உலகிலுள்ள மொழிகளிலெல்லாம் எழுத் துக்கும் சொல்லுக்கும் இலக்கணமிருக்க தமிழ் மொழி மட்டுமே பொருளுக்கும் இலக்கணம் பெற்றிருக்கும் பெருமையைப் பெற்றுள்ளது. பொருள் இலக்கணம் என்பது எழுத்து, எழுத்துக் களால் ஆன சொல், சொல்லின் பொருள் என்ற பொருண்மையில் தமிழில் பொருளிலக்கணம் உருவாகவில்லை. சொல்லின் பொருள் என்பது சொல்லிலக்கண வரையறைகளுக்குள்ளே அடங்கி யுள்ளது. ஆக, சொல்லின் பொருளைப் பேசுவ தாக இல்லாமல் வாழ்வின் பொருளைப் பேசுவ தாக அமைந்துள்ளது பொருளிலக்கணம். எனவே, பொருளிலக்கணம் என்பது மானுடத் தமிழரின் வாழ்விலக்கணத்தைப் பேசுவது என்பது தமிழரின் இலக்கண நோக்குநிலைகளுள் ஒன்று. சுருங்கச் சொன்னால் மொழியின் இலக்கணத்தை எழுத்திலக் கணமும் சொல்லிலக்கணமும் வரையறுக்கின்றன. மொழிபேசும் மக்கள் வாழ்வின் இலக்கணத்தைப் பொருளிலக்கணம் வரையறுக்கிறது. மொழி இதைத்தான் தொல்காப்பியம் எனும் அரும்பெரும் கருவூலம் எழுத்து, சொல், பொருள் எனும் முப்பகுப்பாய் நின்று சொல்லிக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு பொருளின் இயக்கம், இயங்கும் விதம், இயங்குவதன் பயன் ஆகியவற்றின் ஒருங் கிணைவையும் ஒத்திசைவையும் ஆராய்வது ‘இயங்கியல்’ எனப்படும். ஒவ்வொரு மெய்யியலும் அல்லது கல்விப் புலமும் அதற்கான இயங்கி யலைப் பெற்றிருக்கும். மார்க்சீய இயங்கியலை வரையறுக்கும் கோட்பாட்டிற்கு ‘மார்க்சீய இயங்கியல்’ என்று பெயர். இத்தகைய, மார்க்சீய இயங்கியல் கோட்பாடு அணுகுமுறை 19-ஆம் நூற்றாண்டில் மார்க்சால் தோற்றுவிக்கப்பட்டது. ஜெர்மானிய தத்துவம், பிரஞ்சு அரசியல், ஆங்கிலேயப் பொருளாதாரம் ஆகியவற்றை டார்வின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டு அணுகுமுறையில் ஆராய்ந்ததால் தோன்றியது மார்க்சீய இயங்கியல். எனவே, சமூகத்தை அதன் பரிமாணங்களையும், அதன் வழியிலான பரிமாணங் களையும் ஆராய்வதற்கேற்ற சிறந்த ஆய்வு அணுகு முறையாக மார்க்சீய இயங்கியல் திகழ்கிறது. இத்தகைய, மார்க்சீய இயங்கியல் அணுகுமுறை களுக்கான அடிப்படைகளின் கருக்கூறுகள் ஒவ்வொரு சமூகத்திலும் தோன்றி வளர்வனவாய் அமைதல் இயல்பு. அந்த வகையில் தமிழ்ச் சமூகத்தில் மார்க்சீய இயங்கியல் அணுகுமுறை களுக்கான அடிப்படைக் கருக்கூறுகள் தோன்றி வளர்ந்த பாங்கைத் தொல்காப்பியத்துக்குள் தேடுவதை இக்கட்டுரை நோக்கமாகக் கொண்டு முயல்கிறது.
பொருள்முதல்வாதச் சிந்தனை
உலகியல் ஆதிகாலந்தொட்டு, இரண்டு சிந்தனை மரபுகள் இயங்கி வருகின்றன:
1.            பொருள் இருக்கிறது, இயங்குகிறது; விளை விக்கிறது. இதைக் கண்ணுற்று ஆராயும்போது சிந்தனை பிறக்கிறது. இவ்வாறு, பொருளை முதலாகக் கண்டு- முன்வைத்து- தோன்றும் சிந்தனை “பொருள்முதல்வாதச் சிந்தனை.”
2.            கருத்தை முன்பே நாமாக உருவாக்கிக் கொண்டு காணும் பொருளுக்கோ/ காணாப் பொருளுக்கோ ‘இன்ன பொருள்’ என்று பொருள் சூட்டு கிறோம். பின்னர், அது இயங்குவது, விளைப்பது குறித்தெல்லாம் கருத்துக்களை நாமாகவே அப் பொருளின்மீது ஏற்றிக் கூறுகிறோம். இப்படி, நம் கருத்தைப் பொருளின் மீது கற்பித்துக் கூறும்/ கூறுவதால் தோன்றும் சிந்தனை. “கருத்துமுதல்வாதச் சிந்தனை.”
இரண்டும், பொருள் முந்தியதா? கருத்து முந்தியதா? எனும் தருக்கத்தால் விளைவன. பொருள் இல்லாமல் சிந்தனை இல்லை; சிந்தனை இல்லாமல் செயல் இல்லை; செயல் இல்லாமல் விளைவு இல்லை; விளைவு இல்லாமல் உலக இயக்கம் இல்லை என்று நோக்கும் சிந்தனை மரபைப் பொருள் முதல்வாதச் சிந்தனை மரபு என்கிறோம். இச்சிந்தனை மரபு, தொல்காப்பியத்தில் இடம் பெற்றுள்ளதை ஆராயலாம்.
மார்க்சீய இயங்கியல்
மார்க்சீய இயங்கியல் என்பது மூன்று அடிப் படைகளைக் கொண்டது:
1.            பொருள்முதல்வாதம்
2.            அரசியல் பொருளாதாரம்
3.            விஞ்ஞான சோசலிசம்.
இப்பொருள்முதல்வாதமும் இரண்டு நிலைகளைக் கொண்டுள்ளது:
1.            உலகக் கண்ணோட்டம் பற்றிய பொதுவான சிக்கல்களை விளக்குவது - இயங்கியல் பொருள் முதல்வாதம்.
2.            சமூக முன்னேற்றத்தின் உந்துசக்திகள், பொது விதிகள் ஆகியனவற்றைத் தெளிவுப்படுத்துவது வரலாற்றியல் பொருள்முதல்வாதம். (துரை. சு. 2000 : 7)
அரசியல் பொருளாதாரம்
உழைப்பு, உற்பத்தி, பகிர்வு ஆகிய மூன்றுக் குள்ளும் இயங்கும் முரணியல்புகளை உற்பத்தி உறவுகளை ஆராய்ந்து ‘உபரி உற்பத்தி’ (அ) ‘மிகை மதிப்பு’ எங்கு சேர்கிறது; அது யாருக்குரியது; பகிர்வுமுறை அமைய வேண்டிய பாங்கு ஆகிய வற்றை உணர்த்துவது அரசியல் பொருளாதார மாகும். வேலைப் பிரிவினைக்கும் வர்க்கப் பிரிவினைக்குமான இயைபெதிர் நிலைகளைத்தெளிவுறுத்துவதே மார்க்சீய அரசியல் பொருளாதாரக் கோட் பாடாகும்.
விஞ்ஞான சோசலிசம்
விஞ்ஞான சோசலிசம் என்பது பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டம், சோசலிசப் புரட்சி ஆகியவற்றின் தத்துவம் ஆகும் (துரை.
சு. 2007:7) பொருள்முதல்வாதப் பார்வையிலிருந்து தோன்றிய அரசியல் பொருளாதாரக் கோட்பாட்டுச் சிந்தனையானது, செயல்வடிவம் எடுக்கும்போது, அது விஞ்ஞான சோசலிசச் சமூகக் கட்டமைப்பைக் கட்டமைக்கும் என்பது மார்க்சீயத் தத்துவம் முன்வைக்கும் சமூகவியல் அணுகுமுறையாகும்.
மார்க்சீய இயங்கியல் அணுகுமுறையின் அடிப்படைகள்
மார்க்சீய இயங்கியல் என்பது பன்முகத் தன்மை கொண்டது; பல்துறை உண்மை சார்ந்தது காரண- காரிய அணுகுமுறையின் துல்லியமான அளவீடும் மதிப்பீடும் ஒருங்கியைபு- ஒழுங்கி யயைபு- முழுஇயைபு கொண்ட ஒரே அணுகு முறை மார்க்சீய இயங்கியல் அணுகுமுறையாகும். எனவே, இதற்குரிய அடிப்படைக் கூறுகள் பல. எனினும், இதன் அடிப்படைகளில் இன்றியமையாதனவாகக் கீழ்வருவற்றைத் தொகுக்கலாம்:
1. சமூகக் கட்டமைப்பு
   அடிக்கட்டுமானம் (பொருளாதார உறவுகள்)
   மேல்கட்டுமானம் (பண்பாட்டுக் கூறுகள்)
2.            அளவு மாற்றம் பண்பு மாற்றத்தை உருவாக்கும்
3.            எதிர்க்கூறுகளின் ஐக்கியமும் போராட்டமும்
4.            நிலைமறுப்பின் நிலைமறுப்பு
மார்க்சீயம் என்பது சமூக அறிவியல் கோட் பாடு என்கிற அடிப்படையில், சமூகத்தின் படைப்புகள் அனைத்தையும் மார்க்சீய இயங்கியல் கண்ணோட்டத்தின் வழியாக ஆராய்வது துல்லிய மான ஆய்வு முடிவுகளை அளிப்பதாக அமையும்.
இலக்கிய இலக்கணங்கள் = சமூகத்தின் உற்பத்திப் பொருள்கள்
உலகில் தனிமனிதனாலோ மனிதர்களின் கூட்டு முயற்சிகளினாலோ படைக்கப்படும் ஒவ்வொன்றுமே சமூகத்தின் உற்பத்திப் பொருள் களாகும். இந்த உற்பத்திப் பொருள்கள் அனைத்தும் காலந்தோறும் பரிணாம வளர்ச்சி பெற்றுவரும் சிந்தனைகளின் வளர்ச்சிக்கேற்ற அக, புற இயல்புகளைக் கொண்டு இயங்குகின்றன. இந்த நோக்குநிலையில், இலக்கியமும் இலக்கணமும் கூட சமூகத்தின் உற்பத்திப் பொருள் என்று அணுகுவது மார்க்சீய இயங்கியல் அணுகுமுறை யாகும்.
சமூகத்தின் சிந்தனைப் பரிணாம வளர்ச்சியைக் கலையழகியலோடு வெளிப்படுத்தும்போது அது இலக்கியமாகவும் இலக்கியம் உள்ளிட்ட மொழி ஊடகத்தின் பன்முகப் பரிமாணங்களைக் கட்ட மைப்பு அறிவியலோடு வரையறுக்கும்போது அது இலக்கணமாகவும் படைக்கப்படுகின்றன. இந்த வகையில், தொல்காப்பியம் என்ற இலக்கண நூல் இந்தச் சமூகத்தின் உற்பத்திப் பொருளே ஆகும்.
தொல்காப்பியத்தில் மார்க்சீய இயங்கியலைக் காண இயலுமா?
இந்தக் கேள்வி இயல்பாய் எழுவது. மார்க்சீயம் ஓர் உலகளாவிய கோட்பாடு. அது உலகத்தின் ஒவ்வொரு இயக்கத்தையும் அளவிட்டு அதன் அடுத்தக்கட்ட நகர்வின் போக்கைத் துல்லியமாக மதிப்பீடு செய்கிறது. சமூகம் பொருளால் இயங்குவது; பொருள்கள் சிந்தனைகளால் இயங்குவன/இயக்கப்படுவன. இயக்கப்படுவதற் கான சிந்தனைகளை மொழிகள் அளிக்கின்றன. எனவே, பொருள்வழி மொழியும் மொழிவழிப் பொருளும் படைக்கப்படுகின்றன. இவ்வாறு படைக்கப்படும் மொழியின் படைப்புக்குள் சமூகத்தின் இயக்கக் கூறுகள் தன்னியல்பாகவே இயைந்திருக்கும்.
தமிழில் உள்ள தொல்காப்பியத்தில் மட்டு மல்ல; உலகின் எந்த மொழிப்படைப்பிலும் அந்தந்தச் சமூகத்தின் பரிணாம வளர்ச்சிக் கூறுகள், இயக்கக் கூறுகள், இவற்றுக்குள் தொழிற் படும் வர்க்க முரண் சார்ந்த போராட்டக் கூறுகள் எனப் பலவோ சிலவோ கூர்மைபெற்று நிலவும் என்பதே மார்க்சீய இயங்கியல் அணுகுமுறையாகும்.
சமூகத்தின் கூட்டுச் சிந்தனையின் தனிநபர் வெளிப்பாடே ஒவ்வொரு படைப்புகளும். வெளிப் படுத்துபவர் தனிநபராக இருப்பாரேயொழிய சிந்தனை தனிநபருடையது மட்டுமல்ல. எனவே, இலக்கிய, இலக்கணப் படைப்புகளும் சமூகத்தின் உற்பத்திப் பொருள்களே. சமூகம் தனிநபர் வழியாகத் தன்னைப் படைத்துக் கொள்கிறது. அந்த இலக்கியங்களும் இலக்கணங்களும் புதிய தொரு சமூகத்தைப் படைக்கின்றன. அவையே இலக்கியங்களும் இலக்கணங்களும். இதில் படைப் பாளரின் புரிதல் மற்றும் படைப்பாளுமையின் தனித்தன்மை படைப்புக்குள் இருக்குமே ஒழிய, சமூகத்தின் பொதுத் தன்மையே மிகுந்திருக்கும்.
தொல்காப்பியப் பொருளிலக்கணக் கட்டமைப்பும் சமூகக் கட்டமைப்பும்
வாழ்க்கைக்குப் பொருள்வேண்டும் என்பது பிறரின் பார்வை. வாழ்வதில் பொருள்வேண்டும் என்பது தமிழரின் பார்வை. வாழ்க்கை என்பது திணை சார்ந்தது. திணை இன்றித் தமிழர் வாழ்க்கை இல்லை; திணை இல்லாததும் தமிழர் வாழ்க்கை இல்லை. இங்கு திணை என்பது நிலம், ஒழுக்கம் என்ற இரண்டையும் ஒருசேரக் குறிக்கிறது. இந்தப் பார்வையில், தமிழர் வாழ்வில் எல்லாமே திணைகளாகக் கட்டமைக்கப்பட்டிருக் கின்றன. வாழும் நிலம் திணை; அதன் ஒழுக்கங் களான அகம், புறம் இரண்டும் திணை; இவற்றில் நெறிப்பட ஒழுகுபவன் உயர்திணை; நெறியறி யாதது அஃறிணை. எனவே, ‘நிலம்’ என்னும் பொருள் சார்ந்தது வாழ்க்கை. நிலத்தின் உற்பத்திக் கேற்ப வாழ்க்கை எனும் பொருள் மாறுபடும்; வாழ்க்கையின் பொருளும் மாறுபடும்.
‘திணை’ எனும் நிலத்தின் உற்பத்திப் பொருள் களை நுகர்வதில் இசைவின் மிகுதி, அகத்திணை; முரணின் மிகுதி புறத்திணை. மனிதனின் உணர்வு, எண்ணம், சிந்தனை, சொல், விளைவு அனைத்தும் பொருளிலிருந்தே தோன்றுகின்றன என்பது தொல்காப்பியரின் பொருளிலக்கணப் பார்வை யாகும். ‘வாழ்நிலை என்பது பொருள்’ என்னும் லுத்விக் பூயர்பாவின் கருத்தும் இங்கு எண்ணத் தக்கது.
தொல்காப்பிய பொருளிலக்கணம், அகத் திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவம வியல், செய்யுளியல், மரபியல் ஆகிய 9 இயல் களின்வழி வடிவமைக்கப்பட்டுள்ளது; கட்டமைக்கப் பட்டுள்ளது. இந்த 9 இயல்களும் ‘பொருள்’ என்னும் வாழ்க்கையை மையப்படுத்தியே இயங்கு கின்றன. அக வாழ்க்கை- அகத்திணையியல்; புற வாழ்க்கை- புறத்திணையியல்; களவு வாழ்க்கை- களவியல்; கற்பு வாழ்க்கை- கற்பியல், வாழ்க்கை- பொருளியல், வாழ்க்கை வெளிப்பாடு- மெய்ப் பாட்டியல், வாழ்க்கை இரசனை - உவமவியல், வாழ்க்கையின் படைப்பியல்- செய்யுளியல், வாழ்க்கைச் சூழலியல்- மரபியல் என்றவாறு இத்தனையும் மரபியலாக நிகழ்கின்றன. இத்தோடு, ‘பொருள்’ என்னும் ‘பொருள்’ வழியாகவே வாழ்க்கை இயக்கம் நடைபெறுகிறது என்பதையும் அதாவது முறையே, ஐந்திணை (நிலங்கள்), எழுதிணை (நிலங்களுக்கான போர்கள்) என்னும் இரண்டையும் முன்வைத்தே வாழ்க்கை இயக்கம் நடைபெறுகிறது என்பதையும்- நிலங்களின் உற்பத்திப் பொருள்களே வாழ்க்கையைத் தகவமைத்துச் செயல்படுத்துகின்றன என்பதையும் தொல்காப்பியம் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
சமூகக் கட்டமைப்பும் முற்குறித்த தொல் காப்பிய வரையறைக்குட்பட்டே ஐந்திணை, எழுதிணை மாந்தர்களின் வாழ்வியலுக்கு உட் பட்டே- அமைந்துள்ளது என்பதும் தெளிவு.
திணை- நிலம் உற்பத்திக்களன்- பொருள் முதல்வாதப் பார்வை
தமிழில் திணை என்னும் சொல் பன்முகப் பொருண்மைகளுக்கு உரியது. நிலம், நிலத்தில் வாழும் மக்கள், மக்களின் ஒழுக்கம் என்றவாறு பொருண்மை விரிவுக்கு உரியது திணை. அதாவது நிலமும் திணை, நிலத்தில் வாழும் மக்களும் உயிர்களும் திணை. அவர்களின் வாழ்க்கை ஒழுக்கமும் திணை. நிலம் என்பது உற்பத்திக் களம்; அவற்றில் விளைவன உற்பத்திப் பொருள்கள். உற்பத்திப் பொருள்கள் உருவாகக் காரணம் மக்களின் உழைப்பு அந்த நிலத்தின்மீது செயல் படுத்தப்படுவதால் இந்த நோக்குநிலை நிலம் என்னும் பொருளில் உழைப்பு செயல்படுத்தப் படுவதால், உற்பத்திப் பொருள்கள் விளைகின்றன என்பது துல்லியமான பொருள்முதல் பார்வையை உட்கொண்டுள்ளது என விளக்க வேண்டியதில்லை.
நிலத்தில் உற்பத்திப் பொருள்கள் பிற விளை கின்றன; பொருள்கள் இருக்கின்றன. இருப்பன வற்றையும் விளைவனவற்றையும் பயன்படுத்தி மேலும் பல பொருள்களை மனிதர்கள் உருவாக்கு கிறார்கள். எனவே, நிலத்தில் மூன்று வகையான பொருள்கள் இயல்கின்றன. இவற்றையே தமிழர்கள் கருப்பொருள்கள் என்றனர்.
1. உயிருள்ளன
2. உயிரல்லாதன    
3. உருவாக்கப்படுவன
‘கருப்பொருள்கள்’ எனும் சொல்லே ‘கரு வாகும் பொருள்கள்’ ‘உருவாகும் பொருள்கள்’ என்பதைக் குறிக்கிறது. நிலத்திலிருந்து கருவாகும் பொருள்கள், அந்நிலம் பற்றிய சிந்தனைகளுக்குள் கருவாகும் பொருள்கள். எனவே, இவற்றைத் திணைக்குரிய கருப்பொருள்கள் என்றனர்.
‘தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென மொழிப’          (தொல்)
இந்த நூற்பாவில் இடம்பெறுவனவற்றை மேற்குறித்த மூவகைப் பொருள்களாகப் பகுத்தால்.
உயிர் உள்ளன- மா,மரம், புள்
உயிர் அல்லன-தெய்வம், உணவு
உருவாக்கப்படுவன- பறை, யாழ், தொழில்
என்பன கிடைக்கும்.
இக் கருப்பொருள்கள் விளைய,
முதற்பொருள் - நிலம், பொழுது தேவை. நிலம், விளைச்சலுக்கான களம். பொழுது விளைச்சலுக்கான காலமும் உழைப்புக்கான காலமும். இவை, ஒவ்வொரு திணைக்கும் அந்தந்தத் திணைகளுக்குரிய இயற்கையமை வுடன் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த, முதற் பொருள், கருப்பொருள் இரண்டுக்கும் உரிய கூறுகளே ‘உரிப்பொருள்கள்’ எனப்படுகின்றன. இவற்றுக்குள் இயக்கவியல் பொருள்முதல்வாதக் கூறுகளும் வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கூறுகளும் தொழிற்படுவதை இன்னும் மென் மேலும் ஆராய்வதன் மூலம் விளக்கலாம்.
அடிக்கட்டுமானம்- மேல்கட்டுமானம்
இந்த இடத்தில் பின்வரும் கருத்தை முன் வைத்து மேலாய்வு நிகழ்த்தலாம்:
திணை முறைமையினுள்ளே உள்ளார்ந்து நிற்கும் பொருளியல் ஒழுங்கமைவுகளைப் பரிசீலிக்கும் பொழுது மருதம், நெய்தல் தவிர்த்த மற்றைய பொருளாதாரச் சூழமைவுகளுள் இத்தகைய ஒரு ஆசிய உற்பத்திப் பாங்கு, அவற்றின் அடிநிலையில் தொழிற்படுவதை அவதானிக்கலாம்.
குறிஞ்சியின் வாழ்க்கை நிலைகளுள் ஒன்று உணவு தேடுதல், அங்கு நடைபெற்ற உணவு உற்பத்தியானது அதன் அடிப்படையை மாற்றும் அளவு சக்தியுடையதாக இல்லை. ஏனெனில், உபரி உற்பத்தி அங்கு இல்லை. நெய்தல் நிலப்பகுதி யிலும் அங்குள்ள மக்கள் மீனையும் உப்பையும் கொடுத்துத் தங்கள் உணவுப் பொருளைப் பெற்றுக் கொண்டார்கள் என்பதைத் தவிர வேறு பாடு எதுவும் இல்லை. முல்லையில் அங்குள்ள குழுவினரின் மனித ஆற்றல் முழுவதும் உற்பத்திக்காக ஒன்று திரட்டப்படவில்லை. உண்மையில் முல்லையில் ஆடவர்கள் மிருகங் களைப் பராமரிக்கவும், குடியிருப்புகளைப் பாதுகாக்கவும் வெளியில் சென்றார்கள். இந் நிலையில் வேளாண்மையானது ஆரம்ப நிலையி லேயே இருந்தது. ஏனெனில், அது மிகுதியாக வளர்ச்சி பெற முடியாது. ஆனால், இத்தகைய பாதகமான வாய்ப்பற்ற நிலை மருதத்தின் குடி யிருப்புகளில் காணப்படவில்லை. இவ்வேளாண்மை நிலப்பகுதியானது அதனுடைய உபரி உற்பத்தி யான அரிசியினால், பிற நிலப்பகுதிகளின் மீது தன்னுடைய பொருளாதாரச் செல்வாக்கினை செலுத்த முடிந்தது. இவ்வாறு குறிஞ்சி, நெய்தல் போன்ற தாழ்ந்த அமைப்புகள் தேக்க நிலையில் இருக்கும் போது, மருதம் விரிவடைந்தது (சிவத் தம்பி., கா 2010: 25-26)
மனித சமூகத்தின் வாழ்வியல் பண்பாட்டுக் கூறுகளான உரிப்பொருள்கள், ஒவ்வொரு நிலத்தின் முதற்பொருள், கருப்பொருள் ஆகியவற்றின் இயைபுக்கு ஏற்பவும் மிகுதிக்கு ஏற்பவும் வரை யறுக்கப்பட்டுள்ளன:
“புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல் இவற்றின் நிமித்தம் என்றிவை
தேருங் காலை திணைக்குரிப் பொருளே”    (தொல்.960)
இந்த உரிப்பொருள்கள் எனப்படுபவை பண்பாட்டு விழுமியங்கள். இவை உற்பத்திப் பொருள்கள், உற்பத்தி உறவுகள், நுகர்வு நிலைகள் ஆகியவற்றின் திரண்ட பொருண்மைகளாக இயங்குகின்றன.
குறிஞ்சி நிலத்தில் தினை விதைத்தல், காத்தல், அறுவடை செய்தல் ஆகியவற்றைத் தவிர்த்தால் உற்பத்திக்கான தொழில் வாய்ப்புகளே இல்லை. தேனெடுத்தல், கிழங்ககழ்தல், காய்கனி பறித்தல், வேட்டையாடுதல் உள்ளிட்ட பிற தொழில் (பணி) மூலம் கிடைக்கும் பொருள்களை அவ்வப்போது நுகரும்போதே தீர்ந்துவிடும். அவ்வாறு, தீரா விட்டாலும் அவற்றை நீண்ட காலம் சேர்த்து வைக்கும் சூழலைக் குறிஞ்சித் திணை வாழ்வியல் பெற்றிருக்கவில்லை. தினை உற்பத்தியும் உபரி உற்பத்தியாய்ச் சேர வாய்ப்பில்லை. இத்தகைய சூழலோடு, வேட்டையாடுதலும் தினைப்புனம் காத்தலும் இயற்கைப் புணர்ச்சி மிகுதியால் நிகழ வாய்ப்பளித்தன. எனவே, புணர்ததும் புணர்தல் நிமித்தமும் குறிஞ்சிக்கு உரிய உரிப்பொருள் களாயின.
பாலை நிலத்தில் உற்பத்தி என்பது அறவே கிடையாது. பொருள்வயிற் பிரிந்து பொருள் தேடிச் சேர வருவோரிடம் ‘ஆறலைத்தல்’ மட்டுமே தொழிலாக இருப்பதால், இங்கும் மிகுதியான பொருளைச் சேர்த்துவைக்கும் வாய்ப்பைப் பாலைத்திணை வாழ்வியல் வழங்கவில்லை. எனவே, பொருள்வயிற் பிரிவும், ஆறலைத்தலால் பொருளிலிருந்து பிரிவும் நிகழ்வதால் பிரிதலும் பிரிதல் நிமித்தமும் பாலைக்கு உரிய உரிப்பொருள் களாயின.
முல்லை நிலத்தில் ஆநிரை மேய்த்தல், பால்தயிர் விற்றல், வேட்டையாடுதல் ஆகியன தொழில்களாக நிலவுவன. இவற்றின்வழிக் கிடைக்கும் உற்பத்திப் பொருள்களைப் பண்ட மாற்றி வாழவே சரியாய் இருக்கும். இங்கும் மிகுதியான பொருள்களைக் குவித்துவைக்கும் வாய்ப்பை முல்லைத் திணை வாழ்வியல் உருவாக்க வில்லை. எனவே, ஆநிரை மேய்க்கப் போன கோவலர்களுக்காக ஆய்ச்சியர் காத்து இருத்தலும் ஆற்றியிருத்தலும் நிகழ்வதால் இருத்தலும் இருத்தல் நிமித்தமும் முல்லைக்குரிய உரிப் பொருள்களாயின.
நெய்தல் மீன்பிடித்தல், மீன்விற்றல், உப்பு உடைக்கல், உப்புவிற்றல் ஆகிய தொழில்கள் நிலவும் இயல்பைப் பெற்றுள்ளது. இவற்றின்வழிக் கிடைக்கும் பொருள்களையும் நீண்ட நாள் சேமித்துவைக்கும் நிலையை நெய்தல் திணை வாழ்வியல் பெற்றிருக்கவில்லை. எனவே, மீன் பிடிக்கப்போன பரதவர்க்காக அவர்தம் தலைவியர் கடலின் இயல்பறிந்து, மனம் இரங்கி வேதனை யுடன் காத்திருப்பர் என்பதால் இரங்கலும், இரங்கல் நிமித்தமும் நெய்தலுக்குரிய உரிப் பொருள்களாயின.
மருத நிலத்தில் நெல் உள்ளிட்ட ஏராளமான தானியங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உழவுத் தொழிலுக்குரிய நேரடிப் பணிகள், மறைமுகத் தொழில்கள் என நிலம் என்ற உற்பத்திக் களத்தி லிருந்து விளைச்சலை உருவாக்க, ஏராளமான தொழில்களும் உற்பத்தியாகி விடுகின்றன. ஒருசில தொழில்கள் மட்டுமே வாழ்வியலைத் தகவமைத்துத் தந்த பிற திணை வாழ்வியலுக்கு முற்றிலும் மாறாக- சரியாகச் சொன்னால்- மறுமலர்ச்சியாகப் பல தொழில்கள் நிலவும் சமூக வாழ்வியலை மருதநில உற்பத்தி உறவுகள் கட்டமைக்கின்றன. இந்த உற்பத்தி உறவுகளை உழவுத்தொழிலின் சார்புத் தொழில்களாக உருவான தச்சு, கொல்லு உள்ளிட்டவை வலுவடையச் செய்கின்றன. இவ்வாறாக, உற்பத்தி உறவு மாற்றத்திற்கும் காரணங்களாக விளங்குபவை உழவுச் சார்புத் தொழில்கள் உருவாக்கிய உற்பத்திக் கருவிகளே ஆகும். ‘உற்பத்திக் கருவிகளின் மாற்றம் உற்பத்தி உறவுகளை மாற்றியமைக்கும்’ என்பது மார்க்சீய இயங்கியல் கோட்பாடு. இந்தக் கோட்பாட்டின் ஒவ்வொரு பரிணாம வளர்ச்சிக் கூறுகளையும், பரிணாம தோற்றக் கூறுகளையும் மருதத் திணை வாழ்வியல் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டும்.
இவ்வாறான, மருதத் திணை வாழ்வியல் மிகுபொருள் உற்பத்தி என்பதன் முதல் வரலாற்றுக் கட்டத்தைத் தோற்றுவித்தது மட்டுமல்ல- வளர்த்துவிட்டதும் கூட. இன்றைய வளர்ச்சி களின் ஆணிவேரும் அச்சாணியுமாகத் திகழ்வது மருதத்திணை வாழ்வியலே ஆகும். ‘நுகர்வுக்கு மேல் உற்பத்தி; தேவைக்குமேல் சேமிப்பு’ என்ற தனியுடைமை வாழ்வியiத் தோற்றுவித்ததும் மருதத்திணை வாழ்வியலே எனில் அது மிகை யில்லை.
இவ்வாறு, மிகுதியான பொருளைச் சேர்த்து வைக்கும் சூழல் ஒழுக்கக் கேடுகளுக்கு வித்திடு கிறது. ஒழுக்கக் கேடுகளுக்கெல்லாம் தலையாய ஒழுக்கக்கேடு பரத்தமை ஒழுக்கம். இது மருதத் திணை வாழ்வியலைப் பீடித்த காலம்முதல் குடும்ப கட்டமைப்பு, சமூகக் கட்டமைப்பு என்ற எல்லா நெறிமைகளையும் அழித்துக்கொண்டே வருகிறது. பெண்ணே ஆண்மகனின் உடைமை- அதாவது பொருளுடைமைமேல் தற்சிந்தனை யில்லா உயிரி எனக் கருதி அடிமைப்படுத்தப் பட்டிருந்த காலத்தில் ஆணுக்கு உணவும் உணர்வும் நல்கும் கடமைக்கு மட்டுமே உரியவளாகப் பெண் நடத்தப்பட்டாள். தலைவனின் ஒழுக்கக்கேடு களைக் கண்டும்காணாமல் இசைத்தொழுகும் பேதைமைக்குரியவளாகப் பெண் உருவாக்கப் பட்டிருந்தாள். எனவே, அவளால் பரத்தமை ஒழுகிவரும் தலைவனைக் கண்டிக்க இயலாது; ‘சிறுகோபம்’ மட்டுமே கொள்ளமுடியும். அதுவும் சிறுகோபம் என்றால் அதன் வெளிப்பாட்டுத் தகுதி ‘பொய்க்கோபம்’ என்பதாகும். இதன் இலக்கியக் கலைச்சொல்தான் ‘ஊடல்.’ இத்தகைய பின்னணிகளைக் கொண்டதுதான் மருதத்திணை வாழ்வியலுக்கே உரிய உரிப்பொருள்: “ஊடலும் ஊடல் நிமித்தமும்.”
ஐந்திணைகளுக்குரிய உரிப்பொருள்களின் அடிப்படையிலேயே அவ்வத்திணைகளுக்குரிய வாழ்வியல் பண்பாட்டுக் கூறுகள் கட்டமைக்கப் படுகின்றன. திணை நிலங்களும் பொழுதுகளும் இவற்றின் உற்பத்திப் பொருள்களான கருப் பொருள்களும் பண்பாட்டுக் கூறுகளின் விளை நிலங்களாக அடிப்படைகளாக விளங்குகின்றன. முதற்பொருளான நிலமும் பொழுதும் இல்லை யென்றால் கருப்பொருள்கள் இல்லை. கருப் பொருள்கள் இல்லையென்றால் உரிப்பொருள்கள் இல்லை. திணை வாழ்வியலின் உற்பத்தி உறவுகள், பொருளாதார உறவுகள் முதற்பொருள்களாலும் கருப்பொருள்களாலும் உருவாகின்றன. உணர்வு உறவுகளும் பண்பாட்டு விழுமியங்களும் உரிப் பொருள்களால் உருவாகின்றன. உற்பத்திக்கான மூலப்பொருள்கள் நிலம், காலப்பொருள், காலம், உற்பத்திப் பொருள்கள், கருப்பொருள்கள் என்றவாறு அமைகின்றன. எனவே, திணை வாழ்வியலின் அடிக்கட்டுமானம் = முதற்பொருள் + கருப்பொருள் உற்பத்தி உறவுகள்பமேற்கட்டு மானம்பஉரிப்பொருள்கள் - பண்பாட்டு விழுமி யங்கள் என்ற இயைபு நிலையைக் கட்டமைக்கத் தொல்காப்பியம் வழியமைக்கிறது.
பரிணாம வளர்ச்சியும் அளவு மாற்றம், பண்பு மாற்றத்தை உருவாக்குதலும்
மனிதகுலப் பரிணாம வளர்ச்சி அடிப் படையில் திணைகளை அணுகலாம். குறிஞ்சித் திணை காய்கனி பறித்தல், கிழங்கு அகழ்தல், தேனெடுத்தல், வேட்டையாடுதல் ஆகிய ஆதி காலப் பொதுவுடைமைச் சமூக அமைப்பு முறையைப் பெற்றுள்ளது. தினை வளர்த்தல் என்ற ஒன்று மட்டுமே வேளாண்முறையின் தொடக்கநிலைக் கூறாக உள்ளது. இயற்கையை நுகர்வதோடு இன்ப நுகர்ச்சியும் நடைபெறுகிறது. இது புணர்ச்சி.
பாலைத்திணை உற்பத்தியில்லாத பகுதி. எனவே, அங்கு ஆறலைத்தல் தொழில். குறிஞ்சி நிலத்தில் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறையின் விளைவு ஆறலைத்தல் ஆகலாம். இந்நிலமும் முல்லையும் குறிஞ்சியும் திரிவதால் ஏற்படுவது எனும்போது இரு நிலத்துக்கும் இடையீட்டுப் பகுதி என்பது பெறப்படுகிறது. நிலமே திரிந்து பிரிந்தது. எனவே, இங்கு பிரிதல்.
முல்லைத் திணை வாழ்வியல் ஆநிரை மேய்த்தல், பழக்குதல் ஆகியவற்றை அடிப்படை யாகக் கொண்டது. குறிஞ்சித் திணையில் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறையை, ஆறலைத்தலைக் கொண்டே தீர்க்க இயலாது என்ற நிலை உருவானதும் சேகரித்த காய்கனியைப் பயிரிடவும் வேட்டையாடிய விலங்குகளை மேய்க்கவும் பழக்கவும் கற்றுக்கொள்ளத் தொடங்கிய மனித சமூகம் குறிஞ்சியை விட்டுக்கீழிறிங்கி வேளாண் மையைப் பெண் கண்டறிந்தது இந்த நிலத்திலா கலாம். முல்லையில் வாழத் தலைப்பட்டிருக்கக் கூடும். இதன் விளைவு, ‘இருத்தல்.’
குறிஞ்சி, பாலை, முல்லையில் வாழ்ந்த மக்களின் உணவுத்தேடல், வேட்டை, ஆநிரை மேய்த்தல் ஆகியவற்றுக்கான பயணம் நெய்தல் நிலத்தில் கொண்டுவந்து சேர்த்திருக்கும். இங்கு, முன்னர் செய்துவந்த தொழில்களோடு மீன் பிடித்தல் தொழிலும் இணைந்திருக்கும். நெய்தல் நிலம்வரை வந்தவர் போக எஞ்சியவர்க்குக் குறிஞ்சியிலும் முல்லையிலும் மீன் பண்டமாற்று செய்யப்பட்டிருக்கும். இவ்வாறு, நெய்தல் திணையின் வாழ்வியலாக மீன்பிடித்தல், மீன் பண்டமாற்று, மீன் விற்றல் ஆகியன உருவாகி யிருக்கும். இதன் விளைவு, ‘இரங்கல்.’
குறிஞ்சி நிலத்தின் உணவு வேட்டை, பாலையின் ஆறலைத்தல், முல்லையின் ஆநிரை மேய்த்தல், பழக்குதல், பயன்படுத்தல், நெய்தலின் மீன்தொழில் என ஒன்றிலிருந்து ஒன்றாகத் தொழில்கள் வளர்ந்துகொண்டிருந்த அதே காலத்தில் மக்கட் பெருக்கம் மிகவே இவற்றால் மட்டும் ஒட்டுமொத்தச் சமூகமும் நுகர்வில் நிறைவு பெறவியலாது என்ற சூழல் உருவாகவும் முன்னரே குறிஞ்சியிலும் முல்லையிலும் முகிழ்த் திருந்த கழனியாக்கியது மானுடம்; மருதநிலம் தோன்றியது. இதன்வழி மருதத் திணை வாழ்வியல் உருவானது. இதன் விளைவு ‘ஊடல்’ (பரத்தையர் பிரிவுக்காக).
இதுகாறும் கண்டவற்றால் அளவு மாற்றம் எவ்வாறு பண்புமாற்றத்தை- உரிப்பொருள் மாற்றத்தை விளைவிக்கிறது என நுண்ணிதின் உணரலாம். மிகுபொருள் உற்பத்தி உள்ள மருத நிலத்தில் மட்டுமே பரத்தையர் பிரிவு பேசப் படுவது இதற்குரிய வலுவான சான்றாகும்.
அதே வேளையில், மனித குலத்தின் சமூகப் பரிணாம வளர்ச்சி நிலைகளின் படிநிலைகளுக் கேற்பத் தமிழரின் திணை வாழ்வியலும் பரிணாமம் பெற்று வந்துள்ளது என்பதை அறிய முடியும். இத்தகைய சமூக இயங்கியலின் பன்முகப் பரிமாண நிலைகளைத் தொல்காப்பிய நூற்பா முறைப்படுத்தியிருப்பது வியப்பளிக்கும் செய்தி யாகும்.
“புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல் இவற்றின் நிமித்தம் என்றிவை
தேருங் காலை திணைக்குரிய பொருளே”
(தொல்.960)
பொருள்முதல்வாத சிந்தனையின் ஊற்றுக்கண்- திணை வாழ்வியல்
“மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே”
(தொல். 951)
இந்த நூற்பாவுக்கும் காலந்தோறும் சொல்லப் பட்டு வந்துள்ள விளக்கத்துக்கு மாறாக அல்ல, மாற்றாக ஒரு மாற்றுப் பார்வையரில் விளக்கம் பெறலாம். அதாவது, நிலங்களுக்குரிய தெய்வங் களைக் கூறுவதாக விளக்கப்படும் இந்த நூற்பா, ‘தெய்வம்’ என்பதன் இடத்தில் பொருளை வைத்துப் பார்க்கும் புதிய பார்வையால் புதிய வெளிச்சமும் கருத்தும் கிடைக்கிறது.
“மாயோன் மேய காடுறை உலகமும்”
என்னும் நூற்பாவின் நோக்கம் நிலத்தின் இயல்பை, வகையை விளக்குவதே. நிலத்துடன் நேரடிப் பொருத்தமில்லாத தெய்வங்களை கடவுள்களை இயைத்துப் பார்த்த பார்வை உரையாசிரியர் களின் சைவ/ வைணவ / வைதீகப் பார்வை சார்ந்த புரிதலிலிருந்து வந்தது என்றே எண்ணவேண்டி யுள்ளது. அப்படியென்றால், மாயோன், சேயோன், வேந்தன், வருணன் ஆகிய சொல்லாடல்களின் பொருள்தான் யாதென நுணுகி ஆராய வேண்டி யுள்ளது.
காடுறை உலகமான முல்லைநில வாழ்வியல் ஆநிரைகளை அடிப்படையாகக் கொண்டது. ஆநிரை என்பது மாடு, ஆடு போன்ற வளர்ப்பு விலங்குகளைக் குறிக்கும். முல்லை நிலத்தில் மாடு, ஆடுகளோடு ஏராளமான பிற விலங்கின வகைகளுள் உள்ளன. எல்லா விலங்குகளையும் குறிக்கும் பொதுச்சொல் ‘மா.’
மாக்களோடு மக்கள் உறைவது ‘காடுறை உலகம்’ ஆனது. ‘மா’ என்பது பன்மை சுட்ட ‘மாயோன்’ என்ற குறியீட்டுச் சொல்லானது. மாக்களும் மக்களும் இணைந்து இயைந்து- பகிர்ந்து உறைவதால் ‘ஆன்’ எனும் உயர்திணை விகுதி தந்து ‘மாயோன்’ என்றனர். இன்றும் மாடுகளை ‘மாயம்பெருமாள்’ மாயன் பெருமாள் ப மாயோன் பெருமாள் என்னும் வழக்கு சமூகத்தில் நிலவி வருவதையும் இங்கு எண்ணலாம். ‘மாயோன் மேய’ என்பதற்கு ‘மாக்கள் (விலங்குகள்) மேவி- நிறைந்து- இருக்கிற’ என்று பொருளாகிறது. மிகுந்திருக்கும் பொருளின் அடிப்படையில் இந்நிலத் திற்கான விவரணை உள்ளது. எனவே, “மாயோன் மேய காடுறை உலகமும்” என்பதற்கு ‘விலங்குகள் மிகுந்திருக்கிற முல்லை நிலமும்’ என்று பொருள் கொள்வது பொருத்தமாகிறது.
மைவரை உலகமான குறிஞ்சி நிலம் உயர மான மலைப் பகுதிகளைக் கொண்டது. ‘மைவரை’ என்பதற்கு ‘மைபோன்ற கருமையாகத் தோன்றுகிற மலை’ என்பது பொருளாகும். மலையின் கீழே முல்லைநிலத் தொடக்கம். அங்கிருந்து பார்த்தால் உயரமும் தொலைவுமான ‘சேய்மை’யில் தோன்றுவது மலை. மலையி லிருந்து கீழே பார்த்தாலும் ‘சேய்மை’யில் தோன்றுவது முல்லை மிகுந்திருக்கும் சூழலியல் நோக்கில் இந்நிலத்திற்கான விவரணை உள்ளது. எனவே, “சேயோன் மேய மைவரை உலகமும்” என்பதற்கு, “சேய்மை மிகுந்திருக்கிற குறிஞ்சி நிலமும்” என்று பொருள்கொள்ள வாய்ப்புள்ளது.
தீம்புனல் உலகமான மருதநிலம், ஆறுகள், நீர்நிலைகள் நிரம்பிய வயல்வெளிகளைக் கொண்டது. மிகுந்திருக்கும் நீரால் வளம்பெற்று, திகழ்வது மருத நிலத்தின் இயல்பு. மானுட வரலாற்றில் நிலைத்த குடியிருப்புகளையும் பண்பாட்டுக் கூட்டுறவால்/ ஒத்திசைவால் அரசு நிறுவனங்களையும் தோற்றுவித்த நிலம் மருத நிலம். வேளாண்மையும் வேளாண்சார் தொழில் களும் மனித வாழ்க்கை தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்ததால்தான் மேலே சொன்னவை உண்டாயின. பண்பாட்டுச் சீரமைவுக்கும் பண்பாட்டுச் சீரழிவிக்கும் ஒருசேரப் பங்காற்றிய சிறப்பு மருதநில வாழ்வியலுக்கே உரியது. இதற்கெல்லாம் அடிப்படையாய்த் திகழ்வது தனியுடைமைப் பெருக்கம் ஆகும்.
நிலவுடைமை
தனியுடைமைப் பெருக்கமும் இதற்கான பாதுகாப்புக்குமாக மனித சமூகம் உருவாக்கிக் கொண்ட நிறுவனமே அரசு ஆகும். அரசின் தலைவன், ‘வேந்தன்’ எனப்பட்டான். எனவே, “வேந்தன் மேய தீம்புனல் உலகமும்” என்பதற்கு “வேந்தனால் பாதுகாக்கப்படும் மருத நிலமும்” என்று பொருள் கொள்ளலாம்.
இதே “வேந்தன்” என்பதற்கு மருதநிலத்தின் சூழலியல்பை முன்வைத்துச் சிந்தித்தால், ஓலைச் சுவடியில் “வேந்தண்” என்று இருந்த பாடம், பேதமாக அல்லது பிழையாக ஏடெழுதுவோரால் எழுதப்பட்டு “வேந்தன்” என்றாகியிருக்குமோ என ஐயுறவேண்டியுள்ளது. இப்படி ஐயுறுவதற்கு மருத நிலத்தின் சூழலியல்பு வாய்ப்பளிக்கிறது. ‘வேந்தண்’ என்னும் சொல்லைப் பிரித்தால் வேம்+ தண் என்று ஆகும். அதாவது,
‘வேந்தன்= வேம்+ தண்= வெம்மை+ தண்மை என்றவாறு பொருள்கொண்டால், வெப்பமும் தட்பமும் (வெம்மையும் தண்மையும்) சமவிகிதத்தில் அமைந்திருக்கும் நிலப்பகுதி ‘மருதநிலப்பகுதி’ என்றாகிறது. எனவே, “வேந்தன் மேய தீம்புனல் உலகமும்” என்ற நூற்பா அடியை, “வேந்தண் மேய தீம்புனல் உலகமும்” என்று பாடங் கொண்டால் “வெம்மையும் தண்மையும் மிகுந்திருக்கிற நீர்வளம் நிரம்பிய மருத நிலமும்” என்று பொருள் கொள்ளலாம். இந்நோக்கும் சூழலியல்பு நோக்கில் பொருந்துவதாகவே உள்ளது.
பெருமணல் உலகமான நெய்தல் நில வாழ்வியல் கடல்கள் தொழில்களை அடிப்படையாகக் கொண்டது. இங்கு விளைபொருள்கள் என்பன கடல்வாழ் உயிரினங்களே. அவற்றின்வழி மிகு பொருள் சேர்க்கும் வாய்ப்பை இந்நிலம் வழங்காது. ஆனால், உலகக் குழந்தையின் தொட்டில்- உலக உயிர்களின் தாய்மடியாக விளங்குவது கடலேயாகும். உலக உயிர்களைத் தழைக்கச் செய்வதும் பிழைக்கச் செய்வதும் நிலைக்கச் செய்வதுங்கூடக் கடலேயாகும். கடல் நீரை மேகமாய் முகந்து வானம் மழை பொழி விக்காவிடில் உலக உயிர்கள் இயக்கமற்றுப் போய்விடும். எனவே, “உலகின் உயிர்நீர்; கடலின் உவர்நீர்” எனலாம். இத்தகைய, மழையையே ‘வருணன்’ என்கிறோம். எனவே வருணன், மேய பெருமணல் உலகமும் என்பதற்கு மழை பொழிவதற்கான சூழல் மேவியிருக்கும் நெய்தல் நிலம் என்று பொருள்கொள்ளலாம்.
எழுத்ததிகாரத்தில் பொருள் முதல்வாதச் சிந்தனைகள்
எழுத்துக்களின் இலக்கணத்தில் வரும், ‘உயிரின்றி மெய் இயங்காது’ என்னும் கோட்பாடு உயிரியல்சார் பொருள்முதல்வாதச் சிந்தனையின் பாற்பட்டது. மெய்யெழுத்துக்களின் இயல்பைக் கூறுமிடத்து,
“மெய்யொடு இயையினும் உயிர்இயல் திரியா” (தொல்.எழுத்து 10) என்பதில் உயிர் என்பது மெய்யோடு இரண்டறக் கலந்திருக்கும் போதிலும் உயிரின் இயல்பிலிருந்து திரியாது என்பது நுட்பமான பொருள்முதல்வாதச் சிந்தனையாகும்.
பிறப்பியலில் கூறப்படும் ஒவ்வொரு எழுத்துக் களின் பிறப்பு பற்றிய செயல்முறை விளக்கம் முழுவதும் பொருள்முதல்வாதச் சிந்தனை சார்ந்தது. புணரியலில்,
“மெய்உயிர் நீங்கின் தன்உரு வாகும்”
(தொல்.எழுத்து. 139)
என்னும் நூற்பா, ‘மெய்யியல் இயைந்த உயிர் நீங்கின் தன் உருவம் மட்டுமே இருக்கும்; இயக்கம் இருக்காது’ என்ற இயங்கியல் செய்தியைச் செரித்துக் கொண்டுள்ளது.
சொல்லதிகாரத்தின் இயங்கியல் அணுகுமுறைகள்
கிளவியாக்கத்தில்,
“இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல்”
(தொல்.சொல். 502)
(எ.டு) “நிலம் வலிது; நீர்தண்ணிது; தீ வெய்து
வளி உளரும், உயிர் உணரும்,”
“செயற்கைப் பொருளை ஆக்கமொடு கூறல்”
(தொல். சொல். 503)
(எ.டு.) நீர் சூடாயிற்று; வழி அகலமானது.
“ஆக்கந் தானே காரண முதற்றே”
(தொல். சொல். 504)
(எ.டு.) இரவு பகலாகப் படித்ததால் பட்டம் பெற்றான்.
எனவரும் இயல்புகளை உள்ளவாறும் உணர்ந்தவாறும் அறிதல், தெளிதல், சொல்லல் என்ற பின்னணிகளைக் கொண்டுள்ளன.
இயற்கைப் பொருள்களையும், செயற்கைப் பொருள்களையும் எவ்வாறு சொல்ல வேண்டும் என்று கிளவியாக்கத்தில் குறிப்பிட்ட தொல் காப்பியர், பெயரியலில் சொல்லின் பொருள் உணர்த்தும் இயல்பை மிக இயல்பாகச் சொல்லி விட்டுப் போகிறார். ஆனால், அதற்குள் ஏராள மான சிந்தனைகளுக்கான ஊற்றைக் கிளப்பி விட்டுள்ளார் என்பது ஆராய ஆராயப் புலனா கின்றது. யாவரும் அறிந்த அந்த எளிய நூற்பா இதோ:
‘எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே’       (தொல். 640)
இந்த நூற்பா பன்முகச் சிந்தனைப் பரிமாணங் களுக்கு வாய்ப்பளிக்கிறது. அதாவது எல்லாச் சொல்லும் என்பதால்
பெயர்ச்சொல்             -           பொருளின் பெயர் சுட்டும்                                               சொல்
வினைச்சொல் -    பொருளின் வினை சுட்டும்                                                சொல்
இடைச் சொல் -      பொருளின் பெயரிலும்
                                                வினையிலும்
                                                பொருள் வேற்றுமை சுட்டும்
                                                சொல் (பெயர்ச்சொல்,
                                                வினைச்சொல் இடையே
                                                நின்று பொருளுக்கு ஆகி
                                                வருவது)
உரிச்சொல் -              பொருளுக்கே உரிய சொல்
என்று நோக்கி ஆராய இடம் உள்ளது. ஏனெனில் அவரே,
‘பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும்
சொல்லின் ஆகும் என்மனார் புலவர்’             (தொல். 641)
என்று உடனடியாக விளக்கம் தந்துள்ளதி லிருந்து நூற்பா 640-ஐக் குறித்துச் சிந்திக்க வேண்டும். இவ்வாறு, சிந்தித்துப் பொருள் கொள்வதே சிறந்தது என்பதை உரியியலிலும் தெளிவுறுத்தியுள்ளார்:
“பொருட்குப் பொருள் தெரியின்அது வரம்பின்றே”
“பொருட்குத் திரிபு இல்லை உணர்த்த வல்லின்”
“மொழிப் பொருள் காரணம் விழிப்பத் தோன்றா”
(தொல். 874, 875, 877)
சொல்லின் பொருள்வேற்றுமையை உண்டாக்குவது வேற்றுமை உருபு. ஒரு வேற்றுமை உருபு வர வேண்டிய இடத்தில் வேறொரு வேற்றுமை உருபு மயங்கி (மாறி) வந்தபோதிலும் பொருள் மாறாமல் இருப்பது வேற்றுமை மயக்கம். இங்கு சொல்லின் பொருள் மாறுவதென்பது, அந்தச் சொல்லுக் குரிய பொருளில் ஏற்படும் மாற்றத்தை ‘குறித்த பொருளின் முடிய நாட்டல்’ என்னுமாறு பொருளுணர்த்துவதாகும். எனவே, பருப்பொருளில் (டீதெநஉவ) ஏற்படும் மாற்றமே நுண்பொருளில் மாற்றத்தை விளைவிக்கிறது என்பது தெளிந்த பொருள்முதல்வாதப் பார்வை யிலான இயங்கியல் அணுகுமுறையாகும் என்பது தெளிவாகிறது.
இத்தகைய பன்முகப் பார்வையை ஒரு சொல் மட்டுமே கூடத்தரும் என்பதைத் “தொழில் முதல் நிலை” குறித்த வேற்றுமை மயங்கியல் நூற்பா எடுத்துக்காட்டுகிறது:
‘வினையே செய்வது செயப்படு பொருளே
நிலனே காலம் கருவி என்றா
இன்னதற்கு இதுபயன்ஆக என்னும்
அன்ன மரபின் இரண்டொடும் தொகைஇ
ஆயெட் டென்ப தொழில்முதல் நிலையே’                (தொல். 596)
வினைப்பெயர்                          பபடித்தல்
வினையாளன் பெயர் (செய்வது)             பமாணவன்
வினைசெயல்பட்ட பொருளின் பெயர்               பநூலை
வினை நிகழ்ந்த இடத்தின் பெயர் (நிலம்)ப கல்லூரியில்
வினைநிகழ்ந்த காலத்தின் பெயர் ப இறந்த காலம்
(காலம்)                                           (மூன்று ஆண்டுகள்)
வினைநிகழ்வதற்குப் பயன்பட்ட
கருவியின் பெயர் (கருவி) ப எழுதுகோலால் எழுதி
வினை நிகழ்வதற்கான
காரணப் பெயர் (இன்னதற்கு) ப பட்டம் பெறுவதற்காக
வினை நிகழ்வதால் விளையும்
பயன் (இது பயன்)                   ப அறிவை வளர்க்க
மாணவன், நூல், கல்லூரி, எழுதுகோல், பட்டம் ஆகிய 5 பருப்பொருள்கள், படித்தல், காலம், அறிவு பெறுதல் என்ற 3 நுண்பொருள்கள் இன்றி இந்த வினை நிகழ இயலாது. ‘படித்தான்’ என்ற சொல்லுக்குள் 5 பருப்பொருள் பரிமாணங்களும் 3 நுண்பொருள் பரிமாணங்களும் ஆக 8 பரிமாணங்கள் உறைந்துள்ளன. எனவே, பொருள் இன்றி, பொருளின் வினை இன்றி எந்தவொரு சொல்லும் மொழியில் இல்லை, விளைந்தன அப்படியென்றால் இந்தச் சொற்கள் பொருள் களால்; பொருள்கள் விளைந்தன வாழ்க்கையால் என்பதால்தான் ‘வாழ்க்கை’ என்பதையே ‘பொருள்’ என்றனர் தமிழர்கள் என்பது உணரலாகிறது.
தொகுப்புரையாக...
காலந்தோறும் மானுடம் உள்ளவரை ஆராய ஆராயப் புதிய புதிய ஆய்வு முடிவுகளை அள்ளித்தரும் தமிழ்ச் சுரங்கம் தொல்காப்பியம். காலந்தோறும் மானுடத்தின் பரிணாம வளர்ச்சி என்பது நாடு, மொழி, எல்லை கடந்த ஓர்மை பெற்று விளங்குதல் இயல்பு. சமூகத்தின் படிநிலை வளர்ச்சியானது ஒவ்வொரு சமூக அமைப்பின் இயல்பிற்கேற்ப சிறிய அளவில் வேறுபடுவது, பேரளவில் ஒன்றுபடுவதும் இயற்கையே. ஒவ்வொரு நாட்டிலும் உற்பத்திக் கருவிகளுக்கு ஏற்ப உற்பத்தி உறவுகள் மாறுபடும்; சமூகம் உருவாகி வளரத் தலைப்படும் அதே காலத்தில் வேறொரு நாட்டில் நிலவுடைமைச் சமூகம் முதிர்ந்து வணிக சமூகம் வளரத் தலைப்பட்டிருக்கும் பான்மை நிலவலாம். ஆனால், வேட்டைச் சமூக அமைப்பே இல்லாமல் வேளாண் சமூக- நிலவுடைமைச் சமூக அமைப்புக்கு நேரடியாகத் தாவுதல் என்பது எந்த ஒரு நாட்டிலும் சாத்தியமாகாது. இதுதான் மார்க்சீய இயங்கியலின் அடிப்படை. எனவே, ஒவ்வொரு சமூகத்திலும் சமூகத்தின் படைப்புகளிலும் இயங்கியல் கூறுகள் தன்னியல்பாகவே தொழிற்பட்டுக் கொண்டே இருக்கும் என்பதே துல்லியமான மார்க்சீய இயங்கியல் பார்வையாகும்.
இத்தகைய பார்வையில்- நோக்குநிலையில் தொல்காப்பியத்தில் மார்க்சீய இயங்கியல் அணுகு முறைக்கான அடிப்படைகளைக் கண்டறிய மேற்கொள்ளப்பட்ட இக்கட்டுரை முயற்சி கீழ்வரும் முடிவுகளையும் கருதுகோள்களையும் எட்டியுள்ளது:
1.            தமிழ் இலக்கிய- இலக்கண திணை வாழ்வியல் மரபில் வரையறுக்கப்பட்டுள்ள முதற்பொருள், கருப்பொருள் இரண்டும் மார்க்சீயம் வரை யறுக்கும் அடிக்கட்டுமானக் கூறுகளைப் பொருளாதாரக் கூறுகளைப் பெற்றுள்ளன. உரிப்பொருள் என்பது மேற்கட்டுமானக் கூறுகளைப் பண்பாட்டு விழுமியங்களைப் பெற்றுள்ளன.
2.            ஐந்திணை மரபு என்பது மனிதகுலத்தின் பரிணாம வளர்ச்சியை சமூகத்தின் படிநிலை வளர்ச்சியைத் தெளிவாகக் காட்டுகிறது. குறிஞ்சியில் தோன்றி முல்லையில் கிளைத்து நெய்தலை எய்தி மருதத்தில் நிலைத்த பரிணாம வளர்ச்சியைத் தமிழ் இலக்கிய இயங்கியலாக வடிவமைத்துள்ளது திணை வாழ்வியல்.
3.            ஒவ்வொரு திணையின் உரிப்பொருளும் உற்பத்தி உறவுகளின் வெளிப்பாடாக அமைந் துள்ளது. இந்த வகையில், மருதத்தின் உரிப் பொருளான “ஊடலும் ஊடல் நிமித்தமும்” என்பது அளவு மாற்றம் பண்பு மாற்றத்தைத் தோற்றுவிக்கும் என்பதை நிறுவுகிறது.
4.            பொருள்முதல்வாத பார்வையின் ஊற்றுக் கண்ணாகத் தொல்காப்பியம் கட்டமைக்கும் திணை வாழ்வியல் விளங்குகிறது.
5.            பொருளை மொழிய சொல் தோன்றுகிறது; சொல் பொருளை மொழிந்து கொண்டே இருக்கிறது. பொருள், சொற்களை வளர்த்துக் கொண்டே போகிறது. சொல், பொருள்களை விரித்துக் கொண்டே போகிறது. இந்த இயங் கியல் விதி மொழிக்குள்ளும் இலக்கியத்துக் குள்ளும் தொழிற்பட்டுக் கொண்டே இருக்கிறது.
6.            தொல்காப்பியத்தில் மார்க்சீய இயங்கியல் அணுகுமுறைகளுக்கான அடிப்படைகள் உள்ளன எனக் காணுதல் சமூக வளர்ச்சி, மாற்றக் கூறு களை உந்தித்தள்ள உதவக்கூடும். எனவே, அந்தந்த சமூகமும் தனது படைப்புகளுக்கும் மார்க்சீய இயங்கியல் விதிகளைத் தேடிக் கண்டடைதல் என்பது கண்டடைய வேண்டிய திசைவழிகளுக்கான செல்நெறிகளைக் கட்ட மைக்க உதவலாம்.
இலக்கிய நூல்கள்
1.            இளம்பூரணர் உரை, தொல்காப்பியம், கழகப்பதிப்பு, சென்னை.
2.            சிவத்தம்பி, கா. 2010, பண்டைத் தமிழ்ச்சமூகம்,
என்.சி.பி.எச்., சென்னை.
3.            சுப்பிரமணியன்,. ச.வே, 2012, தொல்காப்பியம், தெளிவுரை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
4.            துரை.சு.தமிழ் இலக்கிய ஆய்வில் மார்க்சீய நோக்கு, காவ்யா சென்னை.
5.            Thaninayagam. S. 1997. Landscope and Poetry, International Institute of Tamil Studies, Chennai.