Sunday, 29 January 2023
ஒரு நாள் ; ஒரு நூல் - 24. புத்தரின் தவமும் தத்துவங்களும் - ப.ராமஸ்வாமி.24.01.2023
24.01.2023
ஒரு நாள் ; ஒரு நூல் - 23
புத்தரின் தவமும் தத்துவங்களும்
- ப.ராமஸ்வாமி
சென்னை, வ.உ.சி.நூலகத்தின் முதல் பதிப்பாக 2006 ஆம் ஆண்டில் வெளிவந்துள்ளது இந்நூல். இந்நூல் 656 பக்கங்கள் கொண்டது.
பெளத்த அறிஞர் ப.ராமஸ்வாமி அவர்களின் புத்தரின் புனித வரலாறு, தம்மபதம், புத்த ஞாயிறு, புத்தரின் போதனைகள், பெளத்த தருமம் ஆகிய ஐந்து நூல்களின் தொகுப்பு நூலாக இந்நூல் திகழ்கிறது.
பெளத்தம் குறித்த பரந்து விரிந்த செய்திகளை ஒரே நூலில் அறிந்துகொள்ளும் வாய்ப்பை இந்நூல் வழங்குகிறது.
இந்நூலின் முகப்புப் பகுதியில் பதிப்புரை, பொருளடக்கம் ஏதும் இல்லை.
ஐந்து நூல்களில் முதலில் அமைந்துள்ள நூல் ' புத்தரின் புனித வரலாறு ' என்பதாகும். இந்நூல் 20 இயல்களில் பக்கம் 5 முதல் 276 வரை ஆக மொத்தம் 271 பக்கங்களில் புத்தரின் வரலாற்றை உட்பொதிந்து வைத்துள்ளது.இந்நூலில் 5 பக்க முன்னுரை ஒன்றை இந்நூலாசிரியர் எழுதியுள்ளார். இந்நூல் ஒரு புதினத்தைப் படிப்பதுபோல் விறுவிறுவெனப் படிக்கிறவகையில் இனிய எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. எல்லா இயல்களிலும் பெளத்தப் பிடகங்களின் சுலோகங்கள், பெளத்தத் தமிழிலக்கியப் பாடல்கள் ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஐந்து நூல்களில் இரண்டாவது நூலாக அமைந்துள்ள நூல் ' தம்மபதம் ' என்பதாகும். இந்நூல் பக்கம் 277 முதல் 334 வரை ஆக மொத்தம் 57 பக்கங்களில் அமைந்துள்ளது. இந்நூல் 26 இயல்களில் 421 சுலோகங்கள் கொண்டது. இந்நூலாசிரியரின் மொழிபெயர்ப்பில் அமைந்துள்ள இந்நூலின் பல இயல்களும் நல்ல தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுத் தலைப்பிடப்பட்டுள்ளன. அவை முறையே வருமாறு:
இயல் ஒன்று - இரட்டை செய்யுங்கள்
இயல் இரண்டு - கருத்துடைமை
இயல் மூன்று - சிந்தனை
இயல் நான்கு - புஷ்பங்கள்
இயல் ஐந்து - பேதை
இயல் ஆறு - ஞானி
இயல் ஏழு - முனிவர்
இயல் எட்டு - ஆயிரம்
இயல் ஒன்பது - தீயொடுக்கம்
இயல் பத்து - தண்டனை
இயல் பதினொன்று - முதுமை
இயல் பன்னிரெண்டு - ஆன்மா
இயல் பதின்மூன்று - உலகம்
இயல் பதினான்கு - புத்தர்
இயல் பதினைந்து - களிப்பு
இயல் பதினாறு - இன்பம்
இயல் பதினேழு - கோபம்
இயல் பதினெட்டு - குற்றம்
இயல் பத்தொன்பது - சான்றோர்
இயல் இருபது - மார்க்கம்
இயல் இருபத்தொன்று - பலவகை
இயல் இருபத்திரெண்டு - நரகம்
இயல் இருபத்து மூன்று - யானை
இயல் இருபத்துநான்கு - அவா
இயல் இருபத்தைந்து - பிக்கு
இயல் இருபத்தாறு - பிராமணன்
தம்மபதம் நூலின் நிறைவில் 3 அனுபந்தங்கள் (சொல் விளக்கங்கள் )கொடுக்கப்பட்டுள்ளன.
ஐந்து நூல்களில் மூன்றாவது நூலாக இடம் பெற்று இருப்பது 'புத்த ஞாயிறு' என்னும் நூலாகும் ( பக்.335 - 443 ). ஆக மொத்தம் 108 பக்கங்களில் இந்நூல் அமைந்துள்ளது.இந்நூல் நான்கு இயல்களாக அமைந்துள்ளது. அவை முறையே,
முதல் இயல் - புத்த ஞாயிறு ,
இரண்டாம் இயல் - வேதங்களும் வைதீக சமயங்களும் ,
மூன்றாம் இயல் - நான்கு தீர்க்கதரிசிகள் ,
நான்காம் இயல் - தேவகுமரரும் திருநபியும் என்பனவாகும்.
இந்நூலின் முதல் இயலான ' புத்த ஞாயிறு ' என்னும் தலைப்பில் புத்தர் இந்தியாவில் தோன்றிய காலத்தில் இந்தியாவிலிருந்த சமயங்கள், அவற்றிலிருந்து மாறுபட்டு புத்தர் தன் தத்துவத்தை முன்வைத்தமை, புத்தர் காலத்து இந்தியா, பௌத்த தருமம், பௌத்த சமயத்தைப் பற்றிய அறிஞர்களின் கருத்துக்கள், பௌத்தம் உருவாக்கிய சிற்பக் கலைகள், பௌத்தத்தால் ஏற்பட்ட கல்விப் பெருக்கம், இந்தியாவும் வெளிநாடுகளும் பௌத்த சமயத்தால் இணைந்தமை ஆகிய செய்திகள் இடம்பெற்றுள்ளன.
இரண்டாம் இயலான 'வேதங்களும் வைதீக சமயங்களும்' என்னும் தலைப்பில் வேதங்களும் வைதீக சமயங்களும் முன்வைத்த கருத்து நிலைகள் , வேதங்களும் உபநிடதங்களும் முன்வைத்த கருத்துக்கள் குறிப்பாக பிரகதாரணிய உபநிடதம் , பகவத் கீதை, மூன்று ஆச்சாரியார்கள், சித்தாந்த சைவம் , பிறவாதங்கள் என்னும் பொருண்மைகளில் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
மூன்றாம் இயலான 'நான்கு தீர்க்கதரிசிகள்' என்னும் தலைப்பில் புத்தர் காலத்தில் தோன்றிய... புத்தர காலத்துக்கு முந்தைய காலத்தில் தோன்றிய நான்கு தீர்க்கதரிசிகள் பற்றிய செய்திகள், அவர்கள் முன்வைத்த தத்துவச் சிந்தனைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. முதலாவது தீர்க்கதரிசியாக கி.மு.1000இல்வாழ்க்கையில் வாழ்ந்த பாரசீக நாட்டைச் சார்ந்த ஜாத துஷ்டிரர், இரண்டாவது தீர்க்கதரிசியாக கி.மு. 573 இல் வாழ்ந்த கௌதம புத்தர், மூன்றாவது தீர்க்கதரிசி யாக கி.மு. 570 இல் வாழ்ந்த லாவோஸ், நான்காவது தீர்க்கதரிசியாக கி.மு. 551 இல் வாழ்ந்த கன்பூசியஸ் ஆகிய நான்கு தீர்க்கதரிசிகளின் கருத்துக்கள், மெய்யியல் சிந்தனைகள், அவர்கள் தோன்றிய காலத்துச் சமூகப் பின்னணி ஆகியவை விளக்கப்பட்டுள்ளன. இந்த நான்கு தீர்க்கதரிசிகளோடு மிகப் பிற்காலத்தில் தோன்றிய அதாவது கி.மு.1 இல் தோன்றிய இயேசு கிறிஸ்து, கி.பி. 632 இல் தோன்றிய முகமது நபி ஆகியோரின் மெய்யியல் சிந்தனைகளையும் வரலாற்றுப் பின்புலங்களையும் இந்த மூன்றாம் இயல் தெளிவாக விளக்கியுள்ளது.
ஐந்து நூல்களில் நான்காவது நூலாக இடம் பெற்றுள்ள நூல் 'புத்தரின் போதனைகள்'என்னும் நூலாகும் ( பக்.445 - 527 ). ஆக மொத்தம் 82 பக்கங்களில் இந்நூல் அமைந்துள்ளது. இந்த நூலில் 43 தலைப்புகளில் புத்தரின் சிந்தனைகள் பகுத்தளிக்கப்பட்டுள்ளன. அவை முறையே வருமாறு : தற்பயிற்சி, சிந்தனை, ஞானம், தியானம், ஏழை , கருத்துடைமை, மடிமை, களியாட்டம், ஒழுக்கம் , அகிம்சை , அன்பு ,பொறுமை, கோபம், நல்வினைகள், தானம் , ஊழியம், நண்பர்கள்,மவுனம் , இன் சொல் , இன்னாச் சொல் , இன்பமும் துன்பமும், தீவினைகள்,ஐயமும் தெளிவும், ஆஸவங்கள், ரகசியம், இரண்டில் விளைதல், கொடுங்கோலம், புத்தர், பௌத்த தருமம்,பௌத்த சங்கம், பிக்குகள், உபாசகர்கள், சண்டாளர்கள், பெண்கள், நால்வகை வாய்மைகள், அஷ்டாங்க மார்க்கம் ,பன்னிரு நிதானங்கள், ஆன்மா, உடல், மரணம், கருமநிதி, நிர்வாணம் ஆகியவையாகும். இந்த 43 தலைப்புகளில் அடங்கியுள்ள புத்தரின் போதனைகளைப் பயிலும்போது புத்தரின் மெய்யியல் சிந்தனை முழுமையையும் அறிந்துகொண்ட உணர்வு கிடைக்கும் வகையில் சிந்தனைகள் தொகுக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த புத்தரின் சிந்தனைகள் எந்தெந்த நூல்களில், எந்தெந்த இடங்களில்,எந்தெந்தப் பிரிவுகளில் இடம்பெற்றுள்ளன என்கிற குறிப்புகள் கொடுக்கப்படாமல் இருப்பது ஆய்வாளர்களுக்கு உதவுவதாக அமையாது. ஆனால் புது, பொது வாசிப்பாளர்களுக்குப் பரவாயில்லை என்று சொல்லலாம். ஆனாலும் முறையான அறிதலை இது கொடுக்காது.
ஐந்து நூல்களில் ஐந்தாவது நூலாக இடம் பெற்று இருப்பது 'பௌத்த தருமம்' என்னும் நூலாகும் (பக்.529 - 656 ). ஆக மொத்தம் 127 பக்கங்கள் கொண்டது இந்நூல். இந்நூல் ஏழு இயல்களில் அமைந்துள்ளது.
முதல் இயல் - நான்கு வாய்மைகள் - 531 இரண்டாம் இயல் - அஷ்டாங்க மார்க்கம் - 549 மூன்றாம் இயல் - அடிப்படைக் கொள்கைகள் - 574
நான்காம் இயல் - நிருவாணம் - 603
ஐந்தாம் இயல் - பௌத்தமும் சாதிப் பிரிவினையும் - 612
ஆறாம் இயல் - பௌத்த சங்கம் - 629
ஏழாம் இயல் - பௌத்தத் திருமுறைகள் - 637
ஏறத்தாழ ஒரே பொருண்மையின் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டதாக இந்நூல்(கள் )திகழ்கிறது(கின்றன). ஒரே ஆசிரியர் ஒவ்வொரு நூலிலும் புதிய புதிய தேடலையும் செய்திகளையும் விதைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
முன்பே சொன்னபடி பெளத்தத்தைப் பற்றிய தொடக்க நிலை அறிமுகம் முதல் ஆய்வுநிலைவரையிலான பன்முக வாசிப்பாளர்களும் படிக்கத்தக்க நல்ல நூல் இது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
பதிப்பக முகவரி:
வ.உ.சி.நூலகபம்,
ஜி- 1, லாயிட்ஸ் காலனி,
இராயப்பேட்டை,
சென்னை - 14
முதற் பதிப்பு : 2006
விலை : 350/-
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid04cLagbLNbKEsPzBShot34xqYMfUN1dwVtAXYwYUZF5BtHgJbQecDGsvveK2Xtwenl&id=100007862881487&mibextid=Nif5oz
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment