Thursday 2 February 2023

ஒரு நாள் ஒரு நூல் - 31.பெளத்தம் - சோ.ந.கந்தசாமி.31.01.2023

31.01.2023 ஒரு நாள் ; ஒரு நூல் - 31 பெளத்தம் -- சோ.ந.கந்தசாமி சென்னைப் பல்கலைக்கழகத்தின் டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் மெய்யுணர்வு மேல்நிலைக் கல்வி நிறுவனத்தின் வெளியீடாக முதற் பதிப்பாக 1977 இல் வெளிவந்துள்ளது இந்நூல். இந்நூல் xii * 302 = 324 பக்கங்கள் கொண்டது. தமிழ் பெளத்த நூல் வரலாற்றில் ஒப்புயர்வற்ற நூல்களில் இதுவும் ஒன்று. அறிஞர் அயோத்திதாசப் பண்டிதர், அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி ஆகிய இருவருக்குப் பின் தமிழ் இலக்கியங்களைப் பெளத்த மெய்யியல் கொண்டு ஆராய்ந்த மாபெரும் அறிஞர் முனைவர் சோ.ந.கந்தசாமி ஆவார். சோ.ந.கந்தசாமிக்குப் பின் தமிழ் இலக்கியங்களைப் பெளத்த மெய்யியல் கொண்டு ஆராய்ந்து வருவோர் சிலர் உளராயினும் சோ.ந.க.அளவுக்கு பெளத்தப் பாலி மெய்யியல் பனுவல்களை ஆழமாகக் கற்று ஆராய்ந்தவர் என இதுவரை வேறு யாரையும் சுட்டிச் சொல்லவியலாது. இந்நூலில் உள்ள பௌத்த பிடகக் குறிப்புகள் அளவுக்கு இந்நூலுக்கு முன்பும் எந்நூலிலும் இல்லை ; இன்றும் எந்நூலிலும் இல்லை. இனி நடக்குமா தெரியவில்லை. இந்த நூலை அடிப்படையாகக் கொண்டு மணிமேகலை காப்பிய ஆய்வு போதிய அளவு யாராலும் வளர்த்தெடுக்கப்படவில்லை . வேறு இலக்கிய ஆய்வுகளும் போதிய அளவுக்கு வளர்த்தெடுக்கப்படவில்லை. இந்நூல் அன்றைய , இன்றைய பௌத்த ஆய்வாளர்களால் ஆழமாக உள்வாங்கப்படவில்லை. அந்த அளவுக்கு ஆழமான, நுட்பமான, விரிவான, செறிவான ஆய்வு நூலாக இந்நூல் மிளிர்கிறது. காரணம் பாலிமொழி அறிவு போதிய அளவிற்கு யாருக்கும் இல்லை. பலரும் ஆங்கிலத்தில் இருந்துதான் எழுதுகிறார்கள். இப்படி எண்ணி எண்ணி வியக்க வைக்கும் நூலாக இந்நூல் விளங்குகிறது. எடுத்துக்காட்டாக ,பஞ்சசீலம் என்பவை மணிமேகலைக் காப்பியத்தில் எங்கெங்கு எவ்வாறு எந்தெந்தப் பின்னணியில் வலியுறுத்தப்பட்டுள்ளன என்பதை ஆராய்ந்து எழுதுகிற ஒரு பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டோமென்றால் அந்தப் பகுதியில் கொல்லாமை என்கிற ஒரு சீலத்திற்கு மட்டும் அந்தச் சீலத்தை வலியுறுத்தும் பௌத்தப்பிடகக் குறிப்புகள் பத்துக்கும்மேல் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த அளவிற்கு பௌத்தப் பாலி நூல்களை ஆழமாகக் கற்று அவற்றை மணிமேகலைக் காப்பியத்தில் பொருத்தி ஒப்புநோக்கி உறழ்ந்து ஆராய்ந்துள்ள நூலாக இந்த நூல் திகழ்கிறது. பௌத்தப்பிடகங்களோடு மட்டும் இல்லாமல் பௌத்தப் பிடக உரைகள், புத்த ஜாதகக் கதைகள், பௌத்தவியல் ஆய்வுகள் என்று ஏராளமான அறிவுக்களஞ்சியத் திரட்டை இந்த நூல் எங்கும் காண முடியும். இத்தகைய அரிய இந்நூலின் பொருளடக்கம் பின்வருமாறு : அணிந்துரை - vii முன்னுரை - ix 1. பௌத்த சமயவியல் - 1 2.பௌத்த பிரபஞ்சவியல் - 67 3.பௌத்த அறவியல் - 115 4.பௌத்த தருக்கவியல் - 183 5.பௌத்த தத்துவவியல் - 230 Bibliography - 290 பொருளகராதி - 295 15 11 1976 முதல் 1976 வரை 5 நாட்கள் சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் பௌத்தம் என்னும் தலைப்பில் ஆற்றிய ஆய்வுரைகளின் தொகுப்பே இந்நூலாகும். ஒரு சமயம் கட்டமைக்கப்படுவது அதன் தத்துவத்தில் இருந்தே ஆகும். எனவே, தத்துவம் தான் முதன்மையானது. ஆனாலும் இன்றைய வாழ்வியல் போக்கில் தத்துவம் பின்னே சென்று விடுகிறது ; சமயம் முன்னே நின்று விடுகிறது. இத்தகைய உலகியல் இயல்பு நோக்கில் இந்த ஐந்து நாள் உரைகளையும் பேராசிரியர் சோ.ந. கந்தசாமி அவர்கள் அமைத்துக் கொண்டுள்ளார்கள். எனவேதான், பௌத்த சமயவியலிருந்து பௌத்த பிரபஞ்சவியல் ,பௌத்த அறவியல், பௌத்த தருக்கவியல் என்று தொடர்ந்து பௌத்த தத்துவ இயலில் இந்த உரையை நிறைவு செய்திருக்கிறார். இத்தகைய அணுகுமுறையை மார்க்சிய நோக்கில் சொல்வதாக இருந்தால் மேல்கட்டுமானத்திலிருந்து அடிக்கட்டுமானத்தை விளக்கி ஆராய்ந்து உள்ளார் அறிஞர் சோ.ந. கந்தசாமி அவர்கள். பெளத்தத்தில் ஆய்வு செய்ய முன்வரும் ஒவ்வொருவரும் படித்தேயாகவேண்டிய நூல் இது. இந்நூலைப் படித்தால் இந்நூலிலிருந்து பல நூல்களை உருவாக்குவதற்கான தரவுகளையும் தெளிவுகளையும் அள்ளித்தரும் நூலாக இந்நூல் ஒளிர்கிறது ; மிளிர்கிறது. ( முன்பே இந்தப் பதிவர் இந்த நூலைப் படித்திருந்த நினைவுகளில் இருந்து இந்தப் பதிவை எழுதி உள்ளார். கையில் உடனடியாக நூல் இல்லாத நிலையில் இந்த நூலின் முகப்புப்பகுதியைப் புலனத்தின் வழியாக அனுப்பி வைத்த முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி என்றென்றும் உரித்தாகுக) இந்த நூலைச் சென்னைப் பல்கலைக்கழகம் மறுபதிப்பு செய்ய வேண்டியது வாழும் பெளத்தத் தேவையாகும். பதிப்பக முகவரி: டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் மெய்யுணர்வு மேல்நிலைக் கல்வி நிறுவனம், சென்னைப் பல்கலைக்கழகம். முதற் பதிப்பு: 1977 விலை : ரூபாய் 20/- https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0FqZTXH1yf3EkGMg557uvG2Wzi2gUAbzzcTcXctM62pFTCv3gNn5htcHSnTxPMuFxl&id=100007862881487&mibextid=Nif5oz