Thursday 24 March 2016

மானுடரும் உண்டுகொல்! மானுடரும் உண்டுகொல்!”

தீக்கதிர் “மக்கள் மன்றம்” – பகுதிக்கு முனைவர் சு.மாதவன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி (தன்னாட்சி), புதுக்கோட்டை – 622 001, பேச 97513 30855 மின்னஞ்சல் : semmozhi200269@gmail.com,semmozhi_200369@yahoo.com கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை முதல் தங்களது ஒவ்வொரு படைப்பையும் இலக்கியச் சுவைபடவே எழுதினர் மார்க்சும் ஏங்கல்சும். தன் காலத்துப் படைப்பாளியான லயோ டால்ஸ்டாய்க்கு விமர்சனக் கடிதங்கள் பல எழுதியுள்ளார் மார்க்ஸ் . ரஷ்யப் புரட்சிக்குத் தலைமையேற்றிருந்த காலத்திலும் அதற்கு முன்பும் தோழர் லெனின், எழுத்தாளர் மார்க்ஸிம் கார்க்கி போன்ற படைப்பாளர்களின் படைப்புகளைப் படிப்பதும் அவற்றிற்கு ஆய்வுக்குறிப்புகள் எழுதுவதுமாக இருந்தார். சீனப் புரட்சிக்குத் தலைமையேற்றிருந்த காலத்திலும் அதற்கு முன்பும் தோழர் மாவோவும் அவ்வாறே திகழ்ந்தார். இன்னும் பல உலகத் தலைவர்களும் அவ்வாறு இருந்துள்ளனர். இந்தியாவிலும் தோழர் இ.எம்.எஸ். முதல் தோழர் சீத்தாராம் யெச்சூரி வரை இலக்கியப் படைப்புகளை மார்க்சீய நோக்கில் ஆராய்ந்து எழுதி வந்துள்ளனர். இந்தியாவில் இத்தகைய முயற்சிகளில் சில தலைவர்களாலே ஈடுபட முடிந்துள்ளது. இலக்கியமும் இந்தச் சமூகத்தின் உற்பத்திப் பொருள் (Literature is also known as a product of the society) என்ற மார்க்சீய இயங்கியல் புரிதலும், அந்த உற்பத்திப் பொருளின் பயன், விளைவு குறித்த அறிதலும் ஒவ்வொரு பொதுவுடைமையாளர்க்கும் அவசியம் இருக்க வேண்டும். தமிழகத்தைப் பொருத்தஅளவில், இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்ட மார்க்சியத் தலைவர்கள் மிகவும் குறைவே. இத்தகைய சூழலில், தோழர் ஜி.இராமகிருஷ்ணன் 07.07.2015 நாளிட்ட தீக்கதிர் நாளிதழில் எழுதியுள்ள ”கருகும் உயிர்கள் பதறும் படைப்பு” என்ற கட்டுரை மிகுந்த கவனிப்புக்குரிய செயல்பாடாகிறது. ஏற்கனவே, வண்ணக்கதிரில் “களப்பணியில் கம்யூனிஸ்ட்டுகள்” என்ற தொடரில் அடித்தட்டு மக்கள் வரலாற்றுக்கான அடிப்படைகளை விதைத்துவரும் தோழர், இன்றைய இலக்கியப் போக்குகள் குறித்தும் எழுத முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கதும் பாராட்டத்தக்கதும் ஆகும். அதிலும், அண்மைக்காலத் தமிழ்க் கவிதை வாசிப்புத் தளத்தில் பரந்து விரிந்து வாசகர்களிடம் சென்று சேர்ந்துள்ள ஒரே முன்ன்ணிப் படைப்பாளியான கவிஞர் வைரமுத்து “எரிதழல் கொண்டு வா” என எல்லோரையும் அழைக்கும் போது அதன் வீச்சும் விளைவும் நற்கருத்தியல் பெருகிட விரிந்த களம் அமைக்கும் என்பது திண்ணம். “கௌரவக் கொலை” என அழைக்கப்பட்டு “சாதி ஆணவக் கொலை” எனப் பெயர்மாற்றம் பெற்றுள்ள “சாதி வெறிக் கொலைகள்” ஒழிய இதுபோன்ற படைப்புகள் தேவை எனக் கவிஞர் வைரமுத்துவிடம் தோழர் ஜி.இராமகிருஷ்ணன் வேண்டுகோள் வைத்திருப்பதும், அதை உடனடியாகக் கவிஞர் வைரமுத்து நிறைவேற்றிவைத்திருப்பதும் பாராட்டத்தக்க முயற்சிகளாகும். அத்தோடு, முற்போக்கு இலக்கிய முயற்சிகளுக்கு இது ஒரு உந்துசக்தியாகத் திகழும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. தீண்டாமையும் சாதிவெறியும் படுகொலைகளும் நாள்தவறாமல் நடந்துவரும் இந்த நாளில் முற்போக்கு இலக்கியவாதிகளின் சமூகப் பொறுப்புச் சுமை கூடிக் கொண்டே இருக்கிறது. இத்தகைய சூழலில், கலைஇரவு போன்ற நிகழ்வுகளில் இன்னுமொரு புதிய உள்ளடக்கத்தை இணைத்துக் கொள்ளலாம் என்ற ஒரு கருத்துருவையும் முன்வைக்கிறேன்: “அன்றைய காலத்தில் அறம்பாடி அழித்தல், எனும் இலக்கியச் செந்நெறி இருந்துவந்தது. அதை மீட்டுருவாக்கம் செய்து புதுக்கி, “மானுடரும் உண்டுகொல்! மானுடரும் உண்டுகொல்!” என்ற தலைப்பில் “அறம்பாடும் கவியரங்கம்” என்பதை அரங்கேற்ற முன்வரலாம்”.

1 comment:

  1. வணக்கம் அய்யா ..நல்ல சிந்தனை அறம் பாடுவோம்...

    ReplyDelete