Monday, 27 April 2020

வாழ்வியல் தடமாற்றமும் வள்ளுவரின் தடுமாற்றமும்

எழுத்தாளர்: சு.மாதவன் பிரிவு: உங்கள் நூலகம் - ஆகஸ்ட் 2018 வெளியிடப்பட்டது: 23 ஆகஸ்ட் 2018
வாழ்வியல் தடமாற்றமும் வள்ளுவரின் தடுமாற்றமும்
சங்க இலக்கியங்கள் திருக்குறள்
மானுட வாழ்வியல் காட்டுமிராண்டி நிலையிலிருந்து கணினி, இணைய நிலையை வந்தடைந்திருக்கிறது. இதற்கிடைப்பட்ட பல்லாயிரமாண்டு காலப் பரிணாம வளர்ச்சியையும் பரிமாண நிலைகளையும் உள்ளடக்கிக் கொண்டு உயர்ந்துள்ளது. தனிமனித குடும்ப, சமூக, அரசு நிலைகளில் மானுட வாழ்வியல் தத்தமக்கென ஒழுகலாற்று நெறிகளை உருவாக்கிச் செம்மைப்படுத்திக் கொண்டே இயங்குகிறது. மரபுகள், விழுமியங்கள், அறநெறிகள் மனிதனின் இயல்புநிலைகளைச் செம்மைப்படுத்து கின்றன. தமிழர்களின் வாழ்வியலைச் சங்காலச் சமூக அகம், புறம் என்ற பாகுபாட்டுமுறை பல்வேறு இலக்கிய, இலக்கணங்களின்வழி உயிர்ப்புமிக்கதாக நிலவச்செய்யும் வல்லமையுடன் வாழ்கிறது. எனினும், காலந்தோறும் மானுட வாழ்வியல் தன் இயல்புக்கேற்ற மேன்மைக் கூறுகளைக் கொண்டிருப்பதைப் போலவே கீழ்மைக் கூறுகளையும் கொண்டிருக்கத்தான் செய்கிறது. இதை வாழ்ந்துணர்ந்து அறிந்த சான்றோர் பெருமக்கள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குப் பகிர்ந்தளிக்கும் பாங்கை இலக்கிய ஆவணங்களில் கண்டறியலாம். அத்தகைய இலக்கிய ஆவணங்களில் தலைமை சான்றது திருக்குறள்.
valluvar 350கால மாற்றங்களுக்குரிய அறநெறிப் புரிந்துணர்வு மாற்றங்கள் வள்ளுவ நெறியிலும் தேவைப்படலாம். ஆனால், மனித இயல்புநிலைகளை மதிப்பிட்டுரைப் பதில் வள்ளுவத்திற்கு நிகர் வள்ளுவமே. மானுட வாழ்வியலில் தொடர்ச்சியாய்ப் பின்பற்றத்தக்க தடங்கள் - நெறிகள் ஏராளம்ஞ் ஏராளம்... ஏராளம்... இவை சமூக இயங்கியலின் உற்பத்திப் பொருண்மைகள் மனிதர்கள் சமூகமாக இயங்குவதால் கிடைத்தவை; கிடைப்பவை இவை. இவை சமூக மனிதனின் மேன்மைநிலை இயல்புகளை - சமூக மேம்பாட்டுப் பண்பாட்டுக் கூறுகளை அடையாளம் காட்டுபவை. சமூக மனிதன் மனிதர்கள் அல்லாத தனிமனிதன் மனிதர்களின் இயல்புநிலைகளில் மேன்மைக் கூறுகளைப் போலவே கீழ்மைக் கூறுகளும் இயங்குகின்றன. அவை சமூக இயங்கியலில் - அறநெறிப் பண்பாட்டு வாழ்வியலில் தெறிப்புகளையும் விரிசல்களையும் குளறுபடிகளையும் ஏற்படுத்துபவை. இவை வாழ்வியல் தடமாற்றங்களை உருவாக்குபவை. இவற்றையெல்லாம் நுண்ணிதின் நோக்கி மானுட வாழ்வியல் மேன்மைக்கெனவே குறள்படைத்த வள்ளுவன் ஒரே ஒரு குறளில் அறநெறி முடிவு கூறமுடியாமல் தடுமாறுகிறான் என்பதைக் கூறவே இக் கட்டுரை.
வள்ளுவ வாழ்வியல் கோட்பாட்டு உறுதிநிலைக் கூறுகள்
தமிழ மானுட வாழ்வியலையும் அதன் பன்முகக் கருத்தியல் தளங்களையும் வாழ்ந்துணர்ந்தறிந்த வள்ளுவர் உலக மானுடமே போற்றத்தக்கதும் பின்பற்றத்தக்கதுமான வள்ளுவத்தை வடித்துத் தந்துள்ளார். தமிழின் இதர இலக்கியப் பெரும்பரப்பின் விழுமியத் தகுதிப்பாடும் வள்ளுவத்தின் விழுமியத் தகுதிப்பாடும் ஒரே துலாக்கோலில் சீர்தூக்கத் தக்கவை. அத்தகைய விழுமிய வாழ்வியல் கோட்பாட்டு உறுதிநிலைக் கூறுகளை வள்ளுவத்திலிருந்து கீழ்வருமாறு கணிக்கலாம்:
1. வள்ளுவத்துக்கு முந்தைய காலத் தமிழர் வாழ்வியல்
2. வள்ளுவரே கண்டெடுத்த கோட்பாடுகள்
இவற்றுள், முதலாவது வகை வாழ்வியல் கோட்பாடுகளை வள்ளுவர் குறிப்பிடும்போது ‘என்ப’, ‘என்பது’, ‘எனப்படுவது’, ‘யாதெனில்’, ‘யாதெனின்’, ‘மாசுஅற்றார் கோள்’ போன்ற சொற்பதிவுகளோடு வரையறுக்கிறார். இரண்டாவது வகை வாழ்வியல் கோட்பாடுகளை ‘எவ’ ‘எவனோ’, ‘என்னாம்’, ‘என்ஆற்றும்’ ‘என்னைகொல்’, ‘என்’, ‘எவன்கொலோ’, ‘உண்டோ’ போன்ற சொற்பதிவுகளோடும் தேற்றேகாரம், வினாவேகாரம், பிரிநிலையோகாரம், ஈற்றசையேகாரம், விளியேகாரம் ஆகிய ஏகாரப் பதிவுகளோடு; ‘வைக்கப்படும்’ ‘நினைக்கப்படும்’ போன்ற சொற்றொடர்ப் பதிவுகளோடும் ‘யாம் அறிவதில்லை’, ‘யாம்மெய்யாக் கண்டவற்றுள்’, ‘யாம்கண்டது இல்’ என்ற தொடரமைப்புப் பதிவுகளோடும் வரையறுக்கிறார்.
இவ்வாறெல்லாம் அமையும் வள்ளுவ வாழ்வியல் கோட்பாடு உறுதிநிலைக் கூறுகள் விரிவான நுண்ணாய்வுக்குரியவை.
முன்னோர் மொழிபொருளே பொன்னேபோல் போற்றுவதும் புதியன புகுத்தலுமான தன் சமூகக் கடமையைத் தெள்ளிதின் ஆற்றிய வள்ளுவ வாழ்வியலின் பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் என்பது தெளிவு.
வாழ்வியல் கோட்பாட்டுத் தடமும் தடமாற்றமும்
மானுட வாழ்வியல் கோட்பாடுகளைத் தருகிறது. கோட்பாடுகள், நெறிகளை; நெறிகளின் தடங்களை அமைக்கின்றன. வாழ்வியல்நெறித் தடங்களின்வழியில் வாழ்க்கை நடைபோடுகிறபோது வாழ்வியல் செம்மையாகிறது. வாழ்வியல் ஒழுகலாறுகள் தடங்களைவிட்டுத் தடம் மாறுகிறபோது வாழ்க்கை தடுமாறுகிறது. சமூக வாழ்க்கையின் இயற்கைப் போக்கிலும் தனிமனித வாழ்க்கையின் இயற்கைப் போக்கிலும் இதைக் கண்ணுறமுடியும்.
தனிமனிதர்களின் இணைவு சமூக இயங்கிய லாகிறது; சமூகம் இயங்குகிறது. ஒத்தது அறிதலும் ஒப்புரவு அறிதலும் மனித உடைமைகள் பத்தும் வள்ளுவ வாழ்வியல் கோட்பாட்டுத் தடங்களை வடிவமைக்கிறது; செயற்படுத்துகிறது; செம்மைப் படுத்துகிறது. இவற்றுள் ஏற்படும் புரிதல் சிதைவுகள் சமூகச் சிதைவுகளுக்குக் காரணங்களாகின்றன. இத்தகைய சமூகநெறிச் சிதைவுகளே வாழ்வியல் தடமாற்றத்தின் அடிக்கற்கள். அடிக்கற்களின் தடமாற்றத்தால் சமூக இயக்கம் தடுமாறுகிறது.
ஆக, தடம் என்பது மானுடம் பயணித்த பயணிக்க வேண்டுமென்ற இயக்குநெறி; இலக்குநெறி, இவ் இயக்குநெறி அதற்குரிய இலக்கு நெறியிலிருந்து வழுவும்போது தடமாற்றம் நிகழ்கிறது. தடமாற்ற மானது இலக்குநெறியிலிருந்து வழுக்குநெறியாகி இழுக்குநெறியாகிறது. இவை, மானுட வாழ்வியலின் இயல்பான போக்கில் நிகழ்வனவே. அவ்வப்போது மானுடம் தன் இலக்குநெறித் தடத்தைப் பற்றி முன்னேறுகிறது.
வள்ளுவ வாழ்வியல் கோட்பாட்டுத் தடங்கள்
‘மாசற்றார் கோள்’; என்பது ‘புலம்வென்ற காட்சி’, ‘மாசறுகாட்சி’, ‘நடுக்கற்ற காட்சி’, ‘கடனறி காட்சி’, ‘துளக்குற்ற காட்சி’ போன்றவற்றால் கிடைப்பது. வள்ளுவம் சொன்ன மாசற்றார் கோளுக்குச் சான்று வள்ளுவமே, ஏனெனில், வாழ்வியல் நுட்பத்தை நுட்பமாக ஆய்ந்து திட்பமாய்ச் சொன்னது வள்ளுவம் மட்டுமே. தமிழில் மட்டுமல்ல, மானுட மொழிகள் எந்தவொன்றிலும் வள்ளுவத்துக்கு நிகரான நூலிருக்க வாய்ப்பில்லை. அத்துணை ஈடிலாப் பீடுடைய வள்ளுவ வாழ்வியல் திருக்குறள் முழுமைக்குமாகப் பரவித் திளைக்கிறது.
வள்ளுவ வாழ்வியல் என்பது அறம், பொருள், இன்பம் என்று பாடுபொருள் சார்ந்து முப்பால்களால் இயன்றது. ஆனால், சங்கமரபின்படி அணுகினால், அக வாழ்வியல், புற வாழ்வியல் என்று இரு பகுப்புக்குள் அடங்கிடும் தன்மையது. தனிமனிதர்களின் அகச்செம்மை குறித்துப் பேசுமிடங்களெல்லாம் அக வாழ்வியல் கோட்பாட்டுத் தடங்களையும் குடும்ப - சமூக மனிதர்களின் புறச்செம்மை குறித்துப் பேசுமிடங்களெல்லாம் புறவாழ்வியல் கோட்பாட்டுத் தடங்களையும் போட்டுவைத்துள்ளது வள்ளுவம்.
தடங்களை இயக்கும் வாழ்வியல் செயல்நெறி களெல்லாம் இருவேறு பொருளியல்களுக்குள் இயக்குகின்றன. அவை முறையே,
1. பருப்பொருளியல்
அதாவது, கட்புலனாகும் பொருள்கள், வாழ்வியலில் ஏற்படுத்தும் தடங்கள் தடமாற்றங்கள்
2. நுண்பொருளியல்
அதாவது, சிந்தனைப் புலனாகும் பொருள்கள், வாழ்வியலில் ஏற்படுத்தும் தடங்கள் தடமாற்றங்கள். ஆகியனவாகும். பருப்பொருளியலால் உயிரியல் நுகர்வும் நுண்பொருளியலால் வாழ்வியல் நுகர்வும் தொழிற்படுகின்றன. இத்தகைய பருப்பொருளியலுக்கும் நுண்பொருளி யலுக்குமான இணைவு, எதிர்வுகளே வாழ்வியலின் தடங்களை அமைக்கின்றன; தடமாற்றங்களை விளைக்கின்றன.
வள்ளுவர் பருப்பொருளியலைப் பொருட்பாலிலும் நுண்பொருளியலை அறத்துப்பாலிலும் காமத்துப் பாலிலும் வரையறுத்தார். இதனால்தான் வள்ளுவர் ‘பொருளுடைமை’யை எந்த ஓ£¢ இடத்திலும் ‘உடைமை’ எனக் கொள்ளவில்லை. மாறாக, விழுமிய பண்பறநெறிகளையே ‘உடைமைகள்’ (10) என்றார். இன்னும் நுணுகிநோக்கினால், பருப்பொளுடைமை சார்ந்து பேசும் பொருட்பாலிலும் ஐந்து உடைமைகளை இடைமிடைத்தார். ஏனெனில், பருப் பொருளுடை மையும் நுண்பொருளுடைமையினாலேயே சிறக்கும் என்பது வள்ளுவ நோக்கு.
இவ்வாறெல்லாம் தெளிந்த வரையறைகளோடு வாழ்வியலை அணுகினாலும், பின்பற்றினாலும் பருப்பொருளியல் நோக்கு நுண்பொருளியலை அவ்வப்போது வீழ்த்தத்தான் செய்கிறது. இது மானுட வாழ்வியல் இயற்கையும் சமூக இயங்கியலுமாகும்.
வாழ்வியல் தடமாற்றமும் வள்ளுவரின் தடுமாற்றம்
மேலே கண்ட பருப்பொருளியல் வாழ்வியல் நுண்பொருளியல் வாழ்வியலை நோக்கி வரவிடுவதில்லை. மாறாக, பருப்பொருளியல் நுகர்வு நுண்பொருளியல் சிந்தனையைத் தடுத்துவிடுகிறது. ஏனென்றால், பருப்பொருளியல் தேவைகளின் நிறைவில்தான் உயிர் வாழ்வியல் நிறைவு பெறுகிறது. எனவே, பருப்பொருளியல் வேட்கையும், தேடுதலும் வாழ்வியலின் இன்றியமையாத செயன்மைகளாகி விடுகின்றன. இவ்வாறான, பருப்பொருளியல் வேட்கையின் விளைவால் அடக்கமின்மை, அருளின்மை, அவா, அழுக்காறு, அறிவின்மை, அன்பின்மை, ஆள்வினையின்மை, இரவு, இனியவை கூறாமை, இன்னா செய்தல், உட்பகை, ஒப்புரவின்மை, ஒழுக்கமின்மை, கண்ணோட்டமின்மை, கயமை, கள்ளம், கூடா ஒழுக்கம், கூடா நட்பு, கொடுங் கொன்மை, கொலை, சான்றாண்மை இன்மை, சிற்றினஞ்சேரல், சூது, தீ நட்பு, தீவினை, நல்குரவு, நன்றியில் செல்வம் சேர்த்தல், பண்பின்மை, பிறனில் விழைதல், புறங்கூறுதல், பெரியாரைப் பிழைத்தல், பேதைமை, பொறையின்மை, மானம் இழத்தல், மெய்யுணர்தலின்மை, வலியறியாமை, வாய்மையின்மை, வெகுளி, வெஃகுதல், வெருவந்த செய்யாமை என்றவாறு தனி மனித வாழ்வியலையும் சமூக வாழ்வியலையும் கீழ்மைப்படுத்தும் போக்குகள் மிகுகின்றன. இத்தகைய கீழ்மைப் போக்குகள் இல்லாத உலகம் உருவாக வேண்டும் உருவாக்க வேண்டும் என்பதே வள்ளுவத்தின் இலக்குநிலை.
வள்ளுவர் தன் உயர்சிந்தனையால் மானுட வாழ்வி யலைச் செம்மைப் படுத்தத்தக்க நெறிமுறைகளைப் பலவாறு முன்மொழிகிறார். தான் முன்மொழிந்த நெறிமுறைகளனைத்தையும் பருப்பொருளியல் தேவைகள் அழித்துவிடுவதைக் கண்ணுறுகிறார். வாழ்க்கை என்பது பருப்பொருளால் இன்பம் துய்ப்பதாய் இருந்தபோதிலும், அந் நுகா¢வில் நெறிமுறைகள் தேவை என்பதால் அறமுரைக்கிறார். என்னதான் அறமுரைத்தாலும் இறுதியில் பொருளியல் வாழ்க்கையில் கயமைதான் மிஞ்சுகிறது என்பதே வள்ளுவரின் வாழ்வியல் கண்டுபிடிப்பு. எனவேதான், அறத்துப்பால், பொருட்பால் இரண்டின் நிறைவாய் ‘கயமை’ அதிகாரத்தை வைத்துள்ளார் என்பது எண்ணிஎண்ணி நகுவதற்குரியது.
இவ்வாறெல்லாம், வாழ்வியலில் நிகழும் தடமாற்றங்களைக் கண்ட வள்ளுவர் இவற்றுக் கெல்லாம் காரணமாகத் திகழும் ஒரு மனிதப் பண்பைக் கண்டறிகிறார். அதுதான் கயமை. கயமைத் தன்மை நிரம்பியவன் கயவன் என்றால் அவனுடைய செயல்பாடு எப்படியிருக்கும், தோற்றம் எப்படியிருக்கும், வெளிப்பாடு எப்படியிருக்கும் என்று ஒரு கேள்வியை எழுப்பிச் சிந்தித்து விடையிறுக்கிறார். கயவனும் மனிதனைப் போலேவே இருப்பான்; அவனுக்கான ஏதோ ஒரு குறியீட்டை - வெளிப்பாட்டைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால் அவ்வாறு என்னால் கண்டறிந்து சொல்லமுடியவில்லை என்கிறார் வள்ளுவர்.
‘என்னால் கண்டறிந்து சொல்லமுடியவில்லை’ என்று வள்ளுவரே தடுமாறிய ஒரே ஒரு இடம் இதுதான். வள்ளுவரையே தடுமாற வைத்த கயமை அதிகாரத்தின் முதற்குறள் இதுதான்:
“மக்களே போல்வர் கயவர்; அவரன்ன
ஒப்பார் யாம்கண்டது இல்” (108:1)
‘மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்றும் ‘யாம் மெய்யாக் கண்டவற்றுள்’ என்றும் மானுட வாழ்வியலுக்கான தடம் அமைத்த வள்ளுவர், பருப்பொருளியல் நுகர்வால் வாழ்வியல் தடமாற்றங்கள் நிகழ்வதைக் கண்ணுறுகிறார். இத் தடமாற்றத்திற்கு அடிப்படைக் காரணமாக விளங்குவது இக் கயமைக் குணமாகும் என்பதைக் கண்டு அறிவிக்கிறார்.
வாழ்வியல் தடமாற்றத்தை உற்பவிக்கும் கயமைக் குணம் ஒழிந்த சமூகமே மனிதநேய வாழ்வியலை - சமத்துவ வாழ்வியலை உற்பவிக்கும் என்பது வள்ளுவரின் அறவியல் நோக்குநிலை. ஆனானப்பட்ட வள்ளுவரையே தடுமாற வைக்கும் கயமைக்கு முன்பாக நாமெல்லாம்...?! எனவே, ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் எதிர்படும் இந்தக் ‘கயமை’ ஒழிந்த சமூகம் அமைப்பதே வள்ளுவருக்கு நாம் செய்யவேண்டிய செய்ந்நன்றியாகும். ஏனெனில்,
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு”
என்பதும் வள்ளுவநெறியல்லவா?! வள்ளுவத்தை வாயால் போற்றாமல் வாழ்க்கையால் போற்றுவோமாக!

No comments:

Post a Comment