Sunday 29 January 2023

ஒரு நாள் ; ஒரு நூல் - புத்தரின் புகழ்மிகு வாழ்க்கை - ஆர்தர் லில்லி.25.01.2023

25.01.2023 ஒரு நாள் ; ஒரு நூல் - 25 புத்தரின் புகழ்மிகு வாழ்க்கை -- ஆங்கிலத்தில் : ஆர்தர் லில்லி தமிழில் : சிவ.முருகேசன் சென்னை, சந்தியா பதிப்பகத்தின் முதல் பதிப்பாக 2009 இல் வெளிவந்துள்ளது இந்நூல். இந்நூல் 296 பக்கங்கள் கொண்டது. அறிஞர் ஆர்தர் லில்லியின் அழகிய ஆங்கில நடைநூலை அப்படியே அழகோடு தமிழாக்கித் தந்துள்ளார் அறிஞர் சிவ.முருகேசன். நூலை எடுத்துப் படிக்கத் தொடங்கினால் கீழே வைக்கவிடாதபடிக்கான நடையும் தேடலும் விளக்கங்களும் சான்றுகளும் ஈர்த்து விடுகின்றன. 24 தலைப்புகளின்கீழ் அமைந்துள்ள இந்நூலைப் படிக்கிறபோது உலகளாவிய சமய மெய்யியல் - பண்பாட்டியலுக்குள் வலம்வந்த நிறைவை அடையமுடிகிறது. அதேநேரத்தில், மனிதப் புனிதர் புத்தரைக் கடவுளாக்கிவிட்ட இந்தியச் சமயப் பின்னணியோடு கிறித்துவப் பண்பாட்டியல் விளக்கங்களின் இயைபுகளையும் அறிந்துகொள்ள முடியும். அறிஞர் ரைஸ் டேவிட்டின் ஆய்வை மறுதலிக்கும் ஆய்வு முடிவுகளைக் கொண்டதாக இந்நூல் அமைந்துள்ளது. ஆனாலும், அனான்மக் கோட்பாட்டைக் கொண்ட பெளத்தத்தின் ஆன்மாவைத் தேடும் அரிய படைப்பாக இந்நூல் மிளிர்கிறது. இந் நூலின் பொருளடக்கம் பின்வருமாறு : 1.புத்தரின் பிறப்பு - 17 2.குழந்தை புத்தர் - 30 3. புத்தரின் திருமணம் - 43 4.முன்னறிவிப்பான நான்கு அடையாளங்கள்- 55 5.மேன்மையான துறவு - 65 6.உயர்நிலை பிராமண சமயம் - 98 7.கீழ்நிலை பிராமண சமயம் - 107 8.புத்தரின் சீர்திருத்தம் - 118 9.புத்தரின் போதனை - 13வது 10.மன்னர் அசோகர் - 148 11.சூனியத்திற்கு அழைத்துச் செல்லும் ஊர்தி - 154 12.புத்தகோசரும் இலங்கையின் கடவுள் மறுப்பு கோட்பாடும் - 166 13.பௌத்த சங்கத்தின் முதல் கூட்டம்- 174 14.மூன்றாவது பவுத்த சங்கம் - 183 15.புத்தர் கோசரின் லலிதா விஸ்தர சுருக்கம் - 187 16.பிரம்ம ஜால சூத்திரம் - 192 17..மகாபரி நிர்வாண சூத்திரம் - 198 18.சடங்குகள் - 208 19.பௌத்தர்களின் மூன்றினத் தொகுப்பு அல்லது மும்பை - 213 20.அண்டப் படைப்புக் கோட்பாடு - 221 21.ஷமனிசம் - 225 22.அசோகரின் சாட்சியம் 245 23.வரலாற்றுப் புத்தர் - 251 24.புத்தரின் மறைவு - 292 நூலின் முகப்பில் என்னுரை,முன்னுரை ஆகியவை உள்ளன. இந்த முன்னுரையின் தொடக்கத்தில் இந்நூலாசிரியர் குறிப்பிடும் செய்திகள் இந்த நூலின் ஒட்டுமொத்தக் கருத்துக்களையும் பௌத்தத்தின் மெய்யியல் பின்புலத்தையும் அதன் சமூகப் பயன்பாட்டு நிலைகளையும் தெளிவாக எடுத்துரைக்கின்றன. இதோ அந்த முன்னுரையின் தொடக்கப் பகுதி : ". புத்தர் ஒரு சமய சீர்திருத்தவாதி ; கிறிஸ்து சகாப்தம் தொடங்குவதற்கு 470 ஆண்டுகளுக்கு முன்பு அவர் மறைந்தார். இப்புவியில் அவர் வாழ்ந்ததால் பின்வரும் விளைவுகள் ஏற்பட்டன. 1. உலகில் வேறு எங்கும் காணப்படாத யாராலும் வெல்ல முடியாத பூசாரிகளின் ககொடுங்கோன்மை புத்தரின் தாக்கத்தால் நொறுங்கியது.அவரது சீடர்கள் இந்தியத் திருநாட்டில் ஆயிரம் ஆண்டு காலம் முன்னணியில் திகழ்த்தனர். 2. சாதிப் பாகுபாடு தகர்த்தெறியப்பட்டுத் தலை கீழாகத் தவிர்க்கப்பட்டது. 3. பலதார மணம் முதன்முறையாக நீதிக்குப் புறம்பானது என அறிவிக்கப்பட்டது. அடிமை முறை கண்டிக்கப்பட்டது. 4. தட்டுமுட்டுச் சாமான்கள் என்றும் சமுதாயத்தில் பாரம் என்றும் கருதப்பட்ட பெண்கள் ஆண்களுக்குச் சமம் எனக் கருதப்பட்டு ஆன்மீக முன்னேற்றத்திற்கு முயற்சி செய்யவும் அனுமதிக்கப்பட்டனர். 5. ஒரு பூசாரியின் கத்தியால் ஆகட்டும் அல்லது ஒரு வெற்றியாளனின் வாளாலாகட்டும் ரத்தம் சிந்துதல் என்பது முற்றிலும் தடை செய்யப்பட்டது. 6. மனித சமுதாயத்தின் சமய வரலாற்றில் முதன்முறையாக சமயம் இருக்க வேண்டிய இடத்தில் தனி மனிதனின் ஆன்மீக விழிப்புணர்வு வைக்கப்பட்டது. பூசாரிகளால் கண்டுபிடிக்கப்பட்ட உயிர்ப்பலிகளும் சம்பிரதாயமான சடங்குகளிலும் அல்லாமல் கடமை என்பது ஒழுக்கம், நீதி ஆகியவைகளின் வழியே நிறைவேற்றப்பட வேண்டும் என்பதைப் புத்தர் முதல் முறையாக அறிவித்தார். 7 .நிறுவனங்களின் மூலமாகவும் சமயத்தை மக்களிடையே பரவச் செய்யும் முறை முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. 8. இவற்றின் மூலம் இந்தியா, சீனா ,பாக்டீரியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் மதமாற்றம் அறவழியிலேயே ஏற்படுத்தப்பட்டது. பௌத்தம் கட்டாயப்படுத்துவதை ஏற்பதில்லை. இன்னும் உலகில் மூன்றில் ஒரு பகுதி பௌத்தத்தின் அரவணைப்பில் உள்ளது எனக் கூற முடியும். இத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டது வரலாற்றில் ஓர் அதிசயம்தான் " (பக்.9 - 10 ). பொருளடக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நான்காவது தலைப்பான ' முன்னறிவிப்பான நான்கு அடையாளங்கள் ' என்னும் தலைப்பில் வழக்கமாகக் காலங்காலமாக கற்பிக்கப்பட்டு வந்திருக்கிற பிணி, மூப்பு, சாக்காடு ஆகியவற்றை கண்டுதான் புத்தர் துறவுபூண்டார் என்கிற செய்தியே இடம்பெற்றுள்ளது. ஆனால், ஆறாவது, ஏழாவது தலைப்புகளாக அமைந்துள்ள உயர்நிலை பிராமண சமயம் , கீழ்நிலை பிராமண சமயம் என்கிற தலைப்புகளில் கீழ்நிலை பிராமண சமயம் என்பது புத்தரின் வருகைக்கு முன்பு இருந்த வைதீக பிராமண சமயம் என்றும் உயர்நிலை பிராமண சமயம் என்பது புத்தரின் வருகைக்குப் பிறகு உருவான பௌத்த சமயம் என்பதும் விளக்கப்பட்டுள்ளது. இதுவரையிலும் எந்த அறிஞராலும் விளக்கப்படாத புதிய விளக்கமாக இது அமைந்துள்ளது. இதுகுறித்து எட்டாவது தலைப்பான ' புத்தரின் சீர்திருத்தம் ' என்னும் தலைப்பிலான பகுதியை தொடங்குகிறபோதே இவ்வாறு நூலாசிரியர் எழுதிச் செல்கிறார் : " கீழ்நிலை பிராமண சமுதாயத்தை எதிர்த்து மேல்நிலை பிராமண சமயம் மேற்கொண்ட புரட்சியே பௌத்த இயக்கம். வரலாற்றின் பக்கங்களில் இதுவரை தோன்றாத முதன்மையான ஒருவரால் தலைமை ஏற்கப்பட்டு அந்தப் புரட்சி நடந்தது. தனிமனிதனின் ஆன்மீக உணர்வைத் தட்டி எழுப்புவது ஒன்றுதான் அதற்கு வழி என்று அவர் நன்கு உணர்ந்தார் குருதி சிந்த வைக்கும் உயிர்ப்பலி, சாதி, அதிக பொருட் செலவில் மேற்கொள்ளப்படும் தீர்த்த யாத்திரைகள் போன்றவை அடியோடு ஒழிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார் " ( ப.118 ). அதேபோல் பௌத்தத்தின் முதல் சங்கக் கூட்டம், மூன்றாவது சங்கக் கூட்டம் ஆகியவை எவ்வாறு நடந்தன என்பது குறித்த செய்திகள் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. ஆனால் , இதில் இரண்டாவது பௌத்த சங்கம் குறித்த செய்திகள் இடம் பெறாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. நூலின் 24 ஆவது தலைப்பான புத்தரின் மறைவு என்கிற தலைப்பில் புத்தரின் முதன்மைச் சீடரான ஆனந்தனிடம் புத்தர் நிப்பாணமடையும் முன்பாகக் கூறிய செய்திதான் இந்த உலகிற்கு புத்தர் விட்டுச் சென்ற நிறைவான செய்தி ஆகும் : " ஆனந்தா ! நீ நீயாகவே இரு; உனது ஒளியை நம்பு. உன்னிடமே நீ சரண் புகு . தர்மமே உனது ஒளிவிளக்காகவும் சரணாலயமாகவும் இருக்கட்டும் . வேறு எங்கும் சரணடைந்து விடாதே. இப்பொழுதிலிருந்து ஆனந்தா ! யாராக இருந்தாலும் அவன் அவனது ஒளியை நம்பட்டும் . அவனுக்குள் அவனே சரண் புகட்டும். வேறு எந்த தஞ்சத்தையும் நாட வேண்டாம் . இப்போதிலிருந்து அப்படி இருப்பவனே எனது உண்மையான சீடன் ; அவனே சரியான பாதையில் நடக்கிறான் " ( ப.293 ). இவ்வாறு எடுத்துக்காட்டத்தக்க பல்வேறு செய்திகளையும் தன்னகத்தில் கொண்டுள்ள அரிய நூலாக இந்த நூல் திகழ்கிறது. இந்த நூலில் இடம்பெற்றுள்ள மிக முக்கியமான செய்திகள், கருத்துக்கள், தத்துவ விளக்கங்கள், வரலாற்றுக் குறிப்புகள் ,ஸ்லோகங்கள் ஒவ்வொன்றிற்கும் அந்தந்தப் பக்கத்திலேயே அடிக்குறிப்புகளைக் கொடுத்திருக்கும் ஆய்வு நெறிமுறை சிறப்பான நெறிமுறையாகும். இதிலிருந்து ஒரு நூலை படைப்பவர்கள் எவ்வாறு சான்றுகளைத் தர வேண்டும் என்பதையும் இந்நூல் ஆசிரியர் உணர்த்துகிறார். இந்த வகையிலும் பௌத்த சமய வரலாற்றை, அதன் பின்னணிகளை மிகச் சிறப்பாக எடுத்துரைக்கும் நூலாக இந்நூல் திகழ்வதால் பௌத்தத்தைப் பற்றிய அறிதலுக்காக ,புரிதலுக்காகப் பயில விரும்புபவர்கள் எல்லோரும் அவசியம் பயில வேண்டிய நூலாக இந்த நூல் விளங்குகிறது. பதிப்பக முகவரி: சந்தியா பதிப்பகம், ப.எண் : 57, 53 ஆவது தெரு, 9 ஆவது அவென்யூ, அசோக் நகர், சென்னை - 63 முதற் பதிப்பு: 2009 விலை : ரூபாய் 175/- https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02iwdunWyAkMDjkZ8haHifYckVH7rhEaEhBjPhEgXRXBaZTaAAv1r9DYAamUKbgoPFl&id=100007862881487&mibextid=Nif5oz

ஒரு நாள் ; ஒரு நூல் - 24. புத்தரின் தவமும் தத்துவங்களும் - ப.ராமஸ்வாமி.24.01.2023

24.01.2023 ஒரு நாள் ; ஒரு நூல் - 23 புத்தரின் தவமும் தத்துவங்களும் - ப.ராமஸ்வாமி சென்னை, வ.உ.சி.நூலகத்தின் முதல் பதிப்பாக 2006 ஆம் ஆண்டில் வெளிவந்துள்ளது இந்நூல். இந்நூல் 656 பக்கங்கள் கொண்டது. பெளத்த அறிஞர் ப.ராமஸ்வாமி அவர்களின் புத்தரின் புனித வரலாறு, தம்மபதம், புத்த ஞாயிறு, புத்தரின் போதனைகள், பெளத்த தருமம் ஆகிய ஐந்து நூல்களின் தொகுப்பு நூலாக இந்நூல் திகழ்கிறது. பெளத்தம் குறித்த பரந்து விரிந்த செய்திகளை ஒரே நூலில் அறிந்துகொள்ளும் வாய்ப்பை இந்நூல் வழங்குகிறது. இந்நூலின் முகப்புப் பகுதியில் பதிப்புரை, பொருளடக்கம் ஏதும் இல்லை. ஐந்து நூல்களில் முதலில் அமைந்துள்ள நூல் ' புத்தரின் புனித வரலாறு ' என்பதாகும். இந்நூல் 20 இயல்களில் பக்கம் 5 முதல் 276 வரை ஆக மொத்தம் 271 பக்கங்களில் புத்தரின் வரலாற்றை உட்பொதிந்து வைத்துள்ளது.இந்நூலில் 5 பக்க முன்னுரை ஒன்றை இந்நூலாசிரியர் எழுதியுள்ளார். இந்நூல் ஒரு புதினத்தைப் படிப்பதுபோல் விறுவிறுவெனப் படிக்கிறவகையில் இனிய எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. எல்லா இயல்களிலும் பெளத்தப் பிடகங்களின் சுலோகங்கள், பெளத்தத் தமிழிலக்கியப் பாடல்கள் ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டுள்ளன. ஐந்து நூல்களில் இரண்டாவது நூலாக அமைந்துள்ள நூல் ' தம்மபதம் ' என்பதாகும். இந்நூல் பக்கம் 277 முதல் 334 வரை ஆக மொத்தம் 57 பக்கங்களில் அமைந்துள்ளது. இந்நூல் 26 இயல்களில் 421 சுலோகங்கள் கொண்டது. இந்நூலாசிரியரின் மொழிபெயர்ப்பில் அமைந்துள்ள இந்நூலின் பல இயல்களும் நல்ல தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுத் தலைப்பிடப்பட்டுள்ளன. அவை முறையே வருமாறு: இயல் ஒன்று - இரட்டை செய்யுங்கள் இயல் இரண்டு - கருத்துடைமை இயல் மூன்று - சிந்தனை இயல் நான்கு - புஷ்பங்கள் இயல் ஐந்து - பேதை இயல் ஆறு - ஞானி இயல் ஏழு - முனிவர் இயல் எட்டு - ஆயிரம் இயல் ஒன்பது - தீயொடுக்கம் இயல் பத்து - தண்டனை இயல் பதினொன்று - முதுமை இயல் பன்னிரெண்டு - ஆன்மா இயல் பதின்மூன்று - உலகம் இயல் பதினான்கு - புத்தர் இயல் பதினைந்து - களிப்பு இயல் பதினாறு - இன்பம் இயல் பதினேழு - கோபம் இயல் பதினெட்டு - குற்றம் இயல் பத்தொன்பது - சான்றோர் இயல் இருபது - மார்க்கம் இயல் இருபத்தொன்று - பலவகை இயல் இருபத்திரெண்டு - நரகம் இயல் இருபத்து மூன்று - யானை இயல் இருபத்துநான்கு - அவா இயல் இருபத்தைந்து - பிக்கு இயல் இருபத்தாறு - பிராமணன் தம்மபதம் நூலின் நிறைவில் 3 அனுபந்தங்கள் (சொல் விளக்கங்கள் )கொடுக்கப்பட்டுள்ளன. ஐந்து நூல்களில் மூன்றாவது நூலாக இடம் பெற்று இருப்பது 'புத்த ஞாயிறு' என்னும் நூலாகும் ( பக்.335 - 443 ). ஆக மொத்தம் 108 பக்கங்களில் இந்நூல் அமைந்துள்ளது.இந்நூல் நான்கு இயல்களாக அமைந்துள்ளது. அவை முறையே, முதல் இயல் - புத்த ஞாயிறு , இரண்டாம் இயல் - வேதங்களும் வைதீக சமயங்களும் , மூன்றாம் இயல் - நான்கு தீர்க்கதரிசிகள் , நான்காம் இயல் - தேவகுமரரும் திருநபியும் என்பனவாகும். இந்நூலின் முதல் இயலான ' புத்த ஞாயிறு ' என்னும் தலைப்பில் புத்தர் இந்தியாவில் தோன்றிய காலத்தில் இந்தியாவிலிருந்த சமயங்கள், அவற்றிலிருந்து மாறுபட்டு புத்தர் தன் தத்துவத்தை முன்வைத்தமை, புத்தர் காலத்து இந்தியா, பௌத்த தருமம், பௌத்த சமயத்தைப் பற்றிய அறிஞர்களின் கருத்துக்கள், பௌத்தம் உருவாக்கிய சிற்பக் கலைகள், பௌத்தத்தால் ஏற்பட்ட கல்விப் பெருக்கம், இந்தியாவும் வெளிநாடுகளும் பௌத்த சமயத்தால் இணைந்தமை ஆகிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. இரண்டாம் இயலான 'வேதங்களும் வைதீக சமயங்களும்' என்னும் தலைப்பில் வேதங்களும் வைதீக சமயங்களும் முன்வைத்த கருத்து நிலைகள் , வேதங்களும் உபநிடதங்களும் முன்வைத்த கருத்துக்கள் குறிப்பாக பிரகதாரணிய உபநிடதம் , பகவத் கீதை, மூன்று ஆச்சாரியார்கள், சித்தாந்த சைவம் , பிறவாதங்கள் என்னும் பொருண்மைகளில் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. மூன்றாம் இயலான 'நான்கு தீர்க்கதரிசிகள்' என்னும் தலைப்பில் புத்தர் காலத்தில் தோன்றிய... புத்தர காலத்துக்கு முந்தைய காலத்தில் தோன்றிய நான்கு தீர்க்கதரிசிகள் பற்றிய செய்திகள், அவர்கள் முன்வைத்த தத்துவச் சிந்தனைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. முதலாவது தீர்க்கதரிசியாக கி.மு.1000இல்வாழ்க்கையில் வாழ்ந்த பாரசீக நாட்டைச் சார்ந்த ஜாத துஷ்டிரர், இரண்டாவது தீர்க்கதரிசியாக கி.மு. 573 இல் வாழ்ந்த கௌதம புத்தர், மூன்றாவது தீர்க்கதரிசி யாக கி.மு. 570 இல் வாழ்ந்த லாவோஸ், நான்காவது தீர்க்கதரிசியாக கி.மு. 551 இல் வாழ்ந்த கன்பூசியஸ் ஆகிய நான்கு தீர்க்கதரிசிகளின் கருத்துக்கள், மெய்யியல் சிந்தனைகள், அவர்கள் தோன்றிய காலத்துச் சமூகப் பின்னணி ஆகியவை விளக்கப்பட்டுள்ளன. இந்த நான்கு தீர்க்கதரிசிகளோடு மிகப் பிற்காலத்தில் தோன்றிய அதாவது கி.மு.1 இல் தோன்றிய இயேசு கிறிஸ்து, கி.பி. 632 இல் தோன்றிய முகமது நபி ஆகியோரின் மெய்யியல் சிந்தனைகளையும் வரலாற்றுப் பின்புலங்களையும் இந்த மூன்றாம் இயல் தெளிவாக விளக்கியுள்ளது. ஐந்து நூல்களில் நான்காவது நூலாக இடம் பெற்றுள்ள நூல் 'புத்தரின் போதனைகள்'என்னும் நூலாகும் ( பக்.445 - 527 ). ஆக மொத்தம் 82 பக்கங்களில் இந்நூல் அமைந்துள்ளது. இந்த நூலில் 43 தலைப்புகளில் புத்தரின் சிந்தனைகள் பகுத்தளிக்கப்பட்டுள்ளன. அவை முறையே வருமாறு : தற்பயிற்சி, சிந்தனை, ஞானம், தியானம், ஏழை , கருத்துடைமை, மடிமை, களியாட்டம், ஒழுக்கம் , அகிம்சை , அன்பு ,பொறுமை, கோபம், நல்வினைகள், தானம் , ஊழியம், நண்பர்கள்,மவுனம் , இன் சொல் , இன்னாச் சொல் , இன்பமும் துன்பமும், தீவினைகள்,ஐயமும் தெளிவும், ஆஸவங்கள், ரகசியம், இரண்டில் விளைதல், கொடுங்கோலம், புத்தர், பௌத்த தருமம்,பௌத்த சங்கம், பிக்குகள், உபாசகர்கள், சண்டாளர்கள், பெண்கள், நால்வகை வாய்மைகள், அஷ்டாங்க மார்க்கம் ,பன்னிரு நிதானங்கள், ஆன்மா, உடல், மரணம், கருமநிதி, நிர்வாணம் ஆகியவையாகும். இந்த 43 தலைப்புகளில் அடங்கியுள்ள புத்தரின் போதனைகளைப் பயிலும்போது புத்தரின் மெய்யியல் சிந்தனை முழுமையையும் அறிந்துகொண்ட உணர்வு கிடைக்கும் வகையில் சிந்தனைகள் தொகுக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த புத்தரின் சிந்தனைகள் எந்தெந்த நூல்களில், எந்தெந்த இடங்களில்,எந்தெந்தப் பிரிவுகளில் இடம்பெற்றுள்ளன என்கிற குறிப்புகள் கொடுக்கப்படாமல் இருப்பது ஆய்வாளர்களுக்கு உதவுவதாக அமையாது. ஆனால் புது, பொது வாசிப்பாளர்களுக்குப் பரவாயில்லை என்று சொல்லலாம். ஆனாலும் முறையான அறிதலை இது கொடுக்காது. ஐந்து நூல்களில் ஐந்தாவது நூலாக இடம் பெற்று இருப்பது 'பௌத்த தருமம்' என்னும் நூலாகும் (பக்.529 - 656 ). ஆக மொத்தம் 127 பக்கங்கள் கொண்டது இந்நூல். இந்நூல் ஏழு இயல்களில் அமைந்துள்ளது. முதல் இயல் - நான்கு வாய்மைகள் - 531 இரண்டாம் இயல் - அஷ்டாங்க மார்க்கம் - 549 மூன்றாம் இயல் - அடிப்படைக் கொள்கைகள் - 574 நான்காம் இயல் - நிருவாணம் - 603 ஐந்தாம் இயல் - பௌத்தமும் சாதிப் பிரிவினையும் - 612 ஆறாம் இயல் - பௌத்த சங்கம் - 629 ஏழாம் இயல் - பௌத்தத் திருமுறைகள் - 637 ஏறத்தாழ ஒரே பொருண்மையின் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டதாக இந்நூல்(கள் )திகழ்கிறது(கின்றன). ஒரே ஆசிரியர் ஒவ்வொரு நூலிலும் புதிய புதிய தேடலையும் செய்திகளையும் விதைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ‌ முன்பே சொன்னபடி பெளத்தத்தைப் பற்றிய தொடக்க நிலை அறிமுகம் முதல் ஆய்வுநிலைவரையிலான பன்முக வாசிப்பாளர்களும் படிக்கத்தக்க நல்ல நூல் இது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. பதிப்பக முகவரி: வ.உ.சி.நூலகபம், ஜி- 1, லாயிட்ஸ் காலனி, இராயப்பேட்டை, சென்னை - 14 முதற் பதிப்பு : 2006 விலை : 350/- https://m.facebook.com/story.php?story_fbid=pfbid04cLagbLNbKEsPzBShot34xqYMfUN1dwVtAXYwYUZF5BtHgJbQecDGsvveK2Xtwenl&id=100007862881487&mibextid=Nif5oz

ஒரு நாள் ; ஒரு நூல் - 23. பெளத்தம் - ஒரு மார்க்சிய அறிமுகம் - தேவி பிரசாத் சட்டோபாத்யா+ 2, 23.01.2023

23.01.2023 ஒரு நூல் ; ஒரு நூல் - 23 பெளத்தம் - ஒரு மார்க்சிய அறிமுகம் - தேவி பிரசாத் சட்டோபாத்யா, இராம் விலாஸ் சர்மா, பென்கார்ட் - லெனின் பதிப்பாசிரியர்: வெ.கோவிந்தசாமி சென்னை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ( பி) லிட்.,டின் முதல் பதிப்பாக டிசம்பர் 2012 இல் வெளிவந்த நூல் இது. இந்நூல் 84 பக்கங்கள் கொண்டது. மார்க்சிய ஒளி என்ற ஆய்விதழில் 1970 களில் வெளிவந்த நான்கு கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல் ஆகும். மார்க்சிய நோக்கில் பெளத்த சமயத்தைப் புரிந்து கொள்வதற்கான நல்ல அடித்தளத்தை அமைத்துத் தருவனவாக இக் கட்டுரைகள் திகழ்கின்றன. நூலின் முன்பகுதியில் பதிப்புரை, அணிந்துரை - எஸ்.பாலச்சந்திரன், பதிப்பாசிரியர் குறிப்பு ஆகியவை உள்ளன. இவற்றைத் தொடர்ந்து உள்ளளடக்கம் இடம்பெற்றுள்ளது. உள்ளடக்கத்தில் இந்நூலில் இடம்பெற்றுள்ள நான்கு கட்டுரைகள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன: 1.ஆரம்ப பௌத்தத்தில் சில பிரச்சனைகள் - தேவி பிரசாத் சட்டோபாத்யா -தமிழில் : கா. சு. ரகுமணி - 11 2. புத்தர் போதனையின் சில தோற்றங்கள் - இராம் விலாஸ் சர்மா- தமிழில் : மு.அம்மையப்பன் - 45 3.நிலப் பிரபுத்துவம், வர்க்கம்,ஜாதி,தேசியம் - இராம் விலாஸ் சர்மா - தமிழில் : எஸ். நாராயணன் - 62 4.ஆரியப் பட்டரும் லோகாயதவாதிகளும் - பொன் கார்ட் லெவின் - தமிழில் : சாரதி - 76 இந்த நான்கு கட்டுரைகளில் முதல் இரண்டு கட்டுரைகள் புது தில்லி பீப்பிள்ஸ் பப்ளிஷிங் ஹவுஸ் வெளியிட்டுள்ள Buddhism : A Marxist approach என்ற நூலில் இடம்பெற்றுள்ளவை ஆகும்.அடுத்த இரண்டு கட்டுரைகள் இந்த நூலிலே புதிதாக இணைக்கப்பட்டுள்ள கட்டுரைகள் ஆகும். இந்த நான்கு கட்டுரைகளில் முதல் இரண்டு கட்டுரைகளும் பௌத்தத்தை, அதன் மெய்யியலை, அதன் சமூகப் பின்புலத்தை, அதன் வரலாற்றுப் பின்புலத்தை, அதன் அரசியல் பின்புலத்தை அறிந்துகொள்ள துணை செய்யும் கட்டுரைகள் ஆகும். முதல் கட்டுரையான தேவி பிரசாத் சட்டோபாத்யாயா அவர்களின் கட்டுரை பௌத்தத்தை மார்க்சிய நோக்கில் எவ்வாறு புரிந்து கொள்வது? அவ்வாறு புரிந்து கொள்வதில் ஏற்படும் சிக்கல்கள் யாவை ? அச் சிக்கல்களை அவிழ்த்துக்கொள்ளும் நெறிமுறைகள் யாவை என்பது குறித்த ஆழமான சிந்தனைகளை, கேள்விகளை ஆராயும் கட்டுரையாக அமைந்துள்ளது. புத்தரைப் புரிந்துகொள்வதற்கு இரண்டு விதமான கண்ணோட்டங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஒன்று, அவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய வீரர். இரண்டு, மேல் தட்டு வர்க்கமான பணக்காரக் கூட்டத்தோடு சென்று ஒட்டிக் கொண்டவர் என்று இருவேறு நோக்குகளில் ஆய்வுகள் நிகழ்ந்துவருகின்றன. இந்த இரண்டு நோக்க நிலைகளையும் மிக ஆழமாக , நுட்பமாக ஆய்வுசெய்து புதிய முடிவுகளை தருவதாக இந்த கட்டுரை அமைந்துள்ளது. மொத்தத்தில், மார்க்சிய நோக்கில் புத்தரின் வர்க்கச் சார்பு நிலை யாது என்பது குறித்த சிந்தனைகளை இந்தக் கட்டுரை விரிவாக ஆராய்ந்துள்ளது. பௌத்தத்தைச் சமூகவியல் பின்புலத்தில் வரலாற்று நோக்கில் ஆய்வுசெய்ய விரும்பும் எந்த ஒரு ஆய்வாளரும் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரையாக இந்தக் கட்டுரை திகழ்றது. இரண்டாவது கட்டுரையான இராம் விலாஸ் சர்மா அவர்களின் கட்டுரையும் மார்க்சிய நோக்கில் புத்தரின் போதனைகளை ஆராய்ந்து உள்ளது. புத்தரின் தத்துவத்தை உருவாக்கிக் கொள்வதற்கு அக் காலகட்டத்தில் இருந்த மற்ற மெய்யியல்கள் எந்த அளவிற்கு உதவியுள்ளன என்பதை நுட்பமாக இந்தக் கட்டுரை ஆராய்ந்து கூறுகிறது. எனவே, இந்தக் கட்டுரையும் பௌத்தத்தைச் சமூகவியல் நோக்கில் ஆராய விரும்பும் எந்த ஒரு ஆய்வாளரும் படிக்க வேண்டிய கட்டுரையாக அமைந்துள்ளது. இந்தக் கட்டுரைத் தொகுப்பில் மூன்றாவது , நான்காவது கட்டுரைகளாக அமைந்துள்ள இரண்டு கட்டுரைகளும் நேரடியாக பௌத்தத்தை ஆய்வு செய்யும் கட்டுரைகள் அல்ல என்ற போதிலும் சமூகவியல் பின்புலத்தில் அன்றைய காலத்துச் சமூகத்தை எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும் என்பது குறித்தும் அன்றைய காலத்துத் தத்துவ பின்புலங்கள் குறித்தும் அறிந்துகொள்வதற்கும் புரிந்துகொள்வதற்கும் தெளிந்துகொள்வதற்கும் பயன்படும் கட்டுரைகளாக அமைந்துள்ளன. இந்த இரண்டு கட்டுரைகளையும் படிப்பதன்மூலம் பௌத்தத்தை மட்டுமல்ல மானுட சமூக வரலாற்றுப் பின்புலத்தில் கருத்தியல்களை ஆராய்வதற்கு வழிகாட்டும் கட்டுரைகளாக அமைந்துள்ளன. இந்த அடிப்படைகளில் இந்த கட்டுரைத் தொகுப்பு மிகுந்த அறிவுப்பயன் அளிக்கும் கட்டுரைத் தொகுப்பாக அமைந்துள்ளது. பொதுவாக, தமிழில் இதுவரை நடந்துள்ள பௌத்த ஆய்வுகள் பெரும்பாலும் விளக்க ஆய்வுகளாகவும் பகுப்பாய்வுகளாகவுமே நடைபெற்று வருகின்றன. அவை பொருண்மை அடிப்படையில் தொகுக்கப்படும் பட்டியல் கட்டுரைகளாகவே பெரும்பாலும் அமைந்துவருகின்றன.இந்த ஆய்வுகள் சமூகவியல் பின்புலத்தில், மெய்யியல் பின்புலத்தில் திறக்கப்பட வேண்டியுள்ளன. அத்தகைய ஆய்வுகளை வளர்த்தெடுக்கும் போது புத்தம் புதிய ஆய்வு முடிவுகளை நாம் கண்டறிய முடியும். எனவே , பௌத்தம் குறித்த நுண்ணாய்வுகளுக்கு இந்தக் கட்டுரைத் தொகுப்பு ஒரு நல்ல வழிகாட்டும் தொகுப்பாக அமைந்துள்ளது. இத்தகைய நோக்கில் அதாவது மார்க்சிய நோக்கில் ஆய்வுசெய்கிறபோது வரலாற்று நோக்கில் ஒவ்வொன்றையும் தெளிவுபடுத்திக் கொள்ளும் வாய்ப்பு அமையும் என்பதையும் இந்த இடத்தில் பதிவு செய்ய வேண்யுள்ளது. எனவே, இந்த நூலைத் தொகுத்துப் பதிப்பித்த பதிப்பாசிரியர் வெ.கோவிந்தசாமி அவர்களும் கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்த்த மொழிபெயர்ப்பாளர்களும் இந்தக் கட்டுரைத் தொகுப்பை வெளியிட்ட நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனமும் அதன் மேலாண் இயக்குநராகப் பணியாற்றும் தோழர் சண்முகம் சரவணன் அவர்களும் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள் ஆவர். பதிப்பக முகவரி: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ( பி) லிட், 41- பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை - 98 முதல் பதிப்பு: டிசம்பர் 2012 விலை : ரூபாய் 65/- https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02UGyFbbVodyWyCCQhG5zG8wAafETxcmCvkCLRStzP347FWiegkjENVX2e8CPcn9ul&id=100007862881487&mibextid=Nif5oz

Friday 27 January 2023

ஒரு நாள்; ஒரு நூல் - 21. பெளத்தத் தத்துவ இயல் - ராகுல சாங்கிருத்யாயன்.21.01.20231

21.01.2023 ஒரு நாள் ; ஒரு நூல் - 21 பெளத்தத் தத்துவ இயல் - ராகுல் சாங்கிருத்யாயன்.... தமிழில் : ஏ.ஜி.எத்திராஜூலு, ஆர்.பார்த்தசாரதி ( ஆர்.பி.எஸ்.) சென்னை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ( பி ) லிட்., வெளியீடாக இரண்டாம் அச்சாக ஜனவரி 2003 இல் வெளிவந்த நூல் இது. இந்நூல் 8 + 240 = 248 பக்கங்களைக் கொண்டுள்ளது. (இந்நூல் இதே பதிப்பகத்தின் வாயிலாக முதல் பதிப்பாக ஆகஸ்ட் 1985 இல் வெளிவந்துள்ளது.) இந்தியத் தத்துவங்களிலும் உலகளாவிய த்த்துவங்களிலும் சமூகவியலிலும் மானுட வரலாற்றியலிலும் ஆழ்ந்தகன்ற... நுண்மாண்நுழைபுலம் மிக்க... தெளிவான பேரறிஞர் ராகுல்ஜி என்பதை அறிந்தார் யாவரும் அறிவர். அறியாதார் யாராயினும் ராகுல்ஜியின் நூல்களைப் படிக்கத் தொடங்கிவிட்டால் இதையே உணர்வர். மேற்கண்ட துறைகளில் அறிவும் செறிவும் தெளிவும் பொலிவும் பெற விரும்புவோர் யாராயினும் படிக்க வேண்டிய இன்றியமையாத படைப்புகள் இவருடைய படைப்புகள் ஆகும். இத்தகைய பெருந்தகையின் சீரார்ந்த நூல்களுள் ஒன்றே இந்நூலுமாகும். பௌத்த ஆய்வுகளில் ஈடுபடும் எவர் ஒருவரும் இந்நூலை பயிலாமல் நூலின் கருத்துக்களை உள்வாங்காமல் இந்நூலின் அணுகுமுறையை பின்பற்றாமல் ஆய்வில் ஈடுபடுவார ஈடுபடுவார்கள் என்றால் அந்த ஆய்வு குறை உடைய ஆய்வாக பாரு இருக்கும் அந்த அளவிற்கு ஆய்வு நோக்கு ஆய்வு அணுகுமுறை ஆய்வு நெறிமுறைகள் ஆகியவற்றை மார்க்சியை இயங்கியல் அடிப்படையில் முன் வைக்கும் அரிய நூல் என் நூலாகும். இந்நூலின் பொருளடக்கம் பின்வருமாறு அமைந்துள்ளது: அத்தியாயம் ஒன்று 1.கௌதம புத்தரின் அடிப்படை தத்துவங்கள் - 1 1. கடவுளை ஒப்புக்கொள்ளாமல் இருப்பது - 2 2.ஆன்மாவை நிரந்தரமானதாக ஒப்புக் கொள்ளாமல் இருப்பது - 6 3.எந்தவொரு நூலையும் கடவுள் அருளியதாக ஒப்புக்கொள்ளாமல் இருப்பது - 15 4. வாழ்க்கை பிரபாகத்தை இந்த உடலில் முன்னும் பின்னும் என்று நம்புவது - 19 அத்தியாயம் இரண்டு கௌதம புத்தர் - 24 1.வாழ்க்கை - 24 2. பொதுவான கருத்துக்கள் - 27 3. நான்கு ஆரிய சத்தியங்கள் - 28 4.தத்துவ கருத்துக்கள் - 38 5.புத்தரின் தத்துவமும் அக்காலத்திய சமுதாய அமைப்பும் - 54 அத்தியாயம் மூன்று நாகசேனர் - 64 1.சமூக நிலைமை - 64 2.கிரேக்க இந்திய தத்துவங்களின் சங்கமம் - 67 3..நாகசேனரின் வாழ்க்கை - 68 4..தத்துவ கருத்துக்கள் - 70 அத்தியாயம் நான்கு பவுத்த மதப் பிரிவுகள் - 80 1. பவுத்த மதச் சம்பிரதாயங்கள் - 80 2.பவுத்த தத்துவப் பிரிவுகள் - 82 3.நாகார்ஜுனரின் சூனியவாதம் - 84 4.யோகாசாரமும் மற்ற பவுத்த தத்துவங்களும் - 88 அத்தியாயம் ஐந்து 1.பவுத்த தத்துவத்தின் உயர்மட்ட வளர்ச்சி - 91 1.அசங்கர் - 91 1..வாழ்க்கை - 92 2.அசங்கரின் நூல்கள் - 93 3.தத்துவ சிந்தனை - 93 2. திக் நகர் - 98 3. தர்மகீர்த்தி - 99 1.வாழ்க்கை - 99 2 .நூல்கள் - 101 3. தத்துவ சிந்தனை - 101 4.சமணர்களின் அனேகாந்த வாதத்திற்கு கண்டனம் - 133 அனுபந்தம் 1 1.புத்தரின் முற்காலத் தத்துவ மேதைகள் - 135 2.புத்தரின் முற்காலத் தத்துவ மேதைகள் - 137 3.புத்தர் காலத்துத் தத்துவ ஆசிரியர்களும் பிற்காலத் தத்துவ ஞானிகளும் - 138 துணை நூல்கள் - 151 அனுபந்தம் - 2 வஜ்ராயணத்தின் தோற்றமும் எண்பத்து நான்கு சித்தர்கணமும் - 152 அத்தியாயம் ஒன்று ,கௌதம புத்தரின் அடிப்படை தத்துவங்கள் என்னும் தலைப்பில் பின்வருமாறு தொடங்குகிறது : " புத்தருடைய மூன்று எதிர்ப்பு தத்துவங்களையும் ஒரு அங்கீகாரத் தத்துவத்தையும் தத்துவத்தையும் மொத்தம் கீழ்க் காணும் நான்கு தத்துவங்களையும் அறிந்துகொண்டால் அவருடைய உபதேசங்களைப் புரிந்து கொள்ள உதவிகரமாக இருக்கும். 1. கடவுளை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது. கடவுள் என்பதை ஏற்றுக் கொண்டால் 'மனிதன் தனக்குத்தானே எஜமானன்' என்னும் சித்தாந்தத்தை எதிர்ப்பதாகிவிடும் 2.ஆன்மாவை நிரந்தரமானது என்று ஒப்புக் கொள்ளாமல் இருப்பது. ஆன்மாவைச் சாஸ்வதமானதாக ஒப்புக்கொண்டால் பிறகு அதன் புனிதத்திற்கும் முக்திக்கும் வாய்ப்பே இல்லாமல் போய்விடும். 3.எந்த ஒரு நூலையும் கடவுள் அருளியதாக ஒப்புக்கொள்ளாமல் இருப்பது. அப்படி ஒப்புக்கொண்டால் அறிவையும் அனுபவத்தையும் எதற்குமே ஆதாரமாகக் கொள்ள முடியாமல் போய்விடும். 4. வாழ்வின் பிரவாகத்தைத் தற்போதைய உடலுக்கு மட்டுமே சொந்தமாகக் கருதாமல் இருப்பது. அப்படிக் கருதினால் வாழ்வும் அதன் பல்வேறு அம்சங்களும் காரண காரிய விதிகளின்படி தோன்றியவையாக இல்லாமல் வெறும் திடீர் நிகழ்ச்சிகளாகிவிடும் " ( ப.1 ) இந்த நான்கு தத்துவங்களையும் தெளிவாகப் புரிந்துகொண்டால் புத்தரின் தத்துவங்கள் அத்தனையையும் முழுமையாகவும் தெளிவாகவும் புரிந்து கொள்ள முடியும் . இதை இந் நூலின் முதல் பக்கத்திலேயே அழகாகத் தொகுத்து வழங்கி உள்ளார் ராகுல்ஜி. புத்தரின் தத்துவங்கள் எங்கும் இந்த நான்கு தத்துவங்களும் அடங்கி இருப்பதைப் பயில்கிற ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள முடியும். இந்த நூலிலும் அத்தகைய போக்கு ஊடாடி உயிரோடி இழையோடி நிற்கிறது. கௌதம புத்தர் என்னும் தலைப்பில் அமைந்துள்ள அத்தியாயம் இரண்டில், சித்தாந்த கௌதமராய்ப் பிறந்த புத்தர் புத்தராய் மலர்ந்து ஞானம் பரப்பிய அவரின் வரலாறு முழுவதும் அவரின் மெய்யியல் பின்னணிகளோடு விளக்கப்பட்டுள்ளது. "அழிவுடையவை, துன்பம், ஆன்மா இல்லை " இத்தொடரிலேயே புத்தரின் தத்துவம் எல்லாம் அடங்கி விடுகிறது" ( ப.38 ) என்று ஓர் இடத்தில் எழுதிச் செல்கிறார். உண்மை இதுதான். இவற்றை விவரித்து விளக்கி நுண்பொருள் கண்டு அறிந்து கொள்கிறபோது இந்தத் தொடரின் ஆழமும் நுட்பமும் நமக்கு நன்றாகப் புலப்படும். நாகசேனர் என்னும் தலைப்பிலான அத்தியாயம் மூன்றில், நாகசேனர் பௌத்த தத்துவத்தை எவ்வெவ்வாறு விளக்கியுள்ளார் என்கிற செய்திகள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. பவுத்த மதப் பிரிவுகள் என்னும் தலைப்பிலான அத்தியாயம் நான்கில், பவுத்த மதம் தொடக்கத்தில் மகா சாங்கிக், ஸ்தவிரவாதம் என்ற இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து அதற்குப் பின்னர் 125 ஆண்டுகளில் ஸ்தவிரவாதம் 12 பிரிவுகளாகவும் மகாசாங்கிக் ஆறு பிரிவுகளாகவும் ஆகிவிட்டதையும் அப்பிரிவுகள் முன்வைக்கும் தத்துவப் பிரிவுகளையும் தத்துவக் கருத்துக்களையும் விளக்குகிறது. குறிப்பாக , பௌத்தர்களின் நான்கு தத்துவ பிரிவுகளான சர்வாஸ்திவாதம், சௌந்திராந்திகம், யோகாசாரம், மாத்யாமிக் ஆகியவற்றை விரிவாக இந்த இயல் விளக்குகிறது. மேலும் இவ்வியலில் சூனியவாதம் என்னும் தத்துவ வழியை முன்வைத்த நாகார்ஜுனர் , விஞ்ஞானவாதம் என்னும் யோகாசார மரபைச் சார்ந்த அசங்கர், வசுபந்து,தர்ம கீர்த்தி ஆகியோரின் கருத்துக்கள், வெளிப்பொருள் வாதம் என்னும் சவுந்திராதிகக் கருத்துக்கள், வெளி- உள்பொருள் வாதம் என்னும் சர்வாஸ்திவாதம் முன்வைத்த சங்க பத்திரர், வசுபந்து ஆகியோரின் கருத்துக்கள் ஆராயப்பட்டுள்ளன. பவுத்தத் தத்துவத்தின் உயர்மட்ட வளர்ச்சி என்னும் தலைப்பிலான அத்தியாயம் ஐந்தில், அசங்கர் (கி.பி.350), திக்நாகர் (கி.பி.425 ), தர்ம கீர்த்தி ( கி.பி. 600 ) ஆகியோரின் மெய்யியல் விளக்கங்கள், தருக்கவியல் நுட்பங்கள் ஆகியவை அழகுற விளக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஐந்து இயல்களில் அமைந்துள்ள இந்த நூலில் அனுபந்தங்கள் என்னும் பின்னணிப்புகளாக இரண்டு பெரும் கட்டுரைகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ஐந்து இயல்களையும் அவற்றில் உள்ளடங்கும் பௌத்த மெய்யியல் சிந்தனைகளையும் பௌத்த மெய்யியல் உருவாக்கப் பின்புலங்களையும் புத்தர் காலத்திற்கு முன்பும் புத்தர் காலத்திலும் புத்தர் காலத்திற்குப் பின்பும் அதாவது புத்தரின் முற்காலம், புத்தரின் தற்காலம், புத்தரின் பிற்காலம் ஆகிய முப்பெரும் காலகட்டங்களிலும் இந்தியாவில் விளைந்திருந்த பல்வேறு மெய்யியல் பின்புலங்கள் எவ்வாறு பௌத்தத்தின் மெய்யியல் மறுமலர்ச்சிக்குக் காரணங்களாக அமைந்திருந்தன என்பதை இந்த இரண்டு பின்னிணைப்புக் கட்டுரைகளும் விளக்குகின்றன. ஐந்து இயல்கள் கொண்ட இந்த நூல் 134 பக்கங்களில் அமைந்திருக்க அதே அளவிலான நூலின் செம்பாதிப்பகுதியை இந்த இரண்டு பின்னிணைப்புகளும் கொண்டிருக்கின்றன. இதிலிருந்து இரண்டு பின்னிணைப்புகளின் இன்றியமையாமை குறித்து நாம் அறிய முடியும். அத்தகைய பின்னிணைப்புகள் எனப்படும் அனுபந்தங்கள் இரண்டும் பின்வருமாறு : புத்தரின் முற்காலத் தத்துவ மேதைகள் என்னும் தலைப்பிலான அனுபந்தம் ஒன்றில் புத்தரின் முற்காலத் தத்துவ மேதைகளான சார்வாகர், அஜித கேச கம்பளர் - லோகாயதவாதி (கி.மு.523 ), மக்கலி கோஷால் - செயலாற்றாதவாதி (கி.மு. 523 ), பூரண காசியபர் - செயல் இல்லாத தத்துவவாதி ( கி.மு.523 ), பிரக்ரூத் கர்யாயனர் - நிரந்தரப் பொருள் வாதி (கி.மு.523 ), சஞ்சய பே லட்ட புத்தர் (கி.மு.523 ) வர்த்தமான மகாவீரர் - எல்லாமும் அறிந்த வாதம் ( கி.மு. 569 - 485 ) ஆகியோரின் மெய்யியல் சிந்தனைகள், அவை இந்திய மெய்யியல் சிந்தனை மரபில் பெறும் இடம், அவை பௌத்த மெய்யியல் சிந்தனைகளுக்கு உதவிய கூறுகள் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன. வஜ்ராயணத்தின் தோற்றமும் எண்பத்து நான்கு சித்தர்கள் என்னும் தலைப்பிலான அனுபந்தம் இரண்டில் , பௌத்த சமயத்தின் முக்கியப் பிரிவாக பிற்காலத்தில் உருவான வஜ்ராயணம் என்ற பௌத்தத் தத்துவப் பிரிவு குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்த வஜ்ராயண மரபில் தோன்றிய 84 சித்தர்கள் குறித்த செய்திகள் அழகாக விளக்கப்பட்டுள்ளன. இவற்றைத் தொடர்ந்து கீழைநாடுகளில் பௌத்த மறுமலர்ச்சி என்கிற தலைப்பில் பௌத்தம் பல்வேறு நாடுகளில் பரவிய செய்திகள் , பௌத்த மதத்தைப் பரப்பிய பௌத்த அறிஞர்கள், பிக்குகள் ஆகியவற்றைப் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் எழுதி உள்ளார். மங்கோலியா, திபெத்து, சீனா, கொரியா , இந்தோனேசியா, ஜப்பான், தாய்லாந்து , சிலோன் ஆகிய நாடுகளில் பௌத்தம் பரவிய செய்திகள் விளக்கப்பட்டுள்ளன. இக்கட்டுரையின் நிறைவுப் பகுதியில் இந்தியாவில் பௌத்தத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்கிற தலைப்பில் பௌத்தம் வளர்ந்த வரலாறும் பௌத்தம் விழுந்த பின்னணியும் விளக்கப்பட்டுள்ளன. இந்நூலின் தொடக்கத்திலேயே சொன்னது போல மூன்று கருத்துக்களில் அல்லது தத்துவங்களில் பௌத்தம் அடங்கி உள்ளது என்ற செய்தியை நூலின் இறுதியிலும் ஆழமாக இந்நூல் ஆசிரியர் பதிவு செய்துள்ளார்: " மூன்று சொற்களில் பௌத்த மெய்யியல்களைச் சுருக்கிக் கூறிவிடலாம். அனைத்தும் துக்கம், அனாகமம் அதாவது நிலையாமை , நிறைவின்மை, ஆன்மா இன்மை ஆகிய மூன்றும் பௌத்தரது போதனையின் அடித்தளம் " என்று விளக்கிவிட்டு ஓரிடத்தில் பௌத்தம் காலங்காலமாக மாறாமல் பின்பற்றும் ஒரு தத்துவமாக அனாத்மக் கோட்பாடு உள்ளது என்பதைப் பின்வருமாறு விளக்குகிறார் : " புத்தர் மறைவுக்குப் பின் 2000 ஆண்டுகளாக பௌத்தர்களிடையில் பல கருத்து வேறுபாடுகள் தோன்றின. முதலில் 18 பிரிவுகள் இருந்தன. பின் மகாயானம் வந்தது.அதன் பின் வஜ்ராயணம் வந்தது .ஒவ்வொருவரிடையும் பல கருத்து மோதல்கள் ஏற்பட்டன. ஆனால் அனைவருக்கும் ஒரே கருத்தில் வேற்றுமை இருந்ததில்லை .அதுதான் அனாத்மா " ( ப.229 ) இந்நூலின் இன்றியமையாமை பற்றிச் சுருக்கச் சொன்னால் , இந்நூலின்றி வரும் பெளத்த ஆய்வு முழுமைபெற்றதாகாது எனலாம். எனவே, பெளத்தத்தை அறிந்துகொள்ள, புரிந்துகொள்ள, ஆய்ந்துசொல்ல, பின்பற்ற விரும்பும் ஒவ்வொருவரும் அவசியம் பயிலவேண்டிய நூலாக இந்நூல் திகழ்கிறது. பதிப்பக முகவரி: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41 - பி, சிட்கோ இண்டஸ்ட்ரி ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை - 600 098 இரண்டாம் அச்சு: ஜனவரி 2003 விலை : ரூ.75/- https://m.facebook.com/story.php?story_fbid=pfbid027RAnyYkBMm9GhwBjFTqiVMXk3waEu91vvqTUshHFjM6wozuVHD7Hf47iyhYhQYHHl&id=100007862881487&mibextid=Nif5oz

Wednesday 18 January 2023

ஒரு நாள்; ஒரு நூல் - 12. பெளத்தக் கலை வரலாறு - டாக்டர் ஜி.சேதுராமன், 12.01.2023

12.01.2023 ஒரு நாள் ; ஒரு நூல் - 12 பௌத்தக் கலை வரலாறு -- டாக்டர் ஜி சேதுராமன் இந்நூல் ஜெ.ஜெ. பப்ளிகேஷன்ஸ், மதுரை மூலமாக ஏப்ரல் 2006 இல் முதல் பதிப்பாக வெளிவந்துள்ளது. இந்நூல் 246+ 34 = 280 பக்கங்களைக் கொண்டுள்ளது. பௌத்தக் கலை வரலாறு என்னும் பொருண்மையில் தமிழில் முதன் முதலில் வெளிவந்த நூல் இந்நூல் என்பது இந்நூலுக்கு உரிய பெருமையும் சிறப்பும் ஆகும். இந்நூலைப் படைத்துள்ள டாக்டர் ஜி.சேதுராமன் அவர்கள் கடின உழைப்பு, சிறந்த தேடல், சிறந்த ஆய்வு அணுகுமுறை,சிறந்த ஆய்வு நெறிமுறை ஆகியவற்றோடு இந்நூலைப் படைத்தளித்துள்ளார். பௌத்தக் கலை வரலாறு குறித்து "தமிழில் ஒரு நூல் கூட இல்லை என்று பல ஆண்டுகளுக்கு முன்னர் என் மனதில் ஓர் ஆதங்கம் தோன்றியது.அதன் விளைவுதான் பௌத்தக் கலை வரலாறு என்னும் இச்சிறிய படைப்பு " என்று நூன்முகம் என்னும் பகுதியில் தன்னடக்கத்தோடு தெரிவித்துள்ளார். இந்நூலைப் பயில்கிற எவர் ஒருவரும் வியக்காமல் இருக்க முடியாது. இரண்டு விதமான வியப்புகள் இந்நூலைப் படிக்கிறபோது தோன்றுகிறது. பௌத்தக் கலை மரபு இத்தகைய பெருமையும் சிறப்பும் சீர்மையும் ஓர்மையும் அழகியலும் வாய்ந்ததா என்கிற வியப்பு, ஒன்று.இந்நூலை எவ்வளவு தரவுகளோடு,எவ்வளவு செறிவோடு, எவ்வளவு நுட்பமான விளக்கங்களோடு பேராசிரியர் படைத்தளித்துள்ளார் என்கிற வியப்பு, இன்னொன்று. இவ்வாறான வியப்பைத் தரக்கூடிய இந்நூலின் பொருளடக்க முறைமை பின்வருமாறு அமைக்கப்பட்டுள்ளது: முன்னுரை 1.கட்டடக்கலை - 1 2. சிற்பக்கலை - 69 3.ஓவியக்கலை - 156 4.தமிழகத்தில் பௌத்தக் கலை - 186 5.ஆசிய நாடுகளில் பௌத்தக் கலை - 206 6.கலைச்சொல் விளக்கம் - 240 7.நோக்கு நூற்பட்டியல் - 244 நிழற்படங்கள் - 247 முன்னுரை என்னும் பகுதி இந்நூலைப் படிப்பதற்கான திறவுகோல்களைத் தருவதாக அமைந்துள்ளது. கட்டடக்கலை என்னும் முதல் இயல் மூன்று முக்கியப் பொருண்மைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. பௌத்த கட்டடக் கலைச் சின்னங்கள் 3 வகைகளாக அமைந்துள்ளன. ஒன்று, ஸ்தூபம். இரண்டு, சைத்தியங்கள், மூன்றுவிகாரங்கள். இந்த மூன்று கட்டடக்கலை மரபுகளும் பௌத்தக் கட்டிடக்கலை மரபுகளில் எவ்வெவ்வாறு இடம் பெற்றுள்ளன,0இத்தகைய ஸ்தூபங்கள், சைதன்யங்கள், விகாரைகள் இந்தியா முழுவதும் எங்கெங்கெல்லாம் அமைக்கப்பட்டுள்ளன என்கிற செய்திகளை விரிவாகவும் செரிவாகவும் விளக்கி எழுதியுள்ளார். இரண்டாவது இயலான சிற்பக்கலை என்னும் இயலில் பௌத்தச் சிற்பக் கலைகள் எந்தெந்த ஆட்சி காலங்களில் உருவாக்கப்பட்டு இன்றைக்கு கிடைக்கின்றன என்ற செய்திகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. அவை முறையே,0மௌரியர் காலச் சிற்பங்கள், சுங்கர்,சாதவாகனர் காலச் சிற்பங்கள், குஷானர் காலச் சிற்பங்கள், குப்தர் காலச் சிற்பங்கள்,பிந்திய சாதவாகனர் காலச் சிற்பங்கள் என்றவாறு வரலாற்றுக் கால முறைமை அடிப்படையில் தொகுத்து எழுதியுள்ளார். மூன்றாவது இயலாத ஓவியக்கலை என்னும் தலைப்பில் ஓவியக்கலை இந்தியா முழுவதும் எங்கெங்கே உருவாக்கப்பட்டுள்ளன,0 அவற்றில் இடம்பெறும் பௌத்தக் கலை நுட்பங்கள் யாவை, அவை உணர்த்தும் செய்திகள்,கருத்துக்கள் ஆகியவை அழகுற விளக்கப்பட்டுள்ளன. ஓவியக்கலையும் வரலாற்றுக் கால நிரல்படி ஆராயப்பட்டுள்ளது. சாதவாகனர் காலம், குஷானர் காலம்,குப்தர் காலம் , வாகாடகர் காலம், பாலர், சேனர் காலம் என்றவாறு விரிவாக எழுதப்பட்டுள்ளது. நான்காம் இயலாமான தமிழகத்தில் பௌத்த கலை என்னும் தலைப்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்றுள்ள பௌத்தக் கலை மரபுகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன .காஞ்சி, காவிரிப்பூம்பட்டினம்,0 தென்னார்க்காடுபகுதி, புதுக்கோட்டை ,திருச்சி, தஞ்சாவூர் ,திருவாரூர்,நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடம்பெற்றுள்ள பௌத்த விகாரைகள், சிற்பங்கள், சிலைகள், செப்புத் திறமைகள் ஆகியவை தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. ஐந்தாம் இயலான ஆசிய நாடுகளில் பௌத்த கலை என்னும் தலைப்பில் இலங்கை, நேபாளம், திபெத், பர்மா, ஜாவா, தாய்லாந்து, கம்போடியா ,சீனா, கொரியா உள்ளிட்ட 9 ஆசிய நாடுகளில் பரவி உள்ள பௌத்த கலை குறித்த செய்திகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இயலிலும் கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை ஆகிய முப்பரிமாண நிலை இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு இயலிலும் ஒவ்வொரு கலைகளிலும் உள்ள கால அடிப்படையிலான வேறுபாடுகள், புதுமைக்கூறுகள், அழகியல் நுட்பங்கள் என்று இன்ன பிற கலை நுட்பக் கூறுகள், அவற்றின் தனித்தன்மைகள், பொதுமைக் கூறுகள் என்ற அடிப்படையில் மிக நுட்பமாக ,ஆழமாக, அழுத்தமாக, விரிவாக,செறிவாக எழுதப்பட்டுள்ளன. ஆங்காங்கே ஒவ்வொன்றையும் விளக்குகையில் அவை அதாவது பௌத்தக் கலை நுட்பங்கள் எவ்வாறு சைவ,வைணவ, சமணக் கலை மரபுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை மிக அழகாக விளக்கியுள்ளார் ஆசிரியர். கலை நுட்பக் கூறுகளில் ஒளிரும் மெய்யியல் பின்புலங்கள் ஆங்காங்கே விளக்கப்பட்டுள்ளவை மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். இந்நூலை இளம் ஆய்வாளர்கள் அவசியம் பயில வேண்டும். அவ்வாறு பயில்வார்களானால் இந்நூலில் இருந்து ஏராளமான ஆய்வுக் களங்களைக் கண்டறிய முடியும். அவர்களின் மேலாய்வுகளுக்கு இந்நூல் அரிய ஆய்வுக் கருவியாகப் பயன்படும் என்பது வெள்ளிடைமலை. மொத்தத்தில், இந்நூல் பெளத்த வரலாற்றுக் கலைக்களஞ்சியம் ஆகும். இந்நூலில் இடம்பெற்றுள்ள படங்கள் வண்ணப் படங்களாக இருந்தால் மிகவும் இரசனை தருவதாக இருக்கும். இந்நூலை ஏதேனும் ஒரு பதிப்பகம் மறுபதிப்பு செய்தால் நல்லது. இதுகுறித்து நூலாசிரியர் முயற்சி எடுக்கவேண்டும் என்று வேண்டுகிறேன். பதிப்பக முகவரி: J.J.Publications, 29, Karpaga Vinayagar Complex, K.Pudur, Madurai - 625 007 Ph . 0452-2565526 விலை.ரூ.124/-. https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0t3fPb7R9FcQuZzWz4JVKrAVNLK2TPNLCbPmqsJeeoSGep5Re5pdcJXXNHcMH9Yccl&id=100007862881487&mibextid=Nif5oz

ஒரு நாள் ; ஒரு நூல் - 11. புத்தர் வசனம் - ஆங்கிலத்தில் : எஸ்.தம்மிகா, தமிழில்: தி.சுகுணன், 11.01.2023

11.01.2023 ஒரு நாள்; ஒரு நூல் - 11 புத்தர் வசனம் ( புனித பெளத்த இலக்கியத்திலிருந்து தினசரி படிக்க வேண்டியவை ) -- ஆங்கிலத்தில் : எஸ்.தம்மிகா , தமிழில்: தி.சுகுணன் சென்னை, நாம் தமிழர் பதிப்பகத்தின் முதற் பதிப்பாக ஏப்ரல் 2007 இல் வெளிவந்த நூல் இது. இந்நூல் 216 பக்கங்களைக் கொண்டது. பெளத்தத்தின் மூன்று புகலிடங்கள் புத்தம், தம்மம், சங்கம் ஆகியன. இம் மூன்றும் வடிவமைத்துத் தந்துள்ள அறநெறிகளினடிப்படையில் வாழ்வியலைத் தகவமைத்துக் கொள்வதே பெளத்த வாழ்வியல் ஆகும். இத்தகைய வாழ்வியலில் விரும்பும் ஒருவர் ஆண்டின் 365 நாள்களில் ஒவ்வொரு நாளும் மனங்கொள்ளத்தக்க பெளத்த வாழ்வியல் கடைப்பிடி நெறிகளை - சிந்தனைகளைத் தொகுத்து வழங்கும் நூலாக இந்நூல் விளக்குகிறது. இந்த அடிப்படையில் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை ஒவ்வொரு நாளுக்கும் உரிய சிந்தனைகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. இச் சிந்தனைகளில் சில சிந்தனைகள் வெகு எளிய சிந்தனைகளால் அதாவது ஒரு சராசரி மனிதர்கூடத் தானே சிந்திக்கக்கூடியனவாக உள்ளன. இவையெல்லாம் புத்தரின் சிந்தனைகளா என்று தோன்றும்வண்ணம் சில உள்ளன. ஆனால் நூலின் பெரும்பான்மையான சிந்தனைகள் மனித மனங்களை ஒழுங்கமைக்கும் ஆற்றல் வாய்ந்தனவாக உள்ளன. இன்றைய சிந்தனைக்காக இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ள சிந்தனை இதோ : ஜனவரி 11 " இந்தக் கோட்பாடுகள் வழிநடத்திச் செல்லவில்லை ; தியாகம் செய்யச் சொல்லவில்லை ; அசைவற்ற நிலையை மாற்றவில்லை ; அமைதி- எழுச்சியைக் கொடுக்கவில்லை ; நிர்வாண நிலைக்கு அழைத்துச் செல்லவில்லை என்று நீங்கள் கூறினால் அவை அறம் இல்லை என்று நீங்கள் உறுதியாக நம்பலாம் .அவை போதனைகள் அல்ல .அவை ஆசிரியரின் வார்த்தைகளும் அல்ல . ஆனால் எந்தக் கோட்பாடுகள் , போதனைகள் வழிநடத்திச் செல்கின்றன; அமைதியை -தியாகத்தை - போதிக்கின்றன; இயங்க வைக்கின்றன; மன நிம்மதியைக் கொடுக்கின்றன; மேலான அறிவைக் கொடுக்கின்றன; எழுச்சி கொடுக்கின்றன ; நிர்வாண நிலைக்கு அழைத்துச் செல்கின்றன என்று நீங்கள் கூறுகிறீர்களோ அதையே உண்மையான அறம் என்று நீங்கள் உறுதியாக நம்பலாம் . அவையே ஒழுக்க நெறிகள் ;அவையே ஆசிரியரின் போதனைகள். " இவ்வாறான ஒவ்வொரு நாளுக்குரிய சிந்தனைகளும் நல்ல மனநிலையையும் நல்ல வாழ்நிலையையும் கொடுக்கவல்லன என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இந்நூலை ஆங்கிலத்தில் படைத்தளித்துள்ள எஸ்.தம்மிகா என்பவர் ஒரு பெளத்தப் பிக்கு ஆவார். எனவே, தான் பிக்கு ஆவதற்கு மனதைச் செம்மை செய்யப் பயன்பட்ட அறவியல் சிந்தனைகளைப் பிறரும் பயன்கொள்ளும் வண்ணம் அழகுறத் தொகுத்தளித்துள்ளார். இந்நூலைத் தமிழில் தி.சுகுணன் அவர்கள் தெளிவாக மொழிபெயர்த்துத் தந்துள்ளார். இந்நூலைத் தொகுத்தளிக்கும் வாழ்வியல் தகுதியுடையவராக இவர் விளங்குகிறார் ; எவ்வாறெனில், தான் படிக்கிறோம் ; பின்பற்றுகிறோம் ; மற்றவர்க்குக் கற்பிக்கிறோம் என்பதோடு தன் குடும்பத்தினரையும் பண்படுத்திப் பெளத்த நெறியில் ஆற்றுப்படுத்துபவராகத் திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். தன் குழந்தைகள் நால்வரில் மூவருக்கு பெளத்தப் பெயர்களைச் சூட்டிக் கொள்கைநெறியில் ஆற்றுப்படுத்துபவராகத் திகழ்கிறார் இவர். ஆம். இவரின் பிள்ளைகளின் பெயர்கள் முறையே, சு.கெளதமன், சு.அண்ணாதுரை, சு.அசோகன், சு.சங்கமித்ரா என்பனவாகும். இந்நூலின் மூலநூலில் ஒவ்வொரு நாளுக்கும் கொடுக்கப்பட்டுள்ள சிந்தனைகளுக்குமான நூல் மேற்கோள் சான்றுக் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளனவா என்று தெரியவில்லை. அவ்வாறு இருந்தால் இனிவரும் தமிழ்ப் பதிப்புகளில் அவற்றைக் கொடுப்பது நலமாகும். பதிப்பக முகவரி: நாம் தமிழர் பதிப்பகம், 6/16, தோப்பு வேங்கடாசலம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை - 600 005 பேச : 044- 2944 3791, 94440 82232 முதல் பதிப்பு : ஏப்ரல் 2007 விலை : ரூ.80/-

ஒரு நாள் ஒரு நூல் -16. கெளதம புத்தர் அடிச்சுவட்டில் - சோ.சிவபாதசுந்தரம்.16.01.2023

16.01.2023 ஒரு நாள் ; ஒரு நூல் - 16 கெளதம புத்தர் அடிச்சுவட்டில் - சோ.சிவபாதசுந்தரம் சென்னை, வானதி பதிப்பகத்தின் இரண்டாம் பதிப்பாக 1991 இல் இந்நூல் வெளிவந்துள்ளது. 20 + 370 = 390 பக்ககங்களைக் கொண்டுள்ளது இந்நூல். இந்நூலின் முதல் பதிப்பு இதே பதிப்பகத்தின் வெளியீடாக 1960 இல் வெளிவந்துள்ளது. இப்பொழுதும் வெளிவரவேண்டிய தேவையுள்ள நூலாக இந்நூல் திகழ்கிறது. 32 தலைப்புகளின் கீழ் அமைந்துள்ள மாபெரும் இரசனை மிக்க பயணநூலாக இந்நூல் விளக்குகிறது. இந்நூல் வெறுமனே பயணநூலாக மட்டுமல்லாமல் வரலாற்று நூலாகவும் தத்துவநூலாகவும் திகழ்கிறது. எனவே, பயணநூல், வரலாற்று நூல், தத்துவநூல் என்ற முப்பரிமாண - முப்பரிணாம நூலாக உள்ளமை இந்நூலின் தனிச்சிறப்பு ஆகும். 1955 ஆம் ஆண்டு வாக்கில் அறிஞர் சோ.சிவபாதசுந்தரம் அவர்களால் அரிதின் முயன்று மேற்கொள்ளப்பட்ட பயணத்தின் நல்விளைச்சல் இந்நூல். கெளதம சித்தார்த்தர் பிறந்த உலும்பினி, வாழ்ந்த கபிலவஸ்து, புத்தர் ஞானம் பெற்ற புத்தகயா, முதல் உபதேசம் செய்த சாரநாத், அதனைத் தொடர்ந்து உபதேசம் செய்த இடங்களான இராஜகிருகம், சிராவஸ்தி, வைசாலி,கெளசாம்பி, சங்கர்ஷ புரம், நாளந்தா, பாடலிபுரம், நிறைவில் புத்தர் பரிநிர்வாணம் அடைந்த குசிநரா உள்ளிட்ட எல்லா இடங்களையும் நேரில் கண்டு ஆராய்ந்த அனுபவத் திரட்டே இந்நூல். ஏற்கனவே, இந்நூலாசிரியர் மாணிக்கவாசகர் அடிச்சுவட்டில், சேக்கிழார் அடிச்சுவட்டில் ஆகிய இரு நூல்களை இதேபோல் பயண அனுபவ நூல்களாகப் படைத்தளித்தவர். இத்தகைய முன்னனுபவ அடிப்படையில் எழுந்த இந்நூல் மிகச்சிறந்த பயணநூலாக விளங்குகிறது. இந்நூலின் பொருளடக்க நிரல் பின்வருமாறு: 1.எக்கா வண்டி - 1 2. சாக்கியர் நகரம் - 9 3.குதிரை முதுகிலே - 28 4.குழந்தை பிறந்தது - 37 5.சோதிடன் வாக்கு - 48 6.அழகுப் போட்டி - 60 7.கண்டதும் கேட்டதும் - 71 8.கட்டவிழ்த்த காளை - 81 9.நெடும் பயணம் - 92 10. மகதத்தின் தலைநகர் - 99 11.பால் பாயாசம் - 114 12.தவம் பலித்தது - 122 13.கோயிலைக் கண்டேன் - 127 14. கங்கா ஸ்நானம் - 143 15.சக்கரம் சுழன்றது - 156 16.மான் காடு - 172 17. மூன்று முனிவர்கள் - 182 18. தந்தையும் மகனும் - 200 19.வள்ளல் மகிழ்ந்தான் - 214 20.விலையும் மதிப்பும் - 226 21.கோசலத் தலைநகர் - 240 22 .வானக்காட்சி - 254 23. புயலும் அமைதியும் - 262 24. சூழ்ச்சி நாடகம் - 267 25.வினையும் விளைவும் - 253 26. தளகர்த்தர் பிரிவு - 292 27. பல்கலைக்கழகம் - 297 28. கங்கையைக் கடந்தது - 302 29. பெண்ணுக்கு சம உரிமை - 311 30. மாஞ்சோலை மங்கை - 321 31. மகா பரிநிருவாணம் - 339 32 .யாத்திரை முடிந்தது - 354 முடிவுரை - 361 அனுபந்தம் - 363 ஆதார நூல்கள்- 373 சிறப்புப் பெயர் அகராதி - 375 மேலே கண்டவறான 32 அத்தியாயங்களில் அமைந்துள்ள இந்நூலின் முழுச் செய்திகளையும் தொகுத்து வழங்குதல் விரிவாக அமையும் என்பதால் முதல் நான்கு அத்தியாயங்களில் இடம்பெற்றுள்ள மிக முக்கியமான செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறேன் : கௌதம புத்தர் அடிச்சுவட்டில் என்ற தலைப்பிலான பயணத்தைத் தொடங்கிய அறிஞர் சோ.சிவபாதசுந்தரம் அவர்கள் காசியில் இருந்து பயணத்தைத் தொடங்குகிறார். காசியில் இருந்து கோரக்பூர்... கோரக்பூரிலிருந்து கோண்டா .... கோண்டாவில் இருந்து ஷோரத்கர் என்ற சிறிய ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி அங்கிருந்து தெளலீவா என்ற இடத்துக்கு அருகில் உள்ள கபிலவஸ்து செல்கிறார். ஷோரத்கர் என்ற இடத்தில் இருந்து எக்கா வண்டியில் பயணம் செய்கிறார்.எக்கா வண்டியில் இருந்து தெளலீவா செல்வதற்குப் பத்து மைல் தூரம் பயணம் மேற்கொள்கிறார். இந்த 10 மைல் தூரத்திற்கு எக்கா என்னும் வடநாட்டுக் குதிரை வண்டிக்காரனிடம் 4 ரூபாய்க்குப் பேசிப் பயணம் மேற்கொள்கிறார். பயணத்தின்போது 1200 ரூபாய் விலை உள்ள புகைப்படக் கருவியைக் கொண்டு சென்றுள்ளார். இந்த பத்து மைல் தூரப் பயணத்தின் " பாதி தூரம் கழிந்ததும் பாரதத்தின் வட எல்லை முடிவுற்று நேபாள ராஜ்ஜியம் உதயமாவதை கண்டேன்.இன்றும் அதைக் குறிப்பிட ஒரு பெரிய துணை நாட்டி வைத்திருக்கிறார்கள் " ( ப.7) என்றும் குறிப்பிடுகிறார். செல்கிற வழி எங்கும் வயல்கள் நிறைந்திருப்பதையும் அங்கு காலையில் எருதுகள் , எருமைகள் , யானைகள் ஆகியவற்றைப் பூட்டி உழவர்கள் உழுவதையும் கண்டதாகச் சொல்கிறார்.இந்தப் பகுதி குறிஞ்சியும் மருதமும் உறவு கொண்டாடும் அற்புதக் காட்சிமிக்கதாக இருந்தது என்கிறார் ( ப.7).ஒரு வழியாகத் தெளலீவாவிற்குச் செல்கிறார். தெளலீவா மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள ஒரு சிறு கிராமம் என்கிறார்( ப.9). அங்கு ஒரு சிறு தேநீர்க்கடையில் கபிலவஸ்து எங்கு இருக்கிறது என்று கேட்கிறார். அவர்கள் இதோ அருகில் இருக்கிற சாஸ்திரி அவர்களைப் பாருங்கள் என்று சொல்கிறார்கள். சாஸ்திரியிடம் சென்றதும் அவர் இந்தி பத்திரிக்கையை படித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு அருகிலேயே ' ஸாங்கிய தர்ஸனம்' என்ற சமஸ்கிருத நூல் கிடக்கிறது. அவர் பெயர் கிருஷ்ணச்சந்திர சாஸ்திரி. அவரிடம் கபிலவஸ்து எங்கே உள்ளது என்று கேட்டதும் "இந்தக் கிராமமே தான் கபிலவஸ்து . கடந்த 14 வருட காலமாக நான் இங்கு வசித்து வருகிறேன். புராதன கபில வஸ்து நகரம் சம்பந்தமாக ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன். தொல்பொருள் ஆராய்ச்சிக் கலை தான் எனது சொந்த பிரீதி. பௌத்த மத நூல்களைக் கற்றுவிட்டு இந்தக் கபிலவஸ்துவை பற்றி ஒரு ஆராய்ச்சி நூல் எழுதி வருகிறேன்" ( ப.11) என்று கிருஷ்ண சாஸ்திரி சொல்கிறார். மேலும் புத்த கயாவைப் பற்றி நூல்கள் உள்ளன. சாரநாத் பற்றி நூல்கள் உள்ளன .சாஞ்சியைப் பற்றியும் நூல்கள் உள்ளன. ' ஆனால் கபில வஸ்துவைப் பற்றி ஒரு புத்தகம் கூட இல்லை " ( ப.11) என்றும் அவர் குறிப்பிடுகிறார். இந்தப் பகுதியில்தான் சாக்கியர், கோலியர், மள்ளர் என்ற வகுப்பினர் ஆகியோர் வாழ்ந்து வந்தனர் என்பதை அறிந்து கொள்கிறார். இதைத்தொடர்ந்து புத்தரின் பிறப்புக்கதைகளை அறிந்துகொள்கிறார். அறிந்தவற்றை அப்படியே விவரிக்கிறார். இதனைத் தொடர்ந்து கிருஷ்ண சாஸ்திரி இந்த ஊரிலேயே மங்கள்மான் வஜ்ராச்சார்யா என்ற பெயருள்ள நேபாள நண்பர் ஒருவர் இருக்கிறார் .பௌத்த மதத்தில் நிறைந்த பற்றுள்ளவர். அவரை கண்டு வருவோம் என்று அழைத்துச் செல்கிறார். இந்த தெளலீவா எனப்படும் சுற்றுச்சூழல் பற்றி விவரிக்கிறார். இவ்வூரை வந்து கண்டு எழுதிய சீனப்பயணி பா ஹியுன், இன்னொரு சீனப் பயணி ஹியூங் ஸியாங் ஆகியோரின் பயணக் குறிப்புகள் குறித்து எழுதுகிறார் . தெளலீவாவில் மகாதேவ ஆலயம் என்ற பெயரில் உள்ள சிவலிங்கம் உள்ள ஆலயத்தை அங்குள்ள மக்கள் வழிபட்டு வருவதை அறிகிறார். அந்த இடம் ஒரு காலத்தில் பௌத்த சைத்தியமாக இருந்தது என்பதை அறிந்துகொள்கிறார். இந்த மகாதேவ ஆலயத்திலிருந்து சுமார் ஒரு மைல் தூரத்தில் கில்லோரா கோட்டம் என்கிற பகுதியில் அப்பொழுதும் ஏராளமான தொல்பொருள் சான்றுகள் கிடைப்பதைக் குறிப்பிடுகிறார். அங்கு ' ஸமய மஹீ' என்ற ஒரு விக்கிரகத்தை வைத்து வழிபட்டு வருகிறார்கள் என்பதையும் குறிப்பிடுகிறார். இவ்வாறு கபிலவஸ்துவை சுற்றிப் பார்த்துவிட்டு ஷோரத்கர் ஸ்டேஷனுக்கு வந்து சேர்கிறார். ஷோரத்கர் ஸ்டேஷனில் நள்ளிரவு 12 மணிக்கு இறங்கிய அவர் அதிகாலை 4 மணிக்குப் புறப்பட்டு கபில வஸ்துவைச் சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் ஷோரத்கர் ஸ்டேஷனை அடையும்போது இரவு மணி ஏழாகிவிட்டது என்கிறார். அதனைத் தொடர்ந்து கபிலவஸ்துவிலிருந்து மாயாதேவி பிரசவத்துக்காக தேவதான நகரத்திற்கு புறப்பட்டு சென்றாள். அவ்வாறு செல்லும் வழியில் லும்பினி வனத்தில் சித்தார்த்தனை ஈன்றெடுத்தாள் அல்லவா ...?!அந்த இடத்தைக் காணப் புறப்படுகிறார். ஷோரத்கரிலிருந்து நேபாளத்துக்கு அருகில் உள்ள நௌத்தன்வா என்ற இடத்தில் ரயில் நின்று விடுகிறது. அங்கு வழித் துணையாக வந்த வஸந்த ராம் என்பவரை அழைத்துக் கொண்டு லங்கா பாபா தர்மசாலாவைக் கண்டுபிடிக்கிறார். இந்த இடத்தில் ' ஸ்ரீ கும்பல் வெல ஸ்ரீநிவாஸ நாயக தேரர்'என்ற பௌத்தப்பிக்கு 'லங்கா பாபா' என்ற பெயருடன் வசித்து வருகிறார். அவரைக் கண்டு லும்பினிக்கு வழிகேட்டுக் கொண்டு புறப்படுகிறார். நௌத்தன்வா என்ற இடத்திலிருந்து லும்பினி பத்து மைல் தூரத்தில் உள்ளது என்று அறிந்துகொண்டு பயணிக்கிறார். நேபாளத்தில் பயணம் செய்கிறபோது " ' நேபாள் தரை' என்று வழங்கப்படுகிற அந்தப் பிரதேசம் கிட்டத்தட்ட மதுரை, ராமநாதபுரம் ஜில்லாப் பிரதேசம் போலவே காட்சியளித்தது " ப.33) என்கிறார். அங்கே ஐந்தாறு குடிசைகள் உள்ள ஒரு சேரியைக் காண்கிறார்.அவர்கள் மள்ளர் என்ற ஜாதியினர் என்பதை அறிந்துகொள்கிறார். இவர்கள் அங்கு வேளாண்மை செய்துகொண்டு வாழ்கிறார்கள். "இந்த மள்ளர் ஜாதியினர்தான் சாக்கியர், கோலியர் போல, விரிஜி நாட்டுக்கு வடக்கே புத்தர் காலத்திலே வாழ்ந்தவர்கள். புத்தர் இறந்த சமயத்தில் அவரது வேண்டுகோளின்படி மள்ளர் ஜாதியினரே குசீ நகரில் அவர் உடலைத் தகனம் செய்தவர்கள். அக்காலத்திலேயே பிற்போக்கிலிருந்த மள்ளர் இன்றும் அதே நிலையில் இருந்து வருவது ஆச்சரியம்தான் ! " ( ப.35) என்று குறிப்பிடுகிறார். காலை ஐந்து மணிக்கு புறப்பட்டு லும்பினி சென்று சேரும்போது பத்து மணி ஆகிவிட்டது என்கிறார். " கபில வஸ்து நகரத்திலிருந்து லும்பினி பல்லக்கில் பிரயாணம் செய்தாள் மாயாதேவி. ராஜ மரியாதைகளுடன் பலவித பரிவாரங்கள் புடை சூழ வந்தாள். ஆகையால் அந்தக் காலத்தில் இவ்வளவு பிரயாண கஷ்டம் அவர்களுக்கு இருந்திருக்க முடியாதுதான் " ( ப.36 ) என்று குறிப்பிடுகிறார். லும்பினி வனத்தில் வைசாக பூர்ணிமை நாளில் சித்தார்த்தர் பிறந்தார் என்ற செய்தியைக் கூறி அதுகுறித்து விம்பசார கதை, மணிமேகலைக் காப்பியம் ஆகியவற்றில் உள்ள செய்திகளைப் பாடல்களைக் குறிப்பிட்டுக் காட்டுகிறார். "லும்பினி கிராமத்துக்கு நான் சென்றபோது புத்த மகவு பிறந்த உபவனத்தையோ சால விருடக்ஷத்தையோ அங்கு காண முடியவில்லை .நேபாள அரசாங்கம் கட்டி வைத்திருக்கும் ஒரு மடம். பக்கத்திலே ஒரு குளம் . அக்குளத்தின் பக்கத்தில் ஒரு சிறிய கோயில். கோயிலுக்கு எதிரில் பாதி உடைந்து போயிருக்கும் அசோகா ஸ்தம்பம் ஒன்று. இவ்வளவும் சேர்ந்துதான் இன்றைய லும்பினி க்ஷேத்திரமாகக் காட்சியளிக்கிறது " ( ப.40 ) என்கிறார். " லும்பினி என்ற பெயர் இப்போது வழக்கில் இல்லை. இக் கிராமத்தை ' ரும்மிந்தேயி ' என்றுதான் வழங்கிவருகிறார்கள். ஆதியில் லும்பினி கிராமத்தில் மாயா தேவியின் ஆலயம் இருந்ததால் ' லும்பினி தேவி' என்று நேபாளிகள் இக்ஷகிராமத்துக்குப் பெயர் கொடுத்து வழங்கினர். லும்மின் தேயி, ரும்மின் தேயி என்று வழங்கி ரூபாதேவி 'என்ற பெயரே 'ரும்மிந்தேயி' என்று வழங்குகிறது என்று சிலர் சொல்கிறார்கள். .........சிறு சாந்துக் கட்டிடமாக உள்ளது. சிலை சுமார் 5 அடி உயரமும் நாலடி அகலம் உள்ள தட்டையான கல்லிலே மாயாதேவி சால விருக்ஷசத்தின் கிளை ஒன்றை வலக்கரத்தால் பற்றி நிற்பதாகவும் அவளது வலமருங்குல் வழியாகப் போதிசத்துவர் வெளிவருவதாகவும் பக்கத்தில் தேவர்கள் அந்த மகவை ஏந்தி நிற்பதாகவும் வானவர்கள் வணங்குவதாகவும் சேடி ஒருத்தி பக்கத்தில் இருப்பதாகவும் செதுக்கப்பட்டுள்ளது. " ( ப.41 ) " இச்சிலை அசோக மன்னரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதென்று கர்ண பரம்பரையாக வழங்குகிறது. ஆனால் அசோகன் காலத்தில் புத்த உருவம் வழக்கிலில்லை. போதி விருக்ஷசம் அல்லது தர்மசக்கரமே சின்னமாகவிருந்தது. இந்து சமய பூசாரியொருவர் இந்தச் சிலைக்கு நித்தியம் குங்குமமும் புஷ்பமும் சாத்திப் பூஜை செய்து வருகிறார் "..... ( பக்.41-42 ). " புத்தர் அவதரித்த இந்த லும்பினி ஸ்தலத்தை முதன்முதலாகக் கண்டுபிடித்தது நிர்ணயித்தவர் டாக்டர் ஃபூரர் என்பவர். 1896 ஆம் ஆண்டிலே ரும்மிந்தேயிபகுதியில் ஆராய்ச்சி செய்தபோது தற்செயலாக அசோக ஸ்தம்பம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்த ஸ்தம்பத்தில் ஐந்து வரிகளிலே பிராஹ்மி எழுத்துக்களில் கல்வெட்டு சாசனம் காணப்பட்டது" ( ப.42) என்று அந்த சாசனத்தையும் குறிப்பிடுகிறார். " இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளாக வெயிலையும் மழையையும் தாங்கி நின்ற போதிலும் ஸ்தம்பம் மெருகு குன்றாமல் புத்தம் புதிதுபோற் காட்சியளிப்பதுதான் விந்தை. கல்வெட்டு எழுத்துக்கள் சிறிதும் பழுதுபடாமல் காணப்படுகின்றன " ( ப.43 ) என்றும் குறிப்பிடுகிறார். " கோயிலுக்கும் அசோக ஸ்தம்பத்துக்கும் அருகாமையில் ஒரு குளம் காணப்படுகிறது. இதை பிரம்ம குண்டம் என்று சொல்கிறார்கள். ...அசோகன் காலத்தில் ஒரு ஸ்தூபியும் விஹாரமும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. .....இந்த இடத்தில் புதியதோர் விஹாரத்தைக் கட்டியெழுப்ப நேபாள அரசாங்கம் திட்டம் போட்டு இருப்பதாக அறிந்தேன். ( இவ் விஹாரம் இப்போது கட்டப்பட்டு விட்டதாகத் தெரிகிறது ) ( பக்.43-44 )என்று குறிப்பிடுகிறார். மேலும், " நேபாள அரசாங்கத்தின் செலவிலே லும்பினியில் ஒரு மடம் கட்டப்பட்டிருக்கிறது. அங்கு ஒரு பௌத்த பிக்ஷுவைச் சந்தித்தேன். பிக்ஷு சுந்தா என்பது அவர் பெயர். ........... நேபாளத் தலைநகர் காட்மண்டுவிலே 1944 ஆம் ஆண்டில் தர்மோதய சபா என்ற பெயரில் ஒரு பௌத்த நிலையம் ஸ்தாபிக்கப்பட்டது. இந்த பௌத்தநிலையம் பௌத்தர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் லும்பினியில் உள்ள மாயா தேவியின் கோயில் நிர்வாகம் இந்து பூசாரியைச் சேர்ந்தது " ( ப. 44 ). " போதிச்சத்துவர் லும்பினி கிராமத்தில் அவதரித்திருந்த போதிலும் அவர் ஞானோததயம் பெற்றுப் புத்தராகி தருமோபதேசம் செய்த காலத்தில் மற்றும் ஸ்தலங்களுக்கு சென்றது போல லும்படிக்கும் வந்ததாக பௌத்த நூல்கள் எதிலும் சொல்லப்படவில்லை.‌இது வியப்பைத் தருகிறது. ஆனால் ,. ' மஹாபரிநிர்வாண சூத்திரம்' என்ற நூலில் நான்கு முக்கிய க்ஷேத்திரங்களை ஒவ்வொரு பௌத்தரும் தம் வாழ்நாளில் பக்திச் சிரத்தையோடு ஒருக்காலாவது தரிசிக்க வேண்டும் என்று புத்தர் கூறியதாக ஒரு குறிப்பு உண்டு. அவை, லும்பினி, புத்தகயை, சாரநாத், குசீநகர் ஆகியவை. " ( பக்.44-45). "சீன யாத்திரிகனான பா ஹியான் கிபி ஐந்தாம் நூற்றாண்டில் லும்பினியைத் தரிசித்திருக்கிறான்.அவனுக்குப் பின் ஹியூங்ஸியாங் என்ற யாத்திரிகனும் இரண்டு நூற்றாண்டுகள் கழித்து அங்கு போய் இருக்கிறான்" ...(ப.45 ) என்று குறிப்பிட்டு பா ஹியான் குறிப்புகளையும் எடுத்துக்காட்டுகிறார். " லும்பினி வனத்தில் சால விருக்ஷங்கள் அடர்ந்திருந்தன என்று வரலாறு கூறுகிறது .........ஆனால் இன்றைக்கு லும்பினியில் மருந்துக்குக் கூட ஒரு சால விருக்ஷத்தை நான் காண முடியவில்லை.... அரசமரம் ஒன்றுதான் வளர்ந்திருப்பதைக் கண்டேன் ......... 1956 ஆம் ஆண்டு நடைபெற்ற புத்த ஜெயந்தி விழாவின் போது நேபாள அரசாங்கம் இங்கு சால விருக்ஷம் நாட்டியிருப்பதாக இப்போது அறிகின்றேன்." ( பக்.46 - 47 ). லும்பினியைச் சுற்றிப் பார்த்துவிட்டு நௌத்தன்வாவில் உள்ள லங்கா பாபா தர்மசாலைக்கு மறுபடியும் வரும்போது மாலை 3 மணி ஆகிவிட்டது என்று குறிப்பிடுகிறார்..... மேலே கண்ட செய்திகள் நான்கு அத்தியாயங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தொகுக்கப்பட்டவை ஆகும். இதேபோல் முப்பத்திரெண்டு அத்தியாயங்களையும் படித்தால் ஏராளமான புத்தம் புதிய செய்திகளையும் அனுபவ உணர்வுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் அறிந்துகொள்ள முடியும். இந்நூலிலிருந்து.... 1. புத்தர் வரலாறு 2.பெளத்த சமய வரலாறு 3.பெளத்த மெய்யியல், அறவியல் 4. நிலவியல் 5.சூழலியல் 6. வேளாண்மையியல் 7. பொருளாதார நிலை 8. தற்கால வரலாறு 9. பயணவியல் 10. மனித மாண்புகள் என அள்ள அள்ளக் குறையாத செய்திகளைப் படிப்பவர்கள் அறிந்துகொள்ள முடியும்.... இந்நூலைக் கையிலெடுத்துப் படிக்கத் தொடங்கினால் ஒரு நல்ல நாவலைப் படிப்பதைப் போன்ற உணர்வோடு விறுவிறுவெனப் படிக்க முடியும்.... ஷோரத்கர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து கபிலவஸ்து சென்று அங்கிருந்து லும்பினி, புத்தகயா, சாரநாத், குசீநகர் உள்ளிட்ட புத்தர் நடந்த பாதையெங்கும் நம் கையைப் பிடித்துக்கொண்டே நேரில் நாமே கண்டதுபோன்ற மனநிறைவைத் தரும் வகையில் ஒரு தம்மபத நடைப்பயணத்தையே நமக்குள் நிகழ்த்திக்காட்டிவிடுகிறார் இந்நூலாசிரியர். நூலின் முகப்பில் பதிப்புரை, முதற் பதிப்பு முன்னுரை, இரண்டாம் பதிப்பின் முன்னுரை ஆகியவை உள்ளன. முதற் பதிப்பு முன்னுரையை நூலாசிரியர் 11.5.60 வைசாக பூர்ணிமையன்று எழுதியுள்ளார் என்பது மனதுக்கு இனிமையான குறிப்பாகும். நீங்களும் படியுங்களேன்.... மறுபதிப்பு காணவேண்டிய நூலிது. பதிப்பக முகவரி: வானதி பதிப்பகம், 17, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை - 17 இரண்டாம் பதிப்பு: 1991 விலை : ரூ.55/- https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0ZWAKjEncfpxLu5wAku3ayv9KJSQV6b3mGnha7NMqz5PPoPC8Vgjs5bpFp5r8U1N9l&id=100007862881487&mibextid=Nif5oz

ஒரு நாள் ; ஒரு நூல் - 15.பெளத்தமும் கலைகளும் - முனைவர் க.குளத்தூரான் - 15.01.2023

15.01.2029 ஒரு நாள் ; ஒரு நூல் - 15 பெளத்தமும் கலைகளும் - முனைவர் க.குளத்தூரான் தஞ்சாவூர், இராசாமணி பதிப்பகத்தின் முதல் பதிப்பாக சனவரி 2006 ஆம் ஆண்டில் வெளிவந்த நூல் இது. இந்நூல் 190 பக்கங்களைக் கொண்டுள்ளது. இந்திய பெளத்தக் கலைமரபோடு கொரிய பெளத்தக் கலைமரபை ஒப்பிட்டுத் தமிழில் முதன்முதலில் வந்துள்ள அரிய நுட்பச் செறிவார்ந்த கலையழகியல் ஆய்வு நூலாகும். இந்நூலாசிரியர் பேராசிரியர் க.குளத்தூரான் அவர்கள் தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தத்துவ மையத்தில் பணியாற்றிய காலத்தில் 1990 செப்டம்பர் 01 முதல் 1990 நவம்பர் 30 வரையிலான மூன்று மாதக் காலகட்டத்தில் தென்கொரிய பன்னாட்டுப் பண்பாட்டுக் கழகம் வழங்கிய ஒரு ஆய்வுத்தகைமை பெற்று தென்கொரியாவில் நிகழ்த்திய ஆய்வுப் பயனாக விளைந்தது இந்நூல். இந்நூலில் இடம்பெற்றுள்ள பொருளடக்க அட்டவணை வருமாறு: பகுதி - I 1.பௌத்தம் - ப. 11 2.புத்தரும் பௌத்தமும் - 27 3. பௌத்த பிரிவுகள் - 45 4. போதிச்சத்வக் குறிக்கோள் - 78 பகுதி- II 5. இந்திய பௌத்த கலைகள் - 86 6.கொரிய பௌத்த கலைகள் - 111 பயன்பட்ட நூல் பட்டியல் - 153 நிழற்படங்கள் - 155 முதல் இயலான பௌத்தம் என்னும் தலைப்பில் உலக சமயங்களில் பௌத்த சமயம் பெறும் இடம் ,பௌத்தத்தின் கோட்பாடுகள், பௌத்த மெய்யியல் சிந்தனைகள், பௌத்த மெய்யியல் பனுவல்கள் , பௌத்தத்தின் வளர்ச்சி, ஆன்மீக வாழ்க்கை, நிர்வாணம் ஆகிய பொருண்மைகளில் ஆழமான கருத்துக்கள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. இரண்டாவது இயலான புத்தரும் பௌத்தமும் என்னும் தலைப்பில் புத்தரின் மெய்யியல் கண்டுபிடிப்புகளான பிரதிபத்திய சமுத்பாதா என்னும் பன்னிரு சார்புகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து சம்சாரமும் நிர்வாணமும், நான்கு உண்மைகள், எண்வகை நெறிகள், சீலம், தியானம், ஞானம் ஆகிய தலைப்புகளின்கீழ் ஆழமான கருத்துக்கள் விளக்கப்பட்டுள்ளன. மூன்றாவது இயலான பௌத்த பிரிவுகள் என்னும் தலைப்பில் பௌத்த பிரிவுகளான ஹீனயானம், மகாயானம் ஆகியவை சொல்லும் மெய்யியல் கருத்துக்கள், திரிகாய கொள்கை, மகாயான பிரிவுகள், மாத்யாமிகவாதம், பின்னர் உருவான பௌத்த பிரிவுகளான மந்திரவாத பிரிவுகள் மந்திராயணம், வஜ்ராயணம், கால சக்கராயணம், சகஜாயனம் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன. நான்காம் இயலான போதிச்சத்துவ குறிக்கோள் என்னும் தலைப்பில் போதிச்சத்துவ வழி, பக்தி நெறிகள், ஞானோதயம் பெறும் எண்ணம், உறுதிமொழிகள், நான்கு சரியைகள் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன. ஐந்தாம் இயலான இந்திய பௌத்த கலைகள் என்னும் தலைப்பில் கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை ஆகியவை விரிவாக விளக்கப்பட்டுள்ளன. பௌத்த கட்டிடக்கலையின் மூன்று முக்கிய வடிவங்கள் எனப்படும் ஸ்தூபா,சைத்தியம்விகாரம் ஆகியவை, அசோகர் காலத்து பௌத்த கலைகள்,மகாயான ஸ்தூபாக்கள், சைத்தியங்கள் மற்றும் விகாரங்கள், மகாயான குடைவரை சேத்தியங்கள், விகாரங்கள், எல்லோரா, அஜந்தா ஆகியவை நுட்பமாக விளக்கப்பட்டுள்ளன. சிற்பக் கலையில் அமிதாபா ,அச்சோபயா, வைரோஸனா, அமோக சித்தி, ரத்ன சம்பவா,மானுட புத்தர்கள், சாக்கிய முனி, தியான முத்திரை, தர்மசக்கர முத்திரை,போதிச்சத்துவர்கள், மைத்திரேயர்,அவலோகிதீஸ்வரர( பத்மபாணி) ,மங்கஸ்ரீ, வஜ்ரபாணி,சரஸ்வதி உள்ளிட்ட சிற்பக்கலை மரபுகள் அழகுற ஆழமாக விளக்கப்பட்டுள்ளன. ஆறாவது இயலான கொரிய பௌத்த கலைகள் என்னும் தலைப்பில் உரிய வரலாற்றுக் காலங்கள் அடிப்படையில் கொகுர்யோ அரசு ,பேக்சி அரசு, கயா அரசுகள், சில்லா அரசு, கொரியோ அரசு, சோசன் அரசு ஆகியவை விரிவாக விளக்கப்பட்டுள்ளன. பௌத்த சமயம் பரவிய வரலாறு அவற்றைத் தொடர்ந்து அவற்றின் விளைவாய் கொரியாவில் உருவான கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை மரபுகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. கட்டடக்கலை என்பது தரைத் திட்டம் ,வெளி வடிவம் என்ற இரு பகுதிகளைக் கொண்டது .அதிட்டானம், தூண்கள், சுவர், ஓடுகளும் கூரை கட்டுமானமும், அழகு வேலைப்பாடுகள், கோயில் கட்டடக்கலைகளில் காணப்படும் வடிவ வேறுபாடுகள், ஆரம்ப கால ஸ்தூபாக்களின் வடிவம், ஸ்தூபாக்களின் சிகரம் அல்லது குடை ஆகியவை விளக்கப்பட்டுள்ளன.அதனைத் தொடர்ந்து சிற்பக் கலையானது கொரியாவில் எவ்வாறு உருவாகி வளர்ந்துள்ளது என்பது குறித்த செய்திகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. இத்தகைய கட்டிடக்கலை, சிற்பக் கலைகளில் ஓவியக்கலையின் பயன்பாடுகள், நுட்பங்கள்,அழகியல் கூறுகள் எவ்வாறு இடம் பெற்றுள்ளன என்பது குறித்த விளக்கங்கள் ஆங்காங்கே வழங்கப்பட்டுள்ளன. மேற்கண்டவாறான ஆறு இயல்களில் அமைந்துள்ள இந்நூல், பௌத்த சமயம் எவ்வாறு மெய்யியல் தளத்திலிருந்து பக்தித் தளத்திற்கு வளர்ந்தது என்பதையும் இத்தகைய பக்தித்தளம் உருவான பிறகு எவ்வாறு அதன் கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக் கலைகளில் அவ்வற்றின் தாக்கங்கள் எவ்வெவ்வாறு ஏற்பட்டுள்ளன என்பதையும் மிக நுட்பமாக இந்நூலில் நூலாசிரியர் விளக்கியுள்ளார். பௌத்தக் கலை மரபுகளில் இந்து சமயத்தின் தாக்கமும் இந்து சமயத்தின் கலைகளில் பௌத்த சமயத் தாக்கமும் எவ்வாறு இரண்டறக் கலந்து உள்ளன என்பதும் இத்தகைய போக்கை பௌத்தக் கலை மரபுகள் எவ்வாறு உள்வாங்கி வெளிப்பட்டுள்ளன என்கிற அணுகுமுறையில் இந்நூல் வடிவமைக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது. எனவே இந்தியக் கலை வளர்ச்சியில் பௌத்தக் கலையின் பங்கு, பௌத்தக் கலையின் வளர்ச்சியின் பரிமாணங்கள் ,பரிணாமங்கள், இவை கொரிய பௌத்தக் கலைகளில் ஏற்படுத்திய தாக்கங்கள் ஆகியவற்றை விரிவாகவும் ஆழமாகவும் இந்த நூல் ஆராய்ந்து உள்ளது. பௌத்தக் கலை மரபை அதன் மெய்யியல்,பண்பாட்டியல், அறவியல் பின்னணியோடு விளக்கியுள்ள சிறந்த நூலாக இந்நூல் திகழ்கிறது.இந்தியப் பண்பாட்டு கூறுகள் கொரிய பௌத்தப் பண்பாட்டு கூறுகளோடு ஒருங்கிணைந்து வெளிப்பட்டுள்ள பாங்கு , உலக மானுடப் பொதுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்பதையும் இந்த நூல் அழகாக எடுத்துக்காட்டுகிறது. பௌத்தக் கலை வரலாற்றைப் பயில விரும்புகிற எவர் ஒருவரும் அவசியம் பயில வேண்டிய நூலாக இந்த நூல் விளங்குகிறது. நூலின் நிறைவில் இந்நூல் உருவாக்கத்திற்குப் பயன்பட்ட நூற்பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து 72 நிழற்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இப்படங்கள் வண்ணப்படங்களாகப் பதிப்பிக்கப்பட்டால் இந்நூலின் அழகியல் பெறுமதி கூடும். அடுத்த பதிப்பை அவ்வாறு கொணர வேண்டும். பதிப்பக முகவரி: ராஜாமணி வெளியிட்டகம், 45 ,ஸ்ரீராம் நகர் , மாதா கோட்டை சாலை, தஞ்சாவூர்- 613 005 . பேசி: 0 4 3 6 2 - 22 60 88 விலை : ரூ.75/- https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02qUb9A1fWkrJ3tdmtuksMeQb9ZcLvrhw8b8e8rYcvGCTunX2woMpLTw5qE8neqmepl&id=100007862881487&mibextid=Nif5oz .

Saturday 14 January 2023

ஒரு நாள் ; ஒரு நூல் - 13 . அறிஞர் பார்வையில் பெளத்தம் - தி.இராசகோபாலன்.13.01.2023 .

13.01.2023 ஒரு நாள் ; ஒரு நூல் -- 13 அறிஞர் பார்வையில் பெளத்தம் -- தி.இராசகோபாலன் சென்னை, செய்திச் சோலையின் வெளியீடாக முதல் பதிப்பாக ஜூன் 2001 இல் இந்நூல் வெளிவந்துள்ளது. இந்நூல் 256 பக்கங்களைக் கொண்டுள்ளது. இந்நூலில் 31 கட்டுரைகள் - ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. மிகமிகக் கடுமையான உழைப்பு, தேடல், ஈடுபாட்டோடு அரிதின் முயன்று இக் கட்டுரைகளைத் தொகுத்துப் பதிப்பித்துத் தமிழுலகுக்குக் கொடையளித்துள்ளார் அறிஞர் தி.இராசகோபாலன் அவர்கள். இந்நூலின் முகவுரையில் தொகுப்பாசிரியரும் பதிப்பாசிரியருமான அறிஞர் தி.இராசகோபாலன் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: " இந்நூலுள் இருபத்தாறு கட்டுரைகள் - ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. மேலும் இடம்பெறவேண்டிய அறிஞர்தம் கட்டுரைகள் உள. அவற்றை அடுத்த புத்தகத்தில் தொகுத்துத் தர எண்ணுகின்றனன். அறிஞர் கூறும் கருத்துகள் புத்தர் பெருமானின் உயர்நெறியை நன்கு வெளிப்படுத்துகின்றனவாக அமைந்துள்ளன எனில் மிகையில்லை. " அறிஞர் பார்வையில் பெளத்தம் " என்னும் இந்நூலுள் இடம்பெற்றுள்ள கட்டுரைகள், பல இதழ்களில், நூல்களில் இடம்பெற்றவை. காலத்தால் பழமையானவை ; ஆனால், மிகச் சிறந்த கட்டுரைகள். இக்கட்டுரைகள் அழியக் கூடாது என்னும் எண்ணத்தில் பொருட்செலவையும் கருதாது தொகுத்தலில் துள்ளேன். இக்கட்டுரைகளை இருபதுயாண்டாகப் பாடுபட்டுத் தொகுத்தளித் துள்ளேன். எனவே, கட்டுரைகளை வெளியிட்ட இதழ், நூல்களின் பெயரையும் குறிப்பிட்டுள்ளேன். இக்கட்டுரைகளை அழியாமல் காக்க வேண்டும் என்பதே முதல் நோக்கம். " ( பக்.3 - 4 ) இதைவிட வேறேதும் விளக்கி இந்நூலின் சிறப்பை, இன்றியமையாமையை விளக்கவேண்டியதில்லை. ஆனால், இந்நூலின் உள்ளடக்கக் கட்டுரைகளின் பட்டியலை இங்கே கொடுக்கவேண்டியது இன்றியமையாதாகும். நூலின் தொடக்கத்தில் முகவுரை, நூல் உரிமை ஆகியவை இடம்பெற்றுள்ளன. இவற்றைத் தொடர்ந்து பொருளடக்கம் இடம்பெற்றுள்ளது. பொருளடக்கத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளும் கட்டுரைகள் இடம்பெற்றுள்ள பக்கங்களின் எண்களும் பின்வருமாறு : 1. தமிழ் நூல்களில் பௌத்தம் - திரு. வி.கல்யாண சுந்தரனார் ( ப. 9 ) 2. பௌத்தர் வளர்த்த தமிழ் - அறிஞர் மயிலை. சீனி. வேங்கடசாமி ( ப. 38 ) 3. தமிழகத்தில் பௌத்த சமயச் செல்வாக்கு - ஆராய்ச்சி அறிஞர் மயிலை. சீனி. வேங்கடசாமி ( ப.47 ) 4.பௌத்தர் வளர்த்த பைந்தமிழ் - முத்து இராசா கண்ணனார் ( ப. 53 ) 5.தமிழும் சாக்கியமும் - இரா பி சேதுப்பிள்ளை ( ப.65 ) 6. தமிழ்நாட்டில் பௌத்தம் - முனைவர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் ( ப.72 ) 6.சமயம் வளர்த்த தமிழ் பௌத்தம் - அ.மு.பரமசிவானந்தம் ( ப.79 ) 7. போதி மாதவன் திருநாளில் - பேராசிரியர் ந. சஞ்சீவி ( ப.86 ) 8. தமிழ்நாட்டில் பௌத்தம் - புலவர் தி.இராசகோபாலன் ( ப. 94 ) 9.புத்தர் அங்கெல்லாம் - ( ப. 102 ) 10.புத்தர் செய்த புரட்சி - 1956 -திராவிட நாடு - ( ப. 110 ) 11.பௌத்தத்தின் தாக்கம் - முனைவர் ஆர். எசு. சர்மா ( ப. 113 ) 12.புத்த மதம் - பிக்கு ஊ சிட்டிலா ( ப.117 ) 13. தமிழும் சமண பௌத்த மதங்களும் - மயிலை. சீனி. வேங்கடசாமி அவர்கள் ( ப. 127 ) 14.பௌத்த நூல்களும் உறுதிப் பொருள்களும் - முனைவர் சோ.ந. கந்தசாமி ( ப.138 ) 15.புத்த சமயம் - முனைவர் ராதாகிருஷ்ணன் ( ப.153 ) 16. புத்த பிரானார் - டாக்டர் எசு.ராதாகிருஷ்ணன் ( ப.164 ) 17.பௌத்தம் பற்றி -பாரதியார் - பாரதியார் பகவத் கீதை ( ப.176 ) 18.காரைத்தீவு அகத்தியர் (பௌத்தர்) (ப.184 ) 19.போதலகிரி அகத்தியர் ( பௌத்தர்) ( ப. 189 ) 20.கிலோ தமை அகத்தியர் ( பௌத்தர் ) ( ப.191) 21. பாபநாசம் அகத்தியர் மலைய மணி ( ப. 192 ) 22.கேரளமும் பௌத்த மதமும் - செ. கோவிந்தன் ( ப. 193 ) 23.சிரிரங்கம் கோவில் ( ப. 200 ) 24. 6 படி குரு பரம் ( ப.207 ) 26.புத்தர் புரட்சிக்காரர், பகுத்தறிவாளர் - அறிஞர் அண்ணாதுரை ( ப. 212 ) 27.தேவரிலும் தேவதையிலும் உயர்ந்தவரே புத்தர் - பண்டித சவகர்லால் நேரு ( ப. 219 ) 28.பௌத்தம் - சவகர்லால் நேரு ( ப.222 ) 29.சிங்கள பௌத்தர்கள் - சுவாமி விவேகானந்தர் ( ப.228 ) 30.மணி பல்லவம் - பேராசிரியர் அ.மு.பரமசிவானந்தம் ( ப. 234 ) 31.கௌதம புத்தர் - சார்லஸ் ஏ பின் சைடு சி வி ஓ ( ப. 240 ) இந்தக் கட்டுரைகள் ஒவ்வொன்றும் அரிய, புதிய செய்திகளை எடுத்துரைக்கின்றன. பல்வேறு ஆய்வுக் களங்களைச் சுற்றிச் செல்கின்றன. இந்தியச் சமூகத்தில் பௌத்த சமயம் ஏற்படுத்திய மறுமலர்ச்சி, வைதீக சமயத்திற்கு எதிராக பௌத்த சமயம் முன்வைத்த புத்தம் புதிய கோட்பாடுகள், புத்தம் புதிய வாழ்வியல் நெறிகள் ஆகியவற்றை இக்கட்டுரைகள் எங்கும் காண முடிகிறது. இந்த 31 கட்டுரைகளைப் பொருண்மை அடிப்படைகளில் இரண்டு வகைப்பாடுகளுக்குள் அடக்கலாம். 1.தமிழ் இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்ட கட்டுரைகள் - 16 2.இந்திய, உலக அளவிலான பௌத்தப் புரிதலைத் தரும் கட்டுரைகள் - 15 இந்தக் கட்டுரைகளில் தமிழ் இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்ட கட்டுரைகளில் இலக்கியத் தரவுகள் பெரும்பான்மையும் பொதுப்படையானவை என்பதால் கூறியது கூறல் என்னும் இயல்பு மேலோங்கி உள்ளது. ஆனாலும், ஒவ்வொரு அறிஞரும் தமிழ் இலக்கியத்தை அணுகி அவற்றிலிருந்து வெளிக்கொணரும் செய்திகள் சில புத்தம்புதியானவாய் அமைந்திருக்கின்றன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இரண்டாவது வகையிலான இந்திய, உலக அளவிலான பௌத்தப் புரிதலைத் தரும் கட்டுரைகளில் மெய்யியல், அறவியல் சார்ந்த சிந்தனைகள் விரிவாகவும் ஆழமாகவும் நுட்பமாகவும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இந்த 31 கட்டுரைகளுக்கு இடையே, "பௌத்த கொள்கை- தந்தை பெரியார் " என்ற தலைப்பில் ஒரு இரண்டு பக்கக் கட்டுரை உள்ளது (பக்கம் 115 - 116 ).ஆனால், இந்தக் கட்டுரை உள்ளடக்கப் பட்டியலில் இடம்பெறவில்லை. உள்ளடக்கப்பட்டியலில் இந்தக் கட்டுரையை 13வது கட்டுரையைத் தொடர்ந்து அமைந்துள்ளது. இந்தக் கட்டுரைகள் இந்தக் கட்டுரை தொகுதியின் பெறுமதி, பயன்பாட்டுத் தகுதி எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடத்தக்கது அல்ல என்ற போதிலும் நூலாசிரியரே தன் முகவுரையில் குறிப்பிட்டுள்ளதுபோல பல கட்டுரைகள் விடுபட்டுள்ளன. விடுபட்ட அறிஞர்களுள் அம்பேத்கர், தந்தை பெரியார், அயோத்திதாச பண்டிதர், லட்சுமி நரசு, சிங்காரவேலர், மு.கு.ஜகந்நாத ராஜா, டி.டி.கோசாம்பி, ராகுல சாங்கிருத்தியாயன் ஆகியவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் உள்ளிட்ட இன்னும் பலருடைய கட்டுரைகளையும் இதுபோன்ற தொகுதிகளில் இது போன்ற தொகுப்புகளில் இனிவரும் காலங்களில் தொகுப்பவர்கள் இணைக்கலாம் ; இணைக்க வேண்டும். பக்க வரையறை , பொருளாதாரச் செலவு மிகுதி கருதி விடுபடுதல் இயல்பே. எனினும் அம்பேத்கரையும் அயோத்திதாசப் பண்டிதரையும் லட்சுமி நரசுவையும் சிங்கார வேலரையும் தொகுப்பாசிரியர் விட்டிருக்கக் கூடாது. அதைப்போல முதல் கட்டுரையாக அமைந்துள்ள திரு. வி.கல்யாண சுந்தரனாரின் கட்டுரையானது 1928 இல் அறிஞர் லட்சுமி நரசு அவர்களின் தலைமையில் கூடிய தென்னிந்திய பௌத்த மாநாட்டில் நிகழ்த்திய விரிவுரையாகும். இந்த மாநாடு தென்னிந்திய பௌத்த சங்கத்தின் சார்பாக சிந்தாதிரிப்பேட்டை உயர்பள்ளி நிலையத்தில் கூடியுள்ள இம்மாநாட்டில் உரையாற்றிய திரு.வி.க. அவர்கள் அவர் உரையாற்றுவதற்கு முன்பு தமிழ்ச் சமூகத்தில் பணியாற்றிய குறிப்பாக தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள பௌத்தக் கூறுகளை விரிவாகவும் ஆழமாகவும் ஆராய்ந்துள்ள அயோத்திதாசரின் பங்களிப்பு அல்லது ஆய்வுப்பார்வை குறித்து எதுவும் குறிப்பிடாமல் உள்ளார். அயோத்திதாசருக்குப் பிறகு தமிழ் பௌத்தம் குறித்து பேசியுள்ள திரு.வி.க அவர்கள் அயோத்திதாசரைக் குறிப்பிடாமல் இருப்பது ஏற்கத்தக்கதல்ல. இத்தகைய இலக்கிய ஆய்வு, வாழ்வியல், தீண்டாமை இந்தியச் சமூகத்தில் தொடர்ந்து நிலவிக் கொண்டிருப்பது நாம் அறிந்ததே. இத்தகைய போக்கை நாம் களைகிறபோதுதான் புத்தர் விரும்பிய இந்தியச் சமூகத்தை நாம் கட்டமைக்க முடியும் என்பது தெளிவு. இந்த இடத்தில் இந்தக் கட்டுரைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பண்டித ஜவஹர்லால் நேருவின் சொற்பொழிவுச் சுருக்கத்தை பகுதிகளை நினைவுகூர்வது ஒட்டுமொத்த பௌத்தச் சிந்தனைகளை நினைவுகூர்வதற்குச் சமமாகும். இந்த உரையில் அம்பேத்கர் பௌத்தம் மாறுவதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்பாக நேரு பேசிய பேச்சில் அம்பேத்கர் முன்வைத்த பல இந்தியச் சமூகச் சிக்கல்களை முன்வைத்து பேசியுள்ளார் நேரு என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். 27 ஆவது கட்டுரையாக அமைந்துள்ள "தேவரிலும் தேவதையிலும் உயர்ந்தவரே புத்தர் " என்ற தலைப்பில் அமைந்துள்ள பண்டித சவகர்லால் நேருவின் கருத்துக்கள் வருமாறு: " குருட்டுத்தனமான மூட நம்பிக்கைகள், போலியான இறைவணக்கம், மதப் பூசல், சாதியத் தீமை இவற்றின் பிடியிலிருந்து விடுபடுவதற்காக புத்தர் போதித்த வாழ்க்கை பற்றிய மெய் உணர்வை மக்கள் புரிந்து கொண்டு கற்றுக்கொண்டு வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும் என்று அறைகூவி அழைக்கிறேன். கௌதம புத்தர் ஒரு கடவுள் அல்ல ; தேவர் அல்லர். ஆனால், எளிய மனிதர் தான் புத்தர். புத்தர் சாதியத்தின் பலவீனங்கள், தீமைகள், மூடப் பழக்கங்கள், போலி தெய்வ வழிபாடுகள் இவற்றிற்கு எதிராகக் குரல் கொடுத்தார். இவை இன்னும் கூட நம் மக்களுள் பெரும்பான்மையினரைக் கப்பிக் கொண்டிருக்கின்றன. எனவே,புத்தர் போதித்த வாழ்க்கை மெய்யறிவை இதயத்தையும் மனத்தையும் பற்றிய மெய்யறிவை புரிந்து கொண்டு கற்றுக்கொண்டு ஒழுக வேண்டும். நாம் இந்தத் தீமையில் இருந்து விடுபடுவதற்காக கொள்கைகளுக்கு உதட்டளவில் ஆதரவு காட்டிவிட்டு உள்ளத்தில் மதக்கேடுகளை நிரப்பி வைத்துக் கொண்டிருக்கும் தீமைகளில் இருந்து விடுபடுவதற்காகத்தான் புத்தர் போதனைகள் புரிந்தார். புத்தர் விழாவினை நாம் இப்போது கொண்டாடுவதை புத்தர் திரும்பவும் தாயகம் திரும்புகிறார் எனச் சொல்லலாம். ஏனெனில், புத்தர் நம் இதயத்தில் எங்கோ ஒரு மூலையில் இருந்த போதிலும் அவரை நாம் இடைக்காலத்தில் மறந்திருந்தோம். புத்தர் மீண்டும் வீடு திரும்புவது இந்திய மக்களைப் பொறுத்து வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும். இந்திய மக்களுக்கு மட்டுமே அப்படி என்பது அல்ல ; உலக மக்களுக்கே அப்படித்தான். ஏனெனில், இந்தியாவின் தலைசிறந்த புதல்வன் ஆன புத்தர் இந்தியாவிற்கு மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திற்கும் சொந்தமானவர். மக்களுடைய உள்ளத்தையும் மனத்தையும் அடிமை கொண்டுள்ள மத மூடநம்பிக்கைகள் எல்லாம் அழித்து ஒழிக்கப்பட வேண்டியவை ஆகும். சூரிய கிரகணம், சந்திர கிரகணம் முதலியவற்றின் போது நதிகளில் குளிப்பது போன்ற மூட வணக்க ஒழுக்கங்களையும் சேர்த்துத்தான் ஒழிக்க வேண்டும் என்கிறேன். ஒருநாள் பட்டினி கிடப்பதோ ஆற்றில் குளிப்பதோ நல்லது தான். ஆனால் அன்று ஒரு கிரகணம் என்பதற்காக யாற்றில் குளிப்பதும் பட்டினி கிடப்பதும் முழுக்க முழுக்கத் தவறானதாகும். இது மக்கள் மனதில் கொண்டிருக்கிற வெறும் கற்பனையாகும். இதன் விளைவாக அவர்கள் மூடத்தனத்திற்கு அடிமையாகி விடுகிறார்கள். ராகு என்னும் பாம்பு கிரகணம் ஏற்படும்போது எல்லாம் சந்திரனை விழுங்க முயல்வதாக மக்கள் மயக்கம் கொண்டு விட்டிருக்கின்றனர். இந்த விந்தையான அறிவீனத்தை ஒத்துக் கொள்ள நாம் என்ன அத்தனை பெரிய முட்டாள்களா ?. பூமியின் நிழல் விழுவதால் தானே சந்திரன் நிழல் மறைகிறது. அதுதான் கிரகணம் என்பது? மேளம் கொட்டுவதாலேயோ யாற்றில் மூழ்குவதாலேயோ பட்டினி கிடப்பதாலேயோ ஜெபமாலை உருட்டுவதாலேயோ கிரகணம் மறைந்து விடுவதில்லை. சந்திரன் மீது பூமியின் நிழல் விழுவது நின்றதும் கிரகணம் முடிகிறது. மதத்தின் பெயரால் நிலவும் இது போன்ற மூடநம்பிக்கைகளை ஒழிக்கத்தான் கௌதம புத்தர் பாடுபட்டார். எனவே, நாம் சரியான பாதை வழி நடக்கிற புத்தர் போதனைகளை புரிந்துகொள்ள வேண்டும். நமது மனமும் இதயமும் தூய்மையாகும்போதுதான் நமக்கு வேண்டுபவை முடியக்கூடியதாக இருக்கும். நாம் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளாமல் மதத்தின் பெயரால் ஒருவருக்கொருவர் மண்டையை உடைத்துக்கொள்ளாமல் நமக்கு இடையே வேற்றுமைகளைக் கற்பித்துக் கொள்ளாமல் இருப்பதன்மூலம்தான் இந்த இதயத் தூய்மையைப் பெற முடியும். இன்று மக்கள் பெற வேண்டிய மகத்தான பாடம் எல்லாம் சாதி முறைக்கு எதிராகப் போராட வேண்டும் என்பதுதான். புத்தர் இந்தச் சாதி முறைக்கு எதிராக மிக ஆற்றலோடு குரல் எழுப்பினார். நாம் இன்றும் இந்தச் சாதிமுறைகளை ஒழித்துக்கட்ட முடியாதிருப்பது, நமது பலவீனத்தைத்தான் காட்டுகிறது. அன்பு, கூட்டுறவு, பிற உயிர்களைத் துன்புறுத்தாமை என்னும் கொள்கையை, வழியை கடைப்பிடித்து வாழ நாம் தொடர்ந்து முயல வேண்டும் " --- 24 .5 .1956 அன்று புதுடில்லியில் புத்தர் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த விழாவில் இந்திய பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு ஆற்றிய சொற்பொழிவின் சுருக்கம் , நம் நாடு, 25. 5 .1956. ( இந்நூலில் பக்.219 -221 ) பண்டித ஜவஹர்லால் நேரு ஆற்றிய இந்த உரையில் குறிப்பிட்டுள்ள செய்திகளின் வாயிலாக இரண்டு செய்திகளை நாம் அறிந்து கொள்கிறோம் . ஒன்று, இந்தியாவில் உள்ள சாதி, மதக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடியதால்தான் புத்தர் முன்வைத்த பௌத்த மதத்தை இந்தியா ஒழித்துக் கட்டியது அல்லது இந்தியாவின் வைதீக மதம் ஒழித்துக் கட்டியது. இரண்டு, பௌத்தம் ஏன் எதனால் உலகம் முழுவதும் பரவியது? இந்தியாவைத் தவிர பிற உலக நாடுகளில் உள்ள மக்கள் இந்தியாவில் உள்ளதை போன்ற வர்ணாசிரமதர்ம சாதிய முறைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் இல்லை. எனவே, புத்தர் பேசிய சமத்துவச் சிந்தனை அவர்களுக்குப் பிடித்திருந்தது ....ஏற்றுக் கொண்டார்கள்... ஆதரித்தார்கள்...வளர்த்தெடுத்திருக்கிறார்கள்.. தமிழ் பெளத்த ஆய்வு நூல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க நல்ல தொகுப்பு இந்நூல். இதுபோன்ற தொகுப்பு நூல்கள் இன்னும் பல வரவேண்டும். அவற்றைப் பெளத்த ஆய்வில் ஈடுபட்டுவரும் ஆய்வாளர்கள் இணைந்து மேற்கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாகும். 31 கட்டுரைகளில் 9 கட்டுரைகளுக்கான நூல், இதழ் விவரக் குறிப்பு இடம்பெறவில்லை. நூல், இதழ் விபரக்குறிப்பு இடம்பெற்றுள்ள கட்டுரைகள் இடம்பெற்றுள்ள பக்கங்களின் விவரங்களும் குறிப்பிடப்படவில்லை. இவற்றையும் இனிவரும் தொகுப்பாசிரியர் கள் கவனத்தில் கொள்ள வேண்டும். பெளத்ததைத் அறிந்துகொள்ள விரும்பும்..... ஆராய விரும்பும் ஒவ்வொருவரின் இல்லத்திலும் உள்ளத்திலும் அவசியம் இருக்கவேண்டிய நூல் இதுவாகும். பதிப்பக முகவரி : செய்திச்சோலை, 4, மேல்பட்டிப் பொன்னப்பன் தெரு, இளங்கோ நகர் வட்டம் ( 36 ), சென்னை - 600 039 விலை : ரூ.40/-

Friday 6 January 2023

ஒரு நாள் ; ஒரு நூல் - 5. தமிழ்ப் பண்பாட்டில் பெளத்தம் - முனைவர் போதிபாலா, முனைவர் க.ஜெயபாலன், உபாசகர் இ.அன்பன்...05.01.2023

ஒரு நாள் ; ஒரு நூல் - 5 தமிழ்ப் பண்பாட்டில் பெளத்தம் - முனைவர் போதிபாலா, முனைவர் க.ஜெயபாலன், உபாசகர் இ.அன்பன் ( பதிப்பாசிரியர்கள் ) 05.01.2023 இந்த நூல் 24 .3 .2013 அன்று சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 'தமிழ்ப் பண்பாட்டில் பௌத்தம் ' என்னும் பன்னாட்டுக் கருத்தரங்கில் படிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பான இந்நூலைக் காவ்யா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்நூல் 389 பக்கங்களைக் கொண்டுள்ளது. இந்நூல் 2013 ஆம் ஆண்டில் முதன் பதிப்பாக வெளிவந்துள்ளது. தமிழ்நாட்டில் ஏற்பட்ட முதல் பௌத்த மறுமலர்ச்சி 19ஆம் நூற்றாண்டில் இறுதிக்காலத்திலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்திலும் நிகழ்ந்தது. இந்த மறுமலர்ச்சியை உருவாக்கியவர்கள் மூவர். முதலாமவர் அயோத்திதாச பண்டிதர். இரண்டாமவர் ம.சிங்காரவேலர்.மூன்றாமவர் பேராசிரியர் லட்சுமி நரசு. இம் மூவரோடு இலங்கையைச் சார்ந்த , இந்தியாவைச் சார்ந்த சில பௌத்தப்பிக்குகளும் இம் மறுமலர்ச்சிப் பணியில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் ஏற்பட்ட இரண்டாவது பௌத்த மறுமலர்ச்சி தனது அயோத்திதாச பண்டிதரின் நினைவு நூற்றாண்டு காலத்தில் நிகழ்ந்தது. அதாவது இருபதாம் நூற்றாண்டின் இறுதியிலும் 21ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இது நிகழ்ந்தது. 100 ஆண்டுகளாகக் கண்டுகொள்ளப்படாமல் மறைக்கப்பட்டிருந்த,மறக்கப்பட்டிருந்த அயோத்திதாச பண்டிதரின் படைப்புகள் குறித்த உரையாடல் தமிழ்ச்சமூகத்தில் பரவலாக பேசப்பட்டது. இந்த இரண்டாவது பௌத்த மறுமலர்ச்சியில் ஞான. அலாய்சியஸ் ,இ.அன்பன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர். ஒப்பிட்டு அளவில் முதலாம் பௌத்த மறுமலர்ச்சியை விட அதிகமான பங்கேற்பாளர்களைக் கொண்டுள்ளது தற்பொழுது நடந்துவரும் இரண்டாவது பௌத்த மறுமலர்ச்சியாகும். இங்கு கவனத்தில் கொள்ளத்தக்க செய்தி ஒன்று உண்டு. 19,20 , 21 ஆகிய மூன்று நூற்றாண்டுகளிலும் நிகழ்ந்துவரும் பௌத்த மறுமலர்ச்சிப் போக்குகளுக்கான அடிப்படைக் காரணகர்த்தராக விளங்குபவர் அயோத்திதாச பண்டிதர் என்பதே அச்செய்தியாகும். அந்த அளவிற்கு தமிழ்ப் பண்பாட்டு வேர்களில் பௌத்தச் சிந்தனைகள் எவ்வாறு ஊடுருவி இருக்கின்றன என்பதை ஆழமாகவும் அழுத்தமாகவும் வெளிக்கொண்டு வந்தவர் பண்டிதர் ஆவார். இந்த நூலில் உள்ள கட்டுரைகளும் மேற்கண்ட கருத்தை உறுதி செய்கின்றன. இத்தகைய பௌத்த மறுமலர்ச்சியின் மிக முக்கியமான ஆவணம் இந்தக் கட்டுரை தொகுப்பாகும்.இந்நூலில் 42 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவற்றுள் 36 கட்டுரைகள் தமிழ்க் கட்டுரைகள். 6 ஆங்கிலக் கட்டுரைகள்.ஒரு தொடக்க உரைக் கட்டுரை. ஒரு நிறைவரங்கக் கட்டுரை என்றவாறு இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நூலில் இடம்பெற்றுள்ள 42 கட்டுரைகள் குறித்த பொருளடக்க நிரல் பின்வருமாறு: 1.தமிழ்ப் பண்பாட்டில் பௌத்தம் - கருத்தரங்க துவக்கஉரை- மடுளுகிரியே விஜேரத்னா - 1 2. தமிழர் பண்பாட்டில் பௌத்தம் - பேராசிரியர் கேப்டன் எஸ் கலியபெருமாள் - 8 3.இந்துக்கலையின் முன்னோடி பௌத்தக் கலையே - மு.நீலகண்டன் - 22 4.நவீன பௌத்த இலக்கிய வரலாறு - பேராசிரியர் முனைவர் க. ஜெயபாலன் - 33 5.இரட்டைக் காப்பியங்களில் பௌத்தம் - டாக்டர் கி. ஆதிநாராயணன்- 45 6.மணிமேகலையில் தேரவாத பௌத்த கோட்பாடுகள் - க. ராஜா - 51 7.மணிமேகலையில் தேரவாத பௌத்த கோட்பாடுகள் - திருமதி இந்து பாலா - 59 8.தமிழகத்தில் பௌத்தம் - ப. கந்தன் - 68 9.பௌத்த தமிழ் இலக்கியங்கள் - முனைவர் பா.வல்சகுமார் - 74 10.பௌத்தமும் புறநானூறும் - முனைவர் நா.அறிவுராஜ் - 86 11.பௌத்தமும் பக்தி இயக்கமும் - பேராசிரியர் முனைவர் க.ஜெயபாலன் - 94 12.பௌத்தச் சிறு தெய்வங்களும் தமிழர் வாழ்வும் - பெ. விஜயகுமார் - 103 13.பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பௌத்தம் - நா. வீரமணி - 117 14. 19 ஆம் நூற்றாண்டின் பௌத்த மறுமலர்ச்சியும் பௌத்த அறிவுசார் மரபும் - வீ. ஐயப்பன்- 130 15.அயோத்திதாசரின் தமிழ் பௌத்தம் - பாரி செழியன் - 139 16.ஆத்திச்சூடியில் பௌத்தம் - தமிழ் பண்பாடே - இரா விஜய கண்ணன் - 147 17.களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலைகள் (1993 - 2012 ) - முனைவர் பா.ஜம்புலிங்கம் - 153 18..பிரபந்த இலக்கியங்களில் பௌத்தக்கூறுகள் - க.அமரேசன் - 163 19.பௌத்தமும் சமணமும் : மெய்யியலும் நடைமுறையும் - முனைவர் சு.மாதவன் - 171 20.தமிழ்ப் பண்பாட்டில் பௌத்தம் - ஓர் ஆய்வு கவிஞர் கவிஅரங்கன் - 184 21.பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பௌத்தச் சிந்தனைகள் - சீ.கோகிலா - 195 22.அசோகர் காலம் முதல் இன்று வரை பௌத்த நிலை - முனைவர் D.பார்த்திபன்- 204 23. கவிஞர் தமிழ் ஒளியின் காவியம் காட்டும் பௌத்த நெறி - மு.பா.எழிலரசு - 220 24.தமிழ் இலக்கியங்களில் பௌத்தப்பிக்கு,பிக்குணிகள் பற்றிய குறிப்புகள் - நா. ஆறுமுகம் - 234 25.புத்தர் பொன்மொழி நூறு (செய்யுள் நூல் ) - முனைவர் கேப்டன் திருமதி பா.வேலம்மாள் - 240 26.அயோத்திதாசரின் தமிழ்ப்பௌத்தமும் கல்வி உரிமையும் - முனைவர் சு.சக்திவேல் - 247 27..தமிழகத்தில் பௌத்தம் அசோகர் முதல் இன்று வரை - மல்லை தமிழச்சி - 253 28. தமிழ் நிகண்டுகளில் பௌத்தச் சிந்தனைகள் - முனைவர் இரா பசுபதி - 258 29.தொண்டை மண்டல புத்த ஞாயிறு கோயில் - முனைவர் வை.இராமகிருஷ்ணன் - 275 30.பௌத்தம் - சமணம் - வள்ளுவம் - பேராசிரியர் செ.ஏழுமலை - 285 31.பௌத்தமும் ஜைனமும் - இரா நல்லையா ராஜ் - 291 32.பௌத்தமும் பக்தி இயக்கங்களும் - முனைவர் சு. சிவசங்கர் - 301 33.பௌத்த மறுமலர்ச்சிக்கும் தமிழ் பண்பாட்டிற்கும் வித்திட்ட அயோத்திதாசர் அம்பேத்கரின் சமூக மாற்றத்திற்கான கல்விச் சிந்தனைகள் - முனைவர் பா.ஆரோக்கியதாஸ் - 310 34.தமிழகத்தில் பௌத்த மறுமலர்ச்சி - மா.ரா. பேரொளி தாசன் - 319 35.தமிழ் பண்பாட்டில் பௌத்தம் - தமிழ் மறையான் - 324 36.Buddhist vestiges located in recent times in Tamilnadu - Natana Kasinathan - 335 37. The role of Tamil speaking Buddhist marks for the development of pali literature - Ven. Dr.Bodhipala - 340 38.Reflection of Buddhist education towards human character - Phramaha Jaroon Rithithit - 354 39.Contribution of Tamil speaking Buddhist monks for development of Sanskrit Buddhist literature- Upasaka E.Anban - 359 40. Bodhiruchi ( later period of 7th century AD and earlier period of 8 Century AD - - 364 41.Buddhism and Bhakti movement - T. K.Parthasarathy - 367 42.கருத்தரங்க நிறைவரங்கம் - முனைவர் து.பார்த்திபன் - 374 இந்தத் தொகுப்பில் உள்ள 40 கட்டுரைகளில் சமயப் பொருண்மைசார் கட்டுரைகள் - 4 , கலை - 1 , இலக்கியம் - 14 , நாட்டுப்புறவியல் - 1 , அயோத்திதாசர் - 4 , கள ஆய்வு - 2 , ஒப்பாய்வு - 5 , வரலாறு - 3 , பண்பாடு - 3 , பாலி - 1 , சம்ஸ்கிருதம் - 1 , .... ஆகிய பொருண்மைகளில் அமைந்துள்ளன. நூலின் முகப்பில் தொகுப்பாளர் உரை, பதிப்புரை ஆகிய இரண்டும் உள்ளன. இந்த 40 கட்டுரைகளின் தலைப்புகளே இந்தப் பன்மொழிப் பன்னாட்டுக் கருத்தரங்கின் பெறுமதியை எடுத்தியம்ப வல்லனவாய் உள்ளன. தமிழ்ச் சமூகத்தில் சங்க காலம் தொட்டுத் தற்காலம்வரையில் நீக்கமற நிறைந்துள்ள மிக முக்கியமான சிந்தனை மரபாகும் பெளத்தச் சிந்தனை மரபு இடையறாது திகழ்ந்து வருகிறது என்பதைக இக் கட்டுரைகள் வெள்ளிடை மலையென எடுத்தியம்புகின்றன. தமிழில் பெளத்தம் குறித்த தேடலாய்வில் ஈடுபடுவோர், பெளத்த வாழ்வியல் கடைப்பிடி நெறிகளில் ஈடுபடுவோர் ஒவ்வொருவரும் அவசியம் பயிலவேண்டிய நூலாக இந்நூல் விளக்குகிறது. இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க பன்னாட்டுக் கருத்தரங்கத்தை ஒருங்கிணைத்த பதிப்பாசிரியர்கள் மூவர் உள்ளிட்ட ஒவ்வொருவரும் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள் ஆவர். பதிப்பக முகவரி: காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, ட்ரஸ்ட் புரம், கோடம்பாக்கம், சென்னை -600 024 பேச : 044 23726682/ 9840480232 மின்னஞ்சல் : kaavyabooks@gmail.com விலை :350/-

ஒரு நாள் ; ஒரு நூல் - 4 புத்தம் சரணம் கச்சாமி - உபாசகர் E.அன்பன் .04.01.2023

ஒரு நாள் ; ஒரு நூல் - 4 புத்தம் சரணம் கச்சாமி - உபாசகர் E.அன்பன் ( அன்பு மலர் ) 04.01.2023 திரிபீடகத் தமிழாக்க நிறுவனத்தின் வெளியீடாக பிப்ரவரி 2022 இல் மூன்றாம் பதிப்பு கண்டுள்ள நூல் இது. இந்நூல் 172 பக்கங்களைக் கொண்டுள்ளது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலுமாகத் தமிழகத்தில் முதல் பெளத்த மறுமலர்ச்சி நிகழ்ந்தது. இந்த முதல் பௌத்த மறுமலர்ச்சியில் அயோத்திதாச பண்டிதர், ம.சிங்காரவேலர், லட்சுமி நரசு உள்ளிட்ட பலரும் பணியாற்றியுள்ளனர். 20 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலுமாக இன்றைய காலகட்டத்தில் இரண்டாம் பௌத்த மறுமலர்ச்சி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த இரண்டாம் பௌத்த மறுமலர்ச்சியில் பங்காற்றி வருபவர்கள் பலராவர். அவர்களுள் குறிப்பிடத்தக்க பணிகளை ஆற்றி வருகிற பெருந்தகை உபாசகர் இ.அன்பன் ஆவார். இன்றைக்கு பௌத்த ஆய்வுகளிலும் பௌத்த இயக்கங்களிலும் பங்கெடுத்துவரும் பலரையும் பௌத்தத்தின்பால் ஈர்த்து நெறிப்படுத்திவருபவர் அன்பன். இத்தகைய பெருந்தகை படைத்தளித்துள்ள நூல்களில் மிக முக்கியமான நூல் இதுவாகும். எந்த ஒரு அறிவுத்துறையிலும் நான்கு வகைகளில் நூல்கள் படைக்கப்படுகின்றன. அவை முறையே, 1. ஆய்வு நூல்கள் 2.பாட நூல்கள் 3. தேர்வுக் கையேடுகள் 4. பொது வாசிப்பு நூல்கள் ஆகியவையாகும். இந்த நான்கு வகை நூல்களுள் ஆய்வு நூல்கள், பாடநூல்கள், தேர்வுக் கையேடுகள் என்ற மூன்று வகை நூல்களுமே குறிப்பிட்ட ஒரேயொரு துறைசார்ந்த மிகக் குறுகிய வாசிப்பு வட்டத்தைச் கொண்டவையாக விளங்குகின்றன.ஆனால் பொது வாசிப்பு நூல்கள் பரந்த வாசிப்புத் தளத்திற்கு உரியவை. தொழில் அல்லது பணியின் பொருட்டுப் பல்வேறு துறைசார்ந்தவர்களும் தேடி நாடி வாசிக்கும் நூல்களாக இந்தப் பொது வாசிப்பு நூல்கள் திகழ்கின்றன. இங்கு மதிப்பிட எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள நூல் பொது வாசிப்பு நூல் எனும் வகையைச் சார்ந்தது ஆகும். பெளத்த நெறிகளை அறிந்துகொள்ள விரும்பும் எவரொருவரும் படித்து எளிதில் புரிந்து உள்வாங்கிக் கொள்ளும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பெளத்த வாழ்வியல் முறைகளைப் பரவலாக்கும் நோக்கோடு படைக்கப்பட்டுள்ள இந்நூலின் தொடக்கத்தில் முனைவர் க.ஜேயபாலனின் அணிந்துரை, திருமதி மலர்கொடி அன்பனின் அணிந்துரை, உபாசகர் E.அன்பனின் பதிப்புரை ஆகியன இடம்பெற்றுள்ளன. இவற்றைத் தொடர்ந்து பொருளடக்கம் அமைந்துள்ளது. இந்நூலில் இடம்பெற்றுள்ள 20 அத்தியாயங்களின் தொடக்கம் இடம்பெற்றுள்ள பக்கத்தின் குறிப்போடு அமைந்துள்ள பொருளடக்கம் இதோ : 1. புத்தரின் வாழ்க்கை - 13 2.உயர் ஞானமெய்திய புத்தர் - 27 3.சொந்த நிறைவுறுத்தலுக்காக தம்மத்தை போதிக்க விழைவு - 30 4.தம்ம சக்க பவத்தன சுத்தம் - 37 5.புத்தர் சமய பரப்பு பணிகள் - 46 6. உயர்வெய்திய புத்தர் - 54 7.புத்தரின் ஆளுமை - 62 8. புத்தரின் அன்றாட செயல்பாடுகள் - 69 9.புத்தரின் பரிநிப்பானம் (மறைவு) - 79 10.பௌத்தம் என்பது என்ன? - 81 11.உன்னத நான்கு வாய்மைகள் - 93 12.கம்மா (வினை ) - 101 13.மனித ஆளுமையின் பகுப்பாய்வு - 116 14.பௌத்த வாழ்முறை - 130 15.பௌத்த தம்மம் பரப்பிய தம்ம அசோகர் - 138 16.சமூக போதனைகள் -145 17.விடுதலை - 153 18.பௌத்தம் போற்றிய தமிழர்கள் - 156 19.அன்றாட பௌத்த வழிபாட்டு பாடல்கள் - 158 20.மகா மங்கள சுத்தம் - 167 பிற்சேர்க்கை - 170 என்ற வண்ணம் இந்த நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலே கண்ட பொருளடக்கத் தலைப்புகளைப் பார்த்தவுடனே இந்நூலின் பேசுபொருள் குறித்த தெளிவு கிடைக்கும். ஆகையினாலே இந்நூல் எடுத்தியம்பும் கருத்துக்களைத் தலைப்புவாரியாக விளக்கவேண்டிய தேவையில்லை. ஆயினும் இந்நூலின் சாரத்தை ஆங்காங்கே உள்ள செய்திகள் , கருத்துக்களின் வாயிலாகத் தொகுத்துரைக்கலாம். கி.மு.623 இல் பிறந்த சித்தார்த்தன் உயர்ஞானமெய்திய புத்தராகித் நம்ம சக்க பவத்தன சுத்தம் என்னும் அறவாழியை உருட்டி மக்கள் எல்லோருக்கும் நான்கு வாய்மைகள், எண்வகை நெறிகள் உள்ளிட்ட தான் கண்ட ஞான ஒழுக்க நெறியைப் பரப்பி அவற்றின் மூலம் அதுவரை உலக வழக்கில் இல்லாத புத்தம்புதிய நடுவழிப் பாதையைப் போதித்து கி.மு.483 இல் பரிநிப்பாணமடைந்தது வரையிலான செய்திகளை முதல் 9 அத்தியாயங்களில் விளக்கியுரைத்துள்ளார் இந்நூலாசிரியர். சித்தார்த்தர் துறவு மேற்கொண்டதற்கான காரணங்களாக இரண்டு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன: 1.ரோகிணி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையில் போர் வேண்டாமென்று சித்தார்த்தர் வலியுறுத்தியதால் துறவு நெறி பூண்டார். 2. பிணி, மூப்பு, சாக்காடு கண்டு துறவு பூண்டார். இந்த இரண்டு காரணங்களுள் இரண்டாவது காரணத்தையே உலகம் முழுவதும் பரப்பப்பட்டுப் பெரும்பான்மையோர் நம்புகின்றனர். ஆனால் சித்தார்த்தரின் உண்மையான வரலாற்றின்படி, முதல் காரணமே பொருத்தமான காரணமாகும். இந்நூலாசிரியர் முதல் காரணத்தை ஏற்று நன்கு விளக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 10 முதல் 14 ஆம் அத்தியாயம்வரை பெளத்த மெய்யியல், வாழ்வியல் குறித்து பெளத்த மறைநூல்கள் சொல்லும் செய்திகள், கருத்துக்கள், விளக்கங்கள் ஆகியவை மிகமிக எளிய நடையில் தொகுத்துரைக்கப்பட்டுள்ளன. பெளத்த மெய்யியலின் உயிர்நாடியான கருத்துக்கள் விடுபடாமலும் ஆற்றொழுக்கான தருக்க இயைபுநெறியோடும் விளக்கப்பட்டுள்ள பாங்கு போற்றத்தக்கது. 15 முதல் 20 ஆம் அத்தியாயம்வரை மாமன்னர் அசோகர் காலம் முதல் தற்காலம் வரை வாழ்வியல் நடைமுறையாக்கம் செய்யப்பட்டுள்ள பாங்குகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அத்தியாயத்தின் நிறைவிலும் பயிற்சி வினாக்களும் குறிப்பு வரைக எனும் வினாக்களும் கொடுக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் குழந்தைகள்முதல் பெரியவர்வரை .... மாணவர்முதல் அறிஞர்கள் வரை படித்துப் பயன்பெறத்தக்க வகையிலும் பின்பற்றத் தக்க நெறியிலும் இந்நூல் படைத்தளிக்கப்பட்டுள்ளது. எனவே, பெளத்தம் முன்வைக்கும் மெய்யியல் கருத்துக்கள் யாவை ? வாழ்வியல் நெறிமுறைகள் யாவை? என அறிய விரும்பும் எவரொருவரும் வாங்கிப் படிக்கவேண்டிய அருமையான நூல் இது. ஆய்வாளர்களாயினும் அறிஞர்களாயினும் ஏற்கனவே பெளத்தப் பயில்வு பெற்றவர்களாயினும் ஒரு நினைவோட்டப் பயிற்சிக்கு - நினைவூட்டும் பயிற்சிக்கு ஏற்றதாகவும் இந்த நூல் திகழ்வது இந்நூலின் தனிச்சிறப்பு ஆகும். பெளத்த மறைநூல்களின் ஆயிரக்கணக்கான பக்கங்களைப் பயின்று அறிந்துகொள்ள வேண்டிய கருத்துக்களை 172 பக்கங்களுக்குள் சாறாகத் தந்துள்ளது இந்நூல் என்பதும் இந்நூலின் தனிச்சிறப்புகளுள் இன்னொன்றாகும். இத்தகைய சிறப்புப்பயன்மிக்க பணியைச் செய்துள்ள நூலாசிரியர் உபாசகர் இ.அன்பன் ஐயா நெஞ்சாரப் போற்றுதற்குரியவர். பதிப்பக முகவரி : திரிபீடகத் தமிழாக்க நிறுவனம், 89, மூன்றாவது தெரு, மல்லீஸ்வரி நகர், மாடம்பாக்கம், சென்னை - 600 126 பேச : 94453 69542 நன்கொடை : ரூபாய் 100 E Anban E Anban https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0sTUPoux5Eqdf2u9wA8JAQmHEPZ1b4eGQN9SKZHpUrWGtLpgNmC7hMRex4Z3AVa2Jl&id=100007862881487

ஒரு நாள் ; ஒரு நூல் - 3 அயோத்திதாரரும் சிங்காரவேலரும் - நவீன பெளத்த மறுமலர்ச்சி இயக்கம் - வெளிவராத தகவல்கள் - தொகுப்பும் பதிப்பும் : ஸ்டாலின் ராஜாங்கம்...03.01.2023

ஒரு நாள்; ஒரு நூல் - 3 அயோத்திதாசரும் சிங்காரவேலரும் - நவீன பெளத்த மறுமலர்ச்சி இயக்கம் - வெளிவராத தகவல்கள் - தொகுப்பும் பதிப்பும் : ஸ்டாலின் ராஜாங்கம் 03.01.2023 ஆகஸ்ட் 2018 இல் புலம் வெளியீடாக வந்த நூல் இது.இந்நூல் 128 பக்கங்கள் கொண்டது. இந்த நூலின் தலைப்பு நீளமானது. நூலின் ஆய்வு ஆழமானது. அயோத்திதாசரும் சிங்காரவேலரும் இருபெரும் வரலாற்று மைல்கல்கள். அயோத்திதாசர் திராவிடச் சிந்தனைகளின் தோற்றுநர் ; தமிழ் பெளத்த வரைவியலாளர்.சிங்காரவேலர் தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் ; பெளத்த சங்கத் தோற்றுநர். இருவரும் தத்தம் துறைகளில் முதன்முதலில் பங்களிப்பு செய்தவர்கள். இவர்கள் இருவரையும் விட்டுவிட்டுத் தமிழ்ச் சமூக வரலாற்றை எழுத முடியாது. இத்தகைய வளமான - பலமான -நலமான பின்னணிகளைக் கொண்ட இருவரும் எங்கெங்கெல்லாம் ஒன்றுபட்டார்கள் ; எங்கெங்கெல்லாம் மாறுபாட்டார்கள் என்பதைத் துல்லியமாக ஆராய்ந்து சொல்லுகிறது இந்நூல். மேலோட்டமான ஆய்வுகள் பல்கிப் பெருகி வரும் தமிழியல் சூழலில் ஆழமான -அழுத்தமான - தெளிவான ஆய்வு நோக்குநிலைகளோடு தன் ஆய்வுகளை முன்வைக்கும் நுண்மாண் நுழைபுலம் மிக்க ஆற்றலாளர் ஸ்டாலின் ராஜாங்கம் ஆவார். அவரெழுதியுள்ள புத்தம்புதிய - அரிய தேடல்நிறைக் கண்டுபிடிப்புகளை அகழ்ந்தெடுக்கும் நூல்களுள் இதுவும் ஒன்று. 1845 மே 20 அன்று பிறந்த அயோத்திதிதாசப் பண்டிதர் 1915 மே 5 அன்று காலமானார். அவர் வாழ்ந்த காலத்தில் அவர் ஆற்றிய பணிகள் எந்த அளவுக்குத் தாக்கங்களை ஏற்படுத்தின என்பதை அக்காலத்தில் நிகழ்ந்த விவாதங்களிலிருந்து அறிந்துகொள்ளலாம். பெளத்தம், ,திராவிட சிந்தனை முன்வைப்பு , தமிழியம் , தமிழ்த்தேசியம், மக்கள் வழிபாட்டு முறைகள் விளக்கம் என ஒவ்வொரு பொருண்மையையும் தமிழ்ச் சிந்தனை மரபில் முதன்முதலில் முன்வைத்த மாபெரும் பேரறிஞர் அவர். பண்டிதர் காலத்தில் மேலே சொன்ன ஒவ்வொரு துறைகளும் சிந்தனையாக்கம், செயலாக்கம் என்ற இருநிலைகளிலும் மறுமலர்ச்சியையும் திசைவடிவமைப்பையும் பெற்றன.அவர் 1915 இல் காலமானார்; அத்தோடு அவர் காணாமலும் அடிக்கப்பட்டார். 20 நூற்றாண்டின் தொடக்கத்தில் காலமான பண்டிதர் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மறு கண்டுபிடிப்பு செய்யப்பட்டார். அவ்வாறு அவர் மறு கண்டுபிடிப்பு செய்யப்பட்ட அவரது நினைவு நூற்றாண்டான 21 ஆம் நூற்றாண்டில் அவரது படைப்புகளும் அவற்றின் சிந்தனைகளும் மீண்டும் ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கியுள்ளன. இந்த அடிப்படையில் இரண்டு நூற்றாண்டுகளின் தமிழ்ச் சிந்தனை மரபில் இரண்டுமுறை மறுமலர்ச்சியை உருவாக்கியுள்ள பண்டிதரைப் புதுக் கண்டுபிடிப்பு செய்கிறது இந்நூல். ( நாளை நிறைவு செய்வேன் ) இன்று 04.01.2023 காலைமுதல் மீதிப் பகுதியை எழுதி முடித்துப் பகிரும் நேரத்தில் தவறுதலால் நீங்கிவிட்டது... என் செய்வேன்...?! https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0EsQo6e4CFWWBPwoLKZ4qKpvXPShBNr5E3rr24obMDsYbHDs2o1jYt4QLwSaBpgSnl&id=100007862881487

Monday 2 January 2023

ஒரு நாள்; ஒரு நூல் - 2. ஒப்பீட்டு நோக்கில் பெளத்தமும் தமிழும் - முனைவர் க.ஜெயபாலன்

ஒரு நாள் ; ஒரு நூல் - 2 02.01.2023 ஒப்பீட்டு நோக்கில் பெளத்தமும் தமிழும் - முதற்பகுதி - முனைவர் க.ஜெயபாலன் 2022 ஜனவரியில் அறம் பதிப்பகத்தின் வெளியீடாக வந்த நூல் இது. முகநூலில் முனைவர் க.ஜெயபாலன் அவர்களால் தொடர்ந்து எழுதப்பட்ட நூற்றுக்கணக்கான கட்டுரைகளில் 100 கட்டுரைகளை மட்டும் தெரிவு செய்து அவற்றை நூல் வடிவமாக்கி உள்ளார். இந்நூல் 352 பக்கங்கள் கொண்டது. 100 கட்டுரைகளும் சிறு குறு கட்டுரைகளாக அமைந்துள்ளன. இந்த நூறு கட்டுரைகளில் இடம்பெற்றுள்ள பொருண்மைகளை வகைப்படுத்தினோம் என்றால் 50 நூல்களுக்கான ஆய்வுக் களங்களைக் கொண்டவையாக திகழ்கின்றன. அதுமட்டுமன்றி மேலாய்வுகளுக்கான பல்வேறு ஆய்வுக் களங்களை எதிர்வரும் ஆய்வாளர்களுக்கான பரிந்துரைகளாகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்நூலில் இடம்பெற்றுள்ள 100 கட்டுரைகளையும் ஏறத்தாழ 10 பொண்மைகளுக்குள் அடக்கலாம். அவை முறையே 1.பௌத்த மெய்யியல் நூல்கள் 2.தமிழ் பௌத்த இலக்கியங்கள் 3.பௌத்த ஆய்வு நூல்கள் 4.நாட்டுப்புற வழிபாட்டு மரபுகள் 5.உலகளாவிய பௌத்த அறிஞர்கள் 6.தமிழ் பௌத்த அறிஞர்கள் 7.பௌத்த சமண சைவ வைணவ ஊடிழைகள் 8.பாலி பௌத்த இலக்கியங்களும் தமிழ் பௌத்த இலக்கியங்களும் 9.தற்கால பௌத்த ஆய்வுகள் 10. இந்திய மண்ணில் பௌத்தம் என்றவாறு வகைப்படுத்தலாம் இந்நூலில் நூலாசிரியரை பற்றிய அறிமுகம் பேராசிரியர் முனைவர் சா.தேவதாஸ் அவர்களின் அணிந்துரை, முனைவர் பா. ஜம்புலிங்கம் அவர்களின் வாழ்த்துரை, கவிஞர் யாழன் ஆதி அவர்களின் மதிப்புரை,கலாநிதி பன்மொழி புலவர் மடுளுக்குரிய விஜய் ரத்னா அவர்களின் பாராட்டுரை, முனைவர் பெ.விஜயகுமார் அவர்களின் நட்புரை ,பேராசிரியர் க.ஜெயபாலன் அவர்களின் என்னுரை,அறம் பதிப்பகத்தின் நிறுவனர் திரு.மா.அமரேசன் அவர்களின் பதிப்புரை ஆகியவை நூலின் முன்பகுதியில் அமைந்துள்ளன. பௌத்தமும் தமிழும் என்ற தலைப்பைக் கேட்டவுடனே நம் எல்லோர் முன்னும் எழுகின்ற நூல் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் அரிய நூலாகும்.அதேபோன்று அரிய ஆய்வுப்புள்ளிகளைத் தன்னகத்தே கொண்டுள்ள சிறந்த நூலாகப் பேராசிரியர் க.ஜெயபாலன் அவர்களின் 'ஒப்பிட்டு நோக்கில் பௌத்தமும் தமிழும்' என்ற இந்த நூலும் விளங்குகிறது . பெயர் அல்லது தலைப்பு என்கிற அடிப்படையில் மட்டுமல்லாமல் ஆழ்ந்த தேடல் ,புதியன கண்டு உரைக்கும் பாங்கு , புதிய புதிய ஆய்வுக் களங்களைப் பரிந்துரைக்கும் மேன்மை ஆகியவற்றை இந்த நூல் தன் அணிகலன்களாக கொண்டுள்ளது.இந்நூலாசிரியர் தொடர்ந்து பௌத்த ஆய்வுகளில் ஈடுபட்டு வருபவர் என்பதை தமிழ் உலகம் நன்கறியும். ஆய்வியல் நிறைஞர் பட்டம், முனைவர் பட்டம் பெறுவதற்காக எழுதுகிற ஆய்வு நூல்கள் ஒருவகை . தொடர் ஆய்வுகளுக்காக எழுதப்படுகின்ற கட்டுரைகள் ஒரு வகை. குறிப்பிட்ட ஒரு பொருண்மை சார்ந்து ஆழமான ஆய்வாக வெளிவரும் நூல்கள் ஒரு வகை என்று ஆய்வுகள் பல்வேறு நிலைகளில் நூல்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய ஆய்வு நூல்கள் ஆய்வு செய்கின்ற ஆய்வாளர்களுக்கு மட்டுமே பெரிதும் பயன்படக்கூடியவையாக அமைந்து விடுகின்றன என்பதையும் நாம் அறிவோம்.எனவே ,ஆய்வு நெறிமுறைகள், ஆய்வு அணுகுமுறைகள் என்றவாறு அமையும் நூல்கள் பொது வாசிப்புக்கு வருவதில்லை.இத்தகைய நிலையை நன்கறிந்த பேராசிரியர் க.ஜெயபாலன் அவர்கள் சமூக ஊடகமான முகநூலில் தொடர்ந்து பொது வாசிப்புக்கென பொது வாசிப்பிற்கும் உகந்தவாறு அதே நேரத்தில் ஆய்வாளர்களின் கவனத்திற்கும் உரியவாறு கட்டுரைகளைப் படைத்தளித்துள்ளார். கட்டுரைகளில் இத்தகைய இயல்புகள் இருப்பதால் ஆய்வு அணுகுமுறைகள் ஆய்வு நெறிமுறைகள், தரவுக் குறிப்புகள் என்றவாறான ஆய்வுப் பண்புகளை இந்நூல் கொண்டிருக்கவில்லை. இது ஆய்வு என்கிற அடிப்படையில் ஒரு குறையாகத் தோன்றலாமேயொழிய ஆய்வு உணர்வை ... ஆய்வு அறிவை ....தேடல் உணர்வை .. தேடல் அறிவை .. வளர்த்தெடுக்கும் பணியில் சிறிதும் குறையாத பங்களிப்பை வழங்குகிற நூலாக இந்த நூல் அமைந்துள்ளது. இந்தப் பதிவின் தொடக்கத்தில் 100 கட்டுரைகளில் இடம்பெறும் 10 பொருண்மைகளை நான் பட்டியலிட்டுள்ளேன். ஆனால் ,மேலும் சில பொருண்மைகளை உருவாக்கிக் கொள்ளத்தக்க வகையில் கருத்துக்களைப் பொதிந்து வைத்துள்ள பாங்கு கட்டுரைகளில் மிளிர்கிறது. எனவே நூறு கட்டுரைகளின் தலைப்புகளையும் பதிவு செய்ய வேண்டிய தேவையோ பொருத்தப்பாடோ இந்தப் பதிவுக்கு இல்லை என்பதால் மிக முக்கியமான தலைப்புகளை இங்கு குறிப்பிடுகிறேன். இந்நூலில் இடம் பெற்றுள்ள பொருளடக்க அடிப்படையில் வரிசை எண்களை குறிப்பிட்டுச் சில கட்டுரைகளை இங்கு பதிவிடுகிறேன்: 1.முன்னுரை பௌத்தமும் தமிழும் 4.கருணைமிகு அன்புரையும் காயாபாசனாவும் கந்தர் சஷ்டி கவசமும் 5.உலகளாவிய பௌத்த மறுமலர்ச்சிக்குத் தமிழர்களின், தென்னிந்தியர்களின் பங்களிப்பு 6.சித்தர் பாடல்களும் ஜென் கவிதைகளும் 7.தமிழ் காப்பியங்களில் உள்ள இருவகை கோட்பாட்டு அணுகுமுறைகள் 15.கல்வியை அனைவருக்கும் உரித்தாக்கும் நெறி 16.தமிழ் சங்கம் மரபும் பௌத்த சங்க மரபும் 17.பௌத்தமும் தமிழும் விரித்துரைக்கும் மானுட மேன்மைகள் 20.சோழ நாட்டில் பௌத்தம் - தொண்டை மண்டலத்தில் பௌத்தம் 21.தேரிகாதையும் சங்கப் பெண் கவிஞர்களின் பாடல்களும் 22. புத்தரது ஆதி வேதம் 24.தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் இருந்த தமிழ் பௌத்தம் குறித்த நுண்ணிய ஆய்வுகள் 31.தமிழும் ஜப்பானியமும் மொழி,கலை,இலக்கியப் பரிவர்த்தனை ஊடாகப் பௌத்தம் 36.எல்லாம் மாறிக்கொண்டே இருக்கின்றன என்ற அநிச்சா கோட்பாடும் திருமூர்த்தி தத்துவமும் 37.தென்னிந்திய மறுமலர்ச்சியும் பேராசிரியர் லட்சுமி நரசுவும் 39.பௌத்தமும் தமிழும் இணைந்து நிற்கும் திராவிடப் பண்பாட்டின் வேர்கள் 40. புத்தரின் காலத்தில் வாழ்ந்த தேரி குண்டலகேசி வரலாற்றை மையப்படுத்தி எழுதப்பட்ட தமிழ்க் காப்பியம் குண்டலகேசி 41.நீலகேசி என்ற ஜைனத் தமிழ்க் காப்பியம் வாயிலாக வெளிப்படும் பௌத்தச் சிறப்புகளும் விவாதங்களும் 42.மணிமேகலை - பௌத்தத் தமிழ்க் காப்பியம் மனித குல மேன்மைக்காகத் தன்னை அர்ப்பணித்த தவப் பெண்ணின் உன்னதச் சித்திரம் 43.தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த ஜைன இலக்கியங்களும் ஒன்றிணையும் இடங்கள் 44.தத்துவக் களத்தில் வடக்கே புத்தரும் தெற்கே திருவள்ளுவரும் நிற்கும் உன்னத வரலாறு 46.பௌத்த சமயப் பெண் தெய்வங்கள் 48.பேரறிஞர் பண்டித அயோத்திதாசரின் தமிழ் பௌத்தப் பங்களிப்புகள் 53.அறிஞர் அன்பு பொன்னோவியம் அவர்களின் ஆய்வுகள் 54.தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள பிற நாடுகளின் ஞான நூல்கள் 55. பண்டிதா அயோத்திதாசர் - ஹர பிரசாத் சாஸ்திரி - நாகேந்திரநாத் வாசு- மகாஸ்தவிரர் - கிருபா சரண் - ஆனந்த குமாரசாமி மற்றும் சில ஆளுமைகள் - ஒப்பீடுகள் 58. தமிழ், சீன, ஜப்பானிய மொழிகளின் தொன்மையும் வாழ்வியலின் அனைத்து துறைகளிலும் அவற்றின் தாக்கமும் 59. ஜொராஸ்டிரிய மரபும் பெளத்த மரபும் தமிழ் மரபும் - அறிஞர் கா.அப்பாத்துரையார் கருத்துக்கள் 62.அறிஞர் பி.எல்.சாமியின் ஆய்வுகளில் தமிழக பௌத்தக் கதை மரபுகள் 69. திராவிட இயக்கமும் பௌத்த மறுமலர்ச்சி இயக்கங்களும் இணைந்து நடத்திய ஈரோடு புத்தர் மாநாடு 71.அண்மைக்கால பௌத்தத்தமிழ் ஆய்வுகளின் சில வெளியீடுகள் 74.அறிஞர் கால்டுவெல் ஆய்வுகளில் இந்திய இலக்கியச் சிறப்புகள் 75.திபெத்திய யோகமும் சிவவாக்கியர் பாடல்களும் 80.சம நீதி எழுத்தாளர் ஏ. பி.வள்ளிநாயகம் 85.சைவ வைணவ மரபுகளில் உள்ளிழுக்கப்பட்ட பௌத்தம் 86.கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை தமிழ் மரபிற்கு ஏற்ப வார்த்தெடுத்த ஆசிய ஜோதி 88.கற்பனைக் களஞ்சியம் துறைமங்கலம் சிவப்பிரகாசர் பாடல்களில் புத்தர் சிந்தனைகளின் தாக்கம் 92.பௌத்த மடாலய நூலகங்களில் ஊடாகத் தெரியவரும் தமிழக ஈழ இலக்கிய உறவுகள் - ஆ.சிவநேசச் செல்வனின் கட்டுரையை முன்வைத்து சில சிந்தனைகள் 97.பௌத்த நூல்களும் உறுதிப் பொருள்களும் அறிஞர் சோ.ந.கந்தசாமி அவர்களின் முன்னோடி ஆய்வுகள் 98.தென்னிந்திய பௌத்த மறுமலர்ச்சி இயக்கமும் தமிழ்த்தென்றல் திரு.வி.க.வும் 100 தலைப்புக்களில் 40 தலைப்புக்களைக் குறிப்பிடுகிறேன் என்றால் இதிலிருந்தே இந்த நூலின் புலமை அடர்த்தியை உணர்ந்து கொள்ளலாம். இன்னும் இன்னும் விரிவாக எழுதத்தக்க நூலான இந்நூலை இளம் ஆய்வாளர்களும் முதுபெரும் ஆய்வாளர்களும் பொதுமக்களும் படிப்பதன்மூலம் புதிய புதிய ஆய்வுக் தளங்களைக் கண்டறிந்து தமிழ் பெளத்த ஆய்வை மென்மேலும் மேம்படுத்தலாம். எனவே, தேடல் வேட்கையுள்ளவர்களுக்கான சிறந்த எழுத்தோடை இந்நூல் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இதுபோன்ற சிறந்த - அரிய நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் அறம் பதிப்பகம் மிகுந்த பாராட்டுக்குரியது. பதிப்பக முகவரி: அறம் பதிப்பகம், 3/582,முல்லைத் தெரு, கஸ்தூரிபாய் நகர், TNHB எதிரில்,முள்ளிப்பட்டு கிராமம் & அஞ்சல்,ஆரணி வட்டம்,திருவண்ணாமலை மாவட்டம் - 632 316 தொடர்புக்கு : 9150724997 மின்னஞ்சல் : arampubpication50@gmail.com ரூபாய் 420 https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02Vgg1o4rPsbQVBw8hK9LGfScacEbA4kx9YN7zY7MNaKhco2Y6eWNETG9hKb3k2S33l&id=100007862881487

Sunday 1 January 2023

ஒரு நாள் ; ஒரு நூல் -1 சோழ நாட்டில் பௌத்தம் - முனைவர் பா.ஜம்புலிங்கம்

 ஒரு நாள் : ஒரு நூல் - 1

01.01.2023 க்கானது


2023 ஆம் ஆண்டின் முதல் வாசிப்பைத் தொடங்கிவைத்த நூல் முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள் படைத்துள்ள " சோழ நாட்டில் பெளத்தம்" என்ற நூலாகும்.


இந்நூல் 222+X பக்கங்களைக் கொண்டது. புது எழுத்து ( படிமம் ) வெளியீடாக 2022 செப்டம்பரில் வெளிவந்துள்ளது. எடுத்தவுடன் முழுவதையும் புரட்டிப் பார்க்க வைக்கும் அழகியல் வடிவமைப்போடும் வழவழ தாள்களில் பளபளக்கும் கண்கொள்ளா புத்தரின் அழகிய படங்களோடும் இந்த நூல் படிப்பவரை ஈர்க்கிறது.... 177 மி.மீ * 240 மி.மீ. அளவு வடிவமைப்பு கொண்டது இந்நூல்.


அன்பு நண்பர் முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களின் முப்பதாண்டுகாலப் பேருழைப்பின் பெருவிளைச்சலாக வெளிவந்துள்ள இந்நூல் தமிழ் பெளத்த ஆய்வு வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் நூல் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை...


தமிழில் பெளத்தம் என்றவுடன் நினைவுக்கு வருபவர் பேரறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களும் பேரறிஞர் சோ.ந.கந்தசாமியும் ஆவர். முதலாமவர் கள ஆய்வோடு மெய்யியல், வரலாறு, வழக்காறு ஆகியவற்றைக் கொண்டு 'பெளத்தமும் தமிழும் ' என்ற அரிய நூலைத் தந்தவர். இரண்டாமவர் மணிமேகலையில் பெளத்த மெய்யியல், அறவியல், தருக்கவியல்,பிரபஞ்சவியல் ஆகியவற்றைக் கொண்டு நூல்கள் பல படைத்தவர். மயிலை சீனி.வேங்கடசாமிக்குப் பிறகு வியக்கத்தக்க வகையில் கள ஆய்வு செய்து வந்துள்ள ஒரே நூல்  முனைவர் பா.ஜம்புலிங்கம் படைத்ததின் துள்ள இந்நூலாகும்.


இந்நூல் எட்டு இயல்களை கொண்டு படைக்கப்பட்டுள்ளது. அவை முறையே வருமாறு 

1 சோழ நாடு 

2. அசோகரின் சாசனங்கள்

 3. இலக்கியம் பிற சான்றுகள்

 4. பௌத்த விகாரங்கள் ,கோயில்கள்

 5. நாகப்பட்டினம் புத்தர் செப்பு திருமேனிகள் 6.புத்தர் சிற்பங்கள் 

7.புத்தர் சிலைகள்

 8.புத்துயிர் பெறும் பௌத்தம் ஆகியவற்றோடு மதிப்புரை , முன்னுரை, துணைநூற்பட்டியல், பின்னிணைப்புகள் -3,

1. அலுவலர்கள், தகவலாளர்களுக்கு நன்றி 2.சிலைகள் உள்ள இடங்கள் 

3. நாளிதழ் நறுக்குகள் என்றவாறு உள்ளடக்கங்களை பெற்றுள்ளது இந்த நூல்.


1995இல் தொடங்கிய முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களின் கள ஆய்வுப்பயணம் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்காக 1995 ,முனைவர் பட்ட ஆய்வுக்காக 1999 ஆகிய இரு ஆண்டுகளில் ஆய்வு ஏடுகளை முறையே மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், தமிழ்ப்பல்கலைக்கழகம் ஆகியவற்றிற்கு வழங்கி உள்ளார். இந்த ஆய்வுகளுக்குப் பிறகு அந்த ஆய்வை விட்டுவிடாமல் தொடர்ந்து தேடல் தேடல் என்று தன் வாழ்நாளை முழுமையாக இந்த ஆய்வில் ஈடுபடுத்திக் கொண்டு இன்றைக்கு 2022 இல் இத்தகைய மாபெரும் அரிய தேடல் நிரம்பிய ஆய்வு நூலைத் தமிழுக்குக் கொடுத்துள்ளார்.


இந்த நூலுக்கான என்னுரையைப் புத்த பூர்ணிமா நாளான 16 மே 2022 அன்று எழுதி உள்ளார் என்கிற குறிப்பு  பௌத்த ஆய்வின் மீது எத்தகைய ஈடுபாட்டை இவர் கொண்டுள்ளார் என்பதைப் புலப்படுத்துகிறது.


முதல் இயலான சோழநாடு என்கிற இயல் மிக எளிய வகையில் இரண்டு பக்கங்களுக்குள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


இரண்டாவது இயலாக அமைந்துள்ள அசோகரின் சாசனங்கள் என்னும் இயலில் அசோகரின் சாசனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.


மூன்றாவது இயலான இலக்கியம் பிற சான்றுகள் என்னும் தலைப்பில் சங்க இலக்கியத்தில் இடம்பெறும் பௌத்தச் சுவடுகள், திருக்குறள்,சிலப்பதிகாரம் ,மணிமேகலை உள்ளிட்ட தமிழ் நூல்களில் இடம்பெற்றுள்ள பௌத்தச் சிந்தனைகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. அத்தோடு வெளிநாட்டவர் குறிப்புகள், கல்வெட்டுகள்,செப்பேடுகள்,பர்மா தேச வரலாறு ஆகிய தலைப்புகளிலும் இயலில் அளவான குறிப்புகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.


நான்காம் இயலான பௌத்த விகாரங்கள், கோயில்கள் என்னும் தலைப்பில் பூம்புகாரில் பௌத்தம் பெற்றிருந்த செல்வாக்கு, நாகப்பட்டினத்தில் இடம்பெற்றுள்ள /இடம்பெற்று இருந்த பௌத்தச் சுவடுகள் திருவலந்துறை,பெருஞ்சேரி, புத்தமங்கலம், மங்கலம் ஆகிய ஊர்களில் இடம்பெற்றுள்ள பௌத்தச்சுவடுகள் ஆகியவை தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.


ஐந்தாவது இயலான நாகப்பட்டினம் புத்தர் செப்புத் திருமேனிகள் என்னும் தலைப்பில் நாகப்பட்டினத்தில் இருந்து 1856 முதல் மகாயான பிரிவைச் சேர்ந்த சுமார் 350 புத்தர் செப்புத் திருமேனிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்கிற அரிய குறிப்போடு தஞ்சாவூர்,அய்யம்பேட்டை ,செல்லூர், ரெட்டிபாளையம், நாகப்பட்டினம் ,பேராவூரணி ஆகிய ஊர்களில் இருந்த இருந்து காணாமல் போன புத்தர் செப்பு திருமேனிகள் பற்றிய அரிதினும் அரிதான செய்திகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.


ஆறாம் இயலான புத்தர் சிற்பங்கள் என்னும் தலைப்பில் தஞ்சை பெருவுடையார் கோயில் ,தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில், திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள புத்தர் சிற்பங்கள் குறித்த செய்திகள் அழகுற எடுத்துரைக்கப்பட்டுள்ளன.


ஏழாம் இயலான புத்தர் சிலைகள் என்னும் தலைப்பில் தஞ்சாவூர் ,திருவாரூர் ,நாகப்பட்டினம் ,மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர் ,பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய அக்கால சோழ நாட்டில் இருக்கின்ற 48 சிலைகள் பற்றிய அரிதினும் அரிதான தேடல் மிகுந்த தெளிவான விளக்கங்கள் அமைந்த செய்திகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. இவ்வியலில் இடம்பெற்றுள்ள 48 புத்தர் சிலைகளுக்கும் அந்தந்த ஊர்களின் பெயரால் புத்தர் பெயரை குறித்து ஆங்காங்கே எடுக்கப்பட்ட அழகிய படங்களை வண்ணப் படங்களாக இந்நூலில் ஆவணப்படுத்தி உள்ளார். இந்த இயலைப் படிக்கிற போதும் பார்க்கிற போதும் சோழ நாட்டில் பௌத்தம் எத்தகைய அளவிற்கு காலூன்றி வேரூன்றிச் செழித்து இருந்தது என்பது தெற்றானப் புலப்படுகிறது.பிற்காலத்தில் சோழ நாட்டில் உருவான பக்தி இயக்கத்தின் விளைவாய் உருவாக்கப்பட்ட சைவ வைணவ கோயில்கள் வரலாற்றில் மிகப்பெரிய ஆவணங்களாக விளங்கிக் கொண்டிருந்த நிலையில் சோழ நாட்டில் பௌத்தமும் செழித்து இருந்தது ; அதற்குச் சோழ மன்னர்கள் அறக்கொடைகளை வழங்கி உள்ளனர் என்கிற செய்தியை ஆழமாக இந்த நூல் எடுத்துரைக்கிறது. இதன்மூலம் அக்கால மன்னர்களின் சமயப் பொறை / மதநல்லிணக்கச் சிந்தனை வெளிப்படுகிறது. ஒவ்வொரு புத்தர் சிலைகளும் முன்பே சொன்னபடி அரியலூர் புத்தர் ,அருந்தவபுரம் புத்தர் ,ஆயிரம் வேலி அயலூர் புத்தர் என்றவாறு அகரவரிசை படுத்திக் கொண்டே செல்கின்ற இந்நூல் ஆசிரியர் நிறைவாக ஜெயங்கொண்டம் புத்தர் என்பரோடு நிறைவு செய்து இருக்கிறார் .இதே இயலில் புத்தர் சிலைகள் இருப்பதாகச் சொல்லப்பட்டு இந்த ஆய்வாளரால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ஆய்வின் நிறைவில் அங்கு காணப்பட்ட சிலைகள் சமண தீர்த்தங்கரர் சிலைகள் என்று கண்டறியப்பட்ட செய்திகளாக ஆலங்குடிப்பட்டி சமணத் தீர்த்தங்கரர் மகாவீரர் , குளித்தலை சமணத் தீர்த்தங்கரர் மகாவீரர் உள்ளிட்ட ஏழு சமணத் தீர்த்தங்கரர் சிலைகளை / சிற்பங்களை ஆய்வாளர் பா. ஜம்புலிங்கம் அவர்கள் கண்டறிந்து ஆய்ந்து அறிந்து ஆவணப்படுத்தி உள்ளார் . அத்தோடு புத்தர் சிலை என்று சொல்லப்பட்டு மக்கள் வழக்கில் இருக்கின்ற சிவன் சிலை, பகவர் சிலை ஆகியவற்றையும் ஆவணப்படுத்தி உள்ளார். அத்தோடு சோழ நாட்டில் பௌத்த மையங்களாக திகழ்ந்த ஊர்களென பூதமங்கலம் ,புத்தகமங்கலம் ,சங்கமங்கலம்,போதிமங்கலம் ,புத்த குடி, பொன் பற்றி, உறையூர், மேலையூர், திருச்சத்தமங்கை, பூதலூர், திருக்காட்டுப்பள்ளி,செந்தலை,நேமம்,புத்தாநத்தம் ,புத்தனாம்பட்டி,புத்தகரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களை நூலில் தொகுத்தளித்துள்ளார்.


எட்டாம் இயலான புத்துயிர் பெறும் பௌத்தம் என்கிற தலைப்பில் தமிழ்நாட்டில் இன்றைய காலத்தில் பௌத்தம் உயிர் பெற்று வருவதற்கு அடிப்படையாக விளங்கிய அக்கால பௌத்தச்சுவடுகள் குறித்த செய்திகளோடு மக்களின் நாட்டுப்புற வழிபாடுகளில் விளங்கி வருகிற புத்தர் குறித்த செய்திகளையும் தொகுத்தளித்துள்ளார்.


துணைநூற்பட்டியல் பகுதியில் ஆய்வுக்குப் பயன்பட்ட நூல்களின் பட்டியல் பட்டியல் ,தமிழ் நூல்கள், ஆங்கில நூல்கள், கட்டுரைகள், நாளிதழ் நறுக்குகள் ஆகியவை தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.


காப்பாட்சியர்கள், தொல்லியல் அலுவலர்கள் ,செயல் அலுவலர்களுக்கு நன்றி என்னும் பகுதியில் ஆய்வுக்கு உதவிய ஒவ்வொரு மனிதர்களுடைய பெயர்களையும் மிகுந்த நன்றி உணர்வோடு பட்டியலிட்டுள்ளார்.அதனைத் தொடர்ந்து சிலைகள் உள்ள இடங்கள் என்கிற அட்டவணை மிகச் சிறப்பாக அளிக்கப்பட்டுள்ளது. இந்த அட்டவணையில் மயிலை சீனி வேங்கடசாமி 1940ல் கண்ட புத்தர் சிலைகள் என்று தொடங்கி ஏறத்தாழ ஆறு ஆய்வு அறிஞர்கள் கண்டறிந்து சொல்லி உள்ள புத்தர் சிலைகள் உள்ள இடங்கள் என்கிற பட்டியலோடு அவற்றைக் கள ஆய்வு செய்து ஆய்வாளர் பா. ஜம்புலிங்கம் 1993 முதல் இன்று வரை அதாவது 2022 வரை அவரால் நேரில் கள ஆய்வு செய்து கண்டறியப்பட்ட சிலைகளையும் ஒப்பிட்டு பட்டியல் அட்டவணை அழகாக வடிவமைத்து வழங்கப்பட்டுள்ளது.


இவற்றைத் தொடர்ந்து கள ஆய்வு மேற்கொண்ட போது சிலைகளோடு ஆய்வாளர் எடுத்துக் கொண்ட படங்கள் அழகாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து நாளிதழ் நறுக்குகள் என்கிற பகுதியில் சிக்ஷ பா ஜம்புலிங்கம் அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டு உடனுக்குடன் அப்பொழுது அப்பொழுது வெளிவந்த ஆங்கில நாளிதழ்கள் ,தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த செய்திகள் அழகாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அவை ஆண்டு வாரியாக காலநிரல்படுத்தப்பட்டு வழங்கப்பட்டுள்ளமை சிறப்பான செய்தியாகும். இவற்றோடு தன் 30 ஆண்டுகால கள ஆய்வுத் தேடலின் விளைவாய் பௌத்த ஆய்வாளர் என்கிற பெயரைத் தமிழ் சமூகத்தில் பதியமிட்டு வைத்ததன் அடிப்படையில் சில நாளிதழ்கள் மாத இதழ்கள் இவரிடம் கண்ட நேர்காணல்கள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. நிறைவாக 222 ஆம் பக்கத்தில் ஊர்ப்பெயர் அகர வரிசை வழங்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படைகளில் வெளிவந்துள்ள இந்த நூல் மிகச் சிறந்த ஆய்வு அணுகுமுறைகளையும் மிகச் சிறந்த மிகத் துல்லியமான ஆய்வு நெறிமுறைகளையும் ஆய்வு நேர்மையோடு முன்னோர் ஆய்வுகளைப் பதிவு செய்யும் நேர்த்தியோடு இந்த நூல் படைத்துளிக்கப்பட்டுள்ளது.


தமிழ் பௌத்த ஆய்வு வரலாற்றில் நூற்றுக்கணக்கான ஊர்களுக்கு நேரில் சென்று கள ஆய்வு செய்து சோழ நாட்டில் பௌத்தம் என்கிற இந்த நூலை தன் 30 ஆண்டுகால பேருழைப்பின் பெருவிளைச்சலாய்ப் படைத்தளித்துள்ள முனைவர் பா ஜம்புலிங்கம் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கு உரியவராகிறார். இந்த நூலின் வாயிலாக தமிழ் பௌத்த ஆய்வு வரலாற்றில் தனக்கென ஓர் இடத்தில் என்றும் நிலைத்து நிற்பார் என்பதில் என் நெஞ்சம் பெருமிதம் கொள்கிறது. இந்த வகையில் இந்த நூலில் இடம் பெற்றுள்ள 222 பக்கங்களிலும் ஒவ்வொரு பக்கத்திலும் ஆய்வாளரின் உழைப்பு ஆய்வாளரின், அறிவு நேர்மை, ஆய்வாளரின் ஆய்வு நோக்கு ஆகியவை புலப்பட்டுள்ளன.


தமிழ்நாட்டு ஆய்வுலகில் கள ஆய்வு மேற்கொள்ளும் ஒவ்வொரு கள ஆய்வாளர்களுக்கும் மிகச் சிறந்த வழிகாட்டி நூலாகவும் ஒளி விளக்கு நூலாகவும் முன்னோடி நூலாகவும் இந்த நூல் திகழும் என்பதில் ஐயமில்லை.


 வரலாறு படித்ததோடு இல்லாமல் இத்தகைய வரலாற்றைப் படைத்தளித்துள்ள முனைவர் பா.ஜம்புலிங்கத்தின் சோழ நாட்டில் பௌத்தம் என்கிற இந்த நூலைத் தமிழகம் கொண்டாடும் என்பதும் கொண்டாட வேண்டும் என்பதும் என்னுடைய வேண்டுகோள் ஆகும். இந்த நூலை அவரே விரைவில் ஆங்கில மொழியாக்கம் செய்து வெளியிட உள்ளார் என்கிற மகிழ்ச்சியான செய்தியையும் பதிவுசெய்து பதிவு செய்கிறேன்.இந்நூல் ஆங்கிலத்தில் வெளிவந்த பிறகு உலகம் முழுவதும் சோழ நாட்டில்/ தமிழ்நாட்டில் பௌத்தம் பெற்றிருந்த இடத்தை எடுத்துரைக்கும்.அப்பொழுது, தான் தோன்றிய இடத்தில் மறைந்து போன பௌத்தம் மீண்டெழும்ம் பௌத்தமாகமிளிர்கிறது என்கிற செய்தியை உலகத்திற்கு எடுத்துச் சொல்லும் நூல்களில் மிகக் குறிப்பிடத்தக்க நூலாக இந்த நூல் விளங்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.


இந்த நூலை மிக மிக நேர்த்தியாகவும் அழகாகவும் வெளியிட்டுள்ள புது எழுத்து பதிப்பகத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும் .இந்நூல் ஒவ்வொரு பௌத்த ஆய்வாளர்கள் வீட்டிலும் வரலாற்று ஆய்வாளர்கள் வீட்டிலும் நூலகத்தை அலங்கரிக்கத்தக்க நூலாகும்.


பதிப்பக முகவரி :

படிமம் புது எழுத்து, 2/203 அண்ணா நகர், காவேரிப்பட்டினம்- 635 112, கிருஷ்ணகிரி மாவட்டம் ,

பேச 98 42 64 71 0 1, 6374230985

மின்னஞ்சல் : editorpudhuezhuthu@gmail.com


விலை : ரூபாய் 1000.


https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02xNWSHUiBezsk1xoyhkB9Z8FJk1qfxnJn1rAGvZADQbi2B4xcPdZVVizoRVEjJ1M3l&id=100007862881487