Thursday, 24 March 2016
எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் படைப்புகள் – வகைமையியல் பார்வை
எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் படைப்புகள் – வகைமையியல் பார்வை
Kidth; R.khjtd;>
cjtpg; Nguhrphpah; - A[prp MHV (2014-2016)>jkpoha;Tj;Jiw>
khl;rpik jq;fpa kd;dh; fy;Y}hp (j)> GJf;Nfhl;il 622001> Ngr : 9751 330 855
kpd; mQ;ry; :semmozhi200269@gmail.com, semmozhi_200369@yahoo.com
‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்’ என்றதுமே ச.தமிழ்ச்செல்வன், மேலாண்மை பொன்னுசாமி, அருணன், பாரதி கிருஷ்ணகுமார் மதுக்கூர் இராமலிங்கமெல்லாம் இருக்காங்களே… அந்தச் சங்கம் தானே! என்று எல்லோரும் கேட்கும் அளவுக்குச் சங்கமும் தானும் இரண்டறக் கலந்த ஒரு படைப்புப் போராளி – போர்ப்படைப்பாளி எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன். மரபும் இயல்புமே போர்க்குணப் பின்னணியாகக் கொண்டவர் அவர். அவரது படைப்புகளில், “வாளின் தனிமை” என்ற ஒரு சிறுகதையை மட்டும் வைத்துக்கொண்டே பெருங் கதைக்கட்டுரை ஒன்றை எழுதிவிடமுடியும். அவ்வளவு உணர்வு, உணர்ச்சி, கிளர்வு, கிளர்ச்சி என மானுட இயல்புகளும் அதில் கொட்டப்பட்டுள்ளன. மொழிநடை, வழக்காறுகள், உத்திகள் என இலக்கிய இயல்புகளும் அதில் எட்டப்பட்டுள்ளன. ச.தமிழ்ச்செல்வனின் மொழி, உணர்வின் விழியாக வெளிப்பட்டு அத்தனை உணர்வுநிலைகளையும் நமக்குள் கொண்டுவந்து சேர்க்கிறது. இத்தகைய நுட்ப திட்ப ஒட்பச் செறிவார்ந்த படைப்பாளியின் படைப்புகளை விரிவார்ந்த ஆய்வுகளாகப் பின்னர் நிகழ்த்திக் கொள்ளலாம் என்று கருதி, இந்தக் கட்டுரை அவரது படைப்பாக்கங்களாகியுள்ள எழுத்தாக்கங்களை வகைமையியல் பார்வையில் எடுத்துரைப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.
ச.தமிழ்ச்செல்வன் பிறப்பும் சிறப்பும்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டத்திலுள்ள நெ.மேட்டுப்பட்டியில் மே.சு.சண்முகம் – சரஸ்வதி இணையரின் மகனாகப் பிறந்தவர். ச.தமிழ்ச்செல்வன் (27.05.1954). இவரது சகோதரர்கள் கோணங்கி, ஒரு சிறந்த ஊர்சுற்றி; படைப்பாளி. முருகபூபதி ஒரு நவீன நாடகக்காரர்; படைப்பாளி. இவரது தந்தை மே.சு.சண்முகம் அவர்களும் மகன்களைத் தொடர்ந்து படைப்பாளியாக மலர்ந்தவர்; சிறப்பு புதினப் படைப்பாளி.
இவரது தாய்வழித் தாத்தா மதுரகவி பாஸ்கரதாஸ், ஒரு சிறந்த நாடகப் படைப்பாளி; நாடகப் பாடலாசிரியர்; இயக்குநர்; எல்லாவற்றுக்கும் மேல் அவர் ஒரு மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர். தமிழின் முதல் பேசும்படமான காளிதாஸ் படத்துக்குப் பாடல்கள் எழுதியவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இவர் இந்திய இராணுவத்தில் வீரராகப் பணிபுரிந்து, மக்கள் போராட்டக் களப் பணியாற்றுவதே அதைவிடவும் சிறந்தது என்று தன் இராணுவப் பணியை உதறிவிட்டு வந்தவர். சிலர் எழுத்தாளராக இருப்பர்; போராளியாக இரார். சிலர் போராளியாக இருப்பர்; எழுத்தாளராக இரார். இரண்டுமாக இருப்பவர்கள் குறைவு. இரண்டிலும் மிளிர்பவர்கள் மிகக் குறைவு. மிளிர்வதோடு தன் எழுத்தின்படி தானே வாழ்பவர்கள் மிகமிகக் குறைவு. அத்தகைய மிகச் சிலரில் ச.தமிழ்ச்செல்வனும் ஒருவர்.
படைப்புலகில் முதல் கவிதையும் முதல் சிறுகதையும்
படைப்புலகில் இவரது முதல் பதிவு கவிதையே ஆகும். பெரும்பாலும் எல்லாப் படைப்பாளிகளுமே கவிதையில் தொடங்கிப் பின்னர் பிற இலக்கிய வகைகளில் மிளிர்பவர்களாகவே உள்ளனர். அந்தவகையில், இவரும் கவிதையிலிருந்தே தன் படைப்பிலக்கியப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். இவரது முதல் கவிதை 1972ல் கோவில்பட்டியிலிருந்து திரு.அண்ணாமலையை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்து கொண்டிருந்த ‘நீலக்குயில்’ என்னும் இலக்கிய இதழிலே வெளியாகியுள்ளது.
இவரது முதல் சிறுகதை 1978இல் தாமரை இதழில் வெளிவந்துள்ளது. இவரது முதல் கவிதை 1972இல் வெளிவந்ததற்குப் பிறகு 6 ஆண்டுகள் கழித்துத்தான் (1978இல்) இவரது முதல் சிறுகதை வெளியாகியுள்ளது. இதிலிருந்து இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் இவர் ஏராளமான கவிதைகளைப் படைத்துக்கொண்டு இருந்திருப்பார் என்பது தெரிகிறது. ‘என் சக பயணிகள்’ என்னும் நூலின் முதல் கட்டுரையான ‘கல்யாணி’ பற்றிய கட்டுரையில் “என்னுடைய கவிதைகள் (1) அதில் (நீலக்குயிலில்) வந்துகொண்டிருந்தன” (தமிழ்ச்செல்வன்.,ச. 2013:9) என்று இவரே குறிப்பிட்டிருப்பதிலிருந்து இதை அறிந்துகொள்ள முடிகிறது.
இவ்வாறு எழுதத்தொடங்கிய இவரின் சிறப்பு இதுவரை ஏராளமாக எழுதிக் குவித்திருக்கிறார் என்பது இது ஒரு புறம் இருந்தாலும் அவரது எழுத்தின் சிறப்பு முழுக்கமுழுக்க மக்கள் நலன் – அடித்தட்டு வர்க்கநலன் சார்ந்தது என்பதே ஆகும். அதனினும் சிறப்பு, மத்திய அரசு இராணுவப் பணியை உதறித் தள்ளிவிட்டு மக்கள் பணியைத் தன்தோள்மீது சுமக்கிறார் என்பதும் ஆகும்.
ச.தமிழ்ச்செல்வனின் படைப்புலகம்
ஒவ்வொரு படைப்பிலும் உலகின் ஒரு பகுதி படைக்கப்படுகிறது. ஒவ்வொரு படைப்பும் ஒரு உலகைப் படைக்க முயல்கிறது. எனவே, தான் படைப்புலகம் எனப்பட்டிருக்கிறது போலும்! படைப்பு யாதாயினும் அது முற்போக்குப் படைப்போ பிற்போக்குப் படைப்பு – அதில் படைப்பு நுட்பம் (Creative power) வெளிப்படுத்தப் பட்டிருந்தால் அதைப் படைப்பு எனலாம். இத்தகைய, எந்தக் கருத்தியல் நிலை கொண்ட படைப்பாயினும் அது தான் முன்வைக்கும் கருத்தியலின் வழியில்; உருவில்; செயலில் உலகைப் படைக்க முனைகிறது அல்லவா?. இவ்வாறுதான், ச.தமிழ்ச்செல்வனின் படைப்புகளும் ஒரு சமத்துவப் பொதுவுடைமை உலகத்தைச் சமைப்பதைத் தன் கருத்தியல் இலக்காகக் கொண்டுள்ளன. இவர் உருவாக்க விரும்பும் உலகைப் படைக்க ஒற்றைத் தன்மை அல்லது ஒரே வகைமை கொண்ட படைப்புகளால் இயலாது என்று எண்ணித்தான், பன்முகத்தன்மை அல்லது பன்முக வகைமைகள் கொண்ட படைப்புகளைப் படைத்துக் கொண்டிருக்கிறார் என்பது ‘இவரின் படைப்புக்கொள்கை’ என வரையறுக்கலாம்.
பொதுவாக, படைப்பு என்றதும் இலக்கியப் படைப்பையே எண்ணும்; நோக்கும்; கருதும் பொதுப்புத்தி நிலையிலிருந்து மாறுபட்டு, எழுத்து வடிவம் மட்டுமன்றிப் பொருள்வடிவில் படைக்கப்பட்டுள்ள எல்லாமே படைப்புகள்தாம் என்ற பொதுப்புத்தி உருவாகிக் கொண்டிருக்கும் காலம் இது. இதுதான் பொருள்முதல்வாதப் பார்வை வழங்கியிருக்கும் படைப்பு குறித்த துல்லியமான பார்வை ஆகும். இந்த நோக்கு நிலையிலிருந்து, ச.தமிழ்ச் செல்வனின் படைப்புலகம் தொழிற்படும் பன்முக ஆளுமைப் பாங்கை வகைப்படுத்தலாம்.
ச.தமிழ்ச்செல்வனின் படைப்புகளின் பன்முக வகைப்பாடு
கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில், ச.தமிழ்ச்செல்வனின் படைப்புகளாகக் கிடைக்கும் நூல்களின் எண்ணிக்கை மொத்தம் 27. அவற்றுள், ஓரளவு பெருநூல்களாக உள்ளவை 17; சிறுநூல்களாக இருப்பவை 10. அவை பின்வரும் பொருண்மை வகைப்பாட்டுக்கு உரியனவாய் விளங்குகின்றன:
1. படைப்பிலக்கியம் – 3
2. அறிவொளி மக்கள் கல்வி – 2
3. அரசியல் கல்வி – 8
4. பெண்ணியக் கல்வி – 3
5. குழந்தைமைக்கல்வி – 1
6. கலை இலக்கிய ஆய்வு – 2
7. மானுட ஆளுமையியல் கல்வி – 1
8. கதம்பவியல் – 1
9. நாட்டுப்புறவியல் கல்வி – 1
10. பண்பாட்டுக்கல்வி – 4
11. சேவையியல் கல்வி – 1
இந்தப் படைப்பு வகைப்பாட்டுக்கு அப்பாற்பட்டுத் திரைப்படவியல், கதையாசிரியர், இதழியல் ஆசிரியர் போன்ற இன்னுஞ்சில வகைமைகளுக்குள்ளும் தன் படைப்பாளுமையை மேற்கொண்டு வருகிறார்.
மேலே விளக்கப்பட்டவை எல்லாம் அவரால் எழுதப்பட்டுச் சில பதிப்பங்கள் வெளியிட்டவை. ஒரே ஒரு நூல் மட்டும் இந்த வகைமைகளுள் படைப்பிலக்கியம் என்னும் வகைக்குள் வருவதெனினும் வராது. ஏனெனில், அது வேறொரு ஆசிரியரால் – இலக்கியவாதியால் தொகுக்கப்பட்டது! ஆம். எழுத்தாளர் திலகவதியால் தொகுக்கப்பட்ட ‘முத்துக்கள் பத்து – ச.தமிழ்ச்செல்வன்” என்ற நூல்தான் அந்த ஒரே ஒரு நூல்.
இதுகாறும் கண்ட படைப்புகளின் பன்முக வகைப்பாட்டுப் பட்டியல் பின்வரும் கருத்துக்களைப் புலப்படுத்திக் கொண்டிருக்கின்றன;
1. 11 வகைப்பாடுகளுக்குள் அடங்கியுள்ள அடக்கப்பட்டுள்ள இவரது படைப்புகளில் அரசியல் கல்வி, பண்பாட்டுக்கல்வி என்ற இரு வகைமைப் பண்பே மிகுந்துள்ளது எனலாம்.
2. பண்பாட்டுக் கல்வி என்ற வகைமையைக் காட்டிலும் (4) அரசியல் கல்வி என்ற வகைமைக்குள் (8) இவரது கவனக்குவிவு கூடுதல் அழுத்தம் பெற்றுள்ளது என்பதை அறியமுடிகிறது.
3. அரசியலும் பண்பாடும் மாற்றப்பட வேண்டியவை என்பதை இவரது நூல்கள் முன்வைக்கின்றன எனலாம்.
4. பண்பாட்டைவிட அரசியல் கூடுதல் முன்னுரிமை கொடுத்து மாற்றப்பட வேண்டியது என்பதைப் புலப்படுத்துகின்றன இவரது படைப்புகள். ஏனெனில், அரசியல் சூழல்தான் பண்பாட்டைத் தகவமைக்கிறது; கட்டமைக்கிறது; வாழ்வியலாக்குகிறது என்பது தெளிவு.
பன்முக வகைப்பாடும் பொருண்மை தொழிற்பாடும் (படைப்புகளின் இயங்கு தளங்கள்)
இங்கு வகைமைப்படுத்தப்பட்டள்ள 11 வகைமைகள் இன்னும் நுட்பமான பகுப்புக்கு உட்படுத்தப்பட்டால், மேலும் கூடுதல் எண்ணிக்கையிலான வகைமைகள் கிடைக்கும். இவ்வாறு, எத்தனை வகைமைளாகப் பகுக்கப்பட்டபோதிலும் இவை அத்தனையும் இருபெரும் பகுப்புக்குள்ளே அடங்கிவிடக் கூடியனவே. அவ்விருபெரும் பகுப்புகள் அரசியல், பண்பாட்டியல் என்ற இரண்டுமாகும்.
நூல்களின் வகைமைப் பகுப்புப்பட்டியலை எழுதுகிறபோது படைப்பிலக்கியம் 6. கலை இலக்கிய ஆய்வு 8. கண்பட்டுக் கதம்பவியல் 5. வகைமைகளைத் தவிர்த்து பிற 8 வகைமைகளைச் சுட்டும்போது 2. அறிவொளி மக்கள் கல்வி, 3. அரசியல் கல்வி 4. பெண்ணியக்கல்வி 5. குழந்தைமைக் கல்வி. 7. மானுட ஆளுமையியல் கல்வி 9. நாட்டுப்புறவியல் கல்வி 10. பண்பாட்டியல் கல்வி 11. சேவையியல் கல்வி என்றவாறு குறிப்பிடுவதிற்குள் ஒரு நுட்பம் உள்ளது. அதாவது, படைப்பிலக்கியம் தன்னியல்பாய்ப் படைக்கப்படுவது, கலை இலக்கிய ஆய்வு படைப்பின் நுட்பம் தேடுவது. பண்பாட்டுக் கதம்பவியல் என்பது பண்பாட்டுக் கூறுகள் குறித்த விமர்சனப் பார்வைகளை முன்வைப்பது என்ற வகைகளில் அமைவன. இம்மூன்றும் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் சென்று சேர்ந்தே ஆகவேண்டும் என்ற இன்றிமையாத் தன்மை உள்ளனவல்ல. ஆனால் ‘கல்வி’ என்ற பின்னொட்டுடன் இடம்பெற்றுள்ள படைப்பு வகைமைகள் யாவும் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் சென்றே ஆக வேண்டிய இன்றியமையாத் தன்மை கொண்டன. ஏனெனில், இயல் என்பது எழுதப்படுவது; கல்வி என்பது வெளிக்கொணரப்படுவது. கல்வி என்பது முழுக்க முழுக்க சமூகம் வழங்கிய அறிவு, ஆற்றல், படைப்புத் திறன்களை வழங்கும் தன்மையது. இந்தப் புரிதலிலிருந்து பார்த்தால் ‘கல்வி’ என்ற பின்னொட்டு சார்ந்த நூல்கள் எல்லாம் சமூக மாற்றத்தைத் துரிதப்படுத்தும் புரிதலை வழங்கவல்லன என்ற புரிதலிலிருந்து தான் இந்த 8 படைப்புவகைமைகளுக்கும் ‘கல்வி’ என்ற பின்னொட்டு அமைக்கப்பட்டது என்பதுதான் அந்த நுட்பமாகும்.
1. படைப்பிலக்கியம்
இவருடைய படைப்பிலக்கியங்கள் ‘சிறுகதை’ என்னும் இலக்கியவகையைச் சார்ந்தவை. இவர் கவிதை எழுதத் தொடங்கிச் சிறுகதைத் துறைக்கு வந்தவரெனினும் கவிதை நூலென எதுவும் வெளியிடப்பட்டதாகத் தெரியவில்லை. 1970களில் சில இதழ்களில் கவிதைகள் எழுதிவந்துள்ளார். 1978இல் தாமரையில் இவரது முதல் சிறுகதை வெளிவந்திலிருந்து மொத்தம் 32 சிறுகதைகளைப் படைத்துள்ளார். அந்த 32 சிறுகதைகளும் ஒருசேரத் தொகுத்த தொகுப்பை 2006ஆம் ஆண்டு பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. இந்த 32 சிறுகதைகளும் 2006க்கு முன்பே வெளிவந்த இவரது இரண்டு சிறுகதைத் தொகுப்புகளிலிருந்தும் தொகுக்கப்பட்டவை. சில கதைகள் உதிரிக் கதைகளாக 1992க்குப் பின் எழுதியவை இருக்கக் கூடும். அவரது சிறுகதைத் தொகுப்பு நூல்களின் விவரம் வருமாறு;
1. வெயிலோடு போய், சிறுகதைகள், 1984.
2. வாளின் தனிமை, சிறுகதைகள், 1992.
3. மிதமான காற்றும் இசைவான கடலையும் (முழுச் சிறுகதைத் தொகுப்பு, 32 சிறுகதைகள், பாரதி புத்தகாலயம், சென்னை, 2006.
1984, 1992 ஆகிய இரு ஆண்டுகளிலும் வெளிவந்த இரு நூல்களிலும் இடம்பெற்ற கதைகளோடு சில சிறுகதைகளும் சேர்த்து 2006இல் ஒட்டுமொத்த சிறுகதைத் தொகுப்பாக வெளியிட்டுள்ளார். இவற்றிலிருந்து சிறந்த பத்து சிறுகதைகளைத் தொகுத்து, ‘முத்துக்கள் பத்து’ ச.தமிழ்ச்செல்வன் என்ற நூல், 2007 ; 126) அம்ருதா பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டுள்ளார் எழுத்தாளர் திலகவதி. இந்தப் 10 சிறுகதைகளையும் படித்தாலே இவரது படைப்பாளுமையைப் புரிந்துகொள்ள முடியும். இன்று நவீனம், அந்த இசம் இந்தஇசம், என்று பேசுவதையெல்லாம் அன்றே (1978க்கு முன்பே) தன் சிறுகதைகளில் இடம்பெறச் செய்துள்ளார். இதுவும் கூட வலிந்து அவர் செய்ததில்லை. இயல்பான கற்றலிலிருந்து இத்தகைய பண்புகள் இவரது சிறுகதைகளில் இடம்பெற்றுள்ளன. இவரது முழுச் சிறுகதைத் தொகுப்புக்கு இவர் இட்டுள்ள நூற்தலைப்பே இவரது படைப்பாளுமைக்கும் கொள்கை-யாளுமைக்கும் கட்டியங் கூறுகிறது.
‘மிதமான காற்றும் இசைவான கடல்லையும்’ என்ற தலைப்பே பின்வரும் கருத்துக்களை வழங்குகிறது:
1. இயல்பாய் இரசிக்கத்தக்க இயைபிணைவைக் கொண்டவை. மாற்றம் இயல்பாய் நடந்தேறுமாறு இலக்கியம் படைப்பாக்கமும் இயல்பாய் எழவேண்டும்.
2. புயலால் இரசனையைத் தரஇயலாது. இதுவும் மாற்றம்தான் என்ற போதிலும் வலிவால் வரும் அழிவு வேண்டத்தக்கதல்ல.
முடிவுரையாக…
இதர 10 வகைமை நூல்களின் உள்ளடக்கப் பார்வையை விரிப்பின் பெருகும்; தொகுப்பன் எஞ்சும். எனவே, ச.தமிழ்ச்செல்வனின் படைப்புப் பணியினை இவ்வாறு மதிப்பிட்டு இப்போதைக்கு இந்தக் கட்டுரையை நிறைவுசெய்துகொள்ளலாம்.
1. 1975- அவர காலச் சூழலில், தன் இராணுவப் பணியை உதறிவிட்டு செம்மைசெய்யும் பணியை வரித்துக்கொண்ட இவர், முதலில் படைப்பிலக்கியவாதியாக முகிழ்த்தார். 1990களுக்குப் பிறகு, அறிவொளி இயக்கம் வந்த பின்பு, தான் எழுதிய 32 சிறுகதைகள் எப்படி இத்தனை மக்களைச் சென்றுசேரும் என்று எண்ணிய இவர் படைப்பிலக்குவாதியாக – புதிய சமூகப் படைப்பிலக்குவாதியாக – தன்னைக் களப்பணியாளனாக்கிக் கொண்டதால் இவரின் படைப்புகளின் பொருண்மைகள் மாறலாயின.
2. ஒரு எழுத்தாளனாகப் படைப்பிலக்கியம் படைப்பதைக் காட்டிலும் பொதுவுடைமைப் போராளியாக இருந்து மக்களிடம் நேரடியாக உரையாடுவதே இன்றியமையாதது என்று புரிந்துகொண்டதால் அரசியல், பண்பாட்டியல் நூல்களை அதிகமாகப் படைத்துள்ளார் (8+4=12).
3. இவரது எல்லாப் படைப்புகளையும் பார்க்கும்போது இவரது பரந்துபட்டதும் ஆழங்கால்பட்டதுமான பல்துறை அறிவாண்மை வியக்கவைக்கிறது. அதனினும் மேலாக, அவரது எல்லாப் படைப்புகளுக்குள்ளும் ஊடாடும் மானுடநேய சமத்துவப் புரட்சிகர உணர்வு படிப்பவருக்குள் மூச்சுக்காற்றைப் போல் இயல்பாய் உள்நுழைந்து சமூக உயிர்ப்புக்கும் நிலைப்புக்கும் மாற்றத்திற்கும் வழிவகுக்கிறது என்பது வெற்று முடிவுரையல்ல; நீங்களும் வாசிப்பதற்கான முகவுரை!
*** பன்னாட்டுக் கருத்தரங்கம், தென்பாண்டி நாட்டுப் படைப்பாளர்களின் சமுகச் சிந்தனைகள், கே.எஸ்.ஜி. கல்லூரிக் கலையரங்கம், கோயம்புத்தூர், நாள் 26.12.201
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment