொடைகளாக விளங்குபவை யாவை என ஆராயலாம்.
தமிழர் வாழ்வியலை அகம், புறம் என இருவகையாகப் பகுத்து அவ்வவற்றுக்குரிய வரையறைகளை வகுத்து ஒருசீராய்த் தொகுத்து அகவாழ்வியல், புற வாழ்வியல் எனக் கட்டமைத்துள்ளனர். அவ்வவற்றுக்குரிய வரையறைகளின்படி ஒழுகுதலை ‘ஒழுக்கநெறி’ என்றனர். இதனடிப்படையில், அகவாழ்வியல் ஒழுக்கநெறி, புறவாழ்க்கை ஒழுக்கநெறி எனப் பின்பற்றி வந்துள்ளனர். இத்தகைய வாழ்வியல் கோட்பாட்டு வரையறைகள் சங்க இலக்கியங்களிலிருந்தும் தொல்காப்பியத்திலிருந்தும் தமிழறிஞர்களால் உருவாக்கப்பட்டன. எனவே, வாழ்வியலிலிருந்து இலக்கியமும் இலக்கியத்திலிருந்து வாழ்வியல் ஒழுக்கநெறியும் (அறநெறி) உருப்பெற்றுள்ளன எனலாம். இந்த நோக்குநிலையிலிருந்து, தமிழர் வாழ்வியலின் செம்மாந்த ஒழுக்கநெறி உருவாக்கத்திற்கு பௌத்த, சமண சமயங்களின் கொடைகளாக எவையெவை திகழ்கின்றன என்பதை இந்தக் கட்டுரை ஆராய முன்வருகிறது.
தமிழர் வாழ்வியல் அகமும் புறமும்
உலகத்தின் பிற உயிர்களிலிருந்தும் மனிதனைத் தனித்துவப்படுத்துவது அவனது படைப்பாற்றலேயாகும். பிற உயிர்கள் எல்லாம் இருக்கிற உலகில் கிடைக்கிற உணவில் உயிர்வாழ்ந்துவிட்டுப் போகின்றன. சில தகவமைப்புகளை மட்டுமே உருவாக்கிக் கொள்கின்றன. ஆனால், மனிதனோ, உணவு, உடை, உறையுள் என்ற அடிப்படைத் தேவைகளுக்கும் அப்பாற்பட்டு இந்த உலகை இயற்கைநிலையிலிருந்து தன் படைப்பாற்றலால் அன்றாடம் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறான். இதைவிடவெல்லாம் ஒரே ஒரு செம்மாந்த பண்பை மனிதன் மட்டுமே உருவாக்கிக் கொண்டுள்ளான். அந்தப் பண்புதான் அகம் என்ற அறநெறி. இரு அகங்களின் ஈர்ப்புக் கலப்பால் ஓர் அகத்திற்குள் இரு அகங்கள் மட்டுமே உணர்ந்து பகிரும் பண்பை மனிதன் மட்டுமே உருவாக்கிக் கொண்டுள்ளான். இரு உள்ளங்களால் மட்டுமே உணரும் தன்மையது ‘அகம்’. மனிதகுலம் எல்லோரும் அறியும் தன்மையது ‘புறம்’. இத்தகைய வாழ்வியல் நெறியை உலகில் உள்ள எல்லாநாட்டு மானிடரும் வரையறுத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். ஆனால், இந்த வரையறையை முதன்முதலில், பதிவு ஆவணமாகக் கொண்டுள்ள ஒரே இனம் தமிழினம் என்பதை அறிஞர்கள் பல்லாற்றானும் நிறுவியுள்ளனர்.
தமிழர் வாழ்வியல் அடிப்படைகள் – அகம், புறம்
அநேகமாக, ஒற்றைச் சொல்லால் நிலம், மக்கள், வாழ்வியல் என்ற மூன்றையும் குறிக்கும். ஒரே மொழி தமிழ்மொழியே ஆதல் கூடும். ’திணை’ என அழைக்கப்படும் அச் சொல்லுக்குள்தான் எத்துணை நுட்பம் செறிந்து ஒளிர்கிறது பாருங்கள்!
நிலம் ஐந்திணை, குறிஞ்சி, முல்லை, மருதம்,
நெய்தல், பாலை- முதற்பொருள்
திணை மனிதர் - உயர்திணை பொருள்கள் – கருப்பொருள்கள்
ஒழுக்கம் அகத்திணை, புறத்திணை, வாழ்வியல்- உரிப்பொருள்கள்
‘திணை’ என்ற சொல்லுக்கு ‘ஒழுக்கம்’ என்றும் ஒரு பொருள் உண்டு. ‘பொருள்’ சொல்லுக்கு ‘வாழ்க்கை’ என்றும் பொருள் உண்டு. பொருள்களில் ஆனது வாழ்க்கை; ஒழுக்கத்தால் ஆனது வாழ்க்கை என்னும் பொருளியைபு – தருக்க இயைபு கொண்ட சொல் ‘திணை’
நிலமும் பொழுதும் முதற்பொருள். ‘நிலம்’ என்பது உற்பத்திக் களம்; ‘பொழுது’ என்பது உற்பத்திக் காலம். அதாவது உற்பத்திக்கான பணியைத் தொடங்கும் காலம் ‘சிறுபொழுது’ உற்பத்தியை வளர்த்து அறுவடை செய்யும் காலம் பெரும்பொழுது என்ற வகையில் தமிழர்களால் பகுக்கப்பட்டுள்ளது.
குறிஞ்சித்திணைக்குரிய சிறுபொழுதான ‘யாமம்’ அந்நிலத்தில் வேட்டைப்பணியைத் தொடங்கும் காலமாகும். பெரும்பொழுதுகளான ‘கூதிர், முன்பனிக்காலங்கள்’, வேட்டையாடுதல், தினை விதைத்தல், தேனடுத்தல், கிழங்கு அகழ்தல் போன்ற தொழில்களுக்குரிய காலங்களாகும்.
முல்லைத் திணைக்குரிய சிறுபொழுதான மாலை, அந்நிலத்துத் தொழிலான ஆநிரை மேய்த்துத் திரும்பும் காலமாகும். பெரும்பொழுதான ‘கார்காலம்’ ஆநிரை மேய்க்கச் செல்ல இயலாத சூழலால் வீட்டிலிருக்கும் காலமாகும். சாமை, வரகு விதைத்தல் உள்ளிட்ட பயிர்செயதலுக்கு உகந்த காலமாகவும் கார்காலம் விளங்குகிறது.
மருதத்திணைக்குரிய சிறுபொழுதான ‘வைகறை’, அந்நிலத்துத் தொழிலான வேளாண்மைப் பணியைத் தொடங்கும் காலமாகும். பெரும்பொழுதுகளான ‘கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்’ ஆகிய ஆறு காலங்களும் வேளாண்மையை வளர்ப்பதிலிருந்து அறுவடை செய்யும் காலம் வரையிலான பரந்த காலப்பகுதியாகும். அந்தக் காலத்தில் முப்போகம், நாற்போகம் என விளைந்ததால் மருதத்திணைக்குரிய பெரும்பொழுதுக்காலம் என்பது ஆண்டின் முழுமையும் நிறைந்திருந்திக்கிறது எனலாம்.
நெய்தல் திணைக்குரிய சிறுபொழுதான ‘எற்பாடு’, அந்நிலத்துத் தொழிலான மீன்பிடிப் பணியைத் தொடங்கும் காலமாகும். பெரும்பொழுதுகளான ‘கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்’ ஆகிய ஆறு காலங்களும் மீன்பிடித் தொழிலைத் தொடர்ந்து மேற்கொள்ளும் காலங்களாகும். உப்பெடுத்தல், மீனுணைக்கல் போன்ற தொழில்களையும் இப் பெரும்பொழுதுக்-காலங்களுக்குள்ளேயே செய்தாக வேண்டிய சூழல் நெய்தல் திணையில் உள்ளது.
பாலைத்திணைக்குரிய சிறுபொழுதுதான ‘நண்பகல்’, அந்நிலத்துத் தொழிலான ஆறலைத்தலுக்குரிய காலமாகும். பெரும்பொழுதுகளான பின்பனி, இளவேனில், முதுவேனில் ஆகியனவும் ஆறலைத்தலுக்குரிய காலங்களேயாகும் (தொல். பொருள். அகத். 949 - 958).
நிலம் உற்பவிக்கும் அகமும் புறமும் – திணைவாழ்வியல்
தமிழரின் திணைவாழ்வியலானது முதற்பொருள்கள் விளைவிக்கும் கருப்பொருள்கள்; கருப்பொருள்களால் விளைவிக்கப்படும் உரிப்பொருள்கள் என மூன்றாலும் கட்டமைக்கப்பட்டுள்ளது.
வேட்டையாடும் ஆடவரும் தினைப்புனம் காக்கும் மகளிரும் இயற்கையால் ‘புணர்தல்’ குறிஞ்சித் திணை வாழ்வியல். இங்கு முதற்பொருளான மலைச்சூழலும் (நிலம்) வேட்டையாடவும் தினைப்புனம் காக்கவும் வரும் காலச் சூழலும் இணைந்து கருப்பொருளால் ‘புணர்தலை’ உரித்தாகும்.
ஆநிரை மேய்க்கும் ஆடவர் வருகைக்காக இல்லிலிருந்து ஆப்பொருள்கள் விற்கும் ஆய்ச்சியர் காத்து ‘இருத்தல்’ – முல்லைத்திணை வாழ்வியல். இங்கு முதற்பொருளான காட்டுச்சூழலும் ஆடவர் ஆநிரை மேய்க்கச் செல்வதால் அவரவர் வரும்வரை ஆய்ச்சியர் காத்திருக்கும் நீண்ட காலஅளவும் இணைந்து கருப்பொருள்களால் ‘இருத்தலை’ உரித்தாகும்.
உழவுத் தொழில் செய்யும் ஆடவரும் மகளிரும் ஒருசேர இல்லத்திலும் வயலிலும் எல்லா நேரமும் இணைந்தே இருப்பதால் வரும் இயற்கையால் எழும் சலிப்புணர்வும் உற்பத்தி மிகுதியால் வரும் பரத்தமைத் தொடர்பும் விளைவிக்கும் உளவியல் உணர்வான ‘ஊடல்’ மருதத்திணை வாழ்வியல். இங்கு முதற்பொருளான விளைநிலச்சூழலும் விளைபொருள் உற்பத்திக்கான வேளாண்தொழில் காலமும் இணைந்து கருப்பொருள்களால் ‘ஊடலை’ உரித்தாகும்.
கடலுக்குள் மீன்பிடிக்கவும் முத்தெடுக்கவும் செல்லும் ஆடவரை மீன் உணக்கவும் முத்துக்கோர்க்கவும் கடற்கரைக் குடியிருப்பிலிருக்கும் பரத்தியர் மீண்டும் உயிரோடு சந்திக்க இயலுமோ என வேதனையுடன் காத்திருக்கும் உளவியல் உணர்வான ‘இரங்கல்’ நெய்தல் திணை வாழ்வியல். இங்கு முதற்பொருளான கடற்சூழலும் மீன்பிடிக்கச் சென்றுதிரும்பும் காலச்சூழலும் இணைந்து கருப்பொருள்களால் ‘இரங்கலை’ உரித்தாகும்.
‘அகனைந்திணை’ என அழைக்கபெறும் இவை மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான தொழிலுறவை அடிப்படையாகக் கொண்டவை; மனித வாழ்வியல் தேவைகளை நிறைவுசெய்யும் உற்பத்தியோடு தொடர்புடையவை. ஆனால், புறத்திணையோ பெரும்பாலும் உற்பத்தியையும் உற்பத்திக்கான ஐந்திணை நிலங்களையும் ஆளுகை செய்வதோடு தொடர்புடையவை. அதாவது, உற்பத்திப்பொருள் நுகர்வில் இசைவும் முரணும் தோன்றும் களங்களாக அல்லது இசைவாலும் முரணாலும் தோன்றும் களங்களாகப் புறத்திணைகள் இயல்கின்றன.
புறத்திணைகளின் துறைசார் தொன்மைப் போக்குகளைக் கூர்ந்து நோக்கினால் அவற்றுக்குள் போரின் பரிணாம வளர்ச்சிக் கூறுகளைக் கண்டறியலாம். ஆநிரை கவர்தலும் மீட்டலும் ‘வெட்சி’. இது போருக்குச் சீண்டுதலாகும். ஒரு நாட்டின் செல்வமான மாடுகளைக் கவர்தல் என்பது ஒருவிதமான பொருளாதார இடைஞ்சலாகும். இடைஞ்சல் செய்யவும் இடைஞ்சலைத் தடுக்கவும் போரிடுதல் ‘வஞ்சி’. ஊருக்குள் தெருவுக்குள் எனப் போரிட்டு முன்னேறி அரண்மனைக் கோட்டையைக் கைப்பற்றவும் காப்பாற்றவும் போரிடுதல் ‘உழிஞை’. அரண்மனை புகுந்த எதிர்நாட்டரசனொடு அந்நாட்டரசன் போரிடுதல் ‘தும்பை’. அரசரும் படையும் வென்றால் அது ‘வாகை’ இத்தகைய நான்குகட்டப் போரில் உயிர்நீத்தால் ‘காஞ்சி’ (நிலையாமை). வென்ற ஆண்மகனின் வீரப்போர்ப் புகழ் பாடினால் ‘பாடாண்’. (தொல். பொருள். புறத். 1002 – 1028).
அகத்திணை + புறத்திணை = உயர்திணை
திணைகளின் முதற்பொருள்களான நிலம், பொழுது ஆகியவற்றால் விளையும் கருப்பொருள்களை நுகர்வதன் அடிப்படையில் உரிப்பொருள்கள் அமைகின்றன. நுகர்வில் இசைவு ஏற்பட்டால் அது அகத்திணை வாழ்வியலைக் கட்டமைக்கிறது. நுகர்வில் முரண் ஏற்பட்டால் அது புறத்திணை வாழ்வியலை விளைவிக்கிறது.
திணைமக்களின் தொழில்கள் கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டவை. கருப்பொருள்களில் ஒன்றுதான் தொழில் எனக் குறிப்பிடப் பெற்றிருந்தாலும்,
“தெய்வம் உணாவே மாமரம் புள்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென மொழிப” (தொல்.பொருள்.964)
என்பதில், எல்லாக் கருப்பொருள்களையும் தொடர்ச்சியாக வரிசைப்படுத்தி தெய்வம், உணவு, மா (விலங்கு), மரம், புள் (பறவை), பறை என வரிசைப்படுத்தி இவற்றிற்கு இயைபுடைய தொழில் என்பதால் தொழிலை இறுதியாய் வைத்தார் எனப் பொருள்கொள்ள இடமிருக்கிறது. எனவே, வாழ்வியலைத் தகவமைக்கும் தொழில் தொழிற்படும் பொருள்களே கருப்பொருள்களாகும்.
இத்தகைய,
உயிருள்ளன - மா, மரம், புள்
கருப்பொருள்கள் உயிரல்லன - தெய்வம், உணவு
உருவாக்கப்படுவன- உணவு, பறை, யாழ்
என்ற வகைப்படும் பகுப்பின்படி, எல்லாக் கருப்பொருள்களோடும் தொழில் இயைபுப்படுகிறது. மானுட வாழ்க்கையை வடிவமைக்கும் கடமை தொழிலுக்குரியது. இந்த அடிப்படையில்தான், கருப்பொருள்களுக்குள் தொழிற்படும் தொழிலின் அடிப்படையில் உரிப்பொருள் விளைகிறது.
குறிஞ்சியில் வேட்டையாடுதல், தேனெடுத்தல், தினை விதைத்தல், கிழங்கு அகழ்தல் ஆகியன தொழில்கள். இவற்றிலிருந்து நுகர்வுக்கு மேலான பொருள்சேர்க்கை – மிகுபொருள் சேர்க்கை இல்லை. இத்தொழில்கள் யாவும் ஆணும் பெண்ணும் இணைந்தும் வேலைப்பிரிவினை செய்தும் மேற்கொள்வன. எனவே, குறிஞ்சியின் திணைப் பின்னணி ‘புணர்தல்’ உரிப்பொருளுக்கு உரியதாகிறது.
முல்லையில் ஆநிரை மேய்த்தல், சாமை – வரகு விதைத்தல் ஆகியன தொழில்கள். இத்தொழில்களிலிருந்தும் மிகுபொருள் சேர்க்கை இல்லை. எனவே, முல்லைத் திணைப்பின்னணி ‘இருத்தல்’ எனும் உருப்பொருளுக்கு உரியதாகிறது.
நெய்தலின் மீன்பிடித்தல், உப்பு எடுத்தல், மீன் உணக்கல் ஆகியன தொழில்கள். இத்தொழில்களிலிருந்தும் மிகுபொருள் சேர்க்கை இல்லை. எனவே, நெய்தல் திணைப்பின்னணி ‘இரங்கல்’ எனும் உரிப்பொருளுக்கு உரியதாகிறது.
மருதத்தின் நெல்விளைத்தல், இதர தானியங்கள் விளைத்தல் ஆகியன தொழில்கள். இத்தொழில்களிலிருந்து நுகர்வுக்கு மேலான பொருள்சேர்க்கை மிகுகிறது. மிகுபொருள் சேர்க்கை எனும் உபரி உற்பத்தி, பரத்தமை ஒழுக்கத்தை விளைவிக்கிறது. எனவே, மருதத்திணையின் பின்னணி ‘ஊடல்’ எனும் உரிப்பொருளுக்கு உரியதாகிறது.
பிற திணைகளில் தொழிலடிப்படையில் கிடைக்கும் பொருள்களைக் கொண்ட வாழ்வியல் தேவைகளை இவற்றுக்குட்பட்டுத் தலைவனும் தலைவியும் ஈடுசெய்து கொண்டு வாழ்ந்துவருகின்றனர். எனவே, பிற திணைகளில் ஓரிடத்திலேனும் பரத்தையர் ஒழுக்கம் எனும் பதிவுச் சுவடே இல்லை.
பிற திணைகளில் துளியும் இல்லாத பரத்தையர் மருதத்திணையில் மட்டும் நிறைந்திருப்பதன் பொருளாயதப் பின்னணியை அறிஞர் பலர் விரிவாக ஆராய்ந்துள்ளனர். இவ்வாறிருக்க, மருதத்திணைக்குரிய உரிப்பொருளாக ஊடலை முன்வைத்தது ஏன்? ஊடலைப் பின்பற்றுமாறு மருதநிலப் பெண்ணுக்கு அறிவுறுத்தியது ஏன்?... பரத்தையர் ஒழுக்கத்துக்குச் சமூக ஏற்புநிலை கொடுத்தது ஏன்? என்றவாறு வினாக்கள் பல முளைக்கின்றன. இவற்றுக்கெல்லாம் ஒரே பதில்தான். பிற திணைகளில் உடைமையும் ஆணாதிக்கமும் இல்லை. மருதத் திணையில் நிலவுடைமையும் ஆணாதிக்கமும் தந்தைவழிச் சமூகக் கட்டமைப்பும் கெட்டிபட்டுப் போயிருக்கிறது என்பதுதான் பதில்.
இவ்வாறெல்லாம் இருந்தபோதிலும், அக்காலப் புலவர் சான்றோர் வரையறுத்த அகத்தணை ஒழுக்கத்தின் அடிப்படையிலும் புறத்திணை ஒழுக்கத்தின் அடிப்படையிலும் வாழ்பவனே ‘உயர்திணை’ என்பதே தமிழர் வாழ்வியல்.
உயர்திணை என்னும் வினைச்சொல்,
உயர்ந்த, உயர்கின்ற, உயரும் திணை (தான்)
உயர்திணை
உயர்த்திய, உயர்த்துகின்ற, உயர்த்தும் (பிறரை / சமூகத்தை)
எனப் பிரிந்து பொருள்தரும். எனவே, தானும் உயர்ந்து தன் சமூகத்தையும் உயர்த்தும் பண்பு கொண்டவன் ‘உயர்திணை’. இத்தகைய பண்பு, இல்லாததெல்லாம் அஃறிணை (அல்திணை). ஆக, ‘உயர் ஒழுக்கம்’ நிரம்பியவனே ‘உயர்திணை’. இங்கு ‘உயர் ஒழுக்கம்’ என்பதும் வினைத்தொகை சொல் என்பது கூர்ந்து அறியத்தக்கது. அநேகமாக, உலகின் வேறெங்கும் மொழியிலும் இத்தகைய ‘பண்பாட்டுச் செம்மைநிறை கலைச்சொல்’ மூலம் மனிதனை சுட்டும் பாங்கு இருத்தல் ஐயமே. இந்த வகையில், உயர்திணை எனும் கலைச்சொல்லைப் பெற்ற உயர்பண்பாட்டு மரபு தமிழர் வாழ்வியலுக்குரியது எனில் அது மிகையில்லை.
தமிழரின் திணை வாழ்வியலில் ஏற்பட்ட பின்னடைவுகள்
தமிழரின் திணை வாழ்வியலில் குறிஞ்சி, முல்லை, நெய்தல் ஆகிய மூன்று திணைகளிலும் இன்றும் இனக்குழுச் சமூகப் பண்புகள் நிறைந்திருக்கக் காணலாம். ஆனால், மருதமோ இனக்குழுச் சமூக வாழ்க்கையிலிருந்து நிலவுடைமைச் சமூகமாக மாறியதோடல்லாமல் அரச சமூகமாக வளர்ச்சியடைந்து எல்லாத் திணைச் சமூகங்களையும் மேலாண்மைசெய்யும் தனிப்பெரும் பண்பைப் பெற்றுள்ளது. மருதத்தில்தான் குடியிருப்புகள், ஊர்கள், நாடுகள் என்பவை கட்டமைக்கப்பட்டு நாகரீக, பண்பாட்டு நடவடிக்கைகள் வளர்ந்து மிகுந்தன. இனக்குழுத்தலைமைச் சமூகங்கள் பல ஆங்காங்கே வளர்ந்ததன் பின்னணியில் அவ்வினக்குழுத் தலைமைகளிலிருந்தே ஆங்காங்கே சிற்சில / பற்பல இனக்குழுக்களுக்கென அரசர்கள் உருவாயினர். ‘மன்னர்’ எனப்பட்டோர் எல்லாம இனக்குழுத் தலைவர்களாவர். மன்னர்களில் சிலரையோ பலரையோ தன் ஆளுகைக்குள் கொண்டு பரந்த ஒற்றையாதிக்க நிலை எடுத்தவர்கள் எல்லாம் ‘அரசர்கள்’ ஆவர்.
ஒரு இனக்குழுச் சமூகத்தையொட்டிய நான்கு பகுதிகளிலும் இருந்துவரும் பிற இனக்குழுச் சமூகங்களுக்கும் அந்த ஒரு இனக்குழுச் சமூகத்துக்கும் இடையில் எல்லைத் தகராறில் தொடங்கிய முரண்கள் போர்களாக வெடித்தன. ‘போரின் தொடக்கமாக’ ஆநிரை கவர்தலில் தொடங்கிப் போரின் முடிவாக ஒரு மன்னரையோ / அரசரையோ வீழ்த்தி வெற்றிவாகை சூடுதல் என்பது அடிக்கடி நிகழ்ந்துவந்த நிகழ்வுகளெனச் சங்க இலக்கியப் புறத்திணைப் பாடல்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன.
‘வெட்சித்திணைப் போர்’ என்பது ஊருக்குள் புகுந்து சூழப்பட்டாரை அழித்தலில் தொடங்கி ஆநிரைகளைக் கவர்ந்து தம்நாடு கொணரலில் முடிகிறது. இந்த வெற்றியைக் கொண்டாட வழிநடையில் கள்ளுண்டு களித்துக் கொண்டாலும் நிகழ்கிறது. அவ்வாறாயின், கொலை, களவு, கள்ளுண்ணல் ஆகியன வெட்சித்திணை வாழ்வியலில் உள்ளன (தொல்.பொருள்.புறத். 1002 – 1006).
‘வஞ்சித்திணைப் போர்’ என்பது பகைநாட்டில் தீவைத்தலில் தொடங்கி வென்றோர் ஒளியும் தோற்றோர் தேய்வும் பேசுவதில் முடிகிறது. இங்கு, வீடு, பொருள் சேர்க்கை ஆகியவற்றை நாசம் செய்தல் நிகழ்கிறது. (தொல்.பொருள்.புறத். 1007 – 1009).
‘உழிஞைத் திணைப் போர்’ என்பது ஒரு அரசனின் மேலாண்மையை ஏற்றுக்கொள்ளாத மன்னனின்மீது போர்தொடுத்துக் கோட்டையை முற்றுகையிடுதலில் தொடங்கிப் போரிட்டுத் தோற்றோரைத் தொகுத்தலில் முடிகிறது. இதில், வென்ற வாளினை, நீராட்டு விழா என்று ஒரு துறையும் வருவதால், கோட்டையை அகப்படுத்தும் போரில் வீரர் பலரையும் கொன்றுள்ளனர் என்பதும் தெரியவருகிறது (தொல். பொருள். புறத். 1010 – 1014).
‘தும்பைத் திணைப் போர்’ என்பது அரசரொடு அரசர் போரிட்டு வெல்லுதல் மட்டுமின்றி பகைவீரர்களின் உடல்கள் இருகூறிட்டு நிலத்தில்நிற்கும் நிலையைச் சிறப்பியல்பு எனக் கொள்வது (தொல். பொருள். புறத். 1016 – 1017) ஆக, அரசரொடு போரிடுதலில் தொடங்கி ஒரு அரசரும் இரு அரசரும் தமக்குள்ளும் இரு படையிலுள்ள போர்வீர்ர்களுக்குள் பல போர்வீரர்களையும் கொன்று குவித்தலில் முடிகிறது (தொல். பொருள். புறத். 1018).
ஆக மொத்தத்தில், புறத்திணை வாழ்வியலானது கொலை, களவு, கள்ளுண்ணல், உடைமைகளை நாசம் செய்தல், இத்தகைய அட்டூழியங்களையெல்லாம் வெற்றி எனக்கூறிப் பெருமிதம் கொள்ளல் ஆகிய நிகழ்வுகளைக் கொண்டதாக உள்ளது. இத்தகைய புறத்திணைப் போர்களில் மாண்டோரெல்லாம் அகத்திணை வாழ்வியலுக்குரிய வீரர்களன்றோ? அவ்வீரர்களில் மணம்புரிந்த வீரர்களின் மனைவி, மக்கள், குடும்பம் ஆகியோர் பாதுகாப்பான வாழ்க்கையின்றி அல்லலுறுவதும் அலைக்கழிக்கப்படுவதுமாகத் தானே தவித்திருப்பர்?! அரணற்ற – அறமற்ற சூழலில், எத்துணை இளங் கைம்பெண்கள் அலமந்து நின்றிருப்பர்?! அவர்தம் சமூக வாழ்வியல் சீர்குலைவைச் சொல்லவும் வேண்டுமோ?
அன்றி, அகத்திணை வாழ்வியலில் பரத்தமை ஒழுக்கத்தால் எத்துனைக் குடும்பங்களின் வாழ்வியல் சீர்குலைந்திருக்கும்? இவ்வாறு, அகத்திணை ஒழுக்கச் சீர்குலைவால் குடும்பநெறிச் சீரழிவும் புறத்திணை ஒழுக்கச் சீர்கேட்டால் சமூகநெறிச் சீர்குலைவும் தமிழர் வாழ்வியலை நிலைகுலையச் செய்து கொண்டிருந்த காலத்தில், சங்கப்புலவர்களான சான்றோர்கள் அறநெறிச் சிந்தனைகளைத் தங்கள் செய்யுள்களின் வழியாகச் சமூகத்தின் முன்வைத்தனர் பொதுவியல், பாடாண், காஞசித் திணைப் பாடல்களில் இவ்வகை அறநெறி உருவாக்கச் சிந்தனைகளைக் காண முடிகிறது.
உயர்திணை வாழ்வியல் துயர்திணை வாழ்வியலாகிவிட்ட சூழலைப் பிற்காலச் சங்கச் சமூகம் எதிர்கொண்டது. இதனால் விழுமியம்சார் அறநெறிக் கோட்பாட்டுத் திணைவாழ்வியலில் பின்னடைவுகள் எனும் புதிர்கொண்டது.
தன்னியல் அறநெறி உருவாக்கமும் பௌத்த, சமண அறநெறிச் செறிவாக்கமும்
தன் படிப்பினைகளிலிருந்து அகத்திணை, புறத்திணை வாழ்வியல் செம்மைக்கான அறநெறிக் கோட்பாடுகளைத் தன்னியல்பாய்த் தமிழ்ச் சமூகம் உருவாக்கிக் கொண்டிருந்த காலத்தில் கி.மு. 3ஆம் நூற்றாண்டுவாக்கில் பௌத்தமும் அதற்கு முன்பே சமணமும் தமிழகத்தில் கால்கொள்ளத் தொடங்கின. அக்கால அரசியல் அதற்கு ஏதுவான புறச் சூழலை உருவாக்கித் தந்தன. இதுகுறித்த விரிவான ஆய்வின் ஒரு பகுதியை இந்த ஆய்வாளரின் முனைவர் பட்ட ஆய்வு நூலிலிருந்து அவ்வாறே எடுத்துக்காட்டுவது இங்கு பொருத்தமாகும்:
“தமிழகத்திற்கு வந்து பரவிய பௌத்த, சமண சமயக் கருத்துக்கள் தமிழ்ச் சமூகத்தின் அனைத்துக் கட்டமைப்பு நிலையிலும் இடம்பெறலாயின. சமயம், சமூகம், அரசியல், பண்பாட்டியல் என அனைத்துச் சமூக நிறுவனங்களிலும் தனது ஆழ்ந்த பிடிமானத்தை ஏற்படுத்திய அவை இலக்கியங்களிலும் இடம்பெறுவது இயல்பானதேயாகும். இவ்வாறு அவை தாக்குரவை ஏற்படுத்துவதற்குரிய ஏற்புநிலை, தன்வயமாக்கும் போக்கு, புதுக்கும் இயல்பு ஆகியவற்றைத் தமிழ்ச் சமூகம் கொண்டிருந்தது என்பதுதான் இங்கு கவனத்திற்குரிய செய்தியாகும்.
“அரசியல், நீதி, மெய்யியல், மதம், இலக்கியம், கலை ஆகிய எல்லா அம்சங்களின் வளர்ச்சியும் பொருளாதார வளர்ச்சியை அடித்தளமாகக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த மேல் கட்டுமானத்து அம்சங்கள் எல்லாம் சேர்ந்து ஒன்றின்மேல் ஒன்று வினையையும், எதிர் வினையையும் விளைவித்துக் கொண்டிருப்பதோடு பொருளாதார அடித்தளத்தின் மீதும் வினைபடுகின்றன”.
(பாலசுப்பிரமணியன்.,கு.மா. 1987: 60)
என்ற கருத்துப்படி, பொருளாதார வளர்ச்சியால் சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களை நெறிப்படுத்துவதே அறம் என்பதன் தலையாய நோக்கமாக அமைகிறது. இங்கு குறிப்பிடப்படும் இப்பொருளாதார வளர்ச்சியை சமூக உற்பத்தி உறவுகள் தீர்மானிக்கின்றன. சமூகத்தின் இதர நிறுவன உறுப்புக்களான மதம், சாதி உள்ளிட்ட பண்பாட்டுக்கூறுகள் வாழ்வியலைச் சமூக உற்பத்தி உறவுகளோடு பிணைக்கின்றன. எனவே, சமூக உற்பத்தி உறவுகள் அமைந்திருக்கும் பாங்குக்கேற்ப பொருளாதார வளர்ச்சியும் அறக்கோட்பாட்டுப் பின்பற்றுநெறிகளும் அமைகின்றன.
தமிழ்ச் சமூகத்தில் அற இலக்கிய வகைமை ஒன்று குறைந்தது நான்கு நூற்றாண்டுகளுக்கு வளர்ந்திருக்கிறதென்றால், அதற்கு முந்தைய காலகட்டத்தைக் கவனமாகப் பரிசீலிக்கவேண்டியுள்ளது. சங்க இலக்கிய காலமே அவ்வாறு பரிசீலிக்கப்பட வேண்டிய காலகட்டமாகும். சங்க இலக்கிய காலம் எத்தகைய செல்நெறிகளைக் கொண்டிருந்தது என்பதை,
“சங்க காலத்தின் அளவுகடந்த சிற்றின்ப நுகர்ச்சி, மதுவுண்ணல், பரத்தையர் ஒழுக்கம், புலால் உண்ணல் போன்றன எல்லா நாட்டு வீரயுகங்களிலும் பெருகிக் காட்சி தருகின்றன. இவை தனியுடைமை பெருகிய அறநெறிக் காலத்தில் அதிகமாகக் கண்டிக்கப்படுவதைக் காண்கிறோம். வீரயுகப்போக்கில் மனிதகுலம் கொண்ட வெறுப்பாலும் தனியுடைமைகளின் வளர்ச்சியாலும் தோன்றிய அறநெறிக் காலத்தின் புதிய மனப்போக்கிற்கு இதே மனப்போக்கில் அவ்வந் நாட்டில் தோன்றிய சமயங்களும், புகுந்த சமயங்களும் வலுவூட்டின. தமிழ்நாட்டு அறநெறிப் பாடல்களில் புத்த சமண சமயங்களும், மேல்நாட்டு நீதி இலக்கியங்களில் கிறிஸ்தவ, இஸ்லாமிய சமயங்களும் பெரும் பாதிப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தின”.
(ஜான் சாமுவேல்.,ஜி.1978;26)
“நிலையான அரசுகளின் தோற்றமும் (Establishment of Monarchies) தனி உடைமைகளைப் (Private Property) பாதுகாக்க வேண்டிய அவசியத் தேவையுமே அறநெறிப் படைப்புகள் தோன்ற வழியமைத்துக் கொடுத்தன எனலாம். இப்பாடல்கள் அனைத்தும் மேட்டுக்குடி மக்களுக்கும், ஆளும் வர்க்கங்களுக்கும் சாதகமாக அறநெறிக் கோட்பாடுகளை அமைத்துக் கொண்டன”. (மேலது; 26)
என்பன போன்ற கருத்துக்கள் பல தெரிவிக்கின்றன. அத்தோடு தமிழ்நாட்டில் அறஇலக்கிய காலம் உருவானதற்குரிய காரணகாரிய உறவுநிலைகளையும் விவரிக்கின்றன.
குலச்சமூகத் தலைமை வாழ்க்கைமுறையிலிருந்து அரச சமூகத் தலைமை வாழ்க்கைமுறை உருவாகிவந்த காலம் சங்க காலம். அரசுகளுக்குள் நூற்றாண்டுக் கணக்கில் நடந்துவந்த ஆட்சி எல்லை விரிவாக்கம்; பாதுகாப்பு, பொருள்கவர் நடவடிக்கைகள் ஆகியவற்றை அடியொற்றிய போர்ச்சூழல் நிரம்பிய சங்ககால வாழ்க்கைமுறை சமூகத்திற்குள் கசப்பை உருவாக்கியது. சிற்றின்ப நுகர்ச்சி, கள்ளுண்ணல், புலால் உண்ணல், பரத்தையர் ஒழுக்கம் ஆகியவை சமூக அங்கீகாரம்பெற்று நிலவின. அதுமட்டுமின்றி, இவற்றை-யெல்லாம் ‘ஒழுக்கம்’ என்றே குறித்தனர். ‘ஒழுகுவது ஒழுக்கம்’ என்ற வரையறையினின்று ‘ஒழுங்குடையது ஒழுக்கம்’ என்ற வரையறையை உருவாக்க வேண்டிய காலக் கட்டாயம் அக்காலத்தில் இருந்துவந்தது. இத்தகைய சங்ககால வாழ்நெறிச் சிதைவிலிருந்து ஒழுங்கமைப்பதற்குரிய நடத்தை நெறிகளை அச்சமூகமே உருவாக்கிக் கொண்டது. இவ்வாறு, சமூகத்தின் தேவையையொட்டித் தன்னியல்பாகத் தோன்றிய அறநெறிக் கோட்பாடுகள் சங்ககாலத்தில் வழங்கலாயின. புறநானூற்றில் இடம்பெற்றுள்ள பொதுவியல் திணைச் செய்யுட்களிலும், அகம், புறம் தொடர்பான அனைத்து நூல்களிலும் இத்தகைய போக்கைக் காணமுடிகிறது.
போர்நெறியோடு வைதீகநெறியும் ஒருங்கிணைந்து செயலாற்றி வந்ததால், போர் மறுப்பும், வைதீக மறுப்பும் சங்ககாலப் போக்கிற்கான மாற்றுநெறியை முன்வைக்கும் செயன்மைக் கூறுகளான முன்வந்தன. போர், வேள்வி ஆகியவை கொல்லாமையையும், போர்க்காலச் சூறையாடல், பிறவழிப் பொருள்கவர்தல் ஆகியவை கள்ளாமையையும், இயல்பான மெய்சிதைவு பொய்யாமையையும், போர்காலப் பெண் அபகரிப்பு, காம மிகுதியால் பிறன்மனை கவர்தல் ஆகியவை பிறன்மனை நயவாமையையும் என்று ஏராளமான அறநெறிகளை உருவாக்கிக் கொள்ள வேண்டியதாகச் சங்ககாலச் சமூகம் இருந்தது. இதே காலகட்டத்தில் இந்திய மெய்யியல் தளத்தில் மறுமலர்ச்சியை உருவாக்கிவந்த வைதீக வேள்விநெறி எதிர்ப்புச் சிந்தனைப் பள்ளிகளான பௌத்தம், சமணம் போன்றவையும் மேற்குறித்த அறநெறிக்கோட்பாடுகளையே முன்வைத்தன. எனவே, பௌத்த, சமண சமயங்களின் தமிழக வருகையும், சங்ககால வாழ்நிலைகளில் இருந்து இயல்பாக எழுந்துவந்த புதிய அறச்செல்நெறிகளும் ஒன்றையொன்று வளப்படுத்தவும், வழிப்படுத்தவும் செய்தன என்பது தெளிவாகிறது.”
(மாதவன்.,சு, 2008, 42 – 45)
தமிழர் வாழ்வியலுக்குப் பௌத்த, சமணத்தின் கொடைகள்
தமிழர் வாழ்வியலில் உயிருறக் கலந்துள்ள பௌத்த, சமணக் கொடைகள் அளவிடற்கரியது. முதலில், வைதீக – வேள்வி – மூட – வருணாசிரமதர்மப் புதைகுழிக்குள் தமிழ்ச்சமூகம் புதைந்து போய்விடாமல் அறிவுக் கொடை வழங்கிப் பாதுகாத்தனவே அதுவே மாபெரும் அருங்கொடையாகும். கடைச்சங்க காலம் இருவேறு வகையான வாழ்வியல் முறைகளை முன்வைத்தது. தமிழரின் முன்பாக திருவேறாகாமல் தெள்ளியராயத் தமிழர் துலங்குமாறு அறிவார்ந்த அறநெறிகளை ஒழுகலாறுகளை – விழுமியங்களை – பண்பாட்டுச் சிந்தனைகளை – சுருங்கச் சொன்னால் மனிதனாக வாழ்வயதற்கான கருத்துக்களை முன்வைத்த பௌத்த, சமணப் பள்ளிகள் ஒன்று. தெள்ளியராய்ப் பார்ப்பனர் இருந்துகொண்டு பிறரைக் கற்பித உலகங்களுக்குள் தள்ளி இறைவனை வணங்குதல் ஒன்றேபோதும்; நற்கதி பெறலாம் என்று விளங்காத விலங்காக வாழ்வதற்கானச் செக்குமாட்டுச் சிந்தனைகளை முன்வைத்த வைதீக – சைவ – வைணவ நெறிகள் மற்றொன்று. வேறுவிதமாகச் சொன்னால், அறிவுக்கு முதலிடம். கொடுத்தன. பௌத்த, சமண சமயங்கள். மூடநம்பிக்கைக்கு முதலிடம் கொடுத்தன வைதீக சமயங்கள். இன்னொரு விதமாகச் சொன்னால், ‘மனிதனை நினை’ என்றன பௌத்தமும் சமணமும். ‘கடவுளை நினை’ என்றன வைதீக சமயங்கள். பிறிதொரு விதமாகச் சொன்னால், ‘அறிவே விடுதலை தரும்’ என்றன முன்னவை. ‘அறிவை விடுதலே தகும்’ என்றன பின்னவை.
இவ்வளவு நீண்ட நெடிய விளக்கம் எதற்கு? பௌத்த, சமணக் கொடைகளின் இன்றியமையாத் தன்மையை விளங்கிக் கொள்ளத்தான். இவ்வளவு ஏன்? ஒரே ஒரு செய்தி மட்டுமே போதும். ‘எவ்வயிரையும் கொல்லாதே; தன்னுயிர் போல் நேசி’ என்றன பௌத்த, சமண சமயங்கள். இப்படிச் சொன்னவர்களையெல்லாம் கொன்றன வைதீக சமயங்கள் மனிதர்களை மட்டுமல்ல; அறவாழ்வையும் தான்.
இப்பொழுது புரிந்திருக்கும் பெளத்த, சமணக் கொடைகளின் மேன்மை! ஏராளமாய் இருக்கும் கொடைகளில் சில ....... இதோ......:
1. மக்கள்மயப் படுத்திய கல்விக்கு வித்திட்ட ‘பள்ளிகள்’ – பௌத்த, சமணப் பள்ளிகள். மலைக் குடைவரைகளில் வசித்துவந்த துறவிகள் தங்களைத் தேடிவந்து அறிவுக்கொடை கேட்டவர்க்கெல்லாம் கொடுத்தனர். இந்த இந்த வருணத்தார் இன்ன இன்ன கல்வி பயிற்சி மட்டுமே பெறலாம் என்றிருந்த வருணாசிரமக் கல்விமுறையை முற்றிலும் மாற்றிப் புரட்சி செய்தவை இந்தப் பௌத்த, சமணப் பள்ளிகள். இது முதல் கொடையும் முதன்மையான கொடையும் நல்வாழ்வியலுக்கான இன்றியமையாகக் கொடையுமாகும்.
2. அனைவரும் ஒன்றுகூடிச் சிந்தித்து ஆராய்ந்து முடிவெடுக்கவும் நடைமுறைப்படுத்தவும் பயன்படும் ‘சங்கங்கள்’ – பௌத்த, சமணச் சங்கங்கள். வச்சிரநந்தியின் திரமிளசங்கம் – கி.பி.470. அறிவுச் சுதந்திரத்தையும் சுதந்திர அறிவையும் வழங்கிய ஒப்பரிய கொடை இது.
ஒருங்கிணைக்கும் சங்கச் செயல்முறைகள் மனிதகுல வரலாற்றில் சாதித்த சாதனைகளை அதன் பயன்களை விளக்கிடவும் வேண்டுமென?
3. கொல்லாமை, பொய்யாமை, கள்ளாமை, காமமின்மை / பிறன்மனை நயவாமை, கள்ளுண்ணாமை / மிகுபொருள் விரும்பாமை என்ற பௌத்தப் பஞ்சசீலங்களையும் சமணப் பஞ்சமா விரதங்களையும் தமிழர்களைப் பின்பற்ற வைத்து தமிழர் வாழ்வியலைச் செம்மைப்படுத்தியமை. இவற்றைச் செய்தால் – அதாவது கொன்றால், பொய்த்தால், களவு செய்தால், கள்ளுண்டால் ...... அவை எந்த ஒரு மனிதனும் செய்யத் தகாத “பஞ்ச மாபாதங்கள்” என்று இன்றும் மக்கள் வழங்கில் பேசுவதைக் கேட்கலாம். இந்த ஐந்தையும் ஒவ்வொரு மனிதனும் பின்பற்றினாலே உலகின் சச்சரவுகள் மிகுதியும் குறைந்துபோகும். இவற்றுள், அகிம்சை (கொல்லாமை) என்பது சமண சமயத்தின் தனிப்பெருங்கொடை என்பது சிறப்பாகக் குறிப்பிடத்தகுந்தது.
4. வேத வேள்வி ஒழிப்புச் சிந்தனை. மூடநம்பிக்கையை வளர்ப்பதும் உயிர், பொருள் எல்லாம் அழிப்பதுமான வேள்வியை ஒழித்தது தமிழர் வாழ்வியலை மறுமலர்ச்சியடையச் செய்தது.
5. பசி ஒழிப்புச் சிந்தனை. நல்லுள்ளங்களின் முயற்சியால் பசியை ஒழிக்க முடியும். பசியின் பின்னணியில் சுரண்டல் இருப்பதை அறியாதவரா புத்தர்?!..... சரி. எல்லோரின் பசியையும் காலந்தோறும் தீர்த்துக் கொண்டே இருப்பதற்கு என்ன கருவி இருக்கிறது? ஒன்றுமில்லை. அதற்காகப் பசியை ஒழிக்கும் நோக்கத்தை விட்டுவிட முடியுமா?! அமுதசுரபியால் நிறைவு செய்யலாமே!
இப்போது எண்ணிப் பாருங்கள். அமுதசுரபி என்பது பாத்திரமல்ல; உதவத் துடிப்போரின் எண்ணம் / மாற்ற முயல்வோரின் சிந்தனை! எத்தகைய சிந்தனைக் கொடை இது!
6. பரத்தமை ஒழிப்புச் சிந்தனையை முன்வைத்து அவருள்ளிருந்து சமூகச் சீர்திருத்தப் புரட்சிப் பெண்மணிகளாக மாதவியையும் மணிமேகலையையும் முன் எடுகோளாகக் கொடுத்தது மாபெரும் கொடையே!
7. சிறையொழிப்புச் சிந்தனையைக் கொடுத்தது பௌத்த மணிமேகலையின் கொடையாகும்.
8. சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி, மனிதநேயம், என்றெல்லாம் இன்று விரிவாகவும் ஆழமாகவும் விவாதிக்கப்படும் இந்தக் கோட்பாட்டுச் சிந்தனைகள் பௌத்த, சமண மெய்யியல்களிலிருந்து வளர்த்தெடுக்கப்பட்டவையே; இவை மனித சமூக மாண்புக்கான பௌத்த சமணக் கொடைகளே!
9. ஆசை அறுத்தல், மன ஒர்மைத் தியானநிலை போன்ற கோட்பாடுகளை முன்வைத்துத் தன் ஆன்மீகச் சொற்பொழிவுகளை / நூல்களை நிகழ்த்தும் தற்கால ஆன்மீகவாதிகளான ஓஷோ, வேதாத்தி, ரமணர், ஜக்கி வாசுதேவ் போன்றோரெல்லாம் பௌத்த, சமணச் சிந்தனைகளின் சாரத்தை எடுத்துத் தன்வயப்படுத்திக் கொண்டே ‘உல்டா’ செய்கின்றனர் என்றால் அது மிகையில்லை. ஆக, தற்கால ஆன்மீக சிந்தனைகளுக்கான ஞானக்கொடைகளில் பெரும்பான்மையானவை பௌத்த, சமணக் கொடைகளே!
10. இன்றும் வழிபாட்டிலுள்ள/வழிபாடற்றுப் போன பழம்பெரும் சைவ, வைணவக் கோயில்களில் சிலவோ பலவோ பௌத்த, சமணக் கட்டடக் கலைகளினால் விளைந்தவை. சில கோயில்கள் முழுமையும் பௌத்த, சமணக் கோயில்களை தன் ஆளுமைகப்படுத்திக் கொண்ட சைவ, வைணவச் கோயில்கள். சில கோயில்கள் கட்டட, சிற்ப, ஓவியக் கலையமைதிகளில் பௌத்த, சமண சமயங்களின் கொடைகளைப் பெற்றுக் கொண்டவை.
11. தமிழகம் முழுவதும் வழக்கிலும் வழிபாட்டிலும் இருந்துவரும் அய்யனார் கோயில்கள், சிலைகள், வழிபாட்டு முறைகள் எல்லாம் பௌத்த, சமண சமயங்களின் கொடைகளே! குதிரை வாகன அய்யனாரெல்லாம் பௌத்த அய்யனார் என்பதும் யானைவாகன அய்யனாரெல்லாமே சமண அய்யனார் என்பதும் ஆய்வாளர் கருத்தாகும்.
12. சாத்தனார் வழிபாடு போலவே அன்னபூரணி (மணிமேகலை வழிபாடு) பிடாரி வழிபாடு, கண்ணகி வழிபாடு, இந்திர வழிபாடு போன்றவையும் பௌத்த, சமணக் கொடைகளாகும்.
13. ஔவையாரின் புறநானூற்றுப் பாடல் 187 பௌத்த மெய்யியல் அறவியல் நூலான தம்மபதச் சுலோகம் 98ன் நேரடி மொழிபெயர்ப்பாக உள்ளதைத் தெ.பொ.மீ., மு.கு ஜகந்நாதராஜா ஆகியோர் ஆராய்ந்து நிறுவியுள்ளனர்.
இதேபோல், பௌத்தச் சக்கரமான அசோகத் தருமச் சக்கரத்தின் வழக்காற்றை ஏற்பதாக புறநானூறு 175ஆம் பாடலும் அதனை மறுப்பதாக புறநானூறு 233 ஆம் பாடலும் உள்ளதை சு.மாதவன் ஆராய்ந்து நிறுவியுள்ளார் (விவரங்களுக்கு மாதவன்.,சு. 2012: 283 – 287). எனவே, இவை பௌத்தத்தின் கொடைகளாகும்.
14. சங்க இலக்கியத்துக்கு அடுத்துத் தோன்றிய பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள 11 அறநூல்களில் – ஆசாரக்கோவை, முதுமொழிக் காஞ்சி ஏலாதி நீங்கலாகப் பிற 8 நூல்களிலும் பௌத்த, சமண அறச்சிந்தனைகளின் கொடைத் தடயங்களைக் காணமுடிகிறது (பயில்க., மாதவன்.,சு 2008).
அதேபோல், தமிழ்க் காப்பியங்கள் அனைத்தும் (ஐம்பெருங் காப்பியங்களும் ஐஞ்சிறு காப்பியங்களும்) பௌத்த, சமணக் காப்பியங்களாகவே உள்ளமை தமிழர் வாழ்வியலுக்குப் பௌத்த, சமண சமயங்கள் கொடுத்த அழியாத வாழ்வியல் சிந்தனைக் கொடைகள் என்பதை மானுடம் உள்ளளவும் உரத்துச் சொல்லிக் கொண்டே இருக்கும்.
15. 20ஆம் நூற்றாண்டில் மட்டும் அதாவது ஒரே ஒரு நூற்றாண்டில் மட்டும் தமிழில் வெளிவந்துள்ள பௌத்த, இலக்கிய, மெய்யியல், ஆய்வுகள் கலைகள் குறித்த ஏராளமான தகவல்களை முனைவர் க.ஜெயபாலன் எழுதியுள்ள “பௌத்த தமிழ் இலக்கிய வரலாறு (20ஆம் நூற்றாண்டு)” என்ற நூல் தொகுத்துத் தந்துள்ளது. இந்நூலில் காணலாகும் பௌத்த நூற் கடலைக் காணும்போது 20, 21ஆம் நூற்றாண்டிலும் பௌத்தம் தமிழர் வாழ்வியலுக்கான கொடையை வழங்கிவருகிறது என்பது தெளிவாகிறது.
16. எழும்பூர் மகாபோதி சொசைட்டி, சென்னை பௌத்த சங்கம், புத்தர் ஒளிப் பன்னாட்டுப் பேரவை, மதுரை புத்த விகாரை போன்றவை தற்கால பௌத்த வாழ்வியலுக்கான கொடைகளை வழங்கிவருகின்றன.
17. மேல்சித்தாமூர் சமணமடம், குந்தகுந்தநகர் மடம் போன்றவை தற்காலச் சமண வாழ்வியலுக்கான கொடைகளை வழங்கிவருகின்றன.
18. தமிழரின் பேச்சுவழக்கில் நூற்றுக்கணக்கான பாலிமொழி பிராகிருத மொழிச் சொற்கள் கலந்துள்ளன. தமிழில் கலந்துள்ள இச் சொற்கள் வேற்றுமொழிச் சொற்கள் என்பதுவே மறந்துபோய்த் தமிழ்ச் சொற்களாகவே மாறிப்போய்விட்ட நிலையில் தமிழர் வாழ்வியல் இரண்டறக் கலந்துவிட்டன. போதி, பாடசாலை, விகாரை, சீலம், தருமம், கிராமம் போன்றவை பாலிமொழிச் சொற்கள். பாவம், புண்ணியம், சங்கம், அகிம்சை போன்றவை பிராகிருதச் சொற்கள். இவ்வாறு கலந்துள்ள பாலிமொழி, பிராகிருதமொழிச் சொற்கள் முறையே பௌத்த, சமணத்தின் கொடைகளே.
19. சங்க இலக்கியத்தில் காணலாகும் ‘வடக்கிருத்தல்’ என்னும் ‘சல்லேகனை’ முறை சமண சமயத்திற்கே உரியது. இந்தவகையில், வடக்கிருத்தல் சமணத்தின் கொடை எனலாம்.
20. இன்றும் ‘சைவ உணவு’ என வழங்கப்படும் ‘காய்கறி உணவுமுறை’ பௌத்த, சமணத்தின் கொடையாகும். இத்தகைய, காய்கறி உணவு முறை – தாவர உணவு முறையில் மிகவும் கறாராக இருப்பவர்கள் சமணர்களே. எனவே, ‘சமண உணவு’ என அழைக்கப்பட வேண்டிய முறையை, சைவ சமய எழுச்சிக்குப் பின் ‘சைவ உணவு’ எனத் தன்வயப்படுத்திக் கொண்டுள்ளன. எனவே, இந்த உணவு முறை சமண சமயத்தின் கொடையாகும்.
21. ‘தீபாவலி’ என்பது புத்தரும் மகாவீர்ரும் வீடுபேறடைந்த நாளில் தீபஆவலி (விளக்குகளின் வரிசை) வைத்துக் கொண்டாடுவது வழக்கம். எனவே, தீபாவலி பௌத்த, சமணத்தின் கொடையாகும்.
22. அரசமர வழிபாடு பௌத்தத்தின் கொடையாகும்.
23. சமணர்திடல், அமண்குடி, அருக மங்கலம் போன்ற ஊர்ப்பெயர்கள் சமணத்தின் கொடைகளாகும்.
24. பூதமங்கலம், பள்ளிவிருத்தி, போதிமங்கலம், சங்க மங்கலம், புத்தமங்கலம் போன்ற ஊர்ப்பெயர்கள் பௌத்தத்தின் கொடைகளாகும்.
25. சாஸ்திர தானம், வஸ்திரதானம், அபயதானம், அன்னதானம் ஆகிய நான்கு தானங்களை இந்தியச் சமூகத்தில் நடைமுறைப்படுத்தியது சமண சமயமாகும். இந்த வகையில், கல்வி, ஆடை, அடைக்கலம், உணவு ஆகியன வழங்குதல் என்னும் தமிழர் வாழ்வியலில் இடம்பெறும் அறநெறிகள் சமணத்தின் கொடைகளாகும். ஓரிரு தானங்களைச் சங்க கால அரசர்கள் முன்பே புரிந்துள்ளனர் என்பதும் பௌத்தத்திலும் இத்தகைய தான முறைகள் உண்டு என்பதும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.
26. இன்று பட்டிதொட்டியெல்லாம் பரவலான மக்கள் ஈர்ப்புக்குரியனவாக மாறியுள்ள தருக்கநெறிப் பட்டிமண்டபம், வழக்காடு மன்றம் எல்லாம் பௌத்த, சமணக் கொடைகளால் வளம்பெற்றவையே.
தொகுப்புரையாக
சங்க காலத் தமிழர் வாழ்வியல் அகம், புறம் என்ற திணை வாழ்வியலாக இருந்தது. அறஇலக்கியக் காலத்திலும் திணைமாலை ஐம்பது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது கைந்நிலை ஆகிய 6 நூல்கள் அகத்திணையைப் பாடின. களவழி நாற்பது என்ற 1 நூல் புறத்திணை பாடியது. இதர 11 நூல்களும் அறநூல்கள், சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை பத்துப்பாட்டு என்ற இரு தொகை நூல்களிலும் அகம், புறம் இரண்டிலும் ‘அறம்’ கலந்து பேசப்பட்டது. ஆனால். பதினெண்க்கீழ்க் கணக்கிலுள்ள 11 அறநூல்களும் அறம் வலியுறுத்தலையே முதன்மை நோக்கமாகக் கொண்டு பேசுகின்றன. சுருங்கச் சொன்னால், சங்க காலத்தில் வாழ்வியல் அறம் ஒரு கூறாகப் பேசப்பட்டது. அற நூல்களிலே வாழ்வியலே அறம் என்று கூராகப் பேசப்பட்டது.
சங்க இலக்கிய வாழ்வியலுக்குத் திணைப் பின்னணி இருந்தது. அற இலக்கிய வாழ்வியலில் திணைப் பின்னணி குறைந்தது. அறம் முன்னணி பெற்றது. சங்க காலத்தில் அகம், புறம் பெற்றிருந்த இடத்தை அற இலக்கிய, காப்பியக் காலத்தில் அறம் பெற்றது. தமிழர் வாழ்வியல் திணை எனும் முப்பட்டகப் பொருண்மையிலிருந்து ஒற்றைப் பட்டகப் பொருண்மையைப் பெற்றது. அந்த ஒற்றைப் பட்டகம் ‘அறம் / ஒழுக்கம்’ என்பதாகும். இருந்த போதிலும், முற்று முழுதான திணைப்பின்னணி அற இலக்கியங்களில் இல்லாவிட்டாலும் காப்பியங்களில் இடம்பெற்றிருக்கக் காணமுடிகிறது.
காப்பியங்களில் திணைப் பின்னணியோடு புலன்கடந்த உலகியல் (Meta Physical World) கட்டமைக்கப்பட்டிருப்பதையும் காண முடிகிறது.
ஆக மொத்ததில், அகத்திணையின் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்ற இயங்கியல் பின்னணி இல்லாமல்போய் பௌத்த, சமண அறவியல் பின்னணி முன்னணிபெற்றது. அகத்திணை இல்லறமானது; புறத்திணை துறவறமானது. வைதீகநெறி பௌத்த சமணநெறி, தமிழ்த்திணை வாழ்வியல் மூன்றுக்கும் நடந்த போராட்டத்தில் பௌத்த, சமண நெறி வென்றதால் தமிழர் வாழ்வியலில் புதியதோர் மாற்றம் நிகழ்ந்த்து. புறத்திணையில் இருந்த போர், வேள்வி என்பவையும் முற்றிலும் அற்றுப்போன போக்கு உருவானது. இத்தகைய பின்னணியில்தான், தமிழர் வாழ்வியலில் பௌத்த சமணக் கொடைகள் நீக்கமற நிறைந்திருக்கும் ஆக்கமுறு போக்கு உருவானது.
ஆழ்வியல் நூல்கள்
சுப்பிரமணியன்.,ச.வே. தொல்காப்பியம் தெளிவுரை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை -108, 2010.
போதிபாலா.,பிக்கு, ஜெயபாலன்.,க. அன்பன்.,இ. (பதி.ஆ), தமிழ்ப் பண்பாட்டில் பௌத்தம், காவ்யா, சென்னை -24, 2013.
மாதவன்..சு. தொல்காப்பியத்தில் மார்க்சீய இயங்கியல் அணுகுமுறைகளுக்கான அடிப்படைகள், நியூசெஞ்சுரியின் உங்கள் நூலகம் - மாத இதழ், நியூ செஞ்சுரி வாசகர் சங்கம், சென்னை – 14, அக்டோபர் 2014.
மாதவன்.,சு. புறநானூற்றில் பௌத்த சிந்தனைகள், இந்தியச் சமூகம், மார்க்சும் பெரியாரும், அனன்யா, தஞ்சாவூர், 2005.
மாதவன்.,சு. தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த, சமண அறங்களும், செம்மொழி, தஞ்சாவூர் -5, 2008.
மாதையன்.,பெ. மணிமேகலை உருவாக்கமும் சமுதாயச் சூழலும், மணற்கேணி – இதழ்., மணற்கேணி பதிப்பகம், சென்னை -5, ஜுலை – ஆகஸ்ட் 2013.
வேங்கடசாமி., மயிலை.சீனி, பௌத்தமும் தமிழும், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை-14, 2007.
வேங்கடசாமி.. மயிலை. சீனி, சமணமும் தமிழும், தி.சை.சி. நூற்பதிப்புக் கழகம், சென்னை – 18, 2000.
வேலுப்பிள்ளை.,ஆ. தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும், பாரி புத்தகப் பண்ணை, சென்னை -5, 1985.
ஜெயபாலன்.,க. பௌத்தத் தமிழ் இலக்கிய வரலாறு (20ஆம் நூற்றாண்டு), தமிழ்நாடு பௌத்த சங்கம், சென்னை -40, 2014.
Subscribe to:
Post Comments (Atom)
தமிழர் வாழ்வியலுக்கு பௌத்த, சமணத்தின் கொடை பற்றிய ஆழமான, செறிவான பதிவைக் கண்டேன். நன்றி.
ReplyDeleteநன்றியும் மகிழ்வும் ....
ReplyDeleteநன்றியும் மகிழ்வும் ....
ReplyDelete