Thursday 24 March 2016

கமில் சுவலபில்லின் தமிழ் உணர்விலிருந்து…

கமில் சுவலபில்லின் தமிழ் உணர்விலிருந்து… முனைவர் சு.மாதவன் தமிழில் பேசாத... தமிழில் எழுதாத..., தமிழில் கையெழுத்திடாத..., தமிழில் பெயர் வைக்காத..., தமிழில் தலைப்பெழுத்திடாத ஐந்தரைக் கோடி தமிழர்களே வாழும் இன்றைய காலத்தில் தன் குன்றாத் தமிழார்வத்தோடு ஒரு வெளிநாட்டுக்காரர் தன்பேச்சு, எழுத்து, கையெழுத்து, முன்னெழுத்து (தலைப்பெழுத்து) என அத்தனையையும் தமிழிலேயே – தமிழுக்காகவே பதிவு செய்தாரென்றால் நம்புவீர்கள்! ஏனென்றால், தமிழன் இத்தனையும் செய்தான் என்றால் தான் நம்ப இயலாத நிலையில் நாம் வாழ்ந்து வருகிறோமே!? இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருந்தபோது, தற்செயலாக 12.11.2015 அன்றைய ‘தி இந்து’ (தமிழ்) இதழில் ஒய்.ஆண்டனி செல்வராஜால் எழுதப்பட்ட நிகழ்கதைச் செய்திப் பதிவைப் (Story) படித்ததும் நம்முடைய கருதுகோளுக்கு உரிய தரவாயிற்றே இது என்று எண்ணத் தோன்றியது. இதோ அந்தச் செய்தித் தலைப்பு : “பொங்கல் பண்டிகையை கொண்டாடும் கொரியர்கள்” “தமிழர்களின் வழிவந்தவர்களா என ஆராயும் உலகத் தமிழறிஞர்கள்” (ப.2) இதே நோக்குநிலையிலான ஆய்வுத் தரவுகளை உலக அளவில் எடுத்துச் சென்று உலகச் செம்மொழிகளுள் செம்மாந்த ஆற்றல்மொழி தமிழ்மொழி என்று அண்மைக் காலத்தில் ஒரு வெளிநாட்டுத் தமிழறிஞர் உள்நாட்ட முன்வந்தார். அவரது பெயர் கமில் வாச்லவ் சுவலபில் (Kamil Vaclav Zvelebil); செக்கோஸ்லோவிய நாட்டுக்காரர்; செந்தமிழ் நாட்டக்காரர். 1927 நவம்பர் 17 அன்று கமில் சுவலபில் – மரியம்மா இணையரின் திருமகனாய் பிறந்தார் ‘வாச்லவ்’. ஆம்! இன்று கமில் சுவலபில் என்று உலகம் அறிந்த அந்தத் தமிழறிஞரின் இயற்பெயர் ‘வாச்லவ்’ என்பதுதான். இங்கே தாயுமானார் என்பதுபோல இவர் தந்தைத் திருப்பெயரேயானார். அதாவது, தன் இயற்பெயரைத் தந்தையின் பெயருக்கு இடையில் இடைப்பெயராய்ப் பெய்து அழைக்கும் வழக்கம் செக்நாட்டில் இருக்கும் போலும். இப்படி அழைக்கப்பட்டதில், இடைப்பெயரான தன் பெயர் வழக்கொழிந்து தன் தந்தை பெயராலேயே அழைக்கப்படுவாரானார் நம் கமில் சுவலபில். தந்தைபெயரே தன் பெயராய் மாறிப்போன கமில், சிறந்த பன்முக ஆளுமையாகத் திகழ்ந்தவர்; பன்மொழி ஆற்றலாளராய் முகிழந்தவர். பெரும்பான்மையான தமிழறிஞர்கள் ஒரு குறிப்பிட்ட இலக்கியப் பகுதி அல்லது வகைமைக்குள் மட்டுமே ஆழங்கால்பட்ட புலமையும் நூல் வௌயீட்டுச் சிறப்பும் பெற்றிருப்பார்கள். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களே இவ்வாறிருக்கும் போது, இவரோ சங்க இலக்கியம், தொல்காப்பியம், காப்பியங்கள், நீதி இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், தல புராணங்கள், மரபுக் கவிதை, புதுக்கவிதை, சிறுகதை, புதினம் எனத் தமிழிலக்கியப் பெரும்பரப்பு முழுவதையுமே ஒரு ஆய்வு நீச்சலிட்டவராக ஒளிவிட்டுச் சிறந்து நிற்கிறார். அத்தோடு விட்டாரா நம் கமில்!? இலக்கியம் தவிர மொழியியல், இலக்கணம், நாட்டுப்புறவியல், மொழிபெயர்ப்பு எனவும் தன் ஆய்வுச்சிறகை வானளாவ விரித்துப் பறந்திருக்கிறார் என்பதை எண்ணிப் பார்க்கும்போது நம் புருவம் மேலேறி அப்படியே நிற்கிறதல்லவா!? வியப்பின் அசரலில் புருவம் கீழிறங்க மறந்து நிற்கிறதல்லவா!? அத்துணை ஆய்வுப் பணிகளை ஒரு வெளிநாட்டுக்காரர் செய்திருக்கிறார் என்னும் செய்தி நம் தமிழ்ப் பேராசிரியர்களின் மனசாட்சியை என்றுதான் தன்னுணர்வு பெறவைக்குமோ என விம்மத்தானே செய்கிறது நெஞ்சம்! முனைவர் பட்டம் பெற்று அரசுப் பணியும் பெற்றபின் எத்தனை பேர் தொடர்ந்து ஆய்வு செய்கிறார்கள் இங்கே?!. 25க்கும் மேற்பட்ட நூல்கள், 500க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எனக் கமில் படைத்த எல்லாம் தமிழ்ப் பண்பாட்டு மீட்டுருவாக்கப் பணிகளாக விளங்குகின்றன. KRONICA என்ற நூலில் 1951 முதல் 2004 வரை கமிலால் எழுதப்பட்ட 517 கட்டுரைகளைப் பட்டியலிட்டுள்ளனர் (பக். 253-266). இந்நூலில், மசரிக் பல்கலைக்கழக ஆய்வாளர்களான பெட்ரா நொவொன்டனா, வோக்லாவ் பிளஸெக் ஆகிய இருவரும் தொகுத்துள்ளனர். இவரது 25 நூல்களில் – முனைவர் மு.இளங்கோவனால் அவரது பதிவுத் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள நூல்களில் – வெளிநாட்டாருக்குத் தமிழ் இலக்கண, இலக்கிய மரபுகளை அறிமுகம் செய்யும் நூல்கள் -6, தமிழ்இலக்கிய ஆய்வு நூல்கள் -4, தமிழ் இலக்கிய வரலாறு -1, முருகன் பற்றிய நூல்கள் -3, தமிழ் மொழியியல் நூல்கள் -3, தமிழ் நாட்டுப் புறவியல் நூல்கள் -3, தமிழ் அகராதியியல், உரைநடையியல், சைவச் சிற்பவியல், இந்தியக் கடலியல் ஆகிய பொருண்மைகளில் தலா 1 வீதம் மொத்தம் 4 நூல்கள் என்றவாறு கமிலின் நூல்களை வகைப்படுத்தலாம். மேலும் சிலப்பதிகாரம், நற்றிணை, புறநானூறு ஆகியவற்றை கமில் மொழி பெயர்த்திருக்கிறார் என்ற செய்தியும் கிடைக்கிறது. இந்த நூல்கள் கிடைத்தால் மேலும் பல நூல்கள் இவரது படைப்புகளில் சேரும். இந்த வகைப்படுத்தல் மூலம் கமிலின் தமிழ் இலக்கிய அறிவும் ஆற்றலும் ஆய்வார்வமும் தெள்ளிதன் புலனாகும். தனது குன்றாத ஆர்வத்தால், இந்தியத் தமிழ் மரபைத் துல்லியமாக அறிந்து ஆராய உதவும் வகையில் 1952இல் சம்ஸ்கிருதத்தில் ஒரு முனைவர் பட்டமும் 1959இல் தமிழில் ஒரு முனைவர் பட்டமும் பெற்றார். இதுவரை தமிழ்நாட்டில் பட்டம்பெற்றவர்களில் ஏறத்தாழ 70% பேருக்குத் தன் தாய்மொழியிலேயே பிழையின்றி எழுதத் தெரியாது என்பது இன்றைய நிலையில் கசப்பான உண்மையாகும். தமிழர்கள் நிலையே இவ்வாறிருக்கும் போது ‘செக்’கைத் தன் தாய்மொழியாகக் கொண்ட கமிலுக்கு இப்படி ஒரு தமிழ்ப்பற்றும் ஆய்வு நுட்பமும் பரவலாக்க உணர்வும் எப்படி வந்திருக்கும் என்பது நுண்ணிதின் ஆராயத்தக்கது. இவரது புகழ்பெற்ற நூல்களுள் ஒன்று, “The Smile of Murugan : On Tamil Literature of South India” என்பதாகும். ‘முருகனின் முறுவல்’ – முருகனே அழகு; முருகு என்ற சொல்லின் பொருளும் அழகு; முருகனின் முறுவல் அதனினும் அழகு; அதையே தன்பெயராகவும் கொண்ட ‘சுவலபில்’ அழகோ அழகு! ஆம். ‘சுவலபில்’ என்பதற்கும் ‘More beautiful’ எனப் பொருளிருப்பதாக அறிகிறபோது ‘என்ன பொருத்தம் அவர்க்கு இந்தப் பொருத்தம்’ எனத் பாடத் தோன்றுகிறதல்லவா?! இதைவிட இன்னொரு பொருத்தம் இருக்கிறது. பாருங்கள்! இவரை ஈன்ற தாயின் பெயரோ மரியம்மா! ஒருவேளை, ‘மாரியம்மா’ தான் ‘மரியம்மா’ ஆனாள் எனக் கொண்டால் இவரது முன்னோர் தொல்தமிழ்க் குடியினராய் இருப்பரோ எனவும் எண்ண தோன்றுகிறது. மேலும் சிந்தித்தால் ‘தமிழ்’ என்பதன் ‘செக்’மொழி மருஉச் சொல்தான் ‘கமில்’ என்பதோ என்றும் ஒலியியல் ஒப்புமை தோற்றுவிக்கிறது. சரி… ‘கமில்’ – ‘தமிழ்’ என்றால் ‘சுவலபில்’ என்பதை என்னவென்று சொல்வது என்று நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கிறது. ‘சுவலபில்’ என்பதை ஆங்கில எழுத்துக்களில் ‘Svelebil’ என்று எழுதுகிறோமே, எழுத்து என்பதற்கே ‘Syllable’ என்பதுதானே ஆங்கிலச் சொல்!. அப்படியானால், ‘Syllable’ என்பது ‘Svelebil’ ஆகியிருக்க வாய்ப்புண்டல்லவா என்றும் தோன்றுகிறதே! இப்பொழுது இரண்டையும் இணைத்துப் பாருங்கள் கமில் ஸ்வலபில்  Kamil Svelebil  Kamil Syallabil  Tamil Syllable  தமிழ் எழுத்து என்று இருந்திருக்க வாய்ப்புள்ளதென்று தோன்றுவதற்கு வாய்ப்பிருக்கிற தல்லவா?! இந்த மொழியியல் – ஒலியியல் ஒப்புமையை எண்ணிப் பார்க்கிறபோது ‘கமில் ஸ்வலபில்’ குடும்பத்தார் தொல்தமிழ்க் குடியினராக இருந்திருக்கக் கூடும் என்ற கருத்து இன்னும் வலுப்பெறும் வண்ணம் உள்ளதல்லவா?! ஒரு வேளை, இந்தத் தொல்குடித் – தொப்புள்கொடி – உறவு ஆற்றல் தான் கமிலைத் தமிழ் பயில உந்தியருக்குமோ என்னவோ?! இந்தக் கருத்தை மேலும் ஆராய்வது ஆராய்ச்சி உலகின் கடன் என்று முன்வைக்க விரும்புகிறேன். இப்படி ஒன்றை நிறுவியாக வேண்டும் என்பது தேவையில்லை. நம்மிடம் இல்லாத தமிழ்ப் பற்றைக் கமிலிடம் இருந்தாவது நாம் பெற்றாக வேண்டும் என்பதே இன்றைய காலத்தின் தேவையாகும். 17 ஜனவரி 2009ல் இத்தகைய கமில் சுவலபின் உயிர் இந்த உலகில் இல்லை. ஆனால் அவரது சிந்தனைகளின் மூலம் அவர் விட்டுசென்ற ‘தமிழுணர்வு மூச்சுக்காற்று’ உலகமெங்கும் உலவிகொண்டே இருக்கும். இதை உணராமலே இன்னும் ஒரு நூற்றாண்டு கடந்தால் ‘தமிழ் மொழி அமிழ்தமொழி’ என்ற வாக்கியத்தை ‘தமிழ்மொழி அமிழ்ந்த மொழி’ என்று படிக்க வேண்டி வரும். கட்டுரையாளர் முனைவர் சு.மாதவன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை (செம்மொழி இளம்தமிழறிஞர் விருதுபெற்றவர்) மாட்சியமை தங்கிய மன்னர் கல்லூரி (த) புதுக்கோட்டை. பேச 9751 330 855, மின் அஞ்சல் : semmozhi200269@gmail.com

No comments:

Post a Comment