Friday, 6 January 2023

ஒரு நாள் ; ஒரு நூல் - 4 புத்தம் சரணம் கச்சாமி - உபாசகர் E.அன்பன் .04.01.2023

ஒரு நாள் ; ஒரு நூல் - 4 புத்தம் சரணம் கச்சாமி - உபாசகர் E.அன்பன் ( அன்பு மலர் ) 04.01.2023 திரிபீடகத் தமிழாக்க நிறுவனத்தின் வெளியீடாக பிப்ரவரி 2022 இல் மூன்றாம் பதிப்பு கண்டுள்ள நூல் இது. இந்நூல் 172 பக்கங்களைக் கொண்டுள்ளது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலுமாகத் தமிழகத்தில் முதல் பெளத்த மறுமலர்ச்சி நிகழ்ந்தது. இந்த முதல் பௌத்த மறுமலர்ச்சியில் அயோத்திதாச பண்டிதர், ம.சிங்காரவேலர், லட்சுமி நரசு உள்ளிட்ட பலரும் பணியாற்றியுள்ளனர். 20 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலுமாக இன்றைய காலகட்டத்தில் இரண்டாம் பௌத்த மறுமலர்ச்சி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த இரண்டாம் பௌத்த மறுமலர்ச்சியில் பங்காற்றி வருபவர்கள் பலராவர். அவர்களுள் குறிப்பிடத்தக்க பணிகளை ஆற்றி வருகிற பெருந்தகை உபாசகர் இ.அன்பன் ஆவார். இன்றைக்கு பௌத்த ஆய்வுகளிலும் பௌத்த இயக்கங்களிலும் பங்கெடுத்துவரும் பலரையும் பௌத்தத்தின்பால் ஈர்த்து நெறிப்படுத்திவருபவர் அன்பன். இத்தகைய பெருந்தகை படைத்தளித்துள்ள நூல்களில் மிக முக்கியமான நூல் இதுவாகும். எந்த ஒரு அறிவுத்துறையிலும் நான்கு வகைகளில் நூல்கள் படைக்கப்படுகின்றன. அவை முறையே, 1. ஆய்வு நூல்கள் 2.பாட நூல்கள் 3. தேர்வுக் கையேடுகள் 4. பொது வாசிப்பு நூல்கள் ஆகியவையாகும். இந்த நான்கு வகை நூல்களுள் ஆய்வு நூல்கள், பாடநூல்கள், தேர்வுக் கையேடுகள் என்ற மூன்று வகை நூல்களுமே குறிப்பிட்ட ஒரேயொரு துறைசார்ந்த மிகக் குறுகிய வாசிப்பு வட்டத்தைச் கொண்டவையாக விளங்குகின்றன.ஆனால் பொது வாசிப்பு நூல்கள் பரந்த வாசிப்புத் தளத்திற்கு உரியவை. தொழில் அல்லது பணியின் பொருட்டுப் பல்வேறு துறைசார்ந்தவர்களும் தேடி நாடி வாசிக்கும் நூல்களாக இந்தப் பொது வாசிப்பு நூல்கள் திகழ்கின்றன. இங்கு மதிப்பிட எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள நூல் பொது வாசிப்பு நூல் எனும் வகையைச் சார்ந்தது ஆகும். பெளத்த நெறிகளை அறிந்துகொள்ள விரும்பும் எவரொருவரும் படித்து எளிதில் புரிந்து உள்வாங்கிக் கொள்ளும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பெளத்த வாழ்வியல் முறைகளைப் பரவலாக்கும் நோக்கோடு படைக்கப்பட்டுள்ள இந்நூலின் தொடக்கத்தில் முனைவர் க.ஜேயபாலனின் அணிந்துரை, திருமதி மலர்கொடி அன்பனின் அணிந்துரை, உபாசகர் E.அன்பனின் பதிப்புரை ஆகியன இடம்பெற்றுள்ளன. இவற்றைத் தொடர்ந்து பொருளடக்கம் அமைந்துள்ளது. இந்நூலில் இடம்பெற்றுள்ள 20 அத்தியாயங்களின் தொடக்கம் இடம்பெற்றுள்ள பக்கத்தின் குறிப்போடு அமைந்துள்ள பொருளடக்கம் இதோ : 1. புத்தரின் வாழ்க்கை - 13 2.உயர் ஞானமெய்திய புத்தர் - 27 3.சொந்த நிறைவுறுத்தலுக்காக தம்மத்தை போதிக்க விழைவு - 30 4.தம்ம சக்க பவத்தன சுத்தம் - 37 5.புத்தர் சமய பரப்பு பணிகள் - 46 6. உயர்வெய்திய புத்தர் - 54 7.புத்தரின் ஆளுமை - 62 8. புத்தரின் அன்றாட செயல்பாடுகள் - 69 9.புத்தரின் பரிநிப்பானம் (மறைவு) - 79 10.பௌத்தம் என்பது என்ன? - 81 11.உன்னத நான்கு வாய்மைகள் - 93 12.கம்மா (வினை ) - 101 13.மனித ஆளுமையின் பகுப்பாய்வு - 116 14.பௌத்த வாழ்முறை - 130 15.பௌத்த தம்மம் பரப்பிய தம்ம அசோகர் - 138 16.சமூக போதனைகள் -145 17.விடுதலை - 153 18.பௌத்தம் போற்றிய தமிழர்கள் - 156 19.அன்றாட பௌத்த வழிபாட்டு பாடல்கள் - 158 20.மகா மங்கள சுத்தம் - 167 பிற்சேர்க்கை - 170 என்ற வண்ணம் இந்த நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலே கண்ட பொருளடக்கத் தலைப்புகளைப் பார்த்தவுடனே இந்நூலின் பேசுபொருள் குறித்த தெளிவு கிடைக்கும். ஆகையினாலே இந்நூல் எடுத்தியம்பும் கருத்துக்களைத் தலைப்புவாரியாக விளக்கவேண்டிய தேவையில்லை. ஆயினும் இந்நூலின் சாரத்தை ஆங்காங்கே உள்ள செய்திகள் , கருத்துக்களின் வாயிலாகத் தொகுத்துரைக்கலாம். கி.மு.623 இல் பிறந்த சித்தார்த்தன் உயர்ஞானமெய்திய புத்தராகித் நம்ம சக்க பவத்தன சுத்தம் என்னும் அறவாழியை உருட்டி மக்கள் எல்லோருக்கும் நான்கு வாய்மைகள், எண்வகை நெறிகள் உள்ளிட்ட தான் கண்ட ஞான ஒழுக்க நெறியைப் பரப்பி அவற்றின் மூலம் அதுவரை உலக வழக்கில் இல்லாத புத்தம்புதிய நடுவழிப் பாதையைப் போதித்து கி.மு.483 இல் பரிநிப்பாணமடைந்தது வரையிலான செய்திகளை முதல் 9 அத்தியாயங்களில் விளக்கியுரைத்துள்ளார் இந்நூலாசிரியர். சித்தார்த்தர் துறவு மேற்கொண்டதற்கான காரணங்களாக இரண்டு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன: 1.ரோகிணி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையில் போர் வேண்டாமென்று சித்தார்த்தர் வலியுறுத்தியதால் துறவு நெறி பூண்டார். 2. பிணி, மூப்பு, சாக்காடு கண்டு துறவு பூண்டார். இந்த இரண்டு காரணங்களுள் இரண்டாவது காரணத்தையே உலகம் முழுவதும் பரப்பப்பட்டுப் பெரும்பான்மையோர் நம்புகின்றனர். ஆனால் சித்தார்த்தரின் உண்மையான வரலாற்றின்படி, முதல் காரணமே பொருத்தமான காரணமாகும். இந்நூலாசிரியர் முதல் காரணத்தை ஏற்று நன்கு விளக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 10 முதல் 14 ஆம் அத்தியாயம்வரை பெளத்த மெய்யியல், வாழ்வியல் குறித்து பெளத்த மறைநூல்கள் சொல்லும் செய்திகள், கருத்துக்கள், விளக்கங்கள் ஆகியவை மிகமிக எளிய நடையில் தொகுத்துரைக்கப்பட்டுள்ளன. பெளத்த மெய்யியலின் உயிர்நாடியான கருத்துக்கள் விடுபடாமலும் ஆற்றொழுக்கான தருக்க இயைபுநெறியோடும் விளக்கப்பட்டுள்ள பாங்கு போற்றத்தக்கது. 15 முதல் 20 ஆம் அத்தியாயம்வரை மாமன்னர் அசோகர் காலம் முதல் தற்காலம் வரை வாழ்வியல் நடைமுறையாக்கம் செய்யப்பட்டுள்ள பாங்குகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அத்தியாயத்தின் நிறைவிலும் பயிற்சி வினாக்களும் குறிப்பு வரைக எனும் வினாக்களும் கொடுக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் குழந்தைகள்முதல் பெரியவர்வரை .... மாணவர்முதல் அறிஞர்கள் வரை படித்துப் பயன்பெறத்தக்க வகையிலும் பின்பற்றத் தக்க நெறியிலும் இந்நூல் படைத்தளிக்கப்பட்டுள்ளது. எனவே, பெளத்தம் முன்வைக்கும் மெய்யியல் கருத்துக்கள் யாவை ? வாழ்வியல் நெறிமுறைகள் யாவை? என அறிய விரும்பும் எவரொருவரும் வாங்கிப் படிக்கவேண்டிய அருமையான நூல் இது. ஆய்வாளர்களாயினும் அறிஞர்களாயினும் ஏற்கனவே பெளத்தப் பயில்வு பெற்றவர்களாயினும் ஒரு நினைவோட்டப் பயிற்சிக்கு - நினைவூட்டும் பயிற்சிக்கு ஏற்றதாகவும் இந்த நூல் திகழ்வது இந்நூலின் தனிச்சிறப்பு ஆகும். பெளத்த மறைநூல்களின் ஆயிரக்கணக்கான பக்கங்களைப் பயின்று அறிந்துகொள்ள வேண்டிய கருத்துக்களை 172 பக்கங்களுக்குள் சாறாகத் தந்துள்ளது இந்நூல் என்பதும் இந்நூலின் தனிச்சிறப்புகளுள் இன்னொன்றாகும். இத்தகைய சிறப்புப்பயன்மிக்க பணியைச் செய்துள்ள நூலாசிரியர் உபாசகர் இ.அன்பன் ஐயா நெஞ்சாரப் போற்றுதற்குரியவர். பதிப்பக முகவரி : திரிபீடகத் தமிழாக்க நிறுவனம், 89, மூன்றாவது தெரு, மல்லீஸ்வரி நகர், மாடம்பாக்கம், சென்னை - 600 126 பேச : 94453 69542 நன்கொடை : ரூபாய் 100 E Anban E Anban https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0sTUPoux5Eqdf2u9wA8JAQmHEPZ1b4eGQN9SKZHpUrWGtLpgNmC7hMRex4Z3AVa2Jl&id=100007862881487

No comments:

Post a Comment