Sunday, 1 January 2023

ஒரு நாள் ; ஒரு நூல் -1 சோழ நாட்டில் பௌத்தம் - முனைவர் பா.ஜம்புலிங்கம்

 ஒரு நாள் : ஒரு நூல் - 1

01.01.2023 க்கானது


2023 ஆம் ஆண்டின் முதல் வாசிப்பைத் தொடங்கிவைத்த நூல் முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள் படைத்துள்ள " சோழ நாட்டில் பெளத்தம்" என்ற நூலாகும்.


இந்நூல் 222+X பக்கங்களைக் கொண்டது. புது எழுத்து ( படிமம் ) வெளியீடாக 2022 செப்டம்பரில் வெளிவந்துள்ளது. எடுத்தவுடன் முழுவதையும் புரட்டிப் பார்க்க வைக்கும் அழகியல் வடிவமைப்போடும் வழவழ தாள்களில் பளபளக்கும் கண்கொள்ளா புத்தரின் அழகிய படங்களோடும் இந்த நூல் படிப்பவரை ஈர்க்கிறது.... 177 மி.மீ * 240 மி.மீ. அளவு வடிவமைப்பு கொண்டது இந்நூல்.


அன்பு நண்பர் முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களின் முப்பதாண்டுகாலப் பேருழைப்பின் பெருவிளைச்சலாக வெளிவந்துள்ள இந்நூல் தமிழ் பெளத்த ஆய்வு வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் நூல் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை...


தமிழில் பெளத்தம் என்றவுடன் நினைவுக்கு வருபவர் பேரறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களும் பேரறிஞர் சோ.ந.கந்தசாமியும் ஆவர். முதலாமவர் கள ஆய்வோடு மெய்யியல், வரலாறு, வழக்காறு ஆகியவற்றைக் கொண்டு 'பெளத்தமும் தமிழும் ' என்ற அரிய நூலைத் தந்தவர். இரண்டாமவர் மணிமேகலையில் பெளத்த மெய்யியல், அறவியல், தருக்கவியல்,பிரபஞ்சவியல் ஆகியவற்றைக் கொண்டு நூல்கள் பல படைத்தவர். மயிலை சீனி.வேங்கடசாமிக்குப் பிறகு வியக்கத்தக்க வகையில் கள ஆய்வு செய்து வந்துள்ள ஒரே நூல்  முனைவர் பா.ஜம்புலிங்கம் படைத்ததின் துள்ள இந்நூலாகும்.


இந்நூல் எட்டு இயல்களை கொண்டு படைக்கப்பட்டுள்ளது. அவை முறையே வருமாறு 

1 சோழ நாடு 

2. அசோகரின் சாசனங்கள்

 3. இலக்கியம் பிற சான்றுகள்

 4. பௌத்த விகாரங்கள் ,கோயில்கள்

 5. நாகப்பட்டினம் புத்தர் செப்பு திருமேனிகள் 6.புத்தர் சிற்பங்கள் 

7.புத்தர் சிலைகள்

 8.புத்துயிர் பெறும் பௌத்தம் ஆகியவற்றோடு மதிப்புரை , முன்னுரை, துணைநூற்பட்டியல், பின்னிணைப்புகள் -3,

1. அலுவலர்கள், தகவலாளர்களுக்கு நன்றி 2.சிலைகள் உள்ள இடங்கள் 

3. நாளிதழ் நறுக்குகள் என்றவாறு உள்ளடக்கங்களை பெற்றுள்ளது இந்த நூல்.


1995இல் தொடங்கிய முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களின் கள ஆய்வுப்பயணம் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்காக 1995 ,முனைவர் பட்ட ஆய்வுக்காக 1999 ஆகிய இரு ஆண்டுகளில் ஆய்வு ஏடுகளை முறையே மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், தமிழ்ப்பல்கலைக்கழகம் ஆகியவற்றிற்கு வழங்கி உள்ளார். இந்த ஆய்வுகளுக்குப் பிறகு அந்த ஆய்வை விட்டுவிடாமல் தொடர்ந்து தேடல் தேடல் என்று தன் வாழ்நாளை முழுமையாக இந்த ஆய்வில் ஈடுபடுத்திக் கொண்டு இன்றைக்கு 2022 இல் இத்தகைய மாபெரும் அரிய தேடல் நிரம்பிய ஆய்வு நூலைத் தமிழுக்குக் கொடுத்துள்ளார்.


இந்த நூலுக்கான என்னுரையைப் புத்த பூர்ணிமா நாளான 16 மே 2022 அன்று எழுதி உள்ளார் என்கிற குறிப்பு  பௌத்த ஆய்வின் மீது எத்தகைய ஈடுபாட்டை இவர் கொண்டுள்ளார் என்பதைப் புலப்படுத்துகிறது.


முதல் இயலான சோழநாடு என்கிற இயல் மிக எளிய வகையில் இரண்டு பக்கங்களுக்குள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


இரண்டாவது இயலாக அமைந்துள்ள அசோகரின் சாசனங்கள் என்னும் இயலில் அசோகரின் சாசனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.


மூன்றாவது இயலான இலக்கியம் பிற சான்றுகள் என்னும் தலைப்பில் சங்க இலக்கியத்தில் இடம்பெறும் பௌத்தச் சுவடுகள், திருக்குறள்,சிலப்பதிகாரம் ,மணிமேகலை உள்ளிட்ட தமிழ் நூல்களில் இடம்பெற்றுள்ள பௌத்தச் சிந்தனைகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. அத்தோடு வெளிநாட்டவர் குறிப்புகள், கல்வெட்டுகள்,செப்பேடுகள்,பர்மா தேச வரலாறு ஆகிய தலைப்புகளிலும் இயலில் அளவான குறிப்புகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.


நான்காம் இயலான பௌத்த விகாரங்கள், கோயில்கள் என்னும் தலைப்பில் பூம்புகாரில் பௌத்தம் பெற்றிருந்த செல்வாக்கு, நாகப்பட்டினத்தில் இடம்பெற்றுள்ள /இடம்பெற்று இருந்த பௌத்தச் சுவடுகள் திருவலந்துறை,பெருஞ்சேரி, புத்தமங்கலம், மங்கலம் ஆகிய ஊர்களில் இடம்பெற்றுள்ள பௌத்தச்சுவடுகள் ஆகியவை தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.


ஐந்தாவது இயலான நாகப்பட்டினம் புத்தர் செப்புத் திருமேனிகள் என்னும் தலைப்பில் நாகப்பட்டினத்தில் இருந்து 1856 முதல் மகாயான பிரிவைச் சேர்ந்த சுமார் 350 புத்தர் செப்புத் திருமேனிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்கிற அரிய குறிப்போடு தஞ்சாவூர்,அய்யம்பேட்டை ,செல்லூர், ரெட்டிபாளையம், நாகப்பட்டினம் ,பேராவூரணி ஆகிய ஊர்களில் இருந்த இருந்து காணாமல் போன புத்தர் செப்பு திருமேனிகள் பற்றிய அரிதினும் அரிதான செய்திகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.


ஆறாம் இயலான புத்தர் சிற்பங்கள் என்னும் தலைப்பில் தஞ்சை பெருவுடையார் கோயில் ,தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில், திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள புத்தர் சிற்பங்கள் குறித்த செய்திகள் அழகுற எடுத்துரைக்கப்பட்டுள்ளன.


ஏழாம் இயலான புத்தர் சிலைகள் என்னும் தலைப்பில் தஞ்சாவூர் ,திருவாரூர் ,நாகப்பட்டினம் ,மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர் ,பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய அக்கால சோழ நாட்டில் இருக்கின்ற 48 சிலைகள் பற்றிய அரிதினும் அரிதான தேடல் மிகுந்த தெளிவான விளக்கங்கள் அமைந்த செய்திகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. இவ்வியலில் இடம்பெற்றுள்ள 48 புத்தர் சிலைகளுக்கும் அந்தந்த ஊர்களின் பெயரால் புத்தர் பெயரை குறித்து ஆங்காங்கே எடுக்கப்பட்ட அழகிய படங்களை வண்ணப் படங்களாக இந்நூலில் ஆவணப்படுத்தி உள்ளார். இந்த இயலைப் படிக்கிற போதும் பார்க்கிற போதும் சோழ நாட்டில் பௌத்தம் எத்தகைய அளவிற்கு காலூன்றி வேரூன்றிச் செழித்து இருந்தது என்பது தெற்றானப் புலப்படுகிறது.பிற்காலத்தில் சோழ நாட்டில் உருவான பக்தி இயக்கத்தின் விளைவாய் உருவாக்கப்பட்ட சைவ வைணவ கோயில்கள் வரலாற்றில் மிகப்பெரிய ஆவணங்களாக விளங்கிக் கொண்டிருந்த நிலையில் சோழ நாட்டில் பௌத்தமும் செழித்து இருந்தது ; அதற்குச் சோழ மன்னர்கள் அறக்கொடைகளை வழங்கி உள்ளனர் என்கிற செய்தியை ஆழமாக இந்த நூல் எடுத்துரைக்கிறது. இதன்மூலம் அக்கால மன்னர்களின் சமயப் பொறை / மதநல்லிணக்கச் சிந்தனை வெளிப்படுகிறது. ஒவ்வொரு புத்தர் சிலைகளும் முன்பே சொன்னபடி அரியலூர் புத்தர் ,அருந்தவபுரம் புத்தர் ,ஆயிரம் வேலி அயலூர் புத்தர் என்றவாறு அகரவரிசை படுத்திக் கொண்டே செல்கின்ற இந்நூல் ஆசிரியர் நிறைவாக ஜெயங்கொண்டம் புத்தர் என்பரோடு நிறைவு செய்து இருக்கிறார் .இதே இயலில் புத்தர் சிலைகள் இருப்பதாகச் சொல்லப்பட்டு இந்த ஆய்வாளரால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ஆய்வின் நிறைவில் அங்கு காணப்பட்ட சிலைகள் சமண தீர்த்தங்கரர் சிலைகள் என்று கண்டறியப்பட்ட செய்திகளாக ஆலங்குடிப்பட்டி சமணத் தீர்த்தங்கரர் மகாவீரர் , குளித்தலை சமணத் தீர்த்தங்கரர் மகாவீரர் உள்ளிட்ட ஏழு சமணத் தீர்த்தங்கரர் சிலைகளை / சிற்பங்களை ஆய்வாளர் பா. ஜம்புலிங்கம் அவர்கள் கண்டறிந்து ஆய்ந்து அறிந்து ஆவணப்படுத்தி உள்ளார் . அத்தோடு புத்தர் சிலை என்று சொல்லப்பட்டு மக்கள் வழக்கில் இருக்கின்ற சிவன் சிலை, பகவர் சிலை ஆகியவற்றையும் ஆவணப்படுத்தி உள்ளார். அத்தோடு சோழ நாட்டில் பௌத்த மையங்களாக திகழ்ந்த ஊர்களென பூதமங்கலம் ,புத்தகமங்கலம் ,சங்கமங்கலம்,போதிமங்கலம் ,புத்த குடி, பொன் பற்றி, உறையூர், மேலையூர், திருச்சத்தமங்கை, பூதலூர், திருக்காட்டுப்பள்ளி,செந்தலை,நேமம்,புத்தாநத்தம் ,புத்தனாம்பட்டி,புத்தகரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களை நூலில் தொகுத்தளித்துள்ளார்.


எட்டாம் இயலான புத்துயிர் பெறும் பௌத்தம் என்கிற தலைப்பில் தமிழ்நாட்டில் இன்றைய காலத்தில் பௌத்தம் உயிர் பெற்று வருவதற்கு அடிப்படையாக விளங்கிய அக்கால பௌத்தச்சுவடுகள் குறித்த செய்திகளோடு மக்களின் நாட்டுப்புற வழிபாடுகளில் விளங்கி வருகிற புத்தர் குறித்த செய்திகளையும் தொகுத்தளித்துள்ளார்.


துணைநூற்பட்டியல் பகுதியில் ஆய்வுக்குப் பயன்பட்ட நூல்களின் பட்டியல் பட்டியல் ,தமிழ் நூல்கள், ஆங்கில நூல்கள், கட்டுரைகள், நாளிதழ் நறுக்குகள் ஆகியவை தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.


காப்பாட்சியர்கள், தொல்லியல் அலுவலர்கள் ,செயல் அலுவலர்களுக்கு நன்றி என்னும் பகுதியில் ஆய்வுக்கு உதவிய ஒவ்வொரு மனிதர்களுடைய பெயர்களையும் மிகுந்த நன்றி உணர்வோடு பட்டியலிட்டுள்ளார்.அதனைத் தொடர்ந்து சிலைகள் உள்ள இடங்கள் என்கிற அட்டவணை மிகச் சிறப்பாக அளிக்கப்பட்டுள்ளது. இந்த அட்டவணையில் மயிலை சீனி வேங்கடசாமி 1940ல் கண்ட புத்தர் சிலைகள் என்று தொடங்கி ஏறத்தாழ ஆறு ஆய்வு அறிஞர்கள் கண்டறிந்து சொல்லி உள்ள புத்தர் சிலைகள் உள்ள இடங்கள் என்கிற பட்டியலோடு அவற்றைக் கள ஆய்வு செய்து ஆய்வாளர் பா. ஜம்புலிங்கம் 1993 முதல் இன்று வரை அதாவது 2022 வரை அவரால் நேரில் கள ஆய்வு செய்து கண்டறியப்பட்ட சிலைகளையும் ஒப்பிட்டு பட்டியல் அட்டவணை அழகாக வடிவமைத்து வழங்கப்பட்டுள்ளது.


இவற்றைத் தொடர்ந்து கள ஆய்வு மேற்கொண்ட போது சிலைகளோடு ஆய்வாளர் எடுத்துக் கொண்ட படங்கள் அழகாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து நாளிதழ் நறுக்குகள் என்கிற பகுதியில் சிக்ஷ பா ஜம்புலிங்கம் அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டு உடனுக்குடன் அப்பொழுது அப்பொழுது வெளிவந்த ஆங்கில நாளிதழ்கள் ,தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த செய்திகள் அழகாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அவை ஆண்டு வாரியாக காலநிரல்படுத்தப்பட்டு வழங்கப்பட்டுள்ளமை சிறப்பான செய்தியாகும். இவற்றோடு தன் 30 ஆண்டுகால கள ஆய்வுத் தேடலின் விளைவாய் பௌத்த ஆய்வாளர் என்கிற பெயரைத் தமிழ் சமூகத்தில் பதியமிட்டு வைத்ததன் அடிப்படையில் சில நாளிதழ்கள் மாத இதழ்கள் இவரிடம் கண்ட நேர்காணல்கள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. நிறைவாக 222 ஆம் பக்கத்தில் ஊர்ப்பெயர் அகர வரிசை வழங்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படைகளில் வெளிவந்துள்ள இந்த நூல் மிகச் சிறந்த ஆய்வு அணுகுமுறைகளையும் மிகச் சிறந்த மிகத் துல்லியமான ஆய்வு நெறிமுறைகளையும் ஆய்வு நேர்மையோடு முன்னோர் ஆய்வுகளைப் பதிவு செய்யும் நேர்த்தியோடு இந்த நூல் படைத்துளிக்கப்பட்டுள்ளது.


தமிழ் பௌத்த ஆய்வு வரலாற்றில் நூற்றுக்கணக்கான ஊர்களுக்கு நேரில் சென்று கள ஆய்வு செய்து சோழ நாட்டில் பௌத்தம் என்கிற இந்த நூலை தன் 30 ஆண்டுகால பேருழைப்பின் பெருவிளைச்சலாய்ப் படைத்தளித்துள்ள முனைவர் பா ஜம்புலிங்கம் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கு உரியவராகிறார். இந்த நூலின் வாயிலாக தமிழ் பௌத்த ஆய்வு வரலாற்றில் தனக்கென ஓர் இடத்தில் என்றும் நிலைத்து நிற்பார் என்பதில் என் நெஞ்சம் பெருமிதம் கொள்கிறது. இந்த வகையில் இந்த நூலில் இடம் பெற்றுள்ள 222 பக்கங்களிலும் ஒவ்வொரு பக்கத்திலும் ஆய்வாளரின் உழைப்பு ஆய்வாளரின், அறிவு நேர்மை, ஆய்வாளரின் ஆய்வு நோக்கு ஆகியவை புலப்பட்டுள்ளன.


தமிழ்நாட்டு ஆய்வுலகில் கள ஆய்வு மேற்கொள்ளும் ஒவ்வொரு கள ஆய்வாளர்களுக்கும் மிகச் சிறந்த வழிகாட்டி நூலாகவும் ஒளி விளக்கு நூலாகவும் முன்னோடி நூலாகவும் இந்த நூல் திகழும் என்பதில் ஐயமில்லை.


 வரலாறு படித்ததோடு இல்லாமல் இத்தகைய வரலாற்றைப் படைத்தளித்துள்ள முனைவர் பா.ஜம்புலிங்கத்தின் சோழ நாட்டில் பௌத்தம் என்கிற இந்த நூலைத் தமிழகம் கொண்டாடும் என்பதும் கொண்டாட வேண்டும் என்பதும் என்னுடைய வேண்டுகோள் ஆகும். இந்த நூலை அவரே விரைவில் ஆங்கில மொழியாக்கம் செய்து வெளியிட உள்ளார் என்கிற மகிழ்ச்சியான செய்தியையும் பதிவுசெய்து பதிவு செய்கிறேன்.இந்நூல் ஆங்கிலத்தில் வெளிவந்த பிறகு உலகம் முழுவதும் சோழ நாட்டில்/ தமிழ்நாட்டில் பௌத்தம் பெற்றிருந்த இடத்தை எடுத்துரைக்கும்.அப்பொழுது, தான் தோன்றிய இடத்தில் மறைந்து போன பௌத்தம் மீண்டெழும்ம் பௌத்தமாகமிளிர்கிறது என்கிற செய்தியை உலகத்திற்கு எடுத்துச் சொல்லும் நூல்களில் மிகக் குறிப்பிடத்தக்க நூலாக இந்த நூல் விளங்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.


இந்த நூலை மிக மிக நேர்த்தியாகவும் அழகாகவும் வெளியிட்டுள்ள புது எழுத்து பதிப்பகத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும் .இந்நூல் ஒவ்வொரு பௌத்த ஆய்வாளர்கள் வீட்டிலும் வரலாற்று ஆய்வாளர்கள் வீட்டிலும் நூலகத்தை அலங்கரிக்கத்தக்க நூலாகும்.


பதிப்பக முகவரி :

படிமம் புது எழுத்து, 2/203 அண்ணா நகர், காவேரிப்பட்டினம்- 635 112, கிருஷ்ணகிரி மாவட்டம் ,

பேச 98 42 64 71 0 1, 6374230985

மின்னஞ்சல் : editorpudhuezhuthu@gmail.com


விலை : ரூபாய் 1000.


https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02xNWSHUiBezsk1xoyhkB9Z8FJk1qfxnJn1rAGvZADQbi2B4xcPdZVVizoRVEjJ1M3l&id=100007862881487

1 comment:

  1. என்னுடைய நூலைப் பற்றிய மதிப்புரை ஓர் ஆய்வுரையாகப் பகிர்ந்தமைக்கு மனமார்ந்த நன்றி. உங்களைப் போன்றோரின் நல்லுங்களின் ஊக்கமே என் ஆய்வுப்பணிக்கும், எழுத்துப்பணிக்கும் காரணங்களாகும். விரைவில் இந்நூலை ஆங்கிலத்தில் எழுதுவேன்.

    ReplyDelete