Saturday 14 January 2023

ஒரு நாள் ; ஒரு நூல் - 13 . அறிஞர் பார்வையில் பெளத்தம் - தி.இராசகோபாலன்.13.01.2023 .

13.01.2023 ஒரு நாள் ; ஒரு நூல் -- 13 அறிஞர் பார்வையில் பெளத்தம் -- தி.இராசகோபாலன் சென்னை, செய்திச் சோலையின் வெளியீடாக முதல் பதிப்பாக ஜூன் 2001 இல் இந்நூல் வெளிவந்துள்ளது. இந்நூல் 256 பக்கங்களைக் கொண்டுள்ளது. இந்நூலில் 31 கட்டுரைகள் - ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. மிகமிகக் கடுமையான உழைப்பு, தேடல், ஈடுபாட்டோடு அரிதின் முயன்று இக் கட்டுரைகளைத் தொகுத்துப் பதிப்பித்துத் தமிழுலகுக்குக் கொடையளித்துள்ளார் அறிஞர் தி.இராசகோபாலன் அவர்கள். இந்நூலின் முகவுரையில் தொகுப்பாசிரியரும் பதிப்பாசிரியருமான அறிஞர் தி.இராசகோபாலன் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: " இந்நூலுள் இருபத்தாறு கட்டுரைகள் - ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. மேலும் இடம்பெறவேண்டிய அறிஞர்தம் கட்டுரைகள் உள. அவற்றை அடுத்த புத்தகத்தில் தொகுத்துத் தர எண்ணுகின்றனன். அறிஞர் கூறும் கருத்துகள் புத்தர் பெருமானின் உயர்நெறியை நன்கு வெளிப்படுத்துகின்றனவாக அமைந்துள்ளன எனில் மிகையில்லை. " அறிஞர் பார்வையில் பெளத்தம் " என்னும் இந்நூலுள் இடம்பெற்றுள்ள கட்டுரைகள், பல இதழ்களில், நூல்களில் இடம்பெற்றவை. காலத்தால் பழமையானவை ; ஆனால், மிகச் சிறந்த கட்டுரைகள். இக்கட்டுரைகள் அழியக் கூடாது என்னும் எண்ணத்தில் பொருட்செலவையும் கருதாது தொகுத்தலில் துள்ளேன். இக்கட்டுரைகளை இருபதுயாண்டாகப் பாடுபட்டுத் தொகுத்தளித் துள்ளேன். எனவே, கட்டுரைகளை வெளியிட்ட இதழ், நூல்களின் பெயரையும் குறிப்பிட்டுள்ளேன். இக்கட்டுரைகளை அழியாமல் காக்க வேண்டும் என்பதே முதல் நோக்கம். " ( பக்.3 - 4 ) இதைவிட வேறேதும் விளக்கி இந்நூலின் சிறப்பை, இன்றியமையாமையை விளக்கவேண்டியதில்லை. ஆனால், இந்நூலின் உள்ளடக்கக் கட்டுரைகளின் பட்டியலை இங்கே கொடுக்கவேண்டியது இன்றியமையாதாகும். நூலின் தொடக்கத்தில் முகவுரை, நூல் உரிமை ஆகியவை இடம்பெற்றுள்ளன. இவற்றைத் தொடர்ந்து பொருளடக்கம் இடம்பெற்றுள்ளது. பொருளடக்கத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளும் கட்டுரைகள் இடம்பெற்றுள்ள பக்கங்களின் எண்களும் பின்வருமாறு : 1. தமிழ் நூல்களில் பௌத்தம் - திரு. வி.கல்யாண சுந்தரனார் ( ப. 9 ) 2. பௌத்தர் வளர்த்த தமிழ் - அறிஞர் மயிலை. சீனி. வேங்கடசாமி ( ப. 38 ) 3. தமிழகத்தில் பௌத்த சமயச் செல்வாக்கு - ஆராய்ச்சி அறிஞர் மயிலை. சீனி. வேங்கடசாமி ( ப.47 ) 4.பௌத்தர் வளர்த்த பைந்தமிழ் - முத்து இராசா கண்ணனார் ( ப. 53 ) 5.தமிழும் சாக்கியமும் - இரா பி சேதுப்பிள்ளை ( ப.65 ) 6. தமிழ்நாட்டில் பௌத்தம் - முனைவர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் ( ப.72 ) 6.சமயம் வளர்த்த தமிழ் பௌத்தம் - அ.மு.பரமசிவானந்தம் ( ப.79 ) 7. போதி மாதவன் திருநாளில் - பேராசிரியர் ந. சஞ்சீவி ( ப.86 ) 8. தமிழ்நாட்டில் பௌத்தம் - புலவர் தி.இராசகோபாலன் ( ப. 94 ) 9.புத்தர் அங்கெல்லாம் - ( ப. 102 ) 10.புத்தர் செய்த புரட்சி - 1956 -திராவிட நாடு - ( ப. 110 ) 11.பௌத்தத்தின் தாக்கம் - முனைவர் ஆர். எசு. சர்மா ( ப. 113 ) 12.புத்த மதம் - பிக்கு ஊ சிட்டிலா ( ப.117 ) 13. தமிழும் சமண பௌத்த மதங்களும் - மயிலை. சீனி. வேங்கடசாமி அவர்கள் ( ப. 127 ) 14.பௌத்த நூல்களும் உறுதிப் பொருள்களும் - முனைவர் சோ.ந. கந்தசாமி ( ப.138 ) 15.புத்த சமயம் - முனைவர் ராதாகிருஷ்ணன் ( ப.153 ) 16. புத்த பிரானார் - டாக்டர் எசு.ராதாகிருஷ்ணன் ( ப.164 ) 17.பௌத்தம் பற்றி -பாரதியார் - பாரதியார் பகவத் கீதை ( ப.176 ) 18.காரைத்தீவு அகத்தியர் (பௌத்தர்) (ப.184 ) 19.போதலகிரி அகத்தியர் ( பௌத்தர்) ( ப. 189 ) 20.கிலோ தமை அகத்தியர் ( பௌத்தர் ) ( ப.191) 21. பாபநாசம் அகத்தியர் மலைய மணி ( ப. 192 ) 22.கேரளமும் பௌத்த மதமும் - செ. கோவிந்தன் ( ப. 193 ) 23.சிரிரங்கம் கோவில் ( ப. 200 ) 24. 6 படி குரு பரம் ( ப.207 ) 26.புத்தர் புரட்சிக்காரர், பகுத்தறிவாளர் - அறிஞர் அண்ணாதுரை ( ப. 212 ) 27.தேவரிலும் தேவதையிலும் உயர்ந்தவரே புத்தர் - பண்டித சவகர்லால் நேரு ( ப. 219 ) 28.பௌத்தம் - சவகர்லால் நேரு ( ப.222 ) 29.சிங்கள பௌத்தர்கள் - சுவாமி விவேகானந்தர் ( ப.228 ) 30.மணி பல்லவம் - பேராசிரியர் அ.மு.பரமசிவானந்தம் ( ப. 234 ) 31.கௌதம புத்தர் - சார்லஸ் ஏ பின் சைடு சி வி ஓ ( ப. 240 ) இந்தக் கட்டுரைகள் ஒவ்வொன்றும் அரிய, புதிய செய்திகளை எடுத்துரைக்கின்றன. பல்வேறு ஆய்வுக் களங்களைச் சுற்றிச் செல்கின்றன. இந்தியச் சமூகத்தில் பௌத்த சமயம் ஏற்படுத்திய மறுமலர்ச்சி, வைதீக சமயத்திற்கு எதிராக பௌத்த சமயம் முன்வைத்த புத்தம் புதிய கோட்பாடுகள், புத்தம் புதிய வாழ்வியல் நெறிகள் ஆகியவற்றை இக்கட்டுரைகள் எங்கும் காண முடிகிறது. இந்த 31 கட்டுரைகளைப் பொருண்மை அடிப்படைகளில் இரண்டு வகைப்பாடுகளுக்குள் அடக்கலாம். 1.தமிழ் இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்ட கட்டுரைகள் - 16 2.இந்திய, உலக அளவிலான பௌத்தப் புரிதலைத் தரும் கட்டுரைகள் - 15 இந்தக் கட்டுரைகளில் தமிழ் இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்ட கட்டுரைகளில் இலக்கியத் தரவுகள் பெரும்பான்மையும் பொதுப்படையானவை என்பதால் கூறியது கூறல் என்னும் இயல்பு மேலோங்கி உள்ளது. ஆனாலும், ஒவ்வொரு அறிஞரும் தமிழ் இலக்கியத்தை அணுகி அவற்றிலிருந்து வெளிக்கொணரும் செய்திகள் சில புத்தம்புதியானவாய் அமைந்திருக்கின்றன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இரண்டாவது வகையிலான இந்திய, உலக அளவிலான பௌத்தப் புரிதலைத் தரும் கட்டுரைகளில் மெய்யியல், அறவியல் சார்ந்த சிந்தனைகள் விரிவாகவும் ஆழமாகவும் நுட்பமாகவும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இந்த 31 கட்டுரைகளுக்கு இடையே, "பௌத்த கொள்கை- தந்தை பெரியார் " என்ற தலைப்பில் ஒரு இரண்டு பக்கக் கட்டுரை உள்ளது (பக்கம் 115 - 116 ).ஆனால், இந்தக் கட்டுரை உள்ளடக்கப் பட்டியலில் இடம்பெறவில்லை. உள்ளடக்கப்பட்டியலில் இந்தக் கட்டுரையை 13வது கட்டுரையைத் தொடர்ந்து அமைந்துள்ளது. இந்தக் கட்டுரைகள் இந்தக் கட்டுரை தொகுதியின் பெறுமதி, பயன்பாட்டுத் தகுதி எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடத்தக்கது அல்ல என்ற போதிலும் நூலாசிரியரே தன் முகவுரையில் குறிப்பிட்டுள்ளதுபோல பல கட்டுரைகள் விடுபட்டுள்ளன. விடுபட்ட அறிஞர்களுள் அம்பேத்கர், தந்தை பெரியார், அயோத்திதாச பண்டிதர், லட்சுமி நரசு, சிங்காரவேலர், மு.கு.ஜகந்நாத ராஜா, டி.டி.கோசாம்பி, ராகுல சாங்கிருத்தியாயன் ஆகியவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் உள்ளிட்ட இன்னும் பலருடைய கட்டுரைகளையும் இதுபோன்ற தொகுதிகளில் இது போன்ற தொகுப்புகளில் இனிவரும் காலங்களில் தொகுப்பவர்கள் இணைக்கலாம் ; இணைக்க வேண்டும். பக்க வரையறை , பொருளாதாரச் செலவு மிகுதி கருதி விடுபடுதல் இயல்பே. எனினும் அம்பேத்கரையும் அயோத்திதாசப் பண்டிதரையும் லட்சுமி நரசுவையும் சிங்கார வேலரையும் தொகுப்பாசிரியர் விட்டிருக்கக் கூடாது. அதைப்போல முதல் கட்டுரையாக அமைந்துள்ள திரு. வி.கல்யாண சுந்தரனாரின் கட்டுரையானது 1928 இல் அறிஞர் லட்சுமி நரசு அவர்களின் தலைமையில் கூடிய தென்னிந்திய பௌத்த மாநாட்டில் நிகழ்த்திய விரிவுரையாகும். இந்த மாநாடு தென்னிந்திய பௌத்த சங்கத்தின் சார்பாக சிந்தாதிரிப்பேட்டை உயர்பள்ளி நிலையத்தில் கூடியுள்ள இம்மாநாட்டில் உரையாற்றிய திரு.வி.க. அவர்கள் அவர் உரையாற்றுவதற்கு முன்பு தமிழ்ச் சமூகத்தில் பணியாற்றிய குறிப்பாக தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள பௌத்தக் கூறுகளை விரிவாகவும் ஆழமாகவும் ஆராய்ந்துள்ள அயோத்திதாசரின் பங்களிப்பு அல்லது ஆய்வுப்பார்வை குறித்து எதுவும் குறிப்பிடாமல் உள்ளார். அயோத்திதாசருக்குப் பிறகு தமிழ் பௌத்தம் குறித்து பேசியுள்ள திரு.வி.க அவர்கள் அயோத்திதாசரைக் குறிப்பிடாமல் இருப்பது ஏற்கத்தக்கதல்ல. இத்தகைய இலக்கிய ஆய்வு, வாழ்வியல், தீண்டாமை இந்தியச் சமூகத்தில் தொடர்ந்து நிலவிக் கொண்டிருப்பது நாம் அறிந்ததே. இத்தகைய போக்கை நாம் களைகிறபோதுதான் புத்தர் விரும்பிய இந்தியச் சமூகத்தை நாம் கட்டமைக்க முடியும் என்பது தெளிவு. இந்த இடத்தில் இந்தக் கட்டுரைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பண்டித ஜவஹர்லால் நேருவின் சொற்பொழிவுச் சுருக்கத்தை பகுதிகளை நினைவுகூர்வது ஒட்டுமொத்த பௌத்தச் சிந்தனைகளை நினைவுகூர்வதற்குச் சமமாகும். இந்த உரையில் அம்பேத்கர் பௌத்தம் மாறுவதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்பாக நேரு பேசிய பேச்சில் அம்பேத்கர் முன்வைத்த பல இந்தியச் சமூகச் சிக்கல்களை முன்வைத்து பேசியுள்ளார் நேரு என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். 27 ஆவது கட்டுரையாக அமைந்துள்ள "தேவரிலும் தேவதையிலும் உயர்ந்தவரே புத்தர் " என்ற தலைப்பில் அமைந்துள்ள பண்டித சவகர்லால் நேருவின் கருத்துக்கள் வருமாறு: " குருட்டுத்தனமான மூட நம்பிக்கைகள், போலியான இறைவணக்கம், மதப் பூசல், சாதியத் தீமை இவற்றின் பிடியிலிருந்து விடுபடுவதற்காக புத்தர் போதித்த வாழ்க்கை பற்றிய மெய் உணர்வை மக்கள் புரிந்து கொண்டு கற்றுக்கொண்டு வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும் என்று அறைகூவி அழைக்கிறேன். கௌதம புத்தர் ஒரு கடவுள் அல்ல ; தேவர் அல்லர். ஆனால், எளிய மனிதர் தான் புத்தர். புத்தர் சாதியத்தின் பலவீனங்கள், தீமைகள், மூடப் பழக்கங்கள், போலி தெய்வ வழிபாடுகள் இவற்றிற்கு எதிராகக் குரல் கொடுத்தார். இவை இன்னும் கூட நம் மக்களுள் பெரும்பான்மையினரைக் கப்பிக் கொண்டிருக்கின்றன. எனவே,புத்தர் போதித்த வாழ்க்கை மெய்யறிவை இதயத்தையும் மனத்தையும் பற்றிய மெய்யறிவை புரிந்து கொண்டு கற்றுக்கொண்டு ஒழுக வேண்டும். நாம் இந்தத் தீமையில் இருந்து விடுபடுவதற்காக கொள்கைகளுக்கு உதட்டளவில் ஆதரவு காட்டிவிட்டு உள்ளத்தில் மதக்கேடுகளை நிரப்பி வைத்துக் கொண்டிருக்கும் தீமைகளில் இருந்து விடுபடுவதற்காகத்தான் புத்தர் போதனைகள் புரிந்தார். புத்தர் விழாவினை நாம் இப்போது கொண்டாடுவதை புத்தர் திரும்பவும் தாயகம் திரும்புகிறார் எனச் சொல்லலாம். ஏனெனில், புத்தர் நம் இதயத்தில் எங்கோ ஒரு மூலையில் இருந்த போதிலும் அவரை நாம் இடைக்காலத்தில் மறந்திருந்தோம். புத்தர் மீண்டும் வீடு திரும்புவது இந்திய மக்களைப் பொறுத்து வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும். இந்திய மக்களுக்கு மட்டுமே அப்படி என்பது அல்ல ; உலக மக்களுக்கே அப்படித்தான். ஏனெனில், இந்தியாவின் தலைசிறந்த புதல்வன் ஆன புத்தர் இந்தியாவிற்கு மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திற்கும் சொந்தமானவர். மக்களுடைய உள்ளத்தையும் மனத்தையும் அடிமை கொண்டுள்ள மத மூடநம்பிக்கைகள் எல்லாம் அழித்து ஒழிக்கப்பட வேண்டியவை ஆகும். சூரிய கிரகணம், சந்திர கிரகணம் முதலியவற்றின் போது நதிகளில் குளிப்பது போன்ற மூட வணக்க ஒழுக்கங்களையும் சேர்த்துத்தான் ஒழிக்க வேண்டும் என்கிறேன். ஒருநாள் பட்டினி கிடப்பதோ ஆற்றில் குளிப்பதோ நல்லது தான். ஆனால் அன்று ஒரு கிரகணம் என்பதற்காக யாற்றில் குளிப்பதும் பட்டினி கிடப்பதும் முழுக்க முழுக்கத் தவறானதாகும். இது மக்கள் மனதில் கொண்டிருக்கிற வெறும் கற்பனையாகும். இதன் விளைவாக அவர்கள் மூடத்தனத்திற்கு அடிமையாகி விடுகிறார்கள். ராகு என்னும் பாம்பு கிரகணம் ஏற்படும்போது எல்லாம் சந்திரனை விழுங்க முயல்வதாக மக்கள் மயக்கம் கொண்டு விட்டிருக்கின்றனர். இந்த விந்தையான அறிவீனத்தை ஒத்துக் கொள்ள நாம் என்ன அத்தனை பெரிய முட்டாள்களா ?. பூமியின் நிழல் விழுவதால் தானே சந்திரன் நிழல் மறைகிறது. அதுதான் கிரகணம் என்பது? மேளம் கொட்டுவதாலேயோ யாற்றில் மூழ்குவதாலேயோ பட்டினி கிடப்பதாலேயோ ஜெபமாலை உருட்டுவதாலேயோ கிரகணம் மறைந்து விடுவதில்லை. சந்திரன் மீது பூமியின் நிழல் விழுவது நின்றதும் கிரகணம் முடிகிறது. மதத்தின் பெயரால் நிலவும் இது போன்ற மூடநம்பிக்கைகளை ஒழிக்கத்தான் கௌதம புத்தர் பாடுபட்டார். எனவே, நாம் சரியான பாதை வழி நடக்கிற புத்தர் போதனைகளை புரிந்துகொள்ள வேண்டும். நமது மனமும் இதயமும் தூய்மையாகும்போதுதான் நமக்கு வேண்டுபவை முடியக்கூடியதாக இருக்கும். நாம் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளாமல் மதத்தின் பெயரால் ஒருவருக்கொருவர் மண்டையை உடைத்துக்கொள்ளாமல் நமக்கு இடையே வேற்றுமைகளைக் கற்பித்துக் கொள்ளாமல் இருப்பதன்மூலம்தான் இந்த இதயத் தூய்மையைப் பெற முடியும். இன்று மக்கள் பெற வேண்டிய மகத்தான பாடம் எல்லாம் சாதி முறைக்கு எதிராகப் போராட வேண்டும் என்பதுதான். புத்தர் இந்தச் சாதி முறைக்கு எதிராக மிக ஆற்றலோடு குரல் எழுப்பினார். நாம் இன்றும் இந்தச் சாதிமுறைகளை ஒழித்துக்கட்ட முடியாதிருப்பது, நமது பலவீனத்தைத்தான் காட்டுகிறது. அன்பு, கூட்டுறவு, பிற உயிர்களைத் துன்புறுத்தாமை என்னும் கொள்கையை, வழியை கடைப்பிடித்து வாழ நாம் தொடர்ந்து முயல வேண்டும் " --- 24 .5 .1956 அன்று புதுடில்லியில் புத்தர் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த விழாவில் இந்திய பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு ஆற்றிய சொற்பொழிவின் சுருக்கம் , நம் நாடு, 25. 5 .1956. ( இந்நூலில் பக்.219 -221 ) பண்டித ஜவஹர்லால் நேரு ஆற்றிய இந்த உரையில் குறிப்பிட்டுள்ள செய்திகளின் வாயிலாக இரண்டு செய்திகளை நாம் அறிந்து கொள்கிறோம் . ஒன்று, இந்தியாவில் உள்ள சாதி, மதக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடியதால்தான் புத்தர் முன்வைத்த பௌத்த மதத்தை இந்தியா ஒழித்துக் கட்டியது அல்லது இந்தியாவின் வைதீக மதம் ஒழித்துக் கட்டியது. இரண்டு, பௌத்தம் ஏன் எதனால் உலகம் முழுவதும் பரவியது? இந்தியாவைத் தவிர பிற உலக நாடுகளில் உள்ள மக்கள் இந்தியாவில் உள்ளதை போன்ற வர்ணாசிரமதர்ம சாதிய முறைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் இல்லை. எனவே, புத்தர் பேசிய சமத்துவச் சிந்தனை அவர்களுக்குப் பிடித்திருந்தது ....ஏற்றுக் கொண்டார்கள்... ஆதரித்தார்கள்...வளர்த்தெடுத்திருக்கிறார்கள்.. தமிழ் பெளத்த ஆய்வு நூல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க நல்ல தொகுப்பு இந்நூல். இதுபோன்ற தொகுப்பு நூல்கள் இன்னும் பல வரவேண்டும். அவற்றைப் பெளத்த ஆய்வில் ஈடுபட்டுவரும் ஆய்வாளர்கள் இணைந்து மேற்கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாகும். 31 கட்டுரைகளில் 9 கட்டுரைகளுக்கான நூல், இதழ் விவரக் குறிப்பு இடம்பெறவில்லை. நூல், இதழ் விபரக்குறிப்பு இடம்பெற்றுள்ள கட்டுரைகள் இடம்பெற்றுள்ள பக்கங்களின் விவரங்களும் குறிப்பிடப்படவில்லை. இவற்றையும் இனிவரும் தொகுப்பாசிரியர் கள் கவனத்தில் கொள்ள வேண்டும். பெளத்ததைத் அறிந்துகொள்ள விரும்பும்..... ஆராய விரும்பும் ஒவ்வொருவரின் இல்லத்திலும் உள்ளத்திலும் அவசியம் இருக்கவேண்டிய நூல் இதுவாகும். பதிப்பக முகவரி : செய்திச்சோலை, 4, மேல்பட்டிப் பொன்னப்பன் தெரு, இளங்கோ நகர் வட்டம் ( 36 ), சென்னை - 600 039 விலை : ரூ.40/-

No comments:

Post a Comment