Thursday 14 April 2016

எல்லாச் சாதிகளும் தீண்டத்தகாத சாதிகளே!

*நீங்கள் இந்திய சமூகத்தில் சாதி ஒழிய வேண்டும் என்றும் துடிப்பவரா? நடிப்பவரா? வேண்டாம் என்று வெடிப்பவரா? யாராக இருந்தாலும் இந்த நடைச்சித்திரத்தைப் படித்ததும் உங்களை இதில் காண்பீர்கள்! உங்கள் உணர்வை நீங்கள் உணர்வீர்கள்! இப்போது வாருங்கள் என்னோடு! இதைப் படிக்கத் தொடங்கும் அன்பர்களே! நீங்கள் எந்த சாதி என யாராவது கேட்டால் “என் சாதி இன்னது” என உடனடியாகப் பட்டெனச் சொல்கிறீர்களா? ‘என் சாதி உயர்ந்த சாதி’ என்ற மனோநிலையில் நீங்கள் இருக்கிறீர்கள் என்று பொருள் “ஏன் மனுசன்தான்” என்கிறீர்களா? அல்லது சாதியைச் சொல்லத் தயங்குகிறீர்களா? அப்படியென்றால், நீங்கள் தாழ்ந்த சாதி... என்று நான் சொல்லவில்லை. உங்கள் பதிலின் தொனி... பதிலில் தொக்கிநிற்பது அதுதான்.... அது தாழ்ந்த சாதியல்ல… தாழ்த்தப்பட்ட சாதி! 

இப்படி ஒருவன் பெருமிதமாகவும் மற்றொருவன் சங்கடமாகவும் நினைக்கும்படிச் செய்தது எது? செய்தவர்கள் யார்? இதற்கான விடைகளைத் தெளிவுபடுத்திக் கொள்ள இந்தியச் சமூக வரலாற்றைப் பற்றி அம்பேத்கர் உள்ளிட்ட பல அறிஞர்களைப் படிக்க வேண்டும். அப்படியா? அவர்களின் கருத்துக்களை மேற்கோள் காட்டித்தான் நீங்களும் விளக்கப் போகிறீர்களா?! என்று நீங்கள் கேட்காமலே எனக்குக் கேட்கிறது. அறிஞர்களின் நூல்களைத் தேடிப் படிக்கும் ஆர்வமும் படித்த அறிவாற்றலும் உள்ளவர்கள் படித்துக் கொள்ளலாம்! நான் அவற்றுக்குள் போகப் போவதில்லை. நான் உங்களின் மனசாட்சியோடு நெருங்கிப் பேசப் போகிறேன். அதனால் அப்பட்டமான உண்மைகளை நான் சொல்லும்போது உங்கள் மனசாட்சியைத் தொட்டு எழுப்பி இந்த உண்மைகளுக்குள் நீங்கள் வருகிறீர்களா என்ற எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள்! அது போதும்!. 

சொந்த பந்தமும் மணவுறவும் யாரையாவது எங்கோ தற்செயலாகப் பார்த்தால் நீங்கள் உங்கள் நண்பரிடம் / தோழியிடம், “இவர் எங்க சொந்தக்காரர்!” என்று அறிமுகப் படுத்தியிருக்கிறீர்களா?! இப்படி அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள் என்றால் “அவர் உங்கள் சாதிக்காரர் என்று அர்த்தம்… உங்கள் உறவினர்களில் எங்கோ யாரோடோ மணவுறவு கொண்டவர் அல்லது மணவுறவு கொண்ட குடும்ப உறுப்பினர் அல்லது அவர்களது கிளையுறவுகளில் மணம் முடித்தவர் அல்லது மணம் முடித்தவரின் உறவினர்” என்பதைப் பளிச்செனப் புரிந்துகொள்கிறார் உங்கள் நண்பர் தோழி. 

இதேபோல், இன்னொரு சூழலில் ஒருவரைச் சந்தித்ததும் நீங்கள் உங்கள் நண்பரிடம், “இவர் என் நண்பர்” என்று அறிமுகப்படுத்துகிறீர்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள். ஏன் கற்பனையாக நினைத்துக்கொள்ள வேண்டும்? இதுபோன்ற சூழலும் நிகழ்வும் எல்லோர் வாழ்விலும் நடப்பதுதானே!. நீங்கள், “இவர் என் நண்பர்” என்று சொன்ன பதிலில் என்ன தெரிகிறது?! அந்த நண்பர் உங்கள் வகையில் மணவுறவுத் தொடர்வு இல்லாதவர்… ஒருவேளை அவர் உங்கள் சாதிக்காரராகக் கூட இருக்கலாம்… ஆனால், நண்பர் என்றுதான் சொல்வீர்கள்….. கேட்டுக்கொண்டிருந்த நண்பர் ‘அப்படியா” என்பாரல்லவா? அந்த ‘அப்படியா’ என்பதில் மேலே சொன்ன புரிதல் உள்ளது என்று பொருள். உங்களால் “இவர் என் நண்பர்” என்று அறிமுகப்படுத்தப்பட்டவர், ஏதோ ஒரு வகையில் அறிமுகத்தைக் கேட்டுக்கொண்டிருந்தவருக்குத் தெரிந்தவர் என்றால் அவர் உடனே என்ன சொல்வார்?! * இவர்தானே! எனக்கு நல்லாத் தெரியுமே… எனக்கும் நண்பர் தான்” என்றும் சொல்லலாம்… * “இவர்தானே! இவர் என்நண்பர் முருகனோட நண்பராச்சே!” * “இவரை எனக்கே அறிமுகப்படுத்துறீர்களே நண்பரே! இவர் எங்க சொந்தக்காரர்….” இப்படி 3 வகையான பதில்களில் 3வது பதில் வந்தால் அதற்கு என்ன பொருள்? உங்கள் நண்பரின் சாதிக்காரர் என்று பொருளல்லவா? அப்படியென்றால், எந்த ஒரு மனிதரையும் வெறும் மனிதராக யாரும் பார்ப்பதில்லை. ஒன்று, சாதிக்காரராகப் பார்க்கிறோம்.. இல்லையென்றால், நண்பராகப் பார்க்கிறோம்… இல்லையா? ஆக, சாதிக்காரர் என்றால் மணவுறவுத் தொடர்புடையவர் …. நண்பர் என்றால் மணவுறவுத் தொடர்புடையவராக இருந்தாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இந்த இடத்தில் ஒரு தீர்க்கமான முடிவை நாம் எடுத்துக் கொள்ளலாம்… சாதிக்காரர் நண்பராகவும் இருக்கலாம். ஆனால், நண்பர் என்பவர் சாதிக்காரர் அல்லர். அப்படியென்றால், மணவுறவோடு சாதிக்குத் தொடர்பு இருக்கிறது.. நட்புக்குச் சாதியோடு துளியும் தொடர்பு இல்லை. 

இதுவரை நான் சொல்லிக் கொண்டிருப்பதோடு உடன்பாடு வந்திருந்தீர்கள் என்றால், சொந்தம் என்பது சாதி பந்தம் என்து மணவுறவுத் தொடர்பு என்பது தெளிவாக விளங்கியிருக்கும். சரி… நண்பனை ஏன் சொந்தபந்தமாக எண்ண மறுக்கிறோம்…?! “எங்க குடும்பத்துல ஒருத்தரா நினைக்கிறோம்” என்கிறோமே! அப்ப நினைக்கமட்டுந்தான் முடியும்… உங்க வூட்டுப் பொண்ணையோ உங்க சொந்தக்காரவூட்டுப் பொண்ணையோ அவர் காதலித்துவிட்டால், “உன்னையெல்லாம் நண்பன்னு நம்புனேனே.. என்னைச் செருப்பால அடிச்சுக்கணும்” என்று காட்டுக்கத்தல் போடுவோமே… அந்த நேரத்தில் சாதி கடந்த நட்புக்கே சாதி அடையாளம் புசிவிடுகிறோமே… ஏன்… அந்த நண்பன் என் சாதிக்காரன் இல்லை… என்ற உணர்வுதானே! அடப் பாவிங்களா..! இந்த எண்ணம்தானே உங்களுக்குப் பிரச்சனை… சாதி …. சாதி… சாதி…..ன்னு பேதிக்கிறீங்களே … புத்தி பேதலிக்கிறீங்களே… அந்த சாதிக்குள்ளேயே சாதியை மட்டும் பாத்தா பொண்ணு குடுக்குறீங்க… ?! எடுக்குறீங்க…?! ‘சொந்த சாதிக்குள் மணவுறவு’ சாதியில் தீர்மானிக்கப்படுவதில்லை அதெப்படி?! ?! சாதி மட்டுமா பாக்குறோம்…?! உட்சாதி பாக்குறோம்… பட்டம் பாக்குறோம்… கரை பாக்குறோம்…. நாடு பாக்குறோம்…. குலதெய்வம் பாக்குறோம்…. வகையறா பாக்குறோம்… இவ்வளவும் பாத்தத்துக்கு அப்புறம் தானே பொண்ணு பாக்குறோம்… பொண்ணு கேக்குறோம்….? அப்புடிங்கிறீங்க… அதானே…! அதான் இல்லை. பொண்ணு எடுக்குறத்துக்கும் பொண்ணு குடுக்குறத்துக்கும் சாதிக்குள் பார்த்தாலும் சாதிக்காக மட்டுமே ஒரு பயலும் ஒத்துக்கிறது இல்லை. பிறகென்ன பாக்குறோம்?!. சாதி அளவுகோலைத் தாண்டி நான்கு அளவுகோல் வைத்திருக்கிறோம்.. இந்த நாலிலும் ஒத்துவருவது மட்டும்தான் முக்கியம் என்கிறோம்… “பொண்ணக் கொடுத்தோமோ கண்ணக் கொடுத்தோமோன்னு” சாதிக்காரன் – சொந்தக்காரன் என்பதற்காக மட்டுமே யாரும் கொடுக்கிறதும் இல்லை; எடுக்கிறதும் இல்லை. அது சரியப்பா… அந்த நாலு அளவுகோல்கள் என்னென்ன? அதைச் சொல்லப்பா என்கிறீர்களா? இதோ அவை: 1. பையன் சம்பாதிக்கிறானா? சொத்து சுகம்? 2. நல்ல பையனா? குடி கூத்தி உண்டா? பொண்ணக் கண்கலங்காம வச்சுக் காலந் தள்ளுவானா? பொண்ணுக்குப் பொருத்தமா? 3. மாமன் மாமியார் நாத்தனார் குணங்குறி எப்படி? 4. சொந்த பந்தத்தைக் கொண்டாடுற குணம் பையனுக்கு இருக்கா? இந்த நாலுந்தான் அளவுகோல்! இது மாப்பிள்ளை பாக்குறதுக்கு மட்டுமா? இல்லையே! பொண்ணுக்கும் இதே மாதிரி நாலு அளவுகோல் உண்டுன்னுதானே நினைக்கிறீர்கள்…. 

பெண்ணுக்கு மூன்றே அளவுகோல் தான்! இதோ அவை 1. நல்ல பொண்ணா? எல்லாரையும் அனுசரிச்சப் போகுமா? 2. என்ன செய்வாக? 3. கறுப்பா செவப்பா? பையனுக்குப் பொருத்தமா? இதற்குமேல் ஜாதகப் பொருத்தம் பார்ப்பவர்கள் உண்டு. பொருத்தம் பார்த்து அகமணமுறை செய்த பல பெண்களும் சில ஆண்களும் பொறுத்துப் பார்த்தே காலத்தை ஓட்டுகிறார்கள். அது கிடக்கட்டும். அதுவேறு தலைப்பு. 

அது சரி… இங்க வாங்க…. இப்பொழுது பார்த்ததில் ‘சாதி’ என்ற அளவுகோல் எங்கேயாவது வந்ததா? சாதி என்பது தொழில் மரபறிபை வழிவழியாகப் பயன்படுத்திக் கொண்டால் மட்டுமே சம்பாத்யம் சாத்தியம் என்பது மட்டும்தான். அதுவன்றி, தொழிலடிப்படையில் இனக்குழுவின் இணக்கமான வாழ்க்கை கட்டமைக்கப்பட்டிருக்கிறதல்லாவா? காலங்காலமாகத் தொழில் சாதிக்குள் அகமணவுறவு கொண்டு சாதித்தொழில் நீடிப்புக்கு வழிவகுத்ததல்லவா? அங்குதான் சாதி தொழிற்படுகிறது செயல்படுகிறது; தொழில் சாதியானது அப்படித்தானே?! ஆக, சொந்த சாதிக்குள்ளேயே சாதிக்காக மட்டுமே பெண் கொடுப்பதில்லை…. சாதிபார்த்துப் பெண் கொடுப்பதில்லை; எடுப்பதுமில்லை… அங்கு வாழ்க்கையைச் செம்மையாக நடத்தும் தனிமனித, குடும்ப விழுமியங்கள் ஒழுக்கங்கள் அறநெறிகள்தாம் பார்க்கப்படுகின்றன என்பது இப்பொழுது புரிகிறதா?!. சாதியின் தொழில் என்னும் விழுமியம் பழக்கப்பட்டுப் போய்விட்டது… அவ்வளவுதான்… இல்லையா?!. எனவே, எந்த ஒரு சொந்த சாதிக்குள்ளும் சாதி என்னும் அளவுகோலை மட்டும் முன்வைத்து மணவுறவு தீர்மானிக்கப்படுவதில்லை. அவ்வளவு ஏன்? சொந்த மாமன், அத்தை, அக்காள் வழிகளிலும் சொந்தம் (சாதி) மட்டுமே போதாது; சொத்தும் வேண்டும் என்பதுதானே சமூக நிலவரம்… இது சமூக நிலவரமா? சாதி நிலவரமா? சமூகம் என்றதும் நினைவுக்கு வருகிறது. ‘சமூகம்’ என்ற சொல் ‘சாதி’ ஆகிப்போய்விட்டதே! அடக்கொடுமையே! மடக்கொடுமையல்லவா இது! அது வேறு விவாதத்திற்குரியது…. சாதி அளவுகோலைத் தாண்டிக் ‘காதல்’ அளவுகோலை ஏற்கலாமா? அதெப்படி முடியும்….??? சாதித் தூய்மை என்னாவது? பாரம்பரியப் பழக்க வழக்கம் என்ன ஆகிறது? மானம் மரியாதை இழக்கமுடியுமா? நாங்கள்லாம் அந்தப் பரம்பரை…. இந்தப் பரம்பரை.. என்று தாம்தூம் என்று வானுக்கும் பூமிக்கும் குதிக்கத் தொடங்கிவிட்டீர்களா? 

உங்கள் பரம்பரை - அதான் சாதிக்காரர்கள் அதான் சொந்தக்காரர்கள் 100 பேரின் மரபணுக்களைச் சோதனை செய்வோமா? 50% ஒத்துவருமா? மீதி 50%?! பொறுங்கள்… கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள்… நிதானியுங்கள்… உங்களை உங்கள் பிள்ளைப் பருவத்திலிருந்து இன்றைய பருவம் வரையிலான (வயதுவரை) நினைவோடைக்குள் நீந்தவைக்கப் போகிறேன்… மூச்சடக்கினால் முத்து…. மூச்சடங்கினால் சங்கு….?! அட ஏன்யா? அபசகுனமா என்கிறீர்களா? அது கிடக்கட்டும்…? என்னோடு வாருங்கள்…. * பிள்ளைப் பருவத்திலிருந்து சிறுவனாகிறீர்கள்… விளையாடுகிறீர்கள்… ஆண் பெண்ணோடு… ஹார்மோன் வேலை செய்கிறது… ஆசை வருகிறது… ஈர்ப்பு வருகிறது ….. யார் யார் மேலெல்லாம் வந்தது?!. * பள்ளிக்குச் செல்கிறீர்கள்… படிக்கிறீர்கள்… பழகுகிறீர்கள்… ஆண் பெண்ணொடு… யார் யார்மேலெல்லாம் ஈர்ப்பு வந்தது? யார் யாரை யெல்லாம் ரசித்தீர்கள்?!. * கல்லூரிக்குச் செல்கிறீர்கள்… படிக்கிறீர்கள்… படிப்பை மட்டுமா படிக்கிறீர்கள்?! புதிய புதிய கனவுகளை, இலட்சியங்களையும் அல்லவா படிக்கிறீர்கள்?! கல்லூரிக் காலத்தில் ‘செல்’ லூறிச் ‘செல்’ லூறி (Cell + Cell Phone) ‘ஜொல்’லூறித் துரத்தினீர்களா இல்லையா? சரி… நீங்கள் துரத்தவில்லை… உங்கள் எண்ணம், ஆசை, உணர்வு, காதல், காமம் இவையெல்லாம் உங்களையே துரத்தியிருக்குமே….!? அப்பொழுது யார்யாரையெல்லாம் காதலித்தீர்கள்?! சரி…. வேலைக்குப் போகிறீர்கள்? பணிபுரிகிறீர்கள்… வேறு யார் யாரையெல்லாம் புரிந்தீர்கள்? அவர்களுள் யார்யார் மீதெல்லாம் காதல் வந்தது?!. இப்படி வாழ்க்கையின் வீதிகளில் நாம் / நீ பார்த்த காதல்களில் நம்சாதி பார்த்து / உன் சாதி பார்த்து வருவதில்லை... அல்லவா? பெண்ணைச் சாதிக்குள் பார்த்துத் திருமணம் செய்வதால்தான் ‘பெண்சாதி” என்றார்களோ என்னவோ? ஆனால், காதல் வயப்படுகிற யாரும் சாதி பார்த்து வயப்படுவதில்லை. இதில் ஆழமாக – நுட்பமாக யோசிக்க வேண்டிய ஒன்று உண்டு. அது என்னவென்றால், தனிமனிதனாக உணர்வுவயப்படுகிற எந்த ஒரு மனிதனும் அவனவன் / அவளவள் வாழ்நாளில் எத்தனையோ பேரிடம் ஆசையால், காதலால், காமத்தால், அழகால், பண்பால், அறிவால்.... இப்படி இப்படி ஏதோ ஒன்றால் ஈர்க்கப்பட்டிருப்பார்கள்! அவர்கள் ஈர்க்கப்பட்ட போதெல்லாம் அவரவர் மனசாட்சி சாதி எல்லை தாண்டிப் போகிறோமே என்று தடுத்துக் கொண்டதுண்டா?! ஆக, தனிநபராய் ஆசைக்கு வெட்கமில்லை. அந்தத் தனிநபரின் மகனோ / மகளோ ஆசைப்பட்டால் வெட்கமில்லாமல் தடுப்பது வெட்கக் கேடல்லவா? அப்போ…. உனக்கும் எனக்கும் சாதியில்லை. சாதிக்கு மட்டுந்தான் சாதி உண்டு. அப்படித் தனிநபரையும் சாதியையும் ஆட்டுவிக்கும் ‘சாதி’ எங்கு உயிர்வாழ்கிறது? விந்தை மிகு வருணாசிரமதரம் இருந்தியாவில்?! சிந்தையிலா ஜாதிவெறி இந்தியாவில்?1 எல்லாச் சாதிகளும் தீண்டத்தகாத சாதிகளே! என்ன இது? எல்லா சாதியுமே தீண்டத்தகாத சாதிகளா? தாழ்த்தப்பட்டவர்கள் மட்டும் தானே தீண்டத்தகாத சாதிகளாக நடத்தப்பட்டார்கள்?! நடத்தப்படுகிறார்கள்?! இது எப்படி?! என விழிகளின் இமைகளைப் புருவங்களுக்கு மேல் உயர்த்துகிறீர்களா?! கோபத்திலா?! வியப்பிலா?! வாருங்கள் இதையும் சிந்திப்போம்! தீண்டல் என்பது மனம், மொழி, மெய்களால் நிகழ்வது.  மனதால் எண்ணத் தீண்டல்;  மொழியால் சிந்தனைத் தீண்டல்;  மெய்களால் செயல்வழித் தீண்டல். இந்த மூன்றும் ஒருங்கிணைந்த தீண்டலின் பெயர்தான் ‘காதல்’. காதலால் தீண்டப்படாத காதலைத் தீண்டாத ஒரு மனிதனும் இந்த உலகில் இல்லை. ஏற்றால் காதல்; ஏற்காவிட்டால் மோதல்; ஏற்பதை ஏற்காவிட்டால் சாதல். இதுதானே இன்றைய நிலை! இதுவரை பார்த்தபடி வெட்டிக்கொன்ற பயல்களையும் விசாரித்துப் பாருங்கள்…. அவர்கள் மனதிலும் அத்தனை அத்தனை காதல் இருக்கும்! அத்தனை அத்தனை சாதியும் இருக்கும்!.  சண்டாளச் சாதிக்குப் பிறந்த பயல்களுக்கு அவனவன் சாதிப் பெண்ணையும் ஆணையும் பார்த்தால் மட்டுமே காதல் வரும்படி பொறந்திருக்க வேண்டியது தானே!  பார்த்தவுடனே ‘சுரீர்’ எனக் கண்அவிந்து போகும்படிக் கண் அமைந்திருந்திருக்கலாமே!  நினைத்தவுடனே ‘சாதித்தீ’ அவனவன் நெஞ்சாங்குழிக்குள் வந்து காதல் உணர்வைத் தீய்த்திருக்க வேண்டியதுதானே! ... அறுந்துபோக வேண்டியது தானே!. அடப்பாவிகளா?! பார்க்க, ரசிக்க, சிரிக்க, எண்ண, சிந்திக்க, கவிதை எழுத, பின்னால் அலைய, பேச, பேசிப் பழக, ஊர் சுற்ற, பேருந்து இருக்கையில் பிணைந்து கிடக்க,….??!!.... எல்லாத்துக்கும் நாயாய் நாக்கைத் தொங்கப்போட்டு அலையும் அவனுக்குக் கட்டிக்க மட்டுந்தானே கசக்குது…! அதுவும் அவன் கட்டிக்கிட்டா இனிக்குது.. அவன் புள்ள / பையன் அதையே செய்தால் சாதிப் புத்தி அறிவாகி அரிவாள் தூக்குது?!. இப்படிக் காதல் காதல் என்று பாரதிபோல் பாடினாலும் சாதிக்குள் பெண் பார்க்கும் / கொடுக்கும் பழக்கம்தான் எல்லாச் சாதிகளையும் தீண்டத்தகாத சாதிகளாக்கிவிட்டதே!? சாதிக்குள் உட்சாதி… என்று என்று சாதிமூலம் பார்த்துத்தானே எடுக்கிறோம் / கொடுக்கிறோம்… இந்தியாவில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான சாதிகளும் அடுத்த சாதிக்குப் பெண் கொடுத்து / எடுத்து மணவுறவு கொள்வதைத் தடுத்துக் கொண்டேதானே இருந்துவருகிறது இந்தியச் சமூகம்!? 

மானுட சமுதாயமே! உன் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லு : * மனதால் எண்ணி எத்தனை சாதிப் பெண்களை / ஆண்களைத் தீண்டியிருப்பீர்கள்?! * மொழியால் சொல்லி எத்தனை சாதிப் பெண்களிடம் / ஆண்களிடம் காதலைத் தீண்டியிருப்பீர்கள்?! * மெய்யால் எத்தனை சாதிப் பெண்களிடம் / ஆண்களிடம் …..?! மனம், மொழி, மெய் தீண்டல் நிகழ்வதை எந்தச் சாதியும் தடுத்துவிட முடியாது. திருமணம் செய்துகொண்டு ஒரு சாதியை வேறுச் சாதியை தீண்டுவதைத்தான் சாதி அகமணமுறை தடுத்துக் கொண்டே இருக்கிறது. அது அகமணமுறையோ (சாதி) புறமணமுறையோ (காதல்) இரண்டுக்கும் சாதி என்பது ஒரு பொருட்டல்ல. இது சின்னச் சாதியோ? பெரிய சாதியோ? அது தாழ்ந்தோ சாதியோ? உயர்ந்த சாதியோ? அது தாழ்த்தப்பட்ட சாதியோ?, பிற்படுத்தப்பட்ட சாதியோ? உயர்த்திக்கொள்ளப்பட்ட சாதியோ? எல்லாமே ஒன்றுதான் – மணத்திலும் மனத்திலும்! அப்போ ஒரு சாதிப் பெண்ணை வேறுசாதி ஆணோ ஒருசாதி ஆணை வேறுசாதிப் பெண்ணோ மணவுறவு கொண்டு தீண்டக்கூடாது என்பதுதானே சாதியின் விதிமூலம்!? அகமணமுறை இதைத் தானே சாதிக்கிறது…?! ஆக, அகமணமுறையைச் சாதிப்பதுதான் சாதி. இந்த அடிப்படையில், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு சாதியும் தீண்டத்தகாத சாதிகளே! மொத்தத்தில் எல்லாச் சாதிகளும் தீண்டத்தகாத சாதிகளே!. எனவே, எல்லாச் சாதிகளுக்குள்ளும் புறமணமுறையை – காதல் மணமுறையை நிலைநாட்டுவதன்மூலம் தீண்டாமையை ஒழிப்போம்! சாதியை அழிப்போம்!! சமத்துவம் வளர்ப்போம்!!!.

அம்பேத்கர் 125 – விழா மலர், 17.04.2016 (அம்பேத்கர் நகர், கீழ குளத்தூர், திருமானூர், அரியலூர் மாவட்டம்) வெளியாகும் என் கட்டுரை.

முனைவர் சு.மாதவன் உதவிப்பேராசிரியர் – யூஜிசி – ஆர்ஏ, தமிழாய்வுத்துறை, மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி (த), புதுக்கோட்டை பேச 9751 330 855 மின் அஞ்சல் : semmozhi200269@gmail.com

2 comments: