Thursday, 24 March 2016
இடறிய இடத்தை நோக்கி... முனைவர் அ.விமலா
இடறிய இடத்தை நோக்கி...
முனைவர் அ.விமலா
தமிழ் உதவிப் பேராசிரியர்
ஜெ.ஜெ.கலை அறிவியல் கல்லூரி (த)
புதுக்கோட்டை
பேச 95850 34134
மலர் மலர்வதுபோல் காலைப்பொழுது மெல்லமெல்ல மலர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் கோழிகூவலின் சத்தம், ஒரு பக்கம் பால்காரர் மணியடிக்கும் சத்தம், ஒரு பக்கம் கன்றுக்குட்டி அம்மா என்று அழைக்கும் சத்தம். மறு சத்தம் தெருச்சண்டைகளின் சத்தம்... கேட்டுக்கொண்டே கவிதாயினி படுக்கையிலிருந்து வாரிச்சுருட்டி எழுந்தாள். அவள் தலையில் இருக்கிற முடியை எண்ணிவிடலாம். ஆனால் அவள் துயரங்களையும் ஏக்கங்களையும் எண்ண முடியுமா? காலை எட்டு மணி.
“பெரிய கட்டெ... பெரிய கட்டெ... ஏய்... சின்ன கட்டெ... சின்ன கட்டெ... எங்க யாரையும் காணாம்... என்று கூப்பிட்டுக்கொண்டே வரும்போது பெரியகட்டை ஒரு கூட விராட்டியோடு வயற்காட்டிலிருந்து வந்தாள். வெயில் நேரத்தில் கோட்டகத்துக்குப் போக முடியாது என்பதால் காலைப்பொழுதில் இந்த வேலையெல்லாம் செய்து விடுவாள். உயரம், நிறம், உடல் தோற்றத்தைக் கொண்டு, கட்டெ, வெள்ளையம்மா, நச்செ... இப்படியெல்லாம் பெயரிட்டுக் கூப்பிடுவது அந்தப் பகுதி வழக்கம்.
“ஏய்... பெரியகட்டெ... மோரு வாங்க நேரமாச்சி வரலயா, ஏய்... அந்த மோருகாராச்சி நேரமாச்சின்னா மோரு கொடுக்காதுடி... கனகா, கண்ணி, லதா, சரளா எல்லாரையும் அழச்சிக்கிட்டு சொம்ப எடுத்துக்கிட்டு வா போவலாம்...”
மோர்க்கார ஆச்சி ஆச்சாரத்துடன் “எல்லாம் எட்டி நில்லு... என்னெத் தொட்டுடாதீங்க... இப்பத்தான் குளிச்சேன்... திரும்ப குளிக்க முடியாது... அவஅவ சொம்பக் கீழேபிடி... உங்களையெல்லாம் பார்த்தாலே தீட்டு... ஏஞ்சொம்போட ஒஞ் சொம்பெ ஒரசிராதே...” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது கவிதாயினி வேண்டுமென்றே தன்சொம்பை மோர்க்கார ஆச்சியின் சொம்போடு உரசினாள். “ஏய்.. காத்தான் மொவள.. ரொம்ப எடக்குக்காரியாத்தான் இருக்குற... உனக்கு மோரு இல்ல போ...”. என்று கத்தினாள் மோர்க்கார ஆச்சி. கவிதாயினி அழுதுகொண்டே வந்தாள். உடனே கனகா, “நீ ஏண்டி ஒரசினே?! – தள்ளிநின்னு வாங்க வேண்டியதுதானே?!” என்றாள். “ஆமா... போடி... ஐயர் கடெக்கிப் போனா காசத் தூக்கிப்போடு தொட்டுப்புடாதேங்கிறாரு... படித்தொறைக்கிக் குளிக்கப்போனா.. உங்களுக்கெல்லாம் அந்தோ... அங்க ஒதுக்கிருக்குப் பாரு தொர... அங்க போங்குறாங்க. அய்யருதெரு இன்னும் மத்த தெருவுல போகும்போது நம்மளக் கண்டா எட்டி ஒதுங்குறாங்க. ஒரு நாளு என்னோட படிக்கிற மருதாம்பா அவ வீட்டுக்குக் கூப்பிட்டுக்கிட்டே இருந்தா... அங்க போனா அவுங்க அம்மா இவளயெல்லாம் வீட்டுக்குள்ள அழைச்சுக்கிட்டு வராதெ... நம்ம சாமிக்கெல்லாம் ஆகாதுன்னு அவளெத் திட்டுனாங்க.. எனக்கு ரொம்ப நாளா ஆசடி கண்ணகி... இவுங்களையெல்லாம் எப்புடியும் தொட்டுப் பாத்திடணுமுன்னு... அதாஞ் சொம்ப ஒரசுனேன்... ஏய்... லதா! அங்கெ பாரேன் அவங்க வூட்டுப் புள்ளை சட்டெய.. எவ்ளோ நல்லாருக்கு. நம்ம அப்பா அம்மாக்கிட்ட அதுபோல வாங்கிக் கேட்டா சந்தையில உள்ளதத்தான் எடுத்துக் குடுக்குறாங்க... ஒரு நாளு அப்புடித்தான் அந்த மோருகாராச்சி பேத்தி சட்டெபோல நானும் போட்ருக்க மாதிரி கனவு கண்டங்... டக்குனு முளிச்சுக்கிட்டேன்...” உடனே லதா சொன்னாள், “இதாண்டி இவளுக்கு வேலெ..... வெற வேலெயே இல்லையாடி...?!”. கலா சொன்னாள், “அவுங்க அப்பா அம்மா டீச்சரு, சாருனு வேலெ பாக்குறாங்க. நம்ம அப்பா அம்மா அவுங்க வீட்டுல பண்ணெ வேலெ செய்றாங்க தெரிஞ்சிக்க... சரி ... சரி... வா... மோரெக் கொண்டே வச்சிட்டு அந்தப் புத்துத்தெடல்ல காட்டுக்கனகாம்பரமும் மீமுள்ளு பூவும் நிறைய பூத்திருக்கு... பறிச்சுக்கிட்டு வருவோம். நாளெக்கிப் பள்ளிக்கொடத்துக்கு வச்சுக்கிட்டுப் போவலாம்...” கவிதாயினி குறுக்கிட்டு, ஏய்.... அந்த அய்யரு வீட்டுப் பொண்ணு வெள்ளெயாய் பூவுவச்சிருந்தது பாத்தியா!” என்றாள். “ஏய்... திரும்ப திரும்ப ஆரம்பிச்சிட்டியாடி என்று கேட்டுக்கொண்டே கனகா சென்றாள். திரும்பவும் கவிதாயினி, “ஏய்... நா சொல்றத கொஞ்சம் கேளுங்கடி....” என்று கெஞ்சவும் “என்னதாஞ் சொல்லவர்றா கவிதாயினி... கேப்போம்...” என்றாள் கண்ணகி.
“அவுங்க மாதிரி நம்மளும் டீச்சரா வரலாமுல்ல....”
“அதுக்கு பனங்காசுக்கு என்ன பண்ணுவ....”
“ஏன்.... நாத்துநடவு நட்டு, கள பிடிங்கி காசு சேத்தா படிக்கலாமே!”
“நம்மள யாரு வேலெக்கிச் சேத்துக்குவா?”
“எல்லாரும் அவுங்கவுங்க அக்கா தாவணிங்கள போட்டுக்கிட்டு போவோம். ஒரு
நாளைக்கு கூலி பதிமூனு ரூவா... போவம்படி...”
வெய்யிலின் உக்கிரம் கண்ணகியால் ஒன்றும் செய்யமுடியவில்லை. உடனே கனகா, “ஏய்! கண்ணகி...! உன் முதுபுறா கொம்பளம்டி.... தண்ணியாகியாட்டா தளதளதன்னுருக்குடி...”
“கண்ணகி முதுகு மட்டுதான் இருக்கா .ந்தோ”
பாருடி ஒம் மொதுக கொப்பளம் தோலுரிஞ்சு நச்சத்திரமா இருக்கு”
என்றாள் கவிதாயினி.
வெயில் அவரவரைப் புரட்டிப்போட்டாலும் சம்பளம் பதிமூனு ரூபாய் என கெடைக்குதுல என நினைத்து பெருமூச்சுவிட்டன். அவரவர் கைகளிலும் நிறைய காசு புழங்கத் தொடங்கியது. கவிதாயினி கல்வியில் பாதி, கழனியில் பாதியாக இருந்து படிப்பைத் தொடர்ந்தாள். பன்னிரெண்டாம் வகுப்பில் ஆயிரத்துக்குமேல் மதிப்பெண் எடுத்து மருத்துவப் படிப்பை மேற்கொண்டிருந்தாள். அவளது தோழிகள் காட்டு வேலையிலேயே தொடர்ந்து ஈடுபடத் தொடங்கினார்கள்.
கவிதாயினியைப் பார்த்து அவ்வூர் மக்களும் தங்கள் பிள்ளைகளிடம், “ஏய்... நல்லா படிங்கடா... கவிதாயினி அக்காவ பாரேன்.... கஷ்டப்பட்டு படிச்சு வேலைக்கு வந்துட்டு.... த..ஞ்.சா...வூ..ர்ல படிச்சதுடா... நா(ன்) ஒழச்சி காசு பணந்தர்றேன்.... நீங்க படிங்கடா...” என்று கூறுவார்கள். கவிக்குப் பிறகு அவள் வசித்த தெருவில் பெண்களும் பையன்களும் நிறைய பேர் வாத்தியார் வக்கீல் என்று பெருகத் தொடங்கினர்.
கவிதாயினிக்கு டாக்டர் வேலை கிடைத்தது. தனது சொந்த ஊருக்கு காரில் வந்துகொண்டிருக்கிறாள். அப்படி வந்துகொண்டிருக்கும்போது எங்கு பார்த்தாலும் நோட்டமிடுகிறாள்....
“அந்தோ இருக்கு... ஊரெ தெரியாம மழை அடிச்சு ஊத்தும்போது கொடலெ போட்டுக்கிட்டு நட்ட வயல்...”
“மத்தியானம் கரையேறி களத்துமேட்டுல சோறுதிங்கிற அரசமரத்தின் நிழல் நி..றை..ய.வே.... படர்ந்திருக்கு...”
“ஓ...! பழைய சோறும் வெங்காயமுமா இருக்குற தூக்குவாளிய மாட்ற ஒதியங்கௌகூட எவ்ளோ பெருசாயிட்டு...”
“வெயில் தாங்க முடியாம இந்த வாய்க்கால்லதானே தொப்புதொப்புனு விழுந்து எழுந்தரிச்சு ஈரத்துணியோட நடுவோங்....”
என்று நினைத்துக்கொண்டே காரை மெல்ல ஓட்டிவந்த கவிதாயினி நட்டுக்கொண்டிருக்கிற தோழிகளைப் பார்த்து சத்தமிட்டு அழைக்கிறாள். அவர்கள், “ஏய்... ஏய்... இங்க பாருங்கடி... நம்ம கவிதாயினி டாக்டருடி...” ஓடிவந்து கவிதாயினியை கட்டிப்பிடித்து முத்தமிடுகிறார்கள்... அவர்கள் அனைவரும் தாயாகி விட்டனர்.
“ஏய்... கனகா! அந்த மோருகாராச்சி என்னுக்கிட்ட வைத்தியத்துக்கு வந்ததுடி... அந்தம்மா கையெப் புடிச்சு பாத்தேண்டி...!!! கடெகார அய்யரும் வந்தாரு... அவருக்குக்கூட ஒருதடவை மயக்கம் வந்திருச்சு.. யாந் தண்ணியத்தான் கொடுத்தேங்... குடிச்சாரு....!!! அந்த மருதாம்பா அம்மா.. இன்னும் மேஞ்ஜாதி தெருவுல இருந்து நெறயப் பேரு வைத்தியத்துக்கு வந்தாங்க... என்னோட வேலெபாக்குற டாக்டர்களும் மேஞ்ஜாதிக்காரங்கதாங்...”.
“அப்புடியா... ஆம்பளை பையங்க இருக்காங்களா....???” என்று கேட்டவுடன் வெட்கச்சிரிப்புடன் நகர்ந்தாள் கவிதாயினி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment