Sunday 29 January 2023

ஒரு நாள் ; ஒரு நூல் - புத்தரின் புகழ்மிகு வாழ்க்கை - ஆர்தர் லில்லி.25.01.2023

25.01.2023 ஒரு நாள் ; ஒரு நூல் - 25 புத்தரின் புகழ்மிகு வாழ்க்கை -- ஆங்கிலத்தில் : ஆர்தர் லில்லி தமிழில் : சிவ.முருகேசன் சென்னை, சந்தியா பதிப்பகத்தின் முதல் பதிப்பாக 2009 இல் வெளிவந்துள்ளது இந்நூல். இந்நூல் 296 பக்கங்கள் கொண்டது. அறிஞர் ஆர்தர் லில்லியின் அழகிய ஆங்கில நடைநூலை அப்படியே அழகோடு தமிழாக்கித் தந்துள்ளார் அறிஞர் சிவ.முருகேசன். நூலை எடுத்துப் படிக்கத் தொடங்கினால் கீழே வைக்கவிடாதபடிக்கான நடையும் தேடலும் விளக்கங்களும் சான்றுகளும் ஈர்த்து விடுகின்றன. 24 தலைப்புகளின்கீழ் அமைந்துள்ள இந்நூலைப் படிக்கிறபோது உலகளாவிய சமய மெய்யியல் - பண்பாட்டியலுக்குள் வலம்வந்த நிறைவை அடையமுடிகிறது. அதேநேரத்தில், மனிதப் புனிதர் புத்தரைக் கடவுளாக்கிவிட்ட இந்தியச் சமயப் பின்னணியோடு கிறித்துவப் பண்பாட்டியல் விளக்கங்களின் இயைபுகளையும் அறிந்துகொள்ள முடியும். அறிஞர் ரைஸ் டேவிட்டின் ஆய்வை மறுதலிக்கும் ஆய்வு முடிவுகளைக் கொண்டதாக இந்நூல் அமைந்துள்ளது. ஆனாலும், அனான்மக் கோட்பாட்டைக் கொண்ட பெளத்தத்தின் ஆன்மாவைத் தேடும் அரிய படைப்பாக இந்நூல் மிளிர்கிறது. இந் நூலின் பொருளடக்கம் பின்வருமாறு : 1.புத்தரின் பிறப்பு - 17 2.குழந்தை புத்தர் - 30 3. புத்தரின் திருமணம் - 43 4.முன்னறிவிப்பான நான்கு அடையாளங்கள்- 55 5.மேன்மையான துறவு - 65 6.உயர்நிலை பிராமண சமயம் - 98 7.கீழ்நிலை பிராமண சமயம் - 107 8.புத்தரின் சீர்திருத்தம் - 118 9.புத்தரின் போதனை - 13வது 10.மன்னர் அசோகர் - 148 11.சூனியத்திற்கு அழைத்துச் செல்லும் ஊர்தி - 154 12.புத்தகோசரும் இலங்கையின் கடவுள் மறுப்பு கோட்பாடும் - 166 13.பௌத்த சங்கத்தின் முதல் கூட்டம்- 174 14.மூன்றாவது பவுத்த சங்கம் - 183 15.புத்தர் கோசரின் லலிதா விஸ்தர சுருக்கம் - 187 16.பிரம்ம ஜால சூத்திரம் - 192 17..மகாபரி நிர்வாண சூத்திரம் - 198 18.சடங்குகள் - 208 19.பௌத்தர்களின் மூன்றினத் தொகுப்பு அல்லது மும்பை - 213 20.அண்டப் படைப்புக் கோட்பாடு - 221 21.ஷமனிசம் - 225 22.அசோகரின் சாட்சியம் 245 23.வரலாற்றுப் புத்தர் - 251 24.புத்தரின் மறைவு - 292 நூலின் முகப்பில் என்னுரை,முன்னுரை ஆகியவை உள்ளன. இந்த முன்னுரையின் தொடக்கத்தில் இந்நூலாசிரியர் குறிப்பிடும் செய்திகள் இந்த நூலின் ஒட்டுமொத்தக் கருத்துக்களையும் பௌத்தத்தின் மெய்யியல் பின்புலத்தையும் அதன் சமூகப் பயன்பாட்டு நிலைகளையும் தெளிவாக எடுத்துரைக்கின்றன. இதோ அந்த முன்னுரையின் தொடக்கப் பகுதி : ". புத்தர் ஒரு சமய சீர்திருத்தவாதி ; கிறிஸ்து சகாப்தம் தொடங்குவதற்கு 470 ஆண்டுகளுக்கு முன்பு அவர் மறைந்தார். இப்புவியில் அவர் வாழ்ந்ததால் பின்வரும் விளைவுகள் ஏற்பட்டன. 1. உலகில் வேறு எங்கும் காணப்படாத யாராலும் வெல்ல முடியாத பூசாரிகளின் ககொடுங்கோன்மை புத்தரின் தாக்கத்தால் நொறுங்கியது.அவரது சீடர்கள் இந்தியத் திருநாட்டில் ஆயிரம் ஆண்டு காலம் முன்னணியில் திகழ்த்தனர். 2. சாதிப் பாகுபாடு தகர்த்தெறியப்பட்டுத் தலை கீழாகத் தவிர்க்கப்பட்டது. 3. பலதார மணம் முதன்முறையாக நீதிக்குப் புறம்பானது என அறிவிக்கப்பட்டது. அடிமை முறை கண்டிக்கப்பட்டது. 4. தட்டுமுட்டுச் சாமான்கள் என்றும் சமுதாயத்தில் பாரம் என்றும் கருதப்பட்ட பெண்கள் ஆண்களுக்குச் சமம் எனக் கருதப்பட்டு ஆன்மீக முன்னேற்றத்திற்கு முயற்சி செய்யவும் அனுமதிக்கப்பட்டனர். 5. ஒரு பூசாரியின் கத்தியால் ஆகட்டும் அல்லது ஒரு வெற்றியாளனின் வாளாலாகட்டும் ரத்தம் சிந்துதல் என்பது முற்றிலும் தடை செய்யப்பட்டது. 6. மனித சமுதாயத்தின் சமய வரலாற்றில் முதன்முறையாக சமயம் இருக்க வேண்டிய இடத்தில் தனி மனிதனின் ஆன்மீக விழிப்புணர்வு வைக்கப்பட்டது. பூசாரிகளால் கண்டுபிடிக்கப்பட்ட உயிர்ப்பலிகளும் சம்பிரதாயமான சடங்குகளிலும் அல்லாமல் கடமை என்பது ஒழுக்கம், நீதி ஆகியவைகளின் வழியே நிறைவேற்றப்பட வேண்டும் என்பதைப் புத்தர் முதல் முறையாக அறிவித்தார். 7 .நிறுவனங்களின் மூலமாகவும் சமயத்தை மக்களிடையே பரவச் செய்யும் முறை முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. 8. இவற்றின் மூலம் இந்தியா, சீனா ,பாக்டீரியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் மதமாற்றம் அறவழியிலேயே ஏற்படுத்தப்பட்டது. பௌத்தம் கட்டாயப்படுத்துவதை ஏற்பதில்லை. இன்னும் உலகில் மூன்றில் ஒரு பகுதி பௌத்தத்தின் அரவணைப்பில் உள்ளது எனக் கூற முடியும். இத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டது வரலாற்றில் ஓர் அதிசயம்தான் " (பக்.9 - 10 ). பொருளடக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நான்காவது தலைப்பான ' முன்னறிவிப்பான நான்கு அடையாளங்கள் ' என்னும் தலைப்பில் வழக்கமாகக் காலங்காலமாக கற்பிக்கப்பட்டு வந்திருக்கிற பிணி, மூப்பு, சாக்காடு ஆகியவற்றை கண்டுதான் புத்தர் துறவுபூண்டார் என்கிற செய்தியே இடம்பெற்றுள்ளது. ஆனால், ஆறாவது, ஏழாவது தலைப்புகளாக அமைந்துள்ள உயர்நிலை பிராமண சமயம் , கீழ்நிலை பிராமண சமயம் என்கிற தலைப்புகளில் கீழ்நிலை பிராமண சமயம் என்பது புத்தரின் வருகைக்கு முன்பு இருந்த வைதீக பிராமண சமயம் என்றும் உயர்நிலை பிராமண சமயம் என்பது புத்தரின் வருகைக்குப் பிறகு உருவான பௌத்த சமயம் என்பதும் விளக்கப்பட்டுள்ளது. இதுவரையிலும் எந்த அறிஞராலும் விளக்கப்படாத புதிய விளக்கமாக இது அமைந்துள்ளது. இதுகுறித்து எட்டாவது தலைப்பான ' புத்தரின் சீர்திருத்தம் ' என்னும் தலைப்பிலான பகுதியை தொடங்குகிறபோதே இவ்வாறு நூலாசிரியர் எழுதிச் செல்கிறார் : " கீழ்நிலை பிராமண சமுதாயத்தை எதிர்த்து மேல்நிலை பிராமண சமயம் மேற்கொண்ட புரட்சியே பௌத்த இயக்கம். வரலாற்றின் பக்கங்களில் இதுவரை தோன்றாத முதன்மையான ஒருவரால் தலைமை ஏற்கப்பட்டு அந்தப் புரட்சி நடந்தது. தனிமனிதனின் ஆன்மீக உணர்வைத் தட்டி எழுப்புவது ஒன்றுதான் அதற்கு வழி என்று அவர் நன்கு உணர்ந்தார் குருதி சிந்த வைக்கும் உயிர்ப்பலி, சாதி, அதிக பொருட் செலவில் மேற்கொள்ளப்படும் தீர்த்த யாத்திரைகள் போன்றவை அடியோடு ஒழிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார் " ( ப.118 ). அதேபோல் பௌத்தத்தின் முதல் சங்கக் கூட்டம், மூன்றாவது சங்கக் கூட்டம் ஆகியவை எவ்வாறு நடந்தன என்பது குறித்த செய்திகள் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. ஆனால் , இதில் இரண்டாவது பௌத்த சங்கம் குறித்த செய்திகள் இடம் பெறாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. நூலின் 24 ஆவது தலைப்பான புத்தரின் மறைவு என்கிற தலைப்பில் புத்தரின் முதன்மைச் சீடரான ஆனந்தனிடம் புத்தர் நிப்பாணமடையும் முன்பாகக் கூறிய செய்திதான் இந்த உலகிற்கு புத்தர் விட்டுச் சென்ற நிறைவான செய்தி ஆகும் : " ஆனந்தா ! நீ நீயாகவே இரு; உனது ஒளியை நம்பு. உன்னிடமே நீ சரண் புகு . தர்மமே உனது ஒளிவிளக்காகவும் சரணாலயமாகவும் இருக்கட்டும் . வேறு எங்கும் சரணடைந்து விடாதே. இப்பொழுதிலிருந்து ஆனந்தா ! யாராக இருந்தாலும் அவன் அவனது ஒளியை நம்பட்டும் . அவனுக்குள் அவனே சரண் புகட்டும். வேறு எந்த தஞ்சத்தையும் நாட வேண்டாம் . இப்போதிலிருந்து அப்படி இருப்பவனே எனது உண்மையான சீடன் ; அவனே சரியான பாதையில் நடக்கிறான் " ( ப.293 ). இவ்வாறு எடுத்துக்காட்டத்தக்க பல்வேறு செய்திகளையும் தன்னகத்தில் கொண்டுள்ள அரிய நூலாக இந்த நூல் திகழ்கிறது. இந்த நூலில் இடம்பெற்றுள்ள மிக முக்கியமான செய்திகள், கருத்துக்கள், தத்துவ விளக்கங்கள், வரலாற்றுக் குறிப்புகள் ,ஸ்லோகங்கள் ஒவ்வொன்றிற்கும் அந்தந்தப் பக்கத்திலேயே அடிக்குறிப்புகளைக் கொடுத்திருக்கும் ஆய்வு நெறிமுறை சிறப்பான நெறிமுறையாகும். இதிலிருந்து ஒரு நூலை படைப்பவர்கள் எவ்வாறு சான்றுகளைத் தர வேண்டும் என்பதையும் இந்நூல் ஆசிரியர் உணர்த்துகிறார். இந்த வகையிலும் பௌத்த சமய வரலாற்றை, அதன் பின்னணிகளை மிகச் சிறப்பாக எடுத்துரைக்கும் நூலாக இந்நூல் திகழ்வதால் பௌத்தத்தைப் பற்றிய அறிதலுக்காக ,புரிதலுக்காகப் பயில விரும்புபவர்கள் எல்லோரும் அவசியம் பயில வேண்டிய நூலாக இந்த நூல் விளங்குகிறது. பதிப்பக முகவரி: சந்தியா பதிப்பகம், ப.எண் : 57, 53 ஆவது தெரு, 9 ஆவது அவென்யூ, அசோக் நகர், சென்னை - 63 முதற் பதிப்பு: 2009 விலை : ரூபாய் 175/- https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02iwdunWyAkMDjkZ8haHifYckVH7rhEaEhBjPhEgXRXBaZTaAAv1r9DYAamUKbgoPFl&id=100007862881487&mibextid=Nif5oz

No comments:

Post a Comment