Wednesday, 18 January 2023
ஒரு நாள் ; ஒரு நூல் - 15.பெளத்தமும் கலைகளும் - முனைவர் க.குளத்தூரான் - 15.01.2023
15.01.2029
ஒரு நாள் ; ஒரு நூல் - 15
பெளத்தமும் கலைகளும்
- முனைவர் க.குளத்தூரான்
தஞ்சாவூர், இராசாமணி பதிப்பகத்தின் முதல் பதிப்பாக சனவரி 2006 ஆம் ஆண்டில் வெளிவந்த நூல் இது. இந்நூல் 190 பக்கங்களைக் கொண்டுள்ளது.
இந்திய பெளத்தக் கலைமரபோடு கொரிய பெளத்தக் கலைமரபை ஒப்பிட்டுத் தமிழில் முதன்முதலில் வந்துள்ள அரிய நுட்பச் செறிவார்ந்த கலையழகியல் ஆய்வு நூலாகும்.
இந்நூலாசிரியர் பேராசிரியர் க.குளத்தூரான் அவர்கள் தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தத்துவ மையத்தில் பணியாற்றிய காலத்தில் 1990 செப்டம்பர் 01 முதல் 1990 நவம்பர் 30 வரையிலான மூன்று மாதக் காலகட்டத்தில் தென்கொரிய பன்னாட்டுப் பண்பாட்டுக் கழகம் வழங்கிய ஒரு ஆய்வுத்தகைமை பெற்று தென்கொரியாவில் நிகழ்த்திய ஆய்வுப் பயனாக விளைந்தது இந்நூல்.
இந்நூலில் இடம்பெற்றுள்ள பொருளடக்க அட்டவணை வருமாறு:
பகுதி - I
1.பௌத்தம் - ப. 11
2.புத்தரும் பௌத்தமும் - 27
3. பௌத்த பிரிவுகள் - 45
4. போதிச்சத்வக் குறிக்கோள் - 78
பகுதி- II
5. இந்திய பௌத்த கலைகள் - 86
6.கொரிய பௌத்த கலைகள் - 111
பயன்பட்ட நூல் பட்டியல் - 153
நிழற்படங்கள் - 155
முதல் இயலான பௌத்தம் என்னும் தலைப்பில் உலக சமயங்களில் பௌத்த சமயம் பெறும் இடம் ,பௌத்தத்தின் கோட்பாடுகள், பௌத்த மெய்யியல் சிந்தனைகள், பௌத்த மெய்யியல் பனுவல்கள் , பௌத்தத்தின் வளர்ச்சி, ஆன்மீக வாழ்க்கை, நிர்வாணம் ஆகிய பொருண்மைகளில் ஆழமான கருத்துக்கள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.
இரண்டாவது இயலான புத்தரும் பௌத்தமும் என்னும் தலைப்பில் புத்தரின் மெய்யியல் கண்டுபிடிப்புகளான பிரதிபத்திய சமுத்பாதா என்னும் பன்னிரு சார்புகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து சம்சாரமும் நிர்வாணமும், நான்கு உண்மைகள், எண்வகை நெறிகள், சீலம், தியானம், ஞானம் ஆகிய தலைப்புகளின்கீழ் ஆழமான கருத்துக்கள் விளக்கப்பட்டுள்ளன.
மூன்றாவது இயலான பௌத்த பிரிவுகள் என்னும் தலைப்பில் பௌத்த பிரிவுகளான ஹீனயானம், மகாயானம் ஆகியவை சொல்லும் மெய்யியல் கருத்துக்கள், திரிகாய கொள்கை,
மகாயான பிரிவுகள், மாத்யாமிகவாதம், பின்னர் உருவான பௌத்த பிரிவுகளான மந்திரவாத பிரிவுகள் மந்திராயணம், வஜ்ராயணம், கால சக்கராயணம், சகஜாயனம் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன.
நான்காம் இயலான போதிச்சத்துவ குறிக்கோள் என்னும் தலைப்பில் போதிச்சத்துவ வழி, பக்தி நெறிகள், ஞானோதயம் பெறும் எண்ணம், உறுதிமொழிகள், நான்கு சரியைகள் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன.
ஐந்தாம் இயலான இந்திய பௌத்த கலைகள் என்னும் தலைப்பில் கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை ஆகியவை விரிவாக விளக்கப்பட்டுள்ளன. பௌத்த கட்டிடக்கலையின் மூன்று முக்கிய வடிவங்கள் எனப்படும் ஸ்தூபா,சைத்தியம்விகாரம் ஆகியவை, அசோகர் காலத்து பௌத்த கலைகள்,மகாயான ஸ்தூபாக்கள், சைத்தியங்கள் மற்றும் விகாரங்கள், மகாயான குடைவரை சேத்தியங்கள், விகாரங்கள், எல்லோரா, அஜந்தா ஆகியவை நுட்பமாக விளக்கப்பட்டுள்ளன. சிற்பக் கலையில் அமிதாபா ,அச்சோபயா, வைரோஸனா, அமோக சித்தி, ரத்ன சம்பவா,மானுட புத்தர்கள், சாக்கிய முனி, தியான முத்திரை, தர்மசக்கர முத்திரை,போதிச்சத்துவர்கள், மைத்திரேயர்,அவலோகிதீஸ்வரர( பத்மபாணி) ,மங்கஸ்ரீ, வஜ்ரபாணி,சரஸ்வதி உள்ளிட்ட சிற்பக்கலை மரபுகள் அழகுற ஆழமாக விளக்கப்பட்டுள்ளன.
ஆறாவது இயலான கொரிய பௌத்த கலைகள் என்னும் தலைப்பில் உரிய வரலாற்றுக் காலங்கள் அடிப்படையில் கொகுர்யோ அரசு ,பேக்சி அரசு, கயா அரசுகள், சில்லா அரசு, கொரியோ அரசு, சோசன் அரசு ஆகியவை விரிவாக விளக்கப்பட்டுள்ளன. பௌத்த சமயம் பரவிய வரலாறு அவற்றைத் தொடர்ந்து அவற்றின் விளைவாய் கொரியாவில் உருவான கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை மரபுகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. கட்டடக்கலை என்பது தரைத் திட்டம் ,வெளி வடிவம் என்ற இரு பகுதிகளைக் கொண்டது .அதிட்டானம், தூண்கள், சுவர், ஓடுகளும் கூரை கட்டுமானமும், அழகு வேலைப்பாடுகள், கோயில் கட்டடக்கலைகளில் காணப்படும் வடிவ வேறுபாடுகள், ஆரம்ப கால ஸ்தூபாக்களின் வடிவம், ஸ்தூபாக்களின் சிகரம் அல்லது குடை ஆகியவை விளக்கப்பட்டுள்ளன.அதனைத் தொடர்ந்து சிற்பக் கலையானது கொரியாவில் எவ்வாறு உருவாகி வளர்ந்துள்ளது என்பது குறித்த செய்திகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. இத்தகைய கட்டிடக்கலை, சிற்பக் கலைகளில் ஓவியக்கலையின் பயன்பாடுகள், நுட்பங்கள்,அழகியல் கூறுகள் எவ்வாறு இடம் பெற்றுள்ளன என்பது குறித்த விளக்கங்கள் ஆங்காங்கே வழங்கப்பட்டுள்ளன.
மேற்கண்டவாறான ஆறு இயல்களில் அமைந்துள்ள இந்நூல், பௌத்த சமயம் எவ்வாறு மெய்யியல் தளத்திலிருந்து பக்தித் தளத்திற்கு வளர்ந்தது என்பதையும் இத்தகைய பக்தித்தளம் உருவான பிறகு எவ்வாறு அதன் கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக் கலைகளில் அவ்வற்றின் தாக்கங்கள் எவ்வெவ்வாறு ஏற்பட்டுள்ளன என்பதையும் மிக நுட்பமாக இந்நூலில் நூலாசிரியர் விளக்கியுள்ளார்.
பௌத்தக் கலை மரபுகளில் இந்து சமயத்தின் தாக்கமும் இந்து சமயத்தின் கலைகளில் பௌத்த சமயத் தாக்கமும் எவ்வாறு இரண்டறக் கலந்து உள்ளன என்பதும் இத்தகைய போக்கை பௌத்தக் கலை மரபுகள் எவ்வாறு உள்வாங்கி வெளிப்பட்டுள்ளன என்கிற அணுகுமுறையில் இந்நூல் வடிவமைக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது. எனவே இந்தியக் கலை வளர்ச்சியில் பௌத்தக் கலையின் பங்கு, பௌத்தக் கலையின் வளர்ச்சியின் பரிமாணங்கள் ,பரிணாமங்கள், இவை கொரிய பௌத்தக் கலைகளில் ஏற்படுத்திய தாக்கங்கள் ஆகியவற்றை விரிவாகவும் ஆழமாகவும் இந்த நூல் ஆராய்ந்து உள்ளது.
பௌத்தக் கலை மரபை அதன் மெய்யியல்,பண்பாட்டியல், அறவியல் பின்னணியோடு விளக்கியுள்ள சிறந்த நூலாக இந்நூல் திகழ்கிறது.இந்தியப் பண்பாட்டு கூறுகள் கொரிய பௌத்தப் பண்பாட்டு கூறுகளோடு ஒருங்கிணைந்து வெளிப்பட்டுள்ள பாங்கு , உலக மானுடப் பொதுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்பதையும் இந்த நூல் அழகாக எடுத்துக்காட்டுகிறது.
பௌத்தக் கலை வரலாற்றைப் பயில விரும்புகிற எவர் ஒருவரும் அவசியம் பயில வேண்டிய நூலாக இந்த நூல் விளங்குகிறது.
நூலின் நிறைவில் இந்நூல் உருவாக்கத்திற்குப் பயன்பட்ட நூற்பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து 72 நிழற்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இப்படங்கள் வண்ணப்படங்களாகப் பதிப்பிக்கப்பட்டால் இந்நூலின் அழகியல் பெறுமதி கூடும். அடுத்த பதிப்பை அவ்வாறு கொணர வேண்டும்.
பதிப்பக முகவரி:
ராஜாமணி வெளியிட்டகம்,
45 ,ஸ்ரீராம் நகர் ,
மாதா கோட்டை சாலை,
தஞ்சாவூர்- 613 005 .
பேசி: 0 4 3 6 2 - 22 60 88
விலை : ரூ.75/-
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02qUb9A1fWkrJ3tdmtuksMeQb9ZcLvrhw8b8e8rYcvGCTunX2woMpLTw5qE8neqmepl&id=100007862881487&mibextid=Nif5oz
.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment