Thursday, 24 March 2016

எரிமலை ஏற்றிவைத்த செங்கொடி : செங்கொடிவயலான சிறுகாசாவயல்

எரிமலை ஏற்றிவைத்த செங்கொடி : செங்கொடிவயலான சிறுகாசாவயல் முனைவர் சு.மாதவன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, (செம்மொழி இளம்தமிழறிஞர் விருதுபெற்றவர்) மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி (த), புதுக்கோட்டை. பேச 9751 330 855, மின் அஞ்சல் : semmozhi200269@gmail.com 60 பறையர் குடும்பங்கள், 25 வலையர் குடும்பங்கள், 3 வன்னியப் பிள்ளைக் குடும்பங்கள், 2 செட்டியார் குடும்பம், 2 இஸ்லாமியக் குடும்பம், 3 சேர்வை எனப்படும் கள்ளர் குடும்பங்கள் கொண்ட ஒரு கிராமம். அந்தக் கிராமத்தின் பெயர் சிறுகாசாவயல் – கள்ளக்காத்தான். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டத்தில் (இன்று ஆவுடையார்கோவில் வட்டம்) வெள்ளாற்றங்கரையில் – வடகரையில் – ஆவுடையார்கோவிலிருந்து 11கி.மீ தூரத்தில் உள்ள இயற்கை எழில்கொஞ்சம் கிராமம் அந்த கிராமம். அந்த கிராமத்தில் வசித்துவந்த 3 கள்ளர் குடும்பத்தில் ஒரு குடும்பத்தின் பெயர் ‘ரெங்கூன் சேர்வைக்குடும்பம்’. இந்தக் குடும்பத்தில் பிறந்த ஒரு சிறுவன் ஏதோ ஓர் காரணத்தால் தனது 15 வயதில் ஊரைவிட்டுப் புறப்பட்டு சென்னை சென்று சேருகிறான். சென்னையில் பல்வேறு கடைகளில், நிறுவனங்களில் வேலைசெய்து தன் வயிற்றுப்பாட்டை ஓட்டிக்கொண்டிருந்த அந்தச் சிறுவன் ஒரு கட்டத்தில் ஜனசக்தி அச்சகத்தில் வேலைசெய்து வருகிறான். பணிபுரியும் இடம் பொதுவுடைமைச் சித்தாந்தத்தின் பாசறையாதலால் மார்க்சீயக் கொள்கைகளை அங்கு பணிபுரிந்த தோழர்கள் மூலமும் அன்றைய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் மூலமும் கற்றுத் தேர்கிறான். கற்றுக்கொண்ட சித்தாந்தப் பின்னணியில் கட்டுரைகள், கவிதைகள் எனப் படைப்புப் பல படைக்கிறான். அவனது படைப்புகள் படிப்பவரை எழுச்சிகொள்ளச் செய்கின்றன. இதெல்லாம் நிகழ்ந்தேறிய காலம் 1960கள் ஆகும். 15வயதில் தன் ஊரை விட்டுப்போன அந்த இளைஞன் தன் 25 வயது வாக்கில் அந்தக் கிராமத்திற்கு வருகிறான். தன் குடும்பத்தாரோடு ஓரிரு வாரங்கள் அங்கு வசிக்கிறான். அப்போது அவன் காணும் சமூக நிலவரங்கள் அவனுக்குப் பெரு வியப்பையும் அதிர்ச்சியையும் வேதனையையும் தருகின்றன. ஒருநாள் வயல்வெளிப் பகுதியில் வெள்ளைச் சட்டை, வெள்ளைவேட்டி, தலையில் உருமா எனப்படும் முண்டாசோடு ஒரு மனிதர் வந்து கொண்டிருக்கிறார். அதைப் பார்த்த சேர்வைக்காரர் ஒருவர் அந்த மனிதரைத் தன் அருகில் அழைக்கிறார். ‘யார் நீ! எங்கே போகிறாய்?! என்று இவர் கேட்டதும் அவர் தான், ஏகணிவயல் பகுதியிலிருந்து மின்னாமொழிக்குப் போகிறேன் என்கிறார். “ஏகணிவயலில் நீ யார்?” என்று மீண்டும் இவர் கேட்க, ‘நான் பறைய வீட்டுப் பையன்’ என்று சொன்னவுடன் அந்த சேர்வைக்காரர் ஓங்கி அறைந்து,” “ஏன்டா! பறப்பயலுக்கெல்லாம் வெள்ளையும் சொள்ளையும் கேக்குதா?! எவ்ளோ திமிரு இருந்தா எங்க ஊருக்குள்ளே முண்டாசு கட்டிக்கிட்டு வருவ’ என்று திட்டி, அவரது சட்டையையும் உருமாவையும் கால்செருப்பையும் கழற்றவைத்து, ‘எல்லாத்தையும் கக்கத்தில் இடுக்கிக்கிட்டே ஓடிப்போ’ என விரட்டியடிக்கிறார். வெளியூரிலிருந்து வருபவருக்கே இந்த நிலையென்றால் உள்ளுரில் வாழும் பறையர் நிலையைக் கேட்கவா வேண்டும்? அன்றைய நிலையில் குடிப்பறையனாயிற்றே! செத்தமாடு தூக்குறது, சாவுச் சேதி சொல்லுறது, ஆளானசேதி சொல்லுறது, தப்படிச்சு தண்டோரா போடுறது, சாவுக்குப் பறையடிக்கிறது, பாடைகட்டுவது, குழிவெட்டுறது, பொணம் எரிக்கிறது, விவசாயக் கூலி வேலை செய்யுறது என எல்லாக் குடிவேலையும் அந்தக் கிராமத்தில் நடந்து கொண்டிருந்தது. 60 பறையர் குடும்பத்துல ரெண்டு மூனு குடும்பத்துக்கு மட்டும் நிலம் கொஞ்சம் இருந்தது. அதுல ஒரு குடும்பம் ஓட்டுவீட்டுப் பழனிக்கிழவன் வீடு. அந்தப் பழனி குடும்பத்துக்கு மட்டும் அந்த ஊரிலேயே பலவேலி நிலம் இருந்திருக்கிறது. ஒன்னுரெண்டு குடும்பத்துக்கு நிலம் இருந்ததே தவிர மீதி எல்லாக் குடும்பமும் குடிவேலை செஞ்சுதான் பிழைத்திருக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்த இந்த இளைஞன், “இந்த அடிமைத்தனத்திலிருந்து இந்த மனிதர்களை மீட்டுச் சுதந்திர மனிதனாய் வாழவைக்கத்தானே நாம் படித்த கம்யூனிசம் வழிகாட்டுது. அதை இங்கே செஞ்சு காட்டுனா என்ன?” என்று எண்ணினான். ஒவ்வொரு நாளும் அந்தக் கிராமத்தில் இந்தப் பறையர் மக்கள் படும் இன்னல், இழிவு, மன உளைச்சல் எல்லாவற்றையும் பார்த்த அந்த இளைஞனால் பல இரவுகளில் தூங்க முடியவில்லை. தூங்கிக் கிடக்கும் இந்த மக்களைத் தட்டி எழுப்பி விடுதலை மனிதனாக்குவது எப்படி என்று ஒவ்வொரு நாள் இரவிலும் சிந்தித்திருக்கிறான். இப்படிப் பலநாள் சிந்தித்த அந்த இளைஞன் ஒரு நாள் இரவில் படுக்கைத் தளையிலிருந்து எழுந்து பறையர் சேரிக்குப் போனான். ஏற்கனவே அவ்வப்போது பேசிப் பழகியிருந்த பறையர் வீட்டு இளைஞர்களான காளி என்.இரத்தினம், சன்னாசி இன்னும் சிலரை எழுப்பி அழைத்து “நீங்கள் எல்லோரும் இந்த அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறணும்னா எல்லாரும் கம்யூனிஸ்ட் கட்சியில் சேருங்க… நான் ஒங்களுக்குப் பக்கபலமாக இருக்குறேன்” என்று அந்தக் காலத்தில் கீழத் தஞ்சையில் தோழர் பிஎஸ்ஆர் நடத்திவந்த போராட்ட முயற்சிகளின் அனுபவங்களையெல்லாம் சொல்லி விழிப்புணர்வை ஊட்டினான். ஓரிரு நாள் இரவுநேர விழிப்புணர்வுப் பிரச்சாரத்தின்மூலம் பத்துப்பதினைந்து பேரைத் திரட்டிவிட்டான் அந்த இளைஞன். அந்தக் காலத்தில் அறந்தாங்கி வட்டாரத்தில் ஆவுடையார்கோவில் பகுதியில் புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் தலைவர்களாகத் திகழ்ந்த அறந்தாங்கி ஒன்றியச் செயலாளர் கிருஷ்ணா கபே தோழர் கிருஷ்ணமூர்த்தி, புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் தோழர் கே.ஆர்.சுப்பையா, வி.ச. மாவட்டச் செயலாளர் தோழர் அப்புக்குட்டி, ஒன்றியக் உறுப்பினர்கள் தோழர் கருப்பூர் காளிமுத்து, தோழர் ஜெயமாலைப் பிச்சை ஆகியோரை அழைத்துக் கொண்டு 1975ஆம் ஆண்டில் ஒருநாள் இரவில் அந்தச் சிறுகாசாவயலைச் செங்கொடி பறக்கும் வயலாக மாற்றினான். அன்று நடந்த கூட்டத்திற்கு தோழர் மா.சுப்பிரமணியன் தலைமைவகித்தார். தோழர் காளி என்இரத்தினம் கிளை செயலாளரானார். கொடியேற்றப்பட்ட குதூகலிப்பில் அந்த இளைஞனும் பறையர் மக்களும் திரண்டிருந்த நேரத்தில், முன்பே இதையறிந்திருந்த கள்ளர் குடும்பத்து மிராசுதார்கள் அடியாட்களுடன் பறைச்சேரிக்குள் புகுந்து மிரட்டினர். அந்த நேரத்தில், எப்படியாவது அந்தப் புரட்சிகரஇளைஞனைக் காப்பாற்றிச் சென்னைக்கு வழியனுப்பிவைக்க விரும்பிய இளைஞர்சிலர் கூண்டு வண்டியோ தட்டு வண்டியோ பாரவண்டியோ ஏதோ ஒன்றில் அந்த இளைஞனை ஏற்றிக் கொண்டுபோய் நாகுடி என்னும் ஊரில் அறந்தாங்கி செல்லும் பேருந்தில் ஏற்றி வழியனுப்பிவிட்டார்கள். அன்றிலிருந்து அந்தப் பறைச்சேரியை, ‘விட்டேனா பார்! எடுத்தேனா பார்!’ என்று ஒவ்வொருநாளும் மிரட்டியும் துன்புறுத்தியும் வந்தனர் கள்ளர் குடும்பத்தார். ‘வாராது வ்நத மாமணியைத் தோற்போமோ’ என்றிருந்த பறையர் மக்கள் ஆதிக்கச் சாதியை எதிர்த்து பல்வேறு கட்டங்களில் போராடினர். இந்திய நாடு அவசர காலப் பிரகடனத்தால் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற முழக்கத்தை முன்வைத்து, ‘விடாதே பிடி நிலத் திருடரை’ என்று ஒருசிறு பிரசுரமெல்லாம் வெளியிட்டு நில மீட்புப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தது. இந்த நில மீட்புப் போராட்டத்தை வீரம் செறிந்த போராட்டமாக நடத்தி வெற்றி கண்டது இந்தக் கிராமம். ஒருமுறை, தெக்குத்திப் பகுதியிலிருந்து 50, 60 அடியாட்களைக் (அவர்களும் வேறு ஒரு பிரிவு தாழ்த்தப்பட்ட மக்கள் தானாம்) கொண்டுவந்து தங்கவைத்துக்கொண்டே அச்சுறுத்தி வந்ததோடு, ஒரு மாதக் கணக்கில் ஆயுதத் தாக்குதலும் நிகழ்த்தியிருக்கிறார்கள் மிராசுதார்கள். விடுதலை உணர்வும் சமத்துவ வேட்கையும் கொண்ட இந்த அடித்தட்டு மக்களும் அவர்களோடு ஒரு மாதகாலத்துக்கும் மேலாக ஆயுதம் தாங்கிப் போராடி, அடியாட்களை ஓடஓட விரட்டி வெற்றி பெற்றுள்ளனர். இத்தகைய போராட்டம் நடந்த காலத்தில் அந்த கிராமத்தில் இருந்த அத்தனை பேரும் கம்யூனிஸ்டுகளாக மாறிப் போராட்டத்தில் இணைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு, இந்தப் பறையர் மக்களெல்லாம் ஒன்றுகூடி, ‘இனிமேல் எந்த ஒரு குடிவேலைக்கும் போவதில்லை’ என முடிவெடுத்து அதன்படி இன்றுவரை வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய போராட்டத்தின் விளைவும் பயனும்தான் இங்கு மிகவும் எண்ணிப் பெருமிதம் கொள்ளத்தக்கன என்றால் அது மிகையாகாது. அப்படியென்ன… விளைவும் பயனும் உண்டானது என்று தானே கேட்கிறீர்கள்.!? ரெண்டு மூனு பறையர் குடும்பத்தைத் தவிர அன்றைக்கு யாரிடமும் நிலம் இல்லாத நிலையில் இருந்தார்கள் இல்லையா! இன்று எல்லோர் கையிலும் ஒன்றுரெண்டு மாவிலிருந்து 15, 20 மா வரை நிலவுடைமையாளர்களாக மாறியிருக்கிறார்கள். எப்படி இது நிகழ்ந்தது?! குடிவேலை செய்வதில்லை என்றமுடிவில் உறுதியாக இருந்த இந்த மக்கள், அதே ஊரில் வாழ்ந்துவந்த செட்டியார், இஸ்லாமியர் குடும்பங்களுக்கும் பக்கத்து ஊர்களான பட்டமுடையான் கோனார் குடும்பங்களுக்கும், சாத்தகுடி காட்டுக்குடி ஊர்களில் வாழ்ந்த பிற சாதிக் குடும்பங்களுக்கும் விவசாயக் கூலி வேலை செய்து வரலாயினர். இப்படியே, பத்துப் பன்னிரெண்டு வருடம் கடந்ததும், தங்கள் கையில் சேர்த்துவைத்திருந்த தொகைகளை வைத்துச் சிறு சிறு வயல்களாக வாங்க ஆரம்பித்தனர். இதே நேரத்தில், இந்த ஊரைவிட்டு வேறு ஊர்க்களுக்கு முழுவதுமாக இடப்பெயர்வான செட்டியார் குடும்பத்தார்களும், முசுலீம் குடும்பத்தார்களும் அவர்களது நிலங்களைப் பறையர் குடும்பங்களிடமே விற்றுவிட்டுச் சென்றனர். என்னதான் நிலவுடைமைக்காரர்களாக இருந்தபோதிலும், தங்கள் நிலங்களைக் கள்ளர்களிடம் விற்றுவிட விரும்பாமல் பறையர்களிடமே விற்றுள்ளனர் என்பது வர்க்க முரண்களோடு உள் ஒளிந்திருக்கும் சாதீய முரணும் சேர்ந்தே வேலை செய்திருக்கிறது என்பதைக் காட்டுகிறதல்லவா?! இப்படியே, ஒவ்வொரு குடும்பமும் நிலம்வாங்கி நிலம்வாங்கி நில மீட்புப் போராட்டத்தால் குறைந்த விலைக்கு வாங்கி இன்று நிலம் இல்லாத பறையர் குடும்பமே இல்லை என்ற தன்மதிப்புநிலை இந்த ஊரில் உருவாகியிருக்கிறதென்றால், அதற்கு வித்திட்ட பெருமையும் வரலாற்றுச் சிறப்பும் அந்த இளைஞனையே சாரும்… அதுசரி… யார்தான் அந்த இளைஞர் என்ற ஆர்வ வினா உங்கள் சிந்தனையில் முளைக்கிறதல்லவா?! அந்த இளைஞர் வேறு யாருமல்ல.. ஜனசக்தியில் ‘எரிமலை’யாய் எழுதிவந்த அறந்தை நாராயணன்தான் அந்தக் கிராமத்து மறுமலர்ச்சிக் குறியீடு; செங்கொடி இயக்க வீர வரலாற்றின் மைல்கல் என்றால் அது மிகையில்லை. * * * இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 90ஆம் ஆண்டு வரலாற்றுச் சிறப்பு மலர் – 2015க்காக 10 டிசம்பர் 2015 அன்று அனுப்பப்பட்ட கட்டுரை. Email: info.janasakthi@gmail.com பேசு 9383005015, 9382005014, ஜனசக்தி நாளிதழ், சென்னை – 14. * கட்டுரையாளர் இந்த ஊரைச் சேர்ந்தவர். தோழர் மா.சுப்பிரமணியனின் மகனார் ஆவார்

No comments:

Post a Comment