Wednesday 7 September 2016

கல்விக்கதிர்: காப்பியம்

கல்விக்கதிர்: காப்பியம்: 1.0 பாட முன்னுரை      இலக்கிய உலகில் காப்பியம் ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளது . இதனைச் செவ்விலக்கிய வகையில் (Classical Literature) அடக்...

Thursday 14 April 2016

எல்லாச் சாதிகளும் தீண்டத்தகாத சாதிகளே!

*நீங்கள் இந்திய சமூகத்தில் சாதி ஒழிய வேண்டும் என்றும் துடிப்பவரா? நடிப்பவரா? வேண்டாம் என்று வெடிப்பவரா? யாராக இருந்தாலும் இந்த நடைச்சித்திரத்தைப் படித்ததும் உங்களை இதில் காண்பீர்கள்! உங்கள் உணர்வை நீங்கள் உணர்வீர்கள்! இப்போது வாருங்கள் என்னோடு! இதைப் படிக்கத் தொடங்கும் அன்பர்களே! நீங்கள் எந்த சாதி என யாராவது கேட்டால் “என் சாதி இன்னது” என உடனடியாகப் பட்டெனச் சொல்கிறீர்களா? ‘என் சாதி உயர்ந்த சாதி’ என்ற மனோநிலையில் நீங்கள் இருக்கிறீர்கள் என்று பொருள் “ஏன் மனுசன்தான்” என்கிறீர்களா? அல்லது சாதியைச் சொல்லத் தயங்குகிறீர்களா? அப்படியென்றால், நீங்கள் தாழ்ந்த சாதி... என்று நான் சொல்லவில்லை. உங்கள் பதிலின் தொனி... பதிலில் தொக்கிநிற்பது அதுதான்.... அது தாழ்ந்த சாதியல்ல… தாழ்த்தப்பட்ட சாதி! 

இப்படி ஒருவன் பெருமிதமாகவும் மற்றொருவன் சங்கடமாகவும் நினைக்கும்படிச் செய்தது எது? செய்தவர்கள் யார்? இதற்கான விடைகளைத் தெளிவுபடுத்திக் கொள்ள இந்தியச் சமூக வரலாற்றைப் பற்றி அம்பேத்கர் உள்ளிட்ட பல அறிஞர்களைப் படிக்க வேண்டும். அப்படியா? அவர்களின் கருத்துக்களை மேற்கோள் காட்டித்தான் நீங்களும் விளக்கப் போகிறீர்களா?! என்று நீங்கள் கேட்காமலே எனக்குக் கேட்கிறது. அறிஞர்களின் நூல்களைத் தேடிப் படிக்கும் ஆர்வமும் படித்த அறிவாற்றலும் உள்ளவர்கள் படித்துக் கொள்ளலாம்! நான் அவற்றுக்குள் போகப் போவதில்லை. நான் உங்களின் மனசாட்சியோடு நெருங்கிப் பேசப் போகிறேன். அதனால் அப்பட்டமான உண்மைகளை நான் சொல்லும்போது உங்கள் மனசாட்சியைத் தொட்டு எழுப்பி இந்த உண்மைகளுக்குள் நீங்கள் வருகிறீர்களா என்ற எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள்! அது போதும்!. 

சொந்த பந்தமும் மணவுறவும் யாரையாவது எங்கோ தற்செயலாகப் பார்த்தால் நீங்கள் உங்கள் நண்பரிடம் / தோழியிடம், “இவர் எங்க சொந்தக்காரர்!” என்று அறிமுகப் படுத்தியிருக்கிறீர்களா?! இப்படி அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள் என்றால் “அவர் உங்கள் சாதிக்காரர் என்று அர்த்தம்… உங்கள் உறவினர்களில் எங்கோ யாரோடோ மணவுறவு கொண்டவர் அல்லது மணவுறவு கொண்ட குடும்ப உறுப்பினர் அல்லது அவர்களது கிளையுறவுகளில் மணம் முடித்தவர் அல்லது மணம் முடித்தவரின் உறவினர்” என்பதைப் பளிச்செனப் புரிந்துகொள்கிறார் உங்கள் நண்பர் தோழி. 

இதேபோல், இன்னொரு சூழலில் ஒருவரைச் சந்தித்ததும் நீங்கள் உங்கள் நண்பரிடம், “இவர் என் நண்பர்” என்று அறிமுகப்படுத்துகிறீர்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள். ஏன் கற்பனையாக நினைத்துக்கொள்ள வேண்டும்? இதுபோன்ற சூழலும் நிகழ்வும் எல்லோர் வாழ்விலும் நடப்பதுதானே!. நீங்கள், “இவர் என் நண்பர்” என்று சொன்ன பதிலில் என்ன தெரிகிறது?! அந்த நண்பர் உங்கள் வகையில் மணவுறவுத் தொடர்வு இல்லாதவர்… ஒருவேளை அவர் உங்கள் சாதிக்காரராகக் கூட இருக்கலாம்… ஆனால், நண்பர் என்றுதான் சொல்வீர்கள்….. கேட்டுக்கொண்டிருந்த நண்பர் ‘அப்படியா” என்பாரல்லவா? அந்த ‘அப்படியா’ என்பதில் மேலே சொன்ன புரிதல் உள்ளது என்று பொருள். உங்களால் “இவர் என் நண்பர்” என்று அறிமுகப்படுத்தப்பட்டவர், ஏதோ ஒரு வகையில் அறிமுகத்தைக் கேட்டுக்கொண்டிருந்தவருக்குத் தெரிந்தவர் என்றால் அவர் உடனே என்ன சொல்வார்?! * இவர்தானே! எனக்கு நல்லாத் தெரியுமே… எனக்கும் நண்பர் தான்” என்றும் சொல்லலாம்… * “இவர்தானே! இவர் என்நண்பர் முருகனோட நண்பராச்சே!” * “இவரை எனக்கே அறிமுகப்படுத்துறீர்களே நண்பரே! இவர் எங்க சொந்தக்காரர்….” இப்படி 3 வகையான பதில்களில் 3வது பதில் வந்தால் அதற்கு என்ன பொருள்? உங்கள் நண்பரின் சாதிக்காரர் என்று பொருளல்லவா? அப்படியென்றால், எந்த ஒரு மனிதரையும் வெறும் மனிதராக யாரும் பார்ப்பதில்லை. ஒன்று, சாதிக்காரராகப் பார்க்கிறோம்.. இல்லையென்றால், நண்பராகப் பார்க்கிறோம்… இல்லையா? ஆக, சாதிக்காரர் என்றால் மணவுறவுத் தொடர்புடையவர் …. நண்பர் என்றால் மணவுறவுத் தொடர்புடையவராக இருந்தாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இந்த இடத்தில் ஒரு தீர்க்கமான முடிவை நாம் எடுத்துக் கொள்ளலாம்… சாதிக்காரர் நண்பராகவும் இருக்கலாம். ஆனால், நண்பர் என்பவர் சாதிக்காரர் அல்லர். அப்படியென்றால், மணவுறவோடு சாதிக்குத் தொடர்பு இருக்கிறது.. நட்புக்குச் சாதியோடு துளியும் தொடர்பு இல்லை. 

இதுவரை நான் சொல்லிக் கொண்டிருப்பதோடு உடன்பாடு வந்திருந்தீர்கள் என்றால், சொந்தம் என்பது சாதி பந்தம் என்து மணவுறவுத் தொடர்பு என்பது தெளிவாக விளங்கியிருக்கும். சரி… நண்பனை ஏன் சொந்தபந்தமாக எண்ண மறுக்கிறோம்…?! “எங்க குடும்பத்துல ஒருத்தரா நினைக்கிறோம்” என்கிறோமே! அப்ப நினைக்கமட்டுந்தான் முடியும்… உங்க வூட்டுப் பொண்ணையோ உங்க சொந்தக்காரவூட்டுப் பொண்ணையோ அவர் காதலித்துவிட்டால், “உன்னையெல்லாம் நண்பன்னு நம்புனேனே.. என்னைச் செருப்பால அடிச்சுக்கணும்” என்று காட்டுக்கத்தல் போடுவோமே… அந்த நேரத்தில் சாதி கடந்த நட்புக்கே சாதி அடையாளம் புசிவிடுகிறோமே… ஏன்… அந்த நண்பன் என் சாதிக்காரன் இல்லை… என்ற உணர்வுதானே! அடப் பாவிங்களா..! இந்த எண்ணம்தானே உங்களுக்குப் பிரச்சனை… சாதி …. சாதி… சாதி…..ன்னு பேதிக்கிறீங்களே … புத்தி பேதலிக்கிறீங்களே… அந்த சாதிக்குள்ளேயே சாதியை மட்டும் பாத்தா பொண்ணு குடுக்குறீங்க… ?! எடுக்குறீங்க…?! ‘சொந்த சாதிக்குள் மணவுறவு’ சாதியில் தீர்மானிக்கப்படுவதில்லை அதெப்படி?! ?! சாதி மட்டுமா பாக்குறோம்…?! உட்சாதி பாக்குறோம்… பட்டம் பாக்குறோம்… கரை பாக்குறோம்…. நாடு பாக்குறோம்…. குலதெய்வம் பாக்குறோம்…. வகையறா பாக்குறோம்… இவ்வளவும் பாத்தத்துக்கு அப்புறம் தானே பொண்ணு பாக்குறோம்… பொண்ணு கேக்குறோம்….? அப்புடிங்கிறீங்க… அதானே…! அதான் இல்லை. பொண்ணு எடுக்குறத்துக்கும் பொண்ணு குடுக்குறத்துக்கும் சாதிக்குள் பார்த்தாலும் சாதிக்காக மட்டுமே ஒரு பயலும் ஒத்துக்கிறது இல்லை. பிறகென்ன பாக்குறோம்?!. சாதி அளவுகோலைத் தாண்டி நான்கு அளவுகோல் வைத்திருக்கிறோம்.. இந்த நாலிலும் ஒத்துவருவது மட்டும்தான் முக்கியம் என்கிறோம்… “பொண்ணக் கொடுத்தோமோ கண்ணக் கொடுத்தோமோன்னு” சாதிக்காரன் – சொந்தக்காரன் என்பதற்காக மட்டுமே யாரும் கொடுக்கிறதும் இல்லை; எடுக்கிறதும் இல்லை. அது சரியப்பா… அந்த நாலு அளவுகோல்கள் என்னென்ன? அதைச் சொல்லப்பா என்கிறீர்களா? இதோ அவை: 1. பையன் சம்பாதிக்கிறானா? சொத்து சுகம்? 2. நல்ல பையனா? குடி கூத்தி உண்டா? பொண்ணக் கண்கலங்காம வச்சுக் காலந் தள்ளுவானா? பொண்ணுக்குப் பொருத்தமா? 3. மாமன் மாமியார் நாத்தனார் குணங்குறி எப்படி? 4. சொந்த பந்தத்தைக் கொண்டாடுற குணம் பையனுக்கு இருக்கா? இந்த நாலுந்தான் அளவுகோல்! இது மாப்பிள்ளை பாக்குறதுக்கு மட்டுமா? இல்லையே! பொண்ணுக்கும் இதே மாதிரி நாலு அளவுகோல் உண்டுன்னுதானே நினைக்கிறீர்கள்…. 

பெண்ணுக்கு மூன்றே அளவுகோல் தான்! இதோ அவை 1. நல்ல பொண்ணா? எல்லாரையும் அனுசரிச்சப் போகுமா? 2. என்ன செய்வாக? 3. கறுப்பா செவப்பா? பையனுக்குப் பொருத்தமா? இதற்குமேல் ஜாதகப் பொருத்தம் பார்ப்பவர்கள் உண்டு. பொருத்தம் பார்த்து அகமணமுறை செய்த பல பெண்களும் சில ஆண்களும் பொறுத்துப் பார்த்தே காலத்தை ஓட்டுகிறார்கள். அது கிடக்கட்டும். அதுவேறு தலைப்பு. 

அது சரி… இங்க வாங்க…. இப்பொழுது பார்த்ததில் ‘சாதி’ என்ற அளவுகோல் எங்கேயாவது வந்ததா? சாதி என்பது தொழில் மரபறிபை வழிவழியாகப் பயன்படுத்திக் கொண்டால் மட்டுமே சம்பாத்யம் சாத்தியம் என்பது மட்டும்தான். அதுவன்றி, தொழிலடிப்படையில் இனக்குழுவின் இணக்கமான வாழ்க்கை கட்டமைக்கப்பட்டிருக்கிறதல்லாவா? காலங்காலமாகத் தொழில் சாதிக்குள் அகமணவுறவு கொண்டு சாதித்தொழில் நீடிப்புக்கு வழிவகுத்ததல்லவா? அங்குதான் சாதி தொழிற்படுகிறது செயல்படுகிறது; தொழில் சாதியானது அப்படித்தானே?! ஆக, சொந்த சாதிக்குள்ளேயே சாதிக்காக மட்டுமே பெண் கொடுப்பதில்லை…. சாதிபார்த்துப் பெண் கொடுப்பதில்லை; எடுப்பதுமில்லை… அங்கு வாழ்க்கையைச் செம்மையாக நடத்தும் தனிமனித, குடும்ப விழுமியங்கள் ஒழுக்கங்கள் அறநெறிகள்தாம் பார்க்கப்படுகின்றன என்பது இப்பொழுது புரிகிறதா?!. சாதியின் தொழில் என்னும் விழுமியம் பழக்கப்பட்டுப் போய்விட்டது… அவ்வளவுதான்… இல்லையா?!. எனவே, எந்த ஒரு சொந்த சாதிக்குள்ளும் சாதி என்னும் அளவுகோலை மட்டும் முன்வைத்து மணவுறவு தீர்மானிக்கப்படுவதில்லை. அவ்வளவு ஏன்? சொந்த மாமன், அத்தை, அக்காள் வழிகளிலும் சொந்தம் (சாதி) மட்டுமே போதாது; சொத்தும் வேண்டும் என்பதுதானே சமூக நிலவரம்… இது சமூக நிலவரமா? சாதி நிலவரமா? சமூகம் என்றதும் நினைவுக்கு வருகிறது. ‘சமூகம்’ என்ற சொல் ‘சாதி’ ஆகிப்போய்விட்டதே! அடக்கொடுமையே! மடக்கொடுமையல்லவா இது! அது வேறு விவாதத்திற்குரியது…. சாதி அளவுகோலைத் தாண்டிக் ‘காதல்’ அளவுகோலை ஏற்கலாமா? அதெப்படி முடியும்….??? சாதித் தூய்மை என்னாவது? பாரம்பரியப் பழக்க வழக்கம் என்ன ஆகிறது? மானம் மரியாதை இழக்கமுடியுமா? நாங்கள்லாம் அந்தப் பரம்பரை…. இந்தப் பரம்பரை.. என்று தாம்தூம் என்று வானுக்கும் பூமிக்கும் குதிக்கத் தொடங்கிவிட்டீர்களா? 

உங்கள் பரம்பரை - அதான் சாதிக்காரர்கள் அதான் சொந்தக்காரர்கள் 100 பேரின் மரபணுக்களைச் சோதனை செய்வோமா? 50% ஒத்துவருமா? மீதி 50%?! பொறுங்கள்… கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள்… நிதானியுங்கள்… உங்களை உங்கள் பிள்ளைப் பருவத்திலிருந்து இன்றைய பருவம் வரையிலான (வயதுவரை) நினைவோடைக்குள் நீந்தவைக்கப் போகிறேன்… மூச்சடக்கினால் முத்து…. மூச்சடங்கினால் சங்கு….?! அட ஏன்யா? அபசகுனமா என்கிறீர்களா? அது கிடக்கட்டும்…? என்னோடு வாருங்கள்…. * பிள்ளைப் பருவத்திலிருந்து சிறுவனாகிறீர்கள்… விளையாடுகிறீர்கள்… ஆண் பெண்ணோடு… ஹார்மோன் வேலை செய்கிறது… ஆசை வருகிறது… ஈர்ப்பு வருகிறது ….. யார் யார் மேலெல்லாம் வந்தது?!. * பள்ளிக்குச் செல்கிறீர்கள்… படிக்கிறீர்கள்… பழகுகிறீர்கள்… ஆண் பெண்ணொடு… யார் யார்மேலெல்லாம் ஈர்ப்பு வந்தது? யார் யாரை யெல்லாம் ரசித்தீர்கள்?!. * கல்லூரிக்குச் செல்கிறீர்கள்… படிக்கிறீர்கள்… படிப்பை மட்டுமா படிக்கிறீர்கள்?! புதிய புதிய கனவுகளை, இலட்சியங்களையும் அல்லவா படிக்கிறீர்கள்?! கல்லூரிக் காலத்தில் ‘செல்’ லூறிச் ‘செல்’ லூறி (Cell + Cell Phone) ‘ஜொல்’லூறித் துரத்தினீர்களா இல்லையா? சரி… நீங்கள் துரத்தவில்லை… உங்கள் எண்ணம், ஆசை, உணர்வு, காதல், காமம் இவையெல்லாம் உங்களையே துரத்தியிருக்குமே….!? அப்பொழுது யார்யாரையெல்லாம் காதலித்தீர்கள்?! சரி…. வேலைக்குப் போகிறீர்கள்? பணிபுரிகிறீர்கள்… வேறு யார் யாரையெல்லாம் புரிந்தீர்கள்? அவர்களுள் யார்யார் மீதெல்லாம் காதல் வந்தது?!. இப்படி வாழ்க்கையின் வீதிகளில் நாம் / நீ பார்த்த காதல்களில் நம்சாதி பார்த்து / உன் சாதி பார்த்து வருவதில்லை... அல்லவா? பெண்ணைச் சாதிக்குள் பார்த்துத் திருமணம் செய்வதால்தான் ‘பெண்சாதி” என்றார்களோ என்னவோ? ஆனால், காதல் வயப்படுகிற யாரும் சாதி பார்த்து வயப்படுவதில்லை. இதில் ஆழமாக – நுட்பமாக யோசிக்க வேண்டிய ஒன்று உண்டு. அது என்னவென்றால், தனிமனிதனாக உணர்வுவயப்படுகிற எந்த ஒரு மனிதனும் அவனவன் / அவளவள் வாழ்நாளில் எத்தனையோ பேரிடம் ஆசையால், காதலால், காமத்தால், அழகால், பண்பால், அறிவால்.... இப்படி இப்படி ஏதோ ஒன்றால் ஈர்க்கப்பட்டிருப்பார்கள்! அவர்கள் ஈர்க்கப்பட்ட போதெல்லாம் அவரவர் மனசாட்சி சாதி எல்லை தாண்டிப் போகிறோமே என்று தடுத்துக் கொண்டதுண்டா?! ஆக, தனிநபராய் ஆசைக்கு வெட்கமில்லை. அந்தத் தனிநபரின் மகனோ / மகளோ ஆசைப்பட்டால் வெட்கமில்லாமல் தடுப்பது வெட்கக் கேடல்லவா? அப்போ…. உனக்கும் எனக்கும் சாதியில்லை. சாதிக்கு மட்டுந்தான் சாதி உண்டு. அப்படித் தனிநபரையும் சாதியையும் ஆட்டுவிக்கும் ‘சாதி’ எங்கு உயிர்வாழ்கிறது? விந்தை மிகு வருணாசிரமதரம் இருந்தியாவில்?! சிந்தையிலா ஜாதிவெறி இந்தியாவில்?1 எல்லாச் சாதிகளும் தீண்டத்தகாத சாதிகளே! என்ன இது? எல்லா சாதியுமே தீண்டத்தகாத சாதிகளா? தாழ்த்தப்பட்டவர்கள் மட்டும் தானே தீண்டத்தகாத சாதிகளாக நடத்தப்பட்டார்கள்?! நடத்தப்படுகிறார்கள்?! இது எப்படி?! என விழிகளின் இமைகளைப் புருவங்களுக்கு மேல் உயர்த்துகிறீர்களா?! கோபத்திலா?! வியப்பிலா?! வாருங்கள் இதையும் சிந்திப்போம்! தீண்டல் என்பது மனம், மொழி, மெய்களால் நிகழ்வது.  மனதால் எண்ணத் தீண்டல்;  மொழியால் சிந்தனைத் தீண்டல்;  மெய்களால் செயல்வழித் தீண்டல். இந்த மூன்றும் ஒருங்கிணைந்த தீண்டலின் பெயர்தான் ‘காதல்’. காதலால் தீண்டப்படாத காதலைத் தீண்டாத ஒரு மனிதனும் இந்த உலகில் இல்லை. ஏற்றால் காதல்; ஏற்காவிட்டால் மோதல்; ஏற்பதை ஏற்காவிட்டால் சாதல். இதுதானே இன்றைய நிலை! இதுவரை பார்த்தபடி வெட்டிக்கொன்ற பயல்களையும் விசாரித்துப் பாருங்கள்…. அவர்கள் மனதிலும் அத்தனை அத்தனை காதல் இருக்கும்! அத்தனை அத்தனை சாதியும் இருக்கும்!.  சண்டாளச் சாதிக்குப் பிறந்த பயல்களுக்கு அவனவன் சாதிப் பெண்ணையும் ஆணையும் பார்த்தால் மட்டுமே காதல் வரும்படி பொறந்திருக்க வேண்டியது தானே!  பார்த்தவுடனே ‘சுரீர்’ எனக் கண்அவிந்து போகும்படிக் கண் அமைந்திருந்திருக்கலாமே!  நினைத்தவுடனே ‘சாதித்தீ’ அவனவன் நெஞ்சாங்குழிக்குள் வந்து காதல் உணர்வைத் தீய்த்திருக்க வேண்டியதுதானே! ... அறுந்துபோக வேண்டியது தானே!. அடப்பாவிகளா?! பார்க்க, ரசிக்க, சிரிக்க, எண்ண, சிந்திக்க, கவிதை எழுத, பின்னால் அலைய, பேச, பேசிப் பழக, ஊர் சுற்ற, பேருந்து இருக்கையில் பிணைந்து கிடக்க,….??!!.... எல்லாத்துக்கும் நாயாய் நாக்கைத் தொங்கப்போட்டு அலையும் அவனுக்குக் கட்டிக்க மட்டுந்தானே கசக்குது…! அதுவும் அவன் கட்டிக்கிட்டா இனிக்குது.. அவன் புள்ள / பையன் அதையே செய்தால் சாதிப் புத்தி அறிவாகி அரிவாள் தூக்குது?!. இப்படிக் காதல் காதல் என்று பாரதிபோல் பாடினாலும் சாதிக்குள் பெண் பார்க்கும் / கொடுக்கும் பழக்கம்தான் எல்லாச் சாதிகளையும் தீண்டத்தகாத சாதிகளாக்கிவிட்டதே!? சாதிக்குள் உட்சாதி… என்று என்று சாதிமூலம் பார்த்துத்தானே எடுக்கிறோம் / கொடுக்கிறோம்… இந்தியாவில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான சாதிகளும் அடுத்த சாதிக்குப் பெண் கொடுத்து / எடுத்து மணவுறவு கொள்வதைத் தடுத்துக் கொண்டேதானே இருந்துவருகிறது இந்தியச் சமூகம்!? 

மானுட சமுதாயமே! உன் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லு : * மனதால் எண்ணி எத்தனை சாதிப் பெண்களை / ஆண்களைத் தீண்டியிருப்பீர்கள்?! * மொழியால் சொல்லி எத்தனை சாதிப் பெண்களிடம் / ஆண்களிடம் காதலைத் தீண்டியிருப்பீர்கள்?! * மெய்யால் எத்தனை சாதிப் பெண்களிடம் / ஆண்களிடம் …..?! மனம், மொழி, மெய் தீண்டல் நிகழ்வதை எந்தச் சாதியும் தடுத்துவிட முடியாது. திருமணம் செய்துகொண்டு ஒரு சாதியை வேறுச் சாதியை தீண்டுவதைத்தான் சாதி அகமணமுறை தடுத்துக் கொண்டே இருக்கிறது. அது அகமணமுறையோ (சாதி) புறமணமுறையோ (காதல்) இரண்டுக்கும் சாதி என்பது ஒரு பொருட்டல்ல. இது சின்னச் சாதியோ? பெரிய சாதியோ? அது தாழ்ந்தோ சாதியோ? உயர்ந்த சாதியோ? அது தாழ்த்தப்பட்ட சாதியோ?, பிற்படுத்தப்பட்ட சாதியோ? உயர்த்திக்கொள்ளப்பட்ட சாதியோ? எல்லாமே ஒன்றுதான் – மணத்திலும் மனத்திலும்! அப்போ ஒரு சாதிப் பெண்ணை வேறுசாதி ஆணோ ஒருசாதி ஆணை வேறுசாதிப் பெண்ணோ மணவுறவு கொண்டு தீண்டக்கூடாது என்பதுதானே சாதியின் விதிமூலம்!? அகமணமுறை இதைத் தானே சாதிக்கிறது…?! ஆக, அகமணமுறையைச் சாதிப்பதுதான் சாதி. இந்த அடிப்படையில், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு சாதியும் தீண்டத்தகாத சாதிகளே! மொத்தத்தில் எல்லாச் சாதிகளும் தீண்டத்தகாத சாதிகளே!. எனவே, எல்லாச் சாதிகளுக்குள்ளும் புறமணமுறையை – காதல் மணமுறையை நிலைநாட்டுவதன்மூலம் தீண்டாமையை ஒழிப்போம்! சாதியை அழிப்போம்!! சமத்துவம் வளர்ப்போம்!!!.

அம்பேத்கர் 125 – விழா மலர், 17.04.2016 (அம்பேத்கர் நகர், கீழ குளத்தூர், திருமானூர், அரியலூர் மாவட்டம்) வெளியாகும் என் கட்டுரை.

முனைவர் சு.மாதவன் உதவிப்பேராசிரியர் – யூஜிசி – ஆர்ஏ, தமிழாய்வுத்துறை, மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி (த), புதுக்கோட்டை பேச 9751 330 855 மின் அஞ்சல் : semmozhi200269@gmail.com

Thursday 7 April 2016

தமிழர் வாழ்வியலுக்குப் பௌத்த, சமணத்தின் கொடை

தமிழாய்வுத்துறை, புனித வளனார் கல்லூரி (த), திருச்சிராப்பள்ளி. …………….. அறக்கட்டளை சொற்பொழிவு – எழுத்துரை – 08.12.2015 தமிழர் வாழ்வியலுக்குப் பௌத்த, சமணத்தின் கொடை முனைவர் சு.மாதவன் உதவிப்பேராசிரியர் – யூஜிசி – ஆர்ஏ, தமிழாய்வுத்துறை, மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி (த), புதுக்கோட்டை பேச 9751 330 855 மின் அஞ்சல் : semmozhi200269@gmail.com தமிழர் வாழ்வியல் திணை வாழ்வியல்; திணை என்பது நிலம் மனிதர், ஒழுக்கம் ஆகிய முப்பட்டகச் சொற்பொருள் விரிவு கொண்டது. நிலம் - ஐந்திணை மனிதர் - உயர்திணை ஒழுக்கம் - அகத்திணை, புறத்திணை எனவே, நிலம் சார்ந்த மனிதரது ஒழுக்கத்தைத் திணை என்றனர் தமிழர். திணை என்ற ஒற்றைச்சொல் முப்பட்டகச் சொற்பொருள் விரிவு கொண்டதாக விளங்குகிறது. இந்த அடிப்படையில்தான் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்ற வாழ்வியல் இயங்குதளங்களும் மூன்று பரிமாணங்களைக் கொண்டதாக இயங்குகின்றன. இவ்வாறு, தொல் பழங்காலம் – சங்க காலம் முதலே திணை வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டு வந்துள்ள தமிழர் வாழ்வியலின் செம்மாந்த பண்பை நிலைப்படுத்தி வளப்படுத்தும் அறவியல் சிந்தனைகளாகத் தொழிற்படுபவை, பௌத்த, சமண வாழ்வியல் சிந்தனைகளாகும். இத்தகைய நெறிநிலையில், தமிழர் வாழ்வியலுக்குப் பௌத்த, சமணத்தின் கொடைகளாக விளங்குபவை யாவை என ஆராயலாம். தமிழர் வாழ்வியலை அகம், புறம் என இருவகையாகப் பகுத்து அவ்வவற்றுக்குரிய வரையறைகளை வகுத்து ஒருசீராய்த் தொகுத்து அகவாழ்வியல், புற வாழ்வியல் எனக் கட்டமைத்துள்ளனர். அவ்வவற்றுக்குரிய வரையறைகளின்படி ஒழுகுதலை ‘ஒழுக்கநெறி’ என்றனர். இதனடிப்படையில், அகவாழ்வியல் ஒழுக்கநெறி, புறவாழ்க்கை ஒழுக்கநெறி எனப் பின்பற்றி வந்துள்ளனர். இத்தகைய வாழ்வியல் கோட்பாட்டு வரையறைகள் சங்க இலக்கியங்களிலிருந்தும் தொல்காப்பியத்திலிருந்தும் தமிழறிஞர்களால் உருவாக்கப்பட்டன. எனவே, வாழ்வியலிலிருந்து இலக்கியமும் இலக்கியத்திலிருந்து வாழ்வியல் ஒழுக்கநெறியும் (அறநெறி) உருப்பெற்றுள்ளன எனலாம். இந்த நோக்குநிலையிலிருந்து, தமிழர் வாழ்வியலின் செம்மாந்த ஒழுக்கநெறி உருவாக்கத்திற்கு பௌத்த, சமண சமயங்களின் கொடைகளாக எவையெவை திகழ்கின்றன என்பதை இந்தக் கட்டுரை ஆராய முன்வருகிறது. தமிழர் வாழ்வியல் அகமும் புறமும் உலகத்தின் பிற உயிர்களிலிருந்தும் மனிதனைத் தனித்துவப்படுத்துவது அவனது படைப்பாற்றலேயாகும். பிற உயிர்கள் எல்லாம் இருக்கிற உலகில் கிடைக்கிற உணவில் உயிர்வாழ்ந்துவிட்டுப் போகின்றன. சில தகவமைப்புகளை மட்டுமே உருவாக்கிக் கொள்கின்றன. ஆனால், மனிதனோ, உணவு, உடை, உறையுள் என்ற அடிப்படைத் தேவைகளுக்கும் அப்பாற்பட்டு இந்த உலகை இயற்கைநிலையிலிருந்து தன் படைப்பாற்றலால் அன்றாடம் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறான். இதைவிடவெல்லாம் ஒரே ஒரு செம்மாந்த பண்பை மனிதன் மட்டுமே உருவாக்கிக் கொண்டுள்ளான். அந்தப் பண்புதான் அகம் என்ற அறநெறி. இரு அகங்களின் ஈர்ப்புக் கலப்பால் ஓர் அகத்திற்குள் இரு அகங்கள் மட்டுமே உணர்ந்து பகிரும் பண்பை மனிதன் மட்டுமே உருவாக்கிக் கொண்டுள்ளான். இரு உள்ளங்களால் மட்டுமே உணரும் தன்மையது ‘அகம்’. மனிதகுலம் எல்லோரும் அறியும் தன்மையது ‘புறம்’. இத்தகைய வாழ்வியல் நெறியை உலகில் உள்ள எல்லாநாட்டு மானிடரும் வரையறுத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். ஆனால், இந்த வரையறையை முதன்முதலில், பதிவு ஆவணமாகக் கொண்டுள்ள ஒரே இனம் தமிழினம் என்பதை அறிஞர்கள் பல்லாற்றானும் நிறுவியுள்ளனர். தமிழர் வாழ்வியல் அடிப்படைகள் – அகம், புறம் அநேகமாக, ஒற்றைச் சொல்லால் நிலம், மக்கள், வாழ்வியல் என்ற மூன்றையும் குறிக்கும். ஒரே மொழி தமிழ்மொழியே ஆதல் கூடும். ’திணை’ என அழைக்கப்படும் அச் சொல்லுக்குள்தான் எத்துணை நுட்பம் செறிந்து ஒளிர்கிறது பாருங்கள்! நிலம் ஐந்திணை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை- முதற்பொருள் திணை மனிதர் - உயர்திணை பொருள்கள் – கருப்பொருள்கள் ஒழுக்கம் அகத்திணை, புறத்திணை, வாழ்வியல்- உரிப்பொருள்கள் ‘திணை’ என்ற சொல்லுக்கு ‘ஒழுக்கம்’ என்றும் ஒரு பொருள் உண்டு. ‘பொருள்’ சொல்லுக்கு ‘வாழ்க்கை’ என்றும் பொருள் உண்டு. பொருள்களில் ஆனது வாழ்க்கை; ஒழுக்கத்தால் ஆனது வாழ்க்கை என்னும் பொருளியைபு – தருக்க இயைபு கொண்ட சொல் ‘திணை’ நிலமும் பொழுதும் முதற்பொருள். ‘நிலம்’ என்பது உற்பத்திக் களம்; ‘பொழுது’ என்பது உற்பத்திக் காலம். அதாவது உற்பத்திக்கான பணியைத் தொடங்கும் காலம் ‘சிறுபொழுது’ உற்பத்தியை வளர்த்து அறுவடை செய்யும் காலம் பெரும்பொழுது என்ற வகையில் தமிழர்களால் பகுக்கப்பட்டுள்ளது. குறிஞ்சித்திணைக்குரிய சிறுபொழுதான ‘யாமம்’ அந்நிலத்தில் வேட்டைப்பணியைத் தொடங்கும் காலமாகும். பெரும்பொழுதுகளான ‘கூதிர், முன்பனிக்காலங்கள்’, வேட்டையாடுதல், தினை விதைத்தல், தேனடுத்தல், கிழங்கு அகழ்தல் போன்ற தொழில்களுக்குரிய காலங்களாகும். முல்லைத் திணைக்குரிய சிறுபொழுதான மாலை, அந்நிலத்துத் தொழிலான ஆநிரை மேய்த்துத் திரும்பும் காலமாகும். பெரும்பொழுதான ‘கார்காலம்’ ஆநிரை மேய்க்கச் செல்ல இயலாத சூழலால் வீட்டிலிருக்கும் காலமாகும். சாமை, வரகு விதைத்தல் உள்ளிட்ட பயிர்செயதலுக்கு உகந்த காலமாகவும் கார்காலம் விளங்குகிறது. மருதத்திணைக்குரிய சிறுபொழுதான ‘வைகறை’, அந்நிலத்துத் தொழிலான வேளாண்மைப் பணியைத் தொடங்கும் காலமாகும். பெரும்பொழுதுகளான ‘கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்’ ஆகிய ஆறு காலங்களும் வேளாண்மையை வளர்ப்பதிலிருந்து அறுவடை செய்யும் காலம் வரையிலான பரந்த காலப்பகுதியாகும். அந்தக் காலத்தில் முப்போகம், நாற்போகம் என விளைந்ததால் மருதத்திணைக்குரிய பெரும்பொழுதுக்காலம் என்பது ஆண்டின் முழுமையும் நிறைந்திருந்திக்கிறது எனலாம். நெய்தல் திணைக்குரிய சிறுபொழுதான ‘எற்பாடு’, அந்நிலத்துத் தொழிலான மீன்பிடிப் பணியைத் தொடங்கும் காலமாகும். பெரும்பொழுதுகளான ‘கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்’ ஆகிய ஆறு காலங்களும் மீன்பிடித் தொழிலைத் தொடர்ந்து மேற்கொள்ளும் காலங்களாகும். உப்பெடுத்தல், மீனுணைக்கல் போன்ற தொழில்களையும் இப் பெரும்பொழுதுக்-காலங்களுக்குள்ளேயே செய்தாக வேண்டிய சூழல் நெய்தல் திணையில் உள்ளது. பாலைத்திணைக்குரிய சிறுபொழுதுதான ‘நண்பகல்’, அந்நிலத்துத் தொழிலான ஆறலைத்தலுக்குரிய காலமாகும். பெரும்பொழுதுகளான பின்பனி, இளவேனில், முதுவேனில் ஆகியனவும் ஆறலைத்தலுக்குரிய காலங்களேயாகும் (தொல். பொருள். அகத். 949 - 958). நிலம் உற்பவிக்கும் அகமும் புறமும் – திணைவாழ்வியல் தமிழரின் திணைவாழ்வியலானது முதற்பொருள்கள் விளைவிக்கும் கருப்பொருள்கள்; கருப்பொருள்களால் விளைவிக்கப்படும் உரிப்பொருள்கள் என மூன்றாலும் கட்டமைக்கப்பட்டுள்ளது. வேட்டையாடும் ஆடவரும் தினைப்புனம் காக்கும் மகளிரும் இயற்கையால் ‘புணர்தல்’ குறிஞ்சித் திணை வாழ்வியல். இங்கு முதற்பொருளான மலைச்சூழலும் (நிலம்) வேட்டையாடவும் தினைப்புனம் காக்கவும் வரும் காலச் சூழலும் இணைந்து கருப்பொருளால் ‘புணர்தலை’ உரித்தாகும். ஆநிரை மேய்க்கும் ஆடவர் வருகைக்காக இல்லிலிருந்து ஆப்பொருள்கள் விற்கும் ஆய்ச்சியர் காத்து ‘இருத்தல்’ – முல்லைத்திணை வாழ்வியல். இங்கு முதற்பொருளான காட்டுச்சூழலும் ஆடவர் ஆநிரை மேய்க்கச் செல்வதால் அவரவர் வரும்வரை ஆய்ச்சியர் காத்திருக்கும் நீண்ட காலஅளவும் இணைந்து கருப்பொருள்களால் ‘இருத்தலை’ உரித்தாகும். உழவுத் தொழில் செய்யும் ஆடவரும் மகளிரும் ஒருசேர இல்லத்திலும் வயலிலும் எல்லா நேரமும் இணைந்தே இருப்பதால் வரும் இயற்கையால் எழும் சலிப்புணர்வும் உற்பத்தி மிகுதியால் வரும் பரத்தமைத் தொடர்பும் விளைவிக்கும் உளவியல் உணர்வான ‘ஊடல்’ மருதத்திணை வாழ்வியல். இங்கு முதற்பொருளான விளைநிலச்சூழலும் விளைபொருள் உற்பத்திக்கான வேளாண்தொழில் காலமும் இணைந்து கருப்பொருள்களால் ‘ஊடலை’ உரித்தாகும். கடலுக்குள் மீன்பிடிக்கவும் முத்தெடுக்கவும் செல்லும் ஆடவரை மீன் உணக்கவும் முத்துக்கோர்க்கவும் கடற்கரைக் குடியிருப்பிலிருக்கும் பரத்தியர் மீண்டும் உயிரோடு சந்திக்க இயலுமோ என வேதனையுடன் காத்திருக்கும் உளவியல் உணர்வான ‘இரங்கல்’ நெய்தல் திணை வாழ்வியல். இங்கு முதற்பொருளான கடற்சூழலும் மீன்பிடிக்கச் சென்றுதிரும்பும் காலச்சூழலும் இணைந்து கருப்பொருள்களால் ‘இரங்கலை’ உரித்தாகும். ‘அகனைந்திணை’ என அழைக்கபெறும் இவை மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான தொழிலுறவை அடிப்படையாகக் கொண்டவை; மனித வாழ்வியல் தேவைகளை நிறைவுசெய்யும் உற்பத்தியோடு தொடர்புடையவை. ஆனால், புறத்திணையோ பெரும்பாலும் உற்பத்தியையும் உற்பத்திக்கான ஐந்திணை நிலங்களையும் ஆளுகை செய்வதோடு தொடர்புடையவை. அதாவது, உற்பத்திப்பொருள் நுகர்வில் இசைவும் முரணும் தோன்றும் களங்களாக அல்லது இசைவாலும் முரணாலும் தோன்றும் களங்களாகப் புறத்திணைகள் இயல்கின்றன. புறத்திணைகளின் துறைசார் தொன்மைப் போக்குகளைக் கூர்ந்து நோக்கினால் அவற்றுக்குள் போரின் பரிணாம வளர்ச்சிக் கூறுகளைக் கண்டறியலாம். ஆநிரை கவர்தலும் மீட்டலும் ‘வெட்சி’. இது போருக்குச் சீண்டுதலாகும். ஒரு நாட்டின் செல்வமான மாடுகளைக் கவர்தல் என்பது ஒருவிதமான பொருளாதார இடைஞ்சலாகும். இடைஞ்சல் செய்யவும் இடைஞ்சலைத் தடுக்கவும் போரிடுதல் ‘வஞ்சி’. ஊருக்குள் தெருவுக்குள் எனப் போரிட்டு முன்னேறி அரண்மனைக் கோட்டையைக் கைப்பற்றவும் காப்பாற்றவும் போரிடுதல் ‘உழிஞை’. அரண்மனை புகுந்த எதிர்நாட்டரசனொடு அந்நாட்டரசன் போரிடுதல் ‘தும்பை’. அரசரும் படையும் வென்றால் அது ‘வாகை’ இத்தகைய நான்குகட்டப் போரில் உயிர்நீத்தால் ‘காஞ்சி’ (நிலையாமை). வென்ற ஆண்மகனின் வீரப்போர்ப் புகழ் பாடினால் ‘பாடாண்’. (தொல். பொருள். புறத். 1002 – 1028). அகத்திணை + புறத்திணை = உயர்திணை திணைகளின் முதற்பொருள்களான நிலம், பொழுது ஆகியவற்றால் விளையும் கருப்பொருள்களை நுகர்வதன் அடிப்படையில் உரிப்பொருள்கள் அமைகின்றன. நுகர்வில் இசைவு ஏற்பட்டால் அது அகத்திணை வாழ்வியலைக் கட்டமைக்கிறது. நுகர்வில் முரண் ஏற்பட்டால் அது புறத்திணை வாழ்வியலை விளைவிக்கிறது. திணைமக்களின் தொழில்கள் கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டவை. கருப்பொருள்களில் ஒன்றுதான் தொழில் எனக் குறிப்பிடப் பெற்றிருந்தாலும், “தெய்வம் உணாவே மாமரம் புள்பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகை பிறவும் கருவென மொழிப” (தொல்.பொருள்.964) என்பதில், எல்லாக் கருப்பொருள்களையும் தொடர்ச்சியாக வரிசைப்படுத்தி தெய்வம், உணவு, மா (விலங்கு), மரம், புள் (பறவை), பறை என வரிசைப்படுத்தி இவற்றிற்கு இயைபுடைய தொழில் என்பதால் தொழிலை இறுதியாய் வைத்தார் எனப் பொருள்கொள்ள இடமிருக்கிறது. எனவே, வாழ்வியலைத் தகவமைக்கும் தொழில் தொழிற்படும் பொருள்களே கருப்பொருள்களாகும். இத்தகைய, உயிருள்ளன - மா, மரம், புள் கருப்பொருள்கள் உயிரல்லன - தெய்வம், உணவு உருவாக்கப்படுவன- உணவு, பறை, யாழ் என்ற வகைப்படும் பகுப்பின்படி, எல்லாக் கருப்பொருள்களோடும் தொழில் இயைபுப்படுகிறது. மானுட வாழ்க்கையை வடிவமைக்கும் கடமை தொழிலுக்குரியது. இந்த அடிப்படையில்தான், கருப்பொருள்களுக்குள் தொழிற்படும் தொழிலின் அடிப்படையில் உரிப்பொருள் விளைகிறது. குறிஞ்சியில் வேட்டையாடுதல், தேனெடுத்தல், தினை விதைத்தல், கிழங்கு அகழ்தல் ஆகியன தொழில்கள். இவற்றிலிருந்து நுகர்வுக்கு மேலான பொருள்சேர்க்கை – மிகுபொருள் சேர்க்கை இல்லை. இத்தொழில்கள் யாவும் ஆணும் பெண்ணும் இணைந்தும் வேலைப்பிரிவினை செய்தும் மேற்கொள்வன. எனவே, குறிஞ்சியின் திணைப் பின்னணி ‘புணர்தல்’ உரிப்பொருளுக்கு உரியதாகிறது. முல்லையில் ஆநிரை மேய்த்தல், சாமை – வரகு விதைத்தல் ஆகியன தொழில்கள். இத்தொழில்களிலிருந்தும் மிகுபொருள் சேர்க்கை இல்லை. எனவே, முல்லைத் திணைப்பின்னணி ‘இருத்தல்’ எனும் உருப்பொருளுக்கு உரியதாகிறது. நெய்தலின் மீன்பிடித்தல், உப்பு எடுத்தல், மீன் உணக்கல் ஆகியன தொழில்கள். இத்தொழில்களிலிருந்தும் மிகுபொருள் சேர்க்கை இல்லை. எனவே, நெய்தல் திணைப்பின்னணி ‘இரங்கல்’ எனும் உரிப்பொருளுக்கு உரியதாகிறது. மருதத்தின் நெல்விளைத்தல், இதர தானியங்கள் விளைத்தல் ஆகியன தொழில்கள். இத்தொழில்களிலிருந்து நுகர்வுக்கு மேலான பொருள்சேர்க்கை மிகுகிறது. மிகுபொருள் சேர்க்கை எனும் உபரி உற்பத்தி, பரத்தமை ஒழுக்கத்தை விளைவிக்கிறது. எனவே, மருதத்திணையின் பின்னணி ‘ஊடல்’ எனும் உரிப்பொருளுக்கு உரியதாகிறது. பிற திணைகளில் தொழிலடிப்படையில் கிடைக்கும் பொருள்களைக் கொண்ட வாழ்வியல் தேவைகளை இவற்றுக்குட்பட்டுத் தலைவனும் தலைவியும் ஈடுசெய்து கொண்டு வாழ்ந்துவருகின்றனர். எனவே, பிற திணைகளில் ஓரிடத்திலேனும் பரத்தையர் ஒழுக்கம் எனும் பதிவுச் சுவடே இல்லை. பிற திணைகளில் துளியும் இல்லாத பரத்தையர் மருதத்திணையில் மட்டும் நிறைந்திருப்பதன் பொருளாயதப் பின்னணியை அறிஞர் பலர் விரிவாக ஆராய்ந்துள்ளனர். இவ்வாறிருக்க, மருதத்திணைக்குரிய உரிப்பொருளாக ஊடலை முன்வைத்தது ஏன்? ஊடலைப் பின்பற்றுமாறு மருதநிலப் பெண்ணுக்கு அறிவுறுத்தியது ஏன்?... பரத்தையர் ஒழுக்கத்துக்குச் சமூக ஏற்புநிலை கொடுத்தது ஏன்? என்றவாறு வினாக்கள் பல முளைக்கின்றன. இவற்றுக்கெல்லாம் ஒரே பதில்தான். பிற திணைகளில் உடைமையும் ஆணாதிக்கமும் இல்லை. மருதத் திணையில் நிலவுடைமையும் ஆணாதிக்கமும் தந்தைவழிச் சமூகக் கட்டமைப்பும் கெட்டிபட்டுப் போயிருக்கிறது என்பதுதான் பதில். இவ்வாறெல்லாம் இருந்தபோதிலும், அக்காலப் புலவர் சான்றோர் வரையறுத்த அகத்தணை ஒழுக்கத்தின் அடிப்படையிலும் புறத்திணை ஒழுக்கத்தின் அடிப்படையிலும் வாழ்பவனே ‘உயர்திணை’ என்பதே தமிழர் வாழ்வியல். உயர்திணை என்னும் வினைச்சொல், உயர்ந்த, உயர்கின்ற, உயரும் திணை (தான்) உயர்திணை உயர்த்திய, உயர்த்துகின்ற, உயர்த்தும் (பிறரை / சமூகத்தை) எனப் பிரிந்து பொருள்தரும். எனவே, தானும் உயர்ந்து தன் சமூகத்தையும் உயர்த்தும் பண்பு கொண்டவன் ‘உயர்திணை’. இத்தகைய பண்பு, இல்லாததெல்லாம் அஃறிணை (அல்திணை). ஆக, ‘உயர் ஒழுக்கம்’ நிரம்பியவனே ‘உயர்திணை’. இங்கு ‘உயர் ஒழுக்கம்’ என்பதும் வினைத்தொகை சொல் என்பது கூர்ந்து அறியத்தக்கது. அநேகமாக, உலகின் வேறெங்கும் மொழியிலும் இத்தகைய ‘பண்பாட்டுச் செம்மைநிறை கலைச்சொல்’ மூலம் மனிதனை சுட்டும் பாங்கு இருத்தல் ஐயமே. இந்த வகையில், உயர்திணை எனும் கலைச்சொல்லைப் பெற்ற உயர்பண்பாட்டு மரபு தமிழர் வாழ்வியலுக்குரியது எனில் அது மிகையில்லை. தமிழரின் திணை வாழ்வியலில் ஏற்பட்ட பின்னடைவுகள் தமிழரின் திணை வாழ்வியலில் குறிஞ்சி, முல்லை, நெய்தல் ஆகிய மூன்று திணைகளிலும் இன்றும் இனக்குழுச் சமூகப் பண்புகள் நிறைந்திருக்கக் காணலாம். ஆனால், மருதமோ இனக்குழுச் சமூக வாழ்க்கையிலிருந்து நிலவுடைமைச் சமூகமாக மாறியதோடல்லாமல் அரச சமூகமாக வளர்ச்சியடைந்து எல்லாத் திணைச் சமூகங்களையும் மேலாண்மைசெய்யும் தனிப்பெரும் பண்பைப் பெற்றுள்ளது. மருதத்தில்தான் குடியிருப்புகள், ஊர்கள், நாடுகள் என்பவை கட்டமைக்கப்பட்டு நாகரீக, பண்பாட்டு நடவடிக்கைகள் வளர்ந்து மிகுந்தன. இனக்குழுத்தலைமைச் சமூகங்கள் பல ஆங்காங்கே வளர்ந்ததன் பின்னணியில் அவ்வினக்குழுத் தலைமைகளிலிருந்தே ஆங்காங்கே சிற்சில / பற்பல இனக்குழுக்களுக்கென அரசர்கள் உருவாயினர். ‘மன்னர்’ எனப்பட்டோர் எல்லாம இனக்குழுத் தலைவர்களாவர். மன்னர்களில் சிலரையோ பலரையோ தன் ஆளுகைக்குள் கொண்டு பரந்த ஒற்றையாதிக்க நிலை எடுத்தவர்கள் எல்லாம் ‘அரசர்கள்’ ஆவர். ஒரு இனக்குழுச் சமூகத்தையொட்டிய நான்கு பகுதிகளிலும் இருந்துவரும் பிற இனக்குழுச் சமூகங்களுக்கும் அந்த ஒரு இனக்குழுச் சமூகத்துக்கும் இடையில் எல்லைத் தகராறில் தொடங்கிய முரண்கள் போர்களாக வெடித்தன. ‘போரின் தொடக்கமாக’ ஆநிரை கவர்தலில் தொடங்கிப் போரின் முடிவாக ஒரு மன்னரையோ / அரசரையோ வீழ்த்தி வெற்றிவாகை சூடுதல் என்பது அடிக்கடி நிகழ்ந்துவந்த நிகழ்வுகளெனச் சங்க இலக்கியப் புறத்திணைப் பாடல்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன. ‘வெட்சித்திணைப் போர்’ என்பது ஊருக்குள் புகுந்து சூழப்பட்டாரை அழித்தலில் தொடங்கி ஆநிரைகளைக் கவர்ந்து தம்நாடு கொணரலில் முடிகிறது. இந்த வெற்றியைக் கொண்டாட வழிநடையில் கள்ளுண்டு களித்துக் கொண்டாலும் நிகழ்கிறது. அவ்வாறாயின், கொலை, களவு, கள்ளுண்ணல் ஆகியன வெட்சித்திணை வாழ்வியலில் உள்ளன (தொல்.பொருள்.புறத். 1002 – 1006). ‘வஞ்சித்திணைப் போர்’ என்பது பகைநாட்டில் தீவைத்தலில் தொடங்கி வென்றோர் ஒளியும் தோற்றோர் தேய்வும் பேசுவதில் முடிகிறது. இங்கு, வீடு, பொருள் சேர்க்கை ஆகியவற்றை நாசம் செய்தல் நிகழ்கிறது. (தொல்.பொருள்.புறத். 1007 – 1009). ‘உழிஞைத் திணைப் போர்’ என்பது ஒரு அரசனின் மேலாண்மையை ஏற்றுக்கொள்ளாத மன்னனின்மீது போர்தொடுத்துக் கோட்டையை முற்றுகையிடுதலில் தொடங்கிப் போரிட்டுத் தோற்றோரைத் தொகுத்தலில் முடிகிறது. இதில், வென்ற வாளினை, நீராட்டு விழா என்று ஒரு துறையும் வருவதால், கோட்டையை அகப்படுத்தும் போரில் வீரர் பலரையும் கொன்றுள்ளனர் என்பதும் தெரியவருகிறது (தொல். பொருள். புறத். 1010 – 1014). ‘தும்பைத் திணைப் போர்’ என்பது அரசரொடு அரசர் போரிட்டு வெல்லுதல் மட்டுமின்றி பகைவீரர்களின் உடல்கள் இருகூறிட்டு நிலத்தில்நிற்கும் நிலையைச் சிறப்பியல்பு எனக் கொள்வது (தொல். பொருள். புறத். 1016 – 1017) ஆக, அரசரொடு போரிடுதலில் தொடங்கி ஒரு அரசரும் இரு அரசரும் தமக்குள்ளும் இரு படையிலுள்ள போர்வீர்ர்களுக்குள் பல போர்வீரர்களையும் கொன்று குவித்தலில் முடிகிறது (தொல். பொருள். புறத். 1018). ஆக மொத்தத்தில், புறத்திணை வாழ்வியலானது கொலை, களவு, கள்ளுண்ணல், உடைமைகளை நாசம் செய்தல், இத்தகைய அட்டூழியங்களையெல்லாம் வெற்றி எனக்கூறிப் பெருமிதம் கொள்ளல் ஆகிய நிகழ்வுகளைக் கொண்டதாக உள்ளது. இத்தகைய புறத்திணைப் போர்களில் மாண்டோரெல்லாம் அகத்திணை வாழ்வியலுக்குரிய வீரர்களன்றோ? அவ்வீரர்களில் மணம்புரிந்த வீரர்களின் மனைவி, மக்கள், குடும்பம் ஆகியோர் பாதுகாப்பான வாழ்க்கையின்றி அல்லலுறுவதும் அலைக்கழிக்கப்படுவதுமாகத் தானே தவித்திருப்பர்?! அரணற்ற – அறமற்ற சூழலில், எத்துணை இளங் கைம்பெண்கள் அலமந்து நின்றிருப்பர்?! அவர்தம் சமூக வாழ்வியல் சீர்குலைவைச் சொல்லவும் வேண்டுமோ? அன்றி, அகத்திணை வாழ்வியலில் பரத்தமை ஒழுக்கத்தால் எத்துனைக் குடும்பங்களின் வாழ்வியல் சீர்குலைந்திருக்கும்? இவ்வாறு, அகத்திணை ஒழுக்கச் சீர்குலைவால் குடும்பநெறிச் சீரழிவும் புறத்திணை ஒழுக்கச் சீர்கேட்டால் சமூகநெறிச் சீர்குலைவும் தமிழர் வாழ்வியலை நிலைகுலையச் செய்து கொண்டிருந்த காலத்தில், சங்கப்புலவர்களான சான்றோர்கள் அறநெறிச் சிந்தனைகளைத் தங்கள் செய்யுள்களின் வழியாகச் சமூகத்தின் முன்வைத்தனர் பொதுவியல், பாடாண், காஞசித் திணைப் பாடல்களில் இவ்வகை அறநெறி உருவாக்கச் சிந்தனைகளைக் காண முடிகிறது. உயர்திணை வாழ்வியல் துயர்திணை வாழ்வியலாகிவிட்ட சூழலைப் பிற்காலச் சங்கச் சமூகம் எதிர்கொண்டது. இதனால் விழுமியம்சார் அறநெறிக் கோட்பாட்டுத் திணைவாழ்வியலில் பின்னடைவுகள் எனும் புதிர்கொண்டது. தன்னியல் அறநெறி உருவாக்கமும் பௌத்த, சமண அறநெறிச் செறிவாக்கமும் தன் படிப்பினைகளிலிருந்து அகத்திணை, புறத்திணை வாழ்வியல் செம்மைக்கான அறநெறிக் கோட்பாடுகளைத் தன்னியல்பாய்த் தமிழ்ச் சமூகம் உருவாக்கிக் கொண்டிருந்த காலத்தில் கி.மு. 3ஆம் நூற்றாண்டுவாக்கில் பௌத்தமும் அதற்கு முன்பே சமணமும் தமிழகத்தில் கால்கொள்ளத் தொடங்கின. அக்கால அரசியல் அதற்கு ஏதுவான புறச் சூழலை உருவாக்கித் தந்தன. இதுகுறித்த விரிவான ஆய்வின் ஒரு பகுதியை இந்த ஆய்வாளரின் முனைவர் பட்ட ஆய்வு நூலிலிருந்து அவ்வாறே எடுத்துக்காட்டுவது இங்கு பொருத்தமாகும்: “தமிழகத்திற்கு வந்து பரவிய பௌத்த, சமண சமயக் கருத்துக்கள் தமிழ்ச் சமூகத்தின் அனைத்துக் கட்டமைப்பு நிலையிலும் இடம்பெறலாயின. சமயம், சமூகம், அரசியல், பண்பாட்டியல் என அனைத்துச் சமூக நிறுவனங்களிலும் தனது ஆழ்ந்த பிடிமானத்தை ஏற்படுத்திய அவை இலக்கியங்களிலும் இடம்பெறுவது இயல்பானதேயாகும். இவ்வாறு அவை தாக்குரவை ஏற்படுத்துவதற்குரிய ஏற்புநிலை, தன்வயமாக்கும் போக்கு, புதுக்கும் இயல்பு ஆகியவற்றைத் தமிழ்ச் சமூகம் கொண்டிருந்தது என்பதுதான் இங்கு கவனத்திற்குரிய செய்தியாகும். “அரசியல், நீதி, மெய்யியல், மதம், இலக்கியம், கலை ஆகிய எல்லா அம்சங்களின் வளர்ச்சியும் பொருளாதார வளர்ச்சியை அடித்தளமாகக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த மேல் கட்டுமானத்து அம்சங்கள் எல்லாம் சேர்ந்து ஒன்றின்மேல் ஒன்று வினையையும், எதிர் வினையையும் விளைவித்துக் கொண்டிருப்பதோடு பொருளாதார அடித்தளத்தின் மீதும் வினைபடுகின்றன”. (பாலசுப்பிரமணியன்.,கு.மா. 1987: 60) என்ற கருத்துப்படி, பொருளாதார வளர்ச்சியால் சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களை நெறிப்படுத்துவதே அறம் என்பதன் தலையாய நோக்கமாக அமைகிறது. இங்கு குறிப்பிடப்படும் இப்பொருளாதார வளர்ச்சியை சமூக உற்பத்தி உறவுகள் தீர்மானிக்கின்றன. சமூகத்தின் இதர நிறுவன உறுப்புக்களான மதம், சாதி உள்ளிட்ட பண்பாட்டுக்கூறுகள் வாழ்வியலைச் சமூக உற்பத்தி உறவுகளோடு பிணைக்கின்றன. எனவே, சமூக உற்பத்தி உறவுகள் அமைந்திருக்கும் பாங்குக்கேற்ப பொருளாதார வளர்ச்சியும் அறக்கோட்பாட்டுப் பின்பற்றுநெறிகளும் அமைகின்றன. தமிழ்ச் சமூகத்தில் அற இலக்கிய வகைமை ஒன்று குறைந்தது நான்கு நூற்றாண்டுகளுக்கு வளர்ந்திருக்கிறதென்றால், அதற்கு முந்தைய காலகட்டத்தைக் கவனமாகப் பரிசீலிக்கவேண்டியுள்ளது. சங்க இலக்கிய காலமே அவ்வாறு பரிசீலிக்கப்பட வேண்டிய காலகட்டமாகும். சங்க இலக்கிய காலம் எத்தகைய செல்நெறிகளைக் கொண்டிருந்தது என்பதை, “சங்க காலத்தின் அளவுகடந்த சிற்றின்ப நுகர்ச்சி, மதுவுண்ணல், பரத்தையர் ஒழுக்கம், புலால் உண்ணல் போன்றன எல்லா நாட்டு வீரயுகங்களிலும் பெருகிக் காட்சி தருகின்றன. இவை தனியுடைமை பெருகிய அறநெறிக் காலத்தில் அதிகமாகக் கண்டிக்கப்படுவதைக் காண்கிறோம். வீரயுகப்போக்கில் மனிதகுலம் கொண்ட வெறுப்பாலும் தனியுடைமைகளின் வளர்ச்சியாலும் தோன்றிய அறநெறிக் காலத்தின் புதிய மனப்போக்கிற்கு இதே மனப்போக்கில் அவ்வந் நாட்டில் தோன்றிய சமயங்களும், புகுந்த சமயங்களும் வலுவூட்டின. தமிழ்நாட்டு அறநெறிப் பாடல்களில் புத்த சமண சமயங்களும், மேல்நாட்டு நீதி இலக்கியங்களில் கிறிஸ்தவ, இஸ்லாமிய சமயங்களும் பெரும் பாதிப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தின”. (ஜான் சாமுவேல்.,ஜி.1978;26) “நிலையான அரசுகளின் தோற்றமும் (Establishment of Monarchies) தனி உடைமைகளைப் (Private Property) பாதுகாக்க வேண்டிய அவசியத் தேவையுமே அறநெறிப் படைப்புகள் தோன்ற வழியமைத்துக் கொடுத்தன எனலாம். இப்பாடல்கள் அனைத்தும் மேட்டுக்குடி மக்களுக்கும், ஆளும் வர்க்கங்களுக்கும் சாதகமாக அறநெறிக் கோட்பாடுகளை அமைத்துக் கொண்டன”. (மேலது; 26) என்பன போன்ற கருத்துக்கள் பல தெரிவிக்கின்றன. அத்தோடு தமிழ்நாட்டில் அறஇலக்கிய காலம் உருவானதற்குரிய காரணகாரிய உறவுநிலைகளையும் விவரிக்கின்றன. குலச்சமூகத் தலைமை வாழ்க்கைமுறையிலிருந்து அரச சமூகத் தலைமை வாழ்க்கைமுறை உருவாகிவந்த காலம் சங்க காலம். அரசுகளுக்குள் நூற்றாண்டுக் கணக்கில் நடந்துவந்த ஆட்சி எல்லை விரிவாக்கம்; பாதுகாப்பு, பொருள்கவர் நடவடிக்கைகள் ஆகியவற்றை அடியொற்றிய போர்ச்சூழல் நிரம்பிய சங்ககால வாழ்க்கைமுறை சமூகத்திற்குள் கசப்பை உருவாக்கியது. சிற்றின்ப நுகர்ச்சி, கள்ளுண்ணல், புலால் உண்ணல், பரத்தையர் ஒழுக்கம் ஆகியவை சமூக அங்கீகாரம்பெற்று நிலவின. அதுமட்டுமின்றி, இவற்றை-யெல்லாம் ‘ஒழுக்கம்’ என்றே குறித்தனர். ‘ஒழுகுவது ஒழுக்கம்’ என்ற வரையறையினின்று ‘ஒழுங்குடையது ஒழுக்கம்’ என்ற வரையறையை உருவாக்க வேண்டிய காலக் கட்டாயம் அக்காலத்தில் இருந்துவந்தது. இத்தகைய சங்ககால வாழ்நெறிச் சிதைவிலிருந்து ஒழுங்கமைப்பதற்குரிய நடத்தை நெறிகளை அச்சமூகமே உருவாக்கிக் கொண்டது. இவ்வாறு, சமூகத்தின் தேவையையொட்டித் தன்னியல்பாகத் தோன்றிய அறநெறிக் கோட்பாடுகள் சங்ககாலத்தில் வழங்கலாயின. புறநானூற்றில் இடம்பெற்றுள்ள பொதுவியல் திணைச் செய்யுட்களிலும், அகம், புறம் தொடர்பான அனைத்து நூல்களிலும் இத்தகைய போக்கைக் காணமுடிகிறது. போர்நெறியோடு வைதீகநெறியும் ஒருங்கிணைந்து செயலாற்றி வந்ததால், போர் மறுப்பும், வைதீக மறுப்பும் சங்ககாலப் போக்கிற்கான மாற்றுநெறியை முன்வைக்கும் செயன்மைக் கூறுகளான முன்வந்தன. போர், வேள்வி ஆகியவை கொல்லாமையையும், போர்க்காலச் சூறையாடல், பிறவழிப் பொருள்கவர்தல் ஆகியவை கள்ளாமையையும், இயல்பான மெய்சிதைவு பொய்யாமையையும், போர்காலப் பெண் அபகரிப்பு, காம மிகுதியால் பிறன்மனை கவர்தல் ஆகியவை பிறன்மனை நயவாமையையும் என்று ஏராளமான அறநெறிகளை உருவாக்கிக் கொள்ள வேண்டியதாகச் சங்ககாலச் சமூகம் இருந்தது. இதே காலகட்டத்தில் இந்திய மெய்யியல் தளத்தில் மறுமலர்ச்சியை உருவாக்கிவந்த வைதீக வேள்விநெறி எதிர்ப்புச் சிந்தனைப் பள்ளிகளான பௌத்தம், சமணம் போன்றவையும் மேற்குறித்த அறநெறிக்கோட்பாடுகளையே முன்வைத்தன. எனவே, பௌத்த, சமண சமயங்களின் தமிழக வருகையும், சங்ககால வாழ்நிலைகளில் இருந்து இயல்பாக எழுந்துவந்த புதிய அறச்செல்நெறிகளும் ஒன்றையொன்று வளப்படுத்தவும், வழிப்படுத்தவும் செய்தன என்பது தெளிவாகிறது.” (மாதவன்.,சு, 2008, 42 – 45) தமிழர் வாழ்வியலுக்குப் பௌத்த, சமணத்தின் கொடைகள் தமிழர் வாழ்வியலில் உயிருறக் கலந்துள்ள பௌத்த, சமணக் கொடைகள் அளவிடற்கரியது. முதலில், வைதீக – வேள்வி – மூட – வருணாசிரமதர்மப் புதைகுழிக்குள் தமிழ்ச்சமூகம் புதைந்து போய்விடாமல் அறிவுக் கொடை வழங்கிப் பாதுகாத்தனவே அதுவே மாபெரும் அருங்கொடையாகும். கடைச்சங்க காலம் இருவேறு வகையான வாழ்வியல் முறைகளை முன்வைத்தது. தமிழரின் முன்பாக திருவேறாகாமல் தெள்ளியராயத் தமிழர் துலங்குமாறு அறிவார்ந்த அறநெறிகளை ஒழுகலாறுகளை – விழுமியங்களை – பண்பாட்டுச் சிந்தனைகளை – சுருங்கச் சொன்னால் மனிதனாக வாழ்வயதற்கான கருத்துக்களை முன்வைத்த பௌத்த, சமணப் பள்ளிகள் ஒன்று. தெள்ளியராய்ப் பார்ப்பனர் இருந்துகொண்டு பிறரைக் கற்பித உலகங்களுக்குள் தள்ளி இறைவனை வணங்குதல் ஒன்றேபோதும்; நற்கதி பெறலாம் என்று விளங்காத விலங்காக வாழ்வதற்கானச் செக்குமாட்டுச் சிந்தனைகளை முன்வைத்த வைதீக – சைவ – வைணவ நெறிகள் மற்றொன்று. வேறுவிதமாகச் சொன்னால், அறிவுக்கு முதலிடம். கொடுத்தன. பௌத்த, சமண சமயங்கள். மூடநம்பிக்கைக்கு முதலிடம் கொடுத்தன வைதீக சமயங்கள். இன்னொரு விதமாகச் சொன்னால், ‘மனிதனை நினை’ என்றன பௌத்தமும் சமணமும். ‘கடவுளை நினை’ என்றன வைதீக சமயங்கள். பிறிதொரு விதமாகச் சொன்னால், ‘அறிவே விடுதலை தரும்’ என்றன முன்னவை. ‘அறிவை விடுதலே தகும்’ என்றன பின்னவை. இவ்வளவு நீண்ட நெடிய விளக்கம் எதற்கு? பௌத்த, சமணக் கொடைகளின் இன்றியமையாத் தன்மையை விளங்கிக் கொள்ளத்தான். இவ்வளவு ஏன்? ஒரே ஒரு செய்தி மட்டுமே போதும். ‘எவ்வயிரையும் கொல்லாதே; தன்னுயிர் போல் நேசி’ என்றன பௌத்த, சமண சமயங்கள். இப்படிச் சொன்னவர்களையெல்லாம் கொன்றன வைதீக சமயங்கள் மனிதர்களை மட்டுமல்ல; அறவாழ்வையும் தான். இப்பொழுது புரிந்திருக்கும் பெளத்த, சமணக் கொடைகளின் மேன்மை! ஏராளமாய் இருக்கும் கொடைகளில் சில ....... இதோ......: 1. மக்கள்மயப் படுத்திய கல்விக்கு வித்திட்ட ‘பள்ளிகள்’ – பௌத்த, சமணப் பள்ளிகள். மலைக் குடைவரைகளில் வசித்துவந்த துறவிகள் தங்களைத் தேடிவந்து அறிவுக்கொடை கேட்டவர்க்கெல்லாம் கொடுத்தனர். இந்த இந்த வருணத்தார் இன்ன இன்ன கல்வி பயிற்சி மட்டுமே பெறலாம் என்றிருந்த வருணாசிரமக் கல்விமுறையை முற்றிலும் மாற்றிப் புரட்சி செய்தவை இந்தப் பௌத்த, சமணப் பள்ளிகள். இது முதல் கொடையும் முதன்மையான கொடையும் நல்வாழ்வியலுக்கான இன்றியமையாகக் கொடையுமாகும். 2. அனைவரும் ஒன்றுகூடிச் சிந்தித்து ஆராய்ந்து முடிவெடுக்கவும் நடைமுறைப்படுத்தவும் பயன்படும் ‘சங்கங்கள்’ – பௌத்த, சமணச் சங்கங்கள். வச்சிரநந்தியின் திரமிளசங்கம் – கி.பி.470. அறிவுச் சுதந்திரத்தையும் சுதந்திர அறிவையும் வழங்கிய ஒப்பரிய கொடை இது. ஒருங்கிணைக்கும் சங்கச் செயல்முறைகள் மனிதகுல வரலாற்றில் சாதித்த சாதனைகளை அதன் பயன்களை விளக்கிடவும் வேண்டுமென? 3. கொல்லாமை, பொய்யாமை, கள்ளாமை, காமமின்மை / பிறன்மனை நயவாமை, கள்ளுண்ணாமை / மிகுபொருள் விரும்பாமை என்ற பௌத்தப் பஞ்சசீலங்களையும் சமணப் பஞ்சமா விரதங்களையும் தமிழர்களைப் பின்பற்ற வைத்து தமிழர் வாழ்வியலைச் செம்மைப்படுத்தியமை. இவற்றைச் செய்தால் – அதாவது கொன்றால், பொய்த்தால், களவு செய்தால், கள்ளுண்டால் ...... அவை எந்த ஒரு மனிதனும் செய்யத் தகாத “பஞ்ச மாபாதங்கள்” என்று இன்றும் மக்கள் வழங்கில் பேசுவதைக் கேட்கலாம். இந்த ஐந்தையும் ஒவ்வொரு மனிதனும் பின்பற்றினாலே உலகின் சச்சரவுகள் மிகுதியும் குறைந்துபோகும். இவற்றுள், அகிம்சை (கொல்லாமை) என்பது சமண சமயத்தின் தனிப்பெருங்கொடை என்பது சிறப்பாகக் குறிப்பிடத்தகுந்தது. 4. வேத வேள்வி ஒழிப்புச் சிந்தனை. மூடநம்பிக்கையை வளர்ப்பதும் உயிர், பொருள் எல்லாம் அழிப்பதுமான வேள்வியை ஒழித்தது தமிழர் வாழ்வியலை மறுமலர்ச்சியடையச் செய்தது. 5. பசி ஒழிப்புச் சிந்தனை. நல்லுள்ளங்களின் முயற்சியால் பசியை ஒழிக்க முடியும். பசியின் பின்னணியில் சுரண்டல் இருப்பதை அறியாதவரா புத்தர்?!..... சரி. எல்லோரின் பசியையும் காலந்தோறும் தீர்த்துக் கொண்டே இருப்பதற்கு என்ன கருவி இருக்கிறது? ஒன்றுமில்லை. அதற்காகப் பசியை ஒழிக்கும் நோக்கத்தை விட்டுவிட முடியுமா?! அமுதசுரபியால் நிறைவு செய்யலாமே! இப்போது எண்ணிப் பாருங்கள். அமுதசுரபி என்பது பாத்திரமல்ல; உதவத் துடிப்போரின் எண்ணம் / மாற்ற முயல்வோரின் சிந்தனை! எத்தகைய சிந்தனைக் கொடை இது! 6. பரத்தமை ஒழிப்புச் சிந்தனையை முன்வைத்து அவருள்ளிருந்து சமூகச் சீர்திருத்தப் புரட்சிப் பெண்மணிகளாக மாதவியையும் மணிமேகலையையும் முன் எடுகோளாகக் கொடுத்தது மாபெரும் கொடையே! 7. சிறையொழிப்புச் சிந்தனையைக் கொடுத்தது பௌத்த மணிமேகலையின் கொடையாகும். 8. சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி, மனிதநேயம், என்றெல்லாம் இன்று விரிவாகவும் ஆழமாகவும் விவாதிக்கப்படும் இந்தக் கோட்பாட்டுச் சிந்தனைகள் பௌத்த, சமண மெய்யியல்களிலிருந்து வளர்த்தெடுக்கப்பட்டவையே; இவை மனித சமூக மாண்புக்கான பௌத்த சமணக் கொடைகளே! 9. ஆசை அறுத்தல், மன ஒர்மைத் தியானநிலை போன்ற கோட்பாடுகளை முன்வைத்துத் தன் ஆன்மீகச் சொற்பொழிவுகளை / நூல்களை நிகழ்த்தும் தற்கால ஆன்மீகவாதிகளான ஓஷோ, வேதாத்தி, ரமணர், ஜக்கி வாசுதேவ் போன்றோரெல்லாம் பௌத்த, சமணச் சிந்தனைகளின் சாரத்தை எடுத்துத் தன்வயப்படுத்திக் கொண்டே ‘உல்டா’ செய்கின்றனர் என்றால் அது மிகையில்லை. ஆக, தற்கால ஆன்மீக சிந்தனைகளுக்கான ஞானக்கொடைகளில் பெரும்பான்மையானவை பௌத்த, சமணக் கொடைகளே! 10. இன்றும் வழிபாட்டிலுள்ள/வழிபாடற்றுப் போன பழம்பெரும் சைவ, வைணவக் கோயில்களில் சிலவோ பலவோ பௌத்த, சமணக் கட்டடக் கலைகளினால் விளைந்தவை. சில கோயில்கள் முழுமையும் பௌத்த, சமணக் கோயில்களை தன் ஆளுமைகப்படுத்திக் கொண்ட சைவ, வைணவச் கோயில்கள். சில கோயில்கள் கட்டட, சிற்ப, ஓவியக் கலையமைதிகளில் பௌத்த, சமண சமயங்களின் கொடைகளைப் பெற்றுக் கொண்டவை. 11. தமிழகம் முழுவதும் வழக்கிலும் வழிபாட்டிலும் இருந்துவரும் அய்யனார் கோயில்கள், சிலைகள், வழிபாட்டு முறைகள் எல்லாம் பௌத்த, சமண சமயங்களின் கொடைகளே! குதிரை வாகன அய்யனாரெல்லாம் பௌத்த அய்யனார் என்பதும் யானைவாகன அய்யனாரெல்லாமே சமண அய்யனார் என்பதும் ஆய்வாளர் கருத்தாகும். 12. சாத்தனார் வழிபாடு போலவே அன்னபூரணி (மணிமேகலை வழிபாடு) பிடாரி வழிபாடு, கண்ணகி வழிபாடு, இந்திர வழிபாடு போன்றவையும் பௌத்த, சமணக் கொடைகளாகும். 13. ஔவையாரின் புறநானூற்றுப் பாடல் 187 பௌத்த மெய்யியல் அறவியல் நூலான தம்மபதச் சுலோகம் 98ன் நேரடி மொழிபெயர்ப்பாக உள்ளதைத் தெ.பொ.மீ., மு.கு ஜகந்நாதராஜா ஆகியோர் ஆராய்ந்து நிறுவியுள்ளனர். இதேபோல், பௌத்தச் சக்கரமான அசோகத் தருமச் சக்கரத்தின் வழக்காற்றை ஏற்பதாக புறநானூறு 175ஆம் பாடலும் அதனை மறுப்பதாக புறநானூறு 233 ஆம் பாடலும் உள்ளதை சு.மாதவன் ஆராய்ந்து நிறுவியுள்ளார் (விவரங்களுக்கு மாதவன்.,சு. 2012: 283 – 287). எனவே, இவை பௌத்தத்தின் கொடைகளாகும். 14. சங்க இலக்கியத்துக்கு அடுத்துத் தோன்றிய பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள 11 அறநூல்களில் – ஆசாரக்கோவை, முதுமொழிக் காஞ்சி ஏலாதி நீங்கலாகப் பிற 8 நூல்களிலும் பௌத்த, சமண அறச்சிந்தனைகளின் கொடைத் தடயங்களைக் காணமுடிகிறது (பயில்க., மாதவன்.,சு 2008). அதேபோல், தமிழ்க் காப்பியங்கள் அனைத்தும் (ஐம்பெருங் காப்பியங்களும் ஐஞ்சிறு காப்பியங்களும்) பௌத்த, சமணக் காப்பியங்களாகவே உள்ளமை தமிழர் வாழ்வியலுக்குப் பௌத்த, சமண சமயங்கள் கொடுத்த அழியாத வாழ்வியல் சிந்தனைக் கொடைகள் என்பதை மானுடம் உள்ளளவும் உரத்துச் சொல்லிக் கொண்டே இருக்கும். 15. 20ஆம் நூற்றாண்டில் மட்டும் அதாவது ஒரே ஒரு நூற்றாண்டில் மட்டும் தமிழில் வெளிவந்துள்ள பௌத்த, இலக்கிய, மெய்யியல், ஆய்வுகள் கலைகள் குறித்த ஏராளமான தகவல்களை முனைவர் க.ஜெயபாலன் எழுதியுள்ள “பௌத்த தமிழ் இலக்கிய வரலாறு (20ஆம் நூற்றாண்டு)” என்ற நூல் தொகுத்துத் தந்துள்ளது. இந்நூலில் காணலாகும் பௌத்த நூற் கடலைக் காணும்போது 20, 21ஆம் நூற்றாண்டிலும் பௌத்தம் தமிழர் வாழ்வியலுக்கான கொடையை வழங்கிவருகிறது என்பது தெளிவாகிறது. 16. எழும்பூர் மகாபோதி சொசைட்டி, சென்னை பௌத்த சங்கம், புத்தர் ஒளிப் பன்னாட்டுப் பேரவை, மதுரை புத்த விகாரை போன்றவை தற்கால பௌத்த வாழ்வியலுக்கான கொடைகளை வழங்கிவருகின்றன. 17. மேல்சித்தாமூர் சமணமடம், குந்தகுந்தநகர் மடம் போன்றவை தற்காலச் சமண வாழ்வியலுக்கான கொடைகளை வழங்கிவருகின்றன. 18. தமிழரின் பேச்சுவழக்கில் நூற்றுக்கணக்கான பாலிமொழி பிராகிருத மொழிச் சொற்கள் கலந்துள்ளன. தமிழில் கலந்துள்ள இச் சொற்கள் வேற்றுமொழிச் சொற்கள் என்பதுவே மறந்துபோய்த் தமிழ்ச் சொற்களாகவே மாறிப்போய்விட்ட நிலையில் தமிழர் வாழ்வியல் இரண்டறக் கலந்துவிட்டன. போதி, பாடசாலை, விகாரை, சீலம், தருமம், கிராமம் போன்றவை பாலிமொழிச் சொற்கள். பாவம், புண்ணியம், சங்கம், அகிம்சை போன்றவை பிராகிருதச் சொற்கள். இவ்வாறு கலந்துள்ள பாலிமொழி, பிராகிருதமொழிச் சொற்கள் முறையே பௌத்த, சமணத்தின் கொடைகளே. 19. சங்க இலக்கியத்தில் காணலாகும் ‘வடக்கிருத்தல்’ என்னும் ‘சல்லேகனை’ முறை சமண சமயத்திற்கே உரியது. இந்தவகையில், வடக்கிருத்தல் சமணத்தின் கொடை எனலாம். 20. இன்றும் ‘சைவ உணவு’ என வழங்கப்படும் ‘காய்கறி உணவுமுறை’ பௌத்த, சமணத்தின் கொடையாகும். இத்தகைய, காய்கறி உணவு முறை – தாவர உணவு முறையில் மிகவும் கறாராக இருப்பவர்கள் சமணர்களே. எனவே, ‘சமண உணவு’ என அழைக்கப்பட வேண்டிய முறையை, சைவ சமய எழுச்சிக்குப் பின் ‘சைவ உணவு’ எனத் தன்வயப்படுத்திக் கொண்டுள்ளன. எனவே, இந்த உணவு முறை சமண சமயத்தின் கொடையாகும். 21. ‘தீபாவலி’ என்பது புத்தரும் மகாவீர்ரும் வீடுபேறடைந்த நாளில் தீபஆவலி (விளக்குகளின் வரிசை) வைத்துக் கொண்டாடுவது வழக்கம். எனவே, தீபாவலி பௌத்த, சமணத்தின் கொடையாகும். 22. அரசமர வழிபாடு பௌத்தத்தின் கொடையாகும். 23. சமணர்திடல், அமண்குடி, அருக மங்கலம் போன்ற ஊர்ப்பெயர்கள் சமணத்தின் கொடைகளாகும். 24. பூதமங்கலம், பள்ளிவிருத்தி, போதிமங்கலம், சங்க மங்கலம், புத்தமங்கலம் போன்ற ஊர்ப்பெயர்கள் பௌத்தத்தின் கொடைகளாகும். 25. சாஸ்திர தானம், வஸ்திரதானம், அபயதானம், அன்னதானம் ஆகிய நான்கு தானங்களை இந்தியச் சமூகத்தில் நடைமுறைப்படுத்தியது சமண சமயமாகும். இந்த வகையில், கல்வி, ஆடை, அடைக்கலம், உணவு ஆகியன வழங்குதல் என்னும் தமிழர் வாழ்வியலில் இடம்பெறும் அறநெறிகள் சமணத்தின் கொடைகளாகும். ஓரிரு தானங்களைச் சங்க கால அரசர்கள் முன்பே புரிந்துள்ளனர் என்பதும் பௌத்தத்திலும் இத்தகைய தான முறைகள் உண்டு என்பதும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கதாகும். 26. இன்று பட்டிதொட்டியெல்லாம் பரவலான மக்கள் ஈர்ப்புக்குரியனவாக மாறியுள்ள தருக்கநெறிப் பட்டிமண்டபம், வழக்காடு மன்றம் எல்லாம் பௌத்த, சமணக் கொடைகளால் வளம்பெற்றவையே. தொகுப்புரையாக சங்க காலத் தமிழர் வாழ்வியல் அகம், புறம் என்ற திணை வாழ்வியலாக இருந்தது. அறஇலக்கியக் காலத்திலும் திணைமாலை ஐம்பது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது கைந்நிலை ஆகிய 6 நூல்கள் அகத்திணையைப் பாடின. களவழி நாற்பது என்ற 1 நூல் புறத்திணை பாடியது. இதர 11 நூல்களும் அறநூல்கள், சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை பத்துப்பாட்டு என்ற இரு தொகை நூல்களிலும் அகம், புறம் இரண்டிலும் ‘அறம்’ கலந்து பேசப்பட்டது. ஆனால். பதினெண்க்கீழ்க் கணக்கிலுள்ள 11 அறநூல்களும் அறம் வலியுறுத்தலையே முதன்மை நோக்கமாகக் கொண்டு பேசுகின்றன. சுருங்கச் சொன்னால், சங்க காலத்தில் வாழ்வியல் அறம் ஒரு கூறாகப் பேசப்பட்டது. அற நூல்களிலே வாழ்வியலே அறம் என்று கூராகப் பேசப்பட்டது. சங்க இலக்கிய வாழ்வியலுக்குத் திணைப் பின்னணி இருந்தது. அற இலக்கிய வாழ்வியலில் திணைப் பின்னணி குறைந்தது. அறம் முன்னணி பெற்றது. சங்க காலத்தில் அகம், புறம் பெற்றிருந்த இடத்தை அற இலக்கிய, காப்பியக் காலத்தில் அறம் பெற்றது. தமிழர் வாழ்வியல் திணை எனும் முப்பட்டகப் பொருண்மையிலிருந்து ஒற்றைப் பட்டகப் பொருண்மையைப் பெற்றது. அந்த ஒற்றைப் பட்டகம் ‘அறம் / ஒழுக்கம்’ என்பதாகும். இருந்த போதிலும், முற்று முழுதான திணைப்பின்னணி அற இலக்கியங்களில் இல்லாவிட்டாலும் காப்பியங்களில் இடம்பெற்றிருக்கக் காணமுடிகிறது. காப்பியங்களில் திணைப் பின்னணியோடு புலன்கடந்த உலகியல் (Meta Physical World) கட்டமைக்கப்பட்டிருப்பதையும் காண முடிகிறது. ஆக மொத்ததில், அகத்திணையின் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்ற இயங்கியல் பின்னணி இல்லாமல்போய் பௌத்த, சமண அறவியல் பின்னணி முன்னணிபெற்றது. அகத்திணை இல்லறமானது; புறத்திணை துறவறமானது. வைதீகநெறி பௌத்த சமணநெறி, தமிழ்த்திணை வாழ்வியல் மூன்றுக்கும் நடந்த போராட்டத்தில் பௌத்த, சமண நெறி வென்றதால் தமிழர் வாழ்வியலில் புதியதோர் மாற்றம் நிகழ்ந்த்து. புறத்திணையில் இருந்த போர், வேள்வி என்பவையும் முற்றிலும் அற்றுப்போன போக்கு உருவானது. இத்தகைய பின்னணியில்தான், தமிழர் வாழ்வியலில் பௌத்த சமணக் கொடைகள் நீக்கமற நிறைந்திருக்கும் ஆக்கமுறு போக்கு உருவானது. ஆழ்வியல் நூல்கள் சுப்பிரமணியன்.,ச.வே. தொல்காப்பியம் தெளிவுரை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை -108, 2010. போதிபாலா.,பிக்கு, ஜெயபாலன்.,க. அன்பன்.,இ. (பதி.ஆ), தமிழ்ப் பண்பாட்டில் பௌத்தம், காவ்யா, சென்னை -24, 2013. மாதவன்..சு. தொல்காப்பியத்தில் மார்க்சீய இயங்கியல் அணுகுமுறைகளுக்கான அடிப்படைகள், நியூசெஞ்சுரியின் உங்கள் நூலகம் - மாத இதழ், நியூ செஞ்சுரி வாசகர் சங்கம், சென்னை – 14, அக்டோபர் 2014. மாதவன்.,சு. புறநானூற்றில் பௌத்த சிந்தனைகள், இந்தியச் சமூகம், மார்க்சும் பெரியாரும், அனன்யா, தஞ்சாவூர், 2005. மாதவன்.,சு. தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த, சமண அறங்களும், செம்மொழி, தஞ்சாவூர் -5, 2008. மாதையன்.,பெ. மணிமேகலை உருவாக்கமும் சமுதாயச் சூழலும், மணற்கேணி – இதழ்., மணற்கேணி பதிப்பகம், சென்னை -5, ஜுலை – ஆகஸ்ட் 2013. வேங்கடசாமி., மயிலை.சீனி, பௌத்தமும் தமிழும், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை-14, 2007. வேங்கடசாமி.. மயிலை. சீனி, சமணமும் தமிழும், தி.சை.சி. நூற்பதிப்புக் கழகம், சென்னை – 18, 2000. வேலுப்பிள்ளை.,ஆ. தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும், பாரி புத்தகப் பண்ணை, சென்னை -5, 1985. ஜெயபாலன்.,க. பௌத்தத் தமிழ் இலக்கிய வரலாறு (20ஆம் நூற்றாண்டு), தமிழ்நாடு பௌத்த சங்கம், சென்னை -40, 2014.

Thursday 24 March 2016

சென்னை ... வெள்ளம்... மக்கள்

" நீர்வழிப்படூஉம் புணைபோல் ஆங்கே ஆருயிர் முறைவழிப் படூஉம் " - சென்னை ... வெள்ளம்... மக்கள் ... - ஏழைதாசன் ,புதுக்கோட்டை

மானுடரும் உண்டுகொல்! மானுடரும் உண்டுகொல்!”

தீக்கதிர் “மக்கள் மன்றம்” – பகுதிக்கு முனைவர் சு.மாதவன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி (தன்னாட்சி), புதுக்கோட்டை – 622 001, பேச 97513 30855 மின்னஞ்சல் : semmozhi200269@gmail.com,semmozhi_200369@yahoo.com கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை முதல் தங்களது ஒவ்வொரு படைப்பையும் இலக்கியச் சுவைபடவே எழுதினர் மார்க்சும் ஏங்கல்சும். தன் காலத்துப் படைப்பாளியான லயோ டால்ஸ்டாய்க்கு விமர்சனக் கடிதங்கள் பல எழுதியுள்ளார் மார்க்ஸ் . ரஷ்யப் புரட்சிக்குத் தலைமையேற்றிருந்த காலத்திலும் அதற்கு முன்பும் தோழர் லெனின், எழுத்தாளர் மார்க்ஸிம் கார்க்கி போன்ற படைப்பாளர்களின் படைப்புகளைப் படிப்பதும் அவற்றிற்கு ஆய்வுக்குறிப்புகள் எழுதுவதுமாக இருந்தார். சீனப் புரட்சிக்குத் தலைமையேற்றிருந்த காலத்திலும் அதற்கு முன்பும் தோழர் மாவோவும் அவ்வாறே திகழ்ந்தார். இன்னும் பல உலகத் தலைவர்களும் அவ்வாறு இருந்துள்ளனர். இந்தியாவிலும் தோழர் இ.எம்.எஸ். முதல் தோழர் சீத்தாராம் யெச்சூரி வரை இலக்கியப் படைப்புகளை மார்க்சீய நோக்கில் ஆராய்ந்து எழுதி வந்துள்ளனர். இந்தியாவில் இத்தகைய முயற்சிகளில் சில தலைவர்களாலே ஈடுபட முடிந்துள்ளது. இலக்கியமும் இந்தச் சமூகத்தின் உற்பத்திப் பொருள் (Literature is also known as a product of the society) என்ற மார்க்சீய இயங்கியல் புரிதலும், அந்த உற்பத்திப் பொருளின் பயன், விளைவு குறித்த அறிதலும் ஒவ்வொரு பொதுவுடைமையாளர்க்கும் அவசியம் இருக்க வேண்டும். தமிழகத்தைப் பொருத்தஅளவில், இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்ட மார்க்சியத் தலைவர்கள் மிகவும் குறைவே. இத்தகைய சூழலில், தோழர் ஜி.இராமகிருஷ்ணன் 07.07.2015 நாளிட்ட தீக்கதிர் நாளிதழில் எழுதியுள்ள ”கருகும் உயிர்கள் பதறும் படைப்பு” என்ற கட்டுரை மிகுந்த கவனிப்புக்குரிய செயல்பாடாகிறது. ஏற்கனவே, வண்ணக்கதிரில் “களப்பணியில் கம்யூனிஸ்ட்டுகள்” என்ற தொடரில் அடித்தட்டு மக்கள் வரலாற்றுக்கான அடிப்படைகளை விதைத்துவரும் தோழர், இன்றைய இலக்கியப் போக்குகள் குறித்தும் எழுத முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கதும் பாராட்டத்தக்கதும் ஆகும். அதிலும், அண்மைக்காலத் தமிழ்க் கவிதை வாசிப்புத் தளத்தில் பரந்து விரிந்து வாசகர்களிடம் சென்று சேர்ந்துள்ள ஒரே முன்ன்ணிப் படைப்பாளியான கவிஞர் வைரமுத்து “எரிதழல் கொண்டு வா” என எல்லோரையும் அழைக்கும் போது அதன் வீச்சும் விளைவும் நற்கருத்தியல் பெருகிட விரிந்த களம் அமைக்கும் என்பது திண்ணம். “கௌரவக் கொலை” என அழைக்கப்பட்டு “சாதி ஆணவக் கொலை” எனப் பெயர்மாற்றம் பெற்றுள்ள “சாதி வெறிக் கொலைகள்” ஒழிய இதுபோன்ற படைப்புகள் தேவை எனக் கவிஞர் வைரமுத்துவிடம் தோழர் ஜி.இராமகிருஷ்ணன் வேண்டுகோள் வைத்திருப்பதும், அதை உடனடியாகக் கவிஞர் வைரமுத்து நிறைவேற்றிவைத்திருப்பதும் பாராட்டத்தக்க முயற்சிகளாகும். அத்தோடு, முற்போக்கு இலக்கிய முயற்சிகளுக்கு இது ஒரு உந்துசக்தியாகத் திகழும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. தீண்டாமையும் சாதிவெறியும் படுகொலைகளும் நாள்தவறாமல் நடந்துவரும் இந்த நாளில் முற்போக்கு இலக்கியவாதிகளின் சமூகப் பொறுப்புச் சுமை கூடிக் கொண்டே இருக்கிறது. இத்தகைய சூழலில், கலைஇரவு போன்ற நிகழ்வுகளில் இன்னுமொரு புதிய உள்ளடக்கத்தை இணைத்துக் கொள்ளலாம் என்ற ஒரு கருத்துருவையும் முன்வைக்கிறேன்: “அன்றைய காலத்தில் அறம்பாடி அழித்தல், எனும் இலக்கியச் செந்நெறி இருந்துவந்தது. அதை மீட்டுருவாக்கம் செய்து புதுக்கி, “மானுடரும் உண்டுகொல்! மானுடரும் உண்டுகொல்!” என்ற தலைப்பில் “அறம்பாடும் கவியரங்கம்” என்பதை அரங்கேற்ற முன்வரலாம்”.

தலித் துணைவேந்தரைத் தேடி "

" தலித் துணைவேந்தரைத் தேடி " என்ற தலைப்பில் ஜெ.பாலசுப்ரமணியனின் கட்டுரை இன்றைய காலத்தின் குரலாகப் பரிமளிக்கிறது. இதிலிருந்து ஏராளம் கேள்விகள் படிப்பவருக்குள் பரிணமிக்கின்றன. தகுதியான துணைவேந்தரைத் தேடுகிற காலத்தில் - தகுதியான பேராசிரியரைத் தேடுகிற காலத்தில் தலித் துணைவேந்தரைத் தேடிமட்டும் என்ன ஆகிவிடப் போகிறது ? தலித்திலும் கோடி கொடுக்கும் தலித்துக்குத்தானே கிடைக்கப் போகிறது ?! அண்மையில் காலமான பேராசிரியர் கே.ஏ.குணசேகரன் ஏதேனும் ஒரு பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராக வந்திருக்க வேண்டியவர். அவரைவிடத்thakuthk குறைவானவர்க்கெல்லாம் பணபலம், சாதிபலம், அரசியல்பலத்தைக் கொண்டு துணைவேந்தர்களாக வந்துவிட்டார்கள்.இந்த மூன்று பலமும் அவரிடம் இல்லாததால் அவருக்குப் பழம் பழுக்கவில்லை. ஒருவேளை, தலித் துனைவேந்தருள் தகுதியான துணைவேந்தர் யாரேனும் வந்தால் , பின்னடைவுப் பணியிடங்களை நிரப்பலாம். வேறென் நடந்துவிடப் போகிறது? ஒரு மன ஆறுதலைத் தவிர ?! ---- முனைவர் சு.மாதவன், தமிழ் உதவிப் பேராசிரியர் - யு.ஜி.சி. ஆர்.ஏ., மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

சாதியக் கண்ணோட்டம் அன்றும் இன்றும் '

சாதியக் கண்ணோட்டம் அன்றும் இன்றும் ' என்ற அனன்யா வாஜபேயி யின் கட்டுரை மிகுந்த சமூகப் பொறுப்புணர்வோடு எழுதப்பட்டுள்ளது. பாராட்டுக்கள் . இந்தக் கட்டுரை மேலும் பல சாதிவெறிசார்ந்த நிகழ்வுகளைக் கிளறுகிறது. ஒரு நல்ல படைப்பின் சிறந்த பண்பும் அதுதான் . வர்ணாசிரம தர்ம படித்தரநிலையில் நால்வர்ணம் எனக் குறிப்பிடப்படும் மனிதர்கள் பட்டியலிலேயே இடம்பெறாதவர்கள் பஞ்சமர்கள். இந்தப் பஞ்சமர்கள்தான் இந்தியாவின் ஒற்றைப் பெரும்பான்மை மக்களாவர். அப்படியென்றால் , இவர்களும் இந்தியாவின் ஆதிகுடிகளுள் அடங்குவர். அடக்கப்பட்டோரிலும் அடங்குவர். இவர்களை மனிதர்கள் என்ற நிலையிலேயே பார்க்காத வர்ணாசிரமதர்மம் எப்படியெல்லாம் பாடாய்ப்படுத்தும் எனச் சொல்லவேண்டியதில்லை. வேடர்குலத்தவனான ஏகலைவன் நிலையை மகாபாரதக் கதை சொல்கிறது.அவனது கட்டைவிரலைக் குருதட்ச்னையாகப் பெற்ற குரூரத் துரோகாச்சாரியார் ( துரோணாச்சாரியாரை) பெயரால் வீரதீரச் சாதனையாளர்களுக்குத் " துரோணாச்சாரியார் விருது " கொடுத்துவருகிறது இந்திய அரசாங்கம். இதன் பொருள் என்ன ? அடிப்படையில் இன்னும் வர்ணாசிரமதர்மத்தைப் பின்பற்றித்தான் இந்திய அரசே செயல்படுகிறது என்பதுதானே ?! என்றைக்கு துரோணாச்சாரியார் விருதின்peyarai " ஏகலைவன் விருது " மாற்றுகிறோமோ அன்றுதான் இந்தியா உண்மையிலேயே சமத்துவப் பாதையில் நடைபோடுகிறது என்று பொருள். இதுமட்டுமா? காந்தி, நேரு , திலகர்,நேதாஜி, காமராசர் என எல்லோரின் பெயரையும் எல்லோரும் வைத்துகொள்கிறோமே! தாழ்த்தப்பட்ட சாதி அல்லாதச் ஏதேனும் ஒரு சாதிக்காரனாவது இதுவரை தன பிள்ளைக்கு அம்பேத்கர் பெயரைச் சூட்டிப் பெருமிதம்கொண்டிருக்கிறானா?! இல்லையே?! அரசியல் சாசன வரைவுக்குழுவுக்குத் தலிவராக இருந்த ஆனானப்பட்ட அம்பேத்கரையே இன்னும் எஸ்.சி.யாகப் பார்க்கும் சமூகம் எந்தக் காலத்தில் குப்பனையும் சுப்பனையும் சக மனிதனாக ஏற்கப்போகிறதோ என்னும் கவலை இன்னும் எத்தனை நூற்றாண்டு தொடருமோ என்ற ஆதங்கமும் ஏக்கப்பெருமூச்சும்தான் நீடித்துக்கொண்டே இருக்கிறது . மாறும்தான் ... எப்பொழுது என்பதுதான் தெரியவில்லை .?! --- முனைவர் சு. மாதவன், உதவிப் பேராசிரியர் - யு.ஜி.சி. ஆர்.ஏ. , மா.மன்னர் கல்லூரி ( தன்னாட்சி), புதுக்கோட்டை . பேச : 9751 330 855

நெஞ்சில் நின்று ஒளிர்பவர் பேராசிரியர் கே. ஏ. குணசேகரன்.

இப்படிக்கு இவர்கள் - பகுதிக்கு இன்னும் நிறையச் சாதிக்க - எழுதி எழுதிச் சாதிக்கத் திட்டமிட்டிருந்த - அடித்தட்டு மக்களின் பன்முக ஆளுமையின் குறியீடாய் விளங்கிவந்த - அவரைச் சந்தித்துச் சில மணித்துளிகள் உரையாடிய அனுபவமுள்ள எவராலும் வாழ்நாள் முழுவதும் மறக்கவியலாத அன்பின் வடிவமாய் நெஞ்சில் நின்று ஒளிர்பவர் பேராசிரியர் கே. ஏ. குணசேகரன். அவருடைய எந்த ஒரு நூலுக்குள் நுழைந்தாலும் புதிய புதிய ஆய்வுமுடிவுகளையும் மனதில் பதியும் கலை இரசனையையும் நம் சிந்தனையில் ஏந்திக்கொள்ளலாம் . அந்த அளவுக்கு எந்தப் பணியையும் சீரிய முறையிலும் நேரிய நெறியிலும் ஆற்றியவர் கே.ஏ.ஜி. அத்தகைய கே.ஏ.ஜி.யின் கலை -இலக்கியப் பங்களிப்பைப் பண்பாட்டுப் பின்னணியோடு மகத்த துல்லியமாக மதிப்பிட்டு எழுதப்பட்டுள்ள பேராசிரியர் வீ. அரசு அவர்களின் கட்டுரையின்வழி தி இந்து தமிழ் நாளிதழ் நல்ல அறிவார்ந்த அஞ்சலியைச் செலுத்தியுள்ளது. கே.ஏ.ஜி. ஒரு நாட்டுப்புறக் கலையியல் அறிஞர் ; கலைஞர். நாடகத் துறை விற்பன்னர்; ஆய்வாளர்enbana அவர் தொடங்கித் துலங்கிய அடையாளங்கள். அண்மைய ஐந்தாறு ஆண்டுகளில் அவர் ஒரு செவ்விலக்கிய உரையாசிரியராகத் தன்னைப் பரிணாமப் படுத்திக்கொண்டே கொண்டே வந்தார். இது அவரது பன்முகப் பரிமாணங்களுள் குறிப்பிடத்தக்கது . இதுவரை , பதிற்றுப்பத்து, பட்டினப்பாலை ஆகிய இரண்டு நூல்களுக்கும் வந்துள்ள உரைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட புதிய சிந்தனை ஒளியைப் பாய்ச்சிப் புத்துரைகள் கண்டார். இந்தவகையில் அவர் 21 ஆம் நூற்றாண்டு உரையாசிரியர்களில் ஒருவர். பதிற்றுப்பத்து என்றாலே சேரர் வரலாற்றிலக்கியம் என்றிருந்த அறுதப் பழசான பார்வையிலிருந்து அந்நூல் ஒரு கலைஞர்களின் வாழ்வியல் பெட்டகம் என்ற புதிய நோக்கில் உரைகண்டார். அதைப்போலவே, ஜூலை 2015 இல் என்சிபிஹெச் ஆல் வெளியிடப்பட்டுள்ள அவரது " பட்டினப் பாலை - ஆராய்ச்சிப் புத்துரை " நூல் , அந்நூலின் சமணப் பின்னணியைத்thellithin நிறுவியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக பொத்த, சமண ஆய்வாளராக இயங்கிவரும் என்னைப் போன்றவர்களாலும்enakkum முன்னே இயங்கிவரும் சிலராலும் இதுவரயிலும் கண்டறியப்படாத சமணக் கூறுகளை , கடந்த ஐந்தாறு ஆண்டுகளுக்குள் இத்துறையில் காலடிஎடுத்துவைத்த கே.ஏ,ஜி. கண்டறிந்து உரை வரைந்துள்ளார். இந்த இரண்டு நூல்களுக்கும் உரை எழுதியதுபோலவே இன்னும் பல சங்க இலக்கியப் பனுவல்களுக்கு கே.ஏ.ஜி. எழுதத் திட்டமிட்டிருந்த செவ்விலக்கியப் புத்துரைகள் கிட்டாமல் போனது தமிழிலக்கிய உலகுக்கு மாபெரும் பேரிழப்பாகும். -- முனைவர் சு.மாதவன் , தமிழ் உதவிப் பேராசிரியர் - குடியரசுத் தலைவர் விருது பெற்றவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி ( த ), புதுக்கோட்டை . பேச : 9751 330 855

இந்தியர்களின் மரபணுவில் சாதி ' என்ற மோஹித் எம்.ராவின் கட்டுரை

இந்தியர்களின் மரபணுவில் சாதி ' என்ற மோஹித் எம்.ராவின் கட்டுரை அருமை. இதுபோன்ற ஆய்வுகளை இந்தியச் சாதிகள் ஒவ்வொன்றின் மரபணுக்களின் மூலமாகவும் மேற்கொள்ளவேண்டும். எல்லாச் சாதிகளைச் சார்ந்த சமூக மாற்றச் சிந்தனையில் உண்மையான ஈடுபாடு உள்ளவர்களிடமிருந்தும் குறிப்பிட்ட அளவிலான மரபணுக்களைப் பெற்று ஆய்வுசெய்து பார்த்தால் எந்தச் சாதிக்கும் அந்தச் சாதிக்குமட்டுமே உரிய தனித்தன்மை வாய்ந்த ஒரே அளவிலான விடை கிடைக்காது. அதாவது, ஒரே மரபணு / மரபணுப் பொதுமை இருக்காது. அதாவது, எந்த ஒரு சாதிக்கும் அந்தச் சாதிக்கு மட்டுமே உய்ய மரபணு வடிவம்,செயல்நிலைப் பண்புகள் என எதையும் வரையறுக்க முடியாது.ஒரே சாதிக்குமட்டுமே உரிய தனித்தன்மை எதையும் வரையறுத்துவிடவும் முடியாது என்றே கருதுகிறேன். எனினும், இத்தகைய ஆய்வுகள் சமூகத்தின் மனசாட்சியைச் சமத்துவ மனசாட்சியாய் மாற்றுவதற்குரிய பங்களிப்புகளாக விளங்குவன எனில் அது மிகையில்லை. ---- முனைவர் சு. மாதவன் , தமிழ் உதவிப் பேராசிரியர், மா. மன்னர் கல்லூரி ( த ), புதுக்கோட்டை . பேச : 9751 330 855 வாசகர் மடல்

லெட்ச லெட்சமாய்ப் பிறப்போம் ! லெட்சியக் கல்புர்கிகளாய்.....

28 நவம்பர் 1938 - பேராசிரியர் கல்புர்கி பிறந்த நாள் லெட்ச லெட்சமாய்ப் பிறப்போம் ! லெட்சியக் கல்புர்கிகளாய்..... ஒருநாளில் பிறந்து ஒருநாளில் இறக்கும் மானிடருள் ஒருநாளில் இறந்து ஒவ்வொருநாளும் பிறந்துகொண்டிருக்கும்படிப் பிறந்தவனே ! கல்புர்கி! அன்று ஒருவனாய்ப் பிறந்தாய்.... இன்று இலட்சக் கனல்களாய்ப் இலட்சிய அனல்களாய்ப் பிறந்துகொண்டே இருக்கிறாய் ...! வருணத்தை எதிர்த்த லிங்காயத்துக்காரர்களை வைத்தே வருணத்தை எதிர்த்த உன்னைக் கொலைசெய்ய வைத்ததே வருணாசிரமதர்மம் ! மனுதர்மம் !! மருந்துக்குக்கூட தர்மமில்லாதது மனுதர்மம் ..... நீ உயிர் விட்டாயல்லை .. பயிர் நாட்டை....! இல்லாததெல்லாம் இருக்கிறது ... இருக்கிறதெல்லாம் இல்லை... இதுதான் மதவாதம் ..... மதிவாதம் ஏற்காதது மதவாதம் ... அதனால்தான் உன்னை ஏற்கவில்லை ... உருவான மதங்களெல்லாம் உருவில் இல்லை ... கருவே இல்லாதது உருவாகிவிட்டது ... உருவமே இல்லாமல் சாகடிக்கும் பேய் சாதிமதம் .... பாம்பு உயிர்வாழக் காட்டில் இடந்தரலாம் ... நாட்டில்?! மதவாதப் பாம்பின் உயிர் சாதியவாதப் புற்றுக்குள் .... முட்டாள்தனத்தின் பிள்ளை மதவாதம்.... மிருகத்தனத்தின் பிள்ளை சாதீயவாதம்... முட்டாள்தனம் - தாய் மிருகத்தனம் - சேய் தாயும்சேயும் இணைந்துபெற்ற பேதமைத்தனம் - நோய் .... ஒன்றையொன்று பெற்றெடுக்கின்றன- முட்டாள்தனமும் மதவாதமும்.... ஒன்றையொன்று பாலூற்றுகின்றன - மிருகத்தனமும் சாதீயவாதமும்.... இரண்டுக்கும் அறிவு என்றாலே பேதபேதம் ... காததூரம் ... இரண்டுமே அறிவோடு என்றுமே மோதும்மோதும்... போதும்போதும்... சாதிமதவெறி சாகடித்தது ஒரு கல்புர்கியைத்தான் ... இலட்சிய உயிர்நெருப்போடு நாளும் நாளும் எழும் இலெட்சக் கணக்கான கல்புர்கிகள் சாதிமதவெறியை சாகடிப்பார்கள் .... - ஏழைதாசன் , புதுக்கோட்டை ( முனைவர் சு. மாதவன் ) பேச : 9751330855

இடறிய இடத்தை நோக்கி... முனைவர் அ.விமலா

இடறிய இடத்தை நோக்கி... முனைவர் அ.விமலா தமிழ் உதவிப் பேராசிரியர் ஜெ.ஜெ.கலை அறிவியல் கல்லூரி (த) புதுக்கோட்டை பேச 95850 34134 மலர் மலர்வதுபோல் காலைப்பொழுது மெல்லமெல்ல மலர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் கோழிகூவலின் சத்தம், ஒரு பக்கம் பால்காரர் மணியடிக்கும் சத்தம், ஒரு பக்கம் கன்றுக்குட்டி அம்மா என்று அழைக்கும் சத்தம். மறு சத்தம் தெருச்சண்டைகளின் சத்தம்... கேட்டுக்கொண்டே கவிதாயினி படுக்கையிலிருந்து வாரிச்சுருட்டி எழுந்தாள். அவள் தலையில் இருக்கிற முடியை எண்ணிவிடலாம். ஆனால் அவள் துயரங்களையும் ஏக்கங்களையும் எண்ண முடியுமா? காலை எட்டு மணி. “பெரிய கட்டெ... பெரிய கட்டெ... ஏய்... சின்ன கட்டெ... சின்ன கட்டெ... எங்க யாரையும் காணாம்... என்று கூப்பிட்டுக்கொண்டே வரும்போது பெரியகட்டை ஒரு கூட விராட்டியோடு வயற்காட்டிலிருந்து வந்தாள். வெயில் நேரத்தில் கோட்டகத்துக்குப் போக முடியாது என்பதால் காலைப்பொழுதில் இந்த வேலையெல்லாம் செய்து விடுவாள். உயரம், நிறம், உடல் தோற்றத்தைக் கொண்டு, கட்டெ, வெள்ளையம்மா, நச்செ... இப்படியெல்லாம் பெயரிட்டுக் கூப்பிடுவது அந்தப் பகுதி வழக்கம். “ஏய்... பெரியகட்டெ... மோரு வாங்க நேரமாச்சி வரலயா, ஏய்... அந்த மோருகாராச்சி நேரமாச்சின்னா மோரு கொடுக்காதுடி... கனகா, கண்ணி, லதா, சரளா எல்லாரையும் அழச்சிக்கிட்டு சொம்ப எடுத்துக்கிட்டு வா போவலாம்...” மோர்க்கார ஆச்சி ஆச்சாரத்துடன் “எல்லாம் எட்டி நில்லு... என்னெத் தொட்டுடாதீங்க... இப்பத்தான் குளிச்சேன்... திரும்ப குளிக்க முடியாது... அவஅவ சொம்பக் கீழேபிடி... உங்களையெல்லாம் பார்த்தாலே தீட்டு... ஏஞ்சொம்போட ஒஞ் சொம்பெ ஒரசிராதே...” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது கவிதாயினி வேண்டுமென்றே தன்சொம்பை மோர்க்கார ஆச்சியின் சொம்போடு உரசினாள். “ஏய்.. காத்தான் மொவள.. ரொம்ப எடக்குக்காரியாத்தான் இருக்குற... உனக்கு மோரு இல்ல போ...”. என்று கத்தினாள் மோர்க்கார ஆச்சி. கவிதாயினி அழுதுகொண்டே வந்தாள். உடனே கனகா, “நீ ஏண்டி ஒரசினே?! – தள்ளிநின்னு வாங்க வேண்டியதுதானே?!” என்றாள். “ஆமா... போடி... ஐயர் கடெக்கிப் போனா காசத் தூக்கிப்போடு தொட்டுப்புடாதேங்கிறாரு... படித்தொறைக்கிக் குளிக்கப்போனா.. உங்களுக்கெல்லாம் அந்தோ... அங்க ஒதுக்கிருக்குப் பாரு தொர... அங்க போங்குறாங்க. அய்யருதெரு இன்னும் மத்த தெருவுல போகும்போது நம்மளக் கண்டா எட்டி ஒதுங்குறாங்க. ஒரு நாளு என்னோட படிக்கிற மருதாம்பா அவ வீட்டுக்குக் கூப்பிட்டுக்கிட்டே இருந்தா... அங்க போனா அவுங்க அம்மா இவளயெல்லாம் வீட்டுக்குள்ள அழைச்சுக்கிட்டு வராதெ... நம்ம சாமிக்கெல்லாம் ஆகாதுன்னு அவளெத் திட்டுனாங்க.. எனக்கு ரொம்ப நாளா ஆசடி கண்ணகி... இவுங்களையெல்லாம் எப்புடியும் தொட்டுப் பாத்திடணுமுன்னு... அதாஞ் சொம்ப ஒரசுனேன்... ஏய்... லதா! அங்கெ பாரேன் அவங்க வூட்டுப் புள்ளை சட்டெய.. எவ்ளோ நல்லாருக்கு. நம்ம அப்பா அம்மாக்கிட்ட அதுபோல வாங்கிக் கேட்டா சந்தையில உள்ளதத்தான் எடுத்துக் குடுக்குறாங்க... ஒரு நாளு அப்புடித்தான் அந்த மோருகாராச்சி பேத்தி சட்டெபோல நானும் போட்ருக்க மாதிரி கனவு கண்டங்... டக்குனு முளிச்சுக்கிட்டேன்...” உடனே லதா சொன்னாள், “இதாண்டி இவளுக்கு வேலெ..... வெற வேலெயே இல்லையாடி...?!”. கலா சொன்னாள், “அவுங்க அப்பா அம்மா டீச்சரு, சாருனு வேலெ பாக்குறாங்க. நம்ம அப்பா அம்மா அவுங்க வீட்டுல பண்ணெ வேலெ செய்றாங்க தெரிஞ்சிக்க... சரி ... சரி... வா... மோரெக் கொண்டே வச்சிட்டு அந்தப் புத்துத்தெடல்ல காட்டுக்கனகாம்பரமும் மீமுள்ளு பூவும் நிறைய பூத்திருக்கு... பறிச்சுக்கிட்டு வருவோம். நாளெக்கிப் பள்ளிக்கொடத்துக்கு வச்சுக்கிட்டுப் போவலாம்...” கவிதாயினி குறுக்கிட்டு, ஏய்.... அந்த அய்யரு வீட்டுப் பொண்ணு வெள்ளெயாய் பூவுவச்சிருந்தது பாத்தியா!” என்றாள். “ஏய்... திரும்ப திரும்ப ஆரம்பிச்சிட்டியாடி என்று கேட்டுக்கொண்டே கனகா சென்றாள். திரும்பவும் கவிதாயினி, “ஏய்... நா சொல்றத கொஞ்சம் கேளுங்கடி....” என்று கெஞ்சவும் “என்னதாஞ் சொல்லவர்றா கவிதாயினி... கேப்போம்...” என்றாள் கண்ணகி. “அவுங்க மாதிரி நம்மளும் டீச்சரா வரலாமுல்ல....” “அதுக்கு பனங்காசுக்கு என்ன பண்ணுவ....” “ஏன்.... நாத்துநடவு நட்டு, கள பிடிங்கி காசு சேத்தா படிக்கலாமே!” “நம்மள யாரு வேலெக்கிச் சேத்துக்குவா?” “எல்லாரும் அவுங்கவுங்க அக்கா தாவணிங்கள போட்டுக்கிட்டு போவோம். ஒரு நாளைக்கு கூலி பதிமூனு ரூவா... போவம்படி...” வெய்யிலின் உக்கிரம் கண்ணகியால் ஒன்றும் செய்யமுடியவில்லை. உடனே கனகா, “ஏய்! கண்ணகி...! உன் முதுபுறா கொம்பளம்டி.... தண்ணியாகியாட்டா தளதளதன்னுருக்குடி...” “கண்ணகி முதுகு மட்டுதான் இருக்கா .ந்தோ” பாருடி ஒம் மொதுக கொப்பளம் தோலுரிஞ்சு நச்சத்திரமா இருக்கு” என்றாள் கவிதாயினி. வெயில் அவரவரைப் புரட்டிப்போட்டாலும் சம்பளம் பதிமூனு ரூபாய் என கெடைக்குதுல என நினைத்து பெருமூச்சுவிட்டன். அவரவர் கைகளிலும் நிறைய காசு புழங்கத் தொடங்கியது. கவிதாயினி கல்வியில் பாதி, கழனியில் பாதியாக இருந்து படிப்பைத் தொடர்ந்தாள். பன்னிரெண்டாம் வகுப்பில் ஆயிரத்துக்குமேல் மதிப்பெண் எடுத்து மருத்துவப் படிப்பை மேற்கொண்டிருந்தாள். அவளது தோழிகள் காட்டு வேலையிலேயே தொடர்ந்து ஈடுபடத் தொடங்கினார்கள். கவிதாயினியைப் பார்த்து அவ்வூர் மக்களும் தங்கள் பிள்ளைகளிடம், “ஏய்... நல்லா படிங்கடா... கவிதாயினி அக்காவ பாரேன்.... கஷ்டப்பட்டு படிச்சு வேலைக்கு வந்துட்டு.... த..ஞ்.சா...வூ..ர்ல படிச்சதுடா... நா(ன்) ஒழச்சி காசு பணந்தர்றேன்.... நீங்க படிங்கடா...” என்று கூறுவார்கள். கவிக்குப் பிறகு அவள் வசித்த தெருவில் பெண்களும் பையன்களும் நிறைய பேர் வாத்தியார் வக்கீல் என்று பெருகத் தொடங்கினர். கவிதாயினிக்கு டாக்டர் வேலை கிடைத்தது. தனது சொந்த ஊருக்கு காரில் வந்துகொண்டிருக்கிறாள். அப்படி வந்துகொண்டிருக்கும்போது எங்கு பார்த்தாலும் நோட்டமிடுகிறாள்.... “அந்தோ இருக்கு... ஊரெ தெரியாம மழை அடிச்சு ஊத்தும்போது கொடலெ போட்டுக்கிட்டு நட்ட வயல்...” “மத்தியானம் கரையேறி களத்துமேட்டுல சோறுதிங்கிற அரசமரத்தின் நிழல் நி..றை..ய.வே.... படர்ந்திருக்கு...” “ஓ...! பழைய சோறும் வெங்காயமுமா இருக்குற தூக்குவாளிய மாட்ற ஒதியங்கௌகூட எவ்ளோ பெருசாயிட்டு...” “வெயில் தாங்க முடியாம இந்த வாய்க்கால்லதானே தொப்புதொப்புனு விழுந்து எழுந்தரிச்சு ஈரத்துணியோட நடுவோங்....” என்று நினைத்துக்கொண்டே காரை மெல்ல ஓட்டிவந்த கவிதாயினி நட்டுக்கொண்டிருக்கிற தோழிகளைப் பார்த்து சத்தமிட்டு அழைக்கிறாள். அவர்கள், “ஏய்... ஏய்... இங்க பாருங்கடி... நம்ம கவிதாயினி டாக்டருடி...” ஓடிவந்து கவிதாயினியை கட்டிப்பிடித்து முத்தமிடுகிறார்கள்... அவர்கள் அனைவரும் தாயாகி விட்டனர். “ஏய்... கனகா! அந்த மோருகாராச்சி என்னுக்கிட்ட வைத்தியத்துக்கு வந்ததுடி... அந்தம்மா கையெப் புடிச்சு பாத்தேண்டி...!!! கடெகார அய்யரும் வந்தாரு... அவருக்குக்கூட ஒருதடவை மயக்கம் வந்திருச்சு.. யாந் தண்ணியத்தான் கொடுத்தேங்... குடிச்சாரு....!!! அந்த மருதாம்பா அம்மா.. இன்னும் மேஞ்ஜாதி தெருவுல இருந்து நெறயப் பேரு வைத்தியத்துக்கு வந்தாங்க... என்னோட வேலெபாக்குற டாக்டர்களும் மேஞ்ஜாதிக்காரங்கதாங்...”. “அப்புடியா... ஆம்பளை பையங்க இருக்காங்களா....???” என்று கேட்டவுடன் வெட்கச்சிரிப்புடன் நகர்ந்தாள் கவிதாயினி.

தமிழன்னையே ! ஆள்வாய் என்னையே!

தமிழன்னையே ! ஆள்வாய் என்னையே! கருவிலிருக்கையிலே எங்கம்மா கருவறையில் கருவாகி வந்த அன்னையே - என் கருவாக வந்த அன்னையே - உணர்வின் திருவாக வந்த அன்னையே - அங்கு உருவிலிருக்கையிலே உயிருக்குள் உயிராக உணர்வில் கலந்த அன்னையே - பந்த உணர்வைத் தந்த அன்னையே - சொந்த உறவைத் தந்த அன்னையே ! தெருவில்தவ்ழ்கையிலே அப்பாமுதல் அன்பர்வரை தெளிவில் ஒளிர்ந்த அன்னையே - எந்தன் தெளிவாய் மிளிர்ந்த அன்னையே - சிந்தும் மொழியில் பொலிந்த அன்னையே - உந்தன் அருகிலிருக்கையிலே செடிகொடி விலங்குகள் அத்தனையும் சொன்ன அன்னையே - நீதான் அத்தனைக்கும் ஆசான் அன்னையே - முதலில் கத்துத்தந்த பள்ளி அன்னையே ! குருவிலிருக்கையிலே அவர்சொல்லும் பாடங்களை ஒப்பிடவே தந்த அன்னையே - கற்க ஒப்பிடவே செய்த அன்னையே - ஒன்றும் ஒப்பு உயர் வற்ற அன்னையே - எந்தன் உருவிலிருந்துகொண்டு மாணாக்கர் மான்புபெற உரைக்கும் சொல்லின் அன்னையே - ஆறாம் உறைக்கும் சொல்லின் அன்னையே - உயிர் வரைக்கும் ஆள்வாய் என்னையே ! - ஏழைதாசன் பி 3/5, ஆலங்குளம் குடியிருப்பு புதுக்கோட்டை -622 005 பேச : 9751 330 855

எரிமலை ஏற்றிவைத்த செங்கொடி : செங்கொடிவயலான சிறுகாசாவயல்

எரிமலை ஏற்றிவைத்த செங்கொடி : செங்கொடிவயலான சிறுகாசாவயல் முனைவர் சு.மாதவன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, (செம்மொழி இளம்தமிழறிஞர் விருதுபெற்றவர்) மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி (த), புதுக்கோட்டை. பேச 9751 330 855, மின் அஞ்சல் : semmozhi200269@gmail.com 60 பறையர் குடும்பங்கள், 25 வலையர் குடும்பங்கள், 3 வன்னியப் பிள்ளைக் குடும்பங்கள், 2 செட்டியார் குடும்பம், 2 இஸ்லாமியக் குடும்பம், 3 சேர்வை எனப்படும் கள்ளர் குடும்பங்கள் கொண்ட ஒரு கிராமம். அந்தக் கிராமத்தின் பெயர் சிறுகாசாவயல் – கள்ளக்காத்தான். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டத்தில் (இன்று ஆவுடையார்கோவில் வட்டம்) வெள்ளாற்றங்கரையில் – வடகரையில் – ஆவுடையார்கோவிலிருந்து 11கி.மீ தூரத்தில் உள்ள இயற்கை எழில்கொஞ்சம் கிராமம் அந்த கிராமம். அந்த கிராமத்தில் வசித்துவந்த 3 கள்ளர் குடும்பத்தில் ஒரு குடும்பத்தின் பெயர் ‘ரெங்கூன் சேர்வைக்குடும்பம்’. இந்தக் குடும்பத்தில் பிறந்த ஒரு சிறுவன் ஏதோ ஓர் காரணத்தால் தனது 15 வயதில் ஊரைவிட்டுப் புறப்பட்டு சென்னை சென்று சேருகிறான். சென்னையில் பல்வேறு கடைகளில், நிறுவனங்களில் வேலைசெய்து தன் வயிற்றுப்பாட்டை ஓட்டிக்கொண்டிருந்த அந்தச் சிறுவன் ஒரு கட்டத்தில் ஜனசக்தி அச்சகத்தில் வேலைசெய்து வருகிறான். பணிபுரியும் இடம் பொதுவுடைமைச் சித்தாந்தத்தின் பாசறையாதலால் மார்க்சீயக் கொள்கைகளை அங்கு பணிபுரிந்த தோழர்கள் மூலமும் அன்றைய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் மூலமும் கற்றுத் தேர்கிறான். கற்றுக்கொண்ட சித்தாந்தப் பின்னணியில் கட்டுரைகள், கவிதைகள் எனப் படைப்புப் பல படைக்கிறான். அவனது படைப்புகள் படிப்பவரை எழுச்சிகொள்ளச் செய்கின்றன. இதெல்லாம் நிகழ்ந்தேறிய காலம் 1960கள் ஆகும். 15வயதில் தன் ஊரை விட்டுப்போன அந்த இளைஞன் தன் 25 வயது வாக்கில் அந்தக் கிராமத்திற்கு வருகிறான். தன் குடும்பத்தாரோடு ஓரிரு வாரங்கள் அங்கு வசிக்கிறான். அப்போது அவன் காணும் சமூக நிலவரங்கள் அவனுக்குப் பெரு வியப்பையும் அதிர்ச்சியையும் வேதனையையும் தருகின்றன. ஒருநாள் வயல்வெளிப் பகுதியில் வெள்ளைச் சட்டை, வெள்ளைவேட்டி, தலையில் உருமா எனப்படும் முண்டாசோடு ஒரு மனிதர் வந்து கொண்டிருக்கிறார். அதைப் பார்த்த சேர்வைக்காரர் ஒருவர் அந்த மனிதரைத் தன் அருகில் அழைக்கிறார். ‘யார் நீ! எங்கே போகிறாய்?! என்று இவர் கேட்டதும் அவர் தான், ஏகணிவயல் பகுதியிலிருந்து மின்னாமொழிக்குப் போகிறேன் என்கிறார். “ஏகணிவயலில் நீ யார்?” என்று மீண்டும் இவர் கேட்க, ‘நான் பறைய வீட்டுப் பையன்’ என்று சொன்னவுடன் அந்த சேர்வைக்காரர் ஓங்கி அறைந்து,” “ஏன்டா! பறப்பயலுக்கெல்லாம் வெள்ளையும் சொள்ளையும் கேக்குதா?! எவ்ளோ திமிரு இருந்தா எங்க ஊருக்குள்ளே முண்டாசு கட்டிக்கிட்டு வருவ’ என்று திட்டி, அவரது சட்டையையும் உருமாவையும் கால்செருப்பையும் கழற்றவைத்து, ‘எல்லாத்தையும் கக்கத்தில் இடுக்கிக்கிட்டே ஓடிப்போ’ என விரட்டியடிக்கிறார். வெளியூரிலிருந்து வருபவருக்கே இந்த நிலையென்றால் உள்ளுரில் வாழும் பறையர் நிலையைக் கேட்கவா வேண்டும்? அன்றைய நிலையில் குடிப்பறையனாயிற்றே! செத்தமாடு தூக்குறது, சாவுச் சேதி சொல்லுறது, ஆளானசேதி சொல்லுறது, தப்படிச்சு தண்டோரா போடுறது, சாவுக்குப் பறையடிக்கிறது, பாடைகட்டுவது, குழிவெட்டுறது, பொணம் எரிக்கிறது, விவசாயக் கூலி வேலை செய்யுறது என எல்லாக் குடிவேலையும் அந்தக் கிராமத்தில் நடந்து கொண்டிருந்தது. 60 பறையர் குடும்பத்துல ரெண்டு மூனு குடும்பத்துக்கு மட்டும் நிலம் கொஞ்சம் இருந்தது. அதுல ஒரு குடும்பம் ஓட்டுவீட்டுப் பழனிக்கிழவன் வீடு. அந்தப் பழனி குடும்பத்துக்கு மட்டும் அந்த ஊரிலேயே பலவேலி நிலம் இருந்திருக்கிறது. ஒன்னுரெண்டு குடும்பத்துக்கு நிலம் இருந்ததே தவிர மீதி எல்லாக் குடும்பமும் குடிவேலை செஞ்சுதான் பிழைத்திருக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்த இந்த இளைஞன், “இந்த அடிமைத்தனத்திலிருந்து இந்த மனிதர்களை மீட்டுச் சுதந்திர மனிதனாய் வாழவைக்கத்தானே நாம் படித்த கம்யூனிசம் வழிகாட்டுது. அதை இங்கே செஞ்சு காட்டுனா என்ன?” என்று எண்ணினான். ஒவ்வொரு நாளும் அந்தக் கிராமத்தில் இந்தப் பறையர் மக்கள் படும் இன்னல், இழிவு, மன உளைச்சல் எல்லாவற்றையும் பார்த்த அந்த இளைஞனால் பல இரவுகளில் தூங்க முடியவில்லை. தூங்கிக் கிடக்கும் இந்த மக்களைத் தட்டி எழுப்பி விடுதலை மனிதனாக்குவது எப்படி என்று ஒவ்வொரு நாள் இரவிலும் சிந்தித்திருக்கிறான். இப்படிப் பலநாள் சிந்தித்த அந்த இளைஞன் ஒரு நாள் இரவில் படுக்கைத் தளையிலிருந்து எழுந்து பறையர் சேரிக்குப் போனான். ஏற்கனவே அவ்வப்போது பேசிப் பழகியிருந்த பறையர் வீட்டு இளைஞர்களான காளி என்.இரத்தினம், சன்னாசி இன்னும் சிலரை எழுப்பி அழைத்து “நீங்கள் எல்லோரும் இந்த அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறணும்னா எல்லாரும் கம்யூனிஸ்ட் கட்சியில் சேருங்க… நான் ஒங்களுக்குப் பக்கபலமாக இருக்குறேன்” என்று அந்தக் காலத்தில் கீழத் தஞ்சையில் தோழர் பிஎஸ்ஆர் நடத்திவந்த போராட்ட முயற்சிகளின் அனுபவங்களையெல்லாம் சொல்லி விழிப்புணர்வை ஊட்டினான். ஓரிரு நாள் இரவுநேர விழிப்புணர்வுப் பிரச்சாரத்தின்மூலம் பத்துப்பதினைந்து பேரைத் திரட்டிவிட்டான் அந்த இளைஞன். அந்தக் காலத்தில் அறந்தாங்கி வட்டாரத்தில் ஆவுடையார்கோவில் பகுதியில் புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் தலைவர்களாகத் திகழ்ந்த அறந்தாங்கி ஒன்றியச் செயலாளர் கிருஷ்ணா கபே தோழர் கிருஷ்ணமூர்த்தி, புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் தோழர் கே.ஆர்.சுப்பையா, வி.ச. மாவட்டச் செயலாளர் தோழர் அப்புக்குட்டி, ஒன்றியக் உறுப்பினர்கள் தோழர் கருப்பூர் காளிமுத்து, தோழர் ஜெயமாலைப் பிச்சை ஆகியோரை அழைத்துக் கொண்டு 1975ஆம் ஆண்டில் ஒருநாள் இரவில் அந்தச் சிறுகாசாவயலைச் செங்கொடி பறக்கும் வயலாக மாற்றினான். அன்று நடந்த கூட்டத்திற்கு தோழர் மா.சுப்பிரமணியன் தலைமைவகித்தார். தோழர் காளி என்இரத்தினம் கிளை செயலாளரானார். கொடியேற்றப்பட்ட குதூகலிப்பில் அந்த இளைஞனும் பறையர் மக்களும் திரண்டிருந்த நேரத்தில், முன்பே இதையறிந்திருந்த கள்ளர் குடும்பத்து மிராசுதார்கள் அடியாட்களுடன் பறைச்சேரிக்குள் புகுந்து மிரட்டினர். அந்த நேரத்தில், எப்படியாவது அந்தப் புரட்சிகரஇளைஞனைக் காப்பாற்றிச் சென்னைக்கு வழியனுப்பிவைக்க விரும்பிய இளைஞர்சிலர் கூண்டு வண்டியோ தட்டு வண்டியோ பாரவண்டியோ ஏதோ ஒன்றில் அந்த இளைஞனை ஏற்றிக் கொண்டுபோய் நாகுடி என்னும் ஊரில் அறந்தாங்கி செல்லும் பேருந்தில் ஏற்றி வழியனுப்பிவிட்டார்கள். அன்றிலிருந்து அந்தப் பறைச்சேரியை, ‘விட்டேனா பார்! எடுத்தேனா பார்!’ என்று ஒவ்வொருநாளும் மிரட்டியும் துன்புறுத்தியும் வந்தனர் கள்ளர் குடும்பத்தார். ‘வாராது வ்நத மாமணியைத் தோற்போமோ’ என்றிருந்த பறையர் மக்கள் ஆதிக்கச் சாதியை எதிர்த்து பல்வேறு கட்டங்களில் போராடினர். இந்திய நாடு அவசர காலப் பிரகடனத்தால் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற முழக்கத்தை முன்வைத்து, ‘விடாதே பிடி நிலத் திருடரை’ என்று ஒருசிறு பிரசுரமெல்லாம் வெளியிட்டு நில மீட்புப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தது. இந்த நில மீட்புப் போராட்டத்தை வீரம் செறிந்த போராட்டமாக நடத்தி வெற்றி கண்டது இந்தக் கிராமம். ஒருமுறை, தெக்குத்திப் பகுதியிலிருந்து 50, 60 அடியாட்களைக் (அவர்களும் வேறு ஒரு பிரிவு தாழ்த்தப்பட்ட மக்கள் தானாம்) கொண்டுவந்து தங்கவைத்துக்கொண்டே அச்சுறுத்தி வந்ததோடு, ஒரு மாதக் கணக்கில் ஆயுதத் தாக்குதலும் நிகழ்த்தியிருக்கிறார்கள் மிராசுதார்கள். விடுதலை உணர்வும் சமத்துவ வேட்கையும் கொண்ட இந்த அடித்தட்டு மக்களும் அவர்களோடு ஒரு மாதகாலத்துக்கும் மேலாக ஆயுதம் தாங்கிப் போராடி, அடியாட்களை ஓடஓட விரட்டி வெற்றி பெற்றுள்ளனர். இத்தகைய போராட்டம் நடந்த காலத்தில் அந்த கிராமத்தில் இருந்த அத்தனை பேரும் கம்யூனிஸ்டுகளாக மாறிப் போராட்டத்தில் இணைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு, இந்தப் பறையர் மக்களெல்லாம் ஒன்றுகூடி, ‘இனிமேல் எந்த ஒரு குடிவேலைக்கும் போவதில்லை’ என முடிவெடுத்து அதன்படி இன்றுவரை வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய போராட்டத்தின் விளைவும் பயனும்தான் இங்கு மிகவும் எண்ணிப் பெருமிதம் கொள்ளத்தக்கன என்றால் அது மிகையாகாது. அப்படியென்ன… விளைவும் பயனும் உண்டானது என்று தானே கேட்கிறீர்கள்.!? ரெண்டு மூனு பறையர் குடும்பத்தைத் தவிர அன்றைக்கு யாரிடமும் நிலம் இல்லாத நிலையில் இருந்தார்கள் இல்லையா! இன்று எல்லோர் கையிலும் ஒன்றுரெண்டு மாவிலிருந்து 15, 20 மா வரை நிலவுடைமையாளர்களாக மாறியிருக்கிறார்கள். எப்படி இது நிகழ்ந்தது?! குடிவேலை செய்வதில்லை என்றமுடிவில் உறுதியாக இருந்த இந்த மக்கள், அதே ஊரில் வாழ்ந்துவந்த செட்டியார், இஸ்லாமியர் குடும்பங்களுக்கும் பக்கத்து ஊர்களான பட்டமுடையான் கோனார் குடும்பங்களுக்கும், சாத்தகுடி காட்டுக்குடி ஊர்களில் வாழ்ந்த பிற சாதிக் குடும்பங்களுக்கும் விவசாயக் கூலி வேலை செய்து வரலாயினர். இப்படியே, பத்துப் பன்னிரெண்டு வருடம் கடந்ததும், தங்கள் கையில் சேர்த்துவைத்திருந்த தொகைகளை வைத்துச் சிறு சிறு வயல்களாக வாங்க ஆரம்பித்தனர். இதே நேரத்தில், இந்த ஊரைவிட்டு வேறு ஊர்க்களுக்கு முழுவதுமாக இடப்பெயர்வான செட்டியார் குடும்பத்தார்களும், முசுலீம் குடும்பத்தார்களும் அவர்களது நிலங்களைப் பறையர் குடும்பங்களிடமே விற்றுவிட்டுச் சென்றனர். என்னதான் நிலவுடைமைக்காரர்களாக இருந்தபோதிலும், தங்கள் நிலங்களைக் கள்ளர்களிடம் விற்றுவிட விரும்பாமல் பறையர்களிடமே விற்றுள்ளனர் என்பது வர்க்க முரண்களோடு உள் ஒளிந்திருக்கும் சாதீய முரணும் சேர்ந்தே வேலை செய்திருக்கிறது என்பதைக் காட்டுகிறதல்லவா?! இப்படியே, ஒவ்வொரு குடும்பமும் நிலம்வாங்கி நிலம்வாங்கி நில மீட்புப் போராட்டத்தால் குறைந்த விலைக்கு வாங்கி இன்று நிலம் இல்லாத பறையர் குடும்பமே இல்லை என்ற தன்மதிப்புநிலை இந்த ஊரில் உருவாகியிருக்கிறதென்றால், அதற்கு வித்திட்ட பெருமையும் வரலாற்றுச் சிறப்பும் அந்த இளைஞனையே சாரும்… அதுசரி… யார்தான் அந்த இளைஞர் என்ற ஆர்வ வினா உங்கள் சிந்தனையில் முளைக்கிறதல்லவா?! அந்த இளைஞர் வேறு யாருமல்ல.. ஜனசக்தியில் ‘எரிமலை’யாய் எழுதிவந்த அறந்தை நாராயணன்தான் அந்தக் கிராமத்து மறுமலர்ச்சிக் குறியீடு; செங்கொடி இயக்க வீர வரலாற்றின் மைல்கல் என்றால் அது மிகையில்லை. * * * இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 90ஆம் ஆண்டு வரலாற்றுச் சிறப்பு மலர் – 2015க்காக 10 டிசம்பர் 2015 அன்று அனுப்பப்பட்ட கட்டுரை. Email: info.janasakthi@gmail.com பேசு 9383005015, 9382005014, ஜனசக்தி நாளிதழ், சென்னை – 14. * கட்டுரையாளர் இந்த ஊரைச் சேர்ந்தவர். தோழர் மா.சுப்பிரமணியனின் மகனார் ஆவார்

கமில் சுவலபில்லின் தமிழ் உணர்விலிருந்து…

கமில் சுவலபில்லின் தமிழ் உணர்விலிருந்து… முனைவர் சு.மாதவன் தமிழில் பேசாத... தமிழில் எழுதாத..., தமிழில் கையெழுத்திடாத..., தமிழில் பெயர் வைக்காத..., தமிழில் தலைப்பெழுத்திடாத ஐந்தரைக் கோடி தமிழர்களே வாழும் இன்றைய காலத்தில் தன் குன்றாத் தமிழார்வத்தோடு ஒரு வெளிநாட்டுக்காரர் தன்பேச்சு, எழுத்து, கையெழுத்து, முன்னெழுத்து (தலைப்பெழுத்து) என அத்தனையையும் தமிழிலேயே – தமிழுக்காகவே பதிவு செய்தாரென்றால் நம்புவீர்கள்! ஏனென்றால், தமிழன் இத்தனையும் செய்தான் என்றால் தான் நம்ப இயலாத நிலையில் நாம் வாழ்ந்து வருகிறோமே!? இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருந்தபோது, தற்செயலாக 12.11.2015 அன்றைய ‘தி இந்து’ (தமிழ்) இதழில் ஒய்.ஆண்டனி செல்வராஜால் எழுதப்பட்ட நிகழ்கதைச் செய்திப் பதிவைப் (Story) படித்ததும் நம்முடைய கருதுகோளுக்கு உரிய தரவாயிற்றே இது என்று எண்ணத் தோன்றியது. இதோ அந்தச் செய்தித் தலைப்பு : “பொங்கல் பண்டிகையை கொண்டாடும் கொரியர்கள்” “தமிழர்களின் வழிவந்தவர்களா என ஆராயும் உலகத் தமிழறிஞர்கள்” (ப.2) இதே நோக்குநிலையிலான ஆய்வுத் தரவுகளை உலக அளவில் எடுத்துச் சென்று உலகச் செம்மொழிகளுள் செம்மாந்த ஆற்றல்மொழி தமிழ்மொழி என்று அண்மைக் காலத்தில் ஒரு வெளிநாட்டுத் தமிழறிஞர் உள்நாட்ட முன்வந்தார். அவரது பெயர் கமில் வாச்லவ் சுவலபில் (Kamil Vaclav Zvelebil); செக்கோஸ்லோவிய நாட்டுக்காரர்; செந்தமிழ் நாட்டக்காரர். 1927 நவம்பர் 17 அன்று கமில் சுவலபில் – மரியம்மா இணையரின் திருமகனாய் பிறந்தார் ‘வாச்லவ்’. ஆம்! இன்று கமில் சுவலபில் என்று உலகம் அறிந்த அந்தத் தமிழறிஞரின் இயற்பெயர் ‘வாச்லவ்’ என்பதுதான். இங்கே தாயுமானார் என்பதுபோல இவர் தந்தைத் திருப்பெயரேயானார். அதாவது, தன் இயற்பெயரைத் தந்தையின் பெயருக்கு இடையில் இடைப்பெயராய்ப் பெய்து அழைக்கும் வழக்கம் செக்நாட்டில் இருக்கும் போலும். இப்படி அழைக்கப்பட்டதில், இடைப்பெயரான தன் பெயர் வழக்கொழிந்து தன் தந்தை பெயராலேயே அழைக்கப்படுவாரானார் நம் கமில் சுவலபில். தந்தைபெயரே தன் பெயராய் மாறிப்போன கமில், சிறந்த பன்முக ஆளுமையாகத் திகழ்ந்தவர்; பன்மொழி ஆற்றலாளராய் முகிழந்தவர். பெரும்பான்மையான தமிழறிஞர்கள் ஒரு குறிப்பிட்ட இலக்கியப் பகுதி அல்லது வகைமைக்குள் மட்டுமே ஆழங்கால்பட்ட புலமையும் நூல் வௌயீட்டுச் சிறப்பும் பெற்றிருப்பார்கள். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களே இவ்வாறிருக்கும் போது, இவரோ சங்க இலக்கியம், தொல்காப்பியம், காப்பியங்கள், நீதி இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், தல புராணங்கள், மரபுக் கவிதை, புதுக்கவிதை, சிறுகதை, புதினம் எனத் தமிழிலக்கியப் பெரும்பரப்பு முழுவதையுமே ஒரு ஆய்வு நீச்சலிட்டவராக ஒளிவிட்டுச் சிறந்து நிற்கிறார். அத்தோடு விட்டாரா நம் கமில்!? இலக்கியம் தவிர மொழியியல், இலக்கணம், நாட்டுப்புறவியல், மொழிபெயர்ப்பு எனவும் தன் ஆய்வுச்சிறகை வானளாவ விரித்துப் பறந்திருக்கிறார் என்பதை எண்ணிப் பார்க்கும்போது நம் புருவம் மேலேறி அப்படியே நிற்கிறதல்லவா!? வியப்பின் அசரலில் புருவம் கீழிறங்க மறந்து நிற்கிறதல்லவா!? அத்துணை ஆய்வுப் பணிகளை ஒரு வெளிநாட்டுக்காரர் செய்திருக்கிறார் என்னும் செய்தி நம் தமிழ்ப் பேராசிரியர்களின் மனசாட்சியை என்றுதான் தன்னுணர்வு பெறவைக்குமோ என விம்மத்தானே செய்கிறது நெஞ்சம்! முனைவர் பட்டம் பெற்று அரசுப் பணியும் பெற்றபின் எத்தனை பேர் தொடர்ந்து ஆய்வு செய்கிறார்கள் இங்கே?!. 25க்கும் மேற்பட்ட நூல்கள், 500க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எனக் கமில் படைத்த எல்லாம் தமிழ்ப் பண்பாட்டு மீட்டுருவாக்கப் பணிகளாக விளங்குகின்றன. KRONICA என்ற நூலில் 1951 முதல் 2004 வரை கமிலால் எழுதப்பட்ட 517 கட்டுரைகளைப் பட்டியலிட்டுள்ளனர் (பக். 253-266). இந்நூலில், மசரிக் பல்கலைக்கழக ஆய்வாளர்களான பெட்ரா நொவொன்டனா, வோக்லாவ் பிளஸெக் ஆகிய இருவரும் தொகுத்துள்ளனர். இவரது 25 நூல்களில் – முனைவர் மு.இளங்கோவனால் அவரது பதிவுத் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள நூல்களில் – வெளிநாட்டாருக்குத் தமிழ் இலக்கண, இலக்கிய மரபுகளை அறிமுகம் செய்யும் நூல்கள் -6, தமிழ்இலக்கிய ஆய்வு நூல்கள் -4, தமிழ் இலக்கிய வரலாறு -1, முருகன் பற்றிய நூல்கள் -3, தமிழ் மொழியியல் நூல்கள் -3, தமிழ் நாட்டுப் புறவியல் நூல்கள் -3, தமிழ் அகராதியியல், உரைநடையியல், சைவச் சிற்பவியல், இந்தியக் கடலியல் ஆகிய பொருண்மைகளில் தலா 1 வீதம் மொத்தம் 4 நூல்கள் என்றவாறு கமிலின் நூல்களை வகைப்படுத்தலாம். மேலும் சிலப்பதிகாரம், நற்றிணை, புறநானூறு ஆகியவற்றை கமில் மொழி பெயர்த்திருக்கிறார் என்ற செய்தியும் கிடைக்கிறது. இந்த நூல்கள் கிடைத்தால் மேலும் பல நூல்கள் இவரது படைப்புகளில் சேரும். இந்த வகைப்படுத்தல் மூலம் கமிலின் தமிழ் இலக்கிய அறிவும் ஆற்றலும் ஆய்வார்வமும் தெள்ளிதன் புலனாகும். தனது குன்றாத ஆர்வத்தால், இந்தியத் தமிழ் மரபைத் துல்லியமாக அறிந்து ஆராய உதவும் வகையில் 1952இல் சம்ஸ்கிருதத்தில் ஒரு முனைவர் பட்டமும் 1959இல் தமிழில் ஒரு முனைவர் பட்டமும் பெற்றார். இதுவரை தமிழ்நாட்டில் பட்டம்பெற்றவர்களில் ஏறத்தாழ 70% பேருக்குத் தன் தாய்மொழியிலேயே பிழையின்றி எழுதத் தெரியாது என்பது இன்றைய நிலையில் கசப்பான உண்மையாகும். தமிழர்கள் நிலையே இவ்வாறிருக்கும் போது ‘செக்’கைத் தன் தாய்மொழியாகக் கொண்ட கமிலுக்கு இப்படி ஒரு தமிழ்ப்பற்றும் ஆய்வு நுட்பமும் பரவலாக்க உணர்வும் எப்படி வந்திருக்கும் என்பது நுண்ணிதின் ஆராயத்தக்கது. இவரது புகழ்பெற்ற நூல்களுள் ஒன்று, “The Smile of Murugan : On Tamil Literature of South India” என்பதாகும். ‘முருகனின் முறுவல்’ – முருகனே அழகு; முருகு என்ற சொல்லின் பொருளும் அழகு; முருகனின் முறுவல் அதனினும் அழகு; அதையே தன்பெயராகவும் கொண்ட ‘சுவலபில்’ அழகோ அழகு! ஆம். ‘சுவலபில்’ என்பதற்கும் ‘More beautiful’ எனப் பொருளிருப்பதாக அறிகிறபோது ‘என்ன பொருத்தம் அவர்க்கு இந்தப் பொருத்தம்’ எனத் பாடத் தோன்றுகிறதல்லவா?! இதைவிட இன்னொரு பொருத்தம் இருக்கிறது. பாருங்கள்! இவரை ஈன்ற தாயின் பெயரோ மரியம்மா! ஒருவேளை, ‘மாரியம்மா’ தான் ‘மரியம்மா’ ஆனாள் எனக் கொண்டால் இவரது முன்னோர் தொல்தமிழ்க் குடியினராய் இருப்பரோ எனவும் எண்ண தோன்றுகிறது. மேலும் சிந்தித்தால் ‘தமிழ்’ என்பதன் ‘செக்’மொழி மருஉச் சொல்தான் ‘கமில்’ என்பதோ என்றும் ஒலியியல் ஒப்புமை தோற்றுவிக்கிறது. சரி… ‘கமில்’ – ‘தமிழ்’ என்றால் ‘சுவலபில்’ என்பதை என்னவென்று சொல்வது என்று நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கிறது. ‘சுவலபில்’ என்பதை ஆங்கில எழுத்துக்களில் ‘Svelebil’ என்று எழுதுகிறோமே, எழுத்து என்பதற்கே ‘Syllable’ என்பதுதானே ஆங்கிலச் சொல்!. அப்படியானால், ‘Syllable’ என்பது ‘Svelebil’ ஆகியிருக்க வாய்ப்புண்டல்லவா என்றும் தோன்றுகிறதே! இப்பொழுது இரண்டையும் இணைத்துப் பாருங்கள் கமில் ஸ்வலபில்  Kamil Svelebil  Kamil Syallabil  Tamil Syllable  தமிழ் எழுத்து என்று இருந்திருக்க வாய்ப்புள்ளதென்று தோன்றுவதற்கு வாய்ப்பிருக்கிற தல்லவா?! இந்த மொழியியல் – ஒலியியல் ஒப்புமையை எண்ணிப் பார்க்கிறபோது ‘கமில் ஸ்வலபில்’ குடும்பத்தார் தொல்தமிழ்க் குடியினராக இருந்திருக்கக் கூடும் என்ற கருத்து இன்னும் வலுப்பெறும் வண்ணம் உள்ளதல்லவா?! ஒரு வேளை, இந்தத் தொல்குடித் – தொப்புள்கொடி – உறவு ஆற்றல் தான் கமிலைத் தமிழ் பயில உந்தியருக்குமோ என்னவோ?! இந்தக் கருத்தை மேலும் ஆராய்வது ஆராய்ச்சி உலகின் கடன் என்று முன்வைக்க விரும்புகிறேன். இப்படி ஒன்றை நிறுவியாக வேண்டும் என்பது தேவையில்லை. நம்மிடம் இல்லாத தமிழ்ப் பற்றைக் கமிலிடம் இருந்தாவது நாம் பெற்றாக வேண்டும் என்பதே இன்றைய காலத்தின் தேவையாகும். 17 ஜனவரி 2009ல் இத்தகைய கமில் சுவலபின் உயிர் இந்த உலகில் இல்லை. ஆனால் அவரது சிந்தனைகளின் மூலம் அவர் விட்டுசென்ற ‘தமிழுணர்வு மூச்சுக்காற்று’ உலகமெங்கும் உலவிகொண்டே இருக்கும். இதை உணராமலே இன்னும் ஒரு நூற்றாண்டு கடந்தால் ‘தமிழ் மொழி அமிழ்தமொழி’ என்ற வாக்கியத்தை ‘தமிழ்மொழி அமிழ்ந்த மொழி’ என்று படிக்க வேண்டி வரும். கட்டுரையாளர் முனைவர் சு.மாதவன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை (செம்மொழி இளம்தமிழறிஞர் விருதுபெற்றவர்) மாட்சியமை தங்கிய மன்னர் கல்லூரி (த) புதுக்கோட்டை. பேச 9751 330 855, மின் அஞ்சல் : semmozhi200269@gmail.com

வள்ளுவ மெய்யுணர்தலில் பௌத்த மெய்யியல்

வள்ளுவ மெய்யுணர்தலில் பௌத்த மெய்யியல் முனைவர் சு.மாதவன் உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, மா மன்னர் கல்லூரி (த), புதுக்கோட்டை - 622 001, பேச : 9751330855, மின்னஞ்சல் : semmozhi200269@gmail.com அறிமுகம் மானுட வாழ்வின் பன்முகச் செயல்பாடுகளையும் ஓர் ஒழுங்கமைவுக்குள் கட்டமைத்து இயக்குபவை மெய்யியல்கள், அவற்றின் இயக்கத்திற்கு உட்பட்டு இயங்குபவை சமயங்களும் இயக்கங்களும். மெய்யியலின் பல்வேறு கட்டமைப்புக் கூறுகளின் வழியாக அவற்றின் வாழ்நிலையைத் தீர்மானிப்பது அறவியலேயாகும். அறிவியல் என்பது மானுடவாழ்வியல் ஒழுகலாறுகளை வரையறுத்துச் செயல்படுத்தும் ஒரு கோட்பாடாகும். ஒவ்வொரு சமூகமும் தனக்கென ஓர் அறவியல் கேட்பாட்டை உருவாக்கிக்கொள்வதோடு வெளியிலிருந்து அந்தச் சமூகத்துக்குள் கலக்கும் சமய, சமூக, அரசியல் பண்பாட்டுக் கூறுகளையும் வரித்துக்கொள்வது இயற்கை. அவ்வாறான தனித்தன்மையும், இயைபுத்தன்மையும் கொண்ட அறவியற் சிந்தனைகள் அவ்வச்சமூக இலக்கியங்களில் ஆழப்பதிந்தும், ஊடாடியும் நிற்பதும் இயல்பே. அந்தவகையில், தமிழகத்தில் பரவிய பௌத்த, சமண சமயங்களின் அறவியற் சிந்தனைகள் தமிழ் இலக்கியங்களில் - குறிப்பாகத் தமிழ் அறஇலக்கியங்கள் எனப்படும் பதினெண் கீழ்ககணக்கு நூல்களில் ஆழப்பதிந்தும், வெளிப்பட்டும் நிற்கின்றன. தமிழ் அறஇலக்கியங்களிலும், பௌத்த மெய்யியல் இலக்கியங்களிலும், முதன்மையாக வைத்துப் போற்றப்படுபவை திருக்குறளும், தம்மபதமும். இவை இரண்டுமே மானுட வாழ்வியலுக்கான செந்நெறிச் செல்நெறிகளை வலியுறுத்துவதையே தமது முதன்மை நோக்கங்களாகக் கொண்டு விளங்குவன. மெய்யுணர்தல் மெய்யுணர்தல் என்பது உலகியல் உண்மைகள் அனைத்தையும் உணர்தலாகும். “மாசறு காட்சி” உடையோர்க்கே இது வாய்க்கும். மாசறு காட்சியாவது உள்ளதை உள்ளவாறே உணர்வது. அதாவது, உலகியல் வாழ்க்கையின் இயல்பை அறிதலாகும். காட்சி என்ற தமிழ்ச்சொல் “தர்ஷன்” என்ற வடமொழிச் சொல்லுக்கு நேரான பொருள் தருகின்ற சொல்லாகும். தொல்காப்பியர், “ஒத்த காட்சி உத்தி வகை” எனக் குறிப்பதும், கணியன் பூங்குன்றனார், “திறவோர் காட்சியில் தெளிந்தனம்” எனப்பாடுவதும் எண்ணத்தகும். இவ்விரு இடங்களிலும் “காட்சி” என்னும் சொல் அளவை இயலை உள்ளடக்கிய மெய்யியலையும், மெய்யியலின் விளக்கமாக அமைந்த நூல்களையும் குறிக்கிறது என்பது தெளிவு. (நெடுஞ்செழியன்., க.2000:2) என்ற விளக்கம் இதை உறுதிப்படுத்தும். துன்பம் என்ற மாசை அறுக்கின்ற மெய்யியல் சிந்தனை மரபையே “மாசறு காட்சி” என்கிறார் வள்ளுவர். “இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு” (கு.36:2) என்ற குறளில் “இருள்” என்பது துன்பத்தைக் குறித்து நிற்கிறது. அறியாமையினின்று நீங்கிய தெளிந்த காட்சி உடையவர்க்கு துன்பம் நீங்கிய தெளிந்த காட்சி உடையவர்க்கு துன்பம்நீங்கி இன்பம்பயக்கும் என்பது இக்குறளின் பொருள். எனவே, துன்ப நீக்கத்திற்கு அறியாமையிலிருந்து விலகுதல் முதல் படிநிலையாகிறது என்கிறது வள்ளுவம். இந்த இடத்தில் மெய்யுணர்தல் குறித்த மணக்குடவரின் விளக்கத்தைப் பொருத்திப் பார்த்தல் நலம் பயக்கும். அவரது விளக்கம் வருமாறு : “மெய்யுணாதலாவது எக்காலத்திலும் எவ்விடத்திலும் அழியாது நிற்கம் பொருள இது என உணர்தல்” (வெள்ளைவாரணம்., த.மா.1993 : 286) மணக்குடவரின் கூற்றிலிருந்து “அழியாது நிற்கும் பொருள்” தான் மெய்யுணர்தலுக்கான அடிப்படை என்பது புலப்படுவதால் அது எதைக் குறிக்கிறது என்பது ஆராயப்படவேண்டியது. “அழியாது நிற்கும் பொருள்” என வள்ளுவம் குறிப்பிடுவதைக் கண்டறிய வேண்டுமானால், “அழிகிற பொருள்கள் யாவை” என்பதைக் காணவேண்டும். பௌத்த மெய்யியல் குறிப்பிடும் பன்னிரு சார்புகளாக நிற்கும் அனைத்தும் அழியக்கூடிய தன்மையன. இவை அழிந்த பிறகு எஞ்சி நிற்பது நிப்பாணம். எனவே அழியாத பொருளாக விளங்குபவை பௌத்த அறக்கூறுகளும், அவை அடைவிக்கும் நிப்பாணமுமே என்பது வெளிப்படை. இதை உணர்தலே மெய்யுணர்தலாகும். பௌத்த மெய்யியலின் மையமான கோட்பாடாக விளங்குவது பன்னிரு சார்புக் கோட்பாடாகும். பன்னிரு சார்புகளில் முதன்மையானது அறியாமை: இறுதியானது பிறப்பு, இபன்னிரு சார்புகளினின்று நீங்குதலே பிறப்பறுத்தலாகும். அவை வருமாறு : 1. (அவித்தை) பேதைமையல்லது பொய்க்காட்சியிலிருந்து ஏதுக்குத் தக்க ஸ்கந்த சேர்க்கையால் குஸல அகுஸல கன்மங்களாகிய ஸம்ஸ்காரங்கள் (செய்கைகள்) உண்டாகின்றன. 2. (ஸம்ஸ்காரங்கள்) செய்கைகளிலிருந்து மறுபிறப்பை யுண்டுசெய்ய கற்பந்தரிக்கும் விஞ்ஞானம் (உணர்வு) உண்டாகின்றன. 3. (விஞ்ஞானம்) உணர்விலிருந்து (நாமரூபங்களாகும்) அருவுரு உண்டாகின்றன. 4. (நாபரூபமாகும்) அருவுருவிலிருந்து (ஷடாயதனங்களாகும்) அறுவகை வாயில்களுண்டாகின்றன. 5. (ஷடாயதனங்கள்) சப்த, பரிச, ரூப, ரச, கந்த எண்ணங்களாகும் அறுவகை வாயில்களிலிருந்து (பதோ) ஊறு உண்டாகின்றன. 6. (பதோ) இன்ப துன்பம் ஊறுகளினின்று வேதனை நுகர்வு உண்டாகின்றன. 7. (வேதனை) நுகர்விலிருந்து தண்ஹா வேட்கையுண்டாகின்றன. 8. (தண்ஹா) வேட்கையிலிருந்து உபாதானப் பற்று உண்டாகின்றன. 9. (உபாதானம்) பற்றிலிருந்து பிறப்புக்கு மூலமான கருமக்கூட்டம் (பவோ) உண்டாகின்றன. 10. (பவோ) பிறப்புக்கு மூலமாகும் கருமக் கூட்டத்திலிருந்து (ஜாத்தி) மறுபிறப்பு உண்டாகின்றன. 11. (ஜாத்தி) மறுபிறப்புண்டாகி அதிலிருந்து ஜய - மூப்பு, மர்ணா – மரணம், ஸோகா – வலியும், பரிதேவா – அழுகையும், துக்கா – துன்பமும், தாம்நாஸே – கவலையும், சம்பாந்தே – ஏக்கமும் ஆகிய துக்கோற்பவ மூலமாம் வினைப்பயன்கள் உண்டாகின்றன. (அயோத்திதாசப் பண்டிதர்., க.1999 : 70 – 71) இப்பன்னிரு சார்புகளே மனிதனைப் பிறப்புறுத்தலிலிருந்து தடுத்து துன்பச் சூழலிலே பிறக்க வைக்கிறது. பிறத்தலுக்கு அடிப்படையாக உள்ள இதர பதினொரு சார்புகளுக்கெல்லாம் முதன்மையானதும், இவற்றின் தோற்றங்களுக்கெலலாம் அடிப்படையானதும் அறியாமையே. இதைத் தௌ;ளிதின் உணர்த்துகிறது திருக்குறள். மெய்யுணர்தல் அதிகாரத்தில், “பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும் மருளானாம் மாணாப் பிறப்பு” (கு.36 : 1) என்ற முதல் குறளிலேயே ‘அறியாமை’, ‘பிறப்பு’ இரண்டையும் குறிப்பிட்டு விடுகிறார் வள்ளுவர். பன்னிரு சார்புகளின் முதலும், இறுதியுமாக விளங்குபவை ‘அறியாமையும்’, ‘பிறப்பு’மே ஆகும். இவற்றை வள்ளுவர் தம் குறளில் முறையே ‘மருள்’, ‘பிறப்பு’ என்று குறிக்கிறார். அறியாமை எத்தன்மைத்து என்பதைப் பற்றி புத்தர் கூறுவதாவது : “இந்த உலகிலோ அல்லது அடுத்த உலகிலோ எந்தத் துன்பங்கள் இருந்தாலும் அவைகள் அனைத்திற்கும் வேராக உள்ளது பேதைமை. அவை (அத்துன்பங்கள்) விருப்பம் அல்லது ஆசை காரணமாக எழுபவை” “மலங்களில் எல்லாம் பெரியதோர் மலம் ஒன்று உண்டு. அறியாமையே முதன்மையான மலம், பிக்குகளே, அந்த மலத்தையும் ஒழித்துவிட்டு மாசற்றவராக விளங்குவீர்” (ராமசாமி., ப. 1996 : 24,25) இந்த அறியாமை என்கிற வித்துதான் பிறப்பை விளையச் செய்கிறது என்பது பௌத்த மெய்யியல் அடிப்படை. இதைக் குறள், “மருளானாம் மாணாப் பிறப்பு” என்று அப்படியே வெளிப்படுத்திருப்பது வியக்கத்தக்கது. அந்த அறியாமை எப்படிப்பட்டது என்பதை, “பொருளல்ல வற்றைப் பெருளென்றுணரும்” என்கிறது வள்ளுவம். வள்ளுவம் கூறும் ‘பொருளல்லவை யாவை’யென்றால் அறியாமை என்கிற மருளை உருவாக்கும் சிந்தனையோட்டங்களாகும். அதாவது, பிறப்பை உருவாக்குவதற்கான சங்கிலித்தொடர் இயக்க உணர்வுகள் ஆகும். இவற்றினால் உண்டாகும் மறுபிறப்பும் அதன் அளவாய்த் தோன்றும் இதர துன்பச் சுழற்சிக் கூறுகளும் பொருளல்லவை. இவற்றை நற்காட்சியைக் கொண்டு கண்காணிக்கின்றனர். இக்கருத்தை வலியுறுத்தும் பகுதி இதோ: “தவறில்லாதவற்றைத் தவறானவை என்றும் தவறுள்ளவற்றைத் தவறில்லாதவை என்றும்” நினைக்கின்றவர்கள், தீக்காட்சியுடையவர்கள். ஆகையினாலே, நரகம் அடைகிறார்கள். தவறானவற்றைத் தவறு என்றும் தவறில்லாதவற்றைத் தவறன்றென்றும் அறிகிறவர்கள், நற்காட்சி யுடையவர்கள் ஆகையினாலே சுவர்க்கம் அடைகிறார்கள். (சோமானந்தா பிக்கு : 176) இதே கருத்தின் அடிப்படையைக் கொண்டு விளங்கும் புத்தரின் மற்றொரு கூற்று வருமாறு : “உண்மையை உண்மையில்லையென யார் எண்ணுகிறார்களோ அவர்களும், உண்மையின்மையை உண்மையென்று மதிப்பவர்களும் முரணான கோட்பாட்டை மேற்கொள்ளும் கருத்து உடையவராதலால் மெய்யான பயனை அடையவே இயலாது. ஆனால், உண்மையினை உண்மையென்று அறிதலும், பொய்மையைப் பொய்மையென்று அறிதலும், பொய்மையைப் பொய்மையெனப் புரிதலுமே நேர்மையான முழுநிறைவையும் மெய்யான பலனையும் தரும்” (அம்பேத்கர்., பி.ஆர். 1994 : 155) ஆக, அறியாமையே பிறப்புக்கான மூலம் என்ற கருத்திலும், அவ்வறியாமை பொருளல்லவற்றைப் பொருளென்று உணரும் தன்மையது என்ற கருத்திலும் பௌத்த மெய்யியலும், வள்ளுவமும் ஒத்த சிந்தனையோட்டத்தைக் கொண்டிருப்பது உறுதியாகிறது. பொருளல்லவற்றைப் பொருளென்று உணர்தல் அறியாமை. ஆதலால், “பொருளல்லவற்றைப் பொருளென்று உணர்தல் – உள்ளதன் நுணுக்கம் உணர்தல்” மெய்ப்பொருள் காண்பதாகும். இம் மெய்ப்பொருள் கண்டார்க்குப் பிறப்புக்கான மூலகாரணமான அறியாமை நீங்கும். அறியாமை நீங்கிச் செம்பொருட் செயன்மைகளைக் கைக்கொள்ள, “மற்று ஈண்டு வாரா நெறி” புலனாகும். இக் கருத்துக்களைக் கொண்ட குறட்பாக்கள் வருமாறு: “எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” (கு. 36 : 5) “கற்றுஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்று ஈண்டு வாரா நெறி” (கு. 36:6) “பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு” (கு. 36 : 8) பௌத்தம் உண்மைத் தேட்டத் தடுப்புகளாக விளங்குபவற்றை “ஆஸவங்கள்” என்று குறிப்பிடுகிறது. ஆஸவங்கள் எனப்படுபவை நால்வகைக் குற்றங்களாகும். ஆவை 1. காமம் அல்லது சிற்றின்ப ஆசை, 2.பவம் (பிறப்பு) 3. திட்டி (பொய்க்காட்சி), 4. அவிச்சை (அறியாமை) ஆகியவைகளாகும். வள்ளுவமும் இவற்றையே குறிப்பிட்டிருப்பதைக் கீழ்க்காணும் ஒப்புமை உணர்த்தும்: வள்ளுவம் பௌத்தம் காமம் வெகுளி - காமம் மருளானாம் மாணாப் பிறப்பு - பவம் (பிறப்பு) பொருளல்லவற்றைப் பொருளென்று உணரும் - திட்டி (பொய்க்காட்சி பிறப்பு என்னும் பேதைமை - அவிச்சை (அறியாமை) மேற்கண்ட ஒப்புமைப் பகுதியிலிருந்து பௌத்த மெய்யியல் பின்புலத்தைத் தன்வயப்படுத்திக் கொண்ட வள்ளுவம் தனக்கென தனித் தடத்தையும் அமைத்துக் கொண்டமை புலனாகிறது. இதைப்போலவே தீக நிகாயம், பிரம்மஜால சூத்திரத்தில் காணப்படும் புத்தரின் கூற்றான, “பிறர் உன்னை பழித்தாலும், நீங்கள் அவர்கள் கூறுவது தவறு என்பதை எடுத்துக்காட்ட வேண்டும். இந்தக் காரணத்தால் இது பொய் என்றும், எம்மிடம் காணப்படுவதன்று என்றும் தெளிவுறுத்த வேண்டும்”. (ஜகநாதராஜா., மு.கு.1988 : 20) என்பதன் உள்ளீட்டுப் பொருண்மையை, “எப்பொருள் யார்யார்வாயக் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்ற குறள் வெளிப்படுத்தியிருப்பதும் இங்கு கருதத்தக்கது. இக் குறளின் கருத்தை இன்னும் தெளிவாய் எடுத்துக்காட்டும் பகுதி அங்குத்தரநிகாயத்தில் இடம்பெற்றுள்ளது. அப்பகுதி பின்வருமாறு : “ஒரு விஷயத்தைக் கண்ணால் கண்டு கருத்தால் ஆராய்ந்து, அது பகுத்தறிவுக்குப் பொருத்தமாயும் சகலருக்கும் நன்மை பயக்கக் கூடியதாகவும் இருந்ததால், அதை ஏற்றுக் கொண்டு அதன்படி நடக்கவும்”. (ராமசாமி, ப.1999 : 47) வள்ளுவ மெய்யுணர்தலில் பௌத்த பன்னிரு சார்பு நீக்கம் பொருளல்லவற்றைப் பொருளென்று உணரும் பிறப்புக்கான மூலகாரணமாக விளங்கும் அறியாமையிலிரு;நது நீங்குதலை முதல் எட்டுக் குறட்பாக்களில் மெய்யணர்தல் அதிகாரம் விவரிக்கிறது. ஒன்பதாவது குறளோ அறியாமையிலிருந்து கிடைக்கும் இதர சார்புக் கூறுகளையும் உணர்த்தி நிற்கிறது. அக்குறள் பின்வருமாறு : “சார்புஉணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றுஅழித்துச் சார்தரா சார்தரு நோய்” (கு. 36 : 9) அறியாமையிலிருந்து தொடங்கி துன்பத்தை விளைவிக்கும் பிறப்புவரை சங்கிலித் தொடர்போல ஊடாடிநிற்கும் அச்சார்புகள் யாவை என்பதை வள்ளுவம் வெளிப்படையாக விவரிக்கவில்லை. ஆனால், தொடக்கப் புள்ளியான அறியாமையையும், முற்றுப்புள்ளியான பிறப்பையும் வள்ளுவம் குறிப்பிட்டுள்ளது. இதர சார்புக் கூறுகளை வள்ளுவம் தோன்றிய காலத்து மக்கள் உய்த்துணர்ந்து கொள்வர் என்பதாலும் குறள்வடிவம் அவற்றை விவரிக்க இடம் கொடுக்கவில்லை என்பதாலும் கூறவில்லை போலும். வுள்ளுவம் தோன்றிய காலக்கட்டத்தில் தமிழ்ச் சமூகத்தில் மேலோங்கியிருந்த சமயங்களுள் பௌத்தம் குறிப்பிடத்தகுந்தது. எனவே, அதன் மெய்யியல் கருத்தியல் தாக்கம் திருக்குறளில் வெளிப்பட்டிருப்பது இயல்பானதே. இக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் “சார்பு” என்பது யோக நெறியையே குறிப்பிடுவதாக எழுதியுள்ளார். அவரே இதனை ஆருகதர் “உவர்ப்பு” என்ப என்றும் குறிக்கிறார் (பரிமேலழகர். உரை : 146 – 147). எவை எவை சார்புடையனவோ அவற்றின் சார்பிலிருந்து நீங்கிநின்று, பிறகு அதனை அழித்தால் துன்பங்களின் மூலமான பிறப்பைச் சாராமல் ஒருவன் வாழலாம். இந்த மெய்யுணர்தலை அறிந்தால் அவா அறுத்து வீடுபேறடையலாம் என்பது வள்ளுவத்தின் உட்கிடை. இதையேதான் பௌத்த மெய்யியலும் உணர்த்தி நிற்கிறது என்பது இங்கே உணரற்பாலது. காமம், வெகுளி, மயக்கங்களின் அழிவு : துன்ப நீக்கம. மெய்யுணர்தலுக்கு முதன்மையான தடையாக இருப்பது அறியாமை. ஆறியாமையை உருவாக்குபவை காமம், வெகுளி, மயக்கம் ஆகியவை. எனவே, இம்மூன்றும் ஒரு மனிதனிடமிருந்து நீங்கிவிட்டால் அறியாமை தானாக நீங்கிவிடும்: அறியாமை நீங்கிவிட்டால் துன்பம் நீங்கிவிடும் என்ற தருக்க இயைபை வள்ளுவமும் பௌத்தமும் ஒரே நேர்க்கோட்டில் அமைத்துக் கொண்டுள்ளமை தெளிவாகிறது. பயன்பட்ட நூல்கள் 1. அம்பேத்கர். பி.ஆர். புத்தரும் அவர் தம்மமும், இந்திய அரசு வெளியீடு, 1994. 2. அயோத்திதாசப் பண்டிதர்.,க.புத்தரது ஆதி வேதம், தலித் சாகித்ய அகாதமி, சென்னை, 1999 3. நெடுஞ்செழியன்., க. தமிழ் இலக்கியத்தில் உலகாயதம், மனிதன் பதிப்பகம், திருச்சி, 2000 4. சோமானந்த பிக்கு., தம்மபதம், மகாபோதி சொசைட்டி, சென்னை. 5. பரிமேலழகர் உரை., திருக்குறள், கழகப் பதிப்பு, 1986 6. ராமசாமி., ப புத்தர் போதனைகள், சந்தியா பதிப்பகம், சென்னை, 1996 7. வெள்ளைவாரணம்., தா.ம. திருக்குறள் உரைக்களஞ்சியம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1993 8. ஜகந்நாத ராஜா., மு.கு.தீகநிகாயம், முல்லை நிலையம், சென்னை, 1988

அறம், தருமம், நீதி : இந்தியத் தத்துவ மரபும் இலக்கியத் தமிழ் மரபும்

வரலாற்றுத்துறை மா.மன்னர் கல்லூரி(த), புதுக்கோட்டை அறம், தருமம், நீதி குறித்த சங்க இலக்கியம், கல்வெட்டு ஆவணப் பதிவுகள் செம்மொழிக் கருத்தரங்கம் அறம், தருமம், நீதி : இந்தியத் தத்துவ மரபும் இலக்கியத் தமிழ் மரபும் முனைவர் சு.மாதவன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி (தன்னாட்சி), புதுக்கோட்டை-622 001, பேச : 97513 30855 மின்னஞ்சல் : semmozhi_200369@yahoo.com semmozhi2002@gmail.com இந்தியப் பொதுப்புத்தியில் அறம், தருமம், நீதி எல்லாம் ஒன்றே என்னும் புரிதல் உள்ளது. அவ்வாறே, தமிழியப் பொதுப் புத்தியிலும் உள்ளது. ஆனால், இவை ஒவ்வொன்றுக்கும் தனித்த சிறப்புக் கருத்தியல்கள் உள்ளன. இச் சொல்லாடல்கள் பயனுறும் இடம், சூழல், விளைவு ஆகியவற்றுக்கேற்ப பொருள் வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. இத்தகைய சிறப்பியல்புகளை இவை கொண்டிருக்கும் அதேநேரத்தில் இவற்றுக்கிடையேயான பொதுவியல்புக் கூறுகளும் இயைபுக் கூறுகளும் இல்லாமல் இல்லை என்பதும் நோக்கத்தக்கது. ‘அறம்’ என்பது நெறி, வழி, செவ்விய இயற்கைப் போக்கு என்பன போன்ற பொருண்மைகளில் தமிழிலக்கியப் பெரும்பரப்பில் கையாளப்பட்டு வருகிறது (அறநெறி, அறச்செயல் போல்வன). ‘தருமம்’ என்பது ‘அறம்’ என்ற சொல்லுக்கான பதிலியாகச் சில இடங்களிலும் இந்திய மெய்யியல் பள்ளிகளின் பயன்பாட்டளவில் தனித்த தனித்த பொருண்மை கொண்டதாகப் பல இடங்களிலும் கையாளப்பட்டு வருகின்றது (தருமராசன், தர்ம காரியம், தருமச் செயல், தரும நீதி, தர்ம நெறி போல்வன). ‘நீதி’ என்பது சமூக வழக்கில் ‘சட்ட முறைமை’ என்னும் பொருளிலும் இலக்கிய வழக்கில் ‘அறநெறி’ என்னும் பொருளிலும் பெருவாரியாகக் கையாளப்பட்டு வருகிறது (நீதி இலக்கியங்கள், நீதிநெறி, அரசநீதி போல்வன). தமிழில் ‘அறம்’ என்ற சொல் தோன்றுவதற்கு முன்பு, பழமொழி, முதுமொழி, மூதுரை, வாயுறை வாழ்த்து, நன்று, நன்றி, நன்மை, நல்லது, முறை, முறைமை, நயம், நன்னெறி, நெறி, ஒழுக்கம், கடமை போன்ற சொற்கள் கையாளப்பட்டு வந்துள்ளன. இச்சொற்கள் பலவும் சங்க இலக்கியங்களில் பயன்கொள்ளப் பெற்றுள்ளன. இவைபோன்ற சொற்களோ ‘அறம்’ என்ற சொல்லோகூட இடம்பெறாமல் பலவிடங்களில் அறநெறி உணர்த்தப்பட்டுள்ளது. அறம், அறன், அறநெறி. அறவோன் போன்ற பல சொற்பயன்பாட்டின்மூலமும் சங்க இலக்கியங்களில் ‘அறம்’ என்ற கருத்தாக்கம் பரவலாக இடம்பெற்றுள்ளது. ‘தருமம்’ என்ற சொல் ‘தர்மா’ (Dharma) என்ற வடமொழிச் சொல்லின் தமிழ் வரிவடிவமாகும். இச்சொல், கொள்கை, கோட்பாடு, சமய விதிகள், சமயம், நெறி, இயல்பு, கடமை, தொழில்முறை போன்ற பல பொருண்மைகளில் கையாளப்பட்டு வருகிறது. இந்தியச் சமய, மெய்யியல் பள்ளிகளின் பயன்பாட்டில் ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு மெய்யியலும் அவர்களுக்கேயுரித்தான சிறப்புப் பொருண்மைகளில் பயன்கொள்ளப்பட்டு வந்துள்ளது. வேதநெறியில் ‘வருணாசிரம தர்மம்’ என்றும் பௌத்தநெறியில் ‘பௌத்த தர்மம்’ என்றும் சமண நெறியில் பொருளின் இயல்பு ‘தர்மம்’ என்றும் வாழ்வின் இயல்பு ‘புண்ணியம்’ என்றும் வேறுபல சமய – மெய்யியல் புரிதலில் அவர்களுக்கே உரித்தான சிறப்பார்ந்த பொருண்மைகளிலும் இச்சொல் புழங்கப்பட்டு வந்துள்ளது. ‘நீதி’ என்னும் சொல்லும் வடமொழியிலிருந்து தமிழுக்கு கி.பி.6 நூற்றாண்டு வாக்கில் வந்த சொல்லாகும். இதுவும் மனுநீதி, அரசநீதி, நீதிநெறி போன்ற பல்வேறு பொருண்மைகளில் கையாளப்பட்டுவருகிறது. வடமொழி வழக்கில் பெரும்பாலும் ‘அரசநீதி’ என்னும் பொருளில் கையாளப்பட்டுவரும் இச்சொல், தமிழ் வழக்கில் பெரும்பாலும் ‘ஒழுக்க நெறி’ என்னும் பொருளிலேயே கையாளப்பட்டு வருகிறது. ‘அறநெறி’ ‘நீதிநெறி’ என்ற சொல்லாடல்களில் இரண்டுக்கும் பொதுவாய் ‘நெறி’ என்பது நிற்பதும் அண்மைவழக்கில் ‘சமூகநீதி’ என்னும் பரந்துவிரிந்த பொருண்மையில் கையாளப்பட்டு வருவதும் கண்கூடு. எனவே, அறம், தருமம், நீதி என்பன ஒன்றின் கருத்தியல் வளர்ச்சி ஒவ்வொன்றும் இடம்பெற்றுத் தனித்த சிறப்பியல்புகளையும், குறித்த பொதுவியல்புகளையும் கொண்டு இலக்கியத் தமிழ் மரபிலும் இந்தியத் தத்துவ மரபிலும் வேர்கொண்டுள்ளன எனலாம். மேற்குறித்த நோக்குநிலைகளில் ஆழமான – துல்லியமான ஆய்வுமுடிகளை இக் கட்டுரை முன்வைக்கும். வைதீகத் தத்துவ மரபில் தருமம், நீதி தமிழில் ‘அறம்’ என்ற ஒரேசொல் குறிக்கும் இருபட்டகக் கருத்தியலை எடுத்துரைக்க வடமொழியல் தருமம், நீதி ஆகிய இரு சொற்கள் பயன்படுத்தப் படுகின்றன. இவ் இரு சொற்களும்கூட வைதீக மரபில் குறிக்கும் பொருண்மை வேறு; அவைதீக மரபில் குறிக்கும் பொருண்மை வேறு என்பதையும் நினைவில் கொள்ளல் வேண்டும். வைதீக மரபில் தருமம் என்பது வருணாசிரம தருமத்தை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகிறது. வருணாசிரமத்தைக் கட்டமைத்து நிலைநிறுத்தியது மனுதரும சாத்திரமாகும். அரசியல் தருமத்தைச் சொல்லவந்த அர்த்த சாஸ்திரம்கூட மனுதரும நெறியினைப் பின்பற்றித்தான் நெறிகளை வகுத்துள்ளது. மனுதரும சாத்திரத்தில் தருமம், நீதி வைதீக மரபு மனிதர்களை பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நான்குவகையாகப் பிரித்து அவரவர்க்கென தொழில்தர்மத்தை நியமித்து அத்தொழில்வழிப் பிறப்போரை அந்தந்த வருணத்தார் என வரையறுத்து வலியுறுத்தி வந்தது. எனவே, மனுதருமத்தின் பார்வையில் ‘தருமம்’ என்றாலே வருணாசிரம தர்மம் என்றே பொருள்கொள்ளப்படுகிறது. ‘நீதி’ என்றாலோ வருணாசிரம தர்மத்தின்படிப் பின்பற்றுவதே ‘நீதி’ என்றும் பின்பற்றாமல் இருப்பது ‘அநீதி’ என்றும் பொருள்கொள்ளப்படுகிறது. எனவே, வைதீக மரபில் ‘தருமம்’ எனப்படுவது ‘சட்டம்’ என்ற பொருளிலும் ‘நீதி’ என்பது தருமநெறியில் நிற்பது அதாவது அச்சட்டநெறியைப் பின்பற்றுதல் என்ற பொருளிலும் கையாளப்படுகிறது என்பது தெளிவு (மநுதர்ம்ம சாத்திரம், 1990 : 294 -297) பிறப்பின் அடிப்படையில் இவர்இவர் செய்யத்தகுவன, செய்யத் தகாதன என வரையறுப்பது தருமம்; வரையறுத்த நெறிப்படி நிற்பது ‘நீதி’; வரைறுக்கப்பட்ட நெறியினின்று மாறியொழுகுதல் ‘அநீதி’ என்பதே வருணாசிரமதருமப் பார்வையாகும். இவ்வாறு, வரையறுக்கப்பட்டதிலிருந்து மீறிச் செயல்படும் பிராமணனுக்கு ஒரு தண்டனை; பிறர் பிறருக்குப் பிறபிற தண்டனைகளையும் மனுதருமம் கூறுகிறது. தொழிலும்கூட பிராமணன், சத்திரியன், வைசியன் மூவருக்கும் இன்னின்ன தொழில்கள் உரியன என வரையறுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சூத்திரனுக்கு மட்டும் தொழில் சொல்லப்படவில்லை. அவன், பிராமணனுக்கு மட்டும் அடிமைப்பணி செய்துவர வேண்டியதெனக் குறிக்கிறது மனுதருமம். அவைதீக மரபில் தர்மம் /தம்மம் சமண தர்மத்தின் அடிப்படை : அஹிம்மைசயும் மும்மணிகளும் சமண சமயத் துறவிகளும், இல்லற வாழ்வோரும் பின்பற்ற வேண்டிய ஒழுகலாற்று நெறிகளை வரையறுத்துக் கூறுவதே சமண அறமாகும். இச் சமண அறநெறிகள் இந்தியாவின் - உலகின் பல்வேறு சமய நெறிகளிலிருந்தும் முற்றிலும் மாறுபட்ட தன்மை வாய்ந்தனவாய் விளங்குகின்றன. ‘அறம்’ குறித்த சமண வரையறைகளை இங்கு அலசுவது அவசியமாகிறது. ‘அருங்கலச் செப்பு’ கூறியிருப்பதாவது: “அறம் எனில் பொருளின் இயல்பாகும். இங்கே உயிர் இயல்பு அறம் என்படுகிறது.” (அ.செ. 1997 : 21) உயிரை ஒரு பொருளாகக் கருதி, உயிர் உள்ளன (சேதன), உயிர் அல்லன (அசேதன) என்ற பகுப்புகளை உருவாக்கியது. சமணச்செய்யுளில் இவை அனைத்துக்கும் பொருளாக உள்ள எந்த ஒன்றுக்கும் - அவற்றுக்கேயுரித்தான இயல்புகள் உண்டு. அந்த இயல்புகளினின்று மாறுபட்டு நிற்கும் பொருள்களின் இயக்க நிலையை அதனதன் இயல்புநிலைக்கே மீண்டும் கொண்டு வருதலே ‘அறம்’ எனப்படுகிறது. எனவே மானுடமாகிய உயிர்ப்பொருளின் இயக்கநிலையின் இயல்புப்போக்கு அஹிம்சையே என்கிறது சமணம். “அகிம்ஸை அறத்தின் பிராணனாகும்; பிராணன் இல்லாமல் உயிர் இல்லை. கடைக்கால் இல்லாமல் மாளிகை இல்லை, வேர்; இல்லாமல் மரம் நிற்க இயலாது. அதேபோல அஹிம்ஸை, தயை இல்லாமல் ‘அறம்’ எனும் மாளிகை அல்லது மரம் நிலைக்க. இயலாது. தர்மஸ்ய மூலம் தயா, ‘தம்மோ தயா விசுத்தோ’ என்பன ஆசாரியர்களுடைய வாணியாகும். ‘தயை அறத்தின் வேராகும்’ தயையினால் அறம் விளக்கம் பெறுகிறது. எங்கே அஹிம்ஸை தயை இல்லையோ அங்கே அறம் தோன்றுவதில்லை. பிறகு அது காகிதப் பூ போல அறம் என்னும் சொல்லின் போலிவடிவம் ஆகும். அஹிம்ஸா பரமோ தர்ம: “அஹிம்ஸையே மிக உயர்ந்த அறம்” (கல்லக் பார்சுவ கீர்த்தி வர்ணிஜீ., 1998: ஏஐஐ) என்ற சமணப் பேரறிஞர் பூஜ்யஸ்ரீ ஆர்ஜவசாகர் முனிவர் அவர்கள் விளக்கியுரைத்துள்ள கருத்துக்கள் இங்கு கருதத்தக்கன. மானுடகுல வரலாற்றின்படி, தொடக்ககாலச் சமூகம் காய்கனிகளைச் சேகரித்து உண்டு வந்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து, காய்கனிப் பற்றாக்குறை ஏற்படவே ‘மாற்று உணவுச் சேகரம் தேவை’ என்ற நிலையில் விலங்குகளை வேட்டையாட ஆரம்பித்திருக்கிறது. இவ்வாறு விலங்கை இம்சைசெய்து உணவாக்கிய மானுடசமூகம் அதன் உச்சநிலையாக மனிதர்களையும் இம்மைசெய்யும் போக்கை இயல்பாகவே மனிதர்களையும் இம்மைசெய்யும் போக்கை இயல்பாகவே அடைந்திருக்கிறது. இத்தகைய சமூக வரலாற்றுப் போக்கில் இம்சை தொடங்கப்பெற்றதன் காரணம் காய்கனிகளின் பற்றாக்குறையே என்பதால் அப்பாற்றாக்குறையை நீக்கினால் மானுட இயல்பான அஹிம்சை நிலைக்கும் என்பது ஒருதலை. காய்கனிகளின் உற்பத்திக்கு அடிப்படையான உழவுத் தொழிலும் பல உயிர்களின் அழிவுக்குக் காரணமாக இருப்பதால் அத்தொழிலையும் சமணம் புறந்தள்ளுகிறது என்பது மறுதலை. இத்தகைய கருத்துநிலைகளைக் கொண்டிருந்ததால்தான் சமணம் ‘வணிகர்களின் சமயமாக’ வளர்ந்து மிளிர்ந்தது. சமணத்தோடு முற்றமுழுதாக ஒப்புநோக்கத்தக்க வேறொரு சமயம் எதையும் குறிப்பிடுவதற்கான மெய்யியல் இடைவெளியைச் சமணம் கொண்டிருக்கவிலலை. கடுமையான தவமுறைகளைப் பின்பற்றுதல் என்ற நிலையில் சமணத்தோடு நெருங்கத்தக்க சமயம் எதுவுமில்லை என்பது இந்திய மெய்யியல் வரலாறு கண்ட உண்மை. இக்கருத்தை, “மனிதனுடைய மலர்ச்சிக்கு ஜைன தரும ஒழுக்கம் மிகவும் பயனுடையதாகும். அந்தத் தருமம் மிகவும் இயற்கையானது, தனியானது, எளிமையானது, மிக மதிப்புடையது, பிராமணர் மதத்திலிருந்து வேறுபட்டது. இது பௌத்தர்களுடையதுபோல நாத்திகம் அன்று”. (ஆர்ஜவ சாகர முனிவர்,, அ.இ : 354) என்ற டாக்டர் ஏ.கிராநாட் என்பவரின் கருத்தும் வலிவூட்டுவதாக அமைகிறது. மேலும், சமண அறவியலுக்குப் பின்னணியாகவும், அடிப்படையாகவும் உள்ள சமண மெய்யியலின் சாராம்சத்தை அறிஞர் நா.சுப்பிரமணியன் கீழ்வருமாறு தருகிறார்: “உலகப் பொருள்கள் யாவற்றையும் சீவன், அசீவன் என இருவகைப்படுத்தி நோக்குவது சமணம். சீவன் என்பது பொதுவாக உயிரையும் அசீவன் என்பது உயிரல்லாவற்றையும் குறிப்பதாகக் கொள்ளலாம். முற்றறிவுடையதான சீவன், அசீவனின் தொடர்பால் அந்த அறிவை இழந்து துன்புறுகிறது. இத்துன்பத்துக்குக் காரணமாக அமைந்தவை கர்மங்கள். இக்கர்மத் தொடர்பினின்று சீவன் தன்னை விடுவித்துக் கொண்டால் அசீவத் தொடர்பினின்று விடுதலை பெறலாம். அவ்வாறு, விடுபட்ட நிலையில் அது தன் இயல்பான அறிவுமயமான நிலையை எய்திவிடும். இவ்வாறு விடுபடுவதற்குக் கடும் விரதங்களை அனுசரித்து உடலை வருத்திக் கொள்ள வேண்டும். இவையே சமண சிந்தனையின் சாராம்சம்” (சுப்பிரமணியன்., நா.1996 : 20) இக்கருத்துக்களிலிருந்து பிறவிவிடுதலைக்கான படிநிலை வாழ்க்கை ஒழுகலாறுகளைப் பின்பற்ற வேண்டுவதே சமண அறிவியலின் அடிப்படையாக அமைகிறது என்பது தெளிவு. பௌத்த அறவியலில் நால்வகை வாய்மைகள் எவ்வாறு இன்றியமையா தனவாய் விளங்குகின்றனவோ அதுபோல் சமண அறவியலில் மும்மணிகள் இன்றியமையாதனவாய் விளங்குகின்றன. அவை, நற்காட்சி, நல்ஞானம், நல்லொழுக்கம் என்பன. பௌத்தத்தில் குறிப்பிடப்படும் அட்டாங்கமார்க் கத்திலும் இம்மும்மணிகள் இடம்பெற்றுள்ளன. நற்காட்சியினின்று நல்ஞானமடைந்து அதன்வழியிலான நல்லொழுக்கப் பாதையில் நடைபோடுதலே சமண அறவியலின் சாரம்சம். இம்மும்மணிகளின் முழுநிலை வடிவமே சமண அறவியல் எனப்படுகிறது. வீடுபேறடைவதற்கான முயற்சியின்போது கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், மேற்கொள்ள வேண்டிய நோன்புகள் என்பனவாகச் சில உயர்பண்புகள், ஒழுக்கநிலைகள் என்பவற்றைச் சமணம் முன்வைத்துள்ளது. இச்செயன்மைகள் குறித்து அறிஞர் நா.சுப்பிரமணியன் கூறுவன: “நற்கடைப்பிடி, நல்லறிவு, நல்லொழுக்கம் என்பன அணுகுமுறைகள்: அஹிம்சை, பொய்யாமை, கள்ளாமை, பிரம்மச்சரியம், உலகைத்துறத்தல், கற்பு, உளநிறைவு என்பன நோன்புகள். இவற்றுள் பிரம்மச்சரியம், உலகைத் துறத்தல் எனபன துறவுநெறியினர்க்கும், கற்பு, உளநிறைவு என்பன இல்லற நெறியினர்க்குமாகப் பேசப்படுபவை. இவையெல்லா வற்றிலும் முதன்மையானதும் யாவற்றிலும் பரவி நிற்பதுமான நோன்பு அஹிம்சை ஆகும். பிற உயிர்கள் எவற்றுக்கும் தீங்கிழைக்கக் கூடாது என்பதும் இயன்றவரை அவற்றுக்கு நலம் புரிய வேண்டும் என்பதும் அஹிம்சையின் உட்பொருளாகும்”. (சுப்பிரமணியன்., நா.1996 : 20) பௌத்த தம்மம் : சொற்பொருள் விளக்கமும் தம்மத்தின் வேர்களும் பௌத்த அறம் ‘தம்மா’ (னூயஅஅய) என்ற பாலிமொழிச் சொல்லால் குறிப்பிடப்படுகிறது. சிறப்புநிலையில் இச்சொல் பௌத்த அறத்தைச் சுட்டுவதாக அமையினும், பொதுநிலையில் பௌத்த மெய்யியல் முழுமையையும் வெளிப்படுத்துவதாகவும் அமைந்திருப்பது எண்ணத்தக்கது. புத்தரின் அறக்கோட் பாட்டை அர்த்த ஜாலம், தரும ஜாலம், பிரம்ம ஜாலம், திருஷ்டிஜாலம், சங்கிராம அனுத்தா விஜயம் என்ற சொற்களால் சுட்டுகிறது தீக நிகாயம் (1988:33). பொருள் பொதிந்த – உயிரோட்டமான – காட்சித்தன்மையுடைய - இயல்புகளைப் பௌத்த தம்மம் தன்னகத்தே கொண்டுள்ளதை இச்சொற்கள் உணர்த்துகின்றன. ‘தம்மா’ என்ற சொல்லுக்கு “யு னுiஉவழையெசல ழக டீரனனாளைஅ” கூறியுள்ள விளக்கம் கீழ்வருமாறு : “தம்மா (பாலி): தர்மா (சம்ஸ்கிருதம்) – பௌத்தம். பௌத்தத்தில் அடிக்கடி வருவதாகவும் பௌத்த மெய்யியலின் பல்வேறு இடங்களில், தொடர் புடையதாகவும் இச்சொல் விளங்குகிறது. இச்சொல்லுக்குப் பொதுப்படையான ஒரு பொருள் இல்லை. ஆங்கிலத்தில் இதற்குச் சமயம், உண்மை, கொள்கை, நேர்மை, நற்குணம், அணு, தன்மை, இயற்கை, சட்டம், முறைமை, சொத்து. பிரத்தியட்சப்பொருள் எனப் பல பொருள்கள் உண்டு. இவற்றில் சில பொருள்கள் பொதுவாக இந்தியச் சமயங்கள் சார்ந்தனவாகும். மற்றவற்றைப் பௌத்தத்தில் (எ.டு) காணலாம். சம்ஸ்கிருத வேர்ச்சொல்லான “த்ர்” என்பதற்கு, ‘சுமந்திருத்தல்’. ‘ஒர் அடித்தளம் அமைத்தல்’, ‘உயர்த்திப் பிடித்தல்’, ‘ஆதரவு தரல்’ போன்ற பல பொருள்கள் உண்டு. புத்தகோஷர் தம் மொழிப்புரையில் ‘தம்மா’விற்கு நான்கு வகையான பொருள்களைக் கூறுகிறார்: 1) நன்னடத்தையுடன் தொடர்புடையது, 2) அறநெறி சார்ந்த கருத்துரை, 3) புனித நூல்களிலுள்ள, புத்தர் சொன்ன கொள்கை, 4) பிரபஞ்சச் சட்டம். தம் தம்மசங்கணி பொழிப்புரையில் வேறுவித நான்கு பொருள்களை அவர் தருகிறார்: 1) கொள்கை 2) நிலை 3) அறத்தன்மை 4) அதிசய நிகழ்வு. இதனடிப்படையில் நோக்கும்போது பௌத்தத்தில் இதன் அடிப்படைப் பொருள்களாக கொள்கை, நன்னடத்தை, நிலை, அதிசய நிகழ்வு ஆகியவற்றைக் கூறலாம். இவற்றுள் முதன்மையிடம் பெறுவது கொள்கை. இதன்மூலமாக புத்தரின் தம்மம் (தர்மம்) புரிந்துகொள்ளப்படுகிறது. இது புத்த திரிரத்னங்களான புத்தம், தம்மம், சங்கத்தில் ஒன்றாகும். இங்கு தம்மம் என்பது புத்தரால் அறிவிக்கப்பட்ட உலகளாவிய பேருண்மையைக் குறிக்கும். தம்மம் என்பது புத்தருக்கும் முந்தையதாகும். தம்மாவின் வரலாற்று உருவகம் மற்றும் வெளிப்பாடே புத்தர் எனலாம். (திரிகாயக் கொள்கை), புத்தர்கள் அவ்வப்போது தோன்றுவர். அவர்கள் வருவர், போவர். ஆனால், தம்மம் என்றும் இருக்கும். இந்நிலையில் தம்மம் என்பது கிரேக்கக் கருத்துருவான ‘லோகோஸ்’ என்பதுடன் பொருந்திவருவதாகும்.” (காண்க : மத்யாமிகா) (வுசநஎழச டுiபெ., 1981 : 80-81) தீக நிகாயத்தில் உள்ள ‘தம்ம சக்கப் பவத்தன சூக்தம்’ என்ற பகுதிக்கு விளக்கம்தரும் ரைசு டேவிட்சு, “தம்மம் எனப்படும் அறம் (தருமம்) என்ற சொல் வெறும் சட்டவடிவத்தைச் சுட்டவில்லை. மாறாக, வேறு எம்மொழியிலும் மொழிபெயர்க்க முடியாத உண்மை – நேர்மை ஆகிய உயர் அறங்களைச் சுட்டி நிற்பதாகும். சுருங்கக்கூறின், தம்மம் என்பது புத்தரின் கோட்பாட்டை முழுமையாக உணர்த்தி நிற்கின்றது” (மேற்கோள், நெடுஞ்செழியன்., க.1988 : 95) என்று கூறியிருப்பது மிகவும் பொருந்துவதாக உள்ளது. புத்தரால் தம்மம் என்று அழைக்கப்படுவது அடிப்படையிலேயே மதம் என்று அழைக்கப்படுவதிலிருந்து வேறுபடுகிறது (அம்பேத்கர்., பி.ஆர்.1994 : 276).தம்மம் என்பது சமூக சம்பந்தப்படுவது அடிப்படையாகவும் சாராம்சத்திலும் தம்மம் சமூகவயப்பட்டது (அம்பேத்கர்.,பி.ஆர். 1994 : 277).அது தான் தோன்றிய காலம்வரையில் வளர்ந்துவந்த சமூக நிலவரங்களை முற்றிலுமாக மாற்றுகிற புதியதொரு கோட்பாடாக உருவாகியது என்பது தெளிவு. இவ்வாறு, சமூக மாற்றத்தைத் தன் இலக்காகக் கொண்ட தம்மம் தன் விளக்க முறையில் காரண – காரிய இயைபுகளையும் முரண்களையும் தெளிவாக ஆராய்ந்து அறிவித்து ஆற்றுப்படுத்துவதாக உள்ளது. இந்தவகையில் அறிவுத் தேட்டத்தின்வழியில் உண்மைத் தேட்டத்தையும், அதன்வழி நிப்பாணம் அடைவதற்குரிய படிநிலைகளை விளக்குவதையும் தம்மம் தன் பொருண்மைக் கூறுகளாகக் கொண்டுள்ளது. நம்பிக்கை, இலட்சியம் என்ற இரண்டு பொருண்மைகளைத் தம்மம் தனது வேர்களாகக் கொண்டுள்ளது. நம்பிக்கை என்பது மனிதகுலத்தின் அனைத்துத் துன்பங்களுக்கும், பிரச்சினைகளுக்கும், நோய்களுக்கும் முடிவுகட்டுவதற்கான வழிமுறைகளைத் தம்மம் செயல்பாட்டளவில் போதிக்கிறது என்பதில் உறுதியாய் இருப்பது. இலட்சியம் என்பது துன்பங்களின் தோற்றுவாயாய் உள்ள அவற்றின் மூலவேர்களை அறியாமல் இருக்கும் அறியாமையை நீக்குவது. தம்மத்தின் வேர்களாய் விளங்கும் இவற்றைப் பற்றிப் புத்தர் கூறுவதாவது: “என் தம்மம் தன்னில் நம்பிக்கை, இலட்சியம் இரண்டையுமே கொண்டதாயுள்ளது” . “அதன் இலட்சியம் அவிஜ்ஜாவை நீக்குவதாகும் அவிஜ்ஜா என்பதற்குத் துன்பத்தின் இருப்பை அறியாமை என்று நான் பொருள் கொள்ளுகிறேன்”. “அதில் நம்பிக்கை இருக்கிறது. ஏனெனில் அது மனிதகுலத் துன்பத்திற்கு முடிவு கட்டுவதற்கான வழியையும் காட்டுகிறது”. (அம்பேத்கர்., பி.ஆர்., 1994 : 112) அவிஜ்ஜா எனப்படும் அறியாமையைப் போக்கித் துன்பத்தின் இருப்பையும் அவற்றின் மூல காரணங்களையும் அறிந்துகொண்டு துன்பநீக்கவழிகளெனப் பௌத்தம் போதிக்கும் செயன்மைகளைக் கையாண்டு நிப்பாணம் என்னும் பிறவாப் பெருநெறி உய்வதையே பௌத்த தம்மம் வலியுறுத்துகிறது. இலக்கிய தமிழ் மரபில் அறம் அறம் என்ற சொல்: விளக்கம் அறம் என்ற சொல்லுக்குக் கடமை, நோன்பு, தருமம், கற்பு, இல்லறம், துறுவறம், நல்வினை, அறநூல், அறக்கடவுள், தருமதேவதை, தீப்பயணுண்டாக்குஞ்சொல் ஆகிய பொருள் விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன(கழகத் தமிழ் அகராதி., 1985 : 59). ‘அறு’ என்னும் வினைச்சொல் அடியாகப் பிறந்ததே ‘அறம்’ என்னும் சொல்லாகும். ‘அறு’ என்னும் அடிச்சொல்லிற்கு ‘அறுத்துச் சொல்’, வழியை உண்டாக்கு’, ‘உருவாக்கு’இ ‘தூண்டி’, ‘வேறுபடுத்து” என்ற பலவகைப் பொருள்கள் வழங்கி வருகின்றன. ‘அம்’ எனும் தொழிற்பெயர் விகுதி சொல்லமைப்பியல் ஆராய்ச்சியின் அடிப்படையில், மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்கமுறைகளின் தொகுதியே-முழுநிறை வடிவமே – அறம் என்று கூறுவர்(மேலது., 23). மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்டதோடன்றி, அவ்வக்காலத்தில் ஆளுவோர் மற்றும் சமயங்கள் வகுத்துக் கொடுத்தவையும் ‘அறம்’ எனப்பட்டன என்பது கருதத்தக்கது. ‘அறம்’ என்ற சொல் தோன்றுவதற்கு முன்பும் பின்பும் இச்சொல்லைக் குறிக்கும் பல சொற்கள் வழக்கத்தில் இருந்தன. அவை பழமொழி, முதுமொழி, மூதுரை,வாயுறை வாழ்த்து, நன்று, நன்றி,நன்மை, நல்லது, முறை, முறைமை, நயம், நன்னெறி, நெறி, ஒழுக்கம், கடமை, புண்ணியம், ஈகை, அறக்கடவுள், சமயம் ஆகியவையாகும். திட்டவட்டமான அல்லது நுட்பமான பொருள் வேறுபாடுகள் இருப்பினும், இச்சொல்லிற்கான பொருள்மீட்சியை மேற்குறித்த சொற்கள் தெளிவுபடுத்துகின்றன. ‘பிற்காலத்தில் வடமொழிக் கலப்பால் ‘நீதி’ என்ற சொல்லும் வேரூன்றியது. இச்சொல் கி.பி.ஆறாம் நூற்றாண்டு அளவிலேயே தமிழ்மொழியில் இடம்பெற்றது என்பர்(மேலது., 1977 : 16). அறம், நீதி என்ற இவ்விரண்டு சொற்களும் அறநெறி, நீதிநெறி என்றவாறு அமைவதிலிருந்தே இரண்டுக்குமான பொதுமைப் பண்பை அறியமுடியும். நம்முடைய முன்னோர்கள் ‘அறம்’ என்ற சொல்லிற்குத் தந்துள்ள விளக்கத்தோடு ‘எதிக்ஸ்’(நுவாiஉள) என்னும் ஆங்கிலச் சொல்லிற்குத் தரப்படும் பொருள் விளக்கம் மிகவும் பொருந்துவதாக இருக்கிறது. ‘இச்சொல் எதோசு’ (நுவாழள) என்னும் கிரேக்க வேர்ச்சொல்லிருந்து தோன்றியது. இவ் வேர்ச்சொல் முதலில் பழகிப்போன நடத்தை, வழக்கம், மரபு என்னும் பொருள்களை உணர்த்திவந்தது. நாளடைவில் ‘எதிக்ஸ்’ என்பது ‘ஒழுக்கத்தைப் பற்றிய அறிவியல் கலை’ என்று போற்றப்படும் நிலையை அடைந்துள்ளது(மேலது., 1977 : 24-25). மேற்கண்ட சொற்பொருள் விளக்கத்திலிருந்து தனிமனிதன், சமூகம், சமயம், அரசு இவற்றிற்கான ஒழுகலாறுகளை ‘அறம்’ என்றனர் என்பது தெளிவாகும். அறம் என்ற கருத்தாக்கம்;; மனிதகுல வரலாறு அவ்வப்போது பல குழப்பங்களைச் சந்தித்து வருகிறது. அனுபவத்திலிருந்து பல நெறிகளை உருவாக்கிக்கொண்டு அவைகளிலிருந்து மீண்டுவருகிறது. மனிதர்கள் ஒன்றுசேர்ந்து வேட்டையாடியபோது ஒலிக்குறிப்புகளின்மூலம் செய்தியைப் பகிர்ந்துகொண்டனர். அது வேட்டைக்கான நல்ல சூழ்நிலையை; வழியை உருவாக்கிக் கொடுத்தது. பின்னர், அவ் ஒலிக்குறிப்புகளிலிருந்தே மொழி உருவாகி வளர்த்து. மொழி உருவானதற்குப் பிறகுதான் மனித வாழ்க்;கை குறிப்பிடத்தக்க மேன்மையை அடைந்தது. வேட்டையில் ஒலி பெற்ற இடத்தை மொழி பெற்றதும் வழிகளில் தெளிவு ஏற்பட்டுச் ‘செயல்நெறி’ உருவானது. மேலும் மேலும் நுணுக்கமாக வளர்ந்தது. இச் செயல்நெறி வாழ்க்கை அமைப்பிலும் ஏற்பட்டது. இதனை ‘ஒழுக்கநெறி’ என்றனர்;. ‘ஒழுக்கம’; ‘ஒழுகு’ என்னும் சொல்லிற்கு ‘இடையறாது கடைப்பிடித்தல்’ என்பது பொருள். இடையறாது நீர் ஒழுகுவதை ‘ஒழுக்கு’ என்று கூறுவதைப்போல் வாழ்க்கையில் உயர்ந்தவையெனக் கருதப்படும் நெறிமுறைகளை எக்காலத்தும், எவ்விடத்தில் இடையறாது மேற்கொண்டொழுகுவதையே ‘ஒழுக்கம்’ என்பர்(திருநாவுக்கரசு., க.த. 1977 : 20 ). ஒழுகலாறாகிய செயலுக்கு அடிப்படையாக இருப்பது எண்ணமாகும். எண்ணம் தூய்மையாக இருந்தால்தான் சொல்லும் செயலும் தூய்மையாக அமையமுடியும். எனவே, எண்ணம் தூய்மையாக இருக்க வேண்டுமானால் எண்ணத்தின் எழுச்சிக்கும் நிலைக்களனாக உள்ள மனம் மாசு இல்லாததாக இருக்கவேண்டும். மனம் மாசற்றுத் தூய்மையாக இருக்கும் நிலையே ‘அறம்’ எனப்படும்(மேலது., 26). திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர், ‘அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழித்தலுமாம். அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படும். அவற்றுள் ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரியம் முதலிய நிலைகளில் நின்று அவ்வவற்றிற்கு ஓதிய அறங்களில் வழுவாது ஒழுங்குதல்’(மேலது., 23) என்று விளக்கியுள்ளார். இதில் மனு,வருணத்தார், பிரமசரியம் என்பவற்றை வலியுறுத்துவதால் வைணவச் சார்புடன் திருக்குறளை அடக்க முயற்சிக்கிறார் என்பது தெளிவாகிறது. முன்னாளில் வாழ்ந்த சான்றோர்கள் பலர் அவர்கள் உலக வாழ்வை உற்றுநோக்கி நுணுகிக் கண்டதை உன்னிப்பாகச் சிந்தித்து, மானிட நடத்தையின் நெறிமுறைகளைத் தேர்ந்து தெளிந்தனர். அவை பழமொழிகளாகவும், நீதி ஓதும் குட்டிக் கதைகளாகவும் (Pயசயடிடந) வடிவம் பெற்றன. அனுபவ மெய்ம்மைகளின் பெட்டகமாக ஒளிர்ந்த அவை, எல்லா நலமும் பெற்று இன்பமாய் வாழ்வதற்கு ஏற்ற வழிகாட்டியாக அமையும் என்று அச் சான்றோர் நம்பினர். ‘இந்தச் சான்றோர் நெறிக்கு அடிப்படையாகத் துலங்கியது ஒரு நம்பிக்கை, என்றுமுளதாகிய முறைமை ஒன்று -இறைமைக்கு உரியது - இந்த உலக வாழ்வை இயக்குகிறது என்பதே அது(இராமகிருஷ்ணன்.,எஸ்.1980 : 23) என்ற கருத்தும், ஆயிரத்தெழுநூறு ஆண்டுகட்கு முன்பு ரோமாபுரியில் இயற்றப்பட்ட ஜஸ்டீனியன் சட்டத் தொகுப்பில் (ஐளெவவைரவநள ழக துரளவinயைn) ‘இயற்கை நெறியாகிய அறம் இறையாற்றலால் தோன்றியது எல்லா நாட்டினராலும் பொதுவாகப் போற்றிக் காக்கப்படுவது; என்றும் மாறாத நிலைத்திருப்பது (மேலது., 1977 : 31) என்ற கருத்தும், வாழ்க்கையிலிருந்து தோன்றிய நெறியே அறநெறி என்பதை மறந்து அதற்கு இறைத்தன்மையையே உருவாக்குகிறது. இத்தகைய பின்னணியில் தோன்றியதே ‘அறம்’ என்ற கருத்தாக்கமும் கோட்பாடுமாகும். ‘ஒரு மனிதன் சமூகத்தைச் சேர்த்து வாழ்வதற்கும் அல்லது தனியே நின்ற தனிமனிதனாக இயங்குவதற்கும் அத்தகைய மனிதனுடைய பண்புநலன்களை உருவாக்கிவைக்கும் குறிக்கோள்களுக்கும், நோக்கங்களுக்கும், செல்வாக்குகளுக்கும், நிலையங்களுக்கும், ‘அறம்’ என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. நேர்மையான வாழ்க்கை வாழ்வதற்குரிய சட்டமாக அறம் விளங்குகிறது. அதை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதன் பயனாக இம்மையில் இன்பமும் மறுமையில் வீடுபேறும் அடைய முடியும் என்று நம் முன்னோர்கள் நம்பினர். அது ஒழுக்க இயல், சமயம் ஆகிய இரண்டும் இணைந்த ஒன்றாகக் காணப்படுகிறது. தனிமனிதனுடைய உரிமைகளும், கடமைகளும், சமூக இணைப்பும்,பழக்கவழக்கங்களுக்கும், விருப்பு-வெறுப்பு என்னும் இயல்புகளுமாகிய அனைத்து அறத்தின் கோட்பாட்டினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன(மேலது., 1977 : 48-49). என்றாலும், இவ் அறக்கோட்பாட்டை உருவாக்கவதும், வழிநடத்துவதும் சமூகத்தின் பொருளாதார உறவுமுறைகளே என்பதை, ‘அரசியல், நீதி, மெய்யியல், மதம், இலக்கியம், கலை ஆகிய எல்லா அம்சங்களின் வளர்ச்சியும், பொருளாதார வளர்ச்சியை அடித்தளமாகக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த மேல் கட்டுமானத்து அம்சங்கள் எல்லாம் சேர்ந்து ஒன்றின்மேல் ஒன்று வினையையும், எதிர் வினையையும் விளைவித்துக் கொண்டிருப்பதோடு பொருளாதார அடித்தளத்தின் மீதும் வினைப்படுகின்றன( பாலசுப்பிரமணியம்., 1987 :60) என்ற கருத்து வெளிப்படுத்தும். இவ்வாறு பொருளாதார வளர்ச்சியை அடித்தளமாக வைத்தே மனிதனின் அனைத்து வெளிப்பாடுகளும், செயல்பாடுகளும், கோட்பாடுகளும் அமைகின்றன. ஆகையால் பொருளாதார வளர்ச்சியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்போர் கருத்துக்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றனர். பொருளாதார வளர்ச்சியால் சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களை நெறிப்படுத்துவதே ‘அறம்’ என்பதன் தலையாய நோக்கமாக அமைகிறது. இந்நோக்கம் தெரிந்தோ தெரியாமலோ சில நேரங்களில் ஆள்வோர்க்குச் சாதகமானதாய் அமைந்துவிடுகிறது. எனினும், சமூக வளர்ச்சியில் அறம் என்ற கருத்தாக்கம் அல்லது கோட்பாடு வகிக்கும் பாத்திரத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது. இந்தவகையில், நெறிப்படுத்துதல்வழிச் செம்மைப்படுத்துதலும் என்பது அறக்கோட்பாட்டின் அடிப்படை நோக்கமாகிறது எனலாம். காலமும் தேவையும் தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்கம் மருவிய காலம் என்றும், சமூக வரலாற்றில் களப்பிரர் காலம் என்றும் குறிக்கப்படுகிற காலப்பகுதியை ஒட்டுமொத்தமாக வரலாற்றாசிரியர்கள் இருண்டகாலம் (னுயசம யுபந) என்று சுட்டுகின்றனர். இக் காலப்பகுதியின் வரலாற்றை எழுதுவதற்கான தெளிவான சான்றுகள் போதியஅளவு கிடைக்காததாலேயே இக்காலம் ‘இருண்டகாலம்’ என்று குறிப்பிடப்பட்டது. இவ்வாறு தெளிவான வரலாற்றுச் சான்றுகள் கிடைக்காமல் போவதற்கு இடைக்காலப் பகுதியில் ஏற்பட்ட அரசவழி, சமயவழி, சமூகவழிப் பூசல்களும், மோதல்களுமே காரணங்களாக அமைந்தன.எனவேதான், அரசு, சமயம், சமூகம் இம் மூன்றுக்கான செயல்வரைமுறைகள் ‘சமூக அறங்கள்’ என்று அழைக்கப்பட்டன. இவற்றில் தனிநபர், அரசு, சமூகம் என மூன்று வகையான ஒழுகலாறுகள் மூலமாகச் சமூகத்தைச் சமநிலைத்தன்மை கொண்டதாக்கவும், சமூகத்தில் எழும் பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு சமூக வரையறைகளையும், தனிமனித ஒழுகலாறுகளையும், அரச நெறிகளையும் கொண்டு அற இலக்கியங்கள் தோன்றலாயின. இவை அன்றைய சமூகத் தேவையாகவும் இயல்பாகவம் இருப்பினும் இவ் அறக்கருத்துக்கள் சமூகத்தில் சரியான பிடிமானத்தோடு பரவிடவும், பரப்பிடவும் பௌத்த, சமண சமயங்கள் பெரும்பங்காற்றின. சமய அறநெறிகளைச் சமூக அறநெறிகளாக அற இலக்கியங்கள் உள்வாங்கி வெளிப்பட்;டன. இம் முயற்சிகளில் சமயங்களுக்குக் குறிப்பாகப் பௌத்தம் மற்றும் சமணத்திற்குப் பெரும்பங்கு உண்டு. சமூகத்தின் இயல்பான தேவையையொட்டி எழுந்த பல்வேறு அறக்கருத்துக்கள் தனித்தன்மை கொண்டதாகவும், சமயச் சார்புத்தன்மை கொண்டதாகவும் வெளிப்பட்டன. இக்கருத்துக்களின் ஊடகமாக இலக்கியங்கள் செயல்பட்டன.; எனவே இவ் இலக்கியங்கள் அனைத்தும் பொதுவாக அறஇலக்கியங்கள் என அழைக்கப்படலாயிற்று. சங்க காலத்தில் ஐந்து திணைகளுக்கான வாழ்க்கையிலும் சிற்றின்ப நுகர்ச்சி, மதுவுண்ணல், பரத்தையர் ஒழுக்கம், புலால் உண்ணல் ஆகியவை குறிப்பிட்டத்தக்க இடத்தைப் பெற்றிருந்தது. இந்நிலை அக்கால ஒழுக்கமாகவே கருதப்பட்டது. இதற்குக் காரணம் அன்றைய ‘உபரி உற்பத்தி’ என்பதே ஆகும். அதுமட்டுமல்லாமல், பெண்ணை ஒரு போகப் பொருளாகவே கருதியதும் ஒரு முக்கியக் காரணமாகும். பூமி,நதி, வானம் போன்ற பலவற்றிற்;கும் பெண்மைப் பெயரையே சூட்டியதும் இத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டியதாகும். ஆண்களின் இப்படிப்பட்ட செயல்களால் குடும்பங்களுக்குள் குழப்பம் ஏற்படலாயிற்று. இக் குடும்பக் குழப்பம் வளர்ந்து சமூகக் குழப்பமாகக மாறியது. இதுவரை கருதிவந்த ஒழுக்கம் என்பதற்கு மாறுதலான பொருள் உருவாக வேண்டியிருந்தது. இப்பொழுதுதான் பரத்தையர் ஒழுக்கம், சிற்றின்ப நுகர்ச்சி, மதுவுணண்ணல் ஆகியவற்றைக் கண்டித்து அறநூல்கள் பேசின. மேலும், சங்க காலப் போர் முறையிலான வாழ்க்கை சமூகத்திற்குள் கசப்பை உருவாக்கியது. ஏராளமான பெண்கள் கணவனை இழந்து விதவையாயினர். அரசனையும் பாதுகாப்பதற்காகச் சென்றவர்களின் குடும்பத்திற்குப் பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியது. இந்த பூசல்களும் போர்களும் இதை உருவாக்கியது. எனவே, குடும்ப அமைப்பிற்கும், வளர்ந்து வரும் வணிக சமூகத்திற்கும் வேண்டிய அமைதியான சூழலை ஏற்படுத்த வேண்டியது அன்றைய காலத் தேவையாய் இருந்தது. இத்தேவையை இற இலக்கியங்கள் பூர்த்தி செய்தன. இதே காலத்தில் தமிழகத்தில் பரவிய பௌத்த, சமண சமயங்களும் இக் காலத் தேவையை ஒட்டி இயல்பாகவே பங்காற்றின. அற இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் உயிர், உலகம், வாழ்க்கை இவை பற்றி அறிவாராய்ச்சி இந்தியாவில தோன்றியது. இதையொட்டி உபநிடதங்களும், பௌத்த, சமண தத்துவ நூல்களும் தோன்றின. கிரேக்கம், ரோமாபுரி, சீனா போன்ற நாடுகளிலும் மெய்ப்பொருள் ஆராய்ச்சி, கணக்கிடல், வானியல், பௌதிகம், அளவையியில், அறவியல் போன்றவை தோன்றின. இத்தகைய ஒரு குறிப்பிட்ட காலப்பரப்பை ‘தத்துவ ஞானிகளின் காலம்’ (வுhந Pநசழைன ழக வாந Phடைழளிhநசள) என்று குறிப்பிடப்படுகிறது. தமிழில் நீதி இலக்கியம் என்ற பொதுப்பெயர் கொண்டு சுட்டப்படுகிறது. குறிப்பாக ‘அற இலக்கிய காலம்’ என்று குறிப்பிடப்படுகிற காலத்தில் தோன்றிய பதி;னெண்கீழ்க்கணக்கு நூலகளில் ‘நீதி’ என்ற சொல்வழக்கு காணப்படவில்லை. ஆனால் ‘அறம்’என்ற சொல்லும், சொல் தொடர்ச்சியும் இந்நூல்களில் ஏராளமான இடங்களில் கையாளப்பட்டுள்ளன. இதைக்கொண்டு இந் நூல்களைக் குறிப்பாக ‘அற இலக்கியங்கள்’ என்றும் இந்நூல்களுக்குப் பின்னர் தோன்றிய நூல்களையும் இவற்றையும் சேர்த்துப் பொதுவாக நீதி இலக்கியங்கள் என்றும் அழைக்கிறோம். ‘உலக நாடுகள் பலவற்றிலும் கி.மு.8,7,6 ஆகிய நூற்றாண்டுகளிலேயே அற இலக்கியங்கள் அல்லது நீதி இலக்கியங்கள் தோன்றிவிட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. (மேலது., 1977 : 37). இதைவைத்துப் பார்த்தால்; அறம் அல்லது நீதி என்ற கோட்பாட்டுக்கான தோற்றுவாய் நீண்டகாலப் பாரம்பரியத்தை உடையது என்பதைக் கணிக்கலாம். இது மனித குலத்தில் மொழிதோன்றி ஓரளவு செப்பம் அடைந்ததிலிருந்தே தோன்றியிருக்க வேண்டும் என்று கருதலாம். ‘குறிப்பிட்ட மக்களினத்தார் வாழ்ந்த இடத்திற்கும் அதன் தட்பவெப்பநிலைகளுக்கேற்ப, அவர்களிடையே புறத்தூண்டுதல்கள் (ளுவiஅரடi) தோன்றின.அப் புறத்தூண்டுதல்களுக்கேற்ற எதிர்;செயல்களாக (சுநளிழளெந) அவர்களுடைய சிந்தனை வளர்ச்சியும் வாழ்க்கைமுறைகளும் அமைந்தன. இத்தகைய சூழலில்தான்;, பல்வேறு நாடுகளிலும் குறிப்பிட்ட ஒரு காலத்தில் நீதிநூல்கள் தோன்றின(மேலது., 1977 :118-119) என்ற கருத்தைக் கவனத்தில்கொண்டு பார்;க்க வேண்டும். வாழ்வின் அடிப்படை நிலைக்களன்களாக காதல், போர், சமுதாயம், அரசியல் முதலியன அமைந்திருந்தன. இவற்றில் சிக்கல்களும் முரண்பாடுகளும் தோன்றின. இவற்றைச் செம்மைப்படுத்த எண்ணியபோதே அறக் கருத்துக்கள் மலர்ந்தன(கந்தசாமி., ஆ. 1981 : 452) என்று குறிப்பிடுகிறார் ஆ.கந்தசாமி. இது இப் படித்தான் இருக்கவேண்டும், மாறுபட்டு நின்றால் சமூகம் சீரழியும் என்ற கருத்து உருப்பெற்றது முதலே நெறி என்பதும் அறம் என்பதும் தோன்றிவிட்டன என்று உறுதியாகக் கூறலாம். இவ்வாறான சூழலில் மொழி பேச்சுவடிவத்திலிருந்து எழுத்து வடிவத்திற்கு மாறியிருக்க வேண்டும். இவ் எழுத்து வடிவத்தின் வளர்ச்சியின் விளைவாய்ப் ‘படைப்புகள்’ உருவாகின எனலாம். படைப்புகளும் இலக்கியப் படைப்பால் வாழ்க்கை நெறிகள் வகுக்கப்படுவதும், நெறிதடுமாறிச் சமூகம் செல்லும்பொழுது வாழ்க்கை நெறிகளையே ‘அறம்’ என்ற பெயரால் வற்புறுத்துவதும் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. இவ்வாறு, படைப்பின் உள்ளடக்கங்களைத் தீர்மானிப்பது அவ்வக் காலத்தின் திட்டவட்டமான சூழ்நிலைகளே ஆகும். இப்படிப்பட்ட சூழ்நிலைகளின் பின்னணியில்தான் ‘அற இலக்கியங்கள்’ தோன்றின. இவற்றை உருவாக்குவதில் சமூகம், சமயம், புலவர்கள் என்ற மூன்று நிலைகளும் குறிப்பிடத்தக்கப் பங்கைச் செலுத்தியுள்ளனர். அறநூல்கள் தோன்றுவதற்கு முன் ‘வாழ்க்கைநெறிக் கொள்கைகளை முழுமையாக விளக்கும் அற நூல்கள் தோன்றுவதற்கு முன்னர், உலகின் பல்வேறு பகுதிகளில் வழக்காற்று ஒழுக்க நெறியைச் (ஊரளவழஅயசல ஆழசயடவைல) சிறப்பாக விளக்கும் மூதுரைகளும், முதுமொழிகளும், பழமொழிகளும் தோன்றிப் படிப்படியாக வளர்ந்துள்ளன. இதைப் போன்றே நம் தமிழகத்திலும் ஒப்புயர்வற்ற அற நூலாகிய திருக்குறள் தோன்றுவதற்கு முன்பு முதுமொழி, பழமொழி, வாயுறை வாழ்த்து போன்ற அறநெறியுணர்த்தும் செய்யுள் வகைகள் தோன்றியிருத்தல் வேண்டும்(மேலது., 1977:8) என்று க.த.திருநாவுக்கரசு குறிப்பிடுவது எண்ணத்தக்கது. இக்கருத்தை, நுண்மையும் சுருக்கமும் ஒளியுடை மையும் எண்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக் குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம் ஏது நுதலிய முதுமொழி யென்ப (தொல்.செய்.177) வாயுறை வாழ்த்தே வயங்க நாடின் வேம்புங் கடுவும் போல வெஞ்சொல் தாங்குத லின்றி வழிநனி வயக்குமென்(று) ஓம்படைக் கிளவியின் வாயுறுத் தற்றே (தொல்.பொருள்.424) ஆகிய இரண்டு நூற்பாக்களும் முதுமொழி, வாயுறை வாழ்த்து இரண்டனது இலக்கணம் இயம்புவதன்மூலம் அறியலாம். சங்க இலக்கியத்திலும், பல்லோர் கூறிய பழமொழி யெல்லாம் (அகநா.66.5) செவிசெறு வாக முதுமொழி நீரா (கலி.698) முன்னை மரபின் முதுமொழி முதல்வா (பரி.3:4) போன்ற தொடர்களில் பழமொழி, முதுமொழி என்ற சொல்லாட்சியைக் காண்கிறோம். எனவே, பழமொழி, முதுமொழி, வாயுறை வாழ்த்து என்பவை ‘அறம்’ என்பது தோன்றுவதற்குமுன் வழக்கிலிருந்திருக்க வேண்டும் என்பதை தெளிவாக்குகிறது. தமிழ் அறத்தின் ஊற்று கண்கள் சங்க காலப் புறவாழ்வியல் பெரிதும் தனிமனித, சமூக, அரச அறநெறிகளின் சிதைவையே காட்டுகின்றன எனலாம். இச் சிதைவைக் சரிசெய்யவே புலவர்கள் அறநெறிக் கோட்பாட்டை வளர்த்தெடுத்துள்ளனர். எனினும், அக்கால அரசு, சமூகம் ஆகியவற்றின் தன்மையினால் உறுதியாக எடுத்துரைக்க இயலாமை இருந்ததையும் காணமுடிகிறது. இந்நிலைகளே அற இலக்கியங்களான பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பெருக இடமளித்தன எனலாம். அதாவது, அற இலக்கியத்துக்கான ஊற்றுக்கண் மற்றும் வளர்ச்சி நிலையைச் சங்க இலக்கியங்களில் காண்கிறோம் என்று உறுதியாகச் சொல்லலாம். தமிழ்ச் சமூகத்தில் அறஇலக்கிய வகைமை ஒன்று குறைந்தது நான்கு நூற்றாண்டுகளுக்கு வளர்ந்திருக்கிறதென்றால், அதற்கு முந்தைய காலகட்டத்தைக் கவனமாகப் பரிசீலிக்கவேண்டியுள்ளது. சங்க இலக்கிய காலமே அவ்வாறு பரிசீலிக்கப்பட வேண்டிய காலகட்டமாகும். குலச்சமூகத் தலைமை வாழ்க்கைமுறையிலிருந்து அரசு சமூகத் தலைமை வாழ்க்கைமுறை உருவாகிவந்த காலம் சங்க காலம். அரசுகளுக்குள் நூற்றாண்டுக் கணக்கில் நடந்துவந்த ஆட்சி எல்லை விரிவாக்கம், பாதுகாப்பு, பொருள்கவர்சார் நடவடிக்கைகள் ஆகியவற்றை அடியொற்றிய போர்ச்சூழல் நிரம்பிய சங்ககால வாழ்க்கைமுறை சமூகத்திற்குள் கசப்பை உருவாக்கியது. சிற்றின்ப நுகர்ச்சி, கள்ளுண்ணல், புலால் உண்ணல், பரத்தையர் ஒழுக்கம் ஆகியவை சமூக அங்கீகாரம் பெற்றுநிலவின. அதுமட்டுமின்றி, இவற்றையெல்லாம் ‘ஒழுக்கம்’ என்றே குறித்தனர். ‘ஒழுகுவது ஒழுக்கம்’ என்ற வரையறையினின்று ‘ஒழுங்குடையது ஒழுக்கம்’ என்ற வரையறையை உருவாக்க வேண்டிய காலக் கட்டாயம் அக்காலத்தில் இருந்து வந்தது. இத்தகைய சங்ககால வாழ்நெறிச் சிதைவிலிருந்து ஒழுங்கமைப்பதற்குரிய நடத்தைநெறிகளை அச் சமூகமே உருவாக்கிக் கொண்டது. இவ்வாறு, சமூகத்தின் தேவையையொட்டித் தன்னியல்பாகத் தோன்றிய அறநெறிக் கோட்பாடுகள் சங்ககாலத்தில் வழங்கலாயின. புறநானூற்றில் இடம்பெற்றுள்ள பொதுவியல் திணைச் செய்யுட்களிலும், அகம், புறம் தொடர்பான அனைத்து நூல்களிலும் இத்தகைய போக்கைக் காணமுடிகிறது. போர்நெறியோடு வைதீகநெறியும் ஒருங்கிணைந்து செயலாற்றி வந்ததால், போர்மறுப்பும், வைதீகமறுப்பும் சங்ககாலப் போக்கிற்கான மாற்றுநெறியை முன்வைக்கும் செயன்மைக் கூறுகளாக முன்வந்தன. போர், வேள்வி ஆகியவை கொல்லாமையையும், போர்க்காலச் சூறையாடல், பிறவழிப் பொருள்கவர்தல் ஆகியவை கள்ளாமையையும், இயல்பான மெய்சிதைவு பொய்யாமையையும், போர்க்காலப் பெண் அபகரிப்பு, காம மிகுதியால் பிறன்மனை கவர்தல் ஆகியவை பிறன்மனை நயவாமையையும் என்று ஏராளமான அறநெறிகளை உருவாக்கிக்கொள்ள வேண்டியதாகச் சங்க காலச் சமூகம் இருந்தது. இதே காலகட்டத்தில்இந்திய மெய்யியல் தளத்தில் மறுமலர்ச்சியை உருவாக்கிவந்த வைதீக வேள்விநெறி எதிர்ப்புச் சிந்தனைப் பள்ளிகளான பௌத்தம், சமணம் போன்றவையும் மேற்குறித்த அறநெறிக்கோட்பாடுகளையே முன்வைத்தன. எனவே, பௌத்த, சமணசமயங்களின் தமிழகவருகையும்,சங்ககால வாழ்நிலைகளில் இருந்து எழுந்துவந்த புதிய அறச்செல்நெறிகளும் ஒன்றையொன்று வளப்படுத்தவும், வழிப்படுத்தவும் செய்தன என்பது தெளிவாகிறது. இவ் அறக் கோட்பாடுகளில் தமிழ், பௌத்தம், சமணம்ஆகிய சிந்தனை மரபுகளின் செவ்வி;யல் அறக்கோட்பாட்டுப் பண்புகள் மிகுந்துள்ளன. சமயச்சார்பற்ற இலக்கியமான புறநானூற்றில் இடம்பெறும் பொதுவியல் திணையின் துறைகளாக பொருண்மொழிக்காஞ்சி, முதுமொழிக்காஞ்சி, செவியறிவுறூஉ போன்றவையும், பாடாண்திணையின் துறையான இயன்மொழி, வாகைத் திணையின் துறையான பார்ப்பனவாகை போன்றவையுமே தமிழ் அற இலக்கியங்களின் தோற்றுவாய்களும் ஊற்றுக்கண்களுமாக விளங்கியுள்ளன எனில் அது மிகையில்லை. தனிமனிதன், சமூகமனிதன், அரசு, சமயம் என்றவாறான அனைத்துச் சமூக நிறுவனங்களுக்கான பின்பற்றுநெறிகளை உள்ளடக்கி நிற்றலே தமிழ் அற இலக்கியங்களின் மிக முக்கியமான – உயிரோட்டமான, சிறப்பியல்பாகும். அன்றைய மக்கள் வழக்கிலிருந்த பழமொழி, மருத்துவக் குறிப்புக்கள், அனுபவப் பிழிவுகள், மெய்யியல் ஆகிய அனைத்தையும் உட்செரித்துக் கொண்டவையாகத் தமிழ் அற இலக்கியங்கள் திகழ்கின்றன. அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு உறுதிப் பொருள்களும், சங்க இலக்கியங்கள் மற்றும் பிற இலக்கியங்களின் உள்ளடக்கங்களாக உள்ளன. எனினும், அறத்தை மட்டுமே முன்னிலைப்படுத்திப் பேசுபவையாகத் தமிழ் அற இலக்கியங்கள் எனப்படும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் விளங்குகின்றன. முடிவுரை இந்தியத் தத்துவ மரபில் வைதீகம், அவைதீகம் இருவகைகள் உள்ளன. வைதீக மரபில் தருமம், நீதி இரண்டும் வருணாசிரமதர்மத்தை அடிப்படையாகக் கொண்டு நோக்கப்படுகின்றன. அவைதீக மரபில் வருணாசிரம் தருமம் முற்றிலும் புறந்தள்ளப்பட்டு மானுடநேய – சமத்துவப் பார்வையில் நோக்கப்படுகின்றன. தமிழ் இலக்கிய மரபில் வைதீக மரபு, அவைதீக மரபு இரண்டும் கலந்து வெளிப்பட்டிருந்த போதிலும், இவ்விரு நெறிகளுக்கும் மேம்பட்ட வாழ்வியல் அறநெறிகள் முன்வைக்கப்பபட்டுள்ளன. இதனால்தான், தருமம், நீதி என வடமொழியில் இரு சொற்களால் மட்டுமல்லாமல் புண்ணியம் போன்ற சொற்களாலும் குறிப்பிடப்படும் அனைத்து நன்னெறிகளையும் சுட்டும் ஒரே சொல்லாக ‘அறம்’ என்பது திகழ்கிறது. வைதீகம், அவைதீகம் என்ற இரு தருமநெறிகளில் மிகுதியும் அவைதீக நெறிசார்ந்ததாகவே தமிழ் அறம் தொழிற்படுகிறது எனலாம். பயன்பட்ட நூல்கள் 1. அம்பேத்கர்.,பி.ஆர். 1994, புத்தரும் அவர் தம்மமும், சித்தார்த்தா,வீ, (தமிழில்) தமிழாக்க நூல் வெளியீட்டுக் கழகம், சென்னை. 2. ஆர்ஜவசாகரர் முனிவர்., ஆ.ப.இ, ஜைன அறமும், அறிவியலும், ஸ்ரீ சுருத கேவலி பத்ர பாகுசசுவாமி சேவா தளம், குந்தகுந்தநகர். 3. …….…….., 1997, அருங்கலச்செப்பு, ஸ்ரீ சுருத கேவலி பத்ர பாகுசசுவாமி சேவா தளம், குந்தகுந்தநகர். 4. கழகப்புலவர் குழு., 1981, கழகத் தமிழ்அகராதி, தி.சை.சி.நூ.பதிப்புக்கழகம், சென்னை. 5. கந்தசாமி., ஆ. 1981, பழந்தமிழிலக்கியங்களில் அறக்கூறுகள், ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு, கருத்தரங்கு ஆய்வுக் கட்டுரைகள,; (பதி.ஆ.அருணாச்சலம்.,மு) உலகத் தமிழராய்ச்சிக் கழகம், சென்னை. 6. கந்தசாமி., சோ.ந., 1977, பௌத்தம், சென்னை பல்கலைக்கழகம், சென்னை. 7. சிவத்தம்பி.கா., 1988, தமிழில் இலக்கிய வரலாறு (வரலாறெழுதியல் ஆய்வு) நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பிரைவேட் லிமிடெட், சென்னை. 8. சுப்பிரமணியன்.,நா. 1996, இந்தியச் சிந்தனை மரபு, சவுத் ஏசியன் புக்ஸ், சென்னை. 9. சுல்லக் பார்சுவ கீர்த்தி வர்ணீஜி., 1998, அறத்தின் தொன்மை, ஸ்ரீ சுருத கேவலி பத்ர பாகுசசுவாமி சேவா தளம், குந்தகுந்தநகர். 10. திருநாவுக்கரசு., க.த. 1977, திருக்குறள்: நீதி இலக்கியம், சென்னைப் பல்கலைக்கழகம் சென்னை. 11. நெடுஞ்செழியன்.,க. 2000, தமிழர் இயங்கியல், பாலம், சென்னை. 12. பரமேஸ்வரன்., பி.ஆர். 1995, மார்க்சிஸ்ட மாத இதழ் பைபாஸ்ரோடு, மதுரை. 13. வீரமணி.,கி. 1990, மனுதர்ம சாத்திரம், திராவிடர் கழகம், தமிழ்நாடு. 14. ஜார்ஜ்.தாம்சன்., 1988, சமயம் பற்றி ஒரு கட்டுரை, நேத்ரா வெளியீடு, சென்னை-35. 15. ஜான் சாமுவேல்.,ஜி. 1978, இலக்கிய ஒப்பாய்வுக் களங்கள், மணி பதிப்பகம், சென்னை. 16. வுசநஎழச டுiபெ.இ 1981இ யு னுiஉவழையெசல ழக டீரனனாளைஅஇ மு.P. டீயபஉhi யனெ ஊழஅpயலெஇ ஊரடஉரவவயஇ றுயபளைறயசயஇ று.னு.ஊ.