Wednesday 18 January 2023

ஒரு நாள் ஒரு நூல் -16. கெளதம புத்தர் அடிச்சுவட்டில் - சோ.சிவபாதசுந்தரம்.16.01.2023

16.01.2023 ஒரு நாள் ; ஒரு நூல் - 16 கெளதம புத்தர் அடிச்சுவட்டில் - சோ.சிவபாதசுந்தரம் சென்னை, வானதி பதிப்பகத்தின் இரண்டாம் பதிப்பாக 1991 இல் இந்நூல் வெளிவந்துள்ளது. 20 + 370 = 390 பக்ககங்களைக் கொண்டுள்ளது இந்நூல். இந்நூலின் முதல் பதிப்பு இதே பதிப்பகத்தின் வெளியீடாக 1960 இல் வெளிவந்துள்ளது. இப்பொழுதும் வெளிவரவேண்டிய தேவையுள்ள நூலாக இந்நூல் திகழ்கிறது. 32 தலைப்புகளின் கீழ் அமைந்துள்ள மாபெரும் இரசனை மிக்க பயணநூலாக இந்நூல் விளக்குகிறது. இந்நூல் வெறுமனே பயணநூலாக மட்டுமல்லாமல் வரலாற்று நூலாகவும் தத்துவநூலாகவும் திகழ்கிறது. எனவே, பயணநூல், வரலாற்று நூல், தத்துவநூல் என்ற முப்பரிமாண - முப்பரிணாம நூலாக உள்ளமை இந்நூலின் தனிச்சிறப்பு ஆகும். 1955 ஆம் ஆண்டு வாக்கில் அறிஞர் சோ.சிவபாதசுந்தரம் அவர்களால் அரிதின் முயன்று மேற்கொள்ளப்பட்ட பயணத்தின் நல்விளைச்சல் இந்நூல். கெளதம சித்தார்த்தர் பிறந்த உலும்பினி, வாழ்ந்த கபிலவஸ்து, புத்தர் ஞானம் பெற்ற புத்தகயா, முதல் உபதேசம் செய்த சாரநாத், அதனைத் தொடர்ந்து உபதேசம் செய்த இடங்களான இராஜகிருகம், சிராவஸ்தி, வைசாலி,கெளசாம்பி, சங்கர்ஷ புரம், நாளந்தா, பாடலிபுரம், நிறைவில் புத்தர் பரிநிர்வாணம் அடைந்த குசிநரா உள்ளிட்ட எல்லா இடங்களையும் நேரில் கண்டு ஆராய்ந்த அனுபவத் திரட்டே இந்நூல். ஏற்கனவே, இந்நூலாசிரியர் மாணிக்கவாசகர் அடிச்சுவட்டில், சேக்கிழார் அடிச்சுவட்டில் ஆகிய இரு நூல்களை இதேபோல் பயண அனுபவ நூல்களாகப் படைத்தளித்தவர். இத்தகைய முன்னனுபவ அடிப்படையில் எழுந்த இந்நூல் மிகச்சிறந்த பயணநூலாக விளங்குகிறது. இந்நூலின் பொருளடக்க நிரல் பின்வருமாறு: 1.எக்கா வண்டி - 1 2. சாக்கியர் நகரம் - 9 3.குதிரை முதுகிலே - 28 4.குழந்தை பிறந்தது - 37 5.சோதிடன் வாக்கு - 48 6.அழகுப் போட்டி - 60 7.கண்டதும் கேட்டதும் - 71 8.கட்டவிழ்த்த காளை - 81 9.நெடும் பயணம் - 92 10. மகதத்தின் தலைநகர் - 99 11.பால் பாயாசம் - 114 12.தவம் பலித்தது - 122 13.கோயிலைக் கண்டேன் - 127 14. கங்கா ஸ்நானம் - 143 15.சக்கரம் சுழன்றது - 156 16.மான் காடு - 172 17. மூன்று முனிவர்கள் - 182 18. தந்தையும் மகனும் - 200 19.வள்ளல் மகிழ்ந்தான் - 214 20.விலையும் மதிப்பும் - 226 21.கோசலத் தலைநகர் - 240 22 .வானக்காட்சி - 254 23. புயலும் அமைதியும் - 262 24. சூழ்ச்சி நாடகம் - 267 25.வினையும் விளைவும் - 253 26. தளகர்த்தர் பிரிவு - 292 27. பல்கலைக்கழகம் - 297 28. கங்கையைக் கடந்தது - 302 29. பெண்ணுக்கு சம உரிமை - 311 30. மாஞ்சோலை மங்கை - 321 31. மகா பரிநிருவாணம் - 339 32 .யாத்திரை முடிந்தது - 354 முடிவுரை - 361 அனுபந்தம் - 363 ஆதார நூல்கள்- 373 சிறப்புப் பெயர் அகராதி - 375 மேலே கண்டவறான 32 அத்தியாயங்களில் அமைந்துள்ள இந்நூலின் முழுச் செய்திகளையும் தொகுத்து வழங்குதல் விரிவாக அமையும் என்பதால் முதல் நான்கு அத்தியாயங்களில் இடம்பெற்றுள்ள மிக முக்கியமான செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறேன் : கௌதம புத்தர் அடிச்சுவட்டில் என்ற தலைப்பிலான பயணத்தைத் தொடங்கிய அறிஞர் சோ.சிவபாதசுந்தரம் அவர்கள் காசியில் இருந்து பயணத்தைத் தொடங்குகிறார். காசியில் இருந்து கோரக்பூர்... கோரக்பூரிலிருந்து கோண்டா .... கோண்டாவில் இருந்து ஷோரத்கர் என்ற சிறிய ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி அங்கிருந்து தெளலீவா என்ற இடத்துக்கு அருகில் உள்ள கபிலவஸ்து செல்கிறார். ஷோரத்கர் என்ற இடத்தில் இருந்து எக்கா வண்டியில் பயணம் செய்கிறார்.எக்கா வண்டியில் இருந்து தெளலீவா செல்வதற்குப் பத்து மைல் தூரம் பயணம் மேற்கொள்கிறார். இந்த 10 மைல் தூரத்திற்கு எக்கா என்னும் வடநாட்டுக் குதிரை வண்டிக்காரனிடம் 4 ரூபாய்க்குப் பேசிப் பயணம் மேற்கொள்கிறார். பயணத்தின்போது 1200 ரூபாய் விலை உள்ள புகைப்படக் கருவியைக் கொண்டு சென்றுள்ளார். இந்த பத்து மைல் தூரப் பயணத்தின் " பாதி தூரம் கழிந்ததும் பாரதத்தின் வட எல்லை முடிவுற்று நேபாள ராஜ்ஜியம் உதயமாவதை கண்டேன்.இன்றும் அதைக் குறிப்பிட ஒரு பெரிய துணை நாட்டி வைத்திருக்கிறார்கள் " ( ப.7) என்றும் குறிப்பிடுகிறார். செல்கிற வழி எங்கும் வயல்கள் நிறைந்திருப்பதையும் அங்கு காலையில் எருதுகள் , எருமைகள் , யானைகள் ஆகியவற்றைப் பூட்டி உழவர்கள் உழுவதையும் கண்டதாகச் சொல்கிறார்.இந்தப் பகுதி குறிஞ்சியும் மருதமும் உறவு கொண்டாடும் அற்புதக் காட்சிமிக்கதாக இருந்தது என்கிறார் ( ப.7).ஒரு வழியாகத் தெளலீவாவிற்குச் செல்கிறார். தெளலீவா மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள ஒரு சிறு கிராமம் என்கிறார்( ப.9). அங்கு ஒரு சிறு தேநீர்க்கடையில் கபிலவஸ்து எங்கு இருக்கிறது என்று கேட்கிறார். அவர்கள் இதோ அருகில் இருக்கிற சாஸ்திரி அவர்களைப் பாருங்கள் என்று சொல்கிறார்கள். சாஸ்திரியிடம் சென்றதும் அவர் இந்தி பத்திரிக்கையை படித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு அருகிலேயே ' ஸாங்கிய தர்ஸனம்' என்ற சமஸ்கிருத நூல் கிடக்கிறது. அவர் பெயர் கிருஷ்ணச்சந்திர சாஸ்திரி. அவரிடம் கபிலவஸ்து எங்கே உள்ளது என்று கேட்டதும் "இந்தக் கிராமமே தான் கபிலவஸ்து . கடந்த 14 வருட காலமாக நான் இங்கு வசித்து வருகிறேன். புராதன கபில வஸ்து நகரம் சம்பந்தமாக ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன். தொல்பொருள் ஆராய்ச்சிக் கலை தான் எனது சொந்த பிரீதி. பௌத்த மத நூல்களைக் கற்றுவிட்டு இந்தக் கபிலவஸ்துவை பற்றி ஒரு ஆராய்ச்சி நூல் எழுதி வருகிறேன்" ( ப.11) என்று கிருஷ்ண சாஸ்திரி சொல்கிறார். மேலும் புத்த கயாவைப் பற்றி நூல்கள் உள்ளன. சாரநாத் பற்றி நூல்கள் உள்ளன .சாஞ்சியைப் பற்றியும் நூல்கள் உள்ளன. ' ஆனால் கபில வஸ்துவைப் பற்றி ஒரு புத்தகம் கூட இல்லை " ( ப.11) என்றும் அவர் குறிப்பிடுகிறார். இந்தப் பகுதியில்தான் சாக்கியர், கோலியர், மள்ளர் என்ற வகுப்பினர் ஆகியோர் வாழ்ந்து வந்தனர் என்பதை அறிந்து கொள்கிறார். இதைத்தொடர்ந்து புத்தரின் பிறப்புக்கதைகளை அறிந்துகொள்கிறார். அறிந்தவற்றை அப்படியே விவரிக்கிறார். இதனைத் தொடர்ந்து கிருஷ்ண சாஸ்திரி இந்த ஊரிலேயே மங்கள்மான் வஜ்ராச்சார்யா என்ற பெயருள்ள நேபாள நண்பர் ஒருவர் இருக்கிறார் .பௌத்த மதத்தில் நிறைந்த பற்றுள்ளவர். அவரை கண்டு வருவோம் என்று அழைத்துச் செல்கிறார். இந்த தெளலீவா எனப்படும் சுற்றுச்சூழல் பற்றி விவரிக்கிறார். இவ்வூரை வந்து கண்டு எழுதிய சீனப்பயணி பா ஹியுன், இன்னொரு சீனப் பயணி ஹியூங் ஸியாங் ஆகியோரின் பயணக் குறிப்புகள் குறித்து எழுதுகிறார் . தெளலீவாவில் மகாதேவ ஆலயம் என்ற பெயரில் உள்ள சிவலிங்கம் உள்ள ஆலயத்தை அங்குள்ள மக்கள் வழிபட்டு வருவதை அறிகிறார். அந்த இடம் ஒரு காலத்தில் பௌத்த சைத்தியமாக இருந்தது என்பதை அறிந்துகொள்கிறார். இந்த மகாதேவ ஆலயத்திலிருந்து சுமார் ஒரு மைல் தூரத்தில் கில்லோரா கோட்டம் என்கிற பகுதியில் அப்பொழுதும் ஏராளமான தொல்பொருள் சான்றுகள் கிடைப்பதைக் குறிப்பிடுகிறார். அங்கு ' ஸமய மஹீ' என்ற ஒரு விக்கிரகத்தை வைத்து வழிபட்டு வருகிறார்கள் என்பதையும் குறிப்பிடுகிறார். இவ்வாறு கபிலவஸ்துவை சுற்றிப் பார்த்துவிட்டு ஷோரத்கர் ஸ்டேஷனுக்கு வந்து சேர்கிறார். ஷோரத்கர் ஸ்டேஷனில் நள்ளிரவு 12 மணிக்கு இறங்கிய அவர் அதிகாலை 4 மணிக்குப் புறப்பட்டு கபில வஸ்துவைச் சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் ஷோரத்கர் ஸ்டேஷனை அடையும்போது இரவு மணி ஏழாகிவிட்டது என்கிறார். அதனைத் தொடர்ந்து கபிலவஸ்துவிலிருந்து மாயாதேவி பிரசவத்துக்காக தேவதான நகரத்திற்கு புறப்பட்டு சென்றாள். அவ்வாறு செல்லும் வழியில் லும்பினி வனத்தில் சித்தார்த்தனை ஈன்றெடுத்தாள் அல்லவா ...?!அந்த இடத்தைக் காணப் புறப்படுகிறார். ஷோரத்கரிலிருந்து நேபாளத்துக்கு அருகில் உள்ள நௌத்தன்வா என்ற இடத்தில் ரயில் நின்று விடுகிறது. அங்கு வழித் துணையாக வந்த வஸந்த ராம் என்பவரை அழைத்துக் கொண்டு லங்கா பாபா தர்மசாலாவைக் கண்டுபிடிக்கிறார். இந்த இடத்தில் ' ஸ்ரீ கும்பல் வெல ஸ்ரீநிவாஸ நாயக தேரர்'என்ற பௌத்தப்பிக்கு 'லங்கா பாபா' என்ற பெயருடன் வசித்து வருகிறார். அவரைக் கண்டு லும்பினிக்கு வழிகேட்டுக் கொண்டு புறப்படுகிறார். நௌத்தன்வா என்ற இடத்திலிருந்து லும்பினி பத்து மைல் தூரத்தில் உள்ளது என்று அறிந்துகொண்டு பயணிக்கிறார். நேபாளத்தில் பயணம் செய்கிறபோது " ' நேபாள் தரை' என்று வழங்கப்படுகிற அந்தப் பிரதேசம் கிட்டத்தட்ட மதுரை, ராமநாதபுரம் ஜில்லாப் பிரதேசம் போலவே காட்சியளித்தது " ப.33) என்கிறார். அங்கே ஐந்தாறு குடிசைகள் உள்ள ஒரு சேரியைக் காண்கிறார்.அவர்கள் மள்ளர் என்ற ஜாதியினர் என்பதை அறிந்துகொள்கிறார். இவர்கள் அங்கு வேளாண்மை செய்துகொண்டு வாழ்கிறார்கள். "இந்த மள்ளர் ஜாதியினர்தான் சாக்கியர், கோலியர் போல, விரிஜி நாட்டுக்கு வடக்கே புத்தர் காலத்திலே வாழ்ந்தவர்கள். புத்தர் இறந்த சமயத்தில் அவரது வேண்டுகோளின்படி மள்ளர் ஜாதியினரே குசீ நகரில் அவர் உடலைத் தகனம் செய்தவர்கள். அக்காலத்திலேயே பிற்போக்கிலிருந்த மள்ளர் இன்றும் அதே நிலையில் இருந்து வருவது ஆச்சரியம்தான் ! " ( ப.35) என்று குறிப்பிடுகிறார். காலை ஐந்து மணிக்கு புறப்பட்டு லும்பினி சென்று சேரும்போது பத்து மணி ஆகிவிட்டது என்கிறார். " கபில வஸ்து நகரத்திலிருந்து லும்பினி பல்லக்கில் பிரயாணம் செய்தாள் மாயாதேவி. ராஜ மரியாதைகளுடன் பலவித பரிவாரங்கள் புடை சூழ வந்தாள். ஆகையால் அந்தக் காலத்தில் இவ்வளவு பிரயாண கஷ்டம் அவர்களுக்கு இருந்திருக்க முடியாதுதான் " ( ப.36 ) என்று குறிப்பிடுகிறார். லும்பினி வனத்தில் வைசாக பூர்ணிமை நாளில் சித்தார்த்தர் பிறந்தார் என்ற செய்தியைக் கூறி அதுகுறித்து விம்பசார கதை, மணிமேகலைக் காப்பியம் ஆகியவற்றில் உள்ள செய்திகளைப் பாடல்களைக் குறிப்பிட்டுக் காட்டுகிறார். "லும்பினி கிராமத்துக்கு நான் சென்றபோது புத்த மகவு பிறந்த உபவனத்தையோ சால விருடக்ஷத்தையோ அங்கு காண முடியவில்லை .நேபாள அரசாங்கம் கட்டி வைத்திருக்கும் ஒரு மடம். பக்கத்திலே ஒரு குளம் . அக்குளத்தின் பக்கத்தில் ஒரு சிறிய கோயில். கோயிலுக்கு எதிரில் பாதி உடைந்து போயிருக்கும் அசோகா ஸ்தம்பம் ஒன்று. இவ்வளவும் சேர்ந்துதான் இன்றைய லும்பினி க்ஷேத்திரமாகக் காட்சியளிக்கிறது " ( ப.40 ) என்கிறார். " லும்பினி என்ற பெயர் இப்போது வழக்கில் இல்லை. இக் கிராமத்தை ' ரும்மிந்தேயி ' என்றுதான் வழங்கிவருகிறார்கள். ஆதியில் லும்பினி கிராமத்தில் மாயா தேவியின் ஆலயம் இருந்ததால் ' லும்பினி தேவி' என்று நேபாளிகள் இக்ஷகிராமத்துக்குப் பெயர் கொடுத்து வழங்கினர். லும்மின் தேயி, ரும்மின் தேயி என்று வழங்கி ரூபாதேவி 'என்ற பெயரே 'ரும்மிந்தேயி' என்று வழங்குகிறது என்று சிலர் சொல்கிறார்கள். .........சிறு சாந்துக் கட்டிடமாக உள்ளது. சிலை சுமார் 5 அடி உயரமும் நாலடி அகலம் உள்ள தட்டையான கல்லிலே மாயாதேவி சால விருக்ஷசத்தின் கிளை ஒன்றை வலக்கரத்தால் பற்றி நிற்பதாகவும் அவளது வலமருங்குல் வழியாகப் போதிசத்துவர் வெளிவருவதாகவும் பக்கத்தில் தேவர்கள் அந்த மகவை ஏந்தி நிற்பதாகவும் வானவர்கள் வணங்குவதாகவும் சேடி ஒருத்தி பக்கத்தில் இருப்பதாகவும் செதுக்கப்பட்டுள்ளது. " ( ப.41 ) " இச்சிலை அசோக மன்னரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதென்று கர்ண பரம்பரையாக வழங்குகிறது. ஆனால் அசோகன் காலத்தில் புத்த உருவம் வழக்கிலில்லை. போதி விருக்ஷசம் அல்லது தர்மசக்கரமே சின்னமாகவிருந்தது. இந்து சமய பூசாரியொருவர் இந்தச் சிலைக்கு நித்தியம் குங்குமமும் புஷ்பமும் சாத்திப் பூஜை செய்து வருகிறார் "..... ( பக்.41-42 ). " புத்தர் அவதரித்த இந்த லும்பினி ஸ்தலத்தை முதன்முதலாகக் கண்டுபிடித்தது நிர்ணயித்தவர் டாக்டர் ஃபூரர் என்பவர். 1896 ஆம் ஆண்டிலே ரும்மிந்தேயிபகுதியில் ஆராய்ச்சி செய்தபோது தற்செயலாக அசோக ஸ்தம்பம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்த ஸ்தம்பத்தில் ஐந்து வரிகளிலே பிராஹ்மி எழுத்துக்களில் கல்வெட்டு சாசனம் காணப்பட்டது" ( ப.42) என்று அந்த சாசனத்தையும் குறிப்பிடுகிறார். " இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளாக வெயிலையும் மழையையும் தாங்கி நின்ற போதிலும் ஸ்தம்பம் மெருகு குன்றாமல் புத்தம் புதிதுபோற் காட்சியளிப்பதுதான் விந்தை. கல்வெட்டு எழுத்துக்கள் சிறிதும் பழுதுபடாமல் காணப்படுகின்றன " ( ப.43 ) என்றும் குறிப்பிடுகிறார். " கோயிலுக்கும் அசோக ஸ்தம்பத்துக்கும் அருகாமையில் ஒரு குளம் காணப்படுகிறது. இதை பிரம்ம குண்டம் என்று சொல்கிறார்கள். ...அசோகன் காலத்தில் ஒரு ஸ்தூபியும் விஹாரமும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. .....இந்த இடத்தில் புதியதோர் விஹாரத்தைக் கட்டியெழுப்ப நேபாள அரசாங்கம் திட்டம் போட்டு இருப்பதாக அறிந்தேன். ( இவ் விஹாரம் இப்போது கட்டப்பட்டு விட்டதாகத் தெரிகிறது ) ( பக்.43-44 )என்று குறிப்பிடுகிறார். மேலும், " நேபாள அரசாங்கத்தின் செலவிலே லும்பினியில் ஒரு மடம் கட்டப்பட்டிருக்கிறது. அங்கு ஒரு பௌத்த பிக்ஷுவைச் சந்தித்தேன். பிக்ஷு சுந்தா என்பது அவர் பெயர். ........... நேபாளத் தலைநகர் காட்மண்டுவிலே 1944 ஆம் ஆண்டில் தர்மோதய சபா என்ற பெயரில் ஒரு பௌத்த நிலையம் ஸ்தாபிக்கப்பட்டது. இந்த பௌத்தநிலையம் பௌத்தர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் லும்பினியில் உள்ள மாயா தேவியின் கோயில் நிர்வாகம் இந்து பூசாரியைச் சேர்ந்தது " ( ப. 44 ). " போதிச்சத்துவர் லும்பினி கிராமத்தில் அவதரித்திருந்த போதிலும் அவர் ஞானோததயம் பெற்றுப் புத்தராகி தருமோபதேசம் செய்த காலத்தில் மற்றும் ஸ்தலங்களுக்கு சென்றது போல லும்படிக்கும் வந்ததாக பௌத்த நூல்கள் எதிலும் சொல்லப்படவில்லை.‌இது வியப்பைத் தருகிறது. ஆனால் ,. ' மஹாபரிநிர்வாண சூத்திரம்' என்ற நூலில் நான்கு முக்கிய க்ஷேத்திரங்களை ஒவ்வொரு பௌத்தரும் தம் வாழ்நாளில் பக்திச் சிரத்தையோடு ஒருக்காலாவது தரிசிக்க வேண்டும் என்று புத்தர் கூறியதாக ஒரு குறிப்பு உண்டு. அவை, லும்பினி, புத்தகயை, சாரநாத், குசீநகர் ஆகியவை. " ( பக்.44-45). "சீன யாத்திரிகனான பா ஹியான் கிபி ஐந்தாம் நூற்றாண்டில் லும்பினியைத் தரிசித்திருக்கிறான்.அவனுக்குப் பின் ஹியூங்ஸியாங் என்ற யாத்திரிகனும் இரண்டு நூற்றாண்டுகள் கழித்து அங்கு போய் இருக்கிறான்" ...(ப.45 ) என்று குறிப்பிட்டு பா ஹியான் குறிப்புகளையும் எடுத்துக்காட்டுகிறார். " லும்பினி வனத்தில் சால விருக்ஷங்கள் அடர்ந்திருந்தன என்று வரலாறு கூறுகிறது .........ஆனால் இன்றைக்கு லும்பினியில் மருந்துக்குக் கூட ஒரு சால விருக்ஷத்தை நான் காண முடியவில்லை.... அரசமரம் ஒன்றுதான் வளர்ந்திருப்பதைக் கண்டேன் ......... 1956 ஆம் ஆண்டு நடைபெற்ற புத்த ஜெயந்தி விழாவின் போது நேபாள அரசாங்கம் இங்கு சால விருக்ஷம் நாட்டியிருப்பதாக இப்போது அறிகின்றேன்." ( பக்.46 - 47 ). லும்பினியைச் சுற்றிப் பார்த்துவிட்டு நௌத்தன்வாவில் உள்ள லங்கா பாபா தர்மசாலைக்கு மறுபடியும் வரும்போது மாலை 3 மணி ஆகிவிட்டது என்று குறிப்பிடுகிறார்..... மேலே கண்ட செய்திகள் நான்கு அத்தியாயங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தொகுக்கப்பட்டவை ஆகும். இதேபோல் முப்பத்திரெண்டு அத்தியாயங்களையும் படித்தால் ஏராளமான புத்தம் புதிய செய்திகளையும் அனுபவ உணர்வுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் அறிந்துகொள்ள முடியும். இந்நூலிலிருந்து.... 1. புத்தர் வரலாறு 2.பெளத்த சமய வரலாறு 3.பெளத்த மெய்யியல், அறவியல் 4. நிலவியல் 5.சூழலியல் 6. வேளாண்மையியல் 7. பொருளாதார நிலை 8. தற்கால வரலாறு 9. பயணவியல் 10. மனித மாண்புகள் என அள்ள அள்ளக் குறையாத செய்திகளைப் படிப்பவர்கள் அறிந்துகொள்ள முடியும்.... இந்நூலைக் கையிலெடுத்துப் படிக்கத் தொடங்கினால் ஒரு நல்ல நாவலைப் படிப்பதைப் போன்ற உணர்வோடு விறுவிறுவெனப் படிக்க முடியும்.... ஷோரத்கர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து கபிலவஸ்து சென்று அங்கிருந்து லும்பினி, புத்தகயா, சாரநாத், குசீநகர் உள்ளிட்ட புத்தர் நடந்த பாதையெங்கும் நம் கையைப் பிடித்துக்கொண்டே நேரில் நாமே கண்டதுபோன்ற மனநிறைவைத் தரும் வகையில் ஒரு தம்மபத நடைப்பயணத்தையே நமக்குள் நிகழ்த்திக்காட்டிவிடுகிறார் இந்நூலாசிரியர். நூலின் முகப்பில் பதிப்புரை, முதற் பதிப்பு முன்னுரை, இரண்டாம் பதிப்பின் முன்னுரை ஆகியவை உள்ளன. முதற் பதிப்பு முன்னுரையை நூலாசிரியர் 11.5.60 வைசாக பூர்ணிமையன்று எழுதியுள்ளார் என்பது மனதுக்கு இனிமையான குறிப்பாகும். நீங்களும் படியுங்களேன்.... மறுபதிப்பு காணவேண்டிய நூலிது. பதிப்பக முகவரி: வானதி பதிப்பகம், 17, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை - 17 இரண்டாம் பதிப்பு: 1991 விலை : ரூ.55/- https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0ZWAKjEncfpxLu5wAku3ayv9KJSQV6b3mGnha7NMqz5PPoPC8Vgjs5bpFp5r8U1N9l&id=100007862881487&mibextid=Nif5oz

No comments:

Post a Comment