Monday, 2 January 2023
ஒரு நாள்; ஒரு நூல் - 2. ஒப்பீட்டு நோக்கில் பெளத்தமும் தமிழும் - முனைவர் க.ஜெயபாலன்
ஒரு நாள் ; ஒரு நூல் - 2
02.01.2023
ஒப்பீட்டு நோக்கில் பெளத்தமும் தமிழும் - முதற்பகுதி - முனைவர் க.ஜெயபாலன்
2022 ஜனவரியில் அறம் பதிப்பகத்தின் வெளியீடாக வந்த நூல் இது.
முகநூலில் முனைவர் க.ஜெயபாலன் அவர்களால் தொடர்ந்து எழுதப்பட்ட நூற்றுக்கணக்கான கட்டுரைகளில் 100 கட்டுரைகளை மட்டும் தெரிவு செய்து அவற்றை நூல் வடிவமாக்கி உள்ளார். இந்நூல் 352 பக்கங்கள் கொண்டது. 100 கட்டுரைகளும் சிறு குறு கட்டுரைகளாக அமைந்துள்ளன. இந்த நூறு கட்டுரைகளில் இடம்பெற்றுள்ள பொருண்மைகளை வகைப்படுத்தினோம் என்றால் 50 நூல்களுக்கான ஆய்வுக் களங்களைக் கொண்டவையாக திகழ்கின்றன. அதுமட்டுமன்றி மேலாய்வுகளுக்கான பல்வேறு ஆய்வுக் களங்களை எதிர்வரும் ஆய்வாளர்களுக்கான பரிந்துரைகளாகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்நூலில் இடம்பெற்றுள்ள 100 கட்டுரைகளையும் ஏறத்தாழ 10 பொண்மைகளுக்குள் அடக்கலாம். அவை முறையே
1.பௌத்த மெய்யியல் நூல்கள்
2.தமிழ் பௌத்த இலக்கியங்கள்
3.பௌத்த ஆய்வு நூல்கள்
4.நாட்டுப்புற வழிபாட்டு மரபுகள்
5.உலகளாவிய பௌத்த அறிஞர்கள்
6.தமிழ் பௌத்த அறிஞர்கள்
7.பௌத்த சமண சைவ வைணவ ஊடிழைகள்
8.பாலி பௌத்த இலக்கியங்களும் தமிழ் பௌத்த இலக்கியங்களும்
9.தற்கால பௌத்த ஆய்வுகள்
10. இந்திய மண்ணில் பௌத்தம்
என்றவாறு வகைப்படுத்தலாம்
இந்நூலில் நூலாசிரியரை பற்றிய அறிமுகம் பேராசிரியர் முனைவர் சா.தேவதாஸ் அவர்களின் அணிந்துரை, முனைவர் பா. ஜம்புலிங்கம் அவர்களின் வாழ்த்துரை, கவிஞர் யாழன் ஆதி அவர்களின் மதிப்புரை,கலாநிதி பன்மொழி புலவர் மடுளுக்குரிய விஜய் ரத்னா அவர்களின் பாராட்டுரை, முனைவர் பெ.விஜயகுமார் அவர்களின் நட்புரை ,பேராசிரியர் க.ஜெயபாலன் அவர்களின் என்னுரை,அறம் பதிப்பகத்தின் நிறுவனர் திரு.மா.அமரேசன் அவர்களின் பதிப்புரை ஆகியவை நூலின் முன்பகுதியில் அமைந்துள்ளன.
பௌத்தமும் தமிழும் என்ற தலைப்பைக் கேட்டவுடனே நம் எல்லோர் முன்னும் எழுகின்ற நூல் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் அரிய நூலாகும்.அதேபோன்று அரிய ஆய்வுப்புள்ளிகளைத் தன்னகத்தே கொண்டுள்ள சிறந்த நூலாகப் பேராசிரியர் க.ஜெயபாலன் அவர்களின் 'ஒப்பிட்டு நோக்கில் பௌத்தமும் தமிழும்' என்ற இந்த நூலும் விளங்குகிறது . பெயர் அல்லது தலைப்பு என்கிற அடிப்படையில் மட்டுமல்லாமல் ஆழ்ந்த தேடல் ,புதியன கண்டு உரைக்கும் பாங்கு , புதிய புதிய ஆய்வுக் களங்களைப் பரிந்துரைக்கும் மேன்மை ஆகியவற்றை இந்த நூல் தன் அணிகலன்களாக கொண்டுள்ளது.இந்நூலாசிரியர் தொடர்ந்து பௌத்த ஆய்வுகளில் ஈடுபட்டு வருபவர் என்பதை தமிழ் உலகம் நன்கறியும்.
ஆய்வியல் நிறைஞர் பட்டம், முனைவர் பட்டம் பெறுவதற்காக எழுதுகிற ஆய்வு நூல்கள் ஒருவகை .
தொடர் ஆய்வுகளுக்காக எழுதப்படுகின்ற கட்டுரைகள் ஒரு வகை.
குறிப்பிட்ட ஒரு பொருண்மை சார்ந்து ஆழமான ஆய்வாக வெளிவரும் நூல்கள் ஒரு வகை
என்று ஆய்வுகள் பல்வேறு நிலைகளில் நூல்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய ஆய்வு நூல்கள் ஆய்வு செய்கின்ற ஆய்வாளர்களுக்கு மட்டுமே பெரிதும் பயன்படக்கூடியவையாக அமைந்து விடுகின்றன என்பதையும் நாம் அறிவோம்.எனவே ,ஆய்வு நெறிமுறைகள், ஆய்வு அணுகுமுறைகள் என்றவாறு அமையும் நூல்கள் பொது வாசிப்புக்கு வருவதில்லை.இத்தகைய நிலையை நன்கறிந்த பேராசிரியர் க.ஜெயபாலன் அவர்கள் சமூக ஊடகமான முகநூலில் தொடர்ந்து பொது வாசிப்புக்கென பொது வாசிப்பிற்கும் உகந்தவாறு அதே நேரத்தில் ஆய்வாளர்களின் கவனத்திற்கும் உரியவாறு கட்டுரைகளைப் படைத்தளித்துள்ளார். கட்டுரைகளில் இத்தகைய இயல்புகள் இருப்பதால் ஆய்வு அணுகுமுறைகள் ஆய்வு நெறிமுறைகள், தரவுக் குறிப்புகள் என்றவாறான ஆய்வுப் பண்புகளை இந்நூல் கொண்டிருக்கவில்லை. இது ஆய்வு என்கிற அடிப்படையில் ஒரு குறையாகத் தோன்றலாமேயொழிய ஆய்வு உணர்வை ...
ஆய்வு அறிவை ....தேடல் உணர்வை ..
தேடல் அறிவை ..
வளர்த்தெடுக்கும் பணியில் சிறிதும் குறையாத பங்களிப்பை வழங்குகிற நூலாக இந்த நூல் அமைந்துள்ளது.
இந்தப் பதிவின் தொடக்கத்தில் 100 கட்டுரைகளில் இடம்பெறும் 10 பொருண்மைகளை நான் பட்டியலிட்டுள்ளேன். ஆனால் ,மேலும் சில பொருண்மைகளை உருவாக்கிக் கொள்ளத்தக்க வகையில் கருத்துக்களைப் பொதிந்து வைத்துள்ள பாங்கு கட்டுரைகளில் மிளிர்கிறது. எனவே நூறு கட்டுரைகளின் தலைப்புகளையும் பதிவு செய்ய வேண்டிய தேவையோ பொருத்தப்பாடோ இந்தப் பதிவுக்கு இல்லை என்பதால் மிக முக்கியமான தலைப்புகளை இங்கு குறிப்பிடுகிறேன்.
இந்நூலில் இடம் பெற்றுள்ள பொருளடக்க அடிப்படையில் வரிசை எண்களை குறிப்பிட்டுச் சில கட்டுரைகளை இங்கு பதிவிடுகிறேன்:
1.முன்னுரை பௌத்தமும் தமிழும்
4.கருணைமிகு அன்புரையும் காயாபாசனாவும் கந்தர் சஷ்டி கவசமும்
5.உலகளாவிய பௌத்த மறுமலர்ச்சிக்குத் தமிழர்களின், தென்னிந்தியர்களின் பங்களிப்பு
6.சித்தர் பாடல்களும் ஜென் கவிதைகளும்
7.தமிழ் காப்பியங்களில் உள்ள இருவகை கோட்பாட்டு அணுகுமுறைகள்
15.கல்வியை அனைவருக்கும் உரித்தாக்கும் நெறி
16.தமிழ் சங்கம் மரபும் பௌத்த சங்க மரபும்
17.பௌத்தமும் தமிழும் விரித்துரைக்கும் மானுட மேன்மைகள்
20.சோழ நாட்டில் பௌத்தம் - தொண்டை மண்டலத்தில் பௌத்தம்
21.தேரிகாதையும் சங்கப் பெண் கவிஞர்களின் பாடல்களும்
22. புத்தரது ஆதி வேதம்
24.தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் இருந்த தமிழ் பௌத்தம் குறித்த நுண்ணிய ஆய்வுகள்
31.தமிழும் ஜப்பானியமும் மொழி,கலை,இலக்கியப் பரிவர்த்தனை ஊடாகப் பௌத்தம்
36.எல்லாம் மாறிக்கொண்டே இருக்கின்றன என்ற அநிச்சா கோட்பாடும் திருமூர்த்தி தத்துவமும்
37.தென்னிந்திய மறுமலர்ச்சியும் பேராசிரியர் லட்சுமி நரசுவும்
39.பௌத்தமும் தமிழும் இணைந்து நிற்கும் திராவிடப் பண்பாட்டின் வேர்கள்
40. புத்தரின் காலத்தில் வாழ்ந்த தேரி குண்டலகேசி வரலாற்றை மையப்படுத்தி எழுதப்பட்ட தமிழ்க் காப்பியம் குண்டலகேசி
41.நீலகேசி என்ற ஜைனத் தமிழ்க் காப்பியம் வாயிலாக வெளிப்படும் பௌத்தச் சிறப்புகளும் விவாதங்களும்
42.மணிமேகலை - பௌத்தத் தமிழ்க் காப்பியம் மனித குல மேன்மைக்காகத் தன்னை அர்ப்பணித்த தவப் பெண்ணின் உன்னதச் சித்திரம்
43.தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த ஜைன இலக்கியங்களும் ஒன்றிணையும் இடங்கள்
44.தத்துவக் களத்தில் வடக்கே புத்தரும் தெற்கே திருவள்ளுவரும் நிற்கும் உன்னத வரலாறு
46.பௌத்த சமயப் பெண் தெய்வங்கள்
48.பேரறிஞர் பண்டித அயோத்திதாசரின் தமிழ் பௌத்தப் பங்களிப்புகள்
53.அறிஞர் அன்பு பொன்னோவியம் அவர்களின் ஆய்வுகள்
54.தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள பிற நாடுகளின் ஞான நூல்கள்
55. பண்டிதா அயோத்திதாசர் - ஹர பிரசாத் சாஸ்திரி - நாகேந்திரநாத் வாசு- மகாஸ்தவிரர் - கிருபா சரண் - ஆனந்த குமாரசாமி மற்றும் சில ஆளுமைகள் - ஒப்பீடுகள்
58. தமிழ், சீன, ஜப்பானிய மொழிகளின் தொன்மையும் வாழ்வியலின் அனைத்து துறைகளிலும் அவற்றின் தாக்கமும்
59. ஜொராஸ்டிரிய மரபும் பெளத்த மரபும் தமிழ் மரபும் - அறிஞர் கா.அப்பாத்துரையார் கருத்துக்கள்
62.அறிஞர் பி.எல்.சாமியின் ஆய்வுகளில் தமிழக பௌத்தக் கதை மரபுகள்
69. திராவிட இயக்கமும் பௌத்த மறுமலர்ச்சி இயக்கங்களும் இணைந்து நடத்திய ஈரோடு புத்தர் மாநாடு
71.அண்மைக்கால பௌத்தத்தமிழ் ஆய்வுகளின் சில வெளியீடுகள்
74.அறிஞர் கால்டுவெல் ஆய்வுகளில் இந்திய இலக்கியச் சிறப்புகள்
75.திபெத்திய யோகமும் சிவவாக்கியர் பாடல்களும்
80.சம நீதி எழுத்தாளர் ஏ. பி.வள்ளிநாயகம்
85.சைவ வைணவ மரபுகளில் உள்ளிழுக்கப்பட்ட பௌத்தம்
86.கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை தமிழ் மரபிற்கு ஏற்ப வார்த்தெடுத்த ஆசிய ஜோதி
88.கற்பனைக் களஞ்சியம் துறைமங்கலம் சிவப்பிரகாசர் பாடல்களில் புத்தர் சிந்தனைகளின் தாக்கம்
92.பௌத்த மடாலய நூலகங்களில் ஊடாகத் தெரியவரும் தமிழக ஈழ இலக்கிய உறவுகள் - ஆ.சிவநேசச் செல்வனின் கட்டுரையை முன்வைத்து சில சிந்தனைகள்
97.பௌத்த நூல்களும் உறுதிப் பொருள்களும் அறிஞர் சோ.ந.கந்தசாமி அவர்களின் முன்னோடி ஆய்வுகள்
98.தென்னிந்திய பௌத்த மறுமலர்ச்சி இயக்கமும் தமிழ்த்தென்றல் திரு.வி.க.வும்
100 தலைப்புக்களில் 40 தலைப்புக்களைக் குறிப்பிடுகிறேன் என்றால் இதிலிருந்தே இந்த நூலின் புலமை அடர்த்தியை உணர்ந்து கொள்ளலாம்.
இன்னும் இன்னும் விரிவாக எழுதத்தக்க நூலான இந்நூலை இளம் ஆய்வாளர்களும் முதுபெரும் ஆய்வாளர்களும் பொதுமக்களும் படிப்பதன்மூலம் புதிய புதிய ஆய்வுக் தளங்களைக் கண்டறிந்து தமிழ் பெளத்த ஆய்வை மென்மேலும் மேம்படுத்தலாம்.
எனவே, தேடல் வேட்கையுள்ளவர்களுக்கான சிறந்த எழுத்தோடை இந்நூல் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
இதுபோன்ற சிறந்த - அரிய நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் அறம் பதிப்பகம் மிகுந்த பாராட்டுக்குரியது.
பதிப்பக முகவரி:
அறம் பதிப்பகம், 3/582,முல்லைத் தெரு, கஸ்தூரிபாய் நகர், TNHB எதிரில்,முள்ளிப்பட்டு கிராமம் & அஞ்சல்,ஆரணி வட்டம்,திருவண்ணாமலை மாவட்டம் - 632 316
தொடர்புக்கு : 9150724997
மின்னஞ்சல் : arampubpication50@gmail.com
ரூபாய் 420
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02Vgg1o4rPsbQVBw8hK9LGfScacEbA4kx9YN7zY7MNaKhco2Y6eWNETG9hKb3k2S33l&id=100007862881487
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment